Thursday, October 28, 2004

இழிசொல் அகராதி

நேற்று ஒரு சின்னப் பேச்சின்போது 'Third world'என்ற பதம் எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது என்று யோசித்தேன். அரசியல் பற்றிய விவாதத்தில் அந்தப் பேச்சு வந்தது. பின்னோக்கி யோசித்தபோது, ஜான் கெர்ரி, புஷ்ஷுடனான ஒரு விவாதத்தில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்து இறக்குமதி செய்வதைக்குறித்துச் சொன்னபோது, ``We're not talking about some Third World country, folks, we're talking about Canada.'' என்று தத்துவார்த்தமாக கூறியது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது நல்லெண்ணத்தில்தான் என்று நம்புவோம் - அதாவது, மருந்துகள் இறக்குமதி செய்தால் தரமான மருந்துகளாக இருக்கவேண்டும், சும்மா மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளக்கூடாது என்றார் என்று நினைக்கிறேன் - அது சரிதானே! மக்களின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா! நம் மருந்துகளைத் தின்று நாம் இவ்வளவு நாட்களாகச் செத்துப்போய்க்கொண்டிருந்ததால்தானே நமது மக்கள்தொகை நூறு கோடிக்கு உயர்ந்திருக்கிறது! கலாச்சாரச் செருப்படிக்குக் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகளைக் கோர்த்து நாம் மாலையாகப் போட்டுக்கொள்ளுமளவு சுரணையற்றுப் போய்விட்டோமோ என்று நினைத்துப் பார்க்கும்போதே கொடுமையாக இருக்கிறது. நாம் மட்டும் அல்ல, உதாரணத்துக்கு, 'Third world academy of sciences' என்ற பெயர்! 'மூன்றாம் உலகம்' என்பதற்கு அகராதியில் மூன்று அர்த்தங்கள் கொடுத்திருந்தாலும், மூன்றாவது அர்த்தமே தற்போதைய சூழ்நிலையில் அதற்கு மிகப் பொருத்தமாக உபயோகிக்கப்படுகிறதென்று நினைக்கிறேன். நமது விஞ்ஞானிகள் சிலரின் வலைப்பக்கத்தில் 'மூன்றாமுலக நாடுகளின் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினர்' என்றுகூடப் பார்த்திருக்கிறேன். சரி, அதன் நோக்கத்தில் தவறேதுமில்லை, ஆனால் அந்தப் பெயர்? இனிமேல் அதை யாரேனும் மாற்றினால் கூட, மாற்றிய பெயருக்கடுத்து அடைப்புக்குறிக்குள் 'Formerly மூன்றாமுலக.......ராமாயணம்' என்று இருக்கவே செய்யும். இல்லை இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் நான் பாரனாய்டு கணக்காக ஊதிப் பெரிதாக்கிக்கொள்கிறேனா? பள்ளியில் ஆஃப்ரிக்கா ஒரு 'இருண்ட கண்டம்' என்று எத்தனை முறை உணர்ச்சியில்லாமல் சொல்லியிருக்கிறோமோ? பெயர் வெறும் பெயர்தான், ஆனால் இவற்றை மேம்போக்காக ஒப்புக்கொள்வதை மட்டும் ஏனோ ஒப்புக்கொள்ளமுடிவதில்லை. இந்தமாதிரி வார்த்தைகளைமட்டும் பிரஷ்டம் செய்யவேண்டுமானால் மட்டுமே ஒரு பெரிய அகராதி போடவேண்டியிருக்குமென்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல திட்டம்தான். 'இழிசொல் அகராதி' என்று கொண்டுவரலாம்!!

Wednesday, October 27, 2004

ரசிகனானேன்.....


Girl with a pearl earring













ரொம்ப நாள் கழித்து சமீபத்தில் ஒரு நடிகையின் ரசிகனானேன். குஷ்பு அலையின் நடுவில் அமலா, கௌதமி, என்று மைனாரிட்டி நடிகைகளின், மற்றும் மது சாப்ரே, கேட் மாஸ் போன்ற மைனாரிட்டி மாடல்களின் ரசிகனாக பள்ளி, கல்லூரிக்காலங்களில் இருந்தபிறகு ஒரு சின்ன இடைவெளி. அதன்பிறகு இந்த நடிகை - இவளது இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன், இரண்டும் மிகவும் பிடித்துப்போனது. முதலாவது Lost in Translation. ஜப்பானில் சற்றுநாள் தங்கியிருக்கும் இரு அமெரிக்கர்கள் மொழி, கலாச்சாரம் புரியாமல் தடுமாறுவதை விவரிக்கும் ஒரு மெலிதான நகைச்சுவைப் படம், மற்றொன்று, யான் வெர்மீர் என்ற டச்சு ஓவியரின் புகழ்பெற்ற ஓவியமான Girl with a pearl earring பற்றியது. அந்த ஓவியத்துக்குப் பாவனைசெய்த பெண் நிஜத்தில் வெர்மீர் வீட்டுப் பணிப்பெண் என்ற ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட படம். இதன் விமர்சனங்களில் ஒன்றின் ஒரு வாக்கியம், 'படம் பார்த்தபோது ஓவியம் காய்ந்துகொண்டிருந்த உணர்வே இருந்தது' என்றது. DVD பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் தயவுசெய்து பார்க்க முயலவும், VHS ஐத் தவிர்த்துவிடுங்கள்: அப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம் போலவே இருந்தது என்றால் அது மிகையல்ல...ஆலந்தில் நடக்கும் கதை என்றே தோன்றாமல் ஏதோ நம் ஊர்ப் பச்சைப் பசுமைகளைப் பார்த்தது போலொரு உணர்வு. ஸ்கார்லெட் யோகன்ஸ்ஸன் என்ற இந்த நடிகையைத் திடீரென்று பிடித்துப்போனது படத்தினாலா அல்லது படங்கள் பிடித்துப்போனது அவளாலா என்று தெரியவில்லை. Mission Impossible 3 படத்திலும் இவள் இருப்பதால், அப்போது தெரிந்துவிடும் எதால் எதைப் பிடித்ததென்று.

Tuesday, October 26, 2004

வரையும் கைகள்


வரையும் கைகள் - எம்.சி. எஸ்ச்சர்

மிகவும் பழக்கமான படம் இது என்றாலும்,எழுத்தைப்பற்றி எவ்வளவு விஷயங்கள் சொல்கிறது இது! மேலும் இவரது ஓவியங்கள்...

Monday, October 25, 2004

Food TV

இன்று Halloween க்கு முந்தைய வாரம் என்பதால் அனைத்து சேனல்களிலும் அது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளே. எனக்குச் சிக்கியதில் குரூரமானது Food Channel ல் நான் பார்க்கநேர்ந்த ஒரு நிகழ்ச்சி!! ரேச்சல் ரே மற்றும் மற்றொரு ஷெஃப் இருவரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் போல வேஷத்தில் ஒரு சிதிலமடைந்த இடத்தில் சமைப்பது போல ஒரு scenario!! இதில் குரூரம் என்னவென்றால், இருவரும் எகிப்திய மம்மி போன்று ஒரு பண்டம் சமைத்தார்கள்! ham, அரைக்கப்பட்ட கோழி, துருவப்பட்ட பாலாடைக்கட்டி அனைத்தையும் ஒரு மம்மி போலப் பிசைந்து, அதை 'ஸரின் ராப்'பில் சுற்றி, தலை, தோள்கள் மற்றும் உடல் என்று வடிவமைத்து, அதைச் சுற்றி மெலிதான துணிபோன்ற மாவைச் சுற்றினர். வழக்கம்போல ஒரு baked அயிட்டம் தான்! இருந்தாலும், மம்மிகளைச் சுற்றிச் சீராக வெட்டப்பட்ட ----மாவுத் துண்டுகளை பிளாஸ்திரிகளைப் போலச் சுற்றி (realism!), அதை baking ovenல் வைத்தனர். அவித்து எடுத்தபிறகு, சவப்பெட்டி போன்ற ஒரு பாத்திரத்தில் அதை வைத்து, கூழாக்கப்பட்ட சிவப்பு மிளகாய் சாஸை அதைச்சுற்றி அகழி மாதிரி ஊற்றி, மம்மியின் முகத்தில் இரண்டு ஆலிவ்களைக் கண்கள் போல வைத்து, மற்றொரு சாஸை 'smily face' வாய் மாதிரி ஊற்றியதும், அவிக்கப்பட்ட மம்மி சாப்பிட ரெடி! பேய் பங்களா மாதிரியான செட்டப்பில் தரையிலிருந்து புகை வேறு வந்துகொண்டிருந்தது. பச்சை நிறத்தில் மார்கரீட்டா என்றாலே எனக்குச் சற்றுக் குமட்டலெடுக்கும் என்பதால், மம்மியை அறுத்துச் சாப்பிடுவது என்ற யோசனையே, இதைவிடப் பேசாமல் புஷ் பேசுவதையாவது கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கவைத்துவிட்டது! ரேச்சல் ரேயும், மற்ற ஷெஃப்பும் அவிக்கப்பட்ட மம்மியை உருவி, அதை பேக்கிங் தட்டிலிருந்து எடுத்து வைக்கத் தேடியபோது spatulaவைக் காணோம்! எங்கேடா சாமி என்று தேடினால், சுவரோரமாக நின்றுகொண்டிருந்த மற்றொரு மம்மி இளித்தவாறு வந்து இரண்டு கைகளிலும் இரண்டு தட்டைக்கரண்டிகளை நீட்டியது!! போதையெல்லாம் இறங்கிப்போக, சாப்பிட்ட ரசம் சாதம், முட்டைப் பொரியல், ரஃப்பிள்ஸ் சிப்ஸ் அனைத்தும் சொடக்குப் போடுவதற்குள் செரித்துப் போயிற்று! ரேச்சல், மம்மி கையை அல்லது காலை அறுத்து சாஸில் முக்கி வாயில் போட்டவாறு, 'உம்ம்ம்ம்ம்ம்.........., yummy!' என்றுமட்டும் சொல்லியிருந்தால் கடவுளைத் துணைக்கழைத்தவாறு டி.வி பொட்டியை ஒரு தாக்கு தாக்கியிருப்பேன்! இந்தத் திருவிழா முடிந்ததும் அந்த மற்றொரு ஷெஃப் (எமெரில் லகாஸ்ஸி - எப்பவும் ஃபுல்லாகச் சாப்பிட்டு முடித்ததுமாதிரி ஒரு தோற்றம்!!) அவர் பங்குக்கு ரத்த சாஸ் (பயப்படத் தேவையில்லை, அது பெரும்பாலும் beet juice தான்!) துணையுடன் ஒரு உரித்த கோழியை வைத்து அடுத்த haலோவீன் பதார்த்தத்தைத் தொடங்க, ஆளை விடு சாமி என்று சேனலை மாற்றினேன்! அவ்வப்போது Food channel பார்த்து ஏதாவது பதார்த்தங்களைச் செய்யமுயன்று நண்பர்களை இம்சை செய்வதுண்டு - இன்னும் சற்று நாட்களுக்கு அதிலிருந்து விடுதலை!! பல நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் லெனினைப் பெரிய கேக் போலச் செய்து மக்கள் அனைவரும் சுற்றிநின்று அறுத்துச் சாப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. என்ன ஆக்ரோஷத்துடன் ஒவ்வொருவரும் அந்தக் கேக்கை அறுத்திருப்பார்கள்!

Brrrrrr.... தவிர்க்கமுடியாமல், 'Red Dragon' படத்தில் டாக்டர் Haனிபல் லெக்டர், ஆர்க்கெஸ்ட்ராவில் அபஸ்வரமாக வாசிப்பவனைக் கொலைசெய்து அறுத்துச் சமைத்துப் பிற ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களுக்குப் பரிமாறுவதும், அதில் ஒரு பெண்மணி, ஸ்டீரியோடைப்பான, நாடகத்தனமான western munching sounds உடன் 'சவக் சவக் ம்ம்ம்ம்... சவக் சவக் சவக்' என்பதும் (இப்படி அவர்கள் சாப்பிடுவதைக்கூட ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்களா எனக் கேட்டால், Dil Chahta Hai பார்க்கவும்)தான் நினைவுக்கு வந்தது. ஒருமுறை யுனெஸ்கோ கூரியரில், மானுவெல் வாஸ்குவெஸ் மான்டெல்பான் என்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தேன். அவரது நாவல்களில் வரும் துப்பறிவாளன் எப்போதும் சமைத்துக்கொண்டே இருப்பான். ஏன் அப்படி என்று பேட்டியாளன் கேட்டபோது அவர், 'சமைப்பதுதான் உலகத்திலேயே மிகவும் நேர்த்தியான கொலைத்தொழில்; கொலையாளிகளைத் துப்பறிவாளன் கண்டுபிடிக்கிறான், தன் திருப்திக்குத் திரும்பத் திரும்ப சமைத்துக்கொள்கிறான்' என்றிருப்பார். அதைப் படித்த நாள் முழுவதும் மின்சாரம் தாக்கியதுபோல் செயலற்றிருந்தேன்! என்ன ஒரு நுட்பமான வாக்கியம்! அவர் இத்தனைக்கும் ஒரு சாதாரண துப்பறியும் நாவல்கள் எழுதும் எழுத்தாளர்தான் என்று நினைக்கிறேன். அவரது ஒரு புத்தகத்தையும், ஏன், ஒரு கதையையும்கூட நான் படித்தது கிடையாது! இருந்தாலும்....

முன்பே பரிச்சயமிருந்தபோதும், இங்கே வந்தபுதிதில் சூப்பர்மார்க்கெட்களில் display செய்யப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கான பிசாசு பொம்மைகள், அதீத வன்முறையுடனான வீடியோ கேம்கள், ஜப்பானிய anime போன்றவை சற்று சுவாரஸ்யமாவே இருந்தன. எவ்வளவுதூரம் இந்தக் கருத்தாக்கங்கள் நம் சமுதாயத்தினுள்ளும் ஊடுருவியுள்ளன, ஊடுருவத்தொடங்கியுள்ளன! தேவதைகள் என்றாலே வெள்ளை நிறம் என்று நமது மனம் உடனடியாக உருவகித்துக்கொள்வது மத்தியகாலத்திய ஐரோப்பிய Renaissance-Biblical ஓவியங்களின், கிறிஸ்துவக் கருத்தாக்கங்களின் தாக்கத்தினால் என்றும், நமது இந்தியத் துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆண் பொம்மைகளின் உடலமைப்பு ஒடுங்கிய தாடை, கூர்த்த மூக்கு, நீளமான கைகால்கள் என்றும், பெண் பொம்மைகளின் உடலமைப்பு நீளமான கழுத்து, குறுகிய இடை என்று பெரும்பாலான Caucasian வடிவமைப்புக்களுடன் இருப்பதும், அமெரிக்காவுக்கான சர்வதேசத் தொலைபேசி code '1' ஆக இருப்பதும், நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக நமது பெண்கள் Miss World அல்லது Miss Universe ஆனதும் தொடர்பில்லாததுபோல் தோன்றினாலும், தற்செயலான விஷயங்களில்லையென்று நினைக்கிறேன்!! ஆகமொத்தம், இன்றையபொழுது channel hoppingல் தடுக்கிவிழுந்த இடம் சரியில்லை!

Friday, October 22, 2004

தங்கத் தாரகை

ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது குறித்துச் செய்திகள் வந்தபோது, சரி வலைத்தளத்தில் ஏதாவது தேடிப் பார்க்கலாமென்று நினைத்தேன். விட்டுவிட்டேன். விகடனில் வந்த கட்டுரையில், 'விருது வழங்கிய அமைப்பு, தன் அங்கீகரிக்கப்பட்ட இணையத் தளத்தில் "ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு' என்று சொல்லியிருக்கிறார்கள்' என்று ஒரு உன்னதமான விளக்கத்தை டாக்டர் பிரகாஷ் சொல்லியிருக்கிறார்! நான் கூட ஒரு வலைத்தளம் ஆரம்பித்து அதில் என்னவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்பதால், ரஷ்ய மொழியில்என்ன இணையத்தளம் இருக்கிறது என்பதைத் தேடலாமென்று நினைத்தேன். விருது வழங்கிய Natalya Krivutsa வின் பெயர், இணையத்தில் வெகு சொற்பமாகவே அகப்பட்டது - கூகிள் தேடல் மூலம். கிடைத்த தேடலில், இந்தியப் பத்திரிகைகள், வலைத்தளங்கள் தவிர்த்து, ஒரு பக்கம் மட்டுமே ரஷ்ய மொழியில் , ஒரு பெரிய பட்டயம், IPO International Human Rights defence committee என்ற சொற்களோடு இருந்தது. அதை, ரஷ்ய-ஆங்கில இணையப்பக்க மொழிபெயர்ப்புத் தளத்தைக்கொண்டு மொழிபெயர்த்தேன். பற்பல பெயர்ச்சொற் தவறுகளும், சில இலக்கணப்பிழைகளும் இருக்க வாய்ப்புள்ளபோதும், என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப்பார்க்க இது போதும் என்று நினைக்கிறேன். மேலும், International Committee for Human Rights என்ற அமைப்புக்கு நடால்யா க்ரிவுத்ஸா தலைவராக உள்ளதாக அந்த வலைப்பக்கம் குறிப்பிட்டிருப்பதால், அதைத் தேடியபோது, அந்த அமைப்பின் வலைப்பக்கம் சிக்கியது. அதிலும் உருப்படியாகத் தகவல் ஏதும் இல்லை. வலைத்தளம் கட்டமைப்பின்கீழ் இருப்பதாகப் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யப் பக்கத்தில் IPO என்ற அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததைக்கொண்டு தேடினால், தொடர்புடையதாகக் கிடைத்தது International Progress Organization என்ற தளம். அதற்கும் இதற்கும் எவ்வளவு தொடர்புள்ளதென்று தெரியவில்லை. தொடர்பு உள்ளதென்றால், ஒரு சுவாரஸ்யமான திருப்பம்!! IPO ஏதும் அன்னானுக்குப் பரிசு வழங்கிவிடவில்லை, அவருக்கு நோபல் பரிசு வாங்குவதற்கு அது நார்வே அரசாங்கத்திடம் nomination சமர்ப்பித்து, ஆதரவு திரட்டியிருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஆதரவு திரட்டினால் நம்மைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாராயிருக்கமுடியும்?!!! IPO, ஐ.நா வுடன் ஆலோசக அந்தஸ்து மட்டுமே பெற்றுள்ளது. ஐ.நாவின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிந்தவரை படவில்லை. மேலும், இந்த அமைப்பு ஆஸ்திரிய, இந்திய மற்றும் எகிப்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகவும், முன்னாள் ஐ.நா தலைவர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பதாகவும் கூறுகிறது.

இந்த இணைப்புக்கள் கொண்டு, IHRDC (ஜெயலலிதாவுக்கு விருது வழங்கிய அமைப்பு) பற்றி ஆர்வமுள்ளவர்கள் இன்னும் தோண்டிப் பார்க்கலாம்!!
மொழிபெயர்க்கமுடியாத ரஷ்யமொழி முதல்பக்கம் (நடுவில் ஒரு கையெழுத்து இருப்பதால் மொழிபெயர்ப்பு வலைத்தளம் குழம்பிவிட்டதென்று நினைக்கிறேன்). அதன் கீழ்ப்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புக்களை மொழிபெயர்க்கப் பார்க்கவும். மொழிபெயர்த்து இணைப்புக் கொடுத்தால் சரியாக வரவில்லை (நல்ல வேளை, ஆட்டோ வராது!)

எந்த இடத்திலும், கோஃபி அன்னானுக்கு விருது வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படவில்லை.

Wednesday, October 20, 2004

மரபணுவில் கடவுள்

இந்த வார டைம் பத்திரிகையில், அட்டைப்படக் கட்டுரை, 'The God gene' என்பது. பக்தி என்பதைச் செலுத்தும் விசையாகச் சில குறிப்பிட்ட மரபணுக்கள் (genes) இயங்குகின்றதா என்பதைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரை. பதிப்புரிமைச் சிக்கல்கள் வரக்கூடுமென்பதால் நேரடியாக இணைப்புக் கொடுப்பதைத் தவிர்க்கிறேன். கொடுத்துள்ள இணைப்புவழி, எந்த இதழ் என்று அறியமுடியுமே தவிர, கட்டுரையைப் படிக்கமுடியாது. கட்டுரை, டீன் ஆமர் (Dean Hamer) என்ற அமெரிக்க தேசியப் புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியின் 'The God gene' என்ற புத்தகம் முன்வைக்கும் கருத்துக்களை விவாதிக்கிறது. புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. படித்தபின் ஒருநாள் மறுபடி எழுதுகிறேன். ஆனாலும், கட்டுரை, அவரது கருத்தை ஒத்துக்கொள்கிறதா இல்லையா என்ற கேள்வியைத் தவிர்த்துவிடுகிறது.

கட்டுரை, மதநம்பிக்கை, ஆன்மீகம் இரண்டையும் பிரித்து, 'ஆன்மீகம்' என்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருக்கின்றன என்று ஆமர் கூறுவதாகக் குறிப்பிடுகிறது. இதை நான் நம்புகிறேனா இல்லையா என்பதைக் கூறவேண்டுமானால்: இல்லை. இல்லை என்பதை, என் காலத்தில் நின்றுகொண்டு, என் அறிவுக்குட்பட்டுக் கூறமுடியும். அறிவியல் சோதனைகளில், குறிப்பாக இதுபோன்ற சோதனைகளில் confounding variables கணக்கற்று இருக்கும். அதைத் தவிர்க்க, இரட்டைப்பிறவிகளில் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆன்மீகம் போன்ற சோதனைகளில், ஒரே இடத்தில் பிறந்து வெவ்வேறு இடங்களில், வளர்ப்புமுறைகளின்கீழ் வளர்ந்த/ஒரே இடத்தில் பிறந்து ஒரே இடத்தில், வளர்ப்புமுறைகளின்கீழ் வளர்ந்த ஓரண்ட இரட்டையர்களின் (monozygotic twins) பழக்கவழக்கங்களை ஆராய்வதன்மூலம், மரபணுக்கள்*சுற்றுச்சூழல் என்ற இரு முக்கியக் காரணிகள் எந்த சதவீதத்தில் ஒரு மனிதனைப் பாதிக்கின்றன என்று ஆராய முடியும். இது, பலகாரணி நோய்களில் (multifactorial diseases) உபயோகப்பட்டாலும் (உடல்பருமன், டயாபடீஸ், ஆஸ்துமா போன்றவை உதாரணங்கள்), 'ஆன்மீகம்' என்ற nebulous விஷயத்துக்கு இந்த reductionistic approach எப்படிப் பொருந்துமென்று என்னால் இப்போதைக்கு கற்பனைசெய்ய இயலவில்லை. பின்பொருநாள் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு எழுதலாமென்று நினைக்கிறேன். வெறும்சரடு உபயோகமில்லை.

இதைப் படித்தபோது, எப்படி ஒவ்வொரு அழகியல் ஊகங்களும் (aesthetic speculations) விஞ்ஞானத்தினால் மறுதிருத்தம் செய்யப்படுகின்றன என்று தோன்றினாலும், அறிவியல் என்பது நிரூபணத்துக்கே பெரும்பாலும் உதவுகிறது - ஆதியிலிருந்தான ஒரு concept ஐ அதனால் சமைக்க முடியாது என்றே தோன்றும். இதுபற்றிய விவாதங்களை நான் அதிகம் படித்திராததால் இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானது என்று தெரியவில்லை. மனிதன் பறக்க முடியாது - மனிதன் பறந்தான்; நவக்கிரகங்கள் - ஒன்பது கோளங்கள்; உணர்வுகள் - neurotransmitter cocktail; இதுபோன்று எத்தனை விஷயங்கள் - ஆனால், ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை தான். இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஜூலியோ கொர்த்தாஸர்(hoolio என்ற உச்சரிப்பை அடிக்கமுடியவில்லை), தனது 'Hopscotch' புதினத்தில் ஒரு footnote ஆக, அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த 'உணர்வுகளின் விஞ்ஞானரீதியான விளக்கத்தை'க் குறிப்பிட்டிருப்பார். Hopscotch முழுவதுமே ஒரு highly emotional புத்தகம் என்பதால், அதற்குள் இதைப் படிக்கும்போது, ஒரு அழகியல் மனம் விஞ்ஞானத்தை எவ்வளவு தயக்கத்துடன் அணுகுகிறது - இவ்வளவு காலமும் மனம் ஆராதித்த உணர்வுகள் வெறும் வேதிச்செயலா என்று நம்பமறுக்கிறது என்பதும் மிகத் தெளிவாகப் புலப்படும்.


Tuesday, October 19, 2004

Sunday bloody sunday

U2 வின் 'Sunday bloody sunday' பிரபலமான ஒரு பாடல். அதை புஷ் (அவரது வார்த்தைகளுடன்) பாடுவதுபோல ஒரு remix செய்து இணையத்தில் போட்டிருக்கிறார்கள் - என் நண்பன் ஒருவன் இதைக் காண்பித்தான். இணைப்பைத் தொடர்க...Windows media playerல் சுலபமாகப் பாட்டுக் கேட்கலாம்! இந்த ஜனாதிபதித் தேர்தலில் புஷ் உபயோகித்த வார்த்தைகளை அப்படியே வெட்டி ஒட்டிப் பாட்டாக்கியிருக்கிறார்கள்!

Monday, October 18, 2004

வீரப்பன் காலி

ஒருவழியாக வீரப்பன் கதை முடிந்தது!

மூன்று வர்ணங்கள்

சமீபத்தில்தான் கீஸ்லாவ்ஸ்கியின் 'மூன்று வர்ணங்கள்' (Trois Couleurs) படத்தின் மூன்றாம், மற்றும் இறுதிப் பாகமான 'White' ஐப் பார்த்தேன். நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை மூன்றும் ஃபிரெஞ்சு மூவர்ணக் கொடியின் நிறங்கள். அவ்வளவாக ஃபிரெஞ்சுக் கலாச்சாரம் பற்றித் தெரியாததால் (புத்தகங்களில் படித்தது, சினிமாவில் பார்த்தது தவிர), இதில் jingoism ஏதாவது இருக்கிறதா என்று தெரியாது. படம் பார்த்த அனுபவம் அதுபோன்ற விஷயங்களுக்குச் சம்பந்தப்படாமலே இருந்துவிட்டதால் பிரச்னையில்லை.

முதலில் பார்த்ததும், காட்சிவாரியாக அவ்வளவாக நினைவில் தங்காததும் 'Blue'. ஜூலியட் பினோஷே தன் கணவனையும் குழந்தையையும் விபத்தில் இழக்கிறாள். அதன்பின் படம்முழுவதும் ஆக்கிரமிக்கத்தொடங்கும் இறுக்கம், இறுதிக்காட்சியில், ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்காக அவளது கணவன் எழுதத்தொடங்கி, அவள் முடித்த symphony இசைக்கத்தொடங்கும்போது இளக்கமடைந்து படம் முடிகிறது. கதையைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்பதால், திரும்பத் திரும்ப அவள் நீச்சல்குளத்தில் நீந்துவதும், படம் முழுவதும் அவளது தேகத்தின் இறுக்கமும் மட்டுமே இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. தனிமையைப்பற்றி எத்தனை படங்கள் பார்த்தாலும், நமது தனிமை என்பது நம்மிடமிருந்து கழன்றுபோகத்தொடங்கும்போது அந்நியத் தனிமையைப் பார்த்து நமது தனிமையைப் புதுப்பித்துக்கொள்கிறோம். படத்தில் தன் தனிமையைப் போக்க அவள் தொடர்ந்து நீந்துகிறாள். வியர்வை தெரியாமல் களைப்படையும் ஒரே பயிற்சி என்பதால் நீச்சல் ஒருவகையில் அகவேதனையைப் பிறரறியாமல் வெளியேற்றுகிறதோ என்னவோ. மறதிநோயால் பாதிக்கப்பட்ட அவளது தாய், அவளைச் சிலநிமிடங்களுக்குமேல் நினைவு வைத்திருப்பதில்லை - ஒருவகையில் அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்வதற்காக அங்கே அவள் திரும்பத் திரும்பச் சென்றிருக்கலாம். தனிமைக்கு மறதியே மிகப்பெரிய மருந்து அல்லவா? இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகளுள் ஒன்றான அவளது கண்ணின் close-up அளவு இறுக்கமான close-upஐ இதற்குமுன் நான் பார்த்ததில்லை.

Red ஐ அடுத்துப் பார்த்தேன். வாலன்டைன் காரில் போய்க்கொண்டிருக்கிறாள், ஒரு நாய் அடிபடுகிறது, நாயைச் சொந்தக்காரரிடம் அழைத்துச்செல்கிறாள் (கழுத்துப்பட்டி அடையாளம்), சொந்தக்காரர் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, அவரது வேலை அக்கம்பக்கத்தார் ஃபோனில் பேசுவதை ஒட்டுக்கேட்பது, தன் காதலனுக்குத் துரோகமிழைக்கும் ஒரு பெண், அந்தக் cuckolded காதலன், கதாநாயகியைத் தொலைபேசி வழியாகவே மூச்சுத்திணற வைக்கும் அவளது காதலன் - இவர்கள் அனைவரையும் இணைக்கும் நூற்பிரிகளை வெளியிலிருந்து நாம் பார்த்துக்கொள்ளலாம். மூன்று படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். நீதிபதியின் ஒட்டுக்கேட்கும் குணாதிசயம் அவளைக் குமட்டவைத்தாலும், அவளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவரது இழந்த காதல் அவரது உந்துசக்தி. தவறு என்பது ஒரு moral category என்று அல்லாமல், அது வெறுமனே ஒரு பதம் மட்டுமே, பெரிதாக அவற்றுக்கு என்ன அர்த்தமிருக்கமுடியுமென்று நினைத்துக்கொள்ளும் அந்த நீதிபதி, பின்பு தன்னைப்பற்றித் தானே மொட்டைக்கடிதாசி எழுதி அனைத்து அக்கம்பக்கத்தாருக்கும் அனுப்பிவிட்டு, கோர்ட்டில் ஆஜராகி, பின்பு அண்டைவீட்டார் கல்லெறிந்து ஜன்னல்களை உடைக்கும்போது அமைதியாக மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். வாலன்டைன் மீது உருவாகும் காதலை அவர்களுக்கிடையில் பனிக்கடலாக உறைந்துவிட்ட காலம் தடுக்கிறது - இறுதியில் வாலன்டைன் லண்டன் கிளம்பும்போது அந்தக் cuckolded காதலனைப் படகில் சந்திக்கிறாள், புயலடித்து ஃபெரி கவிழ்ந்துபோகிறது, நீதிபதி செய்திகளைப் பார்த்துக்கொண்டு நிலையற்று அமர்ந்திருக்கிறார். மிக நுட்பமான உறவுகள் - சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ரஷ்யக் கலாச்சார மையத்தில் Nelly and Arnaud என்ற மற்றொரு ஃபிரெஞ்சுப் படம் பார்த்தேன்; ஒரு முதியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்குமிடையில் அரும்பும் காதலைப்பற்றிய படம் என்பதைத்தவிர அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை எனினும், இழப்பு என்பதையும், இழந்ததை மறக்கவியலாமற்போனோமென்றால் மேலும்மேலும் எத்தனை இழப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்வோமென்றும் ஒருமுறை உணர்ந்துகொள்வோம். ஒவ்வொரு இழப்பும் அதன் பின்வரும் ஒவ்வொரு இழப்பும் இரக்கமற்றவை. வாலன்டைன், நீதிபதி இருவரும் தனிமையில் உழன்றாலும், அவளது தனிமையும் அவரது தனிமையும் இணைந்திருக்க வாய்ப்பேயில்லை - like forces repel each other என்பதுபோல. மூன்று படங்களில் திரும்பப் பார்ப்பதென்றால், இதைப் பார்ப்பேனென்று நினைக்கிறேன்.

ஒரு காதல் கதை. கரோல் ஒரு போலந்து நாட்டு முடிதிருத்தகன். பாரிஸுக்கு ஒரு போட்டிக்கு வந்தபோது டொமினிக்கைச் சந்தித்துத் திருமணம் செய்துகொள்கிறான். White, அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதில் தொடங்குகிறது. திருத்தமான டொமினிக்கும் திருத்தமற்ற கரோலுக்கும் இடையில் மிச்சமிருப்பது டொமினிக் மீதான கரோலின் காதல் மட்டுமே. பணம் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில் ரயில்நிலையத்தில் தன் சீப்பின்மேல் கைக்குட்டையைப் போட்டு மூடி போலிஷ் சங்கீத்தைப் பாடிக்கொண்டிருக்கும் கரோலை, மிக்கோலாய் என்னும் ஒரு சக போலந்து நாட்டவன் சந்திக்கிறான். கரோல் டொமினிக்கைத் தொலைபேசியில் அழைக்க, வேறேதோ ஒருவனுடன் உறவு கொண்டுகொண்டிருக்கும் அவள், 'கேள் மடப்பயலே சப்தத்தை' என்று கூறி அவனைக் கதறவைக்கிறாள். பாஸ்போர்ட்டையும் இழந்துவிட்டபடியால், பெட்டியொன்றுக்குள் ஒளிந்துகொண்டு போலந்து வந்துசேர்கிறான் கரோல். சுருக்கமாக (படத்தில் வருவதுபோலவே) , போலந்தில் பெரும் பணக்காரன் ஆகிவிடும் கரோல், அவளை மறக்கவியலாது தவிப்பதும், படத்தின் இரக்கமற்ற முடிவும் அழுத்தமாக இருப்பினும், ஏனோ எனக்கு இதன்மேல் பெரிய அபிப்ராயமில்லாமல் போயிற்று. 'பூட்டாத பூட்டுக்கள்' என்று ஒரு படம் பார்த்துள்ளேன் (மகேந்திரன் படம் தானே?). அதற்கும் இதற்கும் அவ்வளவு ஒற்றுமைகள்.

விமர்சனங்கள், நீலம் விடுதலையைக் குறிக்கிறது, வெள்ளை சமத்துவத்தைக் குறிக்கிறது என்ற ரீதியில் பெரும்பாலும் இருந்தாலும், அது ஏனோ பெரிதாக ஆர்வப்படுத்தவில்லை. கீஸ்லாவ்ஸ்கி எதை நினைத்து எடுத்தாரென்பது நமக்கு முக்கியமா என்ன? மூன்றையும் பார்த்தபின் நினைவில் தங்கியது படங்களிலிருந்த உணர்வுகளின் தீவிரமே. தீவிரமற்ற எதையும் திரும்பிக்கூடப் பார்த்துவிடுவோமா என்ன?


இரண்டு தலைச் சிக்கல்

இது கொஞ்சம் பழைய செய்தியே, இருந்தாலும், படித்தபோது படு சுவாரஸ்யமாக இருந்தது. டரியோ ஃபோ, 1997ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கிய இத்தாலிய நாடகாசிரியர். அவரது Two headed anomaly என்ற நாடகத்தைப்பற்றிய பதிவே இது... அந்த நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை (குறைந்தபட்சம் உள்ளூர் version ஆவது....), இருந்தாலும், அதன் கதைக்களனே சுவாரஸ்யமாயிருந்தது.

சில்வியோ பெர்லுஸ்கோனியும் விளாதிமிர் புட்டினும் சந்திக்கிறார்கள். திடீரென்று ஒரு தீவிரவாதி நுழைந்து சுட ஆரம்பிக்கிறான்...புட்டின் காலி, பெர்லுஸ்கோனிக்குள்ளும் சில குண்டுகள் - ஆஸ்பத்திரி ----- டாக்டரின் diagnosis இது: ஏதாவது ஒரு அதிசயம், அல்லது இறந்த புட்டினின் மூளை - இவற்றில் ஒன்றே பெர்லுஸ்கோனியைக் காப்பாற்ற முடியும்! அனைவரின் சம்மதத்துடன், புட்டினின் மூளையை பெர்லுஸ்கோனியின் தலைக்குள் பொருத்திவிடுகிறார்கள்! பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் நாடகம்! பெர்லுஸ்கோனி வாட்கா குடிக்கிறார், கராத்தே கற்றுக்கொள்கிறார் (புட்டின், முன்னாள் சோவியத் யூனியனின் KGB இயக்குனராக இருந்தவர் என்பதையும், பெர்லுஸ்கோனி சமீபத்தில்தான் face-lift, அட, குறிப்பாகச் சொல்லப்போனால், தாடை-lift செய்துகொண்டவர் என்பதையும் நினைவில் கொள்க), செசன்யாவை ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் தள்ளுகிறார்!!

முன்பு ஃபோவின் Accidental death of an anarchist படித்தபோது (நாடகத்தைப் படிப்பதில் என்ன கிடைத்துவிடும்? பார்க்காத வரையில்..) ஏதோ சீரியஸாக இருந்தது - ஆனால் - இந்தக் கதைக்களத்தை நம்மூருக்குப் பொருத்திப் பார்த்தால் - கருணாநிதியின் தலைக்குள் ஜெயலலிதாவின் மூளை!?!??!
ஜெயலலிதாவின் தலைக்குள் கருணாநிதியின் மூளை என்று முயன்று பார்த்தேன், ஆனால்.....திராவிடக் கட்சி மூளைகள் அனைத்தும் ஒருவகையில் homogenized ஆக இருப்பதாகத் தோன்றுகிறது. எந்த மூளையை எந்தத் தலைக்குள் பொருத்தினாலும் நடப்பது ஒன்றாகவே இருக்கும் என்பது என் அனுமானம்!! அதனால் அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமென்று தோன்றவில்லை. வேறு யாருக்காவது மூளை swap அல்லது மூளை transplant ஐடியாக்கள் தோன்றுகிறதா?

Thursday, October 14, 2004

பெரிதாக ஒன்றுமில்லை....



நேற்று வேலை முடிந்து ஏதோ யோசனையுடன் வெளியே வந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அண்ணாந்து பார்த்தபோதுதான் உறைத்தது கடைசியாக வானத்தைப் பார்த்தது எப்போதென்றே நினைவில்லையென்று. சட்டென்று ஒரு துக்கம். நான் வானத்தைப் பார்க்கவில்லையா வானம் எனக்குத் தப்பித்து எங்கோ ஒளிந்துகொண்டதா என்று புரியவில்லை. எப்படியோ, நாங்களிருவரும் பலநாள் சந்தித்துக்கொள்ளவில்லை என்பதுமட்டும் உண்மை.

Wednesday, October 13, 2004

PBS இணைப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வமுள்ளவர்கள் PBS ன் இந்த செய்திக்கதையைப் பார்க்கவும். புஷ் கெர்ரி இருவரைப்பற்றியும் சுருக்கமான, தெளிவான அறிமுகங்கள். PBS நடுநிலைமையை நம்பலாம் என்பது என் அபிப்ராயம்.

Tuesday, October 12, 2004

ஜெயலலிதாவும் விளம்பரங்களும்...

தங்கத்தாரகை ஜெயலலிதா!! கடவுளே காப்பாத்து. அந்த செய்திகளைப் படித்தவர்கள், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாயுள்ள செய்தியையும் படிக்கவும் - அதற்கு subscription தேவை என்பதால், தமிழ்நாடு அரசு வலைத்தளத்திலிருந்து இணைப்பு கொடுத்துள்ளேன் - பார்க்கவும். படிக்கச் சற்றுச் சிக்கலாகத்தான் இருக்கும் - நூலகத்தில் படித்ததால் என் கண் தப்பியது....

முதலீட்டை ஈர்க்க விளம்பரங்கள் தேவைதான் - ஆனால் அதன் தொனி....

ஆத்தாவுக்குப் பிடித்த நிறம் என்று தமிழ்நாடு அரசு வலைத்தளம் பச்சைப் பசேலென்று இருக்கும் - அதைக் கண்டுகொள்ளவேண்டாம், ஆனால், கேரள அரசின் public relations department வலைத்தளத்தைப் பார்க்கவும். அது போன்று தமிழ்நாட்டை, அதன் கலாச்சாரத்தைக் கூறும் ஒன்றையும் நமது அரசாங்க வலைத்தளத்தில் பார்க்கமுடியாது. ஏன்?

Thursday, October 07, 2004

சட்டியில் இருப்பது

இது மிகவும் தாமதமான விமர்சனமாக இருக்கலாம் - ஆனால் இது விமர்சனத்தைப்பற்றிய கருத்து என்பதால் இது தேவையா இல்லையா என்ற விஷயத்தை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன். அமோரஸ் பெரஸ் அல்லது ஆயுத எழுத்து என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை இப்போதுதான் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போது இதே வேலைதான் - எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று விவாதிக்க வேண்டியது. நானும் ஒரு பட்டியல் தருகிறேன்.

வெற்றி விழா - Bourne Identity
மை டியர் மார்த்தாண்டன் - Coming to America
மகாநதி ஜெயில் காட்சிகள் - If tomorrow comes (இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)
12B - Sliding doors
ஜேஜே - Serendipity
நியூ - Big
பாட்ஷா - இந்தி 'Hum' (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

இதெல்லாம் சரி, காப்பி அடிக்கிறார்கள், சரி. இந்தியிலும் காப்பிதான். 'Kaante' இந்திப்படம், 'Reservoir dogs'ன் உல்டா - அதையெல்லாம் கணக்குப்பண்ண நேரமில்லை.

சரி, தமிழில் எடுக்கக் கதைகளா இல்லை? எழுதப்பட்ட கதைகளிலேயே ஏராளமாக உள்ளன. சுஜாதாவின் 'இருள் வரும் நேரம்' திரைப்படமாக்குவதற்கு மிகப் பொருத்தமான அற்புதமான கதை - அது 'வானம் வசப்படும்' என்று குதறப்படுவதாக அறிகிறேன் - இருள் வரும் நேரம் படித்தவர்கள், அம்ருதா (பெயர் சரியாக நினைவில்லை, பல வருடங்களுக்குமுன் படித்தது) பாத்திரத்தில் தபு, அவள் கணவன் வேடத்தில் சிவக்குமார் (இது சரியில்லை), கமிஷனர் தர்மராஜ் வேடத்தில் நாசர், ஆட்டோ டிரைவர் வேடத்தில் மனோஜ் பாஜ்பாய் என்று கற்பனை செய்துபாருங்கள். வர்ஷா பாத்திரத்தில் வேண்டுமானால் சிக்கென்று ஒரு நடிகையைப் போடுங்கள். அவளுக்கும் ப்ரொபசருக்கும் ஒரு கனவுப் பாட்டு வைக்காமலிருந்தால் சரி.

தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'
கிருத்திகாவின் 'வாஸவேச்வரம்'
ஜெயமோகனின் 'கன்னியாகுமரி'
கி.கஸ்தூரிரங்கனின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்'
சுபாவின் 'என்றென்றும் காதலி'
பூமணியின் 'வெக்கை' - இதை ஒழுங்கான படமாக்கினால், அற்புதமாக இருக்கும். இந்தப் புத்தகமே ஒரு இறுக்கமான திரைக்கதை.

எத்தனை கதைகள் உள்ளன - சொல்லிக்கொண்டே போகலாம் - சுபாவை எல்லாம் ஜெயமோகன் வரிசையில் சேர்த்து நான் கர்ப்பக்கிரகத்துக்குள் கழுதையைக் கூட்டிக்கொண்டுவந்துவிட்டதாக யாரும் எண்ணவேண்டாம். என்னைப் பொறுத்தவரை, மாதா மாதம் எழுதித் தள்ளாமல் நிதானமாக 300 பக்க நாவல்கள் எழுதியிருந்தால் (பக்கம் ஒரு கணக்கா என்று கிண்டலடிப்பவர்களுக்கு என் பதில் மௌனமே) அவர்களிடமிருந்து சில திரைப்படத்துக்குத் தகுதியான நாவல்களையாவது பெற்றிருக்கமுடியும். அவை இலக்கியம் என்று அவர்களே கூறமாட்டார்கள் என்பதால், வேறு ஏதும் அலட்டிக்கொள்ளவேண்டாம்.

அய்யய்யோ, இதையெல்லாம் படமெடுத்தால், எப்போது நாம் Wild strawberries, Cries and Whispers, 8 1/2, 400 blows மாதிரிப் படங்கள் எடுப்பது என்று யோசிப்பவர்கள் பொறுக்க. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
முதலில் எந்த மாதிரித் திரைப்படங்கள் எடுக்கவேண்டுமென்று யோசிக்கலாம் - Hollywood மாதிரியா அல்லது ஐரோப்பியப் படங்கள் மாதிரியா அல்லது ஜப்பானியப் படங்கள் மாதிரியா என்று யோசிக்கத் தொடங்காமல், நம்மிடம் என்ன இருக்கிறது என்றும் எந்த மாதிரியான திரைப்படங்கள் வரமுடியும் என்று யோசிப்பதே உபயோகமாக இருக்கும். Y tu mama tambien என்று ஒரு ஸ்பானிய மொழிப் படம் (மெக்ஸிகோ). அதை அப்படியே எடுத்தால் நம்மூரில் செருப்பால் அடிப்பார்கள், இயக்குனருக்கு செக்ஸ் இயக்குனர் என்று ஒரு பட்டம் கிடைக்கும். ஆனால், Y tu வை இயக்கிய அல்ஃபோன்ஸோ குவாரோனின் அந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் படமான Harry Potter and the Prisoner of Azkaban படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அடுத்த Harry Potter படத்தை நமது மீரா நாயர் இயக்குவதாகப் பேச்சு உள்ளது. இதுபோன்ற போக்கு தமிழில் உள்ளதா? டாக்டர் அய்யா ராமதாஸ் டாக்டர் அய்யா கிச்சாமி போன்ற Extra constitutional censor board டாக்டர் அய்யாக்களைப்பற்றிப் பேசவேண்டாம், அது வேறு பிரச்னை.

நான் மேலே குறிப்பிட்ட அத்தனை தமிழ்க் கதைகளும் மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. Hollywood என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமே. அதன் வெற்றிக்குக் காரணம் அதன் பன்முகத்தன்மை - புதிது புதிதான கதைகள். Hollywood என்றால் முகத்தைச் சுளிப்பவர்களுக்கு - ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ போன்ற பெரும் இயக்குனர்கள் கூட 'Shoot the piano player' என்று அமெரிக்க gangster படங்களை eulogize செய்த படங்களை எடுத்திருக்கிறார்கள். த்ரூஃபோவின் 'Bride wore black' ஐ அடியொற்றியதே சமீபத்திய 'Kill Bill'. பார்க்கத் தகுதியுள்ள எண்ணற்ற நல்ல படங்கள் Hollywoodலும் இருக்கின்றன. இப்போது சிலாகிக்கப்படும் அனைத்து 'இலக்கியமயமான' ஐரோப்பியப் படங்கள் அனைத்தும் முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. குரோஸவா, சாமுராய்களைப்பற்றியே பல படங்கள் எடுத்தார். என் அபிப்ராயம் என்னவென்றால், குரோஸவா எடுத்தார், பெர்க்மன் எடுத்தார் என்றே இன்னும் ராமாயணம் பாடிக்கொண்டிருக்காமல், அவர்களது context என்ன, நமது என்ன, அமெரிக்கத் திரைப்படங்களது என்ன என்றும் பார்க்கவேண்டும். திரைப்பட விழாக்களில் சிலாகிக்கப்படும் படங்கள் எடுக்கப்பட்ட பெரும்பாலான தேசங்களின் மொத்த மக்கள்தொகை தமிழ்நாட்டு அளவோ, அதில் பாதியோதான் இருக்கும் (தமிழ்நாட்டின் மக்கள்தொகை இங்கிலாந்தைவிட அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவும்). அத்தேசங்கள் ஒரு வருடத்தில் எடுக்கும் படங்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் எடுக்கப்படும் தமிழ்ப் படங்களைவிட எவ்வளவோ குறைவே. நாலு கிலோ அரிசியை நான்கு பேருக்குப் பகிரும் இடத்தைவிட, நூறு கிலோ அரிசியை நூறு பேருக்குப் பகிரும் இடத்தில்தான் அடிதடி அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்க. அதை இங்கே பொருத்திப்பார்த்துக்கொள்ளவும். மக்மல்பாஃப், கியோரஸ்தோமி போன்ற இரானிய இயக்குனர்களின் படங்கள் அரசியலைத் தாண்டியவை எனினும், அயதுல்லாக்களின் புகழ்பாடும் படங்களை அவர்கள் எடுத்தால், எவ்வளவுதான் கலைத்துவத்தில் அவை உன்னதமாக இருந்தாலும், மேற்கில் ஒப்புக்கொள்ளப்படாது. மேற்கில் ஒப்புக்கொள்ளப்படாததால் நாமும் ஒப்புக்கொள்ள மாட்டோம் (நீதாண்டா அப்படி என்பவர்கள் ஒருமுறை திரும்பி முதுகைச் சொறிந்துகொள்ளுங்கள், அங்கே ஏதாவது இருக்கப்போகிறது முதலில்). ஆனால், யூதப் பெரும்படுகொலைகளைப்பற்றிய படங்களை ஊ ஆ என்று பார்ப்போம். ஏனென்றால் அவை ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை. சர்ச்சிலின் பொன்மொழிகள் என்று படிப்போம், ஆனால் "It is alarming and also nauseating to see Mr. Gandhi, a seditious middle temple lawyer, now posing as a fakir of a type well known in the east, striding half-naked up the steps of the viceregal palace, while he is still organizing and conducting a defiant campaign of civil disobedience, to parley on equal terms with the representative of the king-emperor."என்று சர்ச்சில் காந்தியைப்பற்றி 1930ல் சொன்ன பொன்மொழியைப் (சுருக்கமாக: காந்தி ஒரு அரைநிர்வாணப் பிச்சைக்காரன்!) படிக்கமாட்டோம்! செய்யும் காரியத்தில் சிரத்தை வேண்டும். யூதப் படுகொலைகளைப்பற்றி ஆயிரம் படங்கள் பார்ப்பதும் ஒன்றுதான், அதற்குப் பதில் ஆலன் ரெனேயின் 'Night and Fog' ஆவணப்படம் பார்ப்பதும் ஒன்றுதான். அது மற்ற அனைத்துப் படங்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும். சுயசிந்தனை இல்லாத எந்தச் சமுதாயமும் உருப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.

குரோஸவாவின் படங்கள் உலகம் முழுக்கத் தெரியும் என்பவர்களுக்கு: Hello!! குரோஸவாவின் படங்களைத் தெரிந்த அனைத்து வெளிநாட்டவருக்கும், 'சுபர்ண ரேகா'வும் ரேயின் 'Apu trilogy' யும் தெரிந்திருக்க அதேயளவு வாய்ப்புள்ளது. படித்தவர்களுக்கு, கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இதுசம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதையே ஒரு வெளிநாட்டு ட்ரக் ட்ரைவரிடம் போய் குரோஸவா என்றால் மெக்டொனால்டில் புது ஐட்டமா என்பான். வெளிநாட்டு மாணவர்களெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஃபெயில் கூட ஆகமாட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்!!

பழையபடி: என் முந்தைய இடுகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது போல: சரி, விதவிதமாகக் காப்பி அடிக்காமல் தமிழில் படம் எடுப்போம் அல்லது இலக்கியம் படைப்போம். கைகால்கள் வளராமல் தலை மட்டும் வளர்ந்துகொண்டே போகுமா என்ன? ஒப்பிடுவதால் தமிழைத் தாழ்த்துவதாக எண்ணாமல், கீழ்க்கண்ட ஒப்பீடலைப் பார்க்க. தீவிர/நவீன இலக்கியம் என்பதை சுத்தமாக எடுத்துவிடுகிறேன். வெகு புதிய ஆசிரியர்களையும் ஆங்கிலத்தில் எடுத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட ஆங்கில எழுத்தாளர்களுக்கு (வார்த்தை சிக்கவில்லை) இணையாக (வார்த்தை சரியில்லை, ஆனால் புரியுமென்று நினைக்கிறேன்) எழுதும்/எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்களா?

William Gibson
Ray Bradbury
Stephen King
Robert Ludlum
Frederick Forsyth
Tom Clancy
Robin Cook
Michael Crichton
Ira Levin
Kurt Vonnegut

ஏன் சொல்கிறேனென்றால், இந்தமாதிரி எழுத்தாளர்கள் இல்லை, அதனால்தான் படம் எடுக்கமுடியவில்லை என்று இயக்குனர்கள் புலம்பலாம். உதாரணத்துக்கு, க்ரிக்டனின் Congo, Jurassic Park, Andromeda Stain, Disclosure, Lost world, Outbreak அனைத்தும் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவையே. ஸ்டீஃபன் கிங்கின் Green mile, The shining, லெவினின் Rosemary's Baby அனைத்தும் வெற்றிகரமான படங்களே. வெற்றிகரமான படங்கள் அனைத்தும் நல்ல படங்களா என்பது வேறு விஷயம்; முதலில் அந்தப் படங்கள் மாதிரியாவது எடுக்கிறோமா என்று பார்க்கவேண்டும். அல்லது, பெர்க்மன், மக்மல்பாஃப், ஓஸு, ரெனே போன்ற இயக்குனர்களே, அல்லது அட்லீஸ்ட் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரான், ஜோயல் ஷூமாக்கர் அளவுகூடத் தமிழில் இல்லை, பிறகு என்ன இழவுக்குக் கதை எழுதிக்கொண்டு என்று யாரும் அந்தமாதிரிக் கதைகள் எழுதவராமல் போயிருக்கலாம். அது சரி, இத்தனை தலித் இலக்கியம் உள்ளது, கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் பரபரப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள், ஏதாவது தலித் இலக்கியம் படமாக்கப்பட்டுள்ளதா? அதைச் செய்யமாட்டார்கள். Cyberpunk கதைகளின் தாதாவான வில்லியம் கிப்ஸனின் Neuromancer, Johnny Mnemonic போன்ற கதைகள் யாராவது எழுதுகிறார்களா? ஃபோர்ஸித்தின் 'The day of the Jackal' இன்றுவரை அலுக்காத ஒரு புத்தகம். 'புரியாத புதிர்' படம் எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது என்ன ஆனார்? ருத்ரய்யாவுக்கு என்ன ஆச்சு? பத்துப் படங்களுக்கு மேல் எடுக்கவில்லை மகேந்திரன்.
உண்மையைச் சொல்கிறேன் - தீவிரமான படம் எடுக்க ஒருவர் கஷ்டப்பட்டார் என்பதால் மட்டும் அதைத் தூக்கி வைத்துக் கொண்டாட முடியாது. அது நன்றாகவும் இருக்கவேண்டும். தமிழ்ப்படங்களும், சில ஆங்கிலப் படங்களும் தவிர வேறு படங்களே பார்த்திராத நண்பன் ஒருவன் 400 Blows படத்தை கடைசிவரை பொறுமையாக உட்கார்ந்து பார்த்து, பின் அதைப்பற்றிப் பேசவும் செய்தான் (இது ஏதோ off the cuff பீலா என்று நினைப்பவர்களுக்கு, நமஸ்தே!).

தமிழிலிருந்து ஒன்றும் வெளியே போகாது என்பவர்களுக்கு: இது என்ன? தமிழிலிருந்து ஏன் வெளியே? 'யாருடைய அங்கீகாரம் எனக்குத் தேவை? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' (இது ஒரு நாவலில் வரும் வரி. ஒரு சின்னப் போட்டி, கண்டுபிடியுங்களேன். இவ்வளவு தூரம் பொறுமையாக வாசித்திருக்கிறீர்களென்றால், இது தெரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது). எந்தக் கலாச்சாரத்தையும் யாரும் பரப்ப முடியாது. பரவுமளவுக்கு வலிமைபெற்ற கலாச்சாரம் தானே பரவிக்கொள்ளும்.

இன்னொரு சமாச்சாரம். Speed என்று ஒரு படம் வந்தது. அதற்கு வெகு காலம் முன்பு, 'மோனா' விலோ 'குங்குமச் சிமி'ழிலோ அதே கதையைப் படித்திருக்கிறேன்! எழுதியவர் பெயர் நினைவில்லை. அதே பஸ், அதே உத்தி! இதற்கு என்ன சொல்வது?

நீ சொன்ன பிரகஸ்பதிகளெல்லாம் ஆக்-ஷன் கதைகள் எழுதுபவர்கள், மற்றக் கதைகள், லவ் ஸ்டோரிகளையெல்லாம் எழுதமாட்டார்களா என்றால், திரைப்படங்களாக்கப்பட்ட Charlie Kaufmanன் திரைக்கதைகளான Being John Malkovich, Adaptation, மற்றும் சமீபத்திய Eternal sunshine of the spotless mind படங்களையும், கடித்துக் குதறப்பட்ட Confessions of a dangerous mind ஐயும் பார்க்கவும். ஐம்பது வருடங்கள் கழித்து இதையெல்லாம் யாரும் நினைவு வைத்துக்கொள்ளப்போவதில்லை, ஆனால், அவை, பின்னால் வரப்போகும் சங்கிலியின் ஒரு கண்ணியே. இது மாதிரி எந்த இழவும் இல்லாமல் படம் எடு படம் எடு என்றால் என்னத்தை எடுப்பது?

வழக்கம்போல வழிதப்பிவிட்டது. இப்போது ஆயுத எழுத்து.
மணிரத்னம் படங்கள் எனக்குப் பிடிக்கும். மௌன ராகம், இதயத்தைத் திருடாதே, நாயகன் (Godfather ஐ விட்டுத் தள்ளுங்கள் சாமி; அமெரிக்காவில் மட்டும்தான் ரௌடிகள் இருக்கிறார்களா? உலகத்திலுள்ள அனைத்து ரௌடிகளைப்பற்றியும் காட்ஃபாதர் கூறிவிட்டது, அதனால் இனிமேல் தாதாக்களைப்பற்றிப் படமே உலகத்தில் எங்கேயும் எடுக்காதீர்கள் எனமுடியுமா?) போன்ற சில படங்கள். ஆயுத எழுத்து ஒரு டப்பா படம். அதில் எந்த சந்தேகமுமில்லை. தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்திருக்கவேண்டிய படத்தைத் தமிழில் மணிரத்னம் எடுத்துவிட்டதாகக் கொள்ளலாம், அது அரசியலைப்பற்றிய படமாயிருந்தால். ஆனால், நண்பர்களே, படத்தில் வரும் சித்தார்த் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? சிகரெட் ஊதி ஜனங்களை ரசினிகாந்து கெடுக்கிறார் என்று போடும் ஊளையை சூர்யா மாதிரி இருங்கடா லட்சியத்தோட என்று மாற்றவேண்டியதுதானே? ம்கூம்! மணிரத்னம் காப்பி அடிக்கிறாரா? ஆமாம். இதைப்பற்றிச் சொல்லும்போது ஜெஃப் பாய்காட் அடித்த ஒரு கமெண்டைப்பற்றி கவாஸ்கர் சொன்னதுதான் நினைவு வருகிறது: "இங்கிலாந்து பௌலர்கள் ஆவேசத்துடன் பந்து போட்டால் பாய்காட் அதை 'aggression' என்பார், அதே ஆவேசத்தோடு நம் வீரர்கள் போட்டால் அதை 'frustration' என்பார்". இதே கதைதான் இங்கேயும். அது சரியென்றால் இதுவும் சரிதான். இந்தியில், Fallen என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி 'அக்ஸ்' என்று ஒரு படம் எடுத்தார்கள் - அது அசலுக்கு எந்தவகையிலும் குறைச்சலாயில்லை. ராம்கோபால் வர்மா இந்திக்குப் போனபிறகுதான் அதுவும் சற்று உருப்பட்டது. இல்லையென்றால் இப்போதும் டோலக்குத் தட்டிக்கொண்டு டும்க்கு டும்க்கு என்றுதானிருந்திருக்கும். ஆய்த எழுத்தின் க்ளைமாக்ஸில் ஈசாப் நீதிக்கதைகள் மாதிரி எந்த 'கருத்து'ம் பிரச்சாரம் செய்யாததும் அதன் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். இனிமேல் மணிரத்னம் சுஜாதாவுக்குக் கல்தா குடுத்துவிட்டு லியாகத் அலி கானை வசனகர்த்தாவாக்கிக்கொள்ளவேண்டும். இந்தமாதிரி முடிவுகளை மலையாளத்தில் ஒப்புக்கொண்டு, படங்களும் வெற்றியடைகிறதே! அடூர் படங்கள் ஏதும் பார்க்கவேண்டாம், மோகன்லாலின் 'வந்தனம்' படத்தின் க்ளைமாக்ஸையும், அதே படத்தின் தெலுங்கு வடிவமான (தெலுங்கிலும் 'வந்தனம்' தான்) நாகார்ஜூனா படத்தின் க்ளைமாக்ஸையும் பார்க்கவும்! வித்தியாசம் தெரியும். ஆயுத எழுத்து ஒரு காப்பி. நான் Amores Perrosம் பார்த்துவிட்டேன், City of God ம் பார்த்துவிட்டேன். City of God படத்தை என்னுடன் படிக்கும் ஒரு ப்ரேஸிலியப் பெண் (அப்படம் ரியோ டி ஜனீரோவின் சேரிப்பகுதிகளைப்பற்றி, கிட்டத்தட்ட அங்கேயே எடுக்கப்பட்டது. நிஜத்திலும் அப்படித்தான் இருக்குமா என்றால் ஆமாம் என்றாள்) மற்றும் என் மற்றொரு நண்பன் சிபாரிசு செய்து பார்த்தேன். என் மற்றொரு நண்பன் ஒரு பெரிய ரஜினிகாந்த் விசிறி! ஒரு ரஜினிகாந்த் விசிறியாக இருந்து, இந்தப் படத்தைப் பார்த்ததால் அவன் என்ன கலையம்சத்தை இழந்தான் என்று எனக்கு விளக்கி, நிரூபியுங்கள், நான் மொட்டையடித்து என் முடியை blog செய்கிறேன்! இந்தி 'Satya' 'Company' 'Chandni Bar' ஐ விட, போர்த்துகீசிய மொழியிலிருப்பதால் City of God ஒன்றும் பெரிய படமாகிவிடாது!! City of God மிகவும் ஆக்ரோஷமான படம், அதில் சந்தேகமே இல்லை. வேற்றுமொழிப் படங்களை subtitle துணையுடன் பார்க்கும்போது buoyancy of the unintelligible dialogues நம்மை அழுத்தி அவற்றுக்கு ஒரு உபரி மரியாதை தர வைக்கும். ஆனால்? Life is Beautiful என்ற மகா குப்பை இத்தாலியப் படத்துக்குத் சிறந்த பட ஆஸ்கரும், அதன் இயக்குனருக்கு (கம் ஈரோ) சில விருதுகளும் கொடுத்தார்கள். ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் நாத்தம் போகாது என்பதுபோல, எத்தனை விருது கொடுத்து என்ன உபயோகம்? ஆனால் City of God க்கும் ஆயுத எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? உத்தி Amores Perros க்கு ஒத்ததாயிருக்கலாம், ஆனால்? மற்றது?

மணிரத்னம் காப்பி அடிப்பதுண்டு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆயுத எழுத்து ஒரு டப்பா என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால், ஒரு கேள்வி. மணி ரத்னமும் அவர் சார்ந்த தொழில்நுட்ப இயக்குனர்களும் வராமலிருந்தால், தமிழ் சினிமா எப்படி இருந்திருக்கும்? சும்மா எல்லாருக்கும் ஆப்பறைவதை விட்டுவிட்டு யாராவது உருப்படியாகப் பதில் எழுதுங்களேன்? சும்மாப் புலம்புவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியாகச் செய்த மாதிரி இருக்கும்.

ரன் லோலா ரன்? எந்த மணி ரத்னம் படம்பா அந்தப் படத்தின் காப்பி? எனக்குத் தெரியலையே? ஆனால், அந்தப் படத்தின் techno soundtrack பிரமாதமாக இருக்கும் - அதுமட்டும் உண்மை.


Tuesday, October 05, 2004

சப்பாத்தி ச்சோர்..

மான்சான்ட்டோ மகாத்மியங்கள்......

தினமணி
Guardian
Greenpeace

David Graddol ன் கட்டுரை

நான் கொடுத்துள்ள இணைப்பு வழி க்ரட்டோலின் முழுக் கட்டுரையையும் படிக்க முடியும். அந்தக் கட்டுரை, ஆங்கிலத்தை மையமாகக் கொண்டு, மற்ற மொழிகளைப்பற்றி எழுதப்பட்டது. ஆங்கிலத்தின் impact factor அவ்வளவு அபரிமிதமாக இருப்பதற்குக் காரணம் அது ஒரு hybrid மொழி என்பதால்தான். மரபியலில் 'hybrid vigor'என்று ஒரு பதமே உண்டு. உதாரணத்துக்கு, 'தேடுதல்' என்ற வார்த்தை, கிட்டத்தட்ட 'Google'என்று ஆகிவிட்டது.ஒவ்வொரு வருடமும் பல புதிய வார்த்தைகள் ஆங்கில அகராதிகளில் சேர்க்கப்படுகின்றன. தமிழ் அளவுக்கு அதில், பேச்சுக்கும் எழுத்துக்குமான dichotomy அதில் இல்லை. நான் தமிழில் மிக ஆர்வம் உள்ளவனே. ஆனால் இந்த இடுகையில் உபயோகப்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களளவு வாசகப் பரிச்சயமுள்ள தமிழ்ச் சொற்கள் எனக்குச் சிக்காதது என் குறைபாடால்கூட இருக்கலாம்.
இந்தக் கட்டுரை ஆங்கிலத்தைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் - சிலபல வருடங்களில் ஆங்கிலம், டைப்ரைட்டிங், கணினித் திறமைகள் போல ஒரு basic skill ஆகிவிடும் என்றும், அப்போது பல மொழிகள் தெரிந்தவர்கள், வெறும் ஆங்கிலம் தெரிந்தவர்களைவிட அனுகூலமுடையவர்களாயிருப்பார்கள் என்றும் கூறுகிறது. தமிழ் என்ற வார்த்தை ஒன்றிரண்டு முறை மட்டுமே கூறப்படுகிறது, இது தமிழ் பற்றிய கட்டுரையும் அல்ல.
மொழி hybridise ஆகியே தீருமென்பது காலத்தின் விதி. 'Survival of the fittest' என்பது 'வலிமையுள்ளவன் வாழ்வான்'என்பதல்ல என்பதாலும், அது 'Survival of the most adaptable'என்பதையே குறிக்கிறது என்பதாலும், தமிழ் எங்கே போகிறது என்பதை நாம் பார்த்துவிடுவோமென்று நினைக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி இருக்கவேண்டும் - அரசியல் தமிழும் சினிமாத் தமிழும் மட்டும் வளராமல், அறிவியல் தமிழும் வளரவேண்டும். பொறியியலில் தமிழ்ச்சொற்கள் பரிச்சயமாகியுள்ள அளவு (குறைந்தபட்சம் கணிப்பொறித் துறை) உயிரியல் துறைகளிலும் பிற துறைகளிலும் பரிச்சயமாகவில்லை என்பதே என் கருத்து. அறிவியலுக்கு ஊடகங்கள் ஒதுக்கும் இடம் மிகக் குறைவு. அவையும் வெறும் 'report' அளவிலேயே இருக்கின்றன தவிர, சுவாரஸ்யமான வகையிலான 'instructional scientific feeding' ஐ,சுஜாதா தவிர யாரும் செய்ததாய்த் தெரியவில்லை.

Monday, October 04, 2004

அந்துமணியின் உளறல்கள்

அந்துமணியின் முட்டாள்தனமான வாரமலர் உளறல்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. 'தமிழுக்காக ஒரு இருக்கை உலகப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படுமாம், அது என்ன இருக்கையோ' என்ற ரீதியில் சலித்துக்கொண்டிருக்கிறார்!?? பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது போல. ஒவ்வொரு முறையும் இந்தமாதிரி ஏதாவது பொறுப்பற்ற டப்பா கமெண்ட்டுகளைப் படிக்கும்போது ஏற்படும் கடுப்புக்கு அளவில்லை. தமிழைச் செம்மொழியாக்கியதிலுள்ள அரசியலைத் தவிர்த்துவிட்டால், அது வாழ உதவவேண்டாமா? Tamil Chairs ஐ உருவாக்குவது மொழியை மேலும் நிலைப்படுத்தவே உதவும். லென்சு மாமாவும் அந்துமணியும் எதையோ சொறிந்துகொண்டு இந்தமாதிரி உளறுவதற்குப் பதிலாக, அறிவியல் உலகத்தின் தலையாய இரண்டு அறிவியல் ஆராய்ச்சிப் பத்திரிகைகளுள் ஒன்றான Science ல் வெளியான மொழியியல் கட்டுரையான 'மொழியின் எதிர்காலம்' பார்வைக்கூற்றைப் பார்த்தால்ஏதாவது உபயோகமாயிருக்கும். பெங்காலி, தமிழ், மலாய் மூன்றையும் உலகில் மிக வேகமாக வளரும் மொழிகளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் நமக்கு எதுக்கு அந்துமணி சார், சோறு இருந்தால் போதாதா? பொதுஜனத்திலிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் உங்களது மெனு தானோ! 'ஆ, அந்துமணி பெரிய ஆளுப்பா, என்ன மாதிரியெல்லாம் சாப்புடறாரு பாரு' என்று கூறவேண்டும் வாரமலர் படிக்கும் மகாஜனங்கள்! யார் எவ்வளவு கத்தி என்ன பயன்? எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரிதான் - அந்துமணி தன் உலகப் பார்வையை நமக்குக் கொடுத்துக்கொண்டேயிருப்பார், என்ன உளறுகிறார் என்று பார்த்து பதிலுக்குக் கடிப்பதற்காகவாவது அந்தக் குப்பைகளைத் தொடர்ந்து படித்துத் தொலையவேண்டியதாயிருக்கிறது...

இதைப் போஸ்ட் செய்ய ஏன் கஷ்டமாயிருக்கிறது இன்று?

Sunday, October 03, 2004

மெமன்ட்டோ



ஒருவேளை Memento என்ற இந்தப் படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள், எழுதப்பட்டவற்றைப் பலமுறை படித்திருப்பீர்கள் - உங்களுக்கு இது அதிக சுவாரஸ்யமில்லாமல் போகலாம். Spoiler alert: இன்னும் இதைப் பார்க்கவில்லை, பார்க்க ஆர்வமுள்ளது என்றால், இதைப் படிக்காமலும், மெமன்ட்டோ சுட்டியைத் தொடராமலும், வேறு யாரிடமும் கதை கேட்காமலும் படத்தை நேரடியாகப் பார்த்துவிடுவதுதான் உத்தமம்.

படம் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டுவிட்டதால், நேற்று இரண்டாம் முறை பார்த்தபோது ஏற்பட்ட சிக்கல்களை விவரிக்கிறேன். படக்கதை சுருக்கமாக: லெனார்ட் என்ற கதாநாயகனின் மனைவி கொலை செய்யப்படுகிறாள், லெனார்ட் தாக்கப்பட்டு அவனது மூளை பாதிக்கப்படுகிறது - கொலைக்குப்பிறகு நடந்த எந்த விஷயங்களும் அவனுக்கு சில நிமிடங்களுக்குமேல் நினைவில் தங்காது - அதாவது, இப்போது அவனைக் குமட்டில் குத்தினால், சில நிமிடங்கள் கழித்து நீங்கள் குத்தியது அவனுக்கு மறந்துபோயிருக்கும்; உங்களைப் பதிலுக்குக் குத்தவேண்டும் என்று அவன் விரும்பினால், உங்களை உடனே போலராய்டு காமிராவில் படமெடுத்து, 'அவன் என்னைக் குத்தினான்' என்று உடனே குறித்துக்கொள்ள வேண்டும், சிலநிமிடங்கள் கழித்து அனைத்தும் அவனுக்கு மறந்து போயிருக்கும், அப்போது அவன் தனது ஃபோட்டோக்களைப் பார்த்தானென்றால், அப்போது நீங்கள் அவன் எதிரிலிருந்தால், உங்களை அவன் பதிலுக்குக் குத்தக்கூடும். இந்தமாதிரியான நூற்றுக்கணக்கான குறிப்புக்களை வைத்துக்கொண்டு, தன் மனைவியைக் கொன்றவர்களை அவன் தேடியலைவதுதான் கதை. இந்த ஞாபகமறதி தனக்கு இருக்கிறதென்பதும் அவனுக்குத் தெரியும்.

படம் இரண்டு திசைகளில் போகிறது, வண்ணத்தில் காண்பிக்கப்படுவது பின்னோக்கிய திசையிலும், கறுப்பு வெள்ளையில் காண்பிக்கப்படுவது முன்னோக்கியும் போகும் என்பது தெரிந்த விஷயமே - இதுதான் முதல் முறைஎன்று நினைத்திருந்தேன், ஆனால் இதற்கு முன்பே இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறதென்று ஈபர்ட் குறிப்பிட்டிருக்கிறார். டிவிடியில் 'additional features' பார்க்க முயன்றுகொண்டிருந்தேன் - இயக்குனரின் பேட்டியைப் பார்ப்பதற்குமுன்பு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கான கேள்வித்தாள்கள் போன்ற விவரங்களைத் தாண்டவேண்டியிருந்தது. டிவிடி 'menu' வை அழுத்தினால், இந்தப் பகுதியைத் தாண்டமுடியவில்லை. எத்தனை பொத்தான்களை கடுப்போடு அழுத்தினேன் என்று தெரியவில்லை, கடைசியில் நடிகர்கள் மற்றும் இயக்குனரின் பேட்டியைப் பார்க்கமுடிந்தது. அதற்குமுன்பு, மெனு பொத்தானைக் கண்டமாதிரி அழுத்தவைத்து நம்மைப் பொறுமையிழக்கச் செய்வதும் பட அனுபவம்தான் என்று நம்மை நினக்கச்செய்வதுதான் இயக்குனரின் எண்ணம் என்று நினைக்கிறேன். ஈபர்ட் தன் விமர்சனத்தில் சொல்லியிருப்பது போல, இரண்டாம் முறை பார்ப்பது படம்பார்த்த அனுபவத்தை மேலும் செழுமைப்படுத்தவில்லை. ஒருமுறை பார்த்து அந்தக் குழப்பத்துடனே விட்டுவிடுவதுதான் உத்தமமென்று நினைக்கிறேன் இந்தப் படத்தைப் பொறுத்தவரை. பொதுவாக நான் இரண்டாம் முறை படங்களைப் பார்ப்பதில்லை - வெகு சில தவிர (சமீபத்தில் 'The Shining'). உத்தி சார்ந்த திரைப்படங்களை ஒரு முறையும், நடிப்புத்திறன் மேலோங்கியிருக்கும் திரைப்படங்களைப் பலமுறையும் பார்ப்போம் என்று நினைக்கிறேன். என்னுடைய all-time favorites ல் முதலில் இருப்பது ஜாக் நிக்கல்ஸன் - 'One flew over the cuckoo's nest' படத்தை பெரும்பாலும் பார்த்திருப்போம், 'The Shining' பார்க்கதவர்களுக்கு அதை அழுத்தமாக சிபாரிசு செய்கிறேன். இருந்தாலும், மெமன்ட்டோ ஒரு சுவாரஸ்யமான படம். அதன் இயக்குனர் க்றிஸ்டோஃபர் நோலனின் வேறு இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன், அவையும் சுவாரஸ்யமான படங்களே - 'Insomnia' மற்றும் hiட்ச்காக்கிய 'The Following'.

சமீபகாலமாக இயக்குனர்களின் அடிப்படையில் டேவிட் லிஞ்ச், ஸ்டான்லி குப்ரிக், ரோமன் போலன்ஸ்கி போன்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - பார்த்த பிற ஆங்கிலமல்லாத படங்களைப்பற்றி எழுதவும் ஆர்வமிருக்கிறது. ஒரு படத்தை இருவேறு மொழிகளில் பார்க்கும்போது கட்டாயம் அவை ஒன்றே போலிருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன் - குரொசவாவின் 'The Seven Samurai', 'Magnificient Seven' ஐ விட நன்றாயிருந்தது, ஆங்கில 'The Ring', ஜப்பானிய 'Ringu' வை விட நன்றாயிருந்தது. ஆனாலும், மிக அதிகபட்ச வித்தியாசத்தை உணர்ந்தது தார்க்க்கோவ்ஸ்கியின் 'Solaris' கும் ஸ்டீவன் சோடர்பர்கின் 'Solaris'க்கும் இடையில்தான். இப்போது வந்த சோடர்பர்கின் 'சோலாரிஸ்', தார்க்கோவ்ஸ்கியின் படத்தின்முன் கால் தூசிகூடப் பெறாது - இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் வேறுவிதமாகச் சொன்னாலும்கூட. ரஷ்ய சோலாரிஸின் மறக்கமுடியாத தொடக்கக் காட்சிகளில் ஒன்றான இருபதுநிமிடப் மேம்பாலப் பயணம், ஆங்கிலப் படத்தில் இல்லை! ஜார்ஜ் க்ளூனி? ஐயோ சாமி! இரண்டையும் பார்த்தவர்கள் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருப்பீகளென்று நினைக்கிறேன்!

அப்புறம் பார்க்கலாம்.....

Friday, October 01, 2004

பாம்பாட்டி


Mark Harden

Henri Rousseau வின் 'பாம்பாட்டி' என்ற இந்த ஓவியத்தை எத்தனை முறை நான் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை. சில ஓவியர்களின் படைப்புக்களுடன் நாம் நம்மையே அடையாளப்படுத்திக்கொள்வோம், அந்த ஓவியங்களுக்குள் தொலைந்துபோகமாட்டோமா என்றிருக்கும் - பீட்டர் ப்ருகேலின் 'நெதர்லாந்துப் பழமொழிகள்' ஓவியத்தின் அடர்த்தியான கூட்டத்துக்குள்ளும், குஸ்தாவ் க்ளிம்ட்டின் அதி அபரிமிதமாக அலங்கரிக்கப்பட்ட ஆடைகள், ஆபரணங்களுக்குள்ளும் 'தொலைந்துபோகமாட்டோமா என்று யோசித்ததுண்டு' என்று ரொமான்டிக்காக எழுதுவதைக்காட்டிலும், அந்தச் சாத்தியக்கூற்றின் புதிரே, நிலையின்மையே அதீத மயக்கந்தருவது. ரூஸ்ஸோவின் அனைத்து ஓவியங்களும் வெப்பமண்டலக் காட்டுப்பிரதேசங்களை அதீத (நான் 'அதீத' ஸ்பெஷலிஸ்ட் ஆகிக்கொண்டு வருகிறேனோ??) அடர்த்தியுடன் சித்தரிப்பவை - சிலநாள் முன்பு நான் வலைப்பதித்த எர்ன்ஸ்ட்டின் ஓவியமும் இதேபோன்ற அழுத்தத்தையும் அமைதியயும் அடர்த்தியையும் கொண்டது. ஆர்ட்கைவ் வலைத்தளத்தில் ரூஸ்ஸோ பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாருங்கள்: புறநகர (suburban) வாழ்க்கை என்பதன் வசீகரத்தை உணர்ந்ததுண்டா? என் சொந்த ஊரில் கரிசல் மண்ணும் செம்மண்ணும் மாறி மாறிப் பரந்துகிடக்கும் (அல்லது அது என் பிரமையாகக்கூட இருக்கலாம்). இதைப் படித்துவிட்டுக் கீழே தொடர்க.

The profusion of tropical vegetation also reflects another of Rousseau's desires. This impecunious suburbanite, aware that he had led an unadventurous life, was through the evocation of the "incredible floridas" of Arthur Rimbaud's visions to satisfy his own need for dream, for escape the same escape Rimbaud and Gauguin had sought in flight and revolt; that Pierre Loti (whose portrait Rousseau painted c. 1891) was to realize in the conformist career of naval officer and celebrated novelist; that Redon, Gustave Moreau, Fantin Latour, and Stephane Mallarme would find by taking refuge in their inner worlds, Monet beside his pond, Cezanne opposite his mountain.

வீட்டிலேயே அடைந்துகிடக்கும் ஒரு மனப்பரப்பு என்றாவது வீட்டோடு குறுகியதுண்டா? ஒரு சிறிய மழை, நிலத்திலிருந்து கிளர்ந்தெழும் வாசனைகள், தொண்டையில் இறங்கும் தேனீர், புகையும் சிகரெட் - மப்பும் மந்தாரமுமான வானம் - இந்த முப்பரிமாண ஓவியத்துக்குள் பலமுறை அலைந்திருக்கிறேன்; தேவதச்சனின் ஏதோ ஒரு கவிதை, ஓவியத்திலிருக்கும் பறவையின் சிறகுக்கும் ஓவியம் பதிந்துள்ள கான்வாஸுக்குமிடையிலுள்ள இடைவெளியப்பற்றிக் குறிப்பிடும். அந்த இடைவெளி எத்தனை பேர் கண்ணுக்குத் தப்பி என்னை வந்தடைந்ததோ? இந்தப் 'பாம்பாட்டி'யில் மகுடி (அல்லது குழல்) வாசித்துக்கொண்டிருப்பது நான் என்று நானே கூறிக்கொள்கிறேன். புறநகர வாழ்க்கையிலிருந்து ரூஸோ தன் ஓவியங்கள் மூலம் தப்பித்தது போல எத்தனை முறை நிச்சலனத்திலிருந்து தப்பித்துத் தப்பித்து விளையாடிக்கொண்டிருக்கிறேன்? ஒருவகையில் பார்க்கப்போனால், இந்த ஓவியங்களைப் பார்த்து எழுபது பக்கம் எழுதவேண்டும் என்று இல்லாமல், ஆயிரம் முறை அவற்றைக் கடந்துபோய் ஒரு பொறி உராய்ந்தால் போதும் என்பது என் எண்ணம். 'அனைவரும் கதாசிரியனாக, கவிஞனாக ஆசைப்படுகிறார்கள், யாரும் பார்வையாளனாக இருப்பதை விரும்பவில்லை' என்று ஒரு அந்தக வயோதிகர் சொன்னார் - 'நான் பார்வையாளனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்' என்று உலகத்தில் யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை! முயன்று வேண்டுமானால் பார்க்கலாம். 'Pedagogical இலக்கியம்' என்பது குறித்து எனக்கு ஆழ்ந்த சந்தேகம் எப்போதும் உண்டு. நீட்ஷே, ஷோப்பனார், உம்பர்த்தோ ஈக்கோ போன்றவர்கள் பல்கலைக்கழகங்களில் படித்ததனால் அவர்கள் எழுதியதை நாம் ஒதுக்குவதில்லை என்றாலும், சமீபத்தில் 'Conversations about the end of time' என்ற புத்தகம் படித்தேன். ஸ்டீஃபன் ஜே கௌல்ட், உம்பர்த்தோ ஈக்கோ, ஷான் க்ளௌத் கரியர் மற்றும் இன்னொருவர் - நால்வரும் Y2K பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு அறிவுத்துறைகள் காலத்தை, காலத்தின் முடிவை எப்படி யூகிக்கின்றன என்று விவாதித்த புத்தகம் - அதின் ஈக்கோ 'Gimme a break' என்ற ரீதியில் சொல்லியிருப்பார் - 'முறையாகப் பயிலாத எத்தனையோஎழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன், என்னதான் மேதாவிகளாக அவர்கள் இருந்தாலும் ஏதோவொன்று அவர்களிடம் குறைவதுபோல் எனக்குப் படும்' என்றிருப்பார்! கிழக்கத்தியத் தத்துவத்துக்கும் ஒரு ம்க்கும் தான். நான் ஏதோ கிழக்கத்தியக் கொடியைத் தூக்கவில்லை. ரோஜாவின் பெயர், ஃபூக்கோவின் பெண்டுலம் இரண்டையும் படித்தபோதிருந்த வசீகரம், 'நேற்றிருந்த தீவு' 'கான்ட் மற்றும் ப்ளாட்டிப்பஸ்' இரண்டையும் படித்தபோது தணியத்தொடங்கி, 'மீயதார்த்ததுடனான பயணங்கள்' மற்றும் இந்தப் புத்தகம் படித்தபோது அதலபாதாளத்துக்கு வந்து நின்றது. தாகூரை போர்கேஸ் 'Well meaning trickster' என்று எந்த அர்த்தத்தில் சொன்னாரோ, அதேபோல்தான் எனக்கும் ஈக்கோவைப்பற்றித் தோன்றியது. தங்கள் புத்தகங்களை விளக்க ஆரம்பிக்கும் எழுத்தாளர்கள் பரிதாபமாக வீழ்கிறார்கள். இப்போது ஈக்கோ என்றால் வெறுமனே ஒரு கிறிஸ்துவ வரலாற்றாளர் - என்றுமட்டும்தான் தோன்றுகிறது. அவரது படைப்புக்கள் அனைத்தும் அறிவைச் சுற்றிக் கட்டப்பட்டவை - அறிவு என்பது வளரும் ஒன்று. எராக்ளிட்டஸின் நதித் தண்ணீர் போல, நாளை அவை பழதே. இங்கே அப்படைப்புக்கள் கூடத் தேயாமலே இருந்துபோவதற்குக் காரணம், ஆவணப்படுத்தல்மேல் மேற்கத்திய சமுதாயத்துகிருக்கும் அலாதிப் பிரேமையே - அமெரிக்க கித்தார் அருங்காட்சியகங்கள் அவற்றுக்குச் சிறு உதாரணங்களே. அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு 'Arrow of time' என்னும் கருத்து இங்கு எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறதென்று தெரியவரும்.

மறுபடியும் திசைதவறிவிட்டது. பாம்பாட்டி மகுடியை வேறெங்கோ பார்த்துக்கொண்டு ஊதினால் இப்படித்தான், பாம்பு தப்பித்துவிட்டது. வெள்ளிக்கிழமை சாயந்தரம் வேறு, தாகம் எடுக்கிறது! மறுபடிப் பார்க்கலாம்?


மறுபடி வருகிறேன்

இந்த ப்ளாக்கில் என் பழைய பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். புதிதாகப் பிறந்த நாய்க்குட்டி எதையாவது நறநறவென்று கடித்துக்கொண்டிருக்கும், பற்கள் வளர அது உதவும் என்பார்கள் - அதுபோல்தான் இருக்கிறது முந்தைய பதிவுகளும்.

நேற்று எழுதினேன்; ஜனாதிபதி விவாதத்தில் புஷ்ஷைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது - வெற்று கிளாஸிலிருந்து தண்ணீர் குடிக்க முயன்றுகொண்டிருந்தார் பலமுறை! கெர்ரி வெற்றி பெற்றுவிட்டதாக ஏறத்தாழ அனைத்து சேனல்களும் கருதின. இது தேர்தல் வரை நீடிக்குமா என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.

புனைகதை, தத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும் - இந்தப் புத்தகங்களில் ஆர்வமிருந்தால் இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.