வசனங்கள், மிகையுணர்ச்சிகள், தத்துவங்கள், பிரலாபங்கள், ஒப்பாரிகள், சோகங்கள், மகிழ்ச்சிகள் என்று அனைத்தும் இருந்தும், மூன்று மணி நேரப் படத்தைப் பார்த்து முடித்தும், எதையோ தவறவிட்டுவிட்டோமே தவறவிட்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நினைக்கவைத்த படம் இங்மார் பெர்க்மனின் ஃபானி அண்ட் அலெக்சாந்தர் (Fanny and Alexander). மூன்று நாட்களில், துண்டு துண்டாகப் பார்த்தேன். கதை எனில்: உப்சலா என்னும் ஸ்வீடன் நகரத்தில், 60களில் வாழ்ந்ததாகச் சித்தரிக்கப்படும் ஏக்தால் (Ekdahl) குடும்பத்தினரைப்பற்றிய கதை. நாடக நிறுவனமொன்றை நிர்வகிக்கும் அக் கூட்டுக்குடும்பத்தின் மூத்த மகன் ஆஸ்கார் (Oscar Ekdahl), ஒரு திறமையான நிர்வாகி, வெகு சாதாரணமான நடிகன். அவனுக்கொரு மனைவி, ஃபானி, அலெக்ஸாந்தர் என்று இரண்டு குழந்தைகள். ஆஸ்காரின் சகோதரர்களில் ஒருவன் திறமையான வியாபாரி (குஸ்தாவ் அடால்ஃப் - Gustav Adolf), மற்றொருவன், இன்னும் ஸ்வீடிஷ் மொழியை ஒழுங்காகக் கற்றுக்கொண்டிராத ஜெர்மானியப் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொண்டும், வறுமையில் உழன்றுகொண்டுமிருக்கும் ஒரு பேராசிரியர் (கார்ல் - Carl). இவர்களது மனைவி, குழந்தைகள், ஏக்தால் சகோதரர்களின் தாய் - முதுபெண் ஹெலனா ஆகியோருடனாக கூட்டுக்குடும்பம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் படம் தொடங்குகிறது. ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய்; அனைவரும் குடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும், ஆஸ்கார், தனது நாடகக் கம்பெனியாருக்கு கிறிஸ்துமஸ் நாளன்று நன்றி சொல்லிக்கொண்டும்.
கார்ல், கூடியிருக்கும் சிறுவர்களையெல்லாம் அழைக்கிறார்: "வாருங்கள் குழந்தைகளே, மெழுகுவர்த்திகளை எடுத்துக்கொண்டு வாருங்கள், உங்களுக்கு பெரும் வாணவேடிக்கை காண்பிக்கிறேன்" என்று. மாடியின் ஒதுக்குப்புறமாகக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போய், காற்சட்டையை கழற்றிவிட்டு, உட்காற்சட்டையுடன் மெழுகுவர்த்திகளுக்கு மேலாகத் தன் புட்டங்களை வைத்து ஒரு பெரும் வெடி(!!) போட்டு அவற்றை அணைக்கிறார்; படத்தின் மத்தியில், எப்போதும் ஒரு வேலைக்கார மனப்பான்மையுடனேயே இருக்கும் தனது ஜெர்மானிய மனைவியைக் கடிந்துகொண்டும் கோபித்துக்கொண்டும் தனது கடனாளி நிலையை நினைத்து சுய இரக்கத்தில் அழுதுகொண்டும் இருக்கிறார்.
குஸ்தாவ் அடால்ஃப் ஒரு ப்ளேபாய். விந்தி விந்தி நடக்கும் மாய் (Maj) என்னும் வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பு. அவரது மனைவிக்குத் தெரிந்தும், அவள் கண்டுகொள்வதில்லை. கட்டிலின் மேல் படுத்துக்கொண்டு, அன்றிரவு கட்டிலை முறிக்கிறார்கள். தான் தானாக இருக்கவிரும்பும் மாய் மீது தேவையற்ற அன்பைப் பொழிந்து, "உனது பெயருக்கு சில சொத்துக்களை எழுதிவைக்கிறேன்" என்று வெகு தீவிரமாகச் சொல்லி அவளையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்.
ஹாம்லெட் நாடக ஒத்திகை நடக்கிறது. ஆஸ்காரும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு வசனத்தைப் பேசி முடித்தவுடன், அடுத்து என்ன செய்யவேண்டுமென்று மறந்துபோகிறது. என்ன செய்யவேண்டும் நான் என்று சக நடிகனைக் கேட்கிறார். "உன் வசனம் முடிந்தது. இப்போது நீ மேடை பின் நடுப்பக்கமாக வெளியேறவேண்டும்" என்கிறான் அவன். ஆஸ்கார் சரிந்து விழுகிறார். மருத்துவர்கள் வருகிறார்கள். உயிர் பிரியுமுன் ஃபானியையும் அலெக்ஸாந்தரையும் பார்க்க ஆஸ்கார் பிரியப்படுகிறார். வரவே மறுக்கும் அலெக்ஸாந்தரை கட்டாயப்படுத்தி இழுத்து வருகிறார்கள். அலெக்ஸாந்தர் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு விகாரமான மூச்சிரைப்பு, இழுப்புடன் ஆஸ்காரின் உயிர் பிரிகிறது, மரணத்தின் வாசனையை அலெக்ஸாந்தரின்மேல் தெளித்துவிட்டு.
நாட்கள் நகர்கின்றன. ஆஸ்காரின் மனைவி எமிலி, மறுமணம் செய்துகொள்கிறாள். இந்தத் தடவை திருமணம் செய்துகொண்டது, எட்வர்ட் வெர்கிரஸ் என்ற ஒரு கிறிஸ்துவப் பேராயரை. அலெக்ஸாந்தரும் ஃபானியும் தங்களது மாற்றாந்தந்தை எட்வர்டின் வீட்டுக்குக் குடிபோகின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, ஜன்னல்களுக்குக் குறுக்காகக் கம்பிகளடிக்கப்பட்ட, கிட்டத்தட்ட தேவாலயம் போலவே இருக்கும் அந்த வீட்டின் வேலைக்காரிகள், செயலற்ற எட்வர்டின் சகோதரி, மற்றொரு சகோதரி, தாய் அனைவரும் கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளைக்கொண்டு பிறரைப் பிணைக்கும் ஒரு இறுக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். அலெக்ஸாந்தர் மேல் எட்வர்டுக்கு இருக்கும் வெறுப்பு சொல்லி மாளாது. அறநெறிப் போதனைகள் உதவியுடன் தன் இழுப்புக்கு அலெக்ஸாந்தரை வளைக்க முயலும் எட்வர்டுக்கு ஒவ்வொரு முறையும் தோல்வியே நிகழ்கிறது. நிகழ நிகழ, வன்மம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அலெக்சாந்தரின் தாய் எமிலிக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலை - மகனிடம், "எனக்கு இன்னும் சற்று நேரம் கொடு, அனைத்தையும் சீராக்க முயல்கிறேன்" என்கிறாள். அந்த வீட்டினுள் நடமாடும்போதெல்லாம் தன் தந்தையின் ஆவியைக் காண்கிறான் அலெக்சாந்தர். அந்த வீட்டு வேலைக்காரி ஒருத்தி, எட்வர்டின் பழைய மனைவிகளைக்குறித்து அலெக்சாந்தரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். "பழைய மனைவிக்கு இரண்டு பெண்குழந்தைகள். பக்கத்து ஆற்றில்தான் விழுந்து உயிர்விட்டார்கள். என்ன நினைத்துக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை, ஒருவரையொருவர் அவ்வளவு இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டு இறந்துகிடந்தார்கள். ரம்பத்தால் அறுத்துத்தான் அவர்களைப் பிரிக்கவேண்டிவந்தது" என்கிறாள். தனது கற்பனைத் திறனைத் துணைக்கழைத்து, எட்வர்ட் தான் அந்த மூன்று பேரையும் ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக கூறுகிறான் அலெக்சாந்தர். மேலே விசாரணைக்கு அழைக்கப்பட்டு, காற்சட்டை இறக்கப்பட்டு, முறுக்கப்பட்ட பிரம்பைக்கொண்டு வெளுத்து எடுக்கிறார் எட்வர்ட். அலெக்ஸாந்தர், தனியறை ஒன்றில் அடைக்கப்படுகிறான்.
மறுபடிக் கர்ப்பமடைகிறாள் எமிலி. தனது முன்னாள் மாமியார் ஹெலனா மீது உள்ள அபிமானத்தால், அவளுடனும் பேசி வருகிறாள், தொடர்பு வைத்திருக்கிறாள். ஹெலனாவுடன் பேசிவிட்டு வீடுதிரும்பும் எமிலி, அலெக்சாந்தர் தனியறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உக்கிரமடைகிறாள். எட்வர்டின் உணவில் வழக்கத்தைவிட அதிகளவில் தூக்கமாத்திரை கலந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, ஹெலனாவுடன் சேர்ந்துகொள்கிறாள். பின்பு அவர்களைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள், "எட்வர்டின் செயலிழந்த சகோதரி அருகிலிருந்த மெழுகுவர்த்தி கீழே விழுந்து துணிகளில் தீப்பற்றி அவள்மேலும் தீப்பற்றி, அவள் பின்பு ஓடி வந்து எட்வர்ட் மேல் விழுந்து இறுகப் பற்றிக்கொண்டதால், எட்வர்டும் கருகி இறந்துவிட்டார்" என்ற துக்ககரமான செய்தியைச் சொல்கின்றனர். ஹெலனாவும் எமிலியும் நாடக நிறுவனத்தைச் சேர்ந்து நிர்வகிப்பது என்ற முடிவுக்கு வருகின்றனர். அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்கின் ஒரு நாடகத்தை ஹெலனாவிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள் எமிலி. பிஸ்கெட்டுகளை எடுக்கவரும் அலெக்ஸாந்தர், தடுக்கிக் கீழே விழுகிறான். எழுந்திருக்க முயல்பவனின் பிடரியை வெகு அழுத்தமாக ஒரு கை இறுக்கிப் பிடிக்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். எட்வர்ட், "உன்னை விடுவதில்லை" என்றுவிட்டு நடந்து போகிறார். சுதாரித்து எழுந்து வரும் அலெக்ஸாந்தர், நாடகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் பாட்டி ஹெலனாவின் மடியில் படுத்துக்கொள்வதுடன் படம் முடிகிறது.
ஒருசில படங்களில், ஒளிப்பதிவாளர் என்பவர் அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரம் என்று தோன்றும். பழைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்' அ.வின்சென்ட் (சரியா?) போல. பெர்க்மனின் அனைத்துப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஸ்வென் நிக்விஸ்ட்டின் (Sven Nykvist) ஒளிப்பதிவு, படத்தின் வெவ்வேறு பக்கங்களை வெகு துல்லியமாகப் பிரித்தும் இணைத்தும் காட்டுகிறது. கிட்டத்தட்ட மறுமலர்ச்சி ஓவியர்களின் ஓவியங்கள், அலங்காரங்களைப்போன்ற வெகு நளினமான, வண்ணமயமான நாடக்கார ஏக்தால் குடும்பத்தின் வீடு; எந்தவித அலங்காரமுமற்ற, மத, அறநம்பிக்கைகளே சுவற்றின் சுண்ணாம்பாக வெளுத்துப்போய் உயிரற்று - ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்ற பழம்பெருமையுடன் ஓங்கி எழுந்து நிற்கும் எட்வர்டின் வீடு, மற்றும் அங்கிருந்து தப்பித்து ஃபானியும் அலெக்ஸாந்தரும் தங்கவைக்கப்பட்டிருக்கும் யூத வியாபாரி ஈசாக்கின் வீட்டினுள் காணும் எண்ணற்ற நிறங்கள், பொருட்கள், அமானுஷ்ய சக்திகள்கொண்டதாகக் காட்டப்படும் இஸ்மாயில் போன்றவற்றை, படம் பார்க்கும்போது உறுத்தலில்லாமல் காட்டி, படத்தைப் பார்த்து முடித்து எப்போதோ யோசிக்கையில், சம்பவங்களை நினைவுகூரையில், சம்பவங்களுடனே நிறங்களையும் குழைத்து நினைவுகளுள் பரவவிடும் மாயம், ஸ்வென் நிக்விஸ்ட் போன்ற வெகு சில ஒளிப்பதிவாளர்களுக்கே வாய்த்த வரம். படத்தைப் பார்க்கும்போது உணர்வீர்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு ஓவியம்போல இருப்பது - முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்ட Girl with a pearl earring போலவே.
சிறுவன் அலெக்சாந்தர், இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டபின்பு மாய லாந்தரில் (magic lantern) படம் காண்பிப்பதும், நிஜ வாழ்வில் பெர்க்மனுக்கு மிகவும் கண்டிப்பான பாதிரியார் தந்தை இருந்ததையும் இன்னும்பலவற்றையும் கொண்டு, இதில் ஓரளவு பெர்க்மனின் சுயசரிதைத்தமை இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுவன் அலெக்சாந்தரின் பிடரியில் அழுந்தும் எட்வர்டின் கையின் பிடி, சிறுவனைச் சிலையாக்கி, அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைப் பிடரி அறையில் அலெக்சாந்தரின் தலைக்குள் இறக்குகிறது. துக்கக் காட்சிகளை எவ்வளவு உன்னதமாக அமைக்கமுடியுமென்பதற்கொரு சாட்சியம், ஆஸ்கார் இறந்த அன்று இரவில், குழந்தைகள் ஃபானியும் அலெக்சாந்தரும் ஒரு பெரும் ஓலக் குரலைக் கேட்டு எழுவது. சிறிதே திறந்திருக்கும் கதவு வழி, சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஆஸ்காரின் பிணம் தெரிகிறது; குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு, திரும்பத் திரும்ப எமிலி ஓ ஓ என்று கத்திக்கொண்டிருக்கிறாள். கண்ணீர் வருவதாகத் தெரியவில்லை; ஆனால் நெஞ்சின் ஆழத்திலிருந்து புறப்படும் அந்த ஓலத்தில், வெறுமனே துக்கத்தைத் தாண்டியும் வேறேதோ இருப்பதை - அது ஆங்காரமா, இயலாமையா, எதிர்பாராத கணத்தில் எனக்கெப்படி இப்படி நிகழலாம் என்ற வாழ்வின்மீதான வன்மமா - என்ன சொல்லி அந்த நடிகையை இவ்வளவு தெளிவாக உணர்ச்சியை வெளிப்படுத்தச் செய்திருப்பார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை வோட்கா துணையுடன் பார்த்ததால் ஓவர் செண்டிமெண்டலாகி, பெர்க்மன் படமென்றால் பாராட்டித்தான் தீரவேண்டுமென்று என்னை நானே படத்துக்குள் புகுத்திக்கொண்டேனோ என்னமோ. பின்பு நிதானமாக யோசித்துப் பார்த்தாலும், அப்படியேதும் தோன்றவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் இந்தக் காட்சியை நினைவுகூர்ந்தும், படத்தை இனிமேல் பார்ப்பவர்கள் இதைக் கவனித்தும், நான் சொல்வது சரியா இல்லையா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தில் வந்து போகும் பிற பாத்திரங்கள் - நிழல்கள் போல வந்து மறைந்துபோகும் வேலைக்காரிகள், சமையற்காரிகள், பெரும்பாலும் ஏதும் பேசாத, அகன்ற கண்களையுடைய சிறுமி ஃபானி... காலரீதியில், இந்தப் படம் சில வருடங்களையே மையமாகக் கொண்டு, The Seventh Seal போன்ற "பிரம்மாண்டமான" தத்துவ அலசல்கள் ஏதுமின்றி இயங்கினாலும், அதுபோன்ற படங்களுக்கும் எந்தவிதத்திலும் குறைவில்லாததாகவே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் டிவிடி இரண்டு வகைகளில் கிடைக்கிறது: நான் பார்த்த மூன்று மணி நேர திரையரங்கு வடிவமாகவும், மற்றும் ஐந்து மணி நேர Director's cut ஆகவும். ஐந்துமணி நேர வடிவம் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. ஃபானி & அலெக்சாந்தர், பெர்க்மனின் படைப்புக்களிலேயே மிகச் சிறந்தது என்கிறார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை எனினும், மிக நல்ல படம்.
படம் நன்றி: ஆமஸான்
Sunday, March 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பார்க்கிறேன். நன்றி
மாண்டி, சிங்கை நூலகத்தில் அந்த ஐந்து மணி நேர டிவிடி கையில் கிடைத்து 5 மணி நேரமா? என்ற மலைப்புடன் இதை விட்டுவிட்டு அடுத்த டிவிடிக்கு தாவி விட்டேன். விமர்சனம் சொல்லிவிட்டீர்கள் இல்லையா? அடுத்து 5 மணி நேரம் சேர்ந்தார் போல நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்கிறேன். அறிமுகப்படித்தியதற்கு நன்றி.
'The seventh seal' படத்தை பார்த்ததுமில்லாமல் 'ஏழாவது முத்திரை' என்ற பெயருடன் வந்திருந்த தமிழ் வசன புத்தகத்தையும் படித்து இன்னொரு தரம் அந்த தத்துவத்தில் என்னை ஆழ்த்தினேன். படம் ஏற்கனவே பார்த்திருந்ததால் தமிழில் வசனம் படிக்க படிக்க ஒவ்வொரு கதாபத்திரமும் என் கற்பனையில் தமிழ் பேசின.
படங்களை தவிர இங்மார் பெர்க்மன் டிவி சீரியல்களை இயக்கியிருக்கிறாரா என்ன?
மாண்டீ வேலை செய்ய விடுங்க மாண்டீ, நீங்க எழுதினா உடனே இங்க டிவிடி தேடியாகற வேலை வந்துறுது. அப்பறம் அந்த டிவிடி எங்க கிடைக்குது அப்படின்னு ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு அப்புறம் கிடைச்சு, பார்த்து, முடிக்கறத்துக்குள்ளே அடுத்த டிவிடிக்கு ஒட வேண்டியதாய போகுது. என்னமோ போங்க!!
விஜய்: டிவி சீரியல்களையும் இயக்கியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.
இப்படி என் வயிதெறிச்சல கொட்டிக்கறீங்க....
உங்க படப் பதிவுகள தனியா ஒரு லிஸ்ட் போட்டு ஓரமா வைச்சா என்னை மாதிரி ஆட்கள், முதல் சந்தர்ப்பத்தில் பார்க்க வசதியா இருக்கும்....
இல்லன்னா சொல்லுங்க நானே ஒரு லிஸ்ட் ரெடி பண்றேன்....(இது ஆகாது ராசான்னு உள்ளே இருந்து செய்ய வேண்டிய வேலைகள் பலமான குரல் கொடுத்தாலும் எப்படியாவதுன்னு... ஒரு சந்தர்ப்பத்த பாத்து இந்த காமெண்ட்)
Post a Comment