Wednesday, January 05, 2005

க்ளிம்ட், விமர்சனங்கள்

எங்கள் ஆய்வுக்கூடத்தை வேறு தளத்துக்கு மாற்றவேண்டியிருந்ததால் சில நாட்களாக பொருட்களை எடுத்தல், நகர்த்தல், மேலும் கீழுமாகத் தள்ளுவண்டி ஓட்டுதல், அடுக்குதல், மாற்றி அடுக்குதல் என்றே நேரம் போய்விட்டது. புது வருஷத்தின் முதல் நாளில் விடியற்காலையில் கோணல்மாணலாகப் போய்க்கொண்டிருந்த எனது காரை நிறுத்தி, ஓட்டுனர் உரிமம் கேட்டு, என்ன நல்ல மூடோ, உர்ரென்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்த என்னை, 'ஒழுங்காக பக்கத்திலிருக்கும் உன் நண்பன் வீட்டில் போய்த் தூங்கிவிட்டுப் பிறகு உன் வீட்டுக்குப் போ' என்றதுடன் விட்டுவிட்ட போலீஸ்காரருக்கு ஆயிரம் வந்தனங்கள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பன் மூச்சை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். கடவுள் காப்பாற்றினார்!!

சி.என்.என்னில் நேற்று செய்திகளுக்கடியில் சின்னதாக ஒரு வரி ஓடிக்கொண்டிருந்தது - "ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட்டாக (Gustav Klimt) ஜான் மால்க்கோவிச் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வியன்னாவில் தொடங்கியது". முன்பு ஒரு பதிவில் கூட க்ளிம்ட் பற்றிப் போகிறபோக்கில் குறிப்பிட்டிருந்தேன். The Kiss என்பது, வாழ்த்து அட்டைகள்வரை வந்துவிட்ட க்ளிம்ட்டின் மிகப் பிரபலமான ஓவியம். அதைத் தாண்டியும் க்ளிம்ட்டின் ஓவியப் பரப்பு விரிந்திருப்பதாலும், என்னை மிகவும் வசீகரித்த ஓவியர்களில் க்ளிம்ட்டும் ஒருவர் என்பதாலும், மால்க்கோவிச் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவர் என்பதாலும் படத்தைப்பற்றி ஒரு சுவாரஸ்யம். 2005ல் திரைப்படம் வெளிவரும் என்று IMDB சொல்கிறது.

க்ளிம்ட்டின் ஓவியங்களில் பலவற்றின் வசீகரத்துக்குக் காரணம் அவற்றின் அதி அபரிமிதமான ஆடை, ஆபரண அலங்காரங்கள். தங்க நிறமும், அவரது விரல்களின் நீளம் ஒரு அங்குலம் தானோ என்று எண்ணவைக்குமளவு அதிநுணுக்கமாக வரையப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட ஓவியங்கள், மீயதார்த்தத்தின் விளிம்பில் கைகட்டி நிற்கும் உருவச்சித்திரங்கள் (portraits), உள்-வெளியாகத் தலைகீழாக உருவப்பட்ட சாக்ஸ் போல வித்தியாசமான பார்வைக்கோணத்துடனான Auditorium in the Old Burgtheater போன்ற கட்டிட ஓவியங்கள், பிற்காலத்தில் கிழக்கத்திய நிறங்கள் நிரம்பிய கலைடாஸ்கோப் போன்ற ஆடையாபரணங்களைக்கொண்ட ஓவியங்கள் என்று விரிந்திருக்கும் அவரது ஓவியப்பரப்பின் மைய இழைகள் பெண்களும், உடற்கிளர்ச்சியும் (எரோட்டிசிஸம்). முதன்முதலில் க்ளிம்ட்டின் ஓவியங்களைப் புத்தகங்களில் பார்த்தபோது பளீரென்று தனித்துத் தெரிந்தது, அவற்றின் செதுக்கு திறன். Portrait of Adele Bloch-Bauer I என்னும் ஓவியம்தான் முதலில் பார்த்த சில ஓவியங்களில் நன்றாக நினைவிருப்பது.


Mark Harden

தங்கத் துகள்கள் சிதறிப் பக்கமெல்லாம் பறந்து குவிந்து கிடப்பது போலவும், அதன் மத்தியில் அவற்றின் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு எழும் பெண் முகமும் மேற்புற உடலும் எண்ணற்ற வெவ்வேறு சருகுகளாகப் பிரிந்து ஓவியப்பரப்பு முழுதும் பரவியலைந்தன. பிற்காலத்து ஓவியங்கள் இந்தளவு நிறஆழ வேறுபாடுகள் (contrast) இன்றி, ஆபரணங்களின் ஆழம் குறைந்து, பிற நிறங்களின் பின்னணியில் உடலின் ஒத்திசைவை, அழகின் வெளிப்பாட்டைச் சித்திரிக்கின்றன. Portrait of Mada Primavesi என்னும் படத்தில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நளினம் பற்றிய அக்கறையின்றி யதார்த்தமாக நிற்கும் வெளிறிய பெண்ணும் (கர்ப்பிணியா அவள்?) அவளது உடையும் சுற்றுப்புறங்களும், Water serpents போன்ற சில ஓவியங்களின் நிறப்பிரகாசங்கள் க்ளிம்ட்டின் பிற ஓவியங்களின் நிறப்பிரகாசங்களிலிருந்து சற்றே வேறுபட்டவை, மென்மையானவை. பழைய மறுமலர்ச்சி (Renaissance) ஓவியங்களிலும் அதற்கு முந்தைய ஓவியங்களிலுமிருந்த நிர்வாணம் பற்றிய, அதன் மென்மை பற்றிய கருத்தாக்கங்களை, உருவச்சித்திரங்கள் மூலம்கூட இடித்துப் பார்த்திருக்கிறார் அவர்.

இதை எழுதும்போது நடுநடுவில் வலைப்பதிவுகளைச் சற்றுநேரம் மேய்ந்துகொண்டிருந்தபோது ரோசாவசந்த்தின் 'குமட்டல் வாரங்கள்' பதிவு சிக்கியது. பதிவுகள் சுட்டியைச் சுட்டியதும், சரி, ஏதாவது திட்டல் கடிதமாக இருக்கும், அல்லது நமக்குப் பழக்கமான வசைபாடலாக இருக்கும் என்று நினைத்தால்!! வக்கீல் நோட்டீஸ். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. நல்லவேளை, காலச்சுவடு விட்ட வக்கீல் நோட்டீஸ் ஏதும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ ஜூமாக்ஸுகளுடனும் அல்பேர் கம்யூ மேற்கோள்களுடனும் இல்லை. சரி, இதேபோன்ற விஷயங்கள் பலருக்கும், ஏன், நமது க்ளிம்ட்டுக்கும் நிகழ்ந்திருக்கிறதே, சும்மா சும்மா ஏகப்பட்ட மயிரோட அம்மணமாப் படம் வரைஞ்சு நாறடிக்கிறாயே என்று அவரையும் குற்றம் சாட்டியிருக்கிறார்களே அந்தக்காலத்துப் பண்டித சிரோன்மணிகள், அதற்கு அவர் எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். க்ளிம்ட் செய்தது என்ன? தங்கமீன் (Goldfish) என்று ஒரு ஓவியம் வரைந்திருக்கிறார். இதே பெயரில் பால் க்ளீயின் (Paul Klee) ஒரு ஓவியமும் இருக்கிறது. அது வேறு. க்ளிம்ட்டின் Goldfish aka To my critics ஓவியத்தைச் சுட்டியைச் சுட்டிக் கண்டுகளிக்கவும்! அதுதான் க்ளிம்ட்டின் மீதான விமர்சனங்களுக்கு அவரது பதிலடி.

யார் கண்டது, அந்தக்காலத்தில் க்ளிம்ட் கூட வக்கீல் நோட்டீஸ் விட்டாரா, தண்ணியடித்துவிட்டுக் கூவினாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இருந்தாலும், விமர்சனங்களைக் கலையால் எதிர்ப்பவர்களின் உரம் எங்கே, இது எங்கே. பேசாமல், க்ளிம்ட் சொன்னதைச் செய்யவேண்டியதுதான். நோட்டீசு அனுப்பியவர்கள் இதுவரை யாரையும் விமர்சித்ததில்லை என்றால், தலைக்கு நேர் மேலாக இந்தப் படத்தை மாட்டிக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

2 comments:

Thangamani said...

Nice post. Thanks

ROSAVASANTH said...

முதலில் புரியவில்லை. மீண்டும் உற்று பார்த்தபோது Gift புரிந்தது. உங்கள் பதிவின் தயவில் க்ளிம்ட் குறித்த தளத்திற்கு சென்று உலாவிவிட்டு வர முடிந்தது. நன்றி.