Friday, January 07, 2005

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த கட்டுரையில் சில வரிகள்

டைம் பத்திரிகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கட்டுரை (சில வாரங்களில் இந்த இணைப்பு காலாவதியாகி, subscriptionக்குப் போய்விடுமென்று நினைக்கிறேன்). முன்பே பாலிவுட் பற்றிய கட்டுரை ஒன்று டைம் வாரப்பத்திரிகையில் வந்தது. அதிலும் ரஹ்மான் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அதில் சில வரிகள் படித்து நெளிந்தேன். ரஹ்மானே இதைச் சொன்னாரா இல்லை சற்று உப்பு மிளகு சேர்த்து கட்டுரையாளரே (ரிச்சர்டு கார்லிஸ்) எழுதிவிட்டாரா என்று எனக்கு விளங்கவில்லை. இப்போது ரஹ்மானைப்பற்றிய தனித்த இந்தக் கட்டுரையிலும் அதே வரிகளை மறுபடி உபயோகப்படுத்தியிருப்பதால், இங்கே இடுகிறேன். இவைதான் அந்த வரிகள்:

Tamil soundtracks sell probably half a million, Telegu sells probably 1 million, Hindi is like more than 6 or 7 million." He added: “In India, we don’t get royalties. Otherwise I’d be a very rich man. I wouldn’t have to come to America!
(ஆதாரம்: டைம் இணையப் பதிப்பு, கட்டுரையின் தலைப்பு: That Old Feeling: Isn't It Rahmantic? ஜனவரி 1, 2005; கட்டுரையாசிரியர்: Richard Corliss)

அனைத்து இந்திய மொழிகளிலும் விற்ற காசெட்டுகள், இசைத்தட்டுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், மைக்கேல் ஜாக்ஸன், பீட்டில்ஸ் போன்றவர்களைவிட அதிகமாகவே ரஹ்மான் இசைத்தட்டுக்கள் விற்றிருக்கும் என்ற கூற்றைத் தொடர்ந்து மேற்கண்ட வாக்கியங்கள் கூறப்பட்டுள்ளன. இதே வாக்கியங்களை, இதற்கு முன்பே பாலிவுட்டைப் பற்றி ரிச்சர்டு கார்லிஸ் எழுதிய A Cultural Grand Salaam கட்டுரையிலும் படித்திருக்கிறேன் என்பதால், ஏதோ இடறியது. உண்மையாக இருக்குமா பொய்யாக இருக்குமா என்று ஒரு ஆர்வம்.

அமெரிக்காவுக்கு ரஹ்மான் வந்ததே ஏதோ பணத்துக்காகத்தான் என்பதுபோல் தொனிக்கும் இந்த வாக்கியத்தை ரஹ்மான் சொன்னாரா என்று தெரியவில்லை. சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைத்துக்கொள்கிறேன். இருந்தாலும்...

முன்னொரு காலத்தில் நமது ஜே.எம்.லிங்டோ பிபிசி மைக் கிடைத்ததென்று ஓய்வுபெறும் சமயத்தில் திடீரென்று முதுகெலும்பு முளைத்து இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று கமெண்ட் விட்டது போல உணர்ச்சிவசப்பட்டு இதுமாதிரி ஏதும் ரஹ்மான் சொல்லியிராமலிருந்திருந்தால் நல்லது.

4 comments:

Mookku Sundar said...

பாம்பு,

முதல் பார்வைக்கு ஏதோ காஷுவலாக சொன்னா மாதிரிதான் இருக்கு. ரொம்பப்பிடிச்சு திருக வெண்டாம்னு நினைக்கிறேன்.
(அது சரி..பணத்துக்காக அமெரிக்கா வந்தா தப்பா..? :-) )


முழுக்கட்டுரையையும் படிக்கிறேன். நன்றி

சன்னாசி said...

மூக்கன்,
பணத்துக்காக அமெரிக்கா வருவது தப்பில்லை. நான் திருகவும் இல்லை. நம்ம ஊரில் ஏதாவது பத்திரிக்கையில் ரஹ்மான், "இங்கே ராயல்ட்டி யாரும் கொடுப்பதில்லை" என்றெல்லாம் பேட்டி கொடுத்ததுண்டா என்றுமட்டும் யோசித்துப் பார்க்கிறேன். எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் இரண்டு நிமிடங்களுக்கு மேலாகப் பேசினதாகவும் நினைவில்லை. நம்ம ஊரிலும் சொல்லி, இங்கேயும் சொல்லியிருந்தால் எதற்கு நான் இதையெல்லாம் எழுதப்போகிறேன்? மற்றபடி நானே ஒரு பெரிய ரஹ்மான் விசிறி...அதனால் போர்வாளெல்லாம் உருவ உத்தேசமில்லை! :)

dondu(#11168674346665545885) said...

இந்தியாவிலும் சொல்லியிருக்கலாம் அல்லது சொல்லாமலும் இருந்திருக்கலாம். இரண்டாவதாகக் குறிப்பிடபட்டதற்கு வாய்ப்பு அதிகமே. சொன்னாலும் பிரயோசனம் இல்லை என்பதால் சொல்லாமல் இருந்திருக்கலாம். எல்லொருக்கும் தெரிந்த உண்மையாக இருக்கும் பட்சத்தில் சொல்லி என்னப் பயன் என்று நினைத்திருக்கக் கூடும். ஆனால் ஒன்று. ராயல்டி இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் ரஹ்மான் கூறியிருப்பது மிகப் பெரிய தவறேயாகும்.
அன்புடன் டோண்டு ராகவன்

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.