Monday, January 17, 2005

ஆந்தை வாழ்வு!!

இந்தக் கதையின் விஷமத்தனமான சில பகுதிகளை இப்போதே நசுக்கித் தேய்க்காவிட்டால் வருங்காலங்களில், "தமிழில் முதலில் எழுதப்பட்ட அறிவியல் கதையான 'தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு' ஐப் பின்பற்றியே அனைத்துக் கதைகளும் மெட்டாஃபிக்-ஷன்களும் எழுதப்பட்டன" என்ற கூப்பாட்டைக் கேட்கும் துர்ப்பாக்கியத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்பதால் இதைப் பட்டபடி எழுதுகிறேன்: அறிவியல் புனைகதை என்பதில் அரசியலைக் கொண்டுவந்து, ஜே ஜே சில குறிப்புக்களை ஒரு condom மாதிரி உபயோகித்துத் (பெரியோர் மன்னிக்க...) தன்னை உருவியெடுத்துக்கொள்ளும் வாக்கியமான //தமிழைப் பொறுத்தவரை நாவல் வடிவின் சிதறலை நிகழ்த்த ஆரம்பித்த படைப்பு சுந்தர ராமசாமியின் 'ஜெ ஜெ சில குறிப்புகள்' அவ்வுடைசல்களை வைத்து காப்பியங்களின் வடிவை உருவாக்கிய ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' (1997) உண்மையில் அத்துண்டுகளை அதிகமான அகலத்துக்கு விசிறுவதன்மூலம் அவ்வுடைவை மேலும் அதிகமாக்கியது.// என்றும், அதைத் தொடரும் பத்திகளிலும், சில எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு, "நீ உக்காரு மச்சி அங்க, உனக்கு இடமில்லை இங்க" என்று ostraciஸித்து, பின் நவீனத்துவம் தமிழில் உருவாகவில்லை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டு....

இத்தனையையும் நிராகரிக்க, 'இது கதை' என்ற சாத்தியப்பாட்டைக் கேடயமாக வைப்பதாலேதான் இந்தக் கதைமீது அளவுகடந்த வெறுப்பும், அதன் அருவருப்புத்தரும் நேர்மையின்மையும் குமட்டவைக்கிறது.

சிறுகதைக்கு முன்னுரை எல்லாம் எழுதக்கூடாது என்று ஜெயமோகனுக்கு யாரும் சொல்லவில்லையோ என்னவோ! ஒருவேளை அதுவே ஒரு புரட்சிகரமான புதுக்கண்டுபிடிப்போ என்னவோ!! பின்நவீனத்துவம்! ஹிஹி!! மரத்தடியில் ஒருமுறை சுந்தர ராமசாமியைப்பற்றிக் குறிப்பிடும்போது "அவரது படைப்புக்களில் வார்த்தைகள்கூட சல்லடையில் ஏழுமுறை சலிக்கப்பட்டே பிறகு வெளிவரும்; அது நவீனத்துவம்" என்று கூறியிருந்தார் ஜெயமோகன். படிக்கக் காமெடியாகத்தான் இருந்தது. "சு.ரா சல்லடை ஏழு மைக்ரான் துளைகொண்டது, அது நவீனத்துவம், என் சல்லடை அதைவிடச் சிறிய துளைகள் கொண்டது, அது பின்நவீனத்துவம்" என்ற ரீதியில் கத்திகளைச் சுழற்றுவதை வாசகர்கள் சொன்னால், ரோஸாவசந்த் எங்கோ எழுதியது மாதிரி, ஒரு comprehensive நிராகரிப்பு காப்ஸ்யூல்தான் கிடைக்கும். இருந்தும், கதையின் பின்பகுதியில், அறிவியல் முன்னேற்றத்தின் அசாதாரண சாத்தியங்களுக்கு அப்புறமும், கல்லுக்குள் தேரை போல 'என் சரித்திர'மும், 'பின்தொடரும் நிழலின் குர'லும் அப்படியே படிக்கப்படுகின்றன!!!?!????!?!?!?!??!?!?!??!??? காலத்தால் அழியாத படைப்புக்களா என்ன? இருந்தால் நல்லதுதான்.

"கூகிள் தான் போதிமரம்" என்று ஏதோ ஒரு பதிலில் குறித்து ஜெயமோகன் திண்ணையில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது. இந்தக் கதை முழுதும் ஒரு பதட்டத் தொனி வியாபித்து நிற்பதாகத் தோன்றுவதற்கும் முந்தைய வாக்கியத்துக்கும் ஏதோ தொடர்புள்ளதாகத் தோன்றுவது நிஜமா என் கற்பனையா?

கதைக்குள் தன்னையே எழுத்தாளன் எழுதிக்கொள்வது என்னும் உத்தி, பழங்காலத்திலிருந்து (1001 அரேபிய இரவுகள்), சமீபகாலத்தில் போர்ஹேஸால் மிக அற்புதமாக உபயோகிக்கப்பட்டதிலிருந்து (அவரது Borges and I என்னும் இந்த அற்புதமான கட்டுரை/கதை/சிறுகுறிப்பை வாசித்துப்பாருங்கள்), லோலித்தா நாவலின் கற்பனையான முன்னுரையிலிருந்து, சமீபத்திய Adaptation படத்தில் சார்லீ காஃப்மேன் போன்ற திரைக்கதாசிரியர்கள் திரைக்கதைக்குள் தங்களையே எழுதிக்கொண்டது வரை பலவிதமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (நிருபமா சேகர் என்ற சென்னைப் பெண் கூட 'I, unfortunately, am Borges' என்ற கட்டுரையை எழுதிப் பரிசு பெற்றிருக்கிறாள்.) நகுலனின் கதைகளின் நவீனன், சுசீலா கூட நகுலனின் பிளவு என்றே நினைத்துவந்திருக்கிறேன். இப்படி இருக்க, இவை அனைத்தையும் படிக்கும்போது கதைக்குள் தன்னை எழுதிக்கொள்ளும் எழுத்தாளர்கள் மேலான மரியாதையும் நம்பகத்தன்மையும் இந்தக் கதையைப் படிக்கும்போதும், //இருபத்தொன்றாம் நூற்றாண்டு புகழ்பெற்ற புனைகதையாளரான ஜெயமோகனின் என்ற பெயரை நான் சூட்டிக்கொண்டிருக்கிறேன். இக்கட்டுரையயும் அவரது மொழிநடையிலேயே அமைத்திருக்கிறேன்// என்ற வாக்கியத்தைப் படிக்கும்போதும் வராமற்போனது முதல் பகுதியின் அரசியலால் இருக்கலாம், அல்லது, அ-புனைவுக் கட்டமைப்பு கொண்ட கதை என்ற வடிவத்தை வெகு தட்டையாக உபயோகித்ததால் வந்த ஏமாற்றத்தினால் இருக்கலாம்.

//நண்பர்களே அக்கால திறனாய்வாளர்கள் சொல்லிவந்த 'ஆழம்' என்பது என்ன? ஒரு படைப்பு அது சொல்லியவற்றைவிட அதிகமாக ஊகிக்க வைக்கும்போது அது ஆழமானது என்று சொல்லப்பட்டது.//
இந்த வாக்கியத்தை, இரண்டு பக்கமும் சுருக்கைக் கொண்ட ஒரு கயிற்றுடன் ஒப்பிடலாம். இரண்டு சுருக்குகளுக்கும் இரண்டு தலைகள் இருந்தால் எவ்வளவு விபரீதமோ அவ்வளவு விபரீதமாகப் படுகிறது இந்த வாக்கியம். "சொல்லியவற்றைவிட" என்பதை, ஒரு quantifiable விஷயமாகப் பார்த்து "அதிகமாக" என்பதைக்கொண்டு ஆழத்தை அளக்கிறோமா என்று கேள்வி எழுப்பமுடியும் - இந்த வாக்கியம் ஒரு machine for interpretations ஆக இயங்கினால், இந்த வாக்கியத்தின் உண்மையாக இருக்கும். ஆனால், 'எந்தவொரு டுபாகூர் வாக்கியமுமோ படைப்போ இலக்கியம் ஆகிவிடமுடியாது' என்று நிரூபிப்பதற்கு கட்டுரையாசிரியர் (ஹிஹி) ரொம்பக் கஷ்டப்படுவதால் (//ஆனால், அவர்கள் சொல்வது போல இலக்கிய வடிவம் முற்றிலும் அகவயமானதா என்ன? அப்படி என்றால் எந்த ஒரு படைப்பிலும் ஒரு வாசகன் பேரிலக்கியத்தை வாசிக்க முடியுமே. அது இலக்கியம் என்ற இயக்கத்தையே மறுப்பதாகிவிடுமே. அது உண்மை இல்லை. இன்றைய நவீனப் படைப்புகளில் பேரிலக்கியமாகக்.....// என்று தொடரும் பத்தி), இந்த வாக்கியத்தையும், கதையிலுள்ள பிற வாக்கியங்களையும், கதாசிரியர் (அல்லது I within X, X within I என்ற இந்தக் கட்டுரையாளர்) எழுதிய வாக்கியங்களையுமே சற்றுச் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே அணுகலாம். ஏனென்றால், இந்தக் கதைக்குள் இருக்கும்வரை அது முக்கியமான வாக்கியமாகவே இருந்தாகவேண்டும் அல்லவா?

//2065ல் 'விஷ்ணுபுரம்' நாவலை ஆர்.ஜீவரத்தினம் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்து அதிநாவல்வடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெரிய நாவல்கள் அனைத்துமே அப்படி உருவமாற்றம் பெற்றன. ஏறத்தாழ எல்லாச் சொற்களிலும் சுட்டிகளுடன் பல்லாயிரம் அடுக்குகள் திறந்துசெல்லும் மாபெரும் அதிநாவலான 'சின்னவெங்கடேசன்' எழுதிய 'பாய்விரிக் கடல்' (2072) அதிநாவல் என்ற வடிவின் உச்ச நிறைவுப்புள்ளி.//

html இணைப்புக்கள்தானா சொல்லமுயல்வது? இதற்குக் கதை எழுதவேண்டாம் என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் பக்கங்கள் gibberish எழுதித்தள்ளி, அனைத்து வார்த்தைகளுக்கும் தானாகவே சுட்டிகொடுக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கிவிட்டால் போதுமென்று நினைக்கிறேன். கணிப்பொறி வல்லுனர்கள் கருத்துச் சொல்லலாம் :). FYI, html கருத்தாக்கத்தை Garden of forking paths போன்ற கதைகள் முன்பே கணித்ததாகக் கூறப்படுகின்றன. அந்தக் கதையில், ஒரு சுழற்பாதையும் புத்தகமும் ஒன்றே என்று வரும்படியான ஒரு புதிர் இருக்கும். மேலோட்ட்டமாக ஒரு சாதாரணக் கதை என்று தோன்றி ஏமாற்றக்கூடிய இந்தக் கதையை சந்தர்ப்பம் வாய்ப்பின் படித்துப் பார்க்கவும்.

//....1982ல் லெஸ்லி ஃபீட்லர் என்பவரால் பின்நவீனத்துவக் கோட்பாடாக முன்வைக்கப்பட்ட அவதானிப்பின் மறுவடிவமே. அதாவது, எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. இனிமேல் கதைகளை மீண்டும் சொல்வதுமட்டுமே சாத்தியம் என்ற விதி. மின்கதை உண்மையில் கதை சொல்வதில்லை. சொல்லப்பட்ட கதைகளின் பேரடுக்கில் இருந்து துணுக்குகளை எடுத்து கதைகளைப் புதிது புதிதாகக் கோர்க்கிறது. கதைக்கூறுகளின் இணைவுகளினாலான ஆட்டமே மின்கதை எனலாம்.//

ஹிஹி, கதை போன போக்கில் லெஸ்லி ஃபீட்லர் என்பது ஒரு வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்ட பெயராகக் கொள்ளலாம். இருந்தாலும், Literature of exhaustion என்பதை அது குறிப்பதாக இருந்தால், அதை முதலில் மொழிந்தது அமெரிக்க எழுத்தாளரான ஜான் பார்த் (John Barth) என்றே நினைக்கிறேன்?!@!?@?? மேலும், சுட்டி குறிப்பிடும் போர்ஹேஸின் கதையான Pierre Menard, Author of the Quixote கதையும் மிக முக்கியமான ஒன்று. அந்தக் கதையைப் படித்துப் பார்த்தீர்களானால் //இக்காலகட்டத்தில் மீண்டும் தனிமனிதர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டன. மீண்டும் எழுத்தாளனும் வாசகனும் உருவாயினர். ஆனால் அச்சொற்களின் பொருள்களே முற்றாக மாறிவிட்டன.// என்ற வாக்கியத்தின் கருத்தாக்கம் எங்கேயிருந்து வருகிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். Pierre Menard கதையிலிருந்து அப்படியே அந்த வாக்கியத்தைத் தருகிறேன், வார்த்தை பிசகாமல்:
"The Cervantes text and the Menard text are verbally identical, but the second is almost infinitely richer. (More ambiguous, his detractors will say-but ambiguity is richness)"
-Collected Fictions, Jorge Luis Borges; Viking, 1998)
எப்படி இது பொருந்துகிறது என்று பார்க்க, கதையைப் படித்துப் பார்க்க முயலவும்.

தூக்கம் வருவதால், இத்தோடு நிறுத்திக்கொள்ளுகிறேன். தலைப்பு இதன் தொடர்புடையதுதான் :)

8 comments:

ROSAVASANTH said...

நல்ல பதிவு என்று நினைக்கிறேன். நினைப்பதற்கு காரணம், இன்னும் ஜெயமோகனின் 'கதையை' முழுவதும் படிக்கவில்லை. படிக்க தொடங்கி, கதையின் நீளம் காரணமாக அப்போது நேரமில்லாத ஒரே காரணத்தால் நிறுத்த வேண்டி வந்தது.

தொடர்ந்து வாசகனின் வாசிப்பில் குறுக்கிடுதல், தன்னை பற்றி தானே தீர்ப்பு கூறல் போன்ற (இதன் பின்னுள்ள நோக்கமாய் தன் படைப்பை, தன்னை பற்றிய அருவருப்பூட்டும் பிம்ப உருவாக்கம்) ஒரு புணைவு எழுத்தாளன் அறவே நினைக்ககூடாத காரியத்தை ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருகிறார். இவ்வாறு செய்வதற்கு தரும் விளக்கம் இன்னும் அபத்தமாக இருக்கும். தன்னை பற்றி ஏன் பேசகூடாது, ஏன் அடக்கம் காண்பிக்க வேண்டும் என்பதாக ஜெயமோகன் இதற்கு தரும் விளக்கமாக (முன்னர் திண்ணையில் சொன்னதுபோல்) இருக்கும். அவருக்கு விளங்காதது, அது(தன்னை பற்றி பேசுவதும், வாசிப்பில் குறிக்கிடுவதும்) *சாத்தியமில்லாதது* என்பது. இது கூட புரியாத எழுத்தாளன், (ஏதோ ஒரு வகையில், எதிர்பதற்கு கூட) முக்கியமானவனாக நினைக்கவேண்டிய நாம் சூழலின் கட்டாயம் குறித்து என்ன சொல்ல?

இது குறித்து பேசுவது மிகவும் அலுப்பூட்டும், எதிர்வினைகள் வந்தால் அருவருப்பூட்டும் செயல். பிரச்சனை என்ன வெனில் ஜெயமோகனை எதிர்பவர்கள் நிகழ்த்தும் அல்பத்தங்களும், அவதூறுகளும். உதாரணமாய் இப்போது தன்னை ஸ்டாலினிஸ்ட் என்று பெருமையாய்(எனக்கு அவர் உண்மையிலேயே ஸ்டாலினிஸ்டா என்பது பிரச்சனை இல்லை, அதை ஒரு பெருமையாய் சொன்னதுதான்) சொன்ன யமுனா. ஜெயமோகனின் பலமே இது போன்ற அவரை எதிர்ப்பவர்கள்தான். இதை முன்வைத்தே தன்னை அவர் நிருபித்துகொண்டதாய் நினைத்துகொள்ளலாம். ஆனால் இதில் உண்மையில் அழிபடுவது, ஜெயமோகனின் உள்ளிருக்கும் ஒரு திறமையான புனைவாளன்தான் என்பது கூட அவருக்கு புரியாததுதான் கொடுமை!

கதையை படித்த பின் மீதி இருந்தால்..!

ROSAVASANTH said...

/நல்ல பதிவு என்று நினைக்கிறேன். நினைப்பதற்கு காரணம்,../

'ஒரு கருத்தாய் சொல்லாமல் நினைக்க மட்டும் செய்வதற்கு..' என்று இருக்கவேண்டும். ஆபிஸிலிருந்து கிளம்புபோது அவசரமாய் எழுதியது.

சன்னாசி said...

//இதில் உண்மையில் அழிபடுவது, ஜெயமோகனின் உள்ளிருக்கும் ஒரு திறமையான புனைவாளன்தான் என்பது கூட அவருக்கு புரியாததுதான் கொடுமை!//

உண்மையில், ஜெயமோகன் என்ற புனைவாளர், விஷ்ணுபுரத்தினுள்ளேயே lock-in ஆகிவிட்டமாதிரிதான் எனக்குப் படுகிறது.

//ஜெயமோகனின் பலமே இது போன்ற அவரை எதிர்ப்பவர்கள்தான்.//

நான் டான் குவிஹாத்தே அல்ல, காற்றாலைகளுக்கு எதிராக வாள்சுழற்றுவதில்லை என்று ஜெயமோகன் சொல்வாரென நினைக்கிறேன். ஏதோ போதாத நேரம், காற்றாலைகளாக மாறிவிட்ட கதைகளையும் நோக்கி கரடியாய்க் கத்திக்கொண்டிருக்கிறோம்!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

you can write a detailed critique and send to thinnai.
if u have time read the new media reader pub by mit press.jayamohan neither understands literature, nor anything for that matter but pretends that he knows everything.story within story or author himself or herself as a character in a story is as old as mahabharatha.

இளங்கோ-டிசே said...

Montresor,
இப்போதுதான் உங்களின் இந்தப்பதிவை வாசித்தேன். ரோசாவசந்த் போல ஜெயமோகனின் கட்டுரை நீநீண்ண்ண்டதால் சும்மா மேய்ந்ததோடு கம்மென்று இருந்துவிட்டேன். நீங்கள் ஆறுதலாக வாசித்திருக்கின்றியள் என்பது உங்களின் பதிவை வாசிக்கையில் விளங்குது. இப்படி வறட்சியாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதுவதை (ஜெயமோகனின் சரக்கு முடிந்திட்டுது என்டுதான் நினைக்கிறேன்)வாசிப்பதை விட எனக்கென்னவோ தமிழ்ப்படங்களோ, விகடன் குமுதம் போன்றவைகளோ பரவாயில்லை மாதிரிக்கிடக்கு.

சன்னாசி said...

டிஜே:
புத்தரைப்பற்றிக் கூறும்போது, 'He lived long enough to emphasize to his followers that he, in fact, is not God' என்பார்கள். அது இங்கே எப்படிப் பொருந்துகிறதென்று உங்களுக்கே தெரியும். உண்மையில், ஜெயமோகனின் அரசியலையும் பீற்றலையும் எவ்வளவு வெறுக்கிறேனோ, அதேயளவு அவரது எழுத்துக்கள் வறண்டுபோவதையும் வருத்தத்துடனேயே பார்க்கிறேன். கோஷ்டிகானங்கள் பாடியிராத ஒரு வாசகனின் வாசக வாழ்வில் கிடைக்கும் சமகால எழுத்தாளர்கள்மேல் தன்னையறியாமலே அவனுக்கொரு பிடிப்பு இருக்கும் என்பது என் அபிப்ராயம் - எழுத்தாளனின் தேய்வு என்று நாம் நினைப்பது உண்மையில் வாசகனின் தேய்வா என்றும் தெரியவில்லை. இன்னும் இருபத்தைந்து வருடங்கள் கழித்து இதுமாதிரி வலைப்பதிவுகளை மேய்ந்துகொண்டிருக்கும்போது, அப்போதைய எழுத்தாளர்கள்குறித்து யாரேனும் இளந்தாரி வாசகன் எழுதுவதைப் பார்த்துவிட்டு, "எங்கள் காலத்தின் ஜெயமோகன் கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன் சுந்தர ராமசாமி மாதிரி வருமா" என்று நான் புலம்பிக் கிழட்டெழுத்து எழுதிக்கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது! எழுத்தாளர்களுக்கும் இதேபோன்ற தேய்மானங்கள் இருக்கிறதோ என்னவோ. "எழுத்தாளர் ஸோ அண்டு ஸோவின் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு, கட்டுரைகள் முழுத்தொகுப்பு" என்று தடித்த தலையணைப் புத்தகங்கள் வெளிவரும்போது, புத்திசுவாதீனம் சரியாயிருப்பின் அந்த எழுத்தாளன் உள்ளூர அடையும் அதிர்ச்சி என்னவாயிருக்குமென்று யோசித்துப் பார்க்கிறேன். "முழுத்தொகுப்பு" என்பதே ஒருவகையில் epitaphs போலப் படுகிறது! எழுத்தாளர்கள் பாவம்தான், ஆனால் சிலசமயம் உளறுவது சகிக்கமுடியாமல் போகும்போதுதான் நாமும் ஏதாவது முனகவேண்டியிருக்கிறது!!

சன்னாசி said...

டிஜெ (ஜெயமோகன் ஸ்டைல்; எல்லாத்தையும் குறிலாக்கு!! பி.கெ.பாலகிருஷ்ணன், ஜெ.ஜெ.சில குறிப்புகள், இத்யாதி...),
ஏதாவது மைக் கிடைத்தால் என்னைப் போன்றவர்களே இந்த மாதிரி மரண பஜனை போடும்போது , hard disc capacity இன்னும் அதிகமுள்ளவர்கள் என்ன போடு போடுவார்கள் என்பதையும் நானே நக்கலாக யோசித்துப் பார்த்துக்கொள்கிறேன்!! ;)

இளங்கோ-டிசே said...

உண்மைதான் Montresor, பலவேளைகளில் நமது தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி யோசிக்கும்போது பரிதாபம் உண்டாகிறது. அவர்களுக்கு நாம் வாழும் சமூகம் என்னவிதமான மரியாதை கொடுக்கிறது என்று எண்ணும்போது இன்னும் எரிச்சலே வரும். முன்பொருமுறை பதிவுகளில் எழுதியதுபோல, இன்னமும் ஜெயமோகனின் எழுத்து வேகத்தில் பிரமிப்பு இருக்கிறது. சும்மா குந்தியிருந்து எதையாவது கிறுக்கவே ஒரு கிழமையாகிறது என்கும்போது ஜெயமோகனின் எழுதும் ஆர்வம் வியப்பளிப்பது (என்ன எழுதுகிறார் என்பது வேறுவிடயம்).
எஸ்.ராமகிருஷ்ணனின் பால்யநதி சிறுகதைத் தொகுப்பு நீங்கள் வாசித்திருக்கக்கூடும். மிக மென்மையான உணர்வுகளால் மனதைத் தொடுகிறார். சில கதைகளை வாசிக்கும்போது அழுகின்றகட்டங்கள்வரை கூடப்போயிருக்கின்றேன் (இப்படி எழுத அவருக்கு சோவியத்து இலக்கிய வாசிப்பும் காரணமாயிருகக்க்கூடும்). இப்போதும் சின்னப்பிள்ளையாக இருக்கையில் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட சோவியத்து சிறுவர் புத்தகங்கள் வாசித்த பொழுதுகள் நினைவுகளுக்கு கதகதப்பூட்டுபவை (out of topic).