Sunday, January 23, 2005

விமான நிலையம்

விமான நிலையம்: 1998
-மாண்ட்ரீஸர்

சிலுவை போட்டுப் பார்க்கமுயன்றுகொண்டிருந்த கைகளின் இடுக்குகளில் கட்டப்பட்டிருந்த சிலந்திவலைப் பின்னல்கள் அறுந்துவிடாமல் முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருக்க, விமானப் பயணத்துக்கு அவனை அழைத்துப்போக ஆட்கள் வந்தார்கள். நூலாம்படைகள் எங்கும் பரவிக் கிழிந்த பழந்திரைகளாய் வெளிச்சக் கற்றைகள் கிழித்துப் போட்ட கந்தல்துணிகளாய்ப் பரவியிருந்த வீட்டினுள்ளிருந்து மௌனச் சங்கிலிகளை ஓசையெழுப்பாமல் இழுத்துக்கொண்டு வெளிவந்தது அவன் கால். சந்தடி நிறைந்த விமான நிலையத்தில் அவர்கள் அமர்ந்தார்கள் வளைந்து கொடுக்கும் பாலிவினைல் நாற்காலிகளில். கண்ணாடித் தடுப்புகளினூடே தெரிந்த விமானதளத்தின் ஓடுதரையில் பிச்சைக்காரன் தன் திருவோட்டைத் தட்டிக்கொண்டிருந்ததன் சப்தம் இங்கு கேட்காமலிருக்க, போலீஸ் அதிகாரிகளின் மடிப்புக் கலையாத சீருடைகள் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. யாரோ ஒட்டிவிட்டுப் போன பபிள்கம் ஒரு வினாடியில் சடுதியில் நீண்டு மெல்லிய நூலாம்படைகளைப் பரப்ப, விமானநிலையம் முழுதும் பரவத்தொடங்கின நூலாம்படைகள். விரித்த வோக் பத்திரிகையுடன் கறுப்புத் தோல் மினிஸ்கர்ட்டைத் தாண்டித் தோல் காலணிகளணிந்து கோதுமை நாகங்கள் இரண்டு ஒன்றன் மேலொன்று சாய்ந்து படுத்திருக்க தேங்கிய மழையில் தேங்கிய எண்ணெய் மிச்சங்களின் வர்ணஜால நிறப்பிரிகைகள் படகுகளுக்காகக் காத்திருத்து மிதந்துகொண்டிருந்தன. சிலுவையிட்டுக் கொண்டிருந்த கைகள் இப்போது அமைதியாயிருக்க, ஜன்னலோர இருக்கை ஏற்பாடு செய்திருந்தால் நலம் என்றான். டையைத் தளர்த்திக்கொண்டு அவர்கள் அமைதியாக இருந்து, சேற்றில் புரண்டு எழுந்து வார் அறுந்துபோயிருந்த அவர்களது ரப்பர் செருப்புக்களைக் கழற்றி வைத்தார்கள். நூலாம்படைகள் மேலே பரவிக்கொண்டிருக்க, நிலையப் புத்தகக்கடை அருகில் படுத்திருந்த வெள்ளை மாடு தன் புட்டத்தைச் சோம்பலுடன் மெலிதாக உயர்த்து ஒரு சின்னப் பெருமூச்சுடன் கரும்பச்சையும் பழுப்புக் கலந்து சாணமிட்டது. கையில் தகரச் சட்டியுடன் வந்த அந்தப் பெண் அள்ளிக்கொண்டுபோய்ச் சுவர்களில் வட்டவட்டமாக அறையத் தொடங்க, நிலையத்துக்குள் நூலாம்படைகளுடன் கைவிரல் தடங்களும் வேகமாகப் பதியத்தொடங்கின.

என் மூளையின் பக்கங்களின்மேல் ராமபாணப்பூச்சிகள் ஊர்கின்றன என்று புகார்செய்தான் அவர்களிடம். செருப்பில் தங்கியிருந்த சேற்றை வழித்துக் காலியாயிருந்த நாற்காலிகளில் தடவிக்கொண்டிருந்தான் ஒருவன். அவர்களின் பொதுவான அமைதி பபிள்கம்மின் நூலாம்படைகளில் தங்கியிருந்தது. கண்ணாடிகளைத் தாண்டி, எரிந்துகொண்டே அந்த விமானம் தரையிறங்குவதைப் பார்க்கமுடிந்தது. கருகிப்போன தலைமுடிகளுடம், தீய்ந்து கருவளையங்கள் படிந்த கண்களுடன் பிரயாணிகள் மௌனமாகப் படிக்கட்டுகளில் இறங்கினர். எஸ்கலேட்டர்களில் கீழிறங்கித் தங்கள் கருகிப்போன பெட்டிகளையும் எலும்புத்துண்டுகளையும் பொறுக்கிக்கொள்ள, வெள்ளை மாட்டுக் கழிச்சல் தொடங்கியிருந்தது. வேதனையான முனகலுடன் தீய்ந்து பளிங்குத் தரையெங்கும் சாணியைப் பீய்ச்சியடிக்க, ஒலியெழுப்பும் காலணிகள் அணிந்த குழந்தை நேராக அதன்மேல் நடந்து பின் வழுக்கி விழுந்தது. அரையடி இடைவெளியில் இருவரும் எதிரெதிராக நின்று பேசிக்கொண்டிருக்க, அவன் கையிலிருந்த ரோஜாவினுள்ளிருந்து வெளிர்மஞ்சளில் புழுவொன்று எட்டிப் பார்த்தது. பின்னொரு காலத்தில் சுவருடன் அவன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னான்: அப்போது விமான நிலையச் சுவர்களெங்கும் தரையெங்கும் கரையெங்கும் இறங்கும் விமானச் சப்தங்கள், அறீவிப்புகள், மிதந்துவந்த வாசங்களினூடே கைவிரல் தடங்கள், பீதியூட்டும் வகையில் படிந்து கறூத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த வரட்டிகளும் நூலாம்படைகளும் நிறையத்தொடங்கியிருக்க, காஃபிக்கோப்பையில் விழுந்த நூலாம்படைகளை யாருக் தூக்கியெறியவில்லை. தூய மணத்துடன் அவை குடல்களில் தொண்டைகளில் ஆசனவாய்களில் தங்கள் கிளைகள் பரப்பி வலைபின்னவேண்டிப் பிரயாணம் செய்தன எதிர்ப்பேதுமில்லாமல். கோட் பாக்கெட்டிலிருந்து எடுத்து நுனியைக் கிள்ளிவிட்டுப் பீடி பற்றவைத்துக்கொண்டு அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். இன்னும் ஜன்னலருகில் உட்கார்ந்தால் ஜன்னல் கண்ணாடிகளின் நீர்மை உள்ளிழுத்து மேகங்களில் எறிந்துவிடும் என்றான் ஒருவன், வெகுநேரம் கழித்து. அனைத்துக் கண்ணாடிகளின் பின்னும் போய் நின்றுகொண்டு பாதரசம் பூசவேண்டும். கண்ணாடிகளுக்குள் உறைந்து போகலாம். விரிசல் விட்டுக்கொண்டிருந்த அவர்களின் வழியிலகப்பட்டுக்கொண்ட வரட்டிகளின் விரல்தடங்கள் சிதறத்தொடங்கின. பிச்சைக்காரனின் திருவோடு இப்போது நெளிந்துகிடக்க, விடாமல் தட்டிக்கொண்டிருந்தான். சீரான தாளகதியில் அவன் கைகள் மேலேறிக் கீழிறங்குமாறு கோதுமை நாகங்கள் புரண்டு இடம் மாறிக்கொண்டன. இறக்கும் இடத்தில் என்னைச் சுவர்களுக்குள் விட்டுவிடாதீர்கள், நான் போகவிரும்புவது கடற்கரை அருகிலுள்ள திறந்தவெளி என்றான். தீராத இருமலின்பிறகு மூக்கில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அவர்களில் ஒருவன் சாயாத அமைதியுடன் இவனைப் பார்க்க, பச்சை வனங்கள் நடுவில் புடைத்த தொண்டைகளுடன் ஓணான்கள் மரநிழலில் கிளைமேலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருந்தன. விமானங்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, இவனை அழைத்துக்கொண்டு அவர்கள் எழுந்தார்கள். ரப்பர் செருப்புக்கள் பட்பட்டென்று ஒலியெழுப்பின. மறுபடி அமர்ந்துகொண்டார்கள்.

நேர்த்தியாகக் குடையப்பட்ட துவாரங்களுடைய முகமூடிகளைப் பயணிகள் அணிந்து இறங்கி வந்துகொண்டிருக்க, காப்பேறிப்போன விரல்கள் செதுக்கின கோர மொழிகளின் ஆழ்ந்த மௌனம் அவற்றின்மேல் படிந்திருந்தன நுண்ணிய வரிகளாய். நடக்க நடக்கக் காற்றில் கரைந்துகொண்டிருந்த முகமூடிகள் விமானநிலையக் கண்ணாடித் தடுப்புகள் தாண்டி உள்நுழைந்ததும் தன் மிச்சங்களை முகத்தினாழத்தில் புதைத்துக்கொண்டன வெளிவருதலுக்கான பின்னொரு தருணம் எதிர்பார்த்து. காக்கிச் சட்டைகளின் வளையத்தின் நடுவில் திருவோடு நெளியா ஓடுதளத்தின் தரை அசுரகதியில் தாக்கப்பட்டுக்கொண்டிருக்க, திருவோட்டின் நெளிசல்களிலிருந்து புறப்பட்டுவந்த சீரான ஒலிச்சுருள்கள் காக்கிச்சட்டையின் தையல்களுக்குள் நுழைந்து பரவி வெளிப்பட்டுக் கைகளையிழுத்துப் பின்புறமாய் இறுகப் பிணைத்திருந்தன அசைக்கமுடியாமல். எதனுடனும் தொடர்பற்ற எதனுடனும் தொடர்புள்ள பெருவெளியின் திரையில் நிரப்பப்படாமலிருக்கிறதெனப்பட்ட வெற்றிடங்கள் தவிர்த்து மற்றைய இடங்களில் கலந்து உருகி வழியும் வர்ணங்கள், அவற்றின் அனந்தகோடிச் சேர்க்கைகள் அழிவுகள். கோட்டும் டையும் செருப்புமணிந்து பீடி வலித்துக்கொண்டிருந்தவர்கள் சடுதியில் உருவாக்கிய அரைவட்டத்தின் வியூகத்தினூடே நகர்ந்து மேஜைகள் தாண்டிச்சென்று ஏறவேண்டியிருக்கும் விமானத்தின் படிகளில் அசைவற்று நின்றிருந்தது நிலப்பரப்பு. சென்றுகொண்டும் வந்துகொண்டும் வினோதக் கோணங்களில் தடயங்களில்லாப் பாதைகளை உருவாக்கிக் கொண்டிருந்த வாகன, மனிதர்களின் வேர்கள் நகராதவை என்றும்.

சிலந்திவலை ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டிருந்த சர்க்கஸ்காரர்கள் காலக்குறிகளின் குவியல்களுக்கடியில் எதிர்பின்றிப் புதைந்துபோன குற்றத்தின் நிகழ்பரப்பைப் பிடித்திழுத்துவந்து விமானத்தினுள்ளும் பரவியிருந்த பபிள்கம் நூலாம்படைகளின் மெல்லிய இழைகளில் பரப்பிக் காயவைக்கிறார்கள், எந்தவொரு கண்ணியும் அறுந்துவிடாதபடி. சுழன்றுகொண்டிருக்கும் ஒரு வியூகத்தில் அவர்கள் சுற்றி அமர்ந்திருக்க, பளிங்குத் தரையில் படுத்திருந்த மாடு வேதனைக்குரலெழுப்ப இப்போதைய அதன் கழிச்சல்களில் விரல்ரேகை பதியும் வரட்டிகள் உருவாகாது. இயந்திரங்களின் கட்டிட்டங்களின் மொசைக் கண்கள் காலங்காலமாய்ப் பார்த்துச் சலித்த மௌனப் பிரலாபிப்புகளின் விளைவாகக் கருவளையங்கள் போர்த்தியிருக்க, நூலாம்படைகள் தளர்ந்தன. இயக்கம் தளர்ந்த சிலந்திகள் செத்து விழ வேகம் குறைகிறது, நூலாம்படைகளின் பரவலில். தத்தித் தத்தித் தன் கறுப்புக் கால்களால் ஒருச்சாய்த்து நகர்ந்துவரும் காக்கை தன் ஈரக் கண்களால் பார்த்துப் பின் அமர்ந்துகொள்கிறது குற்றப் பரப்பின்மேல். ஜன்னி காணும் விமானநிலையக் கட்டிடச் சுவர்களில் நடுக்கம் உருவாகி அதிரத் தொடங்க, முகமூடிகளைப் புதைத்துக்கொண்டவர்களும் பெட்டிகளையும், எலும்புத்துண்டுகளையும் பொறுக்கிக்கொண்டவர்களும் சேற்றில் கால்கள் புதையப் புதைய நடந்துகொண்டிருக்கிறார்கள் வாசலைநோக்கி. தொப்புள்கொடிகள் துணியில் சுற்றித் தொங்கவிடப்பட்ட ஆலமரங்களின் சோக வர்ணங்களும் அரித்துச் சிதைக்கப்பட்டுப் பரவிக்கிடந்தன வாசலுக்கருகில். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும் விமானம் என்றான் வியூகத்தில் ஒருவன். ஜன்னலோர இருக்கை. சரி. கண்ணாடித் தடுப்புகளின் குளிர்.

முழுக்க நெளிந்து உருவற்றுப்போன திருவோட்டை இப்போது உயர்த்திப் பார்த்தான் பிச்சைக்காரன். வடிவமற்றிருந்தது, சுருக்கமாக. மௌனமாக ஓடுபாதையின் நடுவில் வைத்துப் பெருமிதம் தெறிக்க எழுந்தான்: அவனைக் கைது செய்தார்கள். திருவோட்டைக் கவனமாகத் துணி மூடி எடுத்துக்கொண்டு ஒரு பெட்டியினுள் வைத்தார்கள். பின்பு அழைத்துவரும் வழியில் எதிர்ப்பேதுமின்றி மௌனமாக இருந்தான். ஈரமான கண்களால் பார்த்தவாறு காக்கை அங்கேயே நின்றிருந்தது அசைவின்றி. சங்கடத்துடன் நெளிந்த கோதுமைநாகங்களின் மேலிருந்த கைப்பை நழுவிக் கீழே விழுந்திருக்கும்: பிழைத்தது. கதவைத் திறந்து அவனை விமான நிலையத்தினுள் அழைத்துவந்து வாசலைநோக்கி நடத்திச்செல்ல, தீட்சண்யமான கண்களைக்கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரனது பார்வை நேர்க்கோட்டில் நிலைத்திருந்தது கூர்மையாய்.

நம் விமானம் வந்துவிட்டது என்றது வியூகம். பிரயாணத்துக்காக அவர்கள் எழ, அவனும் தளர்வுடன் எழுந்து நின்றான். கண்ணாடித் தடுப்புக்கப்பால் சப்தமின்றி வந்து நின்ற விமானத்துள்ளிருந்து தீய்ந்துபோன முகங்களை மறைத்துக்கொள்ள முகமூடியணிந்த பிரயாணிகள் பெட்டிகளுடனும் எலும்புத்துண்டுகளுடனும் வெளிப்பட, நீர்வண்டிகள் தண்ணீரைப் பீய்ச்சி எரிந்துகொண்டிருந்த விமானத்தை குளிர்வித்துக்கொண்டிருந்தனர். நாம் போகலாம் என்றது வியூகம். கண்ணாடிக் கதவுகள் திறக்கப்பட்டன. சிலுவை போட்டுக்கொள்ள ஆரம்பித்ததில் கைகளின் இடுக்குகளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிலந்திவலைப் பின்னல்கள் அறுந்துவிடாமல் முன்னும் பின்னும் அசையத்தொடங்கின.

No comments: