Wednesday, January 26, 2005

மற்றொரு நீண்ட இரவு...


படம் நன்றி: யாஹூ

இரவில் மறுபடி ஏதும் எழுதவேண்டாமென்று பார்த்தேன் - ஆனால் சோமபானம் கொஞ்சம் அதிகமாகிப் போய்விட்டதால் (அப்ஸொல்யுட் சிட்ரோன் வோட்கா ;-)), பட்டென்று நினைவில் தோன்றிய ஒரு படத்தைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன். சினிமா பொன்னையா வலைப்பதிவு மாதிரி வரவர ஆகிக்கொண்டிருக்கிறது இது!! சமையல் குறிப்பு ஒன்றுதான் இதில் எழுதியதில்லை என்று தோன்றுவதால், அதையும் கடைசியில் எழுதிவைக்கிறேன். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் செரீனா இரண்டாவது செட்டில் நமது ஃபேவரிட் ஷரப்போவாவின் தலைமேல் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமல் டிவி அருகில் நின்றுகொண்டு செரீனா பந்தை அடிக்க ஓடிவரும்போதெல்லாம் அவளைத் தள்ளிவிட முயன்றுகொண்டிருந்த என் புனிதமான முயற்சியை என் அறைத்தோழன் வன்மையாகக் கண்டித்ததால் அறைக்குள் வரவேண்டியதாகிவிட்டது. தற்போதைக்கு ஒலியை மட்டும் கேட்டுக்கொண்டு, deuce விழுந்தால் மட்டும் ஓடிப்போய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா என்றதால்...

பலகாலம் முன்பு சென்னையில் படித்துக்கொண்டுருந்தபோது The Shout என்ற ஒரு படம் பார்த்தேன். அப்போது அதை ஒரு ஆஸ்திரேலியப் படம் என்று நினைத்திருந்தேன், இப்போது IMDB யில் தேடியபோது இங்கிலாந்துப் படம் என்று தெரியவந்தது. கல்லூரி விடுதியில் டிவி அறையைக் காவல்காத்துக்கொண்டிருந்த நாட்களில் ஸ்டார் மூவீஸில் பார்த்த படம். நான், இப்போது ஸ்டாஃபோர்ட்ஷையரில் இருக்கும் எனது நண்பன்...

இரண்டாவது சுற்றில் ஸ்கோர் 4:4 (முதல் சுற்று ஷரப்போவாவுக்கு..)

...இரண்டே பேர்தான் பார்த்தோம் என்று நினைவு. நினைவிலிருப்பதை எழுதுகிறேன். ஒதுக்குப்புறமான ஒரு சிறு கிராமத்தில் தனியான வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி - ஒருநாள் தேவாலயத்துக்குப் போய்வரும் வழியில் தேவாலயத்துக்கு வெளியில் குறுகிக் கிடக்கும் பிச்சைக்காரன் போன்ற ஒரு ஆசாமியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்; சாதாரணமான ஆசாமியாக இல்லாமல், அவனிலுள்ள ஏதோவொரு வசீகரம், மனைவியை அவனைநோக்கி இழுக்கிறது, கணவனாலும் ஏதும் செய்ய முடிவதில்லை - அந்த நாடோடி ஒருமுறை கணவனை அழைத்துக்கொண்டு ஆளரவமற்ற தன்னந்தனியான ஒதுக்குப்புறமொன்றுக்குச் சென்று, தனது பிரத்யேக சக்தியைக் காட்டுகிறான். "காதுகளை இறுக மூடிக்கொள்" என்று கணவனை எச்சரித்துவிட்டு, முழுதாகத் தன் முதுகை வளைத்துப் பின்னால் சாய்ந்து...

deuce.....

deuce....

5:4 (ஷரப்போவா...)

ஓ.................................................................. என்று நீளமாக ஒரு கூச்சலை வெளிப்படுத்துகிறான் நாடோடி. காதைப் பொத்தியும் கணவனின் செவிப்பறைகள் கிழிந்துபோவதுபோல் அப்படியொரு அசுர ஒலி... சற்றுத்தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் செம்மறியாடுகளும், ஆட்டிடையனும் சடுதியில் உயிரை விடுகின்றனர். ஓலத்தின் அழுத்தத்தைத் தாங்காத கணவன், சப்தநாடியும் நொறுங்கிப்போக, மயங்கி வீழ்கிறான்.

5:5 (செரீனா...Grrrrrrrrrrrrrrrrr)

6:5 (செரீனா... :-( .............)

வீடு முழுவதும் கடைசியில் அந்த நாடோடி கைப்பிடிக்குள் வந்து சேர்கிறது. மனைவியைத் தன் வசியத்துக்குள் வைத்திருக்கும் அவனைக் கணவனால் ஏதும் செய்யமுடிவதில்லை, விடுவிக்க முயன்றுகொண்டாலும் மனைவியால்...

காலி...செரீனாவுக்கு இரண்டாம் செட்! :(

விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இறுதியில், எங்கோ மணலுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு கல்லுக்குள் அந்த நாடோடியின் ஆன்மா புதைந்திருக்கிறதென்று தெரிந்துகொண்டு, கணவன் அந்தக் கல்லைக் கண்டுபிடித்து இரண்டாகப் பிளக்கிறான், நாடோடி சாகிறான்.

சுவாரஸ்யம் என்னவெனில், இந்த விமர்சனத்தில் ஈபர்ட் சலித்துக்கொள்வதுபோல (அமெரிக்கர்களுக்கு எங்கே தெரியும் கிரிக்கெட்டின் மகிமை!!), இந்தப் படம் தொடங்குவது ஒரு கிரிக்கெட் விளையாட்டுடன். ஸ்கோர்கீப்பராக இருக்கும் ஆசாமிதான் கதையைச் சொல்கிறான்; இறுதியிலும் படம் கிரிக்கெட் மைதானத்திலேதான் முடிகிறது. இன்னும் படம்பார்க்கும் ஏதாவது ஆர்வம் மிச்சமிருக்கக்கூடுமென்று யோசிப்பதால், முடிவைச் (பெரிய பிரமாதமில்லை அது) சொல்லாமல் விடுகிறேன்.

பெரிய படம் என்று இல்லை - பெரும்பாலும் இதை யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை; பார்க்கவேண்டிய படம் என்றும் சொல்லமாட்டேன் - ஆனால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது; சொல்லவேண்டுமென்று தோன்றியது. இப்போது மறுபடிப் பார்த்தால் பிடிக்குமா என்றும் தெரியவில்லை. சொல்வதைச் சொல்லிவைப்போமென்று சொல்லிவிடுவோம்....

மூன்றாவது செட்டைப் பார்க்கப் போகிறேன். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது; ஷரப்போவா தோற்றால் இந்தப் பதிவு எரிந்து சாம்பலாகக் கடவது:

அவசரமான இன்றைய சமையல் குறிப்பு (தண்ணியில இருந்தாலும் நாட்டாமைக்கு வாக்கு சுத்தம்ல.....)
எலும்பில்லா chicken வாங்கி சுமாராகப் பெரிதான துண்டுகளாக வெட்டிக்கொள்க...கிட்டத்தட்ட 2 இஞ்ச் துண்டுகளாக. ஆலிவ் எண்ணெய் ஊற்றி அடுப்பைத் திருகவும். எண்ணெய் கொதிக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி, சிலபல பூண்டுகளையும் துண்டுதுண்டாக நறுக்கி உள்ளே போட்டு வறுக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் பாவப்பட்ட கோழியை உள்ளே போடவும். அதன்மேல் Oregano leaves மற்றும் சில தூவல்கள் Chicken seasoning ஐ எறிந்து, பொன்னிறமாக வரும்வரை திருப்பித் திருப்பி வறுக்கவும். மறுபடிப் பொடிகளைத் தூவவும். பிறகு, திரும்ப மற்றொரு வெங்காயம் நறுக்கிப் போடவும். சிவப்பு ஒயின் இருப்பின் வாணலிக்குள் ஊற்றவும். மறுபடி வெங்காயத்தை நறுக்கிப் போடவும். வதக்கிக்கொண்டே இருக்கவும். போரடிக்கும்போதெல்லாம் சிறிது தண்ணீரைத் தெளித்துத் தெளித்து வதக்கவும். உப்பையும் எறியுங்கள் உள்ளே. (இதற்குள் சற்று சாதத்தையும் வடித்து வையுங்கள்). ஒரு ரகமாக சிவப்பு நிறத்தில் சிக்கனும் ஒயினும் கலந்து மின்னும்போது சாதத்தை உலர்த்தி உள்ளே போட்டு வதக்கவும். மறுபடி போரடிக்கும்போது நிப்பாட்டி விடவும். ஸ்ட்ரெயிட்டாக வோட்கா அல்லது டெக்கீலா அடிக்கும்போது சுவையான உணவு!! Chicken-wine fried rice என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்!! (நமது சமையல் போரடித்துவிட்டதால் ஒருவிதமான mixed தாக்குதல் இது...பிழையிருப்பின் பொறுத்தருள்க).

பாவி நண்பன் தூங்கப்போவதால் டிவியின் தொண்டையில் சதுராஸ்திரம் எய்து ம்யூட் ஆக்கிவிட்டான். போஸ்ட் செய்துவிட்டு போய் மீதி விளையாட்டைப் பார்க்கிறேன். நன்றி வணக்கம்!! மோனிகா செலஸின் முரட்டுக் கத்தலுக்கு ஷரப்போவாவின் கத்தல் எவ்வளவோ பரவாயில்லை, இப்போது அதையும் கேட்கமுடியாது முழு வால்யூமில் :(

3:3....

10 comments:

இளங்கோ-டிசே said...

Thaz 2 sad. Your and my favourite Sharapova lost in the semi-final.

arulselvan said...

இதெல்லாம் ஜுஜுபி. நம்ம ஹாலிவுட்காரங்க வெர்ஷன் பாத்தா டெக்கீலாவாவது, ஒப்சொலூட் ஆவது. வயத்தப் பிரட்டிடும். Down and Out in Beverly Hills. நம்ப கோலிவுட்டே கொஞ்சம் கவுரவமா காப்பிஅடிப்பாங்க. லிட்டில் ரிச்சர்டை காண்பித்ததற்காக மட்டுமே மன்னிக்கலாம்.

ROSAVASANTH said...

ஆஹா, டெக்கீலா ஜப்பானில்தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ரிசிப்பீக்கும், படவிமர்சனத்துக்கும் நன்றி. அது என்ன Oregano leaves? சுமாராய் எங்கே கிடைக்கும்?

சங்கரய்யா said...

"டக்கீலா" பற்றி இன்னும் அதிகமான தகவல் இருந்தால் சொல்லவும், அப்படி ஒன்னு இருப்பது திரைப்படத்தில் பார்த்து தான் தெரியும்

ROSAVASANTH said...

டோக்கியோவில் நீங்கள் இப்போது இருந்தால் உங்களை என்னோடு டெக்கீலா சாப்பிட அழைத்திருபேன். (சுவைத்து உணர்வதைவிட இதையெல்லாம் வேறு எப்படி விளக்கமுடியும்?)

சன்னாசி said...

பதித்த அனைவருக்கும் நன்றி: டிஜே; சோகம்தான். அமெரிக்க வீரர்கள் வெறுமனே power game கொண்டுவந்து டென்னிஸை போரடிக்கச் செய்துவிட்டதுபோல்தான் படுகிறது. ஒரு விளையாட்டில் இருபது முப்பது ஏஸ்கள் அடித்தால் கொஞ்சம் அலுப்புத்தான் (நேற்றையதைச் சொல்லவில்லை, பொதுவாக)

அருள்: scratch scratch :-? Down and Out in Beverly Hillsக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? புரியவில்லையே....

சங்கரய்யா: http://www.loscabosguide.com/tequila/tequila-history.htm (ஏதோ நம்மாலானது ;))

ரோஸாவசந்த்: Oregano leaves சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். Mediterranean என்று ஏதாவது பிரிவு இருந்தால், அதில் இருக்கும் - இந்த wine-chicken fry எப்போதொ ஃபுட் சானலிலும், நண்பன் ஒருவனிடமும் தெரிந்துகொண்டது...அழைப்பிற்கு நன்றி! //(சுவைத்து உணர்வதைவிட இதையெல்லாம் வேறு எப்படி விளக்கமுடியும்?)// அது சரி - இதைவிட உண்மை வேறு என்ன இருக்கிறது!!

ROSAVASANTH said...

ஒரு சின்ன சந்தேகம். ரெசிப்பியில் சிவப்பு வொயின் என்று சொல்வது சமயலுக்கான பிரத்யேக வொயினைத்தானே!(இதுவரை அதை பயன்படுத்தியதில்லை.) அல்லது நாம் சோமபானமாய் அருந்தும் வொயினையும் ஊற்றலாமா?

சன்னாசி said...

ரோஸாவசந்த்: நான் ஊற்றுவது நாம் குடிக்கும் ஒயினைத்தான். நன்றாகத்தான் இருக்கிறது. எண்ணெயுடன் அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் (சுவையான) கசடை deglaze செய்வதற்குத்தான் அது என்று நினைக்கிறேன். வெறும் தண்ணீர் அல்லது வினிகர் போன்றவற்றைக்கூட ஒயினுக்குப் பதிலாக ஊற்றலாம்...

ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி. ஆனால் எனக்கென்னவோ(நீங்கள் எங்கேயாவது ரெசிபி பார்த்து இந்த சமயலை மேற்கொண்டிருந்தால்) சமயலுக்கான் 'பிரத்யேக வொயினை' பயன்படுத்த வேண்டும் என்று தொன்றுகிறது. அதை பார்த்திருக்கிறேன். பயன்படுத்தியதில்லை. (ஆனால் அதை ஒரு முறை வாயில் விட்டேன், சகிக்கவில்லை)

நம்ம வொயினை விட்டாகூட குடிகெட்டு போய்விடாது, நீங்க சொல்றமாதிரி நல்லாவே இருக்கலாம்.

சன்னாசி said...

குழம்பு மாதிரி சொதசொதவென்று ஆகிவிடாமல், கிட்டத்தட்ட saute பதத்தில் இருப்பின் நலம். வெங்காயமே போடாமல் சாதத்தையே சேர்க்காமல் வெறும் சிக்கனை இதேபோல வறுத்து உபபண்டமாகவும் (அதான் சைடு டிஷ்!) கொள்ளலாம்! நன்றாக வரவில்லை என்றால் நான் ஜவாப்தாரி அல்ல ;).