Tuesday, January 11, 2005

முதிய முகங்கள்


புகைப்படம்: அமேசான் (ஆமஸான்?!!)

இரண்டு தாத்தாக்கள் ரயில்வே ஸ்டேஷனின் நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள். எதிரே உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு மூன்று இளம்பெண்கள். தாத்தாக்கள் பெண்களை நிறுத்துகிறார்கள்.
"டிக்கெட் இருக்கா?"
பெண்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். எங்கே இருக்கு டிக்கெட்டு? ஒரு தாத்தா, போனாப் போகுது போ விட்டுடு என்கிறார். மற்றொரு தாத்தா சிலவினாடிகள் யோசிக்கிறார்.
"விட்டுடலாம். ஆனா நீங்க மூணு பேரும் எங்களுக்கு ஆளுக்கொரு முத்தம் கொடுக்கணும்."
பெண்கள் குபீரெனச் சிரித்துவிடுகின்றனர். மூவரும் மெலிதாக தாத்தாக்களை முத்தமிட்டுவிட்டு பிளாட்ஃபாரத்தில் ஓடி மறைகின்றனர். தாத்தாக்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. ஒரு பெருமூச்சுடன், கடந்த காலங்களை அசைபோட்டுக்கொண்டு தொடர்ந்து நடக்கின்றனர்.

Autumn Spring என்ற செக் மொழிப் படத்தில் பார்த்த காட்சி இது. அற்புதமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது எனினும், வயதானாலும் கூட (இருவருக்கும் கிட்டத்தட்ட எண்பது வயது), பிள்ளையில்லா வீட்டில் துள்ளி விளையாடும், டுபாகூரைத் தொழிலாகக் கொண்ட இரண்டு தாத்தாக்களைப் பற்றிய கதைதான் அந்தப் படம். ஆபத்தற்ற தமாஷ்களைத் தொடர்ந்து செய்கின்றனர் இரண்டு தாத்தாக்களும். ஃபாண்டா என்ற தாத்தாதான் மூளை, எட் என்ற மற்றத் தாத்தா ஒரு கைத்தடி!! இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்திருக்கும் இசைவல்லுநர் அல்லது பெரும் பணக்காரர் என்று ரீல் சுற்றி மில்லியன் கணக்கில் விலைமதிப்புள்ள மாளிகைகளை விலைபேசுவதுதான் இவர்கள் பொழுதுபோக்கு. தனது ஓய்வூதியத்தையெல்லாம் டாம்பீகமாக ஃப்ரெஞ்சு உணவகங்களில் சாப்பிட்டும் டிப் அளித்தும் சிறுபிள்ளை மாதிரித் திரியும் தறுதலைத் தாத்தா ஃபாண்டா, தனது பொறுப்பான மனைவி தங்களது இறுதிச்சடங்குகளுக்குச் சேர்த்துக்கொண்டிருக்கும் பணத்திலும்கூட ஒருசமயத்தில் கைவைத்து விடுகிறார்.

அல்டிமேட்டாக, தாத்தா தன் நண்பர் வீட்டில் போய்ப் படுத்துக்கொண்டு, தன் மனைவிக்குத் தான் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவிக்கச்சொல்கிறார்! கறுப்புக் கோட்டையெல்லாம் எடுத்துக்கொண்டு சவ ஊர்தியையும் அழைத்துக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வரும் பாட்டியம்மா, கிழங்கு மாதிரி தாத்தா ஒயினைக் குடித்துவிட்டு போலியாகப் படுத்துக்கிடப்பதைப் பார்த்து வெறுத்துப் போய் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிடுகிறார். அதன்பிறகும் படம் இருக்கிறது...

எழுதநினைத்தது - ஃபாண்டா, அவரது மனைவி இருவரின் முகங்கள் பற்றி. குண்டான உருவம், ஒன்றரைக் கிலோவுக்கு தாடைச் சதை, கண்ணுக்குக் கீழே தொங்கும் பைகள், உருகி வழியும் கன்னம் என்று இருக்கும் அந்த முகங்கள் உருவாக்கும் பிம்பத்தைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற முகங்களை நமது படங்களில் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். முதியவர்களை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்திருக்கின்றன? எனக்குத் தெரிந்து தபரணகதவில் சாருஹாசனும் வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதரும்தான் நினைவுக்கு வருகிறார்கள். அதற்குமேல் முதியவர்கள் என்று சமீபகாலத்தில் யோசித்துப் பார்த்தால் விஜயகுமாரும், அவர் பட்டக் பட்டக் என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொள்வதும்தான் நினைவுக்கு வருகிறது. தப்பினால், சரத்குமார் அல்லது விஜயகாந்த் மூன்று தலைமுறைகளாக ஏதாவது படம் நடித்தால் அதில் வரும் ஒரு கிழவேசத்தைப் படம்பார்க்காமலே சொல்லிவிடலாம். வயிற்றுக்கு ஒரு தலையணை, வெள்ளை முடி, வெள்ளை மீசை, அடித்தொண்டை குரல் என்று ஒரு custom-made செயற்கைக் கிழட்டு முகம். இது தவிர தமிழ்ப்படங்களில், நினைவில் தங்கக்கூடிய பிற முதிய முகங்களைப் பார்த்திருக்கிறேனா? ம்ஹூம். முதல் மரியாதை, விடுகதை போன்றவை, midlife crisisல் சிக்கிக்கொள்ளும் மத்திம வயதுக்காரர்களைப் பற்றிய படங்கள் என்றுதான் நினைக்கிறேன். இந்தியன் என்று யாரும் சொல்லிவிடாதீர்கள்; நான் சொல்வது, மேக்கப் அற்ற அசல் முதிய முகங்களை. முதியவர்களைப் பற்றிய படங்கள்/அல்லது செயற்கைத்தனமற்ற அசல் முதிய பாத்திரங்கள் ஒன்றுகூட நினைவில் வராமல் போவது வெறுமனே படங்கள் என்ற ரீதியில் நின்றுவிடாமல், நமது நிஜ வாழ்வில் மூத்தோரின் பங்கே அவ்வளவுதானா என்று கேட்கத்தோன்றுகிறது. இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனினும், குடும்பக்கதைகள் தவிர்த்து வேறு கதைகள் முதியோரைப்பற்றி வரமுடியுமா என்று யோசித்துப் பார்க்கிறேன்... எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்'? அதிலிருந்து தொடங்கலாம் முதலில்!!

7 comments:

-/பெயரிலி. said...

சொக்கலிங்கபாகவரைச் சுற்றி வந்த ஓரிரு படங்களைச் சொல்லலாம் (ஓரளவுக்கு 'வீடு', சந்தியாராகம்?, மலையாளத்திலே அவரும் அர்ச்சனாவும் நடித்த ஒரு படம் (மகனுக்காக ஓடக்கரையிலே காத்திருக்கும் பாத்திரம்)); தவிர, சிவா’¢நடித்த முதல் மரியாதை, தேவர்மகன், சிவா’¢-ராதா-சரிதா-சுரே0 நடித்து துரை இயக்கிய ஒரு படம் (துணை?) ஆகியன பெயருக்காகவாவது முதியவரைச் சுற்றுவது.

கதைகள் என்று சொன்னால், முதியோர் ஆண்டிலே எல்லா எழுத்தாளர்களும் ஆளுக்கொன்று எழுதியிருப்பார்கள் ;-) அவற்றைவிட்டால், முழுக்க முழுக்க முதியவர்கள் என்று ஞாபகத்துக்கு ஏதும் நான் வாசித்த அளவிலே எனக்கு வரவில்லை. ஒரு பத்தாண்டுக்காலமாக அதிகமாக எதுவும் தமிழிலே வாசிக்கவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். முக்கியமான பாத்திரங்கள் முதியவர்களாக இருக்கும் கதைகள் ஏராளமுண்டு.

இப்படி இரண்டு "தமாசான ¦ ¡லிவுட் தா(த்)தா"க்கள் படமென்றால், Burt Lancaster & Kirk Douglas இன் "Tough Guys", Jack Lemmon & Walter Matthau இன் "Grumpy Old Men", "Grumpier Old Men" ஆகியவற்றைச் சொல்லலாம்.

ரா.சு said...

"உன்னால் முடியும் தம்பி"யில் வரும் தோட்டக்கார தாத்தா குணச்சித்திரம் தமிழ் திரைப்படங்களில் கண்டதில் சிறந்தது என கூறுவேன்.

Vijayakumar said...

"DUPLEX" படத்தில் பாட்டி செய்யும் அக்கிரமங்களையும் பார்க்க மறக்காதீங்க

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் 'காதுகள்' நாயகன் முதியவரா என்ன? வாசித்து நீண்ட நாட்களாகி விட்டதால் சரியாக ஞாபகம் இல்லை. என்றாலும், முதியவர் இல்லை என்று நினைக்கிறேன்.

சன்னாசி said...

வித்யாசாகரன்...இப்போது நானும் யோசிக்கிறேன்; சில வருடங்களாகிவிட்டதனால் வேறு ஏதாவதுடன் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கவும் சாத்தியமுள்ளது. நீங்கள் சொன்னது சரி என்று நினைக்கிறேன்.... 'கதாநாயகன்' என்ற பாத்திரம் இளவயதினனாகவே இருந்திருக்கக்கூடும்...

ROSAVASANTH said...

//(மகனுக்காக ஓடக்கரையிலே காத்திருக்கும் பாத்திரம்)); //
பிறவி?

-/பெயரிலி. said...

அதுதான் என்று நினைக்கிறேன்