Thursday, October 28, 2004

இழிசொல் அகராதி

நேற்று ஒரு சின்னப் பேச்சின்போது 'Third world'என்ற பதம் எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது என்று யோசித்தேன். அரசியல் பற்றிய விவாதத்தில் அந்தப் பேச்சு வந்தது. பின்னோக்கி யோசித்தபோது, ஜான் கெர்ரி, புஷ்ஷுடனான ஒரு விவாதத்தில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்து இறக்குமதி செய்வதைக்குறித்துச் சொன்னபோது, ``We're not talking about some Third World country, folks, we're talking about Canada.'' என்று தத்துவார்த்தமாக கூறியது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது நல்லெண்ணத்தில்தான் என்று நம்புவோம் - அதாவது, மருந்துகள் இறக்குமதி செய்தால் தரமான மருந்துகளாக இருக்கவேண்டும், சும்மா மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளக்கூடாது என்றார் என்று நினைக்கிறேன் - அது சரிதானே! மக்களின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா! நம் மருந்துகளைத் தின்று நாம் இவ்வளவு நாட்களாகச் செத்துப்போய்க்கொண்டிருந்ததால்தானே நமது மக்கள்தொகை நூறு கோடிக்கு உயர்ந்திருக்கிறது! கலாச்சாரச் செருப்படிக்குக் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகளைக் கோர்த்து நாம் மாலையாகப் போட்டுக்கொள்ளுமளவு சுரணையற்றுப் போய்விட்டோமோ என்று நினைத்துப் பார்க்கும்போதே கொடுமையாக இருக்கிறது. நாம் மட்டும் அல்ல, உதாரணத்துக்கு, 'Third world academy of sciences' என்ற பெயர்! 'மூன்றாம் உலகம்' என்பதற்கு அகராதியில் மூன்று அர்த்தங்கள் கொடுத்திருந்தாலும், மூன்றாவது அர்த்தமே தற்போதைய சூழ்நிலையில் அதற்கு மிகப் பொருத்தமாக உபயோகிக்கப்படுகிறதென்று நினைக்கிறேன். நமது விஞ்ஞானிகள் சிலரின் வலைப்பக்கத்தில் 'மூன்றாமுலக நாடுகளின் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினர்' என்றுகூடப் பார்த்திருக்கிறேன். சரி, அதன் நோக்கத்தில் தவறேதுமில்லை, ஆனால் அந்தப் பெயர்? இனிமேல் அதை யாரேனும் மாற்றினால் கூட, மாற்றிய பெயருக்கடுத்து அடைப்புக்குறிக்குள் 'Formerly மூன்றாமுலக.......ராமாயணம்' என்று இருக்கவே செய்யும். இல்லை இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் நான் பாரனாய்டு கணக்காக ஊதிப் பெரிதாக்கிக்கொள்கிறேனா? பள்ளியில் ஆஃப்ரிக்கா ஒரு 'இருண்ட கண்டம்' என்று எத்தனை முறை உணர்ச்சியில்லாமல் சொல்லியிருக்கிறோமோ? பெயர் வெறும் பெயர்தான், ஆனால் இவற்றை மேம்போக்காக ஒப்புக்கொள்வதை மட்டும் ஏனோ ஒப்புக்கொள்ளமுடிவதில்லை. இந்தமாதிரி வார்த்தைகளைமட்டும் பிரஷ்டம் செய்யவேண்டுமானால் மட்டுமே ஒரு பெரிய அகராதி போடவேண்டியிருக்குமென்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல திட்டம்தான். 'இழிசொல் அகராதி' என்று கொண்டுவரலாம்!!

2 comments:

Balaji-Paari said...

இது போன்ற வார்த்தைகள், எல்லா தரப்புகளிலும், தளங்களிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் இத்தகைய வார்த்தைகள் பல இடங்களில் கூர்மையான எதிர்மறையான உணர்வை தோற்றுவிப்பதில் தவறுவதில்லை.
எடுத்துக்காட்டாக: http://valipokkan.blogspot.com/2004/09/pariah.html

இது போன்ற விசயங்களில் இப்போது மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றனவா என்பது அறியப்பட வேண்டியது.
"Remand home" என்று அழைத்து வரப்பட்ட சீர்திருத்த பள்ளிகள், இப்போது, "observation home" என்று அழைக்கப்படுகின்றது இந்தியாவில்.
இதை வரவேற்கின்றேன்.

dondu(#11168674346665545885) said...

பெயரை மாற்றினால் மட்டும் என்ன ஆகி விடப் போகிறது? உண்மை மறைந்து விடுமா? சில காலம் கழித்து புதுப் பெயரும் அவமானச் சின்னமாகத்தன் தெரியப் போகிறது. அப்போது வேறு பெயரை நாடுவீர்களா?
ராகவன்