Saturday, January 29, 2005

சவுக்கு

சவுக்கு
-மாண்ட்ரீஸர்


படம் நன்றி: MC Escher Official website

என் பெயரைச் சொல்லிக்கொள்ளக் கூச்சமாக இருக்கிறது. உண்மையில், என்னை நானே விளக்கிக்கொள்வதும் எவ்வளவு சிரமப்பட்டுப் பின்வருபவற்றைச் சொல்கிறேன் என்பதையும் போகப்போகப் புரிந்துகொள்வீர்கள். என்னையும் என் உற்றார் உறவினர் கோடிக்கணக்கானவர்களையும் கண்ணாடி ஸ்லைடில் இட்டு, மைக்ராஸ்கோப்புக்குக் கீழாக வைத்து, நாங்கள் எவ்வளவுபேர் உயிரோடு இருக்கிறோம், எத்தனைபேர் செத்தோம், எங்களது நகர்வும் சுழற்சியும் எப்படி இருக்கிறதென்று பார்த்து, எங்களது தரம் எப்படியிருக்கிறதென்று தீர்மானிப்பார்கள். கண்ணாடி ஸ்லைடில் வெறிகொண்டவர்கள்போல அலைவோம், உங்களுக்கு அது புரியாது. கரையைக் கண்டாலும் இறங்கமுடியாத கடல் எங்களுடையது. அது எங்களைக் கட்டுப்படுத்தும். கூட்டம் கூட்டமாக இடித்துக்கொண்டும் கதறிக்கொண்டும் மூச்சுத்திணறலுடன் கடலில் நீந்தி அலைவோம். எங்கள் அனைவரையும் ஒரே பெயரைக்கொண்டுதான் மனிதர்கள் அழைக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் என்ன அவமானமென்றால், என் வாழ்வு பெரும்பாலும் கறுப்பு உடல்களுக்குள் இருந்துவிட்டிருந்தது. வெளியே மனிதர்களனைவரும், நிறங்கள் ஒன்றே உள்ளே என்கிறார்கள் என்று தொல்கதைகள் உள்ளன எங்கள் சமுதாயத்தில், ஆனால் அவர்களுக்கென்ன தெரியும் உள்ளே இருக்கிறதென்று. வாழ்க்கை முழுவதும் வெள்ளை உடல்களுக்குள் இருக்கவும் நுழைந்துசெல்லவுமே நானும், இன்னும் பலரும் விரும்பியிருக்கிறோம் - நாங்கள் வாழும் இடங்கள் கறுத்தவை, அதைக்குறித்து நான் அடைந்த அவமானம் சொல்லி மாளாது. வெளியுலகிலிருந்து வரும் வெள்ளை உடல்களின் மேன்மை பற்றிய கதைகளைப் பரப்பிக்கொண்டிருந்த எங்கள் சமுதாயக் கலகக்காரர்களுடன்தான் நான் எப்போதும் இருந்தேன். நான் சொல்கிறேன், எங்கள் உலகில் அனைத்தும் கறுத்தவை, எங்களை வாழ்விக்கும் நதிகள் உட்பட. நான் வாழ்ந்த, கடவுள் என்று எங்களால் அழைக்கப்பட்ட கறுத்த மனிதன் நேற்றுத்தான் கொலைசெய்யப்பட்டான். அவனுக்குள்ளிருந்து நாங்கள் வெளியே வரப் பிரயாணத்துக்குத் தயார் செய்துகொண்டிருக்கும்போதுதான் அவன் கொலைசெய்யப்பட்டானென்று நினைக்கிறேன். நானும் குடும்பத்தினரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். இந்தப் பிரயாணத்தைப்பற்றியும் ஏராளமான கதைகள் உள்ளன. போகும் பாதைகள், செய்யவேண்டிய விஷயங்கள், தங்கவேண்டிய இடங்கள், தாகந்தீர்த்துக்கொள்ளவேண்டிய ஸ்தலங்கள், அண்டத்தைச் சந்திக்கும்போது தயவுதாட்சண்யம் பாராமல் உற்றார் உறவினரைத் தாறுமாறாகக் கொலைசெய்து அண்டத்தைத் துளைக்கவேண்டிய விதி - அனைத்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. எங்களது வாழ்க்கைகள் கிட்டத்தட்ட நாகரீகமடையாத மிருகங்களின் வாழ்க்கைகள் என்று பிரயாணிக்காமலே இறந்துவிட்ட எங்கள் வம்சாவழியின் முதியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அண்டத்தைத் துளைப்பதற்காக உறவினர்களைக் கொலைசெய்ய நேர்வதைப்பற்றி பலருக்கு ஆழ்ந்த அருவருப்பு இருப்பினும், உடல்களுக்குள் தங்கி உபயோகமின்றி இறப்பதா அல்லது பிரயாணம் சென்று இரும்புக் கற்றாழைகளைக்கொண்டு எங்களுக்குள் தாக்கிக் கொலைசெய்துகொள்வதா என்பதைத் தீர்மானிக்கும் விதி எங்களது கடவுளான மனிதனின் விருப்பத்தின்படியே இருந்தது. அவனே அனைத்தையும் தீர்மானித்தான். அவனது சற்று வேறுபட்ட வடிவத்தினுள் - (பெண் என்கிறார்கள் அவர்களை) நாங்கள் செல்லும்போது எங்கள் புலன்கள் சிதைந்துவிடுகின்றன, எங்களது கடமையை நிறைவேற்ற நாங்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு கொன்றே தீரவேண்டுமென்ற மீளமுடியாத விதி எங்களை ஆட்கொள்கிறது. எங்கள் சமுதாயத்தின் பிரயாணங்கள் பலதரப்பட்டவை - சிலசமயம் பாதையின் குறுக்காக விரிந்து பரந்திருக்கும் வேற்றுக்கிரக இரும்புத்திரைகளில் மோதி இறந்த, பிரிந்து வழிவிடாத செங்கடலில் மூச்சுத்திணறி உயிரிழந்த (எங்களுக்குக் குரல்கள் கேட்குமென்பதால், எங்கள் உலகத்துக்கு வெளியிலிருந்து வந்த கதைகளையும் கேட்டிருக்கிறோம்), தேவையற்ற நேரங்களில் பிரயாணம்போய் காலாவதியாகி இறந்த மூதாதையர் என்று கணக்கற்றவர்களை இழந்திருக்கிறோம்.

வேறு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேற்று நாங்கள் எங்கள் கடவுளிடமிருந்து வெளிவந்தபோது நிலையிழந்தோம் - எங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பாதை இல்லை அது. எங்கள் படை 'அந்தரத்தில்' பாய்ந்துகொண்டிருந்திருக்கக்கூடுமென்று இப்போது எங்களை மைக்ராஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன் சொல்கிறான். நாங்கள் 'பெண்'ணின்மேல் வீழ்ந்தோம். வீழ்ந்த இடம் குறித்தும் எங்களுக்கு எதுவும் தெரியாததால், என்ன செய்வதென்ற நிச்சயமற்று அங்கேயே கிடந்தோம். நானும் என் நண்பர்களும் அண்ணாந்து பார்த்தோம். எங்களது கடவுளை வேறு சில கடவுள்கள் இழுத்தனர். இழுத்த கடவுள்களும் பெண்ணும் ஒரேபோலிருந்தனர். இழுத்த கடவுள்களில் ஒருவன், எனது வால் போல இருந்த ஒரு ஆயுதத்தை வேகமாக எங்களது கடவுளின் கழுத்தில் பாய்ச்சினான். எங்கள் கடவுள் தடுமாறித் தரையில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்துகொண்டிருந்ததை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். என் நண்பனொருவன், இந்த வீழ்ச்சி நேரம் மனிதர்களுக்கு வேறுபடும் என்றான். அதை எப்படி விவரிப்பது. எங்களது கடவுள் விழத்தொடங்கினான் - என் பார்வையை ஒரு புள்ளியில் நிறுத்தினெனென்றால், கடவுளின் வீழ்ச்சி முழுவதும் கறுப்பாக இருந்தது - அதாவது, கடவுள் விழுந்துகொண்டே இருந்ததால், என் பார்வையின் வீச்சுக்குள் அந்த வீழ்ச்சியை அடக்கமுடியாததால், இப்படித் தெளிவின்றிச் சித்தரிக்கவேண்டியதாயிருக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து கருமை அகன்று, மேலும் சிலவருடங்கள் செலவழித்துப் பார்வையைத் திருப்பியதில் கீழே விழுந்துகிடந்த கடவுளைப் பார்க்கமுடிந்தது. வேறு கடவுள்களின் வால்க்கருவிகள் கடவுளின் உடலில் பலமுறை பதிந்தன. 'பெண்'ணை வேறு கடவுள்கள் தாக்கி, கூச்சலிட்டு, இழுத்துக்கொண்டு சென்றனர். 'பெண்' கூட ஒரு கடவுளாகத்தானிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அண்டங்கள் அப்படித்தான் அவர்களை விளிக்கின்றன என்றும் எங்கள் சமுதாயத்தில் கூற்றுக்கள் இருக்கின்றன.

நாங்கள் "பெண்"ணுடன் பயணித்துக்கொண்டிருந்தோம். குரல்களையே வெகுகாலம் கேட்டுக்கொண்டிருந்தோம். மேலும் சில கடவுள்களைப் பார்க்கையில் பல யுகங்கள் கடந்துவிட்டிருந்தன. "இதைப் பார்" என்றான் ஒரு கடவுள், ஆச்சரியப்பட்ட குரலில். "எவ்வளவு தெள்ளத் தெளிவாக வடிவங்குலையாமல் நின்றிருக்கிறது பார்! எதுவும் இதில் சாகாமல் இருந்தால்கூட ஆச்சரியப்படமாட்டேன்" என்றான் ஒரு கடவுள். எங்கள் கடலைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறானென்று விளங்கிக்கொள்ளச் சில கணங்களே ஆயின. பின்பு பல கடவுள்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். "வெளியே வைத்துவிட்டுப் போய்விட்டேன், அடுத்த நாள் வந்து பார்த்தாலும் சாகாமல் நிறைய இன்னும் நீந்திக்கொண்டிருக்கின்றன" என்றார்கள். அதன்பிறகுதான் நான் கடலிலிருந்து வெளிவந்து புது வாழ்க்கையைத் தொடங்கியது. வேறொரு கடவுள் என்னை எடுத்து வளர்த்தான். இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டு உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருந்த என் நண்பர்களிடமும் சமுதாயத்திடமிருந்தும், நான் வாழ்ந்த கடலையும் அதில் கலந்துள்ள எண்ணற்ற ஜீவநதிகளிடமிருந்தும் கண்ணீருடன் விடைபெற்றேன்.

நான் உலகத்தைத் தெரிந்துகொள்ளத் தொடங்கினேன். கடவுள் என்னை ரகசியமாகக் கடத்தி வந்திருந்தார். அவ்வளவு பேரிலிருந்து நான் ஒருவன் காணாமற்போயிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாதென்று நினைக்கிறேன். என்னை வேறு உபயோகத்துக்குக் கடவுள் உபயோகப்படுத்திக்கொண்டதால், என் பழம் வாழ்வுக்கு நான் திரும்பவேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. தேவைப்படும் அளவு எனக்கு உணவளித்தார் கடவுள். நான் அளவுக்கதிகமாக வளரத்தொடங்கினேன் - இப்போதெல்லாம் சில வினாடிகளில் கடவுளைத் தலைமுதல் கால்வரை பார்த்துவிடமுடிகிறது. எப்போதும் கடவுளின் உடலில் ஒட்டியே இருக்கிறேன் நான். பெரும்பாலும் அவர் என்னைக் கழுத்தில் சுற்றியே வைத்திருக்கிறார். என் தலை அவரது கழுத்தின் பின்புறம் தொங்கிக்கொண்டிருப்பின் அவரது பின்புற உலகத்தை மட்டும் பார்க்கமுடியும், முன்புறம் தொங்கிக்கொண்டிருப்பின் முன்புற உலகத்தைமட்டும் பார்க்கமுடியும். இதுகுறித்து நான் அவரிடம் எதுவும் சொன்னதில்லை. உண்மையில், அவரது மொழியையும் வேறு சில மொழிகளையும் இதற்குள் நான் அவர் பேச்சுக்கள் மூலமும், பிற கடவுள்கள் மூலமாகவும், அவர் படித்த புத்தகங்கள் பார்த்த திரைப்படங்களைக்கொண்டு கற்றுக்கொண்டுவிட்டிருந்தாலும், மொழியைக் கற்றுக்கொண்டேன் என்ற விஷயத்தை அவரிடமிருந்து மறைத்துவிட்டிருந்தேன். என்னை ஒருநாள் ஆதுரமாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார். "உன் பெயரை மாற்றப்போகிறேன். இன்றிலிருந்து உன் பெயர் சவுக்கு" என்றார்.

சவுக்கு. சவுக்கு. என் புதுப் பெயரை கடவுளுக்குக் கேட்டுவிடாமல் பலமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அதன் ஒலி நன்றாக இருந்தது. என் வடிவத்தைச் சரியாகச் சித்தரிப்பது போலப் பட்டது. அகலமாகத் தொடங்கி ஒடுங்கிப் பின் கூர்மையாக முடியும் என் வடிவம் போலவே அந்த ஒலியும் இருந்ததால், அதை எத்தனை தடவை திரும்பத்திரும்ப உச்சரித்து உச்சரித்து ஆனந்தப்பட்டேன் என்று தெரியாது. சவுக்கு. ச-வுக்கு. ச-வு-க்கு. சவுக்-கு, ச-வுக்-கு. நான்கே எழுத்துக்களாக இருப்பதால், இதைப் படிக்கும் நீங்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவீர்களென்று தெரியும், இருந்தாலும், நான் சொல்வதை நம்பிக்கொண்டும், என் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்களென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ச-வுக்-கு என்பது எழுத்து ரீதியாக அவ்வளவு நேர்த்தியற்று இருப்பதுபோலத் தோன்றினும், அதை உச்சரித்துப் பார்க்கும்போது, என்னைக் கச்சிதமாகப் போர்த்தும் ஒரு உறை போலப் படுகிறது அந்த ஒலி. அந்த ஒலியைக்கொண்டு இரவில் குளிரடிக்கும் போதெல்லாம் என்னைப் போர்த்திக்கொண்டு திரிந்தேன். அவர் கழுத்தைச் சுற்றியே இருப்பதால், ஒலிகொண்டு போர்த்துவது சற்றுச் சிரமமாகவே இருந்தது. என்ன செய்வது. எல்லாம் என் நேரம்.

அடுத்த சில வாரங்கள் பித்துப் பிடித்தாற்போல என் பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். சிலசமயங்களில் பலமாகச் சொல்லிவிட்டிருப்பேன் போலிருக்கிறது - கடவுள் (அவன் பெயர் கறுப்பன்) திரும்பிப் புதிராகப் பார்ப்பதைக்கண்டு சுதாரித்து, பின் எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அதுவும் ஒருவகையில் பிடித்துப்போனதால், அடிக்கடி என் பெயரை உரக்கக் கூவ ஆரம்பித்தேன். கறுப்பன் மெதுவாகப் பொறுமையிழக்கத் தொடங்கினான் என்று நினைக்கிறேன். அவன் கழுத்தில் இருப்பதும் எனக்கு வரவரப் பிடிக்காமல் போய்விட்டது என்பதால், தினமும் தொடர்ந்து கூவத்தொடங்கினேன்! என்னிடமிருந்து அப்படி ஒரு கூச்சல் வரமுடியுமென்பதை கறுப்பன் போன்ற மடையர்களால் ஊகிக்க முடியுமா என்ன? நான் நினைத்தது சரியாகப் போயிற்று. பொதுவில், அவனை ஒரு மனநிலை பிறழ்ந்தவன் என்று மற்றவர்கள் கருதினார்களென முன்பே அறிந்திருந்தேன். தன் பைத்தியக்காரத்தன வெறியில் என்னை எங்கேயாவது எறிந்துவிடுவானோ என்று அஞ்சினாலும், சமாளித்துவிட முடியுமென்றே நம்பிக்கையிருந்தது. தொடர்ந்த என் கூச்சல்களின் இம்சை தாளாமல், சிறிதுநாட்களாகத் தன் கழுத்திலிருந்து என்னைக் கழற்றி மேஜைமீது வைக்கவோ, ஆணியில் தொங்கவிடவோ செய்துகொண்டிருந்தான். மேஜை பரவாயில்லை. ஆணி தான் எரிச்சல். மேஜையில் பேனாக்களும் பென்சில்களும் காகிதங்களும் சிகரெட் பாக்கெட்டுகளும் ஏகப்பட்ட சில்லறைகளும் பெரிய கண்ணாடியொன்றும் அழுக்குத் துணிகளும் கிடந்தன. துணிகளின் நாற்றம் சகிக்கமுடியாததாயிருந்தது. ஒருமுறை அவன் என்னை மேஜையில் வைத்தவிதத்தில் என் தலை அவனது கசங்கிக்கிடந்த சட்டையின் நனைந்த கஷ்கத்தில் விழுந்துவிட்டது. இரண்டுமணி நேரம் கழித்து அவன் மறுபடி என்னை எடுக்கும்வரையில் பல்லைக் கடித்துக்கொண்டு வியர்வை நாற்றத்தைச் சகித்துக்கொண்டிருந்தேன். தரித்திரம் பிடித்தவன். வரவர அவனது நடவடிக்கைகள் ஏதும் சரியில்லை.

ஒருமுறை என்னை ஆணியில் தொங்கவிட்டிருந்தபோது ஏதோ காகிதத்தில் எழுதிக்கொண்டிருந்தான். ஆணியில் தொங்கிக்கொண்டு என்ன எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. காதல் கடிதம். அட என்று நினைத்துக்கொண்டேன். கறுப்பன் மேல் மெலிதாக எனக்கு இரக்கம் பிறந்தது. சற்று நாட்களுக்குமுன்னால் தன் டையைத் தேடிக் கிடைக்காமல் போனதால் என்னை டை போலத் தனது சட்டையில் கட்டி அழகுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போதே நினைத்தேன் மறை கழன்றுவிட்டதென்று. என்னதான் இருந்தாலும் டைகளும் என்ன அழகு. எத்தனை நிறங்கள். என்னைவேறு இவன் பழுப்பு நிறத்தில் வைத்திருந்தான். வெள்ளைநிறச் சாயம் பூசு என்று கேட்டுவிடுவேன், பயந்துபோய் எங்காவது என்னைப் பிறகு எறிந்துவிடுவான். குப்பைத்தொட்டியிலெல்லாம் போட்டுவிட்டால் என்ன செய்வது நான். காதல் கடிதம்: எட்டிப் பார்த்தேன். மிகச் சாதாரணமாக இருந்தது. சலித்துக்கொண்டேன். இவன் படித்த எத்தனை புத்தகங்களை இவனது தொண்டைக்கருகில் என் தலை தொங்கிக்கொண்டிருந்தபோது படித்திருக்கிறேன் - இப்படித் திராபையாக எழுதுகிறானே என்று நினைத்துக்கொண்டேன். சற்றுநேரம் கழிந்தது. அ........க............ன்..............ற நாற்காலியில் அவனது அ...................க........................ன்.................................ற உடம்பு பிதுங்கி வழிந்திருந்தது. முன்னூற்று எண்பது கிலோ எடை. அவன் கழுத்தில் சுற்றிக்கொண்டு வெகுநாள் வாழ்ந்திருக்கிறேனென்றால் நானும் எவ்வளவு நீளமாக வளர்ந்திருக்கவேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுத்து எழுதிமுடித்ததும் மூச்சுவாங்கினான். எரிச்சல் ததும்பியது. சரி போ என்று கவனிப்பதை விட்டுவிட்டேன். சற்று நேரம் கழித்துப் பார்த்தால் கறுப்பன் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தான். மூச்சு பயங்கரமாக இரைத்தது. காகிதத்தைப் பார்த்தேன். அன்புள்ள அது இது என்பதைத் தாண்டி வாக்கியம் முடிவடையாமல் நின்றிருந்தது. அவசரமாக சுதர்சனனைத் தொலைபேசியில் அழைத்தான்.

சுதர்சனன் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான். வெகு நேரம் கறுப்பன் தனது நிலையை விளக்க முயன்றும் முடியவில்லை, அவன் சொன்னதை வைத்து சுதர்சனனாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காகிதத்தையும் கறுப்பனின் உளறல்களையும் சுதர்சனனின் யூகங்களையும் கேட்டு, பார்த்து, சற்றுநேரம் கழித்து சுதர்சனன் கண்டுபிடித்த விஷயத்தை முன்பே கண்டுபிடித்துவிட்டிருந்தேன். பிரச்னையின்றிக் கடிதம் எழுதத்தொடங்கிய கறுப்பனுக்கு, காதல் என்று எழுதநினைக்கையில் 'க' என்ற எழுத்து நினைவிலிருந்து தப்பிவிட்டிருந்தது. அதனால்தான் சுதர்சனன் வரும்வரை தன் அறையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் வெறிகொண்டதுபோலப் புரட்டிக்கொண்டும் பாடல்களைக் கேட்டுக்கொண்டும், தன் கையைக்கொண்டு பேனாவைப் பிடித்து எழுதமுயன்றுகொண்டும், கணிப்பொறி விசைகளை வெறித்துக்கொண்டும் நிலையின்றி அறைக்குள் ஜூரவேகத்தில் அலைந்துகொண்டுமிருந்தான் போல. க என்று நான் சுவரிலிருந்து கூவினேன். சுதர்சனன் ஆச்சரியப்பட்டு சுற்றுமுற்றும் பார்த்து பின் கறுப்பனிடம் திரும்பி "விளையாடாதே" என்றான். இது ஆபத்தாக முடிந்துவிடும் போலிருக்கிறதே என்று அதற்குமேல் எதுவும் சொல்லாமல், இயலாமையுடன் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். "க, கறுப்பா. உன் பெயரிலேயே இருக்கிறது. க. அது ஒரு எழுத்து. அதை நீ மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். இதோ கொஞ்சம் தண்ணீர் குடி. க. க. சொல்லு, க. எழுது, இதோ பேனாவைப் பிடி. க. எழுது. எழுதுடா தடியா. க. க. க. க. க. க....."

சுதர்சனனுக்கு நிலைமை விளங்கவில்லை. அவசர அவசரமாகச் சிலரைத் தொலைபேசியில் அழைத்தான். ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த என் மனம் கலங்கியது. என்னை எடுத்துக் கழுத்தில் மாட்டு கறுப்பா, உன்னைத் தழுவிக்கொள்கிறேன், எப்படியாவது நீ இழந்த எழுத்தை உனக்குள் புகுத்திவிடுகிறேன் என்று இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன். சவுக்கு வாழ்வின் முதல் முறையாக என்னை நானே அசைத்துக்கொள்ள முயன்றேன். என் வால், என் தலைப் பிடி, என் உடல் - அசையுங்கள் அசையுங்கள் என்று கதறினேன். எனக்கு விதிக்கப்பட்ட அசைவின்மையின் குரூரக் கருணையின்மை அந்தக் கணங்களில் ஊழிப்பிரளயமாய்த் தாக்கி அழித்தது என்னை. கையைப்பிடித்து எழுதச்செய்தும், ககளைக் காட்டியும், ஒலிக்கச்செய்தும் சுதர்சனன் தானே எழுதிக்காட்டியும் கணிப்பொறியில் அடித்துக்காட்டியும் கறுப்பனுள் ஏறவில்லை. அவனது பெருத்த உடல் குலுங்க, கறுப்பன், திக்கும் மனதுடன், உறைந்துவிட்ட மொழியுடன், மூச்சுத்திணறலுடன் அறுத்த மரமாய்த் தரையில் சாய்ந்தான். அவனது கண்கள் அகன்றன, கன்னம் சிவப்பானது, தோளைவிட மூன்று அடிகள் அகலமான அவனது இடுப்பின் ஊளைச்சதைகள் அதிர்ந்து அதிர்ந்து வேதனையுடன் தரையில் புரண்டன. குழந்தை போன்று தடித்த தனது மெல்லிய விரல்களாலும் உள்ளங்கையாலும் தரையை அறைந்துகொண்டே தொடர்ந்து அழுதான் கறுப்பன். அறையும் ஒவ்வொரு கணமும் அவன் விரல்கள் காற்றில் எழுதமுயன்று மறுபடி வெறுமைக்குள் வீழ்ந்து கதறின. சுதர்சனன் தன் கைத்தொலைபேசியை வெறிகொண்டதுபோல் சுவற்றில் எறிந்து நொறுக்கினான். கழுத்துச்சதை பிதுங்கி வழிய, திறந்த கறுப்பனின் வாய், தொலைந்த எழுத்தின் காலடியில் வீழ்ந்து, அகலமாகத் திறந்து கரையில் விழுந்த மீன் போலத் திறந்து மூடித் திறந்து மூடித் துடித்தது.

அறைக்குள் பலர் வந்துவிட்டிருந்தார்கள். ராணி சொன்னாள்: "ஊருக்கு வெளியே மலைமேல் க முளைத்திருக்கிறது. இங்கே வருமுன் யாரோ எனக்குச் சொன்னார்கள். அருகில் போக பெரும்பாலானோர் பயப்படுகிறார்கள்".

அவர்கள் அனைவரும் சேர்ந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் கறுப்பனைத் தூக்கிப் பெரும் தள்ளுவண்டியொன்றில் கிடத்தினார்கள். அவனை நகர்த்துமுன் கறுப்பன் என்னைநோக்கிக் கைநீட்டினான். கடவுளே என்று அழுதேன். சுதர்சனன் என்னை அவசரமாக ஆணியிலிருந்து உருவி கறுப்பனின் தோளில் போட்டான். என் தலை கறுப்பனின் முதுகில் பதிந்து கிடந்தது. முடிந்தவரையில் அவனது தோளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முயன்றேன், கறுப்பா, க - க - க சொல்லு என்று கிசுகிசுத்தேன். க. கண். காது, கிளி, கிளிகள், கிரீடம், குருவிகள், கொம்பு, கறுப்பா, கறுப்பன் - க - க - என்று உரக்கவே கூச்சலிட்டேன். அவனைத் தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தவர்கள் என்னை வினோதமாகப் பார்த்து, கிச்கிச்சென்று என்ன ஒலி எழுப்பிக்கொண்டிருக்கிறது இது என்றனர், அசூயையுடன்.

மலைமேல் தூக்கிச்செல்ல வசதிகள் இல்லாததால் பல்லக்கு போன்ற ஒரு பெரிய பலகையில் வைத்து இருபது இருபத்தைந்து பேர் கறுப்பனைத் தூக்கிச்செல்ல, வழியெங்கும் க முளைத்த கதையைப்பற்றிப் பேசிக்கொண்டே சென்றனர். அவர்கள் அனைவருக்கும், ஏன், எனக்கும்கூட அது நினைவிருக்கிறதே... நான் கறுப்பனைப் பார்த்தேன். இன்னும் அவனது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. புரண்டு கீழே விழுந்துவிடாமலிருக்க, இடைவார்களைக்கொண்டு அவனைப் பலகையுடன் பிணைத்திருந்தார்கள். விடாமல் அசைந்துகொண்டிருந்தன அவனது விரல்கள். திடீரென்று என் உலகம் இருண்டுபோவதுபோல் இருந்தது. மலை மிகச் செங்குத்தாக இருந்தது. சிரமப்பட்டு அனைவரும் ஏறினார்கள். நான் கறுப்பனின் உடல்மேல் வழுக்கத்தொடங்கினேன். இல்லை இல்லை என்று கூச்சலிட்டேன். இல்லை, இல்லை, இல்லை.

கறுப்பனின் உடல்மேலிருந்து, காய்ந்துகிடந்த இலைகளும் சுள்ளிகளும் அடர்த்தியாக இறைந்துகிடந்து, நூற்றுக்கணக்கான பழுப்புநிறங்களும் பச்சைநிறங்களும் நிரம்பியிருந்த காட்டின் தரையில் வழுக்கி விழுந்தேன். என்னை எவரும் கவனிக்கவில்லை. திகிலுடன் சிறிதுநேரம் மூளை செயலற்றுப்போய்க் கிடந்தேன். பல்லக்கு ஊர்வலம் மெதுவாக என்னைவிட்டுத் தொலைவில் சென்றது. இரவு கவியத்தொடங்கியது. திரும்ப வருகையில் யாரேனும் என்னைக் கவனித்து மறுபடிக் கறுப்பனுடன் சேர்த்துவிடக்கூடுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். இரவு முழுவதும் பெருத்த காற்று வீசிக்கொண்டிருக்க, காய்ந்த இலைகள் என்னை மூடிக்கொண்டன. இப்போதுவரை வெகுகாலத்துக்கு எந்த அரவமும் கேட்கவில்லை. இறங்குகையில் அவர்கள் வேறு திசையில் சென்றிருக்கவேண்டும். நான் நம்பிக்கை இழப்பதில்லை. எனக்கு இன்னொரு கழுத்து கிடைக்கும், நான் மறுபடி வாழ்வேன். க முளைத்தது பொன்ற விஷயம் குறித்த உணர்வுகளை அழித்துக்கொள்ளப் பழகிக்கொண்டிருப்பேன், அதுவரை.

1 comment:

Anonymous said...

savukku makes one feel gulty.mantressor! you say things very fast like a sweeping wind.i consider every one to be karuppan at any certain point.