எனக்குத் தெரிந்தவர் ஒருவரிடம் eKalappai பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இங்கேயே தங்கிவிட்டவர்கள் அவரது குடும்பத்தினர். குழந்தை பள்ளிக்குச் செல்கிறது (மூன்றாம் வகுப்பு என்று நினைவு). மகளுக்கு ஆங்கிலத் தட்டச்சு தெரிந்தால் தமிழையும் கணிப்பொறியிலேயே அடித்துப் பழகலாம் என்றுகொண்டிருந்தேன். அவரது மகளுக்கும் அது அப்போது உபயோகமாயிருக்குமே என்று பொதுவாகச் சொன்னார். அவரது மகள் தமிழ் பேசுவாள், புரிந்துகொள்வாள் என்றாலும்கூட, எவ்வளவுதூரம் எழுதப்படிக்க வரும் என்று தெரியாது. நானே ஒலிசார்ந்த தமிழ்த் தட்டச்சு செய்ய ஆரம்பித்தபோது இதைப்பற்றி நினைத்திருக்கிறேன் - தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சிறுவனோ சிறுமியோ புதிதாகத் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, கையெழுத்துப் பயிற்சியின்றி தட்டச்சில் (அதுவும் ஆங்கில ஒலியியல் முறைப்படி) தமிழ் பழகுவது என்பதன் நிறை குறைகள் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். நான் முதலில் ஆரம்பித்தபோது, ஆங்கில ஒலியியல் முறைப்படித் தட்டச்சா என்று தயங்கினாலும், தமிழில் எழுதவாவது முடிகிறதே என்ற உற்சாகம்தான் பிற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முன்னின்றது. ஒருவேளை இதைப்பற்றி முன்பே தமிழ் வலைப்பதிவர்கள் பேசியிருக்கக்கூடும். ஒருவேளை இல்லையெனில், எனக்குத் தோன்றிய சில கேள்விகள்:
1) புதிதாகத் தமிழ் கற்கும் சிறார் நேரடியாக ஆங்கில ஒலியியல்வழியாகத் தட்டச்சு செய்தால் (கையெழுத்து கற்பிக்கப்படாதமட்டில்) அவர்களது தமிழ் எப்படியிருக்கும்? அவர்களது மொழிவளம் மற்றும் அவர்கள் மூலமான பொது மொழிவளம் எவ்வகையில் குறையும்/கூடும்?
2) கையெழுத்துத் தமிழ் பழகுவது அவசியமா, அல்லது அது தேவையே இல்லையா? (குட்டென்பெர்க் அச்சு யந்திரத்தில் பைபிள் அச்சிடப்பட்டபோது தொட்டு இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் இதேபோல எண்ணற்ற வாதங்களும் கேள்விகளும் இருந்திருக்குமென நினைக்கிறேன்.)
3) மேலிரண்டு கேள்விகளும், அந்நிய மொழிச் சூழலில் இருக்கும் தமிழ்ச் சிறாரைக் குறிப்பது எனினும், தமிழ்நாட்டிலேயே, ஆங்கிலக் கல்வி என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்ட சூழலில், அத்தகைய மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் தமிழைக் கணினி மூலமாவது பழக்கவைக்க முடியுமா?
இந்தக் கேள்விகளனைத்தும் அரதப்பழசு எனிலோ, ஏற்கனவே பதிலளிக்கப்பட்டுவிட்டன எனிலோ, சந்தர்ப்பப்படும்போது அது சம்பந்தப்பட்ட சுட்டிகளைப் பின்னூட்டத்தில் இடுங்கள், படித்துப் பார்த்துக்கொள்கிறேன்.
Thursday, January 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Montresor,
உங்களது கேள்விகளுக்கு சரியான பதில் இல்லையென்றாலும், தெரிந்தவிடயங்கள் சிலதைச் சொல்கிறேன். இங்கேயும் தங்கட பிள்ளைகள் எங்கட கலை கலாச்சாரத்தை கரைத்துக்குடிக்கவேண்டும் என்று பரதம், பாட்டு, இன்னபிற சமாச்சாரங்களிற்கு அனுப்புவார்கள். தேவாரத்தைப் பாடினால் என்ன? பரத நோட்ஸைப் பார்த்தால் என்ன? எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். எங்கே பிழை எண்டு சரியாகச் சொல்ல முடியாது.
படிப்பு/புழங்கும் சூழல் அதிகம் ஆங்கிலமாய் இருக்கும்போது தானாகவே ஆங்கிலம் அவர்களுக்கு இலகுவான மொழியாகப்போய்விடும். மற்றது, ஒரே நேரத்தில் இரண்டையும் இளவயதில் கொஞ்சம் குழந்தைகளுக்கு கஷ்டமாய் இருக்கும் போலத்தான் இருக்கிறது.
....
அண்ணாவின் மகனிற்கும் தமிழ் நன்கு தெரியவேண்டும் என்பதற்காய் தமிழை மட்டும் 4 வயதுவரை சொல்லிக்கொடுத்தோம். இப்போது kinder garden போய் ஒருவருடம் கூட இருக்காது, ஆங்கிலத்தில் பதில் சொல்லத்தொடங்கிவிட்டான். தமிழ் வகுப்புக்களுக்கு அவனை கூட்டிச்செல்லும் ஆர்வம் இருக்கிறது. பார்ப்பம்.
....
ஆனால் நம்பிக்கையாய் ஒருவிடயம் இருக்கிறது. ஒரு அமெரிக்க நண்பனை சென்ற ஆண்டு ஈழத்திற்கு சென்றபோது சந்தித்திருந்தேன். இருபதை எட்டிய வயதில் இருந்த அவருக்கு (அமெரிக்காவிலேயே பிறந்தவர்) சிலவருடங்களுக்கு முன்புவரை தமிழ்தெரியாது இருந்திருக்கிறார். பிறகு தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்து ஈழத்திற்கு இரண்டாவது தடவையாக வந்திருந்தார். அவ்வளவு சரியாக தமிழ் பேசமுடியாதபோதும் தெரிந்த தமிழில் மட்டும் பதில் அளிப்பது என்பதில் உறுதியாய் இருந்தார். கதைக்கும்போது ஆங்கிலச்சொல்லே பாவிக்காமல் இருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. அவரைப்போல இன்னும் சில அமெரிக்க, ஆஸ்திரேலியா தோழர் தோழிகளை தமிழையும் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ளும் ஆவலில் அங்கு வந்திருந்ததைக் கண்டிருந்தேன்.
....
அந்த அமெரிக்க நண்பர் சிலவாரங்களுக்கு முன் கனடா வந்து, இங்கிருக்கும் மாணவர்களுடன் தனது தமிழ் படிக்கும் ஆர்வத்தை கலந்துரையாடி விட்டு, ரொரண்டோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஈ-கலப்பை போன்ற மென்பொருட்களை அறிமுகப்படுத்தியிருந்தார் என்று கேள்விப்பட்டேன்.
....
ம்...நீங்கள் கேட்ட வினாக்கள் வேறை. நான் அலம்பியது வேறை. அப்படித்தானே வாழ்க்கையில் கனக்க விசயங்கள் இருக்கிறது/நடக்கிறது. Lol.
முதலிரண்டு கேள்விகளுக்கான என் பதில்கள் (என் கருத்து).
1. ஆங்கில ஒலியியல் வழியாகத் தமிழ் கற்பது தவறான, கெடுதலான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். கற்பவரைக் குழப்பிவிடும். ஆங்கில ஒலியியல் தட்டச்சு - நன்கு தமிழ் தெரிந்த ஒருவர் புதிதாக தமிழ்த் தட்டச்சு முறையைக் கற்காமல் கணினியில் எழுத்துகளை உள்ளிட மட்டுமே பயன்படுத்த வேண்டிய ஒன்று என்பதும் என் கருத்து.
2. கையெழுத்து மிகவும் அவசியமானது என்பதும் என் கருத்து. ஏன் என்று கோர்வையாகச் சொல்ல முடியவில்லை. கடந்த சில வருடங்களில் என் ஆங்கில/தமிழ் கை எழுத்து மோசமானதாகவும், பார்க்கச் சகிக்காததாகவும் உள்ளது. ஆனால் தொடக்கத்திலாவது - முதல் பத்து வருடங்களாவது கையில் எழுதிக் கற்பதுதான் சரியான முறை. ஒருவேளை 6-7ஆம் வகுப்புகளிலிருந்தே தேர்வுகளை கணினியில் எழுத அனுமதிக்கும்போது வேண்டுமானால் கையெழுத்தை ஐந்தாம் வகுப்பிலேயே நிறுத்தி விடலாம்?
டிஜே: இல்லை, நீங்கள் சொல்லவருவது நான் சொன்னதன் தொடர்ச்சி என்றே நினைக்கிறேன் - மொழி என்பதைக் கற்பதன் மூலகாரணமே நீங்கள் கூறிய பிற கலாச்சார அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் என்று நினைக்கிறேன். ஒருமுறை பாரில் ஒரு ஜெர்மன் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன். Max Planck Institute போன்ற பிரபல வளாகங்களில் உபயோக மொழி (working language) ஆங்கிலம் என்று போட்டிருக்கிறார்களே, ஆங்கிலம் ஜெர்மன் போன்ற மொழிகளை ஆக்கிரமித்துவிடும் என்ற எண்ணம் உள்ளதா என்று கேட்டேன். அவனுக்கு அதுகுறித்துப் பெரிதாகக் கவலை ஏதும் இருந்ததாக அவன் பதிலில் தெரியவில்லை. ஒருவேளை அதுகுறித்துக் கவலைப்படாத ஒரு பிரக்ருதியாகவும் இருக்கலாம். மொழியின் வீச்சு எந்தத் தளத்திலும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஆங்கிலத்தில் (பொதுவாக, latin based languages என்று நினைக்கிறேன்) e என்ற எழுத்து கிட்டத்தட்ட 20% உள்ளது. அதாவது, எந்த ஆங்கிலப் பகுதியை எடுத்துப் பார்த்தாலும், அதில் உள்ள எழுத்துக்களில் e என்ற எழுத்து கிட்டத்தட்ட 15-20% இருக்கும். இதை மனதில் கொண்டு, e என்ற எழுத்தே இல்லாமல் எழுதப்பட்ட La Disparition என்ற முழுநீள நாவல் ஃபிரெஞ்சு மொழியில் உள்ளது. (ஆங்கில மொழிபெயர்ப்பின் பெயர் A Void - ஆசிரியர் ழோர் பெரெக்: Georges Perec). சார்த்தர் போன்றவர்கள் இதை ஒரு நாவல் என்றே முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு Gimmick என்றே ஒதுக்கித்தள்ளினர். இருந்தாலும், நான் படித்தவரை, பெரெக் போன்றவர்களின் Life: A user's manual, 53 days (இதை இவர் முழுதுமாக முடிக்குமுன்பே இறந்துவிட்டார்), ஜாய்ஸின் Ulysses, Finnegans Wake போன்ற புத்தகங்கள் மொழிக்கே விடப்பட்ட சவால்கள். இந்தளவு பாண்டித்தியம் (துல்லியமற்ற வார்த்தை இது), வெறுமனே தமிழைக் கம்ப்யூட்டரில் அடித்துப் பழகிக்கொள்வதன் மூலம் பெறமுடியுமா என்பதே கேட்கநினைத்தது. மொழி கட்டமைக்கப்படுவது அதை உபயோகிப்பவர்களால் மட்டும் என்றால், கையெழுத்துப்பழக்கம் மறைந்து தட்டச்சு மட்டும் முன்னிற்கும்போது நிகழும் இழப்புகள்/லாபங்கள் என்ன என்பதுகுறித்தே நான் யோசிக்கவிரும்புவது. எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தமிழ் நிகண்டுகள் ஆறு தொகுதிகள் உள்ளன என்றபோதும், அவற்றைப் புரட்டப் புரட்ட மனது கூசுகிறது - எத்தனை வார்த்தைகளை இழந்துவிட்டிருக்கிறோம் என்று யோசிக்கையில். இருந்தாலும், தோன்றுவதைச் சொல்லி வைப்போம் என்றுதான் எழுதியது.
பத்ரி: //ஆங்கில ஒலியியல் வழியாகத் தமிழ் கற்பது தவறான, கெடுதலான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன்// இதுதான் என் அபிப்ராயமும் கூட. இதை விளக்கத் தெரியவில்லை, ஏதோ ஒருவகையில் intuitive ஆக மட்டும், இது தவறு என்றும் படுகிறது, இம்மாதிரி கற்கப்படும் மொழி வெறுமனே யந்திரத்தனமான ஒன்றாக இருக்கும் என்று மட்டுமே தோன்றுகிறது. கையெழுத்து!! என் கையெழுத்தைச் சமீபகாலமாகப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை. ஆங்கிலத்தில் எழுதுவதே வெகுவாகக் குறைந்துபோனபிறகு தமிழில் எழுதுவது? கையெழுத்து மட்டும்தான் போட்டுப் பார்க்கிறேன்!! நான்கு வருடங்களுக்கு முன்புவரையில் ஏகத்துக்குத் தமிழ் எழுதச் சந்தர்ப்பமிருந்தது..இப்போது!?!?!?? உங்களது இரண்டாவது குறிப்பில் சொன்னது சரிதான். வருங்காலங்களில் தமிழில் எழுதுவதும் தட்டச்சு செய்வது இரண்டுமே பள்ளிகளில் சாத்தியப்பட்டால் நன்றாயிருக்கும்.
மன்னிக்க, romanized script என்று எழுதநினைத்தது...
செல்வராஜ், உங்கள் கமெண்ட் கைத்தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. மன்னிக்கவும். உங்கள் பதிவுக்கு நீங்கள் கொடுத்த சுட்டி:
http://blog.selvaraj.us/index.php?p=95
Post a Comment