Sunday, February 27, 2005

ஃப்யூஸ் பிடுங்கியாச்சு...

ஒரு வாரத்துக்குமுன்பு 'நட்சத்திரம்' என்று ;-! அறிவிக்கப்பட்டபோது, எதையாவது எழுதலாம் என்று நினைத்தபோதுதான் தெரிந்தது கஷ்டம் - தினமும் எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை என்று... போதாக்குறைக்கு கடந்த வாரம் முழுவதும் எதிர்பாராமல் வந்துசேர்ந்த வேலை வேறு கழுத்தை நெரிக்க, தலையை அழுத்த, மூச்சை நிறுத்த (எல்லாம் மூன்று மூன்றாகத்தான் சொல்வதென்று முடிவெடுத்திருக்கிறது இப்போ) - இரவுகளில் zombie போல உட்கார்ந்துகொண்டு பெரும்பாலான பதிவுகளை எழுதினேனென்று நினைவு. இந்த வாரத்திய impromptu பதிவுகளிலிருக்கும் (எதுதான் அப்படியில்லை) அவசரத்தை, நேர்த்தியின்மையை, அதிகப்பிரசங்கித்தனங்களைச் சகித்துக்கொண்டு படித்த, மறுமொழி இட்ட அனைவருக்கும், இந்த வலைப்பதிவை நட்சத்திரமாகத் தேர்வுசெய்த தமிழ்மணர்களுக்கு நன்றி.

கண்மண்தெரியாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டேயிருக்கும்போது ஏதோவொரு முட்டுச் சந்தின் சுவற்றில் மோதி நிலைகுலைந்து விழுவது ஒருவிதம். ஓடிக்கொண்டேயிருக்கும்போது விதிவசம் நுழையும் சில சந்துகள் முடிவற்று நீளும் - அவற்றின் வசீகரம் களைப்பை நீக்கும். அவற்றின் வசீகரத்தில் ஆழ்ந்துபோய் ஓடுவது தெரியாமல் ஓடிக்கொண்டேயிருப்போம், பாதைகள் திசைமாறிப்போயிருப்பினும். பின்னொரு கணத்தில் நின்று திரும்பிப் பார்க்கும்போது அதன் வெளிவாயிலைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நினைக்கமுடியும் - கண்முன் இருப்பது அதுவா என்ற நிச்சயமேதும் இல்லாதபோதும். வாசல்தான் நான், நானேதான் வாசல், நானேதான் சந்து, சந்துதான் நான் என்பது போல - எனக்குள் நானே ஓடிக்கொண்டிருப்பேன் போல என்று ஒரு அற்புதமான அனுபவம் - கிட்டத்தட்ட இதே அனுபவத்தை விளக்குவது போர்ஹேஸின் The Zahir, Blue tigers போன்ற கதைகள். முதன்முதலில் 'குறுக்குவெட்டுப் பாதைகளின் தோட்டம்' என்று தமிழ் மொழிபெயர்ப்பில் 1997ல் போர்ஹேஸின் The Garden of forking paths கதையையும், வெகுவாகச் சிலாகிக்கப்பட்ட, பிரமிளின் அற்புதமான மொழிபெயர்ப்பில் அதற்குமுன்பாகவே வந்த 'வட்டச்சிதைவுகள்' (The Circular Ruins) கதையை அதன்பின்பும்தான் படித்தேன். அதன்பிறகு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அவரது பதிப்பான அனைத்துக் கதைகளையும் (Collected Fictions, Jorge Luis Borges, Viking, 1998), சில கதைகளை எண்ணற்ற தடவைகளும் படித்துவிட்டிருந்தாலும், வரிசையாக அவரது கதைகளைப் படிக்க ஆரம்பித்தபின் சிலவருடங்கள் கழித்துத்தான் விளங்கிக்கொள்ளமுடிந்தது மேலே குறிப்பிட்ட சந்துகள் போன்ற ஒரு சந்தில் நுழைந்துவிட்டோமென்று... விமர்சனச் சிக்கல்கள், பிரயத்தனங்களற்ற ஒரு வாசக அனுபவம் என்ற ரீதியில் கூறவேண்டுமெனில். அதன்பிறகு அவரது பிற புத்தகங்களை, அ-புனைவுகளை, ஏன், Book of imaginary beings போன்ற புத்தகங்கள் வரை, அவரைப் 'பற்றிய' புத்தகங்களைப் படித்து முடித்தபோதும், படித்துக்கொண்டிருந்தபோதும், சிக்கிக்கொண்ட 'முடிவற்ற' என்ற ரீதியிலான ஒரு paradoxical cul-de-sac க்குள்ளிருந்து வெளிவந்துவிட்டோம், இல்லை, வெளிவந்துவிட்டோம், இல்லை என்று 1999 முதல் சில வருடங்கள் சற்று உழன்றிருக்கிறேனென்றே தோன்றுகிறது: இதை ஒரு வாசகனின் தற்காலிகத் தேக்கம் என்பதா, அல்லது எழுத்தாளனின் வெற்றி என்பதா என்று தெரியவில்லை. இத்தனைக்கும், மாதத்துக்கு நான்கைந்து புத்தகங்கள் என்ற ரீதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்லூரி வகுப்பறைகளின் கடைசிபெஞ்ச்சில், நள்ளிரவுக்குப் பின்னர் என்று இடது வலது பாராமல் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் படித்த கணக்கற்ற புனைவுகளனைத்தையும் போர்ஹேஸின் கதைகளின் வீச்சுடன் ஒப்பிட்டு நோக்கத்தோன்றியபோதுதான் ஒவ்வொரு தனிப்பட்ட வாசகன்மேலும் ஒரு எழுத்தாளரின் தாக்கம் தூக்கலாக இருக்குமென்பதை ஒப்புக்கொள்ளமுடியுமளவு விளங்கிக்கொள்ளமுடிந்தது - என்ன இருந்தாலும் தி.ஜா போல வராது, என்ன இருந்தாலும் ஜெயமோகன் போல வராது, என்ன இருந்தாலும் சுஜாதா போல வராது என்ற ரீதியைத் தாண்டிய ஒரு தளத்திலும் கூட. Raising the bar என்பார்களே, அதுபோல: 'Funes the memorious', 'Pierre Menard, author of the Quixote', 'The Aleph', 'Tlon Uqbar Orbis Tertius', 'The library of Babel', 'Death and the compass', 'Secret Miracle' போன்ற கதைகள், மேலே குறிப்பிட்ட பிற கதைகள் இன்று படிக்கும்போதும், இத்தனை வருடங்களாக அலசிக் காயப்போட்டுவிடப்பட்டபின்னரும், குறைந்தபட்சம் என்னளவிலாவது வேறேதோ ஒரு அதீதத் தளத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன. "அணுவைத் துளைத்தேழ் கடலைக்குறுக்கி குறுகத் தரித்த குறள்" (சரியா?) என்ற ரீதியில், போர்ஹேஸ் எழுதிய கதையின் அதிகபட்ச நீளமே கிட்டத்தட்ட பதினைந்து பக்கங்கள்தான் என்பதைக்கொண்டும், "போர்ஹேஸ் இல்லையெனில் லத்தீன் அமெரிக்க நாவலே இல்லை" என்று கூறப்படுமளவு அச் சிறுகதைகளின் தாக்கம் இருந்ததையும் வைத்துப் பார்க்கும்போது, இலக்கியத்தில் ஒரு மிகப்பெரும் paradigm shiftஐச் சில சின்னக் கதைகள்கூட உருவாக்கமுடியுமென்பதும், பக்க எண்ணிக்கைகள் ஒரு கணக்கல்ல என்பதும் விளங்கவே செய்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்களில் போர்ஹேஸின் கதைகளைப் படிக்கும்போது பெரும்பாலும் சிக்கலாயிருப்பது, பெரும்பாலான பெயர்ச்சொற்களின் உச்சரிப்புப் பிறழ்வும், வார்த்தைத் துல்லியங்கள் பற்றிய கவனமின்மை/போதாமையும் - பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் வந்த கதைகள் உட்பட. இதைத் தவறெனச் சுட்டிக்காட்ட முடியாதென்றே நினைக்கிறேன் - சில மொழிகளின் pun கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படக்கூடிய சாத்தியமேயற்றவை என்பதே நிஜம். Through the looking glassல் வரும் Jabberwocky யைத் தமிழில் மொழிபெயர்க்க முயல்வது போல!! மேற்கொண்டு ஏதோ எழுதலாமென்று நினைத்தேன், மறந்துவிட்டேன்... இன்றுடன் நட்சத்திரத்தின் ஃப்யூஸ் பிடுங்கப்படுவதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன் ;-) மற்றொருமுறை, அனைவருக்கும் நன்றி...

படம் நன்றி: Modernword

ஓரினச்சேர்க்கை...

ஓரினச்சேர்க்கையைக்குறித்துக் கடந்த/கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல பதிவுகள் பல கோணங்களிலும் எழுதப்பட்டிருப்பதால், தொடர்ந்து பின்னூட்டங்களும் இடப்பட்டு வருவதால், அனைவற்றையும் ஒரே இடத்தில் தொகுத்தால் பின்பு படிப்பவர்களுக்கு உதவியாயிருக்குமென்று தோன்றியதால்...
PBSன் நல்ல ஒரு தொகுப்பு....
ராமச்சந்திரன் உஷா - 1
ராமச்சந்திரன் உஷா - 2
ஸ்விஸ் ரஞ்சி
பொடிச்சி - 1
பொடிச்சி - 2
பொடிச்சி - 3
வெங்கட் - 1
வெங்கட் - 2
நாராயணன் - பின்னூட்டங்களில் பார்க்கவும்
ஷ்ரேயா

அறிவியல்பூர்வமாக ஓரினச்சேர்க்கை ஆராயப்பட்டுவருகிறதா என்று கேட்டால், ஆம்; ஓரினச்சேர்க்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகள் என்பவை, குறிப்பிட்ட எல்லைகளை வரையறுத்துக்கொண்டு தொடங்குபவை (பின்பு அந்த எல்லைகள் தாண்டப்படுவதே வழக்கம் எனினும்...) என்பதால், 'ஓரினச்சேர்க்கை' என்பதை எப்படி நிர்ணயிப்பது என்ற சிக்கலே தற்போது பெரிதான பிரச்னையாக உள்ளதென்று நினைக்கிறேன் (difficulty in defining 'an encompassing phenotype' that is characteristic of homosexuality). இதற்கு மட்டுமல்ல, பெரும்பாலான சிக்கலான நோய்களுக்கும் இதே கதைதான். சுந்தரமூர்த்தி, உஷாவின் பதிவில் இட்டிருந்த பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த டீன் ஹாமரின் கட்டுரையில்தான் முதன்முதலில் X குரோமோஸோமில் ஓரினச்சேர்க்கையைச் செலுத்தும் ஒரு காரணித்தளம் (locus என்பதற்குப் பல அர்த்தங்கள் இருப்பினும், இந்த வாக்கியத்துக்கேற்ப தமிழ்ப்படுத்த என்னால் முடிந்த முயற்சி) உள்ளதென்று குறிப்பிடப்பட்டதென்று நினைவு. காரணித்தளம் (locus) என்பது, linkage analysis என்ற மரபியல் யுக்திமூலம், நோயுள்ள ஒரு ஜனக்கூட்டத்திலுள்ள மனிதர்களின் மரபணுக் குறிப்பான்களை (genetic markers) ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் புள்ளியியல் வரையறைகளைக்கொண்டு ஆராய்ந்து, "இந்த நோய்த் தாக்குதல்/எதிர்ப்புக்கான காரணிகள், இந்தக் குறிப்பிட்ட குரோமோஸோமில்/குரோமோஸோம்களில் (குரோமோஸோம் 1/2/3/4/5/....../22/X/Y) இந்தக் குறிப்பிட்ட மரபுக்குறிப்பானுக்கருகில் எங்கோ உள்ளது" என்றளவில் நிர்ணயிக்க உதவுவது (குரோமோஸோமில் எங்கேயிருக்கிறதென்று முன்பே கண்டறியப்பட்ட மரபுக்குறிப்பான்களின் உதவியுடன்). அதற்குமேல், இந்தக் 'காரணித்தளம்' என்ற பெரிய குரோமோஸோம் பிரதேசத்துக்குள் இருக்கும் 'காரணி' என்பது, ஒரு மரபணு (gene) விலுள்ள வேறுபாடாக இருக்கலாம். சிறிதுகாலம் முன்புவரை, வெறும் நியூக்ளியோட்டைடு வேறுபாடுதான் இந்தக் 'காரணியாக' இருக்குமென்று கூறப்பட்டுவந்தது, இப்போது epigenetic variations எனப்படும் பிற காரணங்களால்கூட இருக்கலாமென்று கூறப்படுகிறது.

அறிவியல்ரீதியாக ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் கருத்தாக்கம் nature vs nurture (அதாவது, மரபுக்குணாம்சமா அல்லது சூழலா என்ற கேள்வி). இது முடிவற்ற ஒன்று என்றே நினைக்கிறேன். அறிவியல்பூர்வமாக 'நிரூபிப்பது' என்பது இதுபோன்ற விஷயங்களில் ஆம்/இல்லை என்ற ரீதியில் முடிவது சாத்தியமில்லை என்பதையும் நினைவுகொள்ளவேண்டும். இப்படியிருக்கையில், சில மாதங்களுக்கு முன்பு ஹாமரின் சமீபத்திய கட்டுரையொன்று, ஆண் பாலுறவுச் சாய்வு (male sexual orientation) குறித்து வெளியானது (PDF). எப்படி ஓரினச்சேர்க்கையை அளக்கிறார்கள் என்பதுகுறித்து பார்த்தால், அதற்கும் ஒன்று இருக்கிறது போல - கின்ஸி அளவுகோல் (Kinsey scales of sexual attraction, fantasy, behavior, and self-identification) என்று: அளவுகோலில் 0 என்பது துல்லியமான பிறபாலீர்ப்பு (heterosexuality), 6 என்பது துல்லியமான தன்பாலீர்ப்பு (homosexuality): இந்த அளவுகோல்கள் உபயோகப்படுத்தப்பட்டதாக கட்டுரையைப் படித்தீர்களானால் தெரியவரும். கட்டுரையின் முடிவுகள்? மரபகராதி அலசலின் (Genome scan) முடிவில் எப்போதும் வருவதுபோன்ற முடிவுகளே. குரோமோஸோம் 7, 8, 10 மூன்றிலும் காரணித்தளங்கள் இருப்பதாக அவர்களது அலசல் கூறுகிறது - காரணித்தளங்களுள்ளிருக்கும் காரணிகளைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகுமென்று தெரியாது... மேலும், ஓரினச்சேர்க்கை என்பது ஒரு சிக்கலான (complex/multifactorial condition) என்று கருதப்படுவதால், இறுதிவரை அதற்கான காரணிகளைக் கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்போம் - குறைந்தபட்சம் இப்போதைய நிலைமையில் இருக்கும் அறிவியலின் போக்கிலாவது.

சகோதரர்களில் கடைசியாகப் பிறப்பவர்களுக்குத் தன்பாலீர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் தந்தைவழி உறவினர்களைவிட தாய்வழி உறவினர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்ட கருத்தாக்கங்களைச் சோதித்துப்பார்த்து, அப்படியே இருப்பதாக உறுதிப்படுத்தியதாகவும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது...(PDF) ஆராய்ச்சிகள் துல்லியமானவை அல்ல என்னும் வாதத்தை, "ஒரேயொரு ஆராய்ச்சி மட்டும் ஒரு பிரச்னையை முழுதாகத் தீர்த்துவிட முடியாது" என்று படிப்பதன்மூலம், மேலும் காத்திருந்து பார்ப்பதற்கான பொறுமையைச் சம்பாதிக்க முயலமுடியுமென்று நினைக்கிறேன்!! ஓரினச்சேர்க்கை என்பது இப்படிப்பட்ட இறுகலான அறிவியல் தளத்தைத் தாண்டி, பெருமளவில் மிஷெல் ஃபூக்கோ போன்றவர்களால் சிந்தனைகளாகவும், ழான் ஜெனே போன்றவர்களால், இன்னும்பலரால் கலைப்படைப்புக்களாகவும் வாசகத்தளத்துக்குக் கிடைக்கின்றன என்பது நான் அறிந்தவரை. ஃபூக்கோவின் The History of sexualityயை ஆர்வமிருப்பின் வாசித்துப்பார்க்கலாம். பழங்கால கிரேக்கத்தில் கூட, அலெக்ஸாண்டருக்கும் ஹெஃபஸ்தியோனுக்கும் ஓரின உறவு இருந்ததென்றே கூறப்படுகிறது. 2002 உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஏதோவொரு வீரர், இங்கிலாந்து அணியின் டேவிட் பெக்ஹமைக் குறிப்பிட்டு, "He's so cute that I don't know if I should kick him or kiss him" என்றது இன்னும் நினைவிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், ஓரினச்சேர்க்கையாளர்களின் விருப்பத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்பதே என் அபிப்ராயமாக இருந்தாலும், உஷாவின் தோழியர் பதிவி்ன் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டதுபோல ஓரினச்சேர்க்கை என்பது brand ஆக்கப்பட்டு வருவதில் துளிகூட உண்மையில்லை என்று யாரேனும் சொல்வாராயின், அதை நம்புவது தற்போதைய சூழ்நிலையில் சிரமமென்றே கூறவேண்டும்...

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் சுட்டிகளைப் படித்து, அது தொடர்புள்ள பின்னூட்டம் இடவிரும்பினால் அங்கேயே இடவும் - அதுகுறித்துப் பின்பு படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்)

Friday, February 25, 2005

உம்லௌட்

யோசனை எப்படி சட் சட்டென்று தாவுமென்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: விசிதாவின் பதிவு வழி நியூயார்க்கரில் ஐன்ஸ்டீன் மற்றும் கோடெல் பற்றிய கட்டுரையைப் (சம்பந்தமில்லாத துறை எனினும், மேய்வதில் ஒரு ஆர்வம்தான்) படித்துக்கொண்டிருந்தபோது, Godel என்னும் பெயரில் o வுக்கு மேலிருக்கும் இரட்டைப்புள்ளிகள் (இந்தப் பதிவில் தெரியவில்லை/வெட்டி ஒட்டினால் Gödel என்று தெரிகிறது; ஏதோ சிக்கல், நியூயார்க்கர் கட்டுரையில் சரியான வடிவத்தைப் பார்க்கவும்...) ஆங்கிலத்தில் (அதாவது, ஜெர்மனில்) umlaut என்று அழைக்கப்படுவதாக என் நண்பன்மூலம் அறிகிறேன். பெரும்பாலான கன-உலோக (Heavy metalன் கிண்டற்பெயர் - வேறெதும் தெரிந்தால் சொல்லுங்கள்!!) இசைக்குழுக்களின் பெயர்களிலும் இது இருக்கிறது. ஜெர்மானிய கடினத்தன்மையைக் காண்பிப்பதற்காகவும், அழகியல் வேலைப்பாட்டுக்காகவும் இடப்பட்ட இந்த உம்லௌட், விக்கிப்பீடியாவில் சாதாரணக் குறிப்பொன்றாக ஆரம்பித்து, படிப்படியாக இன்று இருக்கும் நிலைமை வரைக்கும் தகவல்களைச் சேகரித்ததை விளக்கும் ஒரு நல்ல வலைப்பக்கத்தை நண்பன் காண்பித்தான். ஒரு சாதாரண (அதாவது, நமக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய) விஷயம் குறித்து இவ்வளவு தகவல்களை ஒரே இடத்தில் தொகுக்கமுடிந்திருப்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமே. விக்கிப்பீடியா பக்கங்களில், உம்லௌட், இரண்டு கண்களைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்: நீ அதைப் பார்க்கிறாய், அது உன்னைப் பார்க்கிறது என்ற ரீதியில்... விக்கிப்பீடியா பக்கங்களில் பெரும்பாலான தகவல்கள் இருப்பதால், மேற்கொண்டு பெரிதாக எதுவும் கூறத் தேவையில்லையென்று நினைக்கிறேன்...

சற்று நாளாக Saw படத்தின் டிவிடியை முயன்றுகொண்டிருக்கிறேன், சிக்கமாட்டேனென்கிறது, இன்றாவது கிடைக்கிறதா பார்ப்போம்...

முத்தமெனும் சிலந்தி

குளிர்காலத்துக்கொரு கனவு
-ஆர்தர் ரிம்போ

குளிர்காலத்தில், நீலக் குஷன்களுடைய
கத்திரிப்பூநிற ரயில்பெட்டியில் பயணிப்போம்.
சௌகரித்திருப்போம். ஒவ்வொரு மென்மையான மூலையிலும் காத்திருக்கும்
வெறிமிகுந்த முத்தங்களின் கூடு.

உன் கண்களை மூடிக்கொள்வாய், சாயந்தர நிழல்கள் முகங்களை இழுப்பதைக்
கண்ணாடிவழிக் காண விருப்பமற்று.
கரும்பேய்கள், கறுப்பு ஓநாய்களாலான
அந்தச் சிக்கலான ராட்சதர் கூட்டம்!

பிறகு உன் கன்னம் வருடப்படுவதை உணர்வாய்...
உன் கழுத்தைச்சுற்றி ஓர் உன்மத்தச் சிலந்திபோலோடும்
ஒரு சின்ன முத்தம்...

கழுத்தைச் சாய்த்தவாறு என்னிடம் சொல்வாய்: "கண்டுபிடி!"
-வெகுநேரம் எடுத்துக்கொள்வோம் பின்னர்
-ஏகத்துக்குப் பயணிக்கும் அச் சிருஷ்டியைக் கண்டுபிடிக்க...

* * *

நன்றி: A Dream for Winter (Arthur Rimbaud) - mag4
தமிழில்: அதே ரயில்பெட்டியில் பயணித்த(?) ஒரு பாம்பு!!
பிற மாற்றங்கள் நன்றி: நாராயண், கார்த்திக்ராமாஸ்

மொழிபெயர்ப்பில் இன்னும் சரியாக வார்த்தைகள் தோன்றினால், அப்படியே மாற்றி முழுக்கவிதையையும் பின்னூட்டத்தில் இடவும். அல்லது, இதே கவிதையை முதலிலிருந்து நீங்கள் மொழிபெயர்க்க முயலவும். முத்தத்தைச் சிலந்தியாகப் பார்க்குமளவு தீட்சண்யமுள்ள நுட்பவாதியிடமிருந்து முத்தம்பெறுபவர்கள் கொடுத்துவைத்தவர்களென்றே நினைக்கிறேன்!

Wednesday, February 23, 2005

அத்துவான வெளி - மௌனி

அத்துவான வெளி
-மௌனி

தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை. ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.

பின்னிருந்து 'என்ன சார் ஸௌக்கியமா? பார்த்து ரொம்ப நாளாச்சு' என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை - கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், 'என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே' என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் 'ஆமாம் ஸார் . ! ரொம்ப நாளாச்சுப் பார்த்து...' என்றான்.

'தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்...நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்...எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்' என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.

'ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு' என்றான் இவன்.

'இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்...' என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.

'ஆமாம்-' என்றான் இவன். 'நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா...' என்றான் அவன்.

'இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை... அதனால்தான்...' என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.

'நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று...' என்றான் அவன்.

பேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.

உங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்ன இப்படிப் பேசாது நீங்கள்...' என்றான் அவன்.

'ஒரு சிநேகிதர் வீட்டிற்கு...' என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, 'என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்...' என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.

ஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

கோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி 'பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்...அங்கேயே பார்க்க முடியலாம்...' என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.

தொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து 'என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட' எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. 'நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்' என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.

இரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு 'என்ன ஸார் ஸௌக்கியமா?' என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.

அவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.

இரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.

முன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் 'யார் நீ-' எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.

தன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது...

எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திருப்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.

ஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது.....ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி......ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ......அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்......கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற்றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் குரங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.

தன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே......பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.

காலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.


தற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று. நன்றி: மௌனி கதைகள், பீக்காக் பதிப்பகம்.

Tuesday, February 22, 2005

நனவிடை தோய்தல்

ஒரே தடவைதான் பார்த்தது, மறுபடிப் பார்த்ததில்லை, பார்க்கும் உத்தேசமுமில்லை - Edward Scissorhands படத்தை. முன்முடிவுகளேதுமின்றிப் பார்த்த சிஸர்ஹாண்ட்ஸ் படத்தைத் தொடர்ந்து, Beetlejuice தொட்டு சமீபத்திய Big Fish வரை பல டிம் பர்ட்டன் படங்கள் பார்த்தாயிற்று, வாஷிங்டன் இர்விங்கின் (Rip Van Winkle படித்திருக்கிறீர்கள் தானே...) பழைய urban legend ஆன Sleepy hollow உட்பட. Fables என்பவை என்றுமே வசீகரங்குறையாதவை. விக்கிரமாதித்தன் கதைகளை எத்தனை தடவை திரும்பத் திரும்பப் படித்திருப்போம் - இரண்டாயிரம் வருஷம்(சரியா?) ஆயுளுள்ள விக்கிரமாதித்தனும் ஆயிரம் வருடம் ஆயுளுள்ள(சரியா, இடம்மாறிவிட்டதா?) பட்டியும், சாலிவாகனன் சமைத்த மண் பொம்மைகளும். சாலிவாகனனின் மண் பொம்மைகள் குறித்த படிமம் இன்றுவரை மனதின் ஏதோவொரு மூலையில் தங்கியிருக்கிறது. கிரகநிலை பார்த்து ஆற்றைக்கடந்து மனைவியுடன் கூடுவதற்குக் காத்துநின்று, கரைபுரண்டோடும் வெள்ளத்தால் முடியாமல்போய் நின்ற சாதுவுக்கும், அவர்நின்ற கரையிலிருந்த குயப்பெண் ஒருத்திக்கும் பிறந்த சாலிவாகனன் தன் மண்பொம்மைகளை போர்ப்படையாக்கி விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததைக் கடைசிவரை நம்பமுடியவில்லை. அப்போதும் அதை ஒரு திரைப்படமாகவே பார்த்துக்கொண்டிருந்தேனென்று நினைக்கிறேன் - கதாநாயகன் (!?!?!?) விக்கிரமாதித்தன் தோற்பதை ஏற்கமுடியாத ஒரு மனோநிலையில். காடாறுமாதம் போகும்போதெல்லாம் நிகழ்த்தும் சாகஸங்களும் இன்னபிறவும். சிலருக்கு Edward Scissorhands, இவ்வளவு முக்கியத்துவம் தரத் தேவையற்ற ஒரு திரைப்படமாகத் தோன்றலாம்; தவறேதுமிருக்கமுடியாது அதில். ஆனால், பெரும்பாலான டிம் பர்ட்டன் படங்கள், யதார்த்தத்துக்கும், எளிதில் ஏமாற்றிவிடக்கூடியளவு அதன்மேல் சல்லாத்துணியாய்ப் போர்த்தியிருக்கும் தட்டைத்தனத்துக்குமிடையி- (pulpக்குச் சடுதியில் ஒரு வார்த்தை தமிழில் கண்டுபிடித்தாகவேண்டும் - தோன்றியதைச் சொல்லுங்கள்) -லிருக்கும் வேறுபாட்டை, வெறுமனே ஹாலிவுட்டைப் போலன்றி ஒரு மெல்லிய நளினத்துடன் கரைக்கின்றன என்று நான் பார்த்தவரையில் உணர்ந்தது. சில படங்கள், என்னதான் அனைவருமிருந்தாலும் அபத்தமாக நொறுங்கி வீழும் - டிம் பர்ட்டனின் Planet of the Apes ஒரு அற்புதமான உதாரணம் - எனக்கு டிம் பர்ட்டனும் பிடிக்கும், ஹெலனா போன்ஹாம் கார்ட்டரும் பிடிக்கும், மார்க் வால்பெர்கும் பிடிக்கும், Planet of the Apes கதையும் பிடிக்கும் - இத்தனையும் இருந்தும் படம் மகா குப்பை என்றே நினைக்கத் தோன்றியது... பர்ட்டன் படமாக எடுக்கநினைத்துப் பின் முடியாமல் போனது, மிகவும் பார்க்க விரும்பியிருக்கக்கூடியது எட்கர் ஆலன் போவின் அற்புதமான கதையான The Fall of the house of Usher. இதுபோன்ற, குப்பையா நூதனமா என்று தீர்மானிக்கவியலாத இயக்குனரின் கையில் அந்தக் கதை எப்படிப் படமாக்கப்பட்டிருக்கிறதென்று பார்க்க மிக சுவாரஸ்யமாக இருந்திருக்கும்!!

இன்னொரு திசையில் பார்க்கும்போது, ஜானி டெப்பும் பிடிக்கும், டிம் பர்ட்டனும் பிடிக்கும், திருட்டுக்கேஸில் மாட்டிக்கொண்டபிறகு வினோனா ரைடரையும் முன்பைவிட அதிகமாகப் பிடித்துப்போயிற்று (இதன் உளவியல் காரணத்தை நானே ஆராய்ந்துகொள்ளவேண்டும் முதலில்) - இவர்கள் அனைவரும் இருந்த Edward Scissorhands படமும் வெகுவாகப் பிடித்துப்போயிற்று: ஒரு மெல்லிய காதல் கதை. ஒரு கற்பனையான குடியிருப்புப்பிரதேசத்தினருகில் ஒரு மலைமுகட்டின்மேல் ஒரு கோட்டையில் வசிக்கும் விஞ்ஞானியொருவன் ஒரு செயற்கை மனிதனை உருவாக்குகிறான். அவனது அனைத்துப் பாகங்களையும் உருவாக்கும் விஞ்ஞானி, கைகளைக் கடைசியில் உருவாக்கிக்கொள்ளலாமென்று, கத்திரிக்கோல்போன்ற சில இரும்புத்துண்டுகளைக் கைகளுக்குப்பதில் தற்காலிகமாகப் பொருத்திக்கொண்டு பின்பு கைகளைப் பொருத்திவிடலாமென்று நினைக்கும்போது இறந்துபோகிறார். கீழே நகரத்தில் வசிக்கும் ஒரு விற்பனைப்பெண் தற்செயலாக அந்தக் கோட்டைக்கு வரும்போது, தனியாக அங்கிருக்கும் எட்வர்டை (Johnny Depp) கண்டுபிடிக்கிறாள்; கைகளுக்குப்பதிலாக கத்திரிக்கோல்களைக்கொண்டு, ஒவ்வொருமுறையும் தன் கோரைமுடியை ஒதுக்கமுயலும்போது முகத்தை அறுத்துக்கொள்ளும் எட்வர்டின்மேல் பரிதாபப்பட்டுக் கீழே தன் வீட்டுக்கு அழைத்துவருகிறாள். அவளது வீட்டில் ஒன்றிப்போகும் எட்வர்ட், அவளது மகள் கிம் (Winona Ryder) மேல் காதல்கொள்கிறான். அவளுக்கொரு நண்பன், அவனுக்கு எட்வர்ட் மேல் கடுப்பு. எட்வர்டின் கத்திரிக் கைகள், அந்தக் குடியிருப்புப் பிரதேசத்தின் மரங்களையெல்லாம் சரசரவென்று கத்திரித்து எறிந்து, அழகான மரச்சிற்பங்கள்போல மாற்றுகின்றன; அதுதாண்டி நாய்களுக்கும், பெண்களுக்கும் கண்சிமிட்டும் நேரத்துக்குள் சிகையலங்காரம் செய்துமுடிக்கிறான் எட்வர்ட். தனது கத்திரிக் கையுடன், ஊதிப் பெரிதாக்கப்பட்ட குடியிருப்புப் பிரதேசத்தின் மக்களால் சிறிதுநாளிலேயே மிகவும் விரும்பப்படுபவனாகவும், பின்பு அதே வேகத்தில் வெறுக்கப்படுபவனாகும் மாறிப்போகும் எட்வர்டின் கதை, இறுதியில் சோகமான முறையில் எட்வர்ட், கிம்மின் பாய்ஃப்ரண்டைக் கொல்வதுடன் முடிகிறது. அங்கே இருக்கும் கிம், வேடிக்கைபார்க்கவரும் மக்களிடம், எட்வர்டும் செத்துவிட்டான் என்கிறாள். அனைவரும் திரும்பிப் போகின்றனர். படம் முடிகிறது - சுருக்கங்கள்விழுந்த (வெகு செயற்கையாக இருப்பதும் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை!) முகத்துடன், கிம், தனது பேத்தியிடம் கதைசொல்லிக்கொண்டிருக்கிறாள் - மலைமுகட்டின்மேலிருக்கும் கோட்டையில் வசிக்கும் மனிதனைப்பற்றி. வெளியே பனி பொழிந்துகொண்டிருக்கிறது. "எட்வர்ட் பனியில் சிற்பங்களைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான்" என்கிறாள் பாட்டி கிம். செதுக்கையில் தெறிப்பதே பனியாக ஊர்மேல் பொழிகிறது என்கிறாள், சிலசமயம் அந்தப் பனியில் நனைந்துகொண்டே நடனமாடுவதுமுண்டு என்கிறாள் பேத்தியிடம் பாட்டி. படம் முடிந்துபோகிறது. அற்புதமான பின்னணி இசை. திரும்ப ஒருமுறை பார்த்து முதல் அனுபவத்தைச் சிதைத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாததால் இன்றுவரை மறுபடி பார்த்ததில்லை. சில படங்கள் அப்படியே நழுவிவிடுவதுண்டு. ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது... அப்போது பிரபலமாயிராத பீட்டர் ஜாக்ஸனின் Bad taste பார்த்துவிட்டு, பயப்படுவதா சிரிப்பதா என்று தெரியாத ஒரு வினோத மனோநிலையில் குழம்பிக்கிடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஏதோவொருவிதத்தில் இது நினைவுபடுத்தும் எங்கள் பள்ளியைப்பற்றி எழுதவேண்டுமென்று பலகாலமாக யோசித்திருக்கிறேன் - அவ்வப்போது ஏதோ கிறுக்கிவைத்ததும் உண்டு; ஒருபக்கம் தேசிய நெடுஞ்சாலை, மறுபக்கம் ரயில்வே தண்டவாளங்கள், தண்டவாளங்களை ஒட்டியிருக்கும் கம்பிவேலிகளின் கம்பிகளை முறித்துவிட்டுத் தாண்டிப்போனால் சின்னதாகக் கொய்யாத்தோப்புக்களும் ஏகப்பட்ட நாவற்பழங்களும். நாவற்பழங்களைச் சுவைத்துவிட்டு கல்லில் நைத்து உள்ளிருப்பதை எடுக்கையில் கறைப்படுத்திக்கொண்ட எண்ணற்ற கால்சட்டைகள், ஏப்ரல் மே மாதங்களில் திருட்டுத்தனமாக அடித்த மாங்காய்கள், கணக்கற்ற வகுப்புக்கள், கெமிஸ்ட்ரி லாபின் கூரையில் பச்சைநிறப் பால்வெளிபோல் சிதறிக்கிடந்த ஏதோவொரு திரவம், வாக் இன் இங்கிலீஷ் டாக் இன் இங்கிலீஷ் கோஷ்டிகளைச் சரிக்கட்டப் படித்த எண்ணற்ற எனிட் பிளைட்டன், அலிஸ்டர் மக்லீன், ஃபோர்ஸித், இர்விங் வாலஸ், ஃப்ராங்க்ளின் W டிக்ஸன், ராபின் குக், ஹாம்லினின் டெல் மீ ஒய் தொகுப்புக்கள், ஏகத்துக்குப் பரந்துகிடந்த பார்த்தீனியச் செடிகள், கிட்டத்தட்ட ஒரு ரயிலை நினைவுபடுத்திய மெஸ், நினைவுதெரிந்த நாளில் அதிலிருந்த கனி அண்ணனின் பெருத்த டேப்ரிக்கார்டரில் ஓடிக்கொண்டிருந்த 'வனிதாமணி வனமோகினி வந்தாடு...', காவி நிறமடித்த வேப்பமரங்கள்சூழ்ந்த ஹாஸ்டல்.... இரண்டு சனிக்கிழமைக்கொருமுறை போட்ட வீடியோ ஷோக்களில் (Principal sir, can we please have a video show this week? We need an out-pass!!) பார்த்த எண்ணற்ற படங்கள், பிஞ்சிலே பழுத்தபிறகு சைடில் ஒதுக்கி ரகசியமாகப் பார்த்த படங்கள் (பிசாசே, அதையெல்லாமா சொல்வாய் இங்கே!!), விளையாண்ட எண்ணற்ற கிரிக்கெட், வாலிபால் விளையாட்டுக்கள், ஒளித்துப் படித்த எண்ணற்ற புத்தகங்கள், நூலகங்களின் Sportstar தொகுப்புக்களில் ஒன்றுவிடாமல் ஸ்டெஃபி க்ராஃப், காப்ரியெலா சபாதினி படங்களிலெல்லாம் போட்ட பிளேடுகள் (சிலவாரங்கள் கழித்து, Unless the culprit replaces the damaged books, a serious investigation will be undertaken and the offender, if found, will be dismissed from the school with immediate effect!! அய்யோ சாமி!!), கமல் ரஜினி சண்டைகள் (பரட்டத்தல மெண்டல் டேய், பொம்பளப்பொறுக்கி டேய்!!), வகுப்பிற்குவெளியில் போட்ட எண்ணற்ற முட்டிக்கால்கள் (வேறென்ன பதம் அதற்கு, முழங்கால் போடுவதா?), வார்டன் ஐயா - முடிவெட்ட டவுனுக்குப் போகவேண்டும் என்று அனுமதி வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டுப் பத்தரை ஷோ படம்பார்த்துவிட்டு (பஸ்ஸே கிடைக்கல சார்!!) மெதுவாக வந்து, இரவில் பதினொரு மணிக்குப்பின்னால் மாடிவழி ஏறிக் குதித்து, வேலிதாண்டிப் போய் புரோட்டாக் கடைகளில் புரோட்டா சால்னா சாப்பிட்டுவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தவாறு திருட்டு தம் அடித்துக்கொண்டு, உலகத்தையே வென்றுவிட்டதுபோல் நள்ளிரவுக்குப்பின் சரக்கு லாரிகளும் நாகர்கோவில் கன்னியாகுமரி பேருந்துகள் சீறிக்கொண்டிருக்கும் இருண்ட நெடுஞ்சாலைகளில் ராஜநடை போட்டுவந்த நாட்களை நினைவுபடுத்தும் படம் எந்தக் குப்பைப் படமாய் இருந்தால் என்ன - ஏதோவொரு கண்ணி நமது நினைவுகளின் மகிழ்ச்சியான நாட்களையும், நம் கைக்குள் அடங்காப் புகைபோன்ற இன்றைய வாழ்வையும் இணைத்துக் கழற்றி இணைத்துக் கழற்றி அன்றாடப் பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது, நினைவுகளின் வருடலில் பிறக்கும் ஒரு மெல்லிய புன்னகை மூலம். அந்தக் கண்ணி ஒரு படமாய் இருந்தாலென்ன, ஒரு கவிதையாய், ஓவியமாய், சாலையில் வழுக்கவைக்கும் நனைந்த புல்லாக இருந்தாலென்ன, இழந்த சொர்க்கங்களாயிருந்தாலென்ன................................... இந்தக் கணம் தப்பிவிடும்முன் இதை இட்டுவிட்டு ஓடியே போகிறேன்..........
(இணையச் சுட்டிகளைக் கடமைக்கே எனத் தேடிப் பொருத்திவிட்டு....................)

படம் நன்றி: Amazon

ஒரு டீஸ்பூன் பழங்கஞ்சி...

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குமுன்பு துள்ளித் திரிந்த காலத்தில் எங்கள் கல்லூரிப் பத்திரிகையில் எழுதியது (தோண்ட ஆரம்பிச்சுட்டியா பழைய பொட்டிய என்று கலாய்த்துவிடாதீர்கள், வேறு வழியில் கிடைத்தது இது... பாவம் பிழைத்துப்போகிறேன், இதைவிட்டா பழங்கஞ்சி வேறு ஏதும் இப்போதைக்குக் கிடையாது: வாக்குக் கொடுத்துட்டோம்ல...) - இவ்வளவு நாள் கழித்து இப்போது இதைப் படித்தால் நானே நாற்காலியில் நெளியவேண்டியதாயிருக்கிறது - தலைப்பு எதுவும் வைத்ததாகக்கூட நினைவில்லை...

உனக்குப் பிடித்த விஷயங்கள்
ஐந்து சொல்லு என்றாள்.
இரண்டாவது நட்பு
மூன்றாவது தனிமை
நான்காவது பேனா
ஐந்தாவது காகிதம்
என்றேன்.

முதலாவது?

அது
ஒரே எழுத்துள்ள சொல்
என்றேன்:
மௌனமானோம்.

ஓலம்

தன் பிரபலத்தன்மை மூலமாகப் பார்வைக்குக் கிடைக்கும் சில ஓவியங்கள், பிரபலத்தன்மை அதற்களித்த நீர்த்துப்போன குணாதிசயங்களையும் தாண்டி மனதை வெகுவாக உலுக்கும் தன்மைகொண்டவை. எட்வர்ட் மங்க்கின் 'ஓலம்' (The Scream) ஓவியத்தை முதன்முதலில் எதில் பார்த்தேனென்று நினைவில்லை. முத்தாரம் என்று ஒருகாலத்தில் வந்துகொண்டிருந்த புத்தகத்திலா என்று யோசித்துப்பார்க்கிறேன். அதன்பின்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்காண்டிநேவிய ஓவியத்தொகுப்புக்களுள்ள ஒரு புத்தகத்தில் பார்த்தது நினைவுக்குவருகிறது. புகைப்படங்களில் பார்க்கும் ஓவியங்களை நேரில் பார்க்கும்போது எப்படியிருக்குமென்று தெரிந்துகொள்ளும் அனுபவத்தை கிட்டத்தட்ட ஒன்றேகால் வருடங்களுக்குமுன்பு சில சால்வடார் டாலி, மார்செல் டுஷாம்ப், மாக்ஸ் எர்ன்ஸ்ட், ரொபெர்த்தோ மாத்தா போன்ற சிலரது ஓவியங்கள் பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கு வந்தபோது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்றுவரை மங்க்கின் The Scream ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, கிடைக்குமா என்பதும் சந்தேகமே. நார்வேயில் ஆஸ்லோ அருங்காட்சியகமொன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தையும், மங்க்கின் இன்னொரு ஓவியமான Madonnaவையும் பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளையர்கள் ஏழெட்டு மாதங்களுக்குமுன்பு கொள்ளையடித்துச்சென்றனர். இந்த இரண்டு ஓவியங்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட இருபது மில்லியன் பவுண்டுகள் என்று பிபிஸி சொல்கிறது (ஸ்வரூப் குழுமம் நூறு கோடிக்கு வாங்கிய எம்.எஃப்.ஹூசேனின் மொத்த ஓவியங்களின் மதிப்பையும்விட அதிகமென்று நினைக்கிறேன்).

1890ன் பிந்தைய காலகட்டங்களில் வரையப்பட்ட மங்க்கின் ஓவியங்களான Melancholy, The Kiss போன்றவற்றி்ல் வெளிப்படும் நிலையின்மை, இனம்புரியாத சோகத்தின் தொனியில் அமைந்த The Scream (1893) ஐ, மேற்கத்தியக் கலாச்சாரத்தின் எந்தவொரு உயிரினமும் பார்த்தவுடன் அடையாளங்கண்டுகொள்ளும். நீல, வயலெட், ஆரஞ்சு நிறங்களாலான சுழல் போன்றவொரு வடிவத்தின்மேல், நிறத்தால் மட்டுமே பிரிந்திருப்பதாகத் தெரியும் சிவப்பு மஞ்சள் நீலத் தீற்றல்களாலான வானம், சுழல் போன்ற ஆற்றின்மேல் நீண்டிருக்கும் பாலம், அதில் இரண்டு கன்னத்திலும் கைவைத்தவாறு (அல்லது காதைப் பொத்தியவாறு), கண்கள், மூக்கு, வாய் என்பவையெல்லாம் தெளிவற்ற குறிப்புக்களால் உணர்த்தப்படும் ஒரு முகமுடைய, உடல் கீழ்நோக்கி நெளிந்து, கிட்டத்தட்ட நமது 'ஆவி' போன்ற சித்திரிப்புக்களை ஒத்த ஒரு உருவம், ஓ என்று ஒரு ஓலத்தை எழுப்பிக்கொண்டிருக்கிறது. ஓலம் என்பது சுற்றுப்புறங்களைச் சிதைத்து நிறங்களைக் குழப்பியதா, அல்லது சித்திரிக்கப்பட்டதாக நான் உணரும் எரிக்கும் நிறங்களும் அதைவிழுங்கும் இருளும் நெளிக்கும் உருவங்கள், அழுத்தந்தாங்காமல் ஓலமிடுகிறதா என்று விளங்கிக்கொள்ளமுடியாத அளவு துக்கமும் திகிலும் பரிதாபமும் ஒருங்கே எழுவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அடோபி ஃபோட்டோஷாப்பில் தற்போதைய காலங்களில் ஒரு சொடுக்கலில் செய்துவிடக்கூடியதாக உணரமுடியும் இந்த ஓவியம், தனிப்பட்ட அளவில் வெகு நெருக்கமாக இருப்பது அதன் தனிமையாலா, மனதில் ஏற்படுத்தும் அழுத்தத்தாலா அல்லது அந்த ஓலத்தின் இடத்தில் நம்மைப் பொருத்திவைத்துப்பார்க்கமுயலும் அபத்த/நிர்த்தாட்சண்யத்தாலா என்று விளங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த ஓவியத்துக்கு அடிப்படையாக இருந்தது பெருவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழங்காலத்து இன்கா மம்மிதான் என்றும் கூறுகிறார்கள் - இன்னும் இது நிரூபிக்கப்படவில்லை எனினும், மம்மிக்கும் இந்த ஓவியத்துக்கும் இடையிலுள்ள ஒற்றுமை முதற்பார்வையிலேயே ஒதுக்கிவிடமுடியும் ஒன்றல்ல (இன்னும் உருப்படியான படம் கிடைக்கவில்லை, மன்னிக்க).

தனிமை, நோய் போன்றவை பீடித்த மனிதர்களை/இடங்களை விவரிக்கும் ஏராளமான மங்க் ஓவியங்கள் உள்ளன - The Sick Girl, The mother at the sick girl's bedside போன்று. ஆனாலும், என்னைப்பொறுத்தவரையில் மிக அழுத்தமுடையதும், இன்னொரு ஸ்காண்டிநேவியக் கலைஞரான இங்மார் பெர்க்மனின் அற்புதமான படமான Cries and Whispersல் நோய்ப்படுக்கையின் கொடூரத்தைத் தயவுதாட்சண்யமின்றி விவரிக்கும் வீட்டின் சிவப்பு நிற உட்புறத்தை நினைவுபடுத்தியதுமானவை 'The Death Bed', 'Death in the sick chamber', 'The Dead Mother and the Child' போன்ற ஓவியங்கள். மறைந்திருக்கும் முகங்களிலும் கவிழ்ந்திருக்கும் முகங்களிலும் மறைக்கப்பட்டிருக்கும் வலியைச் சுவர்களிலும் தரைகளிலும் வழிந்திருக்கும் செம்மண் நிறம் வெளிப்படுத்துவதாகவே இன்று யோசிக்கும்போதும் தோன்றுகிறது.

ஸ்காண்டிநேவியப் பிரதேச எழுத்துக்களாகட்டும், ஓவியங்களாகட்டும் - ஏதோ ஒரு தனிமை அவற்றில் வியாபித்து நிற்பதாகவே தோன்றுவது நிஜமாகவா அல்லது ஸ்காண்டிநேவியப் பிரதேசம் என்பதை நேரில் பார்க்காமலே உலக வரைபடத்தில் பார்த்து நாமாக உருவாக்கிக்கொள்ளும் பனியில் மூழ்கிக்கிடக்கும் நிலப்பரப்பின் பிம்பத்தின் வெளிப்பாடுகளை அப்பிரதேசத்தின் கலைவெளிப்பாடுகளில் பொருத்திக் கற்பனைசெய்து பார்த்துக்கொள்கிறோமா? நட் ஹாம்ஸன், இங்மார் பெர்க்மன், மங்க் - ஏன், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் போன்ற நடிகர்களைப் பார்க்கும்போதுகூட சர்ரென்று சுரத்து இறங்கிவிடுவதன் காரணம் தெரியவில்லையா அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லையா என்றுதான் தெரியவில்லை.

சரியோ தவறோ, தோன்றியதையெல்லாம் எழுதிவைக்க வலைப்பதிவுகளை விட்டால் வேறு மார்க்கத்தைத் தேடவே தோன்றுவதில்லை. கிட்டத்தட்ட டைரியைவிட அந்தரங்கம் குறைவாக, அச்சுப்பதிப்பைவிட பாவனைகள் குறைவாக, Director's cut என்ற ரீதியில் எழுதமுடிவதுதான் மிகவும் வசீகரமளிப்பது. இதிலும் பிரயத்தனப்பட்டு எழுதலாம், தனிப்பட்ட இமேஜை செதுக்கிக்கொள்ளலாம் - ஆனால் என்ன செய்வது அதை வைத்து, யாருக்குத்தான் என்ன உபயோகம்? பேசாமல் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு தோன்றுவதையெல்லாம் எழுதுவது என்னவொரு சௌகரியம்!! சற்றுக்காலம் முன்பு டைம் பத்திரிகை, வலைப்பதிவாளர்கள் பற்றி சில கட்டுரைகள் வெளியிட்டிருந்தது. கிட்டத்தட்ட pajama journalists என்ற ரீதியில் ஒரு பெயர்கொடுத்திருந்ததாக நினைவு. அனைத்தும் decay links என்பதால், சுட்டிகள் கொடுப்பது உபயோகமற்றது. அதேபோல தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்? லுங்கி/வேட்டி/பெர்முடா/சேலை/ஜீன்ஸ் பத்திரிகையாளர்கள்?!?!? டைம் கட்டுரைகளில் கூறியிருந்த மற்றொரு கூற்றும் யோசிக்கவைத்த ஒன்றே. அச்சுப்பத்திரிகை, செய்தி ஊடகங்களில் வரும் செய்திகளின் துணையின்றி வலைப்பதிவாளர்கள் இயங்குவது அரிதே என்று கூறப்பட்டிருந்ததில் முற்றுமுழுக்க இல்லாவிட்டாலும், பெரும்பாலும் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது. அந்தக் கட்டுரைகள், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எழுதப்பட்டதால், வலைப்பதிவர்கள் என்பவர்கள் மொத்தமுமே அரசியல் ரீதியாகத் தங்கள் கருத்துக்களை உரக்கக் கூவியவர்கள் என்ற ரீதியில் ஓரளவு தட்டையாக எழுதப்பட்டிருந்ததாகவே பட்டது. எவ்வளவு நாள் எழுதமுடியும் என்பது வேறு விஷயம், எழுதத் தோன்றுவதையாவது அங்கங்கே கிறுக்கிவைக்கலாம். மாமரம் நட்டுக்கொண்டிருந்த கிழவனைப்பார்த்து ஏன் நடுகிறாய் தாத்தா என்று கேட்டது யார், அக்பரா??

படங்கள் நன்றி: Mark Harden, Discovery.com

Sunday, February 20, 2005

மொட்டை பிளேடு

சிறிது நாட்களுக்கு முன்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தலைவர் லாரி சம்மர்ஸ், ஒரு பேச்சினிடையில், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கு குறைச்சலாக இருப்பதற்கு, பெண்கள் மீதான பாகுபாட்டு மனப்பான்மையைவிட பிற காரணிகளே அதிகப் பொறுப்புடையவை என்று கூறியிருந்தார். அவற்றில் ஒன்றாகக் கூறியிருந்த உள்ளார்ந்த காரணிகள் (intrinsic gender differences) என்ற சொற்பதம், பால் வித்தியாசமின்றி அனைவரையும் கடுப்பேற்றிவிட, ஏகப்பட்ட எதிர்ப்புக்கள் கிளம்பின. பெண்ணாய் இருப்பதாலேயே ஆண்களைத் தாண்டுமளவு/சமமாகப் போட்டியிடுமளவு competitive edge கிடைப்பதில்லை என்ற தொனியில் இருந்த வாக்கியமே அவ்வளவு எதிர்ப்புக்கும் காரணமாக, பிற முக்கியப் பல்கலைக்கழகங்களான எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology), ஸ்டான்ஃபோர்டு மற்றும் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத் தலைவர்கள் மூவரும் சேர்ந்து பாஸ்டன் குளோப் பத்திரிகையில் இதை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்கள். தங்கள் பல்கலைக்கழகத் தலைவர் அந்தக் கட்டுரையில் பங்கேற்காததை எதிர்த்து யேல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தார்கள். பிறகு சம்மர்ஸ் பலமுறை மன்னிப்புக் கேட்கவேண்டிவந்தது. அதன்பிறகும் எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இப்படிப்பட்ட கருத்தாக்கங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது/நிராகரிப்பது கஷ்டமான/சாத்தியமற்ற விஷயம். அறிவியல்பூர்வமாக இவற்றைக்குறித்து ஆராய்பவர்களின் நோக்கம் இவ்வளவு தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அறிவியலின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்ட வித்தியாசங்களைக்குறித்து ஆராய்பவர்களின் முடிவுகளை, தங்களது பிரத்யேக நோக்கங்களுக்காக உபயோகப்படுத்திக்கொள்ள முயல்பவர்களே அபாயமானவர்கள் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு, இந்தியா போன்ற ஒரு ஜனத்தொகையை மரபியல் ரீதியில் ஆராய்வது என்பது அறிவியல் ரீதியான ஆதாயங்களுக்காகச் செய்யப்படவேண்டிய ஒன்றே - ஆராயப்பட்டும் வருகின்றன. மருத்துவ வசதிகள் மேற்கத்திய நாடுகளில் வளருமளவுக்கு வளரும் நாடுகளிலும் வளரும்போது இத்தகைய ஆராய்ச்சித்தகவல்கள் இன்றியமையாததாகவே இருக்கும் - அதற்கு வெகுகாலம் ஆகும் எனினும். மரபியல் ரீதியிலான வேறுபாடுகளைக்கொண்டு குறிப்பிட்ட மனிதர்கள், குறிப்பிட்ட நோய்களால் தாக்கப்படுவதற்கு எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும் கண்டுபிடிக்கமுடியும்/முன்கூட்டியே ஊகிக்கமுடியும். மனிதர்களுக்கிடையிலுள்ள மரபியல் ரீதியான வேறுபாடுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்துவது இதற்கு இன்றியமையாத ஒன்று. International Hapmap consortium போன்ற சர்வதேசக் கூட்டாராய்ச்சி முயற்சிகள் இதற்காகவே பிரத்யேகமாக இயங்கிவருகின்றன. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இலவசமாகத் தங்கள் ஆராய்ச்சிக்கு உபயோகித்துக்கொள்ளமுடியும்.

இந்திய ஜனங்களிலும் இதுபோன்ற மரபியல்ரீதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; குறிப்பாக, தற்போதைய இந்தியாவில் உள்ள மக்கள், பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வந்து தங்கியவர்கள் என்பதை மரபியல்ரீதியாக ஆராய்ந்த சில ஆராய்ச்சிக்கட்டுரைகளை, ஒரு ethics சம்பந்தப்பட்ட வகுப்புக்காக வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது காணநேர்ந்தது. முற்றுமுழுதாக விளக்கி பெரும்பாலானோரைச் சிண்டைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் அபாயத்தைத் தவிர்க்க, சில சுட்டிகளைமட்டும் இறுதியில் கொடுத்திருக்கிறேன், விருப்பமிருப்பவர்கள் படித்துப் பார்த்துக்கொள்ளவும். தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள், வடகிழக்கு இந்தியர் ஆகியோரது மரபியல் கூறுகளைக்கொண்டு, ஐரோப்பிய, மத்திய ஆசிய, திபெத்திய-பர்மிய மக்களது மரபியல் கூறுகளுடன் ஒப்புநோக்கிய மரபியல் ஆராய்ச்சிகளில் சிலவை இருக்கின்றன. மேலும் விருப்பமிருப்பின், சற்றுக்காலம் முன்பு படிக்கநேர்ந்த Luigi Luca Cavalli-Sforza எழுதிய Genes, peoples and languages படித்துப் பார்க்கவும். ஓரளவுக்கு redundancy இருப்பினும், சற்று சுவாரஸ்யமான புத்தகம்.

Genetic evidence on the origin of Indian caste populations

Ethnic India: A Genomic view, with special reference to peopling and structure
Deconstructing the relationship between genetics and race (subscription தேவை)

அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இணையத்தில் குடுமிபிடிச் சண்டைகளைப் பார்த்திருப்பதால் - வடக்கு/தெற்கு, ஹிந்தி/தமிழ், கீழ்ஜாதி/மேல்ஜாதி இத்யாதிகளை. அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் பெறுவது பெரிய சிரமமில்லை, அதன் முடிவுகளை உபயோகித்துக்கொள்வதில்தான் பிரச்னை வரும் எனும்போது அவ்வப்போது இதுபோன்ற விஷயங்கள்குறித்து ஏதோ முடிந்தவரை பொதுவில் பதிந்துவைப்பது என்ற ரீதியில்தான் இதை எழுதமுயல்வது. இருந்தாலும், மேற்கண்ட கட்டுரைகளில், நாலு பிரிவுகளில் ஜாதி மேலே போகப் போக ஐரோப்பியர்களுடனான மரபியல்ரீதியான ஒற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சில மரபியல் குறிப்பான்களைக்கொண்டு (genetic markers) கூறியிருப்பது, அறிவியல் அறிவற்ற, பக்குவமற்ற பிரச்சாரகர்கள் (propagandists) கையில் சிக்கினால் எவ்வளவு விபரீதமாகப் போகும் என்றுதான் முன்னெச்சரிக்கையுடன் யோசிக்கத்தோன்றுகிறது. அதற்கு நேரெதிர்த் திசையில், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால் சமூகப் பிரிவுகள் இன்னும் ஆழமாகும், அதனால் இதையெல்லாம் செய்யாமலிருப்பதே சரி என்று யாரேனும் கூறுவார்களாயின் அது அதைவிட மடத்தனமான வாதம்!! முடிவுகளைக் கையாளும் பக்குவமே முதலில் தேவை. அப்படிப் பார்த்தால், ஐரோப்பிய, ஆஃப்ரிக்க, ஜப்பானிய, சீனப் பிரிவுகள் என்பவற்றுக்கிடையிலும் தகராறுகள் வர வாய்ப்பிருக்கிறதெனலாம் - முடிவின்றிப் போய்க்கொண்டே இருக்கும் அது! எவருக்கும் உபயோகமில்லை அதனால்.

மொட்டை பிளேடு, huh??!! வெகுநாட்களாக வலைப்பதிவுகளை வெறுமனே படித்துக்கொண்டுமட்டும் இருப்பேன், பதில் எப்போதாவதுதான் எழுதுவதுண்டு, அதுவும் பல பதில்களை எழுதுவதில்லை. நேற்றுத் தேவையில்லாமல் போய் கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா ரீதியில் போகுமென்று தெரிந்தே பதிலை எழுத ஆரம்பித்துத் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்! மெக்டொனால்டில் சாப்பிட்டுக் குண்டாகிவிட்டு அதன்மேல் நஷ்ட ஈட்டு வழக்குப் போடுபவர்கள்போல சும்மா சும்மா டொக்கு டொக்கென்று தட்டிக்கொண்டிருக்கும் என் விரல்கள் மேல் நானே வழக்குப் போட்டுக்கொள்ளலாம்; ஒரு surreal lock-up கூடக் கொடுத்துவிடலாம் - தீப்பெட்டி அளவு சிறையறைகளைத் தயார்செய்து விரல்களை அடைத்துவிடலாம் அவற்றுக்குள்!!

என்னய்யா படம் ஏதும் பார்க்கவில்லையா என்று கேட்பதற்குமுன் சொல்லிவிடுகிறேன்: The Grudgeஐ ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் எடுத்துவந்து பார்த்துவிட்டு, இப்போது பாதி அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் என் தலையை மறுபடி ஒட்டவைக்க ஃபெவிகால் தேடிக்கொண்டிருக்கிறேன் ;-)

Thursday, February 17, 2005

குள்ளர்கள்

சென்றவாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் காதல்கவிதைகளாகப் படித்துப் பழைய நினைவுகளில் மூச்சுத்திணறி மீண்டுகொண்டிருந்தபோது, காரணமே இல்லாமல், குள்ளர்களைப்பற்றிய கவிதை ஏதாவது தமிழில் படித்திருக்கிறோமா என்று யோசிக்கத்தோன்றியது - ஏதோ மளிகை வாங்கப்போனபோது அபூர்வ சகோதரர்கள் ஒளிப்பதிவுநாடாவைக் கடையில் பார்த்ததும் என்று நினைக்கிறேன். வழக்கம்போல, பின்னுக்குத்திரும்பிய நினைவுகள், படத்தில் பார்த்த குள்ளர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவரத்தொடங்கியது - பழைய தவக்களை, அப்பு கமல், டேவிட் லிஞ்ச்சின் Twin peaks மற்றும் Twin peaks: Firewalk with me யில் 'கார்மன்போஸியா' என்று குழறிக்கொண்டே உளறும் மர்மக் குள்ளன், குள்ளனா இல்லையா என்று இன்றுவரை தெரிந்துகொள்ள - திரும்பக் கதையைப் படித்துப்பார்க்க விரும்பாத எட்கர் ஆலன் போவின் Hop-frog கதையின் கொடூரக் கோமாளி, இவர்கள் அனைவரையும் தன் சின்னச்சின்ன அடிகளால் மெதுவாகக் கடந்துவந்து நினைவில் நின்ற சமீபக் குள்ளன், ஐந்தாறு மாதங்களுக்குமுன்பு பார்த்த 'ஸ்டேஷன் ஏஜண்ட்' படத்தில் வந்த ஃபின்பார் என்ற குள்ளன் பாத்திரம். வெறும் blurb படித்து, போனால் போகிறதென்று நம்பிக்கையின்றி எடுக்கும் எத்தனையோ படங்கள், "என்னையா கீழ்ப்பார்வை பார்த்தாய் நீ" என்று தலையில் ஒரே போடாகப் போடும். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இந்தப் படமும். பார்த்துப் பலநாளாகிவிட்டதால், திரும்ப அதைப் பார்த்திராததால், தனிப்பட்ட கோணல் ஒரேயடியாக அதைப் புகழத்தோன்றுகிறதா என்பதைப் படம்பார்த்தபின் நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம்.

ஃபின்பார், மூன்றடி உயரம்கொண்ட ஒரு குள்ளன். அவனுக்குப் பிடித்தவை ரயில்கள். ஒரு பொம்மை ரயில் செய்யும் கடையில் வேலைசெய்கிறான், அதன் முதலாளிதான் அவனுக்கு ஒரே தோழன். பொட்டென்று ஒருநாள் கட்டையைச் சாய்த்துவிடும் முதலாளி, போகுமுன்பு ஃபின்பார் பெயருக்கு நியூஜெர்ஸியிலுள்ள ஒரு ரயில்பாதையோரக் கூண்டுவீட்டை (cabin) எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறான். சேமிப்பில் கொஞ்சம் பணம் மிச்சமிருப்பதால், அந்தக் கூண்டுவீட்டுக்கு இடம்பெயர்கிறான் ஃபின்பார். நட்பெதிர்ப்பு என்ற எல்லைவரை நீளுமளவு அழுத்தமான தனிமையைக் கடைப்பிடிக்கும் ஃபின்பார், அந்தக் கூண்டுவீட்டுக்கு எதிராகவுள்ள பல்வேறு தண்டவாளங்களில் செல்லும் ரயில்களைப் பார்த்தவாறும், அவ்விடத்துக்கு அருகிலுள்ள சிறிய குடியிருப்புப்பிரதேசங்களில் நடந்தவாறும் தன் அன்றாட வாழ்வைத் துவங்குகிறான். அக் கூண்டுவீட்டுக்கு எதிரில் ஒரு நகரும்-உணவகம் வைத்திருக்கும் ஒரு க்யூபனின் நட்புரீதியான விசாரிப்புக்களை முற்றிலுமாகத் தவிர்க்கமுயலும் ஃபின்பார், பின்பு அந்தக் க்யூபனின் அபரிமிதமான உற்சாகம், நிராகரிப்பென்பதைப் புரிந்துகொள்ளமுடியாதளவு வலிமையானதென்று தெரிந்தபிறகு அவனது நண்பனாகிறான். மகனை இழந்த சோகத்தில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஓவியை ஒருத்தி இரண்டுமுறை ஃபின்பாரைத் தன் காரால் இடிக்கப்போய், மயிரிழையில் தவிர்த்து, பின்பு அவனுக்குத் தோழியாகிறாள். அந்தச் சிறு நகரத்தின் நூலகத்தில் நூலகனாயிருக்கும் விடலைப்பெண்ணுக்கும் அவன்மேல் ஒரு கண்.

க்யூபனும் ஓவியையும் ஃபின்பாரும் வெகு நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சற்றே தயக்கத்துடன் கேட்கிறான் க்யூபன்: "உடலுறவு கொண்டிருக்கிறாயா?" "ஆமாம்." "அதாவது...நிஜ அளவு உயரமுள்ள பெண்ணோடு?" "ஆம், நிஜ அளவு உயரமான பெண்ணோடு". ஓவியை மீது ஃபின்பாருக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஃபின்பார் மீது நூலகிக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஓவியைக்கு ஃபின்பார் மேல் பரிதாபமா பாசமா என்று இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு இரவில் ஓவியை வீட்டில் பெரும் தீர்த்தயாத்திரை போட்டுவிட்டு ஃபின்பாரும் க்யூபனும் அங்கேயே உறங்கிப்போக, மறுநாள் காலையில் அவளைப் பார்க்கவரும் தனித்து வாழும் கணவன், சட்டையுடன் படியில் இறங்கி வரும் 'குள்ளனை'ப் பார்க்கிறான்....

கதையைத் தொடர்ந்து சொல்வதிலோ மேற்கொண்டு விவரிப்பதிலோ அர்த்தமில்லை; ஒருவிதமான நேர்த்தியற்ற முடிவைத்தவிர, படத்தை மிக ரசிக்கத்தக்கதாய்ச் செய்தவை வெகு நுட்பமான கவனிப்பு, ஃபின்பார் பாத்திரத்தில் நடித்த பீட்டர் டிங்க்லேஜின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு, இந்தப் பாத்திரத்தை மையம்கொண்ட நகைச்சுவை என்பதைக் காட்சிகளிலிருந்து கத்திரித்து எறிந்து, சிரிப்பதற்குப்பதிலாக ஒவ்வொரு தருணத்திலும் அழுத்தமான தர்மசங்கடமொன்றை உருவாக்குவது, கதைக்களன் - நிகழும் இடம் மீதான ஒரு இனம்புரியாத ஈர்ப்பு என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஐந்தாறு தண்டவாளங்கள்; வலப்பக்கம் ஒரு கூண்டுவீடு; அந்தப்புறம் ஒரு சின்னக் கடை; பச்சைப் புல்வெளி; சில மனிதர்கள்; ஏளனத்துடன் தன்னைப் பார்க்கும் பிறரைக் கூனிக்குறுகவைக்குமளவு தன் முகத்தில் காட்டும் ஆயுதமான வித்தியாசமின்மையை, அதேயளவு புதிருடன் தன்னைப் பார்க்கும் ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க குண்டுச்சிறுமியிடம் உபயோகிக்கமுடியாமல் ஃபின்பார் தோற்கும் கணங்கள்; கவனிப்பாரற்றுக்கிடக்கும் பழைய ரயில்பெட்டிகள் - இத்தனைக்கும் மேலாக, கிட்டத்தட்ட ஹிட்ச்காக் படம் போல ஒரு சின்ன கதைக்களன், சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சம்பவங்கள் என்ற வடிவநேர்த்தியுடன், சாதாரண சம்பவங்களை சாதாரண மனிதர்களைக்கொண்டு (குள்ளன் என்ற ஒரு விஷயத்தின் நினைவுறுத்தலை ஃபின்பாருடன் சேர்ந்து படமும் கத்திரிக்க முயல்கிறது) இருப்பது இனம்புரியாதவகையில் நினைவுகொள்ளச்செய்தது இந்தப் படத்தை. முன்முடிவுகள் ஏதுமின்றி, இதைப் படித்ததை மறந்துவிட்ட ஏதோவொரு தருணத்தில் இப்படம் உங்களுக்குச் சிக்கி, பார்த்து, பிடித்திருக்கவும் செய்ததென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்!!

படம் நன்றி: Amazon

Saturday, February 12, 2005

மோட்டார்சைக்கிள் டயரிக்குறிப்புகள்

ஒரு இறப்பு, ஒரு திரைப்படம். நாடகாசிரியர் ஆர்த்தர் மில்லர் நேற்று இறந்துபோனார். Death of a salesman என்பது அவரது மிகப் பிரபலமான நாடகம் - டஸ்டின் ஹாஃப்மன், ஜான் மால்க்கோவிச் நடித்துப் படமாகவும் வந்திருக்கிறது. ஏகப்பட்ட நல்ல விமர்சனங்கள் அதைக்குறித்து இருப்பினும், திரைப்படம் என்ன காரணத்தாலோ பிடித்ததில்லை. சிலகாலம் மேரிலின் மன்ரோவின் கணவனாகவும் இருந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய.

நேற்று Motorcycle diaries படம் - எர்னெஸ்டோ 'சே' குவாராவும் அவரது நண்பர் ஆல்பர்ட்டோ க்ரானடோவும் தென்னமெரிக்கக் கண்டம் முழுதுமாக ஒரு மோட்டார்சைக்கிளில் தொடங்கி, பின் கிடைத்த வழியில் பிரயாணம்செய்கிறார்கள். க்ரானடா ஒரு உயிர்வேதியியலாளர், எர்னெஸ்டோ, ஒரு செமஸ்டர் மட்டுமே முடிப்பதற்குப் பாக்கிவைத்திருக்கும் மருத்துவக்கல்லூரி மாணவர். பிரயாணத்தில் தென்னமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும் காணும் வறுமை, ஒடுக்குமுறை, நோய், சுரண்டல் அவலக்காட்சிகளாலும் காலனியாதிக்கத்தினால் சிதைந்த கலாச்சாரங்களின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, பெருவின் பூர்வகுடி இன்காக்களின் மலைமுகட்டு கோட்டை நகரமான மச்சு பிச்சுவில் தன்னையறியாமல், "துப்பாக்கியின்றிப் புரட்சி சாத்தியமில்லை" என்று கூறுவதின்மூலம், எர்னெஸ்டோ, 'சே'வாகத்தொடங்கும் காலகட்டம்வரை நீள்கிறது படம். சேகுவாரா எழுதிய Motorcycle diaries மற்றும் ஆல்பர்ட்டோ க்ரானடோ எழுதிய Traveling with Che Guevara (என்று நினைக்கிறேன்) இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். தென்கோடி அர்ஜென்டினாவில் ப்யூனஸ் அயர்ஸில் தொடங்கும் பயணத்துடன் தொடங்கும் படம், பல தென்னமெரிக்க நாடுகளைத்தாண்டி, பெருவில் சான் பாப்லோ (San Pablo) தொழுநோய் முகாமில் சிலகாலம் தங்கி மருத்துவச் சேவைசெய்து, பின் பயணத்தை வெனிஸூலாவில் முடித்து, நண்பர்கள் இருவரும் பிரிந்துசெல்வதுடன் படம் முடிகிறது. இரவில் சிலி நாட்டில் பாலைவனத்தில் நடந்துசென்றுகொண்டிருக்கும் எர்னெஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் சுரங்கக் கூலிவேலைசெய்யும் ஒரு தம்பதி சந்திக்கிறது. அந்தப் பெண் கேட்கிறாள்: "எதற்காகப் பிரயாணம் செய்கிறீர்கள்?" ஒருநிமிடம் எர்னெஸ்டோவுக்கு ஒன்றும் புரிவதில்லை, நிதானித்துப் பின் நிச்சயமின்றிப் பதிலளிக்கிறார்: "பிரயாணத்துக்காக". அந்தப் பெண்ணின் முகம் சலனமற்று இருக்கிறது. எர்னெஸ்டோவின் பதில் கல்லில் மோதிய மழைத்துளி போல அவளில் மோதிச் சிதைந்து வீழ்கிறது. வாழ்க்கையின் நிர்த்தாட்சண்யத்துக்குமுன்னான தனது பதிலின் பலஹீனத்தை வேதனையுடன் உணரும் எர்னெஸ்டோ, தன் மேலங்கியையும் வேறுசில பொருட்களையும் கழற்றிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்கிறார்.

சில காட்சிகள் திரைப்படத்துக்கேயுரியவகையில் நாடகீயமாகப் பட்டாலும், அதிகம் உறுத்துவதில்லை. சேகுவாரா பற்றிய வெவ்வேறு விமர்சனங்கள் இருப்பினும், அரசியல் சித்தாந்தங்கள் என்பவற்றைத் தாண்டி, மனித அவலத்தைக்கண்டு தனிமனிதனொருவன் பெறும் உந்துதல் என்ற ரீதியிலாவது பார்க்கமுடிந்ததில் மகிழ்ச்சியே. எர்னெஸ்டோவாக நடித்திருக்கும் கயேல் கார்சீயா பெர்னால் (Gael Garcia Bernal) மற்றும் அவரது ப்ளேபாய் நண்பனாக வந்து, பின்னர் க்யூபாவில் Santiago School of Medicineஐ ஸ்தாபித்த ஆல்பர்ட்டோவாக நடித்த ரோட்ரிகோ டி லா செர்னா இருவரும், படம் சொல்வதுபோல "சிறிதுகாலம் இணையாகச் சென்ற இரண்டு வாழ்க்கைகளைப்பற்றிய குறிப்புக்கள்" என்பதை வெகு அழகாகச் சித்திரித்துள்ளார்கள். குறிப்பாக, வளர்ந்துவரும் மிகத்திறமையான நடிகர் என்றே பெர்னாலைச் சொல்வேன். தமிழில் சூர்யா நினைவுதான் வருகிறது. இதைத்தவிர இன்னும் மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன் - Amores Perros, Y tu mama tambien, The Crime of Father Amaro - வளர்ந்துவரும் இந்த மெக்ஸிக சூப்பர்ஸ்டாருக்கு யாராவது ரசிகர்மன்றம் திறந்தால் சொல்லியனுப்புங்கள், இணைந்துகொள்கிறேன் ;-)

மோட்டார்சைக்கிள் டயரீஸ் படம் நன்றி: Amazon

Friday, February 11, 2005

பட்ரேபள்ளி விலக்கு

பட்ரேபள்ளி விலக்கு
-மாண்ட்ரீஸர்

கயிற்றுக்கட்டிலின்கீழ் கறுப்பும் வெளுப்புமாகப் படுத்துக் கிடந்தது நாய். விடாமல் அசைந்துகொண்டிருந்தது அதன் வால். ஈரக்கறுத்த மூக்கை மண்தரையில் கொட்டிக்கிடந்து ஊறியும் ஊறாமலும் கிடந்த தேனீரின் அருகில் மெதுவே கொண்டுசென்றுத் தலையைப் பின்னிழுத்து மறுபடி அருகில் கொண்டுசென்று சுவாரஸ்யமற்றுப் பின் தலையைப் பின்னிழுத்துக்கொண்டு திரும்பித் தன் அழகிய விழிகளால் பைக்கைப் பார்த்தது. பைக்கின் பெட்ரோல் டாங்க் கழுவப்பட்டுப் பளபளவென்று மின்னிக்கொண்டிருக்க, நெளிந்து இழுபட்டுப் பாதி திறந்து தெரிந்த கதவு வழி அறைக்குள்ளிருந்த மற்றொரு கயிற்றுக் கட்டிலில் சல்மாவின் மெல்லிய உடலும் கணுக்காலருகில் வாழ்நாள் முழுதும் ஈரமாகவேயிருக்கும் சேலையும் ரோஜாநிறப் பாவாடையும் அவளது கணவனின் எடைக்குக்கீழ் நசுங்கிக்கொண்டிருந்தன. பார்த்தால் பார்க்கட்டும் அதற்குத்தானே வருகிறது என்றான் கணவன். சிவப்புப் பெயிண்ட் அடித்த பேருந்துகள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்று கடந்து சென்றன. சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தியிராத நிலப்பரப்பின் குருதிகரைக்கும் வெயில் அடர்த்தியான கூரைகளுக்குக்கீழ் நுழையவிருப்பமின்றி வெயிலில் அமர்ந்திருந்த கிழவர்களின் தலைப்பாகைகளில் முகச்சுருக்கங்களில் நகக்கணுக்களின் அழுக்கில் தேங்கித் தளும்பிக்கொண்டிருக்க, அங்கே பரவியிருந்த பதினாறு கூரைவேய்ந்த கடைகளைக் குறுக்குநெடுக்காகப் பிளந்திருந்தது நிலப்பரப்பு. நாகமுனெப்பனின் அருகிலமர்ந்திருந்த லாரிக்காரனொருவன், சிமெண்ட் படிந்திருந்த தனது வலதுகையைக் குஸ்காவில் நுழைத்து இடக்கை வெங்காயத்தைக் கடித்து அக்கா இன்னுங் கொஞ்சம் குழம்பு ஊற்று. மெதுவாக எழுந்த நாய் முன்னங்கால்களை வெ-கு முன் வைத்துப் பின்னங்கால்களை வெ--கு பின் வைத்து உடலை நீ---ட்டிச் சோம்பல்முறித்துச் சரசரவென்று கூரைக்கு முட்டுக்கொடுத்திருந்த தடித்த கம்பங்களின் கணுக்களில் தன் பாதங்களைப் பதித்து ஏறத்தொடங்கியது. பெட்ரோல் டாங்க் இன்னும் சற்றுநேரத்தில் நாயை இழந்துவிடும். கம்பங்களில் ஏறிக்கொண்டிருந்த நாய், அலுமினியப்பாத்திரங்களில் கொதித்துக்கொண்டிருந்த கறிக்குழம்பை, அடுத்த அடுப்பில் வறுபட்டுக்கொண்டிருந்த மிளகு மூளையை, உரிக்கப்பட்ட வெங்காய மலைகளை, அடுத்த அடுப்பின் கணப்பின்மேலிருந்த குஸ்காவைச் சிரத்தையற்றுப் பார்த்தவாறு பிரயாணித்து, குடிசைக்கடையின் கூரை உச்சிக்குச் சென்றது.
"வங்க்காயனி ஏமண்ட்டாரு சார்... கத்ரிக்கா காதா?"
சலசலவென்று ச்ள்ள்ட்ச்ச்ச்ச்ப்ப்ள்ளென்று சப்தங்கள் கேட்டன சிலவினாடிகளுக்கு.
"த்தூ நீ யம்ம, உச்ச போசிந்தி தர்த்துரன்னா *** ப்பைனநிஞ்ச்சி..."
குஸ்காத் தட்டை விசிறியடித்த லாரிக்காரன் வெறியுடன் எழுந்து சுற்றுமுற்றும் தேடிச் சில கற்களையும் கையடக்கக் கட்டைகளையும் எடுத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியே ஓடிக் கண்ணாடி டீகிளாஸ்கள் தடுமாறி வீழ்ந்தன. "நீ யம்ம நீ குண்டெ தலக்காயனு பகல***த்தா நேனு" லாரிக்காரனின் கையிலிருந்த கல் ஒரு துப்பாக்கிக்குண்டு போலக் கூரைநோக்கிக் கிளம்பிச்சென்றதை மட்டும் பெட்ரோல் டாங்க்கினால் பார்க்கமுடிந்தது. கடந்துசென்ற லாரியில் கலகல சப்தமா இல்லை லக்கசமுத்ரம் மலைப்பாதையின் வலப்புறத்தில் கல்குவாரி டைனமைட்டுகள் வெடித்த சப்தமா தெரியவில்லை, கூரைமேலிருந்து எழுந்த மரண ஓலத்தின் குளிர்பாய்ச்சும் சிதைவு டாங்க்கின் நெஞ்சைப் பிளந்தது. சக்கரங்கள் துடித்தன. க்ளட்ச்சுக்குப் படக்கென்று கண்ணீர் துளிர்த்தது. லாரிக்காரன் கையிலிருந்து இன்னும் இரண்டு கற்களும் ஒரு தடித்த கட்டையும் கூரைநோக்கிக் கிளம்பிச்சென்றன அதே உக்கிரத்துடன்.

கூரைக்குக்கீழ் வெளியேறிக்கொண்டிருந்த சிகரெட் புகைவளையங்கள், மாமிச வாசனைகள், கயிற்றுக் கட்டிலின் கிரிச் கிரீச் சப்தம், உற்றுநோக்கும் பார்வைகள் மத்தியில், குடிசைக்கடையின் வலதுபக்கத்தில் பாதி வெயிலில் பாதி வெயிலில் மற்றொரு கயிற்றுக்கட்டிலில் மூத்திரமொழுக்கிக்கொண்டு கிடந்த கிழவனின் மார்பில் நெஞ்சைப் பிளக்கும் ஓலத்துடன் கூரைமீதிருந்து நாய் வீழ்ந்தது. கிழவனின் வாய்க்கடையோரம் வழிந்திருந்தது வெற்றிலைச்சாறா நாயின் தலைரத்தமா என்று டாங்க்கினால் தீர்மானிக்க முடியவில்லை. பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கும் கிழவனின் கட்டில் கிடந்த இடத்துக்கும் மத்தியில் கெரோஸின் பம்ப் அடுப்பின் மேல் கொதித்துக்கொண்டிருந்த டீக்கெட்டில்களும் வளைத்த இரும்புக்கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த பாலிதீன் பைக்குள்ளிருந்த பன்களும் கண்ணாடி பாட்டில்களில் அடுக்கப்பட்டிருந்த ஒருரூபாய் பிஸ்கட்டுகளும் மிக்சரும் உக்கானி கலக்கும் அலுமினியத் தட்டும் பொரிப் பையும் கறிவேப்பிலைக் கொத்துக்களும் டாங்க்கின் பார்வையை மறைத்தன. கிழவனுக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு யமஹாவின் டாங்க்கின் பிரதிபலிப்புவழி பார்த்துக்கொண்டிருந்தது டாங்க். பெரும்பாலும் வளைந்தே தெரிந்துகொண்டிருப்பினும், நாய் இன்னும் கிழவனின் நெஞ்சுமேல் கிடந்தவாறு கைகாலை மரணவேதனையில் உதைத்துக்கொண்டிருக்க, கிழவனின் கூச்சல் கடையை உலுக்கியது. சல்மாவின் கணவன் சபித்தவாறு அவள்மேலிருந்து எழுந்து லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு தொப்புளை நோண்டிக்கொண்டு காதைக் குடைந்துகொண்டு வெளியே வந்து, நாயைக் கிழவன் மேலிருந்து அகற்றித் தரையில் போட்டு, லாரிக்காரனை முறைத்தான்.

இரவுநேரங்களில் காவலுக்கிருந்த நாய். என்ன செய்வது இப்போது.

சல்மா அறைக்குள்ளிருந்து வெளியே வந்து, டாங்க்கில் வளைந்து ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்தாள். அதன் வெகு அருகில் வந்து மறுபுறம் நின்றுகொண்டு, கால்களை உயர்த்தி எக்கியவாறு அந்தப்புறத்தில் பார்வையிட்டாள். நாய் இருக்கிறதா செத்ததா என்றாள் தனது பிரத்யேகமான கீச்சுக்குரலில், தலைமுடியை அவிழ்த்துக் கொண்டையிட்டவாறு. முனெப்பன், நாராயணரெட்டி, ஓபுலய்யா இன்னும்பலர் இப்போது கிழவனின் கட்டிலருகிலும் சுற்றியும் நின்று டாங்க்கின் பார்வையை முற்றும் மறைத்துவிட்டகாரணத்தால் சப்தங்களைவைத்தும் தன்மேல் பிரதிபலித்த புட்டங்களைவைத்தும் பெட்ரோல்டாங்க் சித்திரித்துக்கொள்ளத்தொடங்கியது...

நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் மெதுவாகக் கடைவலமூலைக்கயிற்றுக்கட்டிலருகில் வரத்தொடங்கினார்கள். புறப்பட்ட பஸ் கட்டிலருகில் ஒருசிலகணங்கள் தயங்கி நின்று பின் கிளம்பிப் போனது புகைகக்கி. நாயின் வாய் திறந்து திறந்து மூடியது. சம்ப்பேசினாவேரா மூர்க்குடா என்றான் நாராயணரெட்டி. "ஏமன்னா புர்ர உண்ட்டே காதா, வாடி மொக்ஹம்".

சல்மா இன்னும் நாயினருகில் போகவில்லை. வெயிலில் கொதித்துக்கொண்டிருந்த சீட்டின்மேல் காயப்படாமல் கைவைத்து ஊன்றிக்கொண்டு பெட்ரோல்டாங்க்கின்மேல் தன் தொடைகளைச்சாய்த்து எம்பி எம்பிப் பார்த்தாள். சல்மாவின் மகள் அதிர்ச்சிமாறாது விரிந்த கண்கள் தன் இரட்டைச்சடை பூப்போட்ட ஃப்ராக் நடுங்க கண்களில் ததும்பும் கண்ணீருடன் ஓடிவந்து அவள் இடுப்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். பிள்ளையைப் பார்க்க விடாதே என்றான் நாகமுனெப்பன், அங்கிருந்து திரும்பி. எம்பிப் பார்த்துக்கொண்டே தன் மகள் தலையைக் கன்னங்களை ஆதுரமாக வருடிக்கொண்டிருந்த சல்மாவின் கண்ணாடி வளையல்கள் காலதேசவர்த்தமானமற்றுச் சலீர் சலீரென்றன. நாயின் கடைவாய் சொல்லவொணாக் குரூர வேதனையுடன் சுண்டிச் சுண்டி இழுக்க, அதன் கூர்த்த நாய்ப்பற்களைத் தள்ளிக்கொண்டு வெளிவந்து விகாரமாய் இரைத்த நாக்கு சுற்றியிருந்த அனைவரைநோக்கியும் இலக்கற்றுச் சுழன்றது. பீளை தள்ளிப் பிதுங்கியிருந்த கண்களையே அனைவரும் உற்று நோக்கிக்கொண்டிருந்ததாய்ப் பட்டது. சல்மாவின் கணவன் குத்துக்காலிட்டு நாயினருகில் அமர்ந்து அதன் தலையை ஆராய்ந்தான். ரத்தப்போக்கு கூட அவ்வளவாய் இல்லை. சல்மாவின் தொடைகளும் பட்டாம்பூச்சி இறகசைப்புகள் போன்ற அவள் மகளின் இடைவிடாத மெலிதான நடுக்கத்திலும் தன்னையிழந்த பெட்ரோல்டாங்க் கண்களை மூடிக்கொண்டது. அதன் தலையைப் பிளந்தது முதல் கல்லாகத்தான் இருக்கவேண்டும். தலையில் படக்கூடாத இடத்தில் பட்டதா அல்லது கல் தேக்கிவைத்திருந்த கொலைவெறியா தெரியவில்லை, வலப்பக்கத்தில் மண்டையெலும்பு மூன்று விரற்கடையளவு சுக்கல் சுக்கலாகச் சிதறியிருந்தது. சற்று வேகமாய் வீசத்தொடங்கிய காற்றில் சின்னதாக ஒரு சுழல் உருவாகிச் சில காய்ந்த இலைகளைக் காகிதங்களைச் சுழற்றி வீசியெறிந்து சோர்ந்து வீழ்ந்தது. பின்புறமாய் நீண்ட தார்ச்சாலைகளின் இருபக்கமும் நின்றுகொண்டிருக்கும் ஆலமரங்களின் துவக்கத்தில் தனித்திருந்த பெட்டிக்கடை வாசலிலிருந்து பாவாடைசட்டைச் சிறுமி அவளால் முடிந்தமட்டுமான உயரத்துக்கு ஏறிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். சல்மா இப்போது பைக் சீட்மேல் அமர்ந்துகொண்டு, மடிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்ட மகள் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். இரு கட்டை விரல்களுக்கிடையிலும் நசுங்கிக்கொண்டிருந்தன இருந்த பேன்கள் இல்லாத பேன்கள்.

சைடுஸ்டாண்டில் இருக்கும்போது உட்காராதே ஒடிந்துவிடும் என்றுவிட்டு மறுபடி நாயைநோக்கித் திரும்பிக்கொண்டான் முனெப்பன். லாரிக்காரன் ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். கிழவனின்மேல் படிந்திருந்த ரத்தத்தை ஈரத்துணி ஒன்றைக்கொண்டு துடைத்தாள் சல்மாவின் கணவனின் அக்காள். தலையை மட்டும் வலதுபுறம் திருப்பிச் சாய்ந்தவாறு நாயின் சவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் கிழவன். நாயின் தலைக்கும் குஸ்காப் பாத்திரத்துக்கும் இடையிலாகச் சில ஈக்கள் சுறுசுறுப்பாகப் பறந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ வந்து அங்கே வளர்ந்துவிட்டிருந்த காரணத்தால் அது சல்மா கடையின் நாயா இல்லையா என்று அவர்களாலேயே சொல்லமுடியாவிட்டாலும், அவர்கள் கடை நாய்தான் என்று அவர்கள் சொன்னதும் தவறாகப் படவில்லை. பணம் எதுவும் வேண்டாம் என்றார்கள் சல்மாவின் அக்காளும் சல்மாவின் கணவனும். நாலு பிளேட் குஸ்கா, சில ரொட்டிகளுக்காகுமா அது. கோணி ஒன்றைக் கொண்டுவந்து, நாயை அதற்குள் திணித்தான் கணவன். ஜனங்கள் கலைந்து சென்றனர். கோணியையும், சின்ன சுண்ணாம்புச் சாக்கையும் கடையின் பின்புறமாய் இழுத்துச்சென்றதைப் பக்கத்தில் பார்த்தீனியங்கள் சுற்றியிருந்த பலகைத்தடுப்புச் சலூன் கண்ணாடியில் சுழன்றபடி பார்த்துக்கொண்டிருந்தான் எங்கட்ரமணா. சலூன் கண்ணாடிகளில் நிலைத்த கண்களுடன் நாய் கணக்கற்றுப் பெருக்கமடைந்தது.

* * *

சிலவாரங்கள் கழிந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தேகாலுக்கு சல்மா கடையும் மேட்டுக் கடையும் மட்டுமே விழித்திருந்தன. சோம்பலுடன் வந்துநின்ற பைக்கின் பெட்ரோல்டாங்க் சிகரெட் பற்றவைத்துக்கொண்டது. உச்சிவெயில் எரிக்கும் மதியம்பற்றி ஏதும் பிரக்ஞையற்ற அதிகாலை அதன் மோனத்துடன், விளக்கவியலாத் தனிமையுடன், அசையும் மரங்களின் ரகசிய சம்பாஷணைகளுடன், காளைக்கண்நீல ஆகாயத்துடன் குளிர்ந்த நிலத்துடன் காற்றில் மிதக்கும் மெல்லிய திரை போல் அசைந்துகொண்டிருந்தது. தூக்கம் கலையாத சல்மா டீ பாத்திரங்களை அப்போதுதான் சூடுபடுத்தத்தொடங்கியிருந்தாள். மேட்டுக்கடையில் அரவமில்லை, எப்போதும்போலும் அதே வித்தியாசமற்ற சவக்குழியைத் தலைகீழாக உருவிப்போட்டுச்சில மஞ்சள் குமிழ்விளக்குகளைப் பொருத்தியதுபோல. பெட்ரோல்டாங்க்கைப் பார்த்து அதே தூக்கக்கலக்கத்துடன் புன்னகைத்தாள் சல்மா. உடலைச்சுற்றியும் தலையை மூடும் குல்லாய் போலவும் தடித்த கம்பளிப்போர்வையைச் சுற்றியிருந்தாள். கண்ணாடி கிளாஸில் டீ எடுத்துவந்தாள், பெட்ரோல்டாங்க்கைத் திறந்தாள் ஊற்றினாள், சாய்ந்து நின்றுகொண்டாள் அதன்மேல். மெதுவாக எழுந்த பெட்ரோல்டாங்க் முன்னங்கால்களை வெ-கு முன் வைத்துப் பின்னங்கால்களை வெ--கு பின் வைத்து உடலை நீ---ட்டிச் சோம்பல்முறித்துச் சரசரவென்று கூரைக்கு முட்டுக்கொடுத்திருந்த தடித்த கம்பங்களின் கணுக்களில் தன் பாதங்களைப் பதித்து ஏறத்தொடங்கியது.

ஓவியம் நன்றி: Mark Harden

Tuesday, February 08, 2005

Deep throat - வாட்டர்கேட் ஊழல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்டு நிக்ஸன் (குடியரசுக் கட்சி), வாட்டர்கேட் ஊழலில் சிக்கி மரியாதையிழந்து பதவியிழந்த கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பிருந்தும், எதற்கும் இருக்கட்டுமே என்று கூலியாட்களைவைத்து ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்கும் கருவிகளைப் பொருத்திய விஷயம் வெளிவந்ததில் நிக்ஸன் பதவியிழக்க நேர்ந்தது. இந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டைன் இருவரில், இந்த ஊழல் குறித்து முக்கியமான துப்புக்களை பாப் உட்வர்டுக்குக் கொடுத்த 'Deep throat' என்ற பெயரால் மட்டுமே குறிக்கப்படும் நபரின் அடையாளம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பாப் உட்வர்ட், Deep throat இறக்கும்வரையில் அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லுவதில்லை என்று உறுதிமொழியிட்டு, இன்றுவரை சொல்லாமலே இருக்கிறார். நேற்று சி.என்.என்னில், Deep throat நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டபோது, இது உண்மையா இல்லை வெறும் புரளியேவா என்று சந்தேகமே ஏற்பட்டது முதலில். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எத்தனை தியரிகள் இதுவரை கூறப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ள deep throat என்று கூகிளில் கொடுத்துப் பாருங்கள். இந்த வாட்டர்கேட் ஊழல், ராபர்ட் ரெட்ஃபோர்ட், டஸ்டின் ஹாஃப்மேன் நடித்து All the President's men என்ற படமாக வந்திருக்கிறது. பத்திரிகைத் துப்புத்துலக்கலையும் வைத்து இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்கமுடியும் என்று நிரூபித்த ஆலன்.ஜே.பக்கூலா படம்.

வாட்டர்கேட் ஊழலைப்பற்றிய வாஷிங்டன் போஸ்ட்டின் முழு விவரணத்தொகுப்பு இங்கே.

Sunday, February 06, 2005

மார்க்வெஸ்ஸின் சுயசரிதை

காப்ரியல் கார்சீயா மார்க்வெஸ்ஸின் சுயசரிதையின் முதல் பாகமான Living to tell the taleஐப் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு பேட்டியில் மார்க்வெஸ் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது:

இன்னும் உங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, எங்களைப்பற்றிப் பேசுவது எப்போதென்று இளைய எழுத்தாளர்கள் கேட்கிறார்கள். நான் இளைஞனாக இருந்தபோது என்னைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை, மிகயில் ஏஞ்சல் அஸ்தூரியாஸ் (Miguel Angel Asturias) போன்ற மூத்த தலைமுறையினர்களைக் குறித்தே அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்" என்றிருப்பார். இந்தத் தலைமுறை எழுத்தாளர்களைப்பற்றி எழுதாமல் மார்க்வெஸ் புராணம் ஏன் பாடுகிறாய் என்று சந்தேகமிருப்பின் - மார்க்வெஸ் வாயாலேயே அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறேன்!

தமிழ் மொழிபெயர்ப்புக்களிலும் ஆங்கிலத்திலுமாக மார்க்வெஸ்ஸின் ஏகப்பட்ட கதைகளைப் படித்ததுண்டு - சிலசமயம் ஒரே கதையை இரண்டு மூன்று வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புக்களிலும். Light is like water என்ற கதையின் இரண்டோ மூன்றோ மொழிபெயர்ப்புக்களைப் படித்ததுண்டு; One hundred years of solitudeன் முதல் அத்தியாயம், களங்கமற்ற எரிந்திரா குறுநாவல் உட்பட மார்க்வெஸ்ஸின் கதைகள் ஏராளமானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்த்தது போலவே, முதல் அத்தியாயம், மார்க்வெஸ் அவரது தாயாருடன் தன் பாட்டி காலத்தைய வீட்டை விற்க பூர்வீக ஊரான அரக்கடக்காவுக்குச் (Aracataca) செல்வதுடன் தொடங்குகிறது. எழுத்தாளனுக்கேயுரிய அடையாளங்களுடன் ("உன்னை இவ்வளவு நாள் கழித்து முதலில் பார்த்ததும் ஏதோ பிச்சைக்காரன் என்று நினைத்தேன்" என்பார் அவரது தாய், மார்க்வெஸ்ஸைச் சந்திக்கையில்), பெற்றோர் பேச்சைக் கேட்காமல் கல்லூரிக்குப் போகாமல் எழுத்தாளனாகவேண்டும் என்ற கனவுடன் திரிந்துகொண்டிருக்கும் மார்க்வெஸ்ஸை அவரது தாயார் துணைக்கு அழைக்கிறார். பூர்வீக ஊரைநோக்கிப் பயணம் தொடங்குகிறது. தொடரத் தொடர, அவரது வாழ்வும் கதைகளும் பிணைந்து பயணிக்கையில் கதை வாழ்விலிருந்து வந்ததா அல்லது எழுதப்படாத கதைகள் வாழ்வின் சம்பவங்களைத் தீர்மானித்தனவா என்ற கேள்வி எழுவதென்னவோ நிஜம்.

ஊரை நெருங்கையில் அவர்கள் மேற்கொண்ட ரயில்பயணத்தையும் அவர்கள் ஊரில் ஒரு தனிப் பெண்மணியால் சுட்டு வீழ்த்தப்பட்ட திருடனையும் இணைத்து எழுதப்பட்ட சிறுகதையே தாள்களிலேயே அசதியூட்டும் வெயிலையும் வெறுமையையும் தன் பக்கங்களில் விசிறிச்செல்லும் Tuesday siesta (இது தமிழில் செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது) என்ற சிறுகதை என்று விளங்கிக்கொள்ள அதிக நேரம் ஆவதில்லை. என் மொத்த வாழ்விலும், என் அம்மாவுடன் பூர்வீக ஊருக்குச் செல்வது என்று எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையிலேயே முக்கியமானது என்றிருப்பார் மார்க்வெஸ். எட்டு வயதுக்குப்பின் பலகாலம் பார்த்திராத பூர்வீக ஊர்குறித்த பிம்பங்கள் வருடங்கள் ஓடியதில் கரைந்து சிதைந்து ஏமாற்றத்தையும் தாங்கவொண்ணா துக்கத்தையும் ஏற்படுத்தியது தனது எழுத்துக்களுக்கு ஒரு முக்கியமான உந்துசக்தி என்று பல சமயங்களில் குறிப்பிட்டிருப்பார் மார்க்வெஸ். மக்காந்தோ (Macondo) என்ற அவரது கற்பனையான ஊரும்கூட, இந்தப் பிரயாணத்தின்போது பார்த்த வாழைத்தோப்பு ஒன்றின் பெயரே என்று கூறுகிறார். ஏன் அந்தப் பெயரை வைத்தேன் என்று தெரியவில்லை - அதன் ஒலி வசீகரமாக இருக்கிறது என்றிருப்பார். A short film about love படத்தில் விடலைப்பையன் டோமெக்கை, அவன் நேசிக்கும் வயதுமூத்த பெண், "என்ன தெரியும் உனக்கு" என்பாள்; "மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம், தற்போது பல்கேரிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்பான். "பல்கேரிய மொழியா? ஏன்?" டோமெக் பதிலளிப்பான்: "அனாதை இல்லத்தில் இரண்டு பல்கேரியத் தோழர்கள் இருந்தார்கள்". காரணகாரியங்கள் குறித்துக் கவலையற்ற, தர்க்கச் சுவர்களில் முட்டிக்கொள்ளாத, அவற்றை உண்மையில் சட்டைசெய்யாத, தெள்ளிய பதில்களே இவை இரண்டும் என்று படுகிறது.

சிலசமயம் அவரது pun களை ஊகித்துவிட முடிந்தாலும், அலுப்புத் தட்டவில்லை என்பதே நிஜம். சுயசரிதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்வதும் ஒரு கலை. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் பலகாலமாய் அங்கிருக்கும் மருத்துவர் ஒருவரைச் சந்திக்கிறார்கள். அவர்களைத் தொடும் மருத்துவரின் கை நெருப்புப் போல் சுடுகிறது. "ஒரு வருடமாகக் காய்ச்சலடிக்கிறது" என்பார் மருத்துவர். "மாயாஜாலக் கதைகளைக் கூறும்போது எனது பாட்டி, முகத்தில் எந்த உணர்வையும் மாற்றங்களையும் காண்பிக்காமல், சொல்லும் அதீதமான விஷயங்களை நம்பும்படிக் கதைசொல்வாள் - அதேபோன்ற ஒரு தொனியைத்தான் என் புத்தகங்களில் நான் உபயோகிக்கமுயன்றது" என்று கூறியிருப்பார் மார்க்வெஸ். சிறுவயதில் பார்த்துப் பயந்த மருத்துவருடன் தற்போது வெகு சௌஜன்யமாகப் பழகமுடிவதும், எழுத்தாளனாவது என்ற மார்க்வெஸ்ஸின் முடிவை ஆதரித்துப் பேசும் மருத்துவர், "பாரு, நானும் ஒரு மருத்துவராக இருக்கிறேன், என் நோயாளிகளில் எத்தனை பேர் கடவுள் சித்தத்தால் செத்தார்கள், எத்தனை பேர் நான் கொடுத்த மருந்தால் செத்தார்கள் என்றுகூடத் தெரியாமல்" என்று தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்வதில் தெறிக்கும் நக்கலும் புத்தகம் முழுவதும் தாராளமாகப் பரவியிருக்கும் சுயபகடிக்கொரு உதாரணங்களே.

வீட்டில் குடியிருப்பவர்களிடம் விலைபேசப்போகும் மார்க்வெஸ்ஸின் தாயார், கடைசியில் வெறுங்கையுடன் திரும்பிவரவேண்டியதாயிருக்கிறது. குடியிருப்பவர்கள், இதுவரை பழுதுபார்ப்பதற்கு நாங்கள் செலவழித்ததையெல்லாம் கணக்குப் பார்த்தால் நீங்கள்தான் எங்களுக்குப் பணம்தரவேண்டியதிருக்கும் என்று சொல்லிவிட, தாயாரும் மார்க்வெஸ்ஸும் திரும்பிச் செல்கிறார்கள். வீட்டைத் திரும்பிப் பார்க்கும் மார்க்வெஸ்ஸுக்கு, சிறுவயதில், சொல்கிறவரைப்பொறுத்து வீட்டின் வடிவங்களும் திசைகளும் எப்படியெல்லாம் வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கப்படுகின்றன என்று நினைவுக்கு வருகிறது. சிறு குழந்தையாக இருந்தபோது உள்ளாடையில் ஷிட்டடித்துவிட்டு, மேலாடையைக் கறைப்படுத்திவிடக்கூடாதே என்ற சுயமரியாதைநிறைந்த அழகியல் உணர்ச்சிமிகுப்பில் மிகக் கவனமாக சமாளித்து நின்றுகொண்டு, தன் உள்ளாடையை யாராவது வந்து களையுமாறு கூச்சலிட்ட கணம்தான் ஒரு எழுத்தாளராகத் தான் உணர்ந்த முதல் அனுபவம் என்கிறார்! அவர்களது வீட்டில் வளர்ந்துகொண்டிருந்த, கொள்ளுத்தாத்தா காலத்தைய கிளி ஒன்று (நூறு வயது அதற்கு!) ஸ்பெயின் எதிர்ப்புக் கோஷங்களையும் கொலம்பிய விடுதலைப்போர் பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கும் என்றும், கிட்டப்பார்வை உள்ள அது ஒருநாள் எங்கோ மெதுவாக நகர்ந்துபோகிறேன் பேர்வழி என்று கொதிக்கத் தொடங்கியிருந்த குழம்புச் சட்டிக்குள் விழுந்து தப்பித்து உயிர்பிழைத்தது என்றும் போகிறபோக்கில் எழுதியிருந்ததையும் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன்!

ஊர் போய்ச் சேர்ந்து திரும்புகையில், மெல்லிதாக மார்க்வெஸ்ஸின் தாயார் மற்றும் தந்தையின் காதல் வாழ்வையும், வீட்டை எதிர்த்துக்கொண்டு, சங்கடங்களுக்கிடையிலும் எவ்வளவு தீவிரமாகக் காதலித்தார்கள் என்று முதல் அத்தியாயம் முழுவதும் கூறப்படுகிறது. பலமுறைகள் இதைக் கேட்டிருப்பினும், Love in the time of cholera புதினத்தில் அதைப் புனைவாக எழுதுகையில் மார்க்வெஸ்ஸூக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டிருக்கிறது. "காலரா சமயத்தில் காதல்" ஒரு அற்புதமான புத்தகம் - One hundred years of solitude (ஒரு நூற்றாண்டு காலத் தனிமை) போன்று விரிந்து பரவியிராவிட்டினும், இழந்த காதல் என்ற கருத்து காலங்களை, கலாச்சாரங்களைத் தாண்டிப் பொதுமையானது என்பதாலும், மார்க்வெஸ்ஸின் அற்புதமான உரைநடையாலும் எனக்கு மிக நெருக்கமான புத்தகம். மார்க்வெஸ்ஸின் தந்தை, மருத்துவப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, தந்தி அலுவலராக வேலைபார்த்தவர். அவருக்கும் தனது தாயாருக்கும் ஏற்பட்ட காதலையும், அவரது தாயாருக்கு முதலில் மார்க்வெஸ்ஸின் தந்தை மேலிருந்த வெறுப்பையும், பின்பு அதுவே வலிமையான காதலாக மாறுவதையும், தொடர்ந்து நிகழ்ந்த சிக்கல்களையும், கல்யாணம் செய்துகொண்டதும் குடும்பங்கள் தம்பதியரை ஒதுக்கிவைத்ததும், பின்பு மார்க்வெஸ் என்ற குழந்தை பிறந்ததும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டதுவரை (ரொம்ப பழக்கமானது போல் இல்லை?) விவரிக்கின்றன ஆரம்பகட்ட அத்தியாயங்கள். அமராந்தா, உர்ஸுலா போன்ற மார்க்வெஸ் கதைப் பெண்கள் போலவே மார்க்வெஸ்ஸின் பாட்டிமாரும் தாயாரும் உறுதியான பெண்களாக இருக்கிறார்கள். One hundred years of solitude நாவலின் Mauricio Babilonia அல்லது Love in the time of Cholera வின் Dr.Urbino போன்ற ஒரு ரொமான்டிக் கதாநாயகனாகத் தன் தந்தையை இந்தப் புத்தகத்தில் சித்தரிக்க முயன்றாரா அல்லது அவரைக்கொண்டுதான் நாவல்களின் பாத்திரங்கள் உருவானவையா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

மார்க்வெஸ்ஸின் நாவல்களைப்போலவே இங்கும் உரைநடை நேர்க்கோட்டில் செல்வதில்லை. சிறிது குழந்தைப்பருவம், சிறிது Baranquilla நகரத்தில் இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகள், விவாதங்கள், கற்றுக்கொண்டவைகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட இழைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. தனது குடும்பத்தினரின் வீரப் பிரஸ்தாபங்கள் கூட. தாத்தாவின் பிறந்தநாளுக்கு, யுத்தத்தில் அவர் சென்ற ஊர்களில் பிறப்பித்த பிள்ளைகளெல்லாம் வாழ்த்துச்சொல்ல வருகிறார்கள், தன்னை அவமானப்படுத்திய ஒருவனை அவரது மாமா சுட்டுக்கொல்கிறார். துப்பாக்கிகள் போர்கள் கொலைகள் என்று இருப்பவற்றையெல்லாம் கேலிச்சித்திரங்களாக மாற்றவும், அதேசமயத்தில் அவற்றின் உக்கிரங்களைத் தயவுதாட்சண்யமின்றிக் கூறவும் கூடிய உரைநடை நெகிழ்வு மார்க்வெஸ்ஸுக்கு வாய்த்த வரம். தன்னை அவமானப்படுத்தியவனைச் சுட்டுக்கொல்லக் கிளம்பும் தனது மாமாவை வர்ணிக்கும் மார்க்வெஸ், மிகவும் ஒல்லியானவர், சிறுவர்களின் அளவு ஷூக்கள் அணிந்திருந்தார், சட்டைக்குள் வைத்திருந்த துப்பாக்கி பெரும் பீரங்கி மாதிரித் துருத்திக்கொண்டிருந்தது என்று வர்ணிப்பது புன்னகையையே வரவழைக்கிறது. மார்க்வெஸ்ஸின் பாட்டி ஒருநாள் காலையில் படுக்கையைச் சுத்தம்செய்யும்போது படீரென்று ஒரு போர்வையை இழுக்க, தலையணைக்கடியிலிருந்த தாத்தாவின் ரிவால்வர் இயக்கப்பட்டு முகம்வழியாகக் குண்டு துளைத்து பாட்டி இறந்துபோனதாக இரண்டு மூன்று வரிகளில் முடித்துவிடுகிறார். மரணத்தின் புகழ்பாடி வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் சிந்தனைகளுக்கு மத்தியில், மரணத்திற்கு மரியாதை கொடுப்பது தேவையற்றது என்று போதிக்கும் மார்க்வெஸ்ஸின் மூதாதையர்களின் பிம்பங்களும், No one writes to the Colonel போன்ற புத்தகங்களில் திரும்பத்திரும்பக் குறிப்பிடப்படும் வயதானவர்களின் கால்சராயைத் தாங்கிநிற்கும் suspenderகளும், பிரதேசத்தின் அனலையும் வறுமையிலும் களிப்பென்பதைத் தியாகம்செய்யவிரும்பாத வாழ்க்கையையும் சில கோடுகளில் அற்புதமான ஓவியமாகத் தீட்டிச்செல்கின்றன. எங்களது மூதாதையர் வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு புனிதர் இருந்தார், ஒவ்வொரு அறையிலும் ஒரு சாவாவது நிகழ்ந்திருந்தது என்கிறார் மார்க்வெஸ். தனது பாட்டியின் உலகத்துக்குள் புகுந்து பார்க்கவேண்டுமென்ற தணியாத ஆவலைக் குறிப்பதும், ஒருமுறை மருத்துவர் தாத்தாவை ஏதோ காரணத்துக்காக ஆராயும்போது அவரது தொடையிடுக்கிலிருக்கும் ஒரு தழும்பைப் பார்த்து, போரில் குண்டடிபட்ட இடம் என்று தெரிந்துகொண்டதைச் சொல்வதில் தெறிக்கும் நகைச்சுவையும், தனது தாத்தாவின் உடையலங்காரங்களை விவரிக்கும்போது, suspenderகளில் தொங்கிக்கொண்டிருக்கும் தாத்தாவின் கால்சராய் போலவே No one writes to the Colonel (இது படமாக வந்திருக்கிறது) குறுநாவலின் கர்னல் நமக்குப் படுவதும் - யோசித்துப் பார்க்கும்போது, எந்த விதத்தில் இந்த அனுபவங்கள் நம்மை மார்க்வெஸ்ஸின் உரைநடையுடன் இவ்வளவு நெருக்கமடையச் செய்கின்றதென்று ஆலோசிக்கத் தூண்டுகிறது. பொதுவாக, நான் படித்தவரையிலான லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில், பிற எழுத்தாளர்களான மரியோ வர்கஸ் ல்லோஸா, கார்லோஸ் ஃப்யுண்டஸ், கொர்த்தஸார், ஹோர்ஹே அமேடோ போன்றவர்களின் எழுத்துக்களில் இல்லாத ஒரு மென்மையான நகைச்சுவையும் (உண்மை எனினுமே: டான் குவிஹாத்தே புத்தகத்தைப் படிக்க முயன்று முடியாமல், நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி கழிப்பறையில் அதை வைத்து, தினம் சில பக்கங்களாகப் படித்து முடித்துப் பாண்டித்யம் பெற்றதாகச் சொல்வது!), ஒருவிதமான ஏமாற்றுக்காரத்தனமான பாமரத்தன்மையுமே மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களில் கிடைக்கும் அதீத ஈர்ப்புக்குக் காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது. தான் எழுத்தை ஒரு 'வித்தை' (craft) யாகப் பழகிக்கொண்ட விதத்தைப் பல இடங்களில் மார்க்வெஸ் குறிப்பிட்டிருந்ததைக்கொண்டு, "எழுத்து அப்படியே ஊற்றெடுத்து வருகிறது" என்ற ரீதியிலான தேய்பதங்களைத் (cliche) தாண்டி, சில இடங்களில் predictable puns ஐ எளிதில் நாமுமே அடையாளங்காண முடிந்தாலும், அதையும் தாண்டி அவரது எழுத்துக்களை ரசிக்கமுடிவது மேற்கூறிய காரணங்களாலும், பத்திரிகை எழுத்தனுபவம் தந்த சுவாரஸ்யத்துக்கான வழிமுறைகளைத் தன் புனைவுகளில் திறமையாக உபயோகப்படுத்தியதாலும்தான் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

சின்ன வயதில் மார்க்வெஸ் சொல்லும் பொய்களைக் கேட்ட ஒருவர், "குழந்தைகளின் பொய்கள் மிகத் திறமைவாய்ந்தவை" என்கிறார். பெரியவர்கள் கூடியிருக்கும் இடத்தில் கவனிப்புப் பெற அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளைச் சற்றுப் புனைவு கலந்து சொல்வதிலிருந்து (பின்பு மார்க்வெஸ்ஸைக் கண்டால் அவர்களே ஓட்டம்பிடிப்பது வரை!!) அவரது கதைசொல்லல் அனுபவம் துவங்கியிருக்கிறது. பெரியவர்கள் பேசும் விஷயங்களை, சிறுவர்கள் சுற்றியிருக்கும்போது தெளிவாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சங்கேத முறையிலும் விவாதிக்கப்பட்ம் விஷயங்களை அப்படியே நினைவிலிருத்தி, சம்பவங்களை மற்றும் மாற்றி அடுக்கி அவர்களிடமே திரும்பச் சொல்லி, "அடடே, நாம் நினைத்துக்கொண்டிருந்ததை அப்படியே சொல்லிவிட்டானே" என்று அவர்களை ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருந்ததே அவரது புனைவின் தொடக்கமாக இருந்திருக்கும். நாம் படைக்கும், படிக்கும் புனைவுகளும் அடிப்படையில் அப்படிப்பட்டவையே அல்லவா?

சிறுவனாக இருந்து விடலையாகும் பருவத்தில் பாலியல் உணர்ச்சிகள் மெதுவாக வடிவம்பெறுவதையும் (கழுதைகளுடன், கோழிகளுடன் 'பாவம்செய்யும்' (அவரது வார்த்தைகள்தான், நான் திரிக்கவில்லை) சிலர்பற்றித் தெளிவின்றி ஏதோ யூகித்துவைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்!! பின்பு விவரம் தெரிந்த விடலையானதும், போலீஸ்காரன் ஒருவனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்து, பிறகு அவனிடம் சிக்கிக்கொள்வதை விவரிக்கும் பகுதி, கிட்டத்தட்ட ஒரு சிறுகதையின் வடிவத்துடன், அதே கடும் நகைச்சுவையுடன் இருக்கிறது. முதன்முதலாக ஒரு அகராதியைத் தன் தாத்தாவுடன் சேர்ந்து பார்த்து, பின் அதையே ஒரு புதினம் போலப் படித்ததையும், பள்ளியில் கற்கும்போது முதலில் தடுமாறி, பின் அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக ஒப்பிக்கும், கணக்கு போன்றவற்றில் தடுக்கிவிழும் மாணவனாக இருந்ததையும், Baranaquilla வில் தனது இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புக்களையும், பேச்சுக்களையும் குடித்துத் திரிந்ததையும் குறிப்பிடுகிறார். வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் நடத்திக்கொண்டிருந்த இலக்கியச் சந்திப்புக்கு அடிக்கடி வந்துபோன திருடன் ஒருவன் குறித்த சில குறிப்புக்கள் சுவாரஸ்யமானவை: காதல் கவிதைகளில் மிகுந்த நாட்டமுள்ள அந்தத் திருடன், திருட்டுக்குத் தேவையான ஆயத்தங்களுடன் (இறுக்கிப் பிடிக்கும் கால்சராய்கள், டென்னிஸ் ஷூக்கள், பேஸ்பால் தொப்பி, குறைந்த எடையுள்ள உபகரணங்கள்) வந்து ஒரு வார்த்தை விடாமல் விவாதங்களைக் கேட்டுவிட்டு, நள்ளிரவுக்குப்பின் தொழிலுக்குப் போய், திரும்பி வரும்போது வேட்டையில் சிலவற்றை அவர்களுக்குப் பரிசாக அளித்துப்போவான், "உங்கள் காதலிகளுக்குக் கொடுத்துவிடுங்கள்" என்று!

வீட்டில் இல்லாமல் தனது அப்பா தேசாந்திரியாகத் திரிந்தபோதெல்லாம் வறுமையில் பட்ட கஷ்டங்களை, தன் தாய் கௌரவங்குறையாமல் குடும்பத்தை நடத்தியதை - படிக்க நேர்கையில், தன் தாயை 'lioness' என்று வர்ணிக்கையில், கஷ்டங்களைப் படிக்கமுடிந்தாலும், நாம் வாழும் பிரதேசங்கள் அதைவிட எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல என்பதால், வறுமையை அறிந்திராத ஒரு மேற்கத்திய வாசகனுக்கு உண்டாகும் பச்சாதாபம் நமக்கு ஏற்படுவது சிரமமே. பெண் சிங்கம் என்பது தற்காலத் தமிழ்ப் புனைவில் உபயோகப்படுத்தப்பட்டாலே மிகவும் நெருடலாக இருக்கும். அரசியல் கட்சி மேடைகளில், சினிமாக்களில், ஜாதிக்கூட்டங்களில் ஏகப்பட்ட சிங்கங்கள் கர்ஜிப்பதைப் பலகாலமாகப் பார்த்துவிட்டதால் ஒருவேளை இருக்கலாம். ஒருவிதத்தில், மேற்கத்திய சமுதாயங்களைவிட நமது சமுதாயத்தில் மிருகங்களுடனான நெருக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. செல்லப்பிராணிகளை விட்டுவிட்டாலும், நியூயார்க்கின் தெருக்களில் அலையும் ஒரு புலியைவிட தமிழ்நாட்டுத் தெருக்களில் அலையும் ஒரு புலியை வெகு எளிதில் கற்பனை செய்துவிடமுடியுமென்றுதான் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பேசத்தெரியாததை ஒரு குறையாகத்தான் சொல்கிறார் மார்க்வெஸ். ஒருமுறை போர்ஹேஸ் கூட "I wish English was my birthright" என்றிருப்பார். தாஸ்தாயெவ்ஸ்கியின் The double புத்தகத்தைத் திருடநினைத்து, விட்டுவிட்டு, வேறெங்கோ ஒரு தருணத்தில் எதிர்பாராத ஒருவனிடமிருந்து பெற்றதைக் குறிப்பிடுகிறார். தாஸ்தாயெவ்ஸ்கியைத் திருடமுயலாத எழுத்தாளர்களே, வாசகர்களே இருக்கமுடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புதினமான In Evil Hour பிரசுரமான கதையே கிட்டத்தட்ட அவரது மற்றொரு புனைகதை போல இருக்கிறது. அவ்வப்போது கிறுக்கி முடித்து தாள்களைச் சுருட்டி, பழைய டை ஒன்றைக்கொண்டு அதைச் சுற்றி முடிச்சுப் போட்டு மூலையில் போட்டபிறகு, ஒரு புதினப் போட்டிக்கு அவரது நண்பன் ஒருவன் அதேபோல் அனுப்பி வைக்க, முதல் பரிசு பெறுகிறது அந்தக் கையெழுத்துப் பிரதி. அதற்குத் தலைப்பு இல்லாததால், தலைப்பொன்றைச் சொல்லுமாறு போட்டியை நடத்தும் குழுத்தலைவரான பாதிரியார் மார்க்வெஸ்ஸைக் கேட்டுக்கொள்ள, மார்க்வெஸ், "Shit-eating town" என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பாதிரியாரை மூச்சடைக்க வைக்கிறார்! இறுதியில், கருணை காட்டி, 'In Evil Hour' என்று பெயர் மாற்றி, condom, masturbation ஆகிய இரண்டு ஆட்சேபகரமான வார்த்தைகளில் ஒன்றை நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்போது, ஒன்றை வேண்டுமானால் நீக்கலாம் என்று ஒப்புக்கொண்டு, masturbation என்ற வார்த்தை மட்டும் நீக்கப்படுகிறது. இத்தனையும் நடந்து முடிந்தபின், பிரசுரமான புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் டப்பிங் செய்த சீனப் படம் போல, கொலம்பிய பூர்வீக குடிகள் பேச்சுவழக்கில் எழுதப்பட்ட அனைத்தும் மாட்ரிட்(Madrid) பேச்சுவழக்குக்கு மாற்றப்பட்டு ஏகத்துக்குக் குதறப்பட்டிருந்ததால், அந்தப் பதிப்பு தன்னுடையதில்லை என்று தீர்மானித்துவிட்டு, அதன் அசல் வடிவம் பின்பு மெக்ஸிகோவில் வேறொரு பதிப்பாக வெளியிடப்பட்டதென்று கூறுகிறார். தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் அரைவேக்காட்டு பதிப்பாளர்கள் தொல்லை எந்த ஊருக்குப் போனாலும் ஒன்றுதான் போல! ஊரிலிருந்து பொகோட்டாவிற்குப் புறப்படும்போது விமான ஓடுதளத்தில் சுற்றிக்கொண்டிருந்த பசுமாடுகளை விலக்கும்வரை விமானம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமானப் பயணம் மீதான பயம் இப்போதுவரை தொடர்வதாகவும் கூறுகிறார்.

எது புனைவு, எது மிகைப்படுத்தல், எது யதார்த்தம் எது உண்மை எது பொய் என்பவற்றுக்கு இடையிலான இடைவெளிகளைக் கரைத்துக் காணாமற்போகச்செய்யும் உரைநடை வழி, பத்திரிகையியலை ஒரு இலக்கிய வடிவமாக மார்க்வெஸ் பார்க்கமுயல்வது மிக முக்கியமான ஒரு கூற்று. கொலம்பிய பாப் பாடகி ஷக்கீரா வேறொரு இடத்தில் "மார்க்வெஸ்ஸுக்கு மரணமே கிடையாது" என்றிருப்பாள்: ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பும் அவளது லத்தீனோ உச்சரிப்புக்காகவே Whenever, wherever பாடலைக் கணக்கற்ற முறை கேட்டிருக்கிறேன். ஒருநாள் எங்கோ போய்க்கொண்டிருந்தபோது FMல் அவளது சின்னப் பேட்டியைக் கேட்டேன். எப்படி இருக்கிறாய் ஷக்கீரா என்றதற்கு, "Oh, well, I'm doing OK"; மறுபடி "எப்படியிருக்கிறது வாழ்க்கை" என்றதற்கு "It's OK, it's going on" என்ற ரீதியில் பதில்கூறினாள் - காரணம்தெரியாமல் அந்த பதில் பிடித்துப்போனது (அடுத்த ஆல்பம் வராததால் ஏற்பட்ட சோர்வு என்று சொல்லி மூடு அவுட் செய்துவிடாதீர்கள்! அதுவே உண்மையாயிருப்பினும் நான் நம்பத் தயாராயில்லை!!). பொதுவாகப் பாப் பாடக/பாடகிகளின் பேட்டிகளில் கணக்கற்று வழியும் தயாரிக்கப்பட்ட பதில்கள் - "Oh, I'm doing great, I'm really excited about this project, it's the best so far in my career, I'm having the best time of my life, blah blah blah..." ப்ளா ப்ளா என்ற ரீதியில் இல்லாமல், அப்போதைய கணத்தின் அப்போதைய உயிர்ப்புடன் சொன்ன மாதிரியான பதில் என்பதில். நான் படித்துள்ளவரையிலான பிற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் எழுத்துக்களில் அபூர்வமாகவே கிடைக்கும் இதுபோன்ற தருணங்களும் தொனியும் மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களில் கணக்கற்றுப் பரவிக்கிடப்பதே ஒருவகையில் மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களையும், அவரே விரும்புகிறாரோ இல்லையோ, முத்திரை குத்தப்பட்ட 'மாயா யதார்த்தவாதம்' (Magical realism) என்ற வகையையும் (genre) மிக வசீகரமாக ஆக்குகிறதென்று நினைக்கிறேன். சுவாரஸ்யமான புத்தகம் - வாய்ப்புக் கிடைப்பின் படித்துப் பார்க்கவும். மூன்று பாகங்களாக வரப்போகும் புத்தகத்தின் முதல் பாகம் இது. புத்தகத்தின் பிந்தைய அத்தியாயங்களைப்பற்றி பின்பொருமுறை நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் - ஒருவேளை இதையே மறுபடித் திருத்தி, சேர்த்து எழுதியும் பதியலாம்....

படங்கள் நன்றி: Amazon, Modernword

Saturday, February 05, 2005

பழி

பழி
-மாண்ட்ரீஸர்

நூற்றொரு வருடங்களுக்குமுன்
புகைப்படம் வேண்டாமென்றேன்
நாலுகால் சிலந்தியென்றால் பயமென்றேன்
கொளுத்தும் வெயில் வெளிச்சக் குடைகள் கத்திரிப்பூ திரைப்பின்னணிகளில்
காமெராவுக்குள் காணாமற்போனேன்.
என்முன் அமர்ந்து புன்னகைக்கும்
அவர்களை முறைக்கும் கண்ணின் ஜன்னலைத் திறந்து
வீசி அசைகிறது என் கை.
முகத்தருகில் உறுமும் பல்சக்கரங்களில் அரைபடாமல்
கைகட்டி நிற்கும்
என்முன் வந்துநிற்கும் ஒப்பனைகளின் ஒத்திகைகளின்
உடல்களின் உடைகளின் உறவுகளின்
பதிவுகள் ஒவ்வொன்றையும் ஒளிர்விப்பது
திறந்த ஜன்னல்வழி நான் துப்பும்
எச்சில் என்பதை எவரறிவார்.