Wednesday, January 26, 2005

மரணம் பற்றிய இரண்டு படங்கள்



படங்கள் நன்றி: ஆமஸான்

சில வாரங்களுக்குமுன் பார்த்தது: 'இகிரு' (to live) என்று ஒரு படம் (குரோஸவா, 1952). முப்பது வருடங்களாகக் காகிதக் கடல்களில் மிதந்துகொண்டிருக்கும் வாத்தானபி என்ற டோக்கியோ நகரசபையில் ஒரு பிரிவுத் தலைவரைச் (section chief) சுற்றிச் சுழல்வது.

படத்தின் முதல் காட்சி, வாத்தானபியின் வயிற்றின் எக்ஸ்-ரே. பின்னணிக் குரல், இவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருக்கிறது, இன்னும் சிலகாலமே இவர் வாழ்வில் மிச்சமிருக்கிறது என்று தெரிவிக்கிறது. மருத்துவர், "நினைத்ததையெல்லாம் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்" என்கிறார். வாத்தானபிக்கு, தன் ஆயுள் ஆறு மாதமோ ஒரு வருடமோ என்று தெரிந்துபோகிறது. மனைவி இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமல் மகனை வளர்த்தெடுக்கிறார்; திருமணமான மகனுக்கும் மருமகளுக்கும் அவரது ஓய்வூதியத்தின் மேலும், ஓய்வுப் பணத்தின் மேலும் ஒரு கண். அலுவலகத்தில், "இந்தப் பிரிவு இல்லை, அங்கே போ" என்று அனைத்துப் பொறுப்புக்களையும் வேறெங்காவது கைகாட்டித் திருப்பிவிட்டு, தொடர்ந்து காகிதங்களில் முத்திரை குத்தியவாறு காலத்தைக் கழிக்கும் ஒரு தீர்ந்துபோன அரசாங்க அதிகாரி. சாவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன என்று தெரிந்துபோனபின்பு வாழ்க்கையை வாழமுயலும், ஏதாவதொன்றைச் செய்யமுயலும் ஒரு யதார்த்தமான பாத்திரம்.

சாதாரணக் கதை போல இருந்தாலும், உத்திரீதியிலும் சற்று வேறுபட்ட படம். முதல் ஒன்றேகால், ஒன்றரை மணி நேரம் படம் வாத்தானபியைச் சுற்றிச் சுழல்கிறது, அதன்பின் வாத்தானபி சாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அவரைப்பற்றியும், கடைசிக்காலத்தில் அவர் செய்த நல்ல காரியத்தைப்பற்றி வெவ்வேறு கோணங்களில் விவாதிப்பதையும் சித்தரித்துப் படம் முடிகிறது. கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது, குழந்தைகளுக்கும் சுகாதாரத்துக்கும் கேடு, அதை அகற்றிவிட்டு ஒரு பூங்கா கட்டவேண்டும் என்று புகார்கொடுக்க நகரசபைக்கு வரும் பெண்களை, இந்தப் பிரிவில்லை அந்தப் பிரிவுக்குப் போ, அந்தப் பிரிவுமில்லை வேறொரு பிரிவிற்குப் போ என்று தொடர்ந்து விரட்டும் அரசாங்க அதிகாரிகள்நிறைந்த, காகிதக் கடல் சூழ்ந்த அலுவலகத்தில் வாத்தானபி, மற்றுமொரு குண்டூசி போல, மற்றுமொரு பேப்பர்வெயிட் போல, மற்றுமொரு நாற்காலி போல முப்பது வருடங்களைக் கழித்திருக்கிறார். சாவு நெருங்குகிறதெனத் தெரிந்ததும், அனுபவிக்காத அனைத்தையும் அனுபவித்துவிடவேண்டுமென்று தன் சேமிப்புப் பணத்தில் பாதியை (50,000 யென்) எடுத்துக்கொண்டு மதுக்கடைக்குப் போய் தொடர்ந்து குடிக்கிறார், ஆனால், பணத்தை எப்படிச் செலவழிக்கவேண்டுமென்று தெரியவில்லை. அதே மதுக்கடையில் இருக்கும் மற்றொரு எழுத்தாளன், அவரது அன்றைய இரவின் நண்பனாகவும், லோகாயத வழிகாட்டியாகவும் இருந்து, pin-ball விளையாட்டரங்கங்களுக்கும், கேளிக்கை அரங்கங்களுக்கும், சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் அவரை அழைத்துச் செல்கிறான். முப்பது வருடமாக அவரது தலையைத் தேய்த்த ஒரு தொப்பியை ஒரு பெண் பட்டென்று பிடுங்கிக்கொண்டு கூட்டத்தினுள் மறைந்துவிடுகிறாள். அத்தனை வருடங்களுக்குப்பின் அவரது தலையில் புத்தம்புதிதாக நவநாகரீகத் தொப்பி ஒன்று குடியேறுகிறது - ஆளுக்குப் பொருந்தாத தொப்பியா, தொப்பிக்குப் பொருந்தாத ஆளா என்று குழப்பமே. மேக்ஸ் எர்ன்ஸ்ட்டின் The hat makes the man ஓவியம்தான் நினைவுக்கு வந்தது. இருண்ட திரைக்காட்சிகளுக்கு நடுவில் வெள்ளைநிறத் தொப்பி மட்டும் மதுவின் போதையுடனும், இரவின் போதையுடனும், தனிமையின் போதையுடனும் குறுக்கும் நெடுக்குமாக அலைகிறது. இசையும் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியும் பொங்கி வழியும் கேளிக்கைக்கூடமொன்றில், உதடுகள் அசையாமல், தகரத்தைக் கல்லில் தேய்க்கும் தனது குரலில் ஒரு சோகப் பாடலைப் பாடி, அந்தச் சூழல் முழுவதின் தலையிலும் ஒரு பெரும் பாறாங்கல்லைத் தூக்கி வைக்கிறார். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத வாத்தானபி, தொடர்ந்து அலுவலகத்துக்கு மட்டம் போடுகிறார், அலுவலகத்திலுள்ள ஒரு ஏழை இளம்பெண்ணைச் சந்திக்கையில் அவளுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவளுடன் அடிக்கடி வெளியில் செல்லவும் பொழுதைக் கழிக்கவும் ஆரம்பிக்கிறார். அவரது முதுமையும் வாழ்வின்மையும் அப்பெண்ணின் இளமையின் வேகத்துக்கு இடங்கொடுக்கவியலாமல் இருவரையும் துன்பத்திலாழ்த்துகிறது.

பிறகு இறந்துவிடுகிறார்.

படத்தின் பின் பாதியில், அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு வரும் அலுவலக ஊழியர்கள் அவரைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். கடைசிக்காலத்தில் திடீரென்று அவருக்கு என்ன ஞானோதயம் ஏற்பட்டதென்று, எப்படி திடீரென்று அவ்வளவு வேகம்பெற்று வேலை செய்தார் என்று. நகரப் பெண்கள் அஞ்சலிசெலுத்த வருகின்றனர். வாசனைப்பத்திகளை ஏற்றிவைத்து, வாத்தானபி-சான் இல்லாவிட்டால் எப்படி அந்தக் கழிவுநீர்க் குட்டை அப்படியே இருந்திருக்கும், எப்படி உத்வேகத்துடன் அதைச் சுத்திகரித்து பூங்கா ஒன்றை இறப்பதற்குச் சற்று நாள் முன்பு பெரும் பிரயத்தனத்துக்கிடையில் கட்டி முடித்தார் என்று கண்ணீருடன், நன்றியுடன் நினைவுகூர்கின்றனர் பெண்கள். முந்தைய இரவு, அந்தப் பூங்காவின் ஊஞ்சலொன்றில் ஆடியவாறும் பாடலொன்றைப் பாடியவாறும் இருந்த அவரைப் பார்த்த, அஞ்சலி செலுத்த வந்த ஒரு போலீஸ்காரர், "ஏதோ குடிகாரன் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். அவரைக் கைது செய்திருந்தால் இப்படிப் பனியில் உறைந்து இறந்திருக்க மாட்டார்" என்று வருத்தப்பட்டு நெகிழ்கிறார். மதுவைத் தொடர்ந்து குடித்தவாறும் வாத்தானபீ அந்தப் பூங்காவைக் கட்டிமுடிக்கப் பட்ட சிரமங்களை கண்ணீருடனும் நினைவுகூரும் சக ஊழியர்கள், தங்களது பொறுப்பில்லாத்தனத்தைக் கைவிடவும், வாத்தானபி காட்டிய பாதையில் பயணிக்கவும் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்பு சற்று நேரத்தில் படம் முடிகிறது.

ஜப்பானிய, அதுவும் குரோஸவா படம் என்பதால், இதை முற்றுமுழுதாக மரணம்பற்றிய கிழக்கத்திய சிந்தனை என்று கூறிவிடச் சற்றுத் தயக்கமாக இருந்தாலும், வேறெங்கோ ஒரு பின்னூட்டத்தில் நான் இட்ட, வெகுகாலம் முன்பு பார்த்த இங்மார் பெர்க்மனின் The Seventh Seal படமும் நினைவுக்கு வந்தது. மரணம்குறித்த மேற்கத்திய சிந்தனையின் வெகு துல்லியமான பிரதிபலிப்பு என்று இந்தப் படத்தை நான் கருதுவதுண்டு. மரணத்தை அரூபமாகப் பார்க்காமல், ஒரு பௌதீக ரூபமாக மனிதனுடன் சேர்த்து இயங்கவைப்பதிலாகட்டும், மரணம் என்னைக் கொள்ளவேண்டுமாயின் அது என் ஒத்துழைப்போ, என் தோல்வியோ அன்றி முடியாது என்று கருதும் மனித மனத்தின் நிஷ்டூரப் பிடிவாதத்தைச் சித்தரிப்பதாக இருக்கட்டும், fate and free-will cannot coexist என்ற கருத்தாக்கத்தில் ஊறிப்போன தர்க்கரீதியான மேற்கத்தியச் சிந்தனையை மிகத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக இருக்கட்டும் - The Seventh Seal, கேள்விப்பட்டவரையிலான, படித்தவரையிலான அத்தனை க்ளிஷேக்களையும் தாண்டிய ஒரு மாஸ்டர்பீஸ். முதல் காட்சியில் கண்ணைக் கூசவைக்கும் ஒளியின் மத்தியில் அந்தரத்தில் நிலைத்து நிற்கும் கழுகும், படீரென்று வெடித்துச் சிதறும் இசையும் படத்தின் மனோநிலையை, ஆழ்கருமையை ஒற்றை வீச்சில் வெளிப்படுத்தும். மத்தியகாலங்களில், பல்வேறு போர்களில் போரிட்டுக் களைத்த ஒரு நைட் (Knight), தனது சேவகனுடன் வீடுநோக்கித் திரும்பிவருகிறான். திரும்பி வரும் வழியில், மரணத்தைச் சந்திக்கிறான்: அதாவது, மரணம் மனித ரூபத்தில் வந்து, உன்னையும் உன் சேவகனையும் அழைத்துப்போக வந்திருக்கிறேன் என்கிறது. விட்டுக்கொடுக்காத நைட், ஒரு யோசனை சொல்கிறான். ஒரு ஆட்டம் சதுரங்கம் விளையாடுவது. நைட் வென்றால், மரணம் திரும்பிப் போய்விடவேண்டும், மரணம் வென்றால் நைட், மரணத்துடன் செல்லவேண்டும். சதுரங்க விளையாட்டு பலநாட்கள் தொடர்கிறது, வழியெங்கும் பல்வேறு பாத்திரங்கள், இறுதியில் தன் குடும்பத்துடன் சேரும் நைட்டையும் அவர் குடும்பத்தினரையும் கொள்ளை நோய் (Plague) வெல்கிறது. இகிரு பார்த்து முடித்தபின் Seventh Seal ஐ அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஸ்வீடிஷ் வலைத்தளங்களில் கூட "பெர்க்மனை விடுங்கள், வேறு இயக்குனர்களும் எங்களிடம் உள்ளனர்" என்று எரிச்சலாகக் கூறப்படுமளவு ஸ்வீடிஷ் சினிமா என்றால் பெர்க்மன் படங்கள் என்ற ரீதியில் உலகளவில் பிரபலமடைந்துவிட்டபிறகு, பிரபலமாகாததால் மட்டுமே இன்னும் தெரியவராத எத்தனை நல்ல படைப்புக்களை பார்க்காமல் இழந்துகொண்டிருக்கிறோம் என்றுகூடத் தோன்றும். அத்தனை பேரைக் கொன்றபிறகும் மரணத்தைச் சதுரங்கம் விளையாட அழைக்கும் நைட்டையும், மரணத்தேதியைத் தெரிந்துகொண்டதும் பதறிப்போய்த் திசையிழந்த பறவையாய்க் குழம்பும் வாத்தானபீயையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எத்தனையோ எண்ணங்கள் - வரிசையாக எழுதமுடியவில்லை. வாத்தானபி பாத்திரத்தில் நடித்த தக்காஷி ஷிமுரா, ஒரு குரோஸவா regular. பல குரோஸவா படங்களில் அவரைப் பார்த்த நினைவிருக்கிறது. "இந்தப் பாத்திரத்தில் நீ நடிக்கையில், இதுதான் நீ என்று நினைத்துக்கொண்டு நடி, பேசு" என்று ஒரு குரங்கின் படத்தைக் குரோஸவா தன்னிடம் காட்டியதாகப் படத்தின் பிந்தைய பேட்டியில் ஷிமுரா சொல்லியிருந்தார். அது உண்மைதான்.

14 comments:

Mookku Sundar said...

நல்ல விமரிசனம். ஆனால் இந்த மாதிரி படங்களைப் பார்க்கும்போது, ஏற்கனவே சிலாகிக்கப்பட்டுவிட்ட இதன் மேதைமை/மேன்மைக்காகவே இதை பார்த்துத் தொலைய வேண்டியிருக்கிறதே என்று சில படங்களில் தோன்றுவதுண்டு.( உதா : The Hours)

ஆனால், இந்த மாதிரி உத்திகளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இந்திய சினிமாக்களில் தரிசனம் பண்ணி விடுவதால், அத்த்னை வறட்சியாக இருக்கதென நினைக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Montresor,

வணக்கம்! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு கடிதம் போடுகிறீர்களா?

என்னுடைய முகவரி: mathygrps at யாகூ டொட் கொம்

தமிழ்மணம் 'இந்த வார நட்சத்திரம்' சம்பந்தமாக உங்களிடம் பேச வேண்டும்.

-மதி கந்தசாமி

சன்னாசி said...

//ஸ்வீடிஷ் வலைத்தளங்களில் கூட "பெர்க்மனை விடுங்கள், வேறு இயக்குனர்களும் எங்களிடம் உள்ளனர்" என்று எரிச்சலாகக் கூறப்படுமளவு ஸ்வீடிஷ் சினிமா என்றால் பெர்க்மன் படங்கள் என்ற ரீதியில் உலகளவில் பிரபலமடைந்துவிட்டபிறகு, பிரபலமாகாததால் மட்டுமே இன்னும் தெரியவராத எத்தனை நல்ல படைப்புக்களை பார்க்காமல் இழந்துகொண்டிருக்கிறோம் என்றுகூடத் தோன்றும்.//

இது எந்த ஒரு கலாச்சாரத்துக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். ஒருவகையில் நீங்கள் சொன்னது சரி எனினும், தெரியவரும் அத்தனை படைப்புக்களும் பாராட்டப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. எனக்குப் பிடிக்காத எத்தனையோ குரோஸவா படங்களும் இருக்கின்றன. Ran அதிலொன்று. Seven Samurai கூட பெரிதாக வசீகரித்ததில்லை. Magnificient Seven, Sholay எல்லாம் பார்த்தபிறகு அதைப் பார்த்ததால் இருக்கலாம். The Hours ஐ வீடியோ கடையில் கிட்டத்தட்ட நூறு முறை கடந்து போயிருப்பேன் - ஏனோ பார்க்கத் தோன்றவில்லை, இன்னும் பார்க்கவுமில்லை. எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள்: நிஜமே. எத்தனையோ படங்கள் தமிழிலும் உள்ளன. பழைய சிவாஜி படம் ஒன்று -'ஒரு நாள்'? பெயர் சரியாக நினைவில்லை. படம் முழுக்க ஒரு கனவு என்று நினைவு...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மரணம் சமீபிக்கிறது என்று தெரிந்ததும் வாத்தனாபி நடந்துகொள்வது எல்லாம் மனதைப் பிசையும். படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன முயற்சி செய்தும் அந்த உணர்ச்சிகளை வெளிக்கொணர முடியவில்லை. ஒவ்வொரு Kurosawa படத்தையும் பார்க்கும்போது எப்படி எப்படி என்ற ஆச்சரியந்தான் எஞ்சுகிறது.

சுந்தர் - குரோசாவா'வின் Rhapsody in August ஐப் பார்த்திருக்கிறீர்களா? அதைப்பற்றி எழுதுங்களேன்?

-மதி

Jayaprakash Sampath said...

//பழைய சிவாஜி படம் ஒன்று -'ஒரு நாள்'? பெயர் சரியாக நினைவில்லை. படம் முழுக்க ஒரு கனவு என்று நினைவு...//

அந்தப்படத்தின் பெயர் 'முதல் தேதி'. "பாண்ட் ஒன்று, சானல் நான்கு , காட்சி அறுபத்து ஐந்து புள்ளி மூன்று ஐந்து மெகா ஹெர்ட்ஸிலும், ஒலி அறுபத்து ஆறு புள்ளி......." என்று நீளமாக தொடக்க உரை கொடுக்கிற, யூ.எம்.கண்ணன் போன்றவர்கள் அறிவிப்பாளராக இருந்த காலத்திலோ, பெருவிரல் கட்டைவிரல் விரல் வலிக்க ரூபவாகினியைத் தேடிய புதன் கிழமைகளிலோ, தொலைக்காட்சியில் பார்த்த படம் . சிவாஜிகணேசனும், ஸ்ரீரஞ்சனியும் வடிக்கும் கண்ணீர் கிரவுன் டீவி வழியாகப் பொசிந்து ஹாலை நனைக்கும். நிழல்கள், துலாபாரம் போன்ற 'இருட்டான' படங்களுக்கு எல்லாம் இதுதான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும். இறுதியில், கதவுக்குப் பின் மறைந்திருக்கும் குழந்தை சொல்வது போல 'பூச்சீ....' என்று சொல்லி , சுதி ஏத்தி வைத்திருந்த எமோஷன் அத்தனையையும், ஒரே நிமிஷத்தில் காலி செய்துவிடுவார்கள். அத்தனையும் கனவாம்.

சன்னாசி said...

நன்றி பிரகாஷ்: நீங்களாவது டிவியில் பார்த்தீர்கள், நான் அதைப் பார்த்தது பலகாலத்துக்கு முன் ஏதோ ஒரு திருவிழாவில் என்று நினைவு. திரைகட்டி, 16mm ப்ரொஜெக்டரா அது...அதை ஓட்டி, ரீல் மாற்றி... அதுவே ஒரு திருவிழா மாதிரி இருக்கும்!

Vijayakumar said...

அருமையான விமர்சனம் மாண்ட்ரீஸர். குரோசாவா படங்களில் முதலில் பார்த்தது இந்த இகுரு தான் பிறகு தான் வரிசையாக அவர் படங்களை பார்க்க முனைந்துக் கொண்டிருக்கிறேன். 'The seventh seal' அன்றே குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அந்தப் படத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.உங்கள் உலக சினிமா விமர்ச்சனங்களை தொடர்ந்துக் கொடுங்கள்.

Anonymous said...

குரோஸாவின் Ikiru வில் அவர், 'மனிதன் வாழும் வாழ்க்கையில் சமுகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவது அவன் வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தப்படும்' என கூறுவாதக எனக்குப்படுக்கிறது. வத்னாபி-சான் இளம்பெண்ணுடன் ஹோட்டலில் பேசிக்கொண்டிருகும் பொழுது,'எப்போதும் எப்படி உற்சாகமாக இருக்கிறாய் ' என்று கேட்பார், அந்தப்பெண் அப்போது தான் பொழுதுபோக்காக குழந்தைகளுக்கு பொம்மை செய்வாதகவும் ,அது அவளுக்கு சந்தோஷம்
அளிப்பதாகவும் கூறுவாள், அந்த புள்ளியில் ஏற்ப்பட்ட மாற்றம் அவரது வாழ்க்கையை திசை மாற்றியமைக்கும்.அவரது மனத்தில் மாற்றம் ஏற்ப்படுவதை
தனது மிகசிறப்பான நடிப்பால் takshi shimura வெளிப்படுத்தியிருப்பார்.
அங்கிருந்து வத்னாபி-சான் படியில் இறங்கும் பொழுது பின்புறத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்
ஒரு பிறந்தநாள் கொண்ட்டத்தில் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து வத்னாபி-சான் புதிதாக பிறந்ததாகா அர்த்தப்படுதுவது போல குரோஸாவா காட்சி அமைத்திருப்பார்.


மரணத்தின் மூலம் வாழ்வதற்கான காரணங்களை தேடும் சிறந்த மற்றொருபடைப்பு
Abbas Kiarostami யின் Taste of Cherry


ஜபருல்லா

சன்னாசி said...

ஜபருல்லா - உங்களது தனிப்பட்ட வலைப்பதிவு இருப்பின் அதன் சுட்டியை தயைகூர்ந்து இங்கே இடவும்...இல்லையெனில் நேரங்கிடைக்கும்போது ஒன்று தொடங்கி எழுத முயலவும்; நமக்குத் தெரிந்த படங்களையெல்லாம் வலைப்பதிவுகளில் எழுதி வைப்போம். Taste of Cherry இன்னும் பார்த்ததில்லை. பார்க்க முயல்கிறேன்; நன்றி!

Anonymous said...

தொடங்க முயற்ச்க்கிறேன்

ஜபருல்லா

Narain Rajagopalan said...

நண்பர் ஜபருல்லா சொல்லியிருப்பதுப் போல், Abbas'ன் படங்கள் அருமையானவை. டேஸ்ட் ஆப் செர்ரீ அவரின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஆனாலும் எனக்கு பிடித்த அப்பாஸின் படங்கள் Wind will carry us, The Chourus, The White Baloon.

இப்போது பார்த்து முடித்த படம், மைக்கேல் விண்டர்பாட்டமின் "In this world" சனிக்கிழமையன்று என் பதிவில் பதிகிறேன்.

இன்னா ரொம்ப பிசியா, போர்த்துகிசிய திரைப்பட விழான்னுப் போட்டவுடனே, வந்து கலாய்ப்பிங்கன்னு பார்த்தா, அமைதியா இருக்கிங்க. அடுத்த விமர்சனத்துல வைச்சிகிறேன் ;-)

Narain Rajagopalan said...

கேப்புல மறந்தது....நீங்க சொன்ன கிங் லயரின் தழுவலான அகிராவின் "ரேன்" பார்த்தேன். என்க்கென்னவோ, கிங் லயரைவிட அந்த கதை, ஷாஜஹானின் வாழ்க்கைச் சரிதம் போல்தான் தெரிகிறது. அதயும் பதியறேன்.

சன்னாசி said...

நாராயண், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன் - பெருமூச்சு விடத்தான் முடிந்தது; சென்னையில் இருக்கும்போது ரஷ்யக் கலாச்சார மையம், அலையான்ஸ் ஃப்ரான்ஸே, மாக்ஸ்ம்யுலர் பவன் என்று அலைந்துகொண்டுதான் இருந்தோமே தவிர, இப்போது நேரநெருக்கடி அதிகமாகிவிட்டது... மேலும், கலாய்ப்பதா? அப்படின்னா? ;-) திரைப்பட விழா முடிந்ததும் அதைப்பற்றி எழுதுங்கள், படித்துக்கொள்கிறேன் - டிவிடிக்கள் கிடைத்தால் பார்க்கிறேன்... பின்னூட்டங்கள் இடாவிட்டாலும், பதிவுகளைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!!

Anonymous said...

ஜபருல்லா,

டேஸ்ட் ஆஃப் செர்ரியும் இகிருவும் மரணம் பற்றி பேசுவது, அல்லது மரணம் நிச்சயமாகிவிட்ட பிறகு வாழ்வை பற்றி பேசுவது என்ற அளவில் ஒத்துப்போகின்ற படங்கள் தான்.

ஆனால், இகிருவின் திரைக்கதை நேர்த்தி , ஆழம் ஆகியவை டேஸ்ட்... ல் இல்லை என்றே எனக்கு தோன்றியது. தூக்கத்தை விரட்ட முயன்றபடியே பார்த்தால் இருக்கலாம் ;) படத்தில் அவ்வளவு வறட்சி. நான் இதை தான் கொடுப்பேன். முடிந்தால் பார், என்பதை போல் இருந்தது அப்பாஸின் இயக்கம். அவரது அடுத்த படமான "close up" இவ்வளவு மோசம் இல்லை. இரானிய சமூகத்தில் சினிமாவின் ஆதிக்கத்தை பற்றி பேசுகிற படம். மிக சுலபமாக நம் ஊர் ரஜினி ரசிகர்களுடன் ஒப்பிட்டு படத்தினுல் நுழைய முடிந்தது...