Sunday, March 06, 2005

இந்தவார 'Readers don't digest'

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில், என்ன பெயர் வைப்பதென்று ஒரு பெரிய குழப்பம் இருந்தது. குழப்பம் ஒருகட்டத்தில் பெரும் சிக்கலாக ஆகிப்போயிற்று. தமிழ்மணத்தில் ஒரு tagline கொடுங்கள் என்று இணைத்தபோது கேட்டதால், 'வேறென்ன' என்று எதையோ தட்டியதாக நினைவு. இன்றுவரை மாற்றவில்லை. சொல்லவந்த விஷயம் அதல்ல...

பொதுவாக, தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்வதில் நமது பிரதேசங்களிலிருந்து வந்தவர்களுக்கு இருக்கும் தயக்கமும் தர்மசங்கடமும் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. "உன்னைப்பற்றிச் சொல்" என்றாலேயே "என்னாங்கய்யா நீங்க, என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ளவேண்டுமா" என்ற ஒரு தயக்கம் சிறிதுநாள் இருந்தது (சொல்லமுடியாததால், சொல்வதற்கு ஒன்றுமில்லாததால் அல்ல என்பது வேறுவிஷயம்). தான் எழுதுவதோ சொல்வதோ எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் அதைப்பற்றிக் கச்சிதமாக, உறுதியாகக் கூறும் தன்மை, சூழலினால், நாட்பட்ட பழக்கத்தினால்மட்டுமே வருகிறதென்று நினைக்கிறேன்...

இந்த அடிப்படையில், கடந்த ஆறு மாதங்களாகப் பழைய, புதிய வலைப்பதிவுகளின் தலைப்புக்களைப் பார்த்துவருவதால், 'நம்பிக்கை ததும்பும்...' என்ற ரீதியிலுள்ள தலைப்புக்களோடு ("என் உலகம்", "என் அரசாங்கம்", "ஒரு கடவுளின் நாட்குறிப்புக்கள்"... இத்யாதி, இத்யாதி..!!), தன்னடக்கமா அல்லது ஒருவிதமான jitterinessஆ என்று தெரியாத வலைப்பதிவுத் தலைப்புக்களும் கணிசமான அளவில் இருப்பதுபோல் பட்டது (நல்லதே கண்ணில படாதா உனக்கு?). ஒரு சுட்டிக்காட்டலுக்குத்தான் குறிப்பிட விரும்புகிறேனே தவிர, இதை ஒரு குறைகூறலென்றோ, விமர்சனமென்று தயவுசெய்து யாரும் எடுத்துக்கொள்ளவேண்டாம் - அவரவர் விருப்பம், அவரவர் பதிவுகள் - அதில் எந்தச் சந்தேகமுமில்லை. குறிப்பாக எந்த வலைப்பதிவையும் குறிப்பிட விரும்பாவிட்டாலும், "என் உளறல்கள்" "என் லொள்ளு" "என் பேத்தல்கள்" "ஒரு அரைகுறையின் முக்கால் சிந்தனைகள்" என்றும் கணிசமான தலைப்புக்கள் இருப்பதுகுறித்த, ஏனிப்படி இருக்கலாம் என்பதுகுறித்த ஒரு ஆர்வம்தான்.

மற்றப்படி, கடந்த சில வாரங்களில் மிகுந்த எரிச்சலூட்டும் விஷயமாகப் பார்த்துக்கொண்டிருப்பது, கோர்ட் டி.வியிலிருந்து அவ்வப்போது வந்ததுபோக, என்னமோ நமது போதாதகாலம், பெருமளவுநேரம் சி.என்.என்னுக்கு வந்துவிட்ட நான்ஸி கிரேஸின் 'வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள்ள்ள்ள்ள்' நிகழ்ச்சி. வள் வள் வள்!! ர்ர்ர்ர்ர்ள்... வள் வள்!! அந்தத் திருகிய முகபாவங்களென்ன, எரிந்து விழுவதென்ன, பாய்ந்து பாய்ந்து கொரவளையைக் கடிப்பதென்ன... பில் ஓ ரெய்லி கூட சிலசமயம் நான்ஸி கிரேஸிடம் பிச்சை வாங்கவேண்டும்.

மற்றது: பார்த்த ஒரு படம். ஒப்பிட்டுப் பார்க்கும் ரோகத்தின் அரிப்பு, இதை வேறெங்கோ கதையாகப் படித்திருக்கிறோமோ டிங்டிங் என்று எங்கேயோ மணியடிக்கவைத்தது: ஆல்பர்ட்டோ மொராவியாவின் நாவலை அடிப்படையாகக்கொண்ட ழான் லுக் கொதாரின் The Contempt என்று ஒரு படம். கதைச்சுருக்கம் சொல்கிறேன், நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்: ஒரு கடலோர நகரம். படமெடுக்க அங்கு சிலர் கூடியிருக்கின்றனர் - ஒரு திரைக்கதாசிரியன், அவனது அழகிய மனைவி, அந்த அழகிய மனைவிமேல் ஒரு கண் வைத்திருக்கும் ஒரு தலைக்கனம் பிடித்த அமெரிக்கத் தயாரிப்பாளர், படத்தை இயக்க நியமிக்கப்பட்ட இயக்குனர் (ஜெர்மானிய இயக்குனர் ஃப்ரிட்ஸ் லாங், அவராகவே...). இவர்களனைவரும் அந்தக் கடலோரக் கிராமத்தில் கூடியிருக்கின்றனர். 'ஒடிஸி' யைப் படமாக எடுப்பதென்று தீர்மானம். திரைக்கதாசிரியனுக்கு ஒருவிதமான எழுத்துத்தடை (writer's block). மற்றும், தான் அடிப்படையில் ஒரு நாடகாசிரியனென்பதால், திரைக்கதை எழுதவெல்லாம் முடியுமா என்ற ஒரு சந்தேகம். அவனது மனைவிக்கு, வேண்டுமென்றே தன் கணவன் தன்னைத் தயாரிப்பாளனுடன் தனியாக அனுப்பிவைக்கிறானென்ற சந்தேகம், அதன்விளைவு வரும் மணமுறிவுச் சிக்கல்கள். ஃப்ரிட்ஸ் லாங்குக்கோ, இந்த முட்டாள் தயாரிப்பாளன் மீது ஏகப்பட்ட கடுப்பு. லாங் எடுத்த காட்சிகளைப் பார்த்து, கலைப்படம் போலிருக்கிறது என்ற எரிச்சலில், படச்சுருள் பெட்டிகளைத் தயாரிப்பாளன் உதைத்துத் தள்ளுகிறான். கடவுள்களைப்பற்றிப் பேசும்போது, "I know Gods. I like them. I know exactly how they feel" என்கிறான்! தனது மனைவி பெனிலோப்பின்மீதுள்ள விருப்பமின்மையால்தான் ஊருக்கு வராமல் ஒடிஸியஸ் கடலில் சும்மாச் சுற்றியலைந்தான் என்ற ரீதியில் கருத்துத்திணிப்பு செய்கிறான். கடைசியில் திரைக்கதாசிரியன், தன்னால் இதில் வேலைபார்க்க முடியாதென்று இயக்குனர் ஃப்ரிட்ஸ் லாங்கிடம் கூறி விடைபெறுகிறான். திரைக்கதாசிரியனின் மனைவி, கடிதம் எழுதிவைத்துவிட்டு தயாரிப்பாளனுடன் ஓடிப்போகிறாள். அவர்கள் கார் ஒரு ராட்சத சரக்குவண்டியில் மோதி இருவரும் காலி. மிக சாதாரணமாகப் பட்ட படம். குறிப்பாகச் சொல்லவேண்டியது, திரைக்கதாசிரியனின் மனைவியாக நடித்த ப்ரிஜிட் பார்தோவின் சுயநம்பிக்கை குறைந்த பாத்திரம் - நிர்வாணமாகக் கட்டிலில் படுத்துக்கொண்டு "என் கால் பிடித்திருக்கிறதா" "என் முகம் பிடித்திருக்கிறதா" "என் தொடைகள் பிடித்திருக்கிறதா" என்று கணவனைக் கேட்டவாறு. வாய்ப்பிழந்த கதாநாயகி போல!! எங்கேயோ கேட்ட குரல் போல இல்லை? முழுதாக இல்லைதான்... இருந்தாலும்...

5 comments:

-/பெயரிலி. said...

/ சி.என்.என்னுக்கு வந்துவிட்ட நான்ஸி கிரேஸின் 'வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள்ள்ள்ள்ள்' நிகழ்ச்சி. வள் வள் வள்!! ர்ர்ர்ர்ர்ள்... வள் வள்!! அந்தத் திருகிய முகபாவங்களென்ன, எரிந்து விழுவதென்ன, பாய்ந்து பாய்ந்து கொரவளையைக் கடிப்பதென்ன... பில் ஓ ரெய்லி கூட சிலசமயம் நான்ஸி கிரேஸிடம் பிச்சை வாங்கவேண்டும். /

ஒன்றே சொன்னீர்; அதுவும் நன்றே சொன்னீர்.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

இப்பொழுது வேறு தலைப்பு ஏதேனும் வைக்க யோசித்து விட்டீர்களா?

சன்னாசி said...

எதற்கு யோசிக்க, எதற்கு மாற்ற - அப்படியே இருந்துவிட்டுப் போகிறது!!

SnackDragon said...

கோர்ட் டி.வியிலிருந்து காமடி சென் ட்ரலுக்கு கொஞ்ச நாள் மாறினால்
எல்லாம் சரியாகிவிடும் என்று னினைக்கிறேன். :))
டேவ் சாப்பெல் ஷோ பாருங்கள் ஐயா?

Vijayakumar said...

ம்ம்.... எங்கே பாத்தாலும் சிக்கல் தான் போங்க.