Thursday, October 07, 2004

சட்டியில் இருப்பது

இது மிகவும் தாமதமான விமர்சனமாக இருக்கலாம் - ஆனால் இது விமர்சனத்தைப்பற்றிய கருத்து என்பதால் இது தேவையா இல்லையா என்ற விஷயத்தை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன். அமோரஸ் பெரஸ் அல்லது ஆயுத எழுத்து என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை இப்போதுதான் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போது இதே வேலைதான் - எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று விவாதிக்க வேண்டியது. நானும் ஒரு பட்டியல் தருகிறேன்.

வெற்றி விழா - Bourne Identity
மை டியர் மார்த்தாண்டன் - Coming to America
மகாநதி ஜெயில் காட்சிகள் - If tomorrow comes (இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)
12B - Sliding doors
ஜேஜே - Serendipity
நியூ - Big
பாட்ஷா - இந்தி 'Hum' (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

இதெல்லாம் சரி, காப்பி அடிக்கிறார்கள், சரி. இந்தியிலும் காப்பிதான். 'Kaante' இந்திப்படம், 'Reservoir dogs'ன் உல்டா - அதையெல்லாம் கணக்குப்பண்ண நேரமில்லை.

சரி, தமிழில் எடுக்கக் கதைகளா இல்லை? எழுதப்பட்ட கதைகளிலேயே ஏராளமாக உள்ளன. சுஜாதாவின் 'இருள் வரும் நேரம்' திரைப்படமாக்குவதற்கு மிகப் பொருத்தமான அற்புதமான கதை - அது 'வானம் வசப்படும்' என்று குதறப்படுவதாக அறிகிறேன் - இருள் வரும் நேரம் படித்தவர்கள், அம்ருதா (பெயர் சரியாக நினைவில்லை, பல வருடங்களுக்குமுன் படித்தது) பாத்திரத்தில் தபு, அவள் கணவன் வேடத்தில் சிவக்குமார் (இது சரியில்லை), கமிஷனர் தர்மராஜ் வேடத்தில் நாசர், ஆட்டோ டிரைவர் வேடத்தில் மனோஜ் பாஜ்பாய் என்று கற்பனை செய்துபாருங்கள். வர்ஷா பாத்திரத்தில் வேண்டுமானால் சிக்கென்று ஒரு நடிகையைப் போடுங்கள். அவளுக்கும் ப்ரொபசருக்கும் ஒரு கனவுப் பாட்டு வைக்காமலிருந்தால் சரி.

தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'
கிருத்திகாவின் 'வாஸவேச்வரம்'
ஜெயமோகனின் 'கன்னியாகுமரி'
கி.கஸ்தூரிரங்கனின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்'
சுபாவின் 'என்றென்றும் காதலி'
பூமணியின் 'வெக்கை' - இதை ஒழுங்கான படமாக்கினால், அற்புதமாக இருக்கும். இந்தப் புத்தகமே ஒரு இறுக்கமான திரைக்கதை.

எத்தனை கதைகள் உள்ளன - சொல்லிக்கொண்டே போகலாம் - சுபாவை எல்லாம் ஜெயமோகன் வரிசையில் சேர்த்து நான் கர்ப்பக்கிரகத்துக்குள் கழுதையைக் கூட்டிக்கொண்டுவந்துவிட்டதாக யாரும் எண்ணவேண்டாம். என்னைப் பொறுத்தவரை, மாதா மாதம் எழுதித் தள்ளாமல் நிதானமாக 300 பக்க நாவல்கள் எழுதியிருந்தால் (பக்கம் ஒரு கணக்கா என்று கிண்டலடிப்பவர்களுக்கு என் பதில் மௌனமே) அவர்களிடமிருந்து சில திரைப்படத்துக்குத் தகுதியான நாவல்களையாவது பெற்றிருக்கமுடியும். அவை இலக்கியம் என்று அவர்களே கூறமாட்டார்கள் என்பதால், வேறு ஏதும் அலட்டிக்கொள்ளவேண்டாம்.

அய்யய்யோ, இதையெல்லாம் படமெடுத்தால், எப்போது நாம் Wild strawberries, Cries and Whispers, 8 1/2, 400 blows மாதிரிப் படங்கள் எடுப்பது என்று யோசிப்பவர்கள் பொறுக்க. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
முதலில் எந்த மாதிரித் திரைப்படங்கள் எடுக்கவேண்டுமென்று யோசிக்கலாம் - Hollywood மாதிரியா அல்லது ஐரோப்பியப் படங்கள் மாதிரியா அல்லது ஜப்பானியப் படங்கள் மாதிரியா என்று யோசிக்கத் தொடங்காமல், நம்மிடம் என்ன இருக்கிறது என்றும் எந்த மாதிரியான திரைப்படங்கள் வரமுடியும் என்று யோசிப்பதே உபயோகமாக இருக்கும். Y tu mama tambien என்று ஒரு ஸ்பானிய மொழிப் படம் (மெக்ஸிகோ). அதை அப்படியே எடுத்தால் நம்மூரில் செருப்பால் அடிப்பார்கள், இயக்குனருக்கு செக்ஸ் இயக்குனர் என்று ஒரு பட்டம் கிடைக்கும். ஆனால், Y tu வை இயக்கிய அல்ஃபோன்ஸோ குவாரோனின் அந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் படமான Harry Potter and the Prisoner of Azkaban படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அடுத்த Harry Potter படத்தை நமது மீரா நாயர் இயக்குவதாகப் பேச்சு உள்ளது. இதுபோன்ற போக்கு தமிழில் உள்ளதா? டாக்டர் அய்யா ராமதாஸ் டாக்டர் அய்யா கிச்சாமி போன்ற Extra constitutional censor board டாக்டர் அய்யாக்களைப்பற்றிப் பேசவேண்டாம், அது வேறு பிரச்னை.

நான் மேலே குறிப்பிட்ட அத்தனை தமிழ்க் கதைகளும் மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. Hollywood என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமே. அதன் வெற்றிக்குக் காரணம் அதன் பன்முகத்தன்மை - புதிது புதிதான கதைகள். Hollywood என்றால் முகத்தைச் சுளிப்பவர்களுக்கு - ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ போன்ற பெரும் இயக்குனர்கள் கூட 'Shoot the piano player' என்று அமெரிக்க gangster படங்களை eulogize செய்த படங்களை எடுத்திருக்கிறார்கள். த்ரூஃபோவின் 'Bride wore black' ஐ அடியொற்றியதே சமீபத்திய 'Kill Bill'. பார்க்கத் தகுதியுள்ள எண்ணற்ற நல்ல படங்கள் Hollywoodலும் இருக்கின்றன. இப்போது சிலாகிக்கப்படும் அனைத்து 'இலக்கியமயமான' ஐரோப்பியப் படங்கள் அனைத்தும் முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. குரோஸவா, சாமுராய்களைப்பற்றியே பல படங்கள் எடுத்தார். என் அபிப்ராயம் என்னவென்றால், குரோஸவா எடுத்தார், பெர்க்மன் எடுத்தார் என்றே இன்னும் ராமாயணம் பாடிக்கொண்டிருக்காமல், அவர்களது context என்ன, நமது என்ன, அமெரிக்கத் திரைப்படங்களது என்ன என்றும் பார்க்கவேண்டும். திரைப்பட விழாக்களில் சிலாகிக்கப்படும் படங்கள் எடுக்கப்பட்ட பெரும்பாலான தேசங்களின் மொத்த மக்கள்தொகை தமிழ்நாட்டு அளவோ, அதில் பாதியோதான் இருக்கும் (தமிழ்நாட்டின் மக்கள்தொகை இங்கிலாந்தைவிட அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவும்). அத்தேசங்கள் ஒரு வருடத்தில் எடுக்கும் படங்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் எடுக்கப்படும் தமிழ்ப் படங்களைவிட எவ்வளவோ குறைவே. நாலு கிலோ அரிசியை நான்கு பேருக்குப் பகிரும் இடத்தைவிட, நூறு கிலோ அரிசியை நூறு பேருக்குப் பகிரும் இடத்தில்தான் அடிதடி அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்க. அதை இங்கே பொருத்திப்பார்த்துக்கொள்ளவும். மக்மல்பாஃப், கியோரஸ்தோமி போன்ற இரானிய இயக்குனர்களின் படங்கள் அரசியலைத் தாண்டியவை எனினும், அயதுல்லாக்களின் புகழ்பாடும் படங்களை அவர்கள் எடுத்தால், எவ்வளவுதான் கலைத்துவத்தில் அவை உன்னதமாக இருந்தாலும், மேற்கில் ஒப்புக்கொள்ளப்படாது. மேற்கில் ஒப்புக்கொள்ளப்படாததால் நாமும் ஒப்புக்கொள்ள மாட்டோம் (நீதாண்டா அப்படி என்பவர்கள் ஒருமுறை திரும்பி முதுகைச் சொறிந்துகொள்ளுங்கள், அங்கே ஏதாவது இருக்கப்போகிறது முதலில்). ஆனால், யூதப் பெரும்படுகொலைகளைப்பற்றிய படங்களை ஊ ஆ என்று பார்ப்போம். ஏனென்றால் அவை ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை. சர்ச்சிலின் பொன்மொழிகள் என்று படிப்போம், ஆனால் "It is alarming and also nauseating to see Mr. Gandhi, a seditious middle temple lawyer, now posing as a fakir of a type well known in the east, striding half-naked up the steps of the viceregal palace, while he is still organizing and conducting a defiant campaign of civil disobedience, to parley on equal terms with the representative of the king-emperor."என்று சர்ச்சில் காந்தியைப்பற்றி 1930ல் சொன்ன பொன்மொழியைப் (சுருக்கமாக: காந்தி ஒரு அரைநிர்வாணப் பிச்சைக்காரன்!) படிக்கமாட்டோம்! செய்யும் காரியத்தில் சிரத்தை வேண்டும். யூதப் படுகொலைகளைப்பற்றி ஆயிரம் படங்கள் பார்ப்பதும் ஒன்றுதான், அதற்குப் பதில் ஆலன் ரெனேயின் 'Night and Fog' ஆவணப்படம் பார்ப்பதும் ஒன்றுதான். அது மற்ற அனைத்துப் படங்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும். சுயசிந்தனை இல்லாத எந்தச் சமுதாயமும் உருப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.

குரோஸவாவின் படங்கள் உலகம் முழுக்கத் தெரியும் என்பவர்களுக்கு: Hello!! குரோஸவாவின் படங்களைத் தெரிந்த அனைத்து வெளிநாட்டவருக்கும், 'சுபர்ண ரேகா'வும் ரேயின் 'Apu trilogy' யும் தெரிந்திருக்க அதேயளவு வாய்ப்புள்ளது. படித்தவர்களுக்கு, கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இதுசம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதையே ஒரு வெளிநாட்டு ட்ரக் ட்ரைவரிடம் போய் குரோஸவா என்றால் மெக்டொனால்டில் புது ஐட்டமா என்பான். வெளிநாட்டு மாணவர்களெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஃபெயில் கூட ஆகமாட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்!!

பழையபடி: என் முந்தைய இடுகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது போல: சரி, விதவிதமாகக் காப்பி அடிக்காமல் தமிழில் படம் எடுப்போம் அல்லது இலக்கியம் படைப்போம். கைகால்கள் வளராமல் தலை மட்டும் வளர்ந்துகொண்டே போகுமா என்ன? ஒப்பிடுவதால் தமிழைத் தாழ்த்துவதாக எண்ணாமல், கீழ்க்கண்ட ஒப்பீடலைப் பார்க்க. தீவிர/நவீன இலக்கியம் என்பதை சுத்தமாக எடுத்துவிடுகிறேன். வெகு புதிய ஆசிரியர்களையும் ஆங்கிலத்தில் எடுத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட ஆங்கில எழுத்தாளர்களுக்கு (வார்த்தை சிக்கவில்லை) இணையாக (வார்த்தை சரியில்லை, ஆனால் புரியுமென்று நினைக்கிறேன்) எழுதும்/எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்களா?

William Gibson
Ray Bradbury
Stephen King
Robert Ludlum
Frederick Forsyth
Tom Clancy
Robin Cook
Michael Crichton
Ira Levin
Kurt Vonnegut

ஏன் சொல்கிறேனென்றால், இந்தமாதிரி எழுத்தாளர்கள் இல்லை, அதனால்தான் படம் எடுக்கமுடியவில்லை என்று இயக்குனர்கள் புலம்பலாம். உதாரணத்துக்கு, க்ரிக்டனின் Congo, Jurassic Park, Andromeda Stain, Disclosure, Lost world, Outbreak அனைத்தும் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவையே. ஸ்டீஃபன் கிங்கின் Green mile, The shining, லெவினின் Rosemary's Baby அனைத்தும் வெற்றிகரமான படங்களே. வெற்றிகரமான படங்கள் அனைத்தும் நல்ல படங்களா என்பது வேறு விஷயம்; முதலில் அந்தப் படங்கள் மாதிரியாவது எடுக்கிறோமா என்று பார்க்கவேண்டும். அல்லது, பெர்க்மன், மக்மல்பாஃப், ஓஸு, ரெனே போன்ற இயக்குனர்களே, அல்லது அட்லீஸ்ட் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரான், ஜோயல் ஷூமாக்கர் அளவுகூடத் தமிழில் இல்லை, பிறகு என்ன இழவுக்குக் கதை எழுதிக்கொண்டு என்று யாரும் அந்தமாதிரிக் கதைகள் எழுதவராமல் போயிருக்கலாம். அது சரி, இத்தனை தலித் இலக்கியம் உள்ளது, கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் பரபரப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள், ஏதாவது தலித் இலக்கியம் படமாக்கப்பட்டுள்ளதா? அதைச் செய்யமாட்டார்கள். Cyberpunk கதைகளின் தாதாவான வில்லியம் கிப்ஸனின் Neuromancer, Johnny Mnemonic போன்ற கதைகள் யாராவது எழுதுகிறார்களா? ஃபோர்ஸித்தின் 'The day of the Jackal' இன்றுவரை அலுக்காத ஒரு புத்தகம். 'புரியாத புதிர்' படம் எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது என்ன ஆனார்? ருத்ரய்யாவுக்கு என்ன ஆச்சு? பத்துப் படங்களுக்கு மேல் எடுக்கவில்லை மகேந்திரன்.
உண்மையைச் சொல்கிறேன் - தீவிரமான படம் எடுக்க ஒருவர் கஷ்டப்பட்டார் என்பதால் மட்டும் அதைத் தூக்கி வைத்துக் கொண்டாட முடியாது. அது நன்றாகவும் இருக்கவேண்டும். தமிழ்ப்படங்களும், சில ஆங்கிலப் படங்களும் தவிர வேறு படங்களே பார்த்திராத நண்பன் ஒருவன் 400 Blows படத்தை கடைசிவரை பொறுமையாக உட்கார்ந்து பார்த்து, பின் அதைப்பற்றிப் பேசவும் செய்தான் (இது ஏதோ off the cuff பீலா என்று நினைப்பவர்களுக்கு, நமஸ்தே!).

தமிழிலிருந்து ஒன்றும் வெளியே போகாது என்பவர்களுக்கு: இது என்ன? தமிழிலிருந்து ஏன் வெளியே? 'யாருடைய அங்கீகாரம் எனக்குத் தேவை? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' (இது ஒரு நாவலில் வரும் வரி. ஒரு சின்னப் போட்டி, கண்டுபிடியுங்களேன். இவ்வளவு தூரம் பொறுமையாக வாசித்திருக்கிறீர்களென்றால், இது தெரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது). எந்தக் கலாச்சாரத்தையும் யாரும் பரப்ப முடியாது. பரவுமளவுக்கு வலிமைபெற்ற கலாச்சாரம் தானே பரவிக்கொள்ளும்.

இன்னொரு சமாச்சாரம். Speed என்று ஒரு படம் வந்தது. அதற்கு வெகு காலம் முன்பு, 'மோனா' விலோ 'குங்குமச் சிமி'ழிலோ அதே கதையைப் படித்திருக்கிறேன்! எழுதியவர் பெயர் நினைவில்லை. அதே பஸ், அதே உத்தி! இதற்கு என்ன சொல்வது?

நீ சொன்ன பிரகஸ்பதிகளெல்லாம் ஆக்-ஷன் கதைகள் எழுதுபவர்கள், மற்றக் கதைகள், லவ் ஸ்டோரிகளையெல்லாம் எழுதமாட்டார்களா என்றால், திரைப்படங்களாக்கப்பட்ட Charlie Kaufmanன் திரைக்கதைகளான Being John Malkovich, Adaptation, மற்றும் சமீபத்திய Eternal sunshine of the spotless mind படங்களையும், கடித்துக் குதறப்பட்ட Confessions of a dangerous mind ஐயும் பார்க்கவும். ஐம்பது வருடங்கள் கழித்து இதையெல்லாம் யாரும் நினைவு வைத்துக்கொள்ளப்போவதில்லை, ஆனால், அவை, பின்னால் வரப்போகும் சங்கிலியின் ஒரு கண்ணியே. இது மாதிரி எந்த இழவும் இல்லாமல் படம் எடு படம் எடு என்றால் என்னத்தை எடுப்பது?

வழக்கம்போல வழிதப்பிவிட்டது. இப்போது ஆயுத எழுத்து.
மணிரத்னம் படங்கள் எனக்குப் பிடிக்கும். மௌன ராகம், இதயத்தைத் திருடாதே, நாயகன் (Godfather ஐ விட்டுத் தள்ளுங்கள் சாமி; அமெரிக்காவில் மட்டும்தான் ரௌடிகள் இருக்கிறார்களா? உலகத்திலுள்ள அனைத்து ரௌடிகளைப்பற்றியும் காட்ஃபாதர் கூறிவிட்டது, அதனால் இனிமேல் தாதாக்களைப்பற்றிப் படமே உலகத்தில் எங்கேயும் எடுக்காதீர்கள் எனமுடியுமா?) போன்ற சில படங்கள். ஆயுத எழுத்து ஒரு டப்பா படம். அதில் எந்த சந்தேகமுமில்லை. தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்திருக்கவேண்டிய படத்தைத் தமிழில் மணிரத்னம் எடுத்துவிட்டதாகக் கொள்ளலாம், அது அரசியலைப்பற்றிய படமாயிருந்தால். ஆனால், நண்பர்களே, படத்தில் வரும் சித்தார்த் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? சிகரெட் ஊதி ஜனங்களை ரசினிகாந்து கெடுக்கிறார் என்று போடும் ஊளையை சூர்யா மாதிரி இருங்கடா லட்சியத்தோட என்று மாற்றவேண்டியதுதானே? ம்கூம்! மணிரத்னம் காப்பி அடிக்கிறாரா? ஆமாம். இதைப்பற்றிச் சொல்லும்போது ஜெஃப் பாய்காட் அடித்த ஒரு கமெண்டைப்பற்றி கவாஸ்கர் சொன்னதுதான் நினைவு வருகிறது: "இங்கிலாந்து பௌலர்கள் ஆவேசத்துடன் பந்து போட்டால் பாய்காட் அதை 'aggression' என்பார், அதே ஆவேசத்தோடு நம் வீரர்கள் போட்டால் அதை 'frustration' என்பார்". இதே கதைதான் இங்கேயும். அது சரியென்றால் இதுவும் சரிதான். இந்தியில், Fallen என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி 'அக்ஸ்' என்று ஒரு படம் எடுத்தார்கள் - அது அசலுக்கு எந்தவகையிலும் குறைச்சலாயில்லை. ராம்கோபால் வர்மா இந்திக்குப் போனபிறகுதான் அதுவும் சற்று உருப்பட்டது. இல்லையென்றால் இப்போதும் டோலக்குத் தட்டிக்கொண்டு டும்க்கு டும்க்கு என்றுதானிருந்திருக்கும். ஆய்த எழுத்தின் க்ளைமாக்ஸில் ஈசாப் நீதிக்கதைகள் மாதிரி எந்த 'கருத்து'ம் பிரச்சாரம் செய்யாததும் அதன் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். இனிமேல் மணிரத்னம் சுஜாதாவுக்குக் கல்தா குடுத்துவிட்டு லியாகத் அலி கானை வசனகர்த்தாவாக்கிக்கொள்ளவேண்டும். இந்தமாதிரி முடிவுகளை மலையாளத்தில் ஒப்புக்கொண்டு, படங்களும் வெற்றியடைகிறதே! அடூர் படங்கள் ஏதும் பார்க்கவேண்டாம், மோகன்லாலின் 'வந்தனம்' படத்தின் க்ளைமாக்ஸையும், அதே படத்தின் தெலுங்கு வடிவமான (தெலுங்கிலும் 'வந்தனம்' தான்) நாகார்ஜூனா படத்தின் க்ளைமாக்ஸையும் பார்க்கவும்! வித்தியாசம் தெரியும். ஆயுத எழுத்து ஒரு காப்பி. நான் Amores Perrosம் பார்த்துவிட்டேன், City of God ம் பார்த்துவிட்டேன். City of God படத்தை என்னுடன் படிக்கும் ஒரு ப்ரேஸிலியப் பெண் (அப்படம் ரியோ டி ஜனீரோவின் சேரிப்பகுதிகளைப்பற்றி, கிட்டத்தட்ட அங்கேயே எடுக்கப்பட்டது. நிஜத்திலும் அப்படித்தான் இருக்குமா என்றால் ஆமாம் என்றாள்) மற்றும் என் மற்றொரு நண்பன் சிபாரிசு செய்து பார்த்தேன். என் மற்றொரு நண்பன் ஒரு பெரிய ரஜினிகாந்த் விசிறி! ஒரு ரஜினிகாந்த் விசிறியாக இருந்து, இந்தப் படத்தைப் பார்த்ததால் அவன் என்ன கலையம்சத்தை இழந்தான் என்று எனக்கு விளக்கி, நிரூபியுங்கள், நான் மொட்டையடித்து என் முடியை blog செய்கிறேன்! இந்தி 'Satya' 'Company' 'Chandni Bar' ஐ விட, போர்த்துகீசிய மொழியிலிருப்பதால் City of God ஒன்றும் பெரிய படமாகிவிடாது!! City of God மிகவும் ஆக்ரோஷமான படம், அதில் சந்தேகமே இல்லை. வேற்றுமொழிப் படங்களை subtitle துணையுடன் பார்க்கும்போது buoyancy of the unintelligible dialogues நம்மை அழுத்தி அவற்றுக்கு ஒரு உபரி மரியாதை தர வைக்கும். ஆனால்? Life is Beautiful என்ற மகா குப்பை இத்தாலியப் படத்துக்குத் சிறந்த பட ஆஸ்கரும், அதன் இயக்குனருக்கு (கம் ஈரோ) சில விருதுகளும் கொடுத்தார்கள். ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் நாத்தம் போகாது என்பதுபோல, எத்தனை விருது கொடுத்து என்ன உபயோகம்? ஆனால் City of God க்கும் ஆயுத எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? உத்தி Amores Perros க்கு ஒத்ததாயிருக்கலாம், ஆனால்? மற்றது?

மணிரத்னம் காப்பி அடிப்பதுண்டு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆயுத எழுத்து ஒரு டப்பா என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால், ஒரு கேள்வி. மணி ரத்னமும் அவர் சார்ந்த தொழில்நுட்ப இயக்குனர்களும் வராமலிருந்தால், தமிழ் சினிமா எப்படி இருந்திருக்கும்? சும்மா எல்லாருக்கும் ஆப்பறைவதை விட்டுவிட்டு யாராவது உருப்படியாகப் பதில் எழுதுங்களேன்? சும்மாப் புலம்புவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியாகச் செய்த மாதிரி இருக்கும்.

ரன் லோலா ரன்? எந்த மணி ரத்னம் படம்பா அந்தப் படத்தின் காப்பி? எனக்குத் தெரியலையே? ஆனால், அந்தப் படத்தின் techno soundtrack பிரமாதமாக இருக்கும் - அதுமட்டும் உண்மை.


12 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

"Don't judge a book by its movie" என்று சொல்வதுண்டு :-))

Thangamani said...

நல்ல பதிவு. நன்றி. மணிரத்தினமோ, மற்றவர்களோ காப்பி அடிக்கக்கூடாது என்பதல்ல விசயம். நன்றாக அடிக்கலாம். அது ஒரு விதத்தில் நீங்கள் சொல்லுகிற மாதிரியான சுயசிந்தனையை பாதித்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் அதை ஒரு திருட்டுத்தனம் மாதிரி அவர்களே கருதுவதால் தான் அதை நேர்மையாகச் சொல்லுவதில்லை. ஆயுதஎழுத்து ஏதோ ஒரு குரோஸவா படத்தின் பாதிப்பு என்று ஒரு பேட்டியில் மணிரத்தினமே சொன்னதாகப் படித்தேன். ஏன் பொய் சொல்லவேண்டும் என்பதும் (பொய்யாய் இருந்தால்), இந்த விசயத்தில் கூட பொய் சொல்லுகிறவன் எப்படி கலைக்கு (அல்லது தனக்கு) உண்மையாக எதையாவது செய்வான் என்பதும், அப்படி தானே சொல்லக்கூசுகிற வேலையைச் செய்வதன் மூலம் அடையக்கூடியதான இந்த விருதுகளும், பெருமைகளும் என்பதும், அப்புறம் ஒரு டப்பிங் பட இயக்குனருக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம், இவர் திறமையாக படத்தை டப்பிங் செய்யக்கூடியவர் என்பத்தைத் தாண்டி என்ன என்பதும் தான்.

இதுதவிர இவர் எடுப்பது எவ்வளவு தூரம் தமிழ்ப்படம்? அது மற்ற படங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது? அதன் பின் உள்ள அரசியல் என்ன? இவை தனியாக விவாதிக்கவேண்டியவை என்று நினைக்கிறேன்.

Balaji-Paari said...

இது சற்று நீண்ட பின்னூட்டம்.

நீங்க சொல்ற விசயங்கள்-ன்னு நான் புரிஞ்சுகிட்டது அல்லது நீங்க சொல்ற விசயங்கள்-னால எனக்கு தோன்றியது.

1. இலக்கியம்-னா என்ன-ங்கற கேள்வி அதற்குண்டான வரைமுறை-க்கு நம்மள கூட்டிட்டு போகாம ஒரு பரந்துபட்ட எண்ணத்தை தோற்றுவிக்கனும்னு நினைக்கிறேன். இப்படி சொல்றது குழப்பமா இருக்கலாம். ஆனா வேற வழியில்ல. சரி. இதை பற்றி மேலும் சொல்லணும்னா: (நான் சிகப்பு சாயத்தோட பேசறன்னு நினைக்க வேண்டாம்) ஒரு வாழ்க்கை முறை தான் அல்லது பழக்கத்துல இருக்கிற வாழ்க்கை முறை தான், இலக்கியத்தோட முதுகெலும்பு. வாழ்க்கை முறை என்பது, ஒரு திணை சார்ந்த மக்கள், அந்த மக்களோட சில பிரத்யேக குணாதிசியங்கள், அவர்களது சிந்தனை சார்ந்த ஒரு திரி, அவர்களோட அழகியல் சார்ந்த விசயங்கள், எல்லாத்திற்குமான ஒரு பதிவு. இந்த மாதிரி சொல்லும் போது ஒரு சில அளவுகோலோட திரியறதா நினைக்கவேண்டாம். இவர்களின் பார்வையில் (அனைவருக்கும் பொதுவான) பொதுமையான குணாதிசியங்கள், இவர்கள் காணும் இயற்கை நிகழ்வுகள், அதற்கான தகவமைப்புகள் இதில் உள்ள சிக்கல்கள், அதை அவர்கள் எதிர் கொள்வதும் அல்லது தவிர்ப்பதையும், மற்ற திணைக்காரர்களுடன் உண்டாகும் amalgamation அது சார்ந்த அந்த மக்களின் பார்வை இவற்றை அதன் போக்கிலே காண்பிப்பது ஒரு இலக்கியமாக இருக்கும்.

2. இலக்கியத்தின் ஒரு முக்கிய உறுப்பாக நூல்கள் மட்டுமே கருதப்படக்கூடிய ஒரு நிலை மீறி, அது அனைத்து வகையான படைபாக்கங்களுக்கும் பொது என்ற ஒரு நிலையை நோக்கி செல்வது ஒரு தீர்வாக இருக்கும். இந்த தளத்தில்தான் நூல்களுக்குள் காமிராக்கள் புக முடியும். அதன் மூலம்தான் இது சார்ந்த வாத விவாதங்களுக்கும் இடம் இருக்கும். சமீபத்திய இயக்குநர்களில் இத்தகைய போக்கு திரு.தங்கர் பச்சானிடம் பார்க்க கிடைக்கின்றது. சமீபத்தில் சென்னயில் திரையிடப்பட்ட ஒருத்தியும் (இன்னும் நான் பார்க்கவில்லை) ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இவைகள் உண்மையில் வெகு குறைவு என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

3. ஒரு திணை சார்ந்த இலக்கிய முயற்சிகளில் தவிர்க்க இயலாதவர் திரு கி.ராஜ நாராயணன். மற்றொருவர், திரு. மேலாண்மை பொன்னுசாமி. இவர்கள் கதைகளில் இருக்கும் யதார்த்தங்கள் உண்மையில் நமக்கு பல விசயங்களை சொல்லும். இவர்கள் கதைகளில் புனைவு இருக்காது. நான் புனைவு வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் யதார்த்தங்களே பகிரப்படாத ஒரு சமூகத்தில் புனைவு என்பது ஒரு கற்பனையை வளர்க்கும் இல்லாத ஏதோவொரு பொருள் தேடி. ஆக, இவர்களது கதைகள் அல்லது இவர்கள் எழுதியதைப் போன்ற கதைகள் நமக்கு படமாக காட்டும் போது, பாரதிராஜாக்களும், இளையராஜாக்களும் எங்கும் பேசப்படுவார்கள்.

4. நிதர்சனங்களை படம் பிடிப்பதில் நான், நாகராஜன் போன்றவர்களை எங்கும் பார்க்கவில்லை. அவரது படைப்புகள் எல்லா வகையினருக்குமானவை என்பது என் கருத்து. அவைகள் படமாக்கப்பட்டால் நான் தன்யனாயிருப்பேன்.

5. சரி. இவ்வளவு சொல்லிவிட்டு இதில் உள்ள மையத்தையும் நான் உங்கள் முன் வைக்கின்றேன். இங்கு இருக்கும் கலைக்கூடங்கள், கலை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய விசயங்களை எடுத்துச் செல்வதும், அதற்கு அவர்கள் செவிசாய்ப்பதும் ஒரு வழி. அதே வேளையில், நம் சமூகம் பற்றி ஒரு பரந்து பட்ட அறிவை அச்சமூகத்தின் இலக்கியங்கள் மட்டுமே தர முடியும் என புரிந்து கொள்கின்றேன். ஏனெனில், நம் தமிழகத்தை பொறுத்தவரையில், ஒவ்வொர் இடமும் (திருநெல்வேலி, மதுரை, கோயமுத்தூர், அருப்புக்கோட்டை(கரிசல் காடு), ராமனாதபுரம், மேலும் பல) பிரத்யேகமான் பழக்க வழக்கங்களையும், மகிழ்ச்சி துக்கங்கள் கொண்டாடும் முறைமைகளையும், கொண்டியங்கும் ஒரு ஐக்கியம். இவைகளை பதிவு செய்ய ஆரம்பித்தாலே, எண்ணற்ற காவியங்களும், திரைச்சித்திரங்களும் நம் கண்முன் விரியும்.

நம்மிடம் தானியங்கள் உள்ளது. சட்டியும் உள்ளது. அகப்பையும் உள்ளது. நெருப்பும் உள்ளது.

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்

பாலாஜி-பாரி
www.paari.blogspot.com

சன்னாசி said...

பாலாஜி,

நான் சுற்றிவளைத்துச் சொன்னவற்றை நீங்கள் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள். நான் நமது கலாச்சாரத்தைக் குறைசொல்லவில்லை - அப்படிச் செய்யும் எண்ணம் வரவும் வராது. நீங்கள் சொன்னது சரி - சட்டியும் இருக்கிறது, அகப்பையும், நெருப்பும் அனைத்தும் இருக்கிறது, ஆனால் சமைக்காமல் வெறும் சட்டியைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோமோ என்று பட்டதைத்தான் சொன்னேன்.

நூல்கள் என்ற விதத்தில்கூட, நமது கலாச்சாரத்தை வெறும் பிரதிபலிப்பதாக மட்டும் இல்லாமல், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் கருவிகளாக அவை பயன்பட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. உண்மை - புத்தகங்கள் மட்டும் போதாது, சமுதாயத்தை முன்னிறுத்தப் பயன்படுபவை வெறும் புத்தகங்கள் மட்டுமே அல்ல - திரைப்படங்கள், இசை, ஆளுமைகள் (personalities), வெகுஜன ஊடகங்கள், கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நேர்மை, ஒத்தொழுகல் (civic sense), பிரதிமனிதத் தனித்துவம் - இவையனைத்தும் கலந்த ஒரு amalgam மட்டுமே.

இலக்கியம் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரும் இலக்கியம் படைக்கமுடியாது - அதேதான் அனைத்துக் கலை வெளிப்பாடுகளுக்கும். ஆட்கள் செய்யாததை நாட்கள் செய்யும் - எவ்வெவற்றைக் காலம் தன் இடுப்பில் வைத்துப் போஷிக்கிறது,எவ்வெவற்றைக் காலால் உதைத்துத் தள்ளுகிறது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது; இந்தக் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதையாவது நாம் உணரமுடிந்தால், அதுவே ஒரு பெரிய முன்னெடுத்த அடியாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை இலக்கியமும் pulp fictionம் mutually exclusive கிடையாது. அப்படி ஒரு வாசிப்பு ரசனையுள்ள சமுதாயம் இருக்கிறது என்று யாராவது சொன்னால், அதை நம்பவும் முடியாது என்னால்.

உங்களது எதிர்வினைக்கு மிக்க நன்றி..

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

/இலக்கியம் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரும் இலக்கியம் படைக்கமுடியாது - ... இந்தக் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதையாவது நாம் உணரமுடிந்தால், அதுவே ஒரு பெரிய முன்னெடுத்த அடியாக இருக்கும்./
என்ன சொல்ல வருகின்றீர்கள்? :-(
இலக்கியம் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரும் இலக்கியம் படைக்கமுடியாது - என்பதை அதைப்பற்றி விவாதிக்கக்கூடிய அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், உங்களுடைய தொடர்ச்சியான "இந்தக் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதையாவது நாம் உணரமுடிந்தால், அதுவே ஒரு பெரிய முன்னெடுத்த அடியாக இருக்கும்" முன்னுக்குப் பின் முரணாக அல்லவோ இருக்கிறது.

-/பெயரிலி. said...

/மக்மல்பாஃப், கியோரஸ்தோமி போன்ற இரானிய இயக்குனர்களின் படங்கள் அரசியலைத் தாண்டியவை எனினும், அயதுல்லாக்களின் புகழ்பாடும் படங்களை அவர்கள் எடுத்தால், எவ்வளவுதான் கலைத்துவத்தில் அவை உன்னதமாக இருந்தாலும், மேற்கில் ஒப்புக்கொள்ளப்படாது./
உண்மை.
இதை Abbas Kiarostami யே தனது செவ்வியொன்றிலே ஈரானிய தணிக்கை பற்றிச் சொல்லும்போது, சொல்கிறார். (Ta'm e guilass [A Taste of Cherry] (1997) இன் எண்ணியவிழியத்திலே இந்தச்செவ்வி இணைக்கப்பட்டிருக்கின்றது.)

சன்னாசி said...

1)இலக்கியம் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரும் இலக்கியம் படைக்கமுடியாது

2)இந்தக் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்ள முடியாது

3)இந்தக் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதையாவது நாம் உணரமுடிந்தால், அதுவே ஒரு பெரிய முன்னெடுத்த அடியாக இருக்கும்

அதாவது,என் கருத்து எனது, உன் கருத்து உனது.
1) - என் கருத்து.
2) - என் கருத்து என்னைப் பொறுத்தவரையிலும் உண்மையாயிருப்பதாக நான் நம்பினாலும், அனைவரும் அதை ஒத்துக்கொள்ளவேண்டுமென்று அவசியமில்லை.
3) - கூற்று 2)ம் சாத்தியம் என்று உணர்வதன்மூலம், என் inherant bias ஐ நான் குறைத்துக்கொள்ள முயல்கிறேன், பிறர் கருத்துக்களுக்கு என் காதுகளை மூடிக்கொள்ளாமலிருக்க முயல்கிறேன்; இப்படித்தான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன் என்று பிறருக்குச் சொல்லவும் முயல்கிறேன். சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள அவசியமில்லை என்ற சாத்தியத்தையும் ஒத்துக்கொள்வது 2),என்னைப்போல உனக்கும் ஒரு கருத்து இருக்கலாம் என்பதை வலியுறுத்துவது 1). ஒருவகையில் இவை மூன்றும் circular ஆக ஒன்றுடனொன்று பொருந்திக்கொள்ளும் - அதனால்...

Jayaprakash Sampath said...

//வெகு புதிய ஆசிரியர்களையும் ஆங்கிலத்தில் எடுத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட ஆங்கில எழுத்தாளர்களுக்கு (வார்த்தை சிக்கவில்லை) இணையாக (வார்த்தை சரியில்லை, ஆனால் புரியுமென்று நினைக்கிறேன்) எழுதும்/எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்களா?//

அப்படி இருந்தே ஆகவேண்டுமா?

//முதலில் அந்தப் படங்கள் மாதிரியாவது எடுக்கிறோமா என்று பார்க்கவேண்டும். அல்லது, பெர்க்மன், மக்மல்பாஃப், ஓஸு, ரெனே போன்ற இயக்குனர்களே, அல்லது அட்லீஸ்ட் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரான், ஜோயல் ஷூமாக்கர் அளவுகூடத் தமிழில் இல்லை//

அதல்லாம் சும்மா. எந்தப் படமாக இருந்தாலும், அதற்குரிய உழைப்பும், பார்க்க வருகின்ற ரசிகனைப் புரிந்து கொள்ளுதலும் இருந்தால் தான் படம் வெற்றி பெறும். கலைப்படங்கள் ஓடாது. மசாலாப் படங்கள் தான் ஓடும் என்பது பழைய கதை. நம்ம ஊர் ரசனை அப்படிப் பட்டது. மற்ற ஊர்களில் இருப்பது போன்ற தீம் based விருந்து எல்லாம் நம்ம ஊரில் கிடையாது. கல்யாணம், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டுவிழா, சீமந்தம், காரியம் ஆகிய எந்த விசேஷமாக இருந்தாலும், சாப்பாட்டு, இனிப்பு, பருப்பில் இருந்து துவங்கி, அவியல், கூட்டு, சாம்பார், பொரியல், குழம்பு, ரசம் , இடையில் பாயாசம் என்று வந்து இறுதியில் மோர் சாதம் எலுமிச்சை ஊறுகாயில் வந்து முடியும். இந்த மனநிலையைத்தான் நம் திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன. நம் ரசிகனுக்கு எல்லாம் தேவை. குதித்து ஆடவேண்டும். கட்டிப்பிடித்து அழவேண்டும். ஹீரோ வேகமாக இங்கிலீஸில் பேசவேண்டும். அடங்காப்பிடாரி ஈரோயினியை கன்னத்தில் சப்சப் என்று அறையவேண்டும். தாலி செண்டிமெண்ட், கவுண்டமணி செந்தில் நகைச்சுவை என்று எல்லா ஐட்டங்களும் ஒரே படத்தில் அவனுக்கு வேண்டும். இல்லாவிட்டால் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே சீட்டில் நெளிவான்.

ஒரே ஒரு போன் பூத்தில் மொத்த படத்தையும் வைத்து எடுத்த படம் சத்யம் சினிப்ளெக்ஸில் நூறுநாள் ஓடலாம். ஆனால், அது katie holmes நடித்த ( சாரி ... ஹீரொ பேர் தெரியாது :-)ஆங்கிலப் படமாக இருக்கும். தமிழில் அது போல எடுத்தால் ' போடா வெண்ணே' என்பார்கள். தமிழ்த் திரைப்படங்களும் ஆங்கிலத் திரைப்படங்களும் வெவ்வேறு மிருகங்கள். அவற்றை ஒப்பிடமுடியாது. இதே போல இருக்கிறது என்று அதையோ, அதைப் போல இருக்கிறது என்று இதையோ சொல்வதற்கு முன்பு, இரு படங்களுக்குமான ஒற்றுமை தற்செயலாக இருக்கலாமோ என்ற சிந்தனைக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள படங்கள், அவற்றில் பிறமொழி மூலங்கள் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. பேபீஸ் டே அவுட் என்ற படத்த்தின் மையக் கருத்தை , ரொம்ப நாள் முன்பு வந்த ( தேவராஜ்-மோகன் இயக்கிய ) பூந்தளிர் என்ற படத்தில் இருந்துதான் சுட்டார்களா என்று கேட்டால், உங்களுக்கு கோபம் வருமா என்று தெரிந்து கொள்ள ஆசை :-)

//இன்னொரு சமாச்சாரம். Speed என்று ஒரு படம் வந்தது. அதற்கு வெகு காலம் முன்பு, 'மோனா' விலோ 'குங்குமச் சிமி'ழிலோ அதே கதையைப் படித்திருக்கிறேன்! எழுதியவர் பெயர் நினைவில்லை. அதே பஸ், அதே உத்தி! இதற்கு என்ன சொல்வது//

அந்தக் கதையை எழுதியவர், நம் சக வலைப்பதிவாளர் சத்யராஜ்குமார்

//ஆயுத எழுத்து ஒரு டப்பா படம். அதில் எந்த சந்தேகமுமில்லை. தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்திருக்கவேண்டிய படத்தைத் தமிழில் மணிரத்னம் எடுத்துவிட்டதாகக் கொள்ளலாம்//

சுந்தர.ராமசாமியை, சுந்தரராமசாமி என்று தப்பும் தவறுமாகக் குறிப்பிடுவதாக அடிக்கடி குறை பட்டுக் கொள்வார். பெயரைக் சரியாக சொல்வது அவருக்கு நாம் காட்டும் மரியாதையைக் குறிப்பிடுகிறது . மணிரத்னமும் அது போல நினைக்கலாம். ஆதலால் இனிமேல், ஆயுத எழுத்தை, ஆய்த எழுத்து என்று குறிப்பிடுங்கள்.

//'வந்தனம்' படத்தின் க்ளைமாக்ஸையும், அதே படத்தின் தெலுங்கு வடிவமான (தெலுங்கிலும் 'வந்தனம்' தான்) நாகார்ஜூனா படத்தின் க்ளைமாக்ஸையும் பார்க்கவும்! வித்தியாசம் தெரியும்//

தெலுங்கில் அந்தப் படத்தின் பெயர் நிர்ணயம்.சொன்னனே, நம் ரசிகனின் மனநிலை பற்றி... அது தெலுங்கு ரசிகனுக்கும் பொருந்தும். 'காக்க காக்க' படத்தில் ஜோதிகாவை சாக அடித்த அதே கெளதம் தான், அதன் தெலுங்குப் பதிப்பில் ( கர்ஷனா) க்ளைமாக்ஸில், ஈரோ, ஈரோயினியை சேர்த்து வைத்து சுபமாக முடித்து வைத்தார். பின்னே...வெங்கடேசு ரசிகர் மன்றம், கொதித்து எழுந்தால், நீங்களா வந்து தாங்கிப் பிடிப்பீர்கள் :-) ?

சன்னாசி said...

திரு. பிரகாஷ்,

அடிப்படையில் ஒரு விஷயம் தவறு. இதை நான் தமிழ் சினிமாவைப்பற்றிய விமர்சனமாக எழுதவில்லை - ஆய்த எழுத்து (மன்னிக்க;) பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவைப்பற்றிய என் கருத்துக்களாக எழுதினேன்.

ஃபோன் பூத்திலேயே நடக்கும் படத்தின் பெயரும் 'Phone Booth' தான். காலின் ஃபாரல், கீஃபர் சுதர்லாண்ட் ஆகியோர் நடித்தது.

//தமிழ்த் திரைப்படங்களும் ஆங்கிலத் திரைப்படங்களும் வெவ்வேறு மிருகங்கள். அவற்றை ஒப்பிடமுடியாது.//

பிரகாஷ், ஆங்கிலப் படங்கள் வேறு வகை மிருகம் என்பது ஓரளவே உண்மை என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 'குடும்பக்கதைகள்' போன்ற ஆங்கிலப்படங்களும் உண்டு - ஒரு லிஸ்ட் தருகிறேன்...

Terms of endearment
Steel magnolias
American beauty ... லிஸ்ட்டை வளர்ப்பது என் எண்ணமல்ல, அதனால், stopstopstopstop....

நமது 'லவ் ஸ்டோரிகள்' போல் ஆங்கிலத்தில் படங்களே இல்லையா? இருக்கிறது, அவற்றை 'Chick flicks' என்கிறார்கள் நக்கலாய்! லிஸ்ட் தந்தால் பக்கம் பத்தாது.

நான் ஆங்கிலப் படங்கள் போல் எடு என்று சொல்லவில்லை. அப்படி அசட்டுத்தனமாக கமெண்ட் அடிக்கும் அபிப்ராயம் என்றும் இருந்ததில்லை. ஆனால், 'Garbage should be good because a million flies can't be wrong' என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. குப்பைகள் அனைத்து உலக மொழிகளிலும் உள்ளன என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ்க்குப்பை என்பதால் மட்டும் அதைத் தலையில் வைத்துக் கொண்டாட முடியாது என்பதே என் தாழ்மையான அபிப்ராயம்.

தெலுங்கு, தமிழ் ரசனைகள் பற்றி - நான் இரண்டு வருடங்கள் ஆந்திராவில் இருந்ததுண்டு. பாலகிருஷ்ணா படங்களை, அய்யோ தேவுடு கொடுக்கு என்றெல்லாம் பார்த்ததில்லை, ஆனால் தெலுங்கில் பிடித்த படங்கள் - குறிப்பாக ராம்கோபால் வர்மா படங்கள் எத்தனையோ உண்டு. தமிழில் டப் செய்யப்பட்ட உதயம் மற்றும் 'என்னமோ நடக்குது' படங்களை எத்தனை தடவை பார்த்திருப்பேனென்று எனக்கே நினைவில்லை. ஆந்திராவில் இருக்கிறேனென்று நன்றிக்கடன் செலுத்துவதற்காகவெல்லாம் உதவாத படங்களை ஆ ஊ என்று கொண்டாட முடியாது. இதனால் ஏதோ ஆந்திர மக்களை மட்டந்தட்டுவதாக நினைக்கவேண்டாம்.

//நம்ம ஊர் ரசனை அப்படிப் பட்டது.மற்ற ஊர்களில் இருப்பது போன்ற தீம் based விருந்து எல்லாம் நம்ம ஊரில் கிடையாது. கல்யாணம், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டுவிழா, சீமந்தம், காரியம் ஆகிய எந்த விசேஷமாக இருந்தாலும், சாப்பாட்டு, இனிப்பு, பருப்பில் இருந்து துவங்கி, அவியல், கூட்டு, சாம்பார், பொரியல், குழம்பு, ரசம் , இடையில் பாயாசம் என்று வந்து இறுதியில் மோர் சாதம் எலுமிச்சை ஊறுகாயில் வந்து முடியும்.//

நாம் இதையெல்லாம் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டுதான் எழுதுகிறோமென நினைக்கிறேன்? சப்பாத்தி குருமா சாப்பிட்டதேயில்லையா நாம்? எழுதுகோல் தாண்டி கணிப்பொறி வரை வந்துவிட்டோமென்று நினைக்கிறேன்? மன்னிக்க, சாப்பாட்டை சாப்பாட்டால் அடிக்கத்தான் சப்பாத்தி குருமாவையெல்லாம் துணைக்கழைக்கவேண்டியதாய்ப் போயிற்று! நம்ம ஊர் ரசனை அப்படிப்பட்டது என்பதெல்லாம் சரி, அதை ossify செய்து மியூசியத்தில் வைக்காமல், எப்படி அதைப் புதுப்பிக்க முடியுமென்று யோசிப்பது இன்னும் நல்லதோ என்னவோ?

நம்ம ஊர் ரசனை அப்படிப்பட்டது என்பதெல்லாம் ஆர்.பி.சௌத்ரி வசனங்கள். ஏன் நம் ஜனங்கள் சேது பார்க்கவில்லையா? அதில் காமெடி எங்கே இருந்தது? அம்மா சென்டிமெண்ட் எங்கே? தங்கச்சி சென்டிமெண்ட் எங்கே? குரூப் ஃபோட்டோவுடனா படம் முடிந்தது? item டான்ஸ் இருந்ததா? சுவிட்ஸர்லாந்தில் பாட்டு இருந்ததா?

பிரகாஷ்,ஒன்று புரிந்துகொள்ளுங்கள் - God of small things புத்தகத்தில் ஒரு வரி வரும் - 'எங்குவேண்டுமானாலும் புகுந்து எங்குவேண்டுமானாலும் வெளிவர முடியும் நம் இதிகாசங்களைப் போல' என்று? அதுதான் நம் மனோநிலை. Eastern mind is intuitive and external, western mind is intellectual and internal என்பதுண்டு. நமது மனோநிலை இயங்கும் தளம் வேறு, மேற்கின் தளங்கள் வேறு. அது புரியாமலில்லை, ஆனால், 'இதுதான் நம்ம ரசனை' என்றால்? என் மூளைக்கு எட்டவில்லை? நானும் தமிழ்தான் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

//நம் ரசிகனுக்கு எல்லாம் தேவை. குதித்து ஆடவேண்டும். கட்டிப்பிடித்து அழவேண்டும். ஹீரோ வேகமாக இங்கிலீஸில் பேசவேண்டும். அடங்காப்பிடாரி ஈரோயினியை கன்னத்தில் சப்சப் என்று அறையவேண்டும். தாலி செண்டிமெண்ட், கவுண்டமணி செந்தில் நகைச்சுவை என்று எல்லா ஐட்டங்களும் ஒரே படத்தில் அவனுக்கு வேண்டும். இல்லாவிட்டால் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே சீட்டில் நெளிவான்.//

இதுவும் மற்றொரு ஆர்.பி.சௌத்ரி school of thought எனலாம்! என்னடா நீ ஆங்கிலப் பருப்பு நம்ம படங்களைக் குறை சொல்றே என்ற ரீதியில் இது எழுதப்பட்டிருப்பதாக எனக்குப் படுவது என் தவறாக இருந்தால் பொறுத்தருள்க. அந்தப் பதிவில், ஏன் சும்மாச் சும்மா மணிரத்னத்துக்கு ஆப்பு அடிக்கிறீர்கள் என்று கேட்டதையும், அவரது படங்கள் பிடிக்குமென்று சொன்னதையும் நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் போல. இனி, உங்கள் கருத்து குறித்து. படம் எடுப்பவன் புத்திசாலியாகவும், பார்ப்பவன் மடையனாகவும் இருந்தால் போதும் என்கிறீர்கள்! தமிழ்த் திரைப்பட ரசிகனை அவ்வளவு கீழ்த்தரமாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்ப்படத் தாக்குனர்களெல்லாம் சொல்லும் முதல் விஷயம் 'என்னய்யா இது அஞ்சு பாட்டு ஆறு பைட்டு, இங்கிலிபீசு படத்துல இப்படியா இருக்கு' என்பது. சொன்னது யார் என்று நினைவில்லை - எஸ்.ஏ.பி.அண்ணாமலையாக இருக்க வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட அது இப்படி இருந்தது: 'குழந்தையை என்னென்னமோ சொல்லிக் கொஞ்சுகிறோம் (ஜூஜ்ஜூ ஜிஜ்ஜூ இத்யாதி), அதற்கு அர்த்தம் ஏதுமில்லை, ஆனால் அவ்வார்த்தைகள் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்துகின்றன, அதுபோல்தான் பாடல்களும்' என்பது. அதுவும் புரியாமல் இல்லை. தமிழில் genre படங்கள் எடுத்துத் தள்ளுங்கள் என்று சொல்லவில்லை. என்ன சொல்வது நான்? நீங்கள் விஷயத்தை out of contextல் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

//இதையோ சொல்வதற்கு முன்பு, இரு படங்களுக்குமான ஒற்றுமை தற்செயலாக இருக்கலாமோ என்ற சிந்தனைக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். //

இதை விளக்க ரமேஷ்-பிரேமின் ஒரு கதை உள்ளது. படிக்கச்சொன்னால், புரியாமல் எழுதித்தொலைகிறார்கள் என்பீர்கள். அந்த வம்புக்கு நான் வரவில்லை. உங்களது கல்கி 'புரியுதா இல்லையா' கட்டுரையை மிக ரசித்தேன் (உங்க blogல் படித்தேன்)!! wink wink!! அதனால், ஒரேமாதிரி யோசித்துத்தொலைவது என்ற concept ஐ வைத்து ஆர்னிகா நாசர் ஒரு கதை எழுதியிருக்கிறார், அதைப் படித்துப் பார்க்கவும், அல்லது அவரிடமே கேட்கவும். நாலு பக்கத்துக்குள்தான் இருக்கும்.

//சுந்தர.ராமசாமியை, சுந்தரராமசாமி என்று தப்பும் தவறுமாகக் குறிப்பிடுவதாக அடிக்கடி குறை பட்டுக் கொள்வார். பெயரைக் சரியாக சொல்வது அவருக்கு நாம் காட்டும் மரியாதையைக் குறிப்பிடுகிறது . மணிரத்னமும் அது போல நினைக்கலாம். ஆதலால் இனிமேல், ஆயுத எழுத்தை, ஆய்த எழுத்து என்று குறிப்பிடுங்கள்.//

தவறுக்கு மன்னிக்க. ஆனால், factual error என்பதைக்குறித்து அதிகமாக வருத்தப்பட ஒன்றுமில்லை என்பது என் அபிப்ராயம், இருந்தாலும் தவறுக்கு வருந்துகிறேன்.

//தெலுங்கில் அந்தப் படத்தின் பெயர் நிர்ணயம்.சொன்னனே, நம் ரசிகனின் மனநிலை பற்றி... அது தெலுங்கு ரசிகனுக்கும் பொருந்தும். 'காக்க காக்க' படத்தில் ஜோதிகாவை சாக அடித்த அதே கெளதம் தான், அதன் தெலுங்குப் பதிப்பில் ( கர்ஷனா) க்ளைமாக்ஸில், ஈரோ, ஈரோயினியை சேர்த்து வைத்து சுபமாக முடித்து வைத்தார். பின்னே...வெங்கடேசு ரசிகர் மன்றம், கொதித்து எழுந்தால், நீங்களா வந்து தாங்கிப் பிடிப்பீர்கள் :-) ?//

மறுபடி ஒரு தவறு. இரண்டு படங்களும் நான் highschoolல் படிக்கும்போது பார்த்தது, நினைவிலிருந்து எழுதினாலும், தவறு தவறுதான். பின்பு, அவர் வெங்கடேசு அல்ல, அவர் பெயர் எங்க்ட்டேசு. நானும் ஒரு எங்க்ட்டேசு, நாகார்ஜுனா ரசிகன் என்பதையும் நினைவில் கொள்க.

dondu(#11168674346665545885) said...

Speed was written in Tamil by Rajesh Kumar, starring Inspector Vivek. It was a monthly novel.

n.prithivi said...

சினிமா சம்பந்தமா ஏதோ எழுதியிருக்கேன்னு ஆர்வமா படிக்க ஆரம்பிசேன்..... 2004-ல் படிக்க ஆரம்பித்து இப்பதான் முடிச்சேன்........ தமிழ் நாவல்கள் எல்லாதுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..... ஒரு 40 50 பக்கம் கடந்தப்புரமும் கதைக்கே வர மாட்டாங்க.... முதலில் படிக்கிர மாதிரி நாவல் எழுதட்டும் அப்புரமா அதை படமாக்குவது பற்றி யோசிக்கலாம்.....