சமீபத்தில்தான் கீஸ்லாவ்ஸ்கியின் 'மூன்று வர்ணங்கள்' (Trois Couleurs) படத்தின் மூன்றாம், மற்றும் இறுதிப் பாகமான 'White' ஐப் பார்த்தேன். நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை மூன்றும் ஃபிரெஞ்சு மூவர்ணக் கொடியின் நிறங்கள். அவ்வளவாக ஃபிரெஞ்சுக் கலாச்சாரம் பற்றித் தெரியாததால் (புத்தகங்களில் படித்தது, சினிமாவில் பார்த்தது தவிர), இதில் jingoism ஏதாவது இருக்கிறதா என்று தெரியாது. படம் பார்த்த அனுபவம் அதுபோன்ற விஷயங்களுக்குச் சம்பந்தப்படாமலே இருந்துவிட்டதால் பிரச்னையில்லை.
முதலில் பார்த்ததும், காட்சிவாரியாக அவ்வளவாக நினைவில் தங்காததும் 'Blue'. ஜூலியட் பினோஷே தன் கணவனையும் குழந்தையையும் விபத்தில் இழக்கிறாள். அதன்பின் படம்முழுவதும் ஆக்கிரமிக்கத்தொடங்கும் இறுக்கம், இறுதிக்காட்சியில், ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்காக அவளது கணவன் எழுதத்தொடங்கி, அவள் முடித்த symphony இசைக்கத்தொடங்கும்போது இளக்கமடைந்து படம் முடிகிறது. கதையைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்பதால், திரும்பத் திரும்ப அவள் நீச்சல்குளத்தில் நீந்துவதும், படம் முழுவதும் அவளது தேகத்தின் இறுக்கமும் மட்டுமே இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. தனிமையைப்பற்றி எத்தனை படங்கள் பார்த்தாலும், நமது தனிமை என்பது நம்மிடமிருந்து கழன்றுபோகத்தொடங்கும்போது அந்நியத் தனிமையைப் பார்த்து நமது தனிமையைப் புதுப்பித்துக்கொள்கிறோம். படத்தில் தன் தனிமையைப் போக்க அவள் தொடர்ந்து நீந்துகிறாள். வியர்வை தெரியாமல் களைப்படையும் ஒரே பயிற்சி என்பதால் நீச்சல் ஒருவகையில் அகவேதனையைப் பிறரறியாமல் வெளியேற்றுகிறதோ என்னவோ. மறதிநோயால் பாதிக்கப்பட்ட அவளது தாய், அவளைச் சிலநிமிடங்களுக்குமேல் நினைவு வைத்திருப்பதில்லை - ஒருவகையில் அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்வதற்காக அங்கே அவள் திரும்பத் திரும்பச் சென்றிருக்கலாம். தனிமைக்கு மறதியே மிகப்பெரிய மருந்து அல்லவா? இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகளுள் ஒன்றான அவளது கண்ணின் close-up அளவு இறுக்கமான close-upஐ இதற்குமுன் நான் பார்த்ததில்லை.
Red ஐ அடுத்துப் பார்த்தேன். வாலன்டைன் காரில் போய்க்கொண்டிருக்கிறாள், ஒரு நாய் அடிபடுகிறது, நாயைச் சொந்தக்காரரிடம் அழைத்துச்செல்கிறாள் (கழுத்துப்பட்டி அடையாளம்), சொந்தக்காரர் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, அவரது வேலை அக்கம்பக்கத்தார் ஃபோனில் பேசுவதை ஒட்டுக்கேட்பது, தன் காதலனுக்குத் துரோகமிழைக்கும் ஒரு பெண், அந்தக் cuckolded காதலன், கதாநாயகியைத் தொலைபேசி வழியாகவே மூச்சுத்திணற வைக்கும் அவளது காதலன் - இவர்கள் அனைவரையும் இணைக்கும் நூற்பிரிகளை வெளியிலிருந்து நாம் பார்த்துக்கொள்ளலாம். மூன்று படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். நீதிபதியின் ஒட்டுக்கேட்கும் குணாதிசயம் அவளைக் குமட்டவைத்தாலும், அவளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவரது இழந்த காதல் அவரது உந்துசக்தி. தவறு என்பது ஒரு moral category என்று அல்லாமல், அது வெறுமனே ஒரு பதம் மட்டுமே, பெரிதாக அவற்றுக்கு என்ன அர்த்தமிருக்கமுடியுமென்று நினைத்துக்கொள்ளும் அந்த நீதிபதி, பின்பு தன்னைப்பற்றித் தானே மொட்டைக்கடிதாசி எழுதி அனைத்து அக்கம்பக்கத்தாருக்கும் அனுப்பிவிட்டு, கோர்ட்டில் ஆஜராகி, பின்பு அண்டைவீட்டார் கல்லெறிந்து ஜன்னல்களை உடைக்கும்போது அமைதியாக மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். வாலன்டைன் மீது உருவாகும் காதலை அவர்களுக்கிடையில் பனிக்கடலாக உறைந்துவிட்ட காலம் தடுக்கிறது - இறுதியில் வாலன்டைன் லண்டன் கிளம்பும்போது அந்தக் cuckolded காதலனைப் படகில் சந்திக்கிறாள், புயலடித்து ஃபெரி கவிழ்ந்துபோகிறது, நீதிபதி செய்திகளைப் பார்த்துக்கொண்டு நிலையற்று அமர்ந்திருக்கிறார். மிக நுட்பமான உறவுகள் - சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ரஷ்யக் கலாச்சார மையத்தில் Nelly and Arnaud என்ற மற்றொரு ஃபிரெஞ்சுப் படம் பார்த்தேன்; ஒரு முதியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்குமிடையில் அரும்பும் காதலைப்பற்றிய படம் என்பதைத்தவிர அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை எனினும், இழப்பு என்பதையும், இழந்ததை மறக்கவியலாமற்போனோமென்றால் மேலும்மேலும் எத்தனை இழப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்வோமென்றும் ஒருமுறை உணர்ந்துகொள்வோம். ஒவ்வொரு இழப்பும் அதன் பின்வரும் ஒவ்வொரு இழப்பும் இரக்கமற்றவை. வாலன்டைன், நீதிபதி இருவரும் தனிமையில் உழன்றாலும், அவளது தனிமையும் அவரது தனிமையும் இணைந்திருக்க வாய்ப்பேயில்லை - like forces repel each other என்பதுபோல. மூன்று படங்களில் திரும்பப் பார்ப்பதென்றால், இதைப் பார்ப்பேனென்று நினைக்கிறேன்.
ஒரு காதல் கதை. கரோல் ஒரு போலந்து நாட்டு முடிதிருத்தகன். பாரிஸுக்கு ஒரு போட்டிக்கு வந்தபோது டொமினிக்கைச் சந்தித்துத் திருமணம் செய்துகொள்கிறான். White, அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதில் தொடங்குகிறது. திருத்தமான டொமினிக்கும் திருத்தமற்ற கரோலுக்கும் இடையில் மிச்சமிருப்பது டொமினிக் மீதான கரோலின் காதல் மட்டுமே. பணம் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில் ரயில்நிலையத்தில் தன் சீப்பின்மேல் கைக்குட்டையைப் போட்டு மூடி போலிஷ் சங்கீத்தைப் பாடிக்கொண்டிருக்கும் கரோலை, மிக்கோலாய் என்னும் ஒரு சக போலந்து நாட்டவன் சந்திக்கிறான். கரோல் டொமினிக்கைத் தொலைபேசியில் அழைக்க, வேறேதோ ஒருவனுடன் உறவு கொண்டுகொண்டிருக்கும் அவள், 'கேள் மடப்பயலே சப்தத்தை' என்று கூறி அவனைக் கதறவைக்கிறாள். பாஸ்போர்ட்டையும் இழந்துவிட்டபடியால், பெட்டியொன்றுக்குள் ஒளிந்துகொண்டு போலந்து வந்துசேர்கிறான் கரோல். சுருக்கமாக (படத்தில் வருவதுபோலவே) , போலந்தில் பெரும் பணக்காரன் ஆகிவிடும் கரோல், அவளை மறக்கவியலாது தவிப்பதும், படத்தின் இரக்கமற்ற முடிவும் அழுத்தமாக இருப்பினும், ஏனோ எனக்கு இதன்மேல் பெரிய அபிப்ராயமில்லாமல் போயிற்று. 'பூட்டாத பூட்டுக்கள்' என்று ஒரு படம் பார்த்துள்ளேன் (மகேந்திரன் படம் தானே?). அதற்கும் இதற்கும் அவ்வளவு ஒற்றுமைகள்.
விமர்சனங்கள், நீலம் விடுதலையைக் குறிக்கிறது, வெள்ளை சமத்துவத்தைக் குறிக்கிறது என்ற ரீதியில் பெரும்பாலும் இருந்தாலும், அது ஏனோ பெரிதாக ஆர்வப்படுத்தவில்லை. கீஸ்லாவ்ஸ்கி எதை நினைத்து எடுத்தாரென்பது நமக்கு முக்கியமா என்ன? மூன்றையும் பார்த்தபின் நினைவில் தங்கியது படங்களிலிருந்த உணர்வுகளின் தீவிரமே. தீவிரமற்ற எதையும் திரும்பிக்கூடப் பார்த்துவிடுவோமா என்ன?
Monday, October 18, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Blue, Red இரண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. White பார்த்திருந்தேன், ஆனால் சிறிதும் மண்டையில் நிற்கவில்லை. Red மட்டும்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதுகூட நான் பார்த்த சமயத்தில் (வயதில்) ஆழமாகப் புரியவில்லை.
ஒருவேளை இப்பொழுது மீண்டும் அனைத்தையும் பார்த்தால் புரியலாமோ என்னவோ.
சற்றுநாள் முன்பு வந்த இந்திப்படம் 'Ek choti si love story' கூட கீஸ்லாவ்ஸ்கியின் ஒரு குறும்படத்தின் டுமீல் டுமீல் தான்!
Post a Comment