Saturday, March 19, 2005

கருணைக் கொலை

நிறையப் பேர் இந்த வழக்கைக் கவனித்துக்கொண்டு வந்திருப்பீர்களென்று நினைக்கிறேன். ஒரு கணவன், ஒரு மனைவி. மனைவி நோயில் விழுகிறாள்; உயிரோடு இருந்தாலும், persistent vegetated state எனப்படும் வதங்கிய நிலையில்தான் இனி வாழ்வு முழுதும் இருக்கமுடியும். "பிறரைச் சங்கடப்படுத்தியோ, செயற்கையாகவோ உயிருடன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என் காலம் முடியும்போது நான் போய்விடவேண்டும்" என்று சுயநினைவுடன் இருக்கும்போது கணவனிடம் சொல்லியிருப்பதாக கணவனும், வேறு இரண்டு சாட்சிகளும் சொல்கிறார்கள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற, மனைவியை உயிருடன் வைத்திருக்கும் உணவுக்குழாயை நீக்கவேண்டும் என்றும், உனக்குப் பிரச்சினை வேண்டாம் - அதேசமயம் அவளது உணவுக்குழாயை நீக்கி அவள் உயிரை அகற்றவும் வேண்டாம் - எங்களிடம் கொடுத்துவிடு, நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென்று பெற்றோர்களும் விவாதித்து, பல வருடங்களாக நீதிமன்றத்தில் வாதாடி,நேற்று, நீதிமன்றம், உணவுக்குழாயை நீக்கலாமென்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஃப்ளோரிடாவில் டெர்ரி ஷியாவோ (Terry (Theresa) Schiavo) என்ற அந்தப் பெண்ணுக்கு, நேற்று மதியம் வாக்கில் உணவுக்குழாய் நீக்கப்பட்டது. அவரது பெற்றோருடனான ஒரு பேட்டியில், "ஏன் அவரது கணவர் அவளது உணவுக்குழாயை நீக்கவேண்டுமென்று தலைகீழாக நிற்கிறார்" என்று கேட்கப்பட்டதற்கு, "தெரியவில்லை: அதுதான் அவள் விருப்பமென்று சொல்கிறார். அப்படியே சொல்லியிருந்தாலும் எங்களுடன் டெர்ரி இருந்துவிட்டுப் போவதில் என்ன நஷ்டம் இருந்துவிடப்போகிறது" என்கிறார்கள். டெர்ரியைப் பராமரித்து வந்தாலும், டெர்ரியின் கணவர் மைக்கேல் ஷியாவோ, வேறொரு பெண்ணுடனும், அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுடனும் தற்போது வாழ்ந்து வருகிறார். பொதுவாக, இந்தச் செய்தியைப் படிக்கும்போது டெர்ரியின் பெற்றோர் போலவே எனக்கும் புதிராகத் தோன்றியது. ஏன் இந்த ஆசாமி டெர்ரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் வாழ்க்கையைத் தொடரக்கூடாது என்றுதான் தோன்றியது. போதாக்குறைக்கு, சில நாள் முன்பு ஒரு பணக்காரர் வேறு, பெற்றொரிடம் டெர்ரியை ஒப்படைத்துவிட்டால் ஒரு மில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறியும், "நான் செய்வது பணத்துக்காக இல்லை" என்று மைக்கேல் ஷியாவோ மறுத்துவிட்டார். இவ்விடத்தில், இதற்குமுன்பு டெர்ரிக்கு நடந்த சிகிச்சையில் சிகிச்சைத்தவறு நஷ்ட ஈடு (malpractice settlement)ஆக ஏகப்பட்ட பணமும் டெர்ரி-மைக்கேலுக்குக் கிடைத்திருக்கிறது. அதையும், "முதன்முதலில் டெர்ரி மயக்கமடைந்து விழுந்தபோது என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது" என்று என்றும், டெர்ரி வெறும் 115 பவுண்டு எடைதான்; மைக்கேல் ஆறரை அடி உயரம், கிட்டத்தட்ட 250 பவுண்டு எடை; ஒரு நிலையான வேலையில் தொடர்ந்து இருக்கவில்லை என்ற ரீதியில், மைக்கேலுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்குமாறு கூறப்படும் கற்பிதங்கள். ஃப்ளோரிடா ஆளுநர் ஜெப் புஷ் இயற்றிய விசேஷ அதிகாரம், அமெரிக்க காங்கிரஸ்முன் டெர்ரி வரவேண்டும் (வரவேண்டிய அவசியமிருப்பதால் உணவுக்குழாயை நீக்கமுடியாது என்ற ரீதியில்) என்று, பெரும்பான்மக் கட்சித்தலைவர் Tom DeLay போன்ற வலதுசார்புடைய குடியரசுக் கட்சியினர் முயன்றும், நீதிபதி ஜார்ஜ் க்ரியர் (George W. Greer), உணவுக்குழாயை நீக்குமாறு தீர்ப்புக் கொடுத்துவிட்டார். ஏற்கனவே பொதுஜனத் தளத்தில் அந்த நீதிபதியைக் 'கொலைகாரன்' என்ற ரீதியில் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள், இப்போது கொலைமிரட்டல்கள் வேறு வருகின்றதென்கின்றனர். இந்த நீதிபதி, டெர்ரி ஷியாவோவை ஒருதடவைகூட நேரடியாகப் பார்த்ததில்லை என்பதையும் குற்றச்சாட்டாகச் சொல்கின்றனர் சிலர். சில நாட்களுக்கு முன்புதான் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியையும், சில போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுவிட்டு ஒரு குற்றவாளி தப்பித்து ஓடிப் பிடிபட்டான்.

பெற்றோர் மற்றும் அவர்களது பக்கம் பேசுபவர்கள் சொல்வது: எங்களுடன் டெர்ரியை அனுப்பிவிடுங்கள். PVS என்று சொல்லப்படும் அளவுக்கு வதங்கிய நிலையில் டெர்ரி இல்லை, எங்களை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவளுக்கு ஒன்றும் இல்லை. இந்தமாதிரி உணவுக்குழாயை உருவி, பசிக்கவைத்துக் கொல்வது காட்டுமிராண்டித்தனம்.

மைக்கேல் ஷியாவோ (Michael Schiavo) சொல்வது: அவள் என்னிடம் சொன்னது இதுதான் - "நான் யாருக்கும் சுமையாக இருக்கவோ, வதங்கிய நிலையில் வாழ்ந்திருக்கவோ விரும்பவில்லை. என் நேரம் வரும்போது இறக்கவே விரும்புகிறேன் (technically சரியான வார்த்தைப்பிரயோகமில்லை, பெரும்பாலானோருக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்குமாகையால் மேற்கொண்டு விபரமாகச் சொல்வது தேவையில்லையென்று நினைக்கிறேன்)". அதனால் அவளது உணவுக்குழாயை நீக்குவதே உசிதம். நான் டெர்ரியை மிகவும் நேசிக்கிறேன், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை. மேலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்தில் அரசாங்கம் மூக்கை நுழைப்பதை நான் எதிர்க்கிறேன். எனக்கு என்ன வைத்தியம் தேவை, தேவையில்லை என்று தீர்மானிக்க நோயாளிக்குத்தான் உரிமையுள்ளது. அரசாங்கத்தின் அறவியல் கோட்பாடுகளுக்கு அந்தத் தீர்மானம் ஒத்துப் போகவில்லை என்பதால் அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கவோ மறுக்கவோ உரிமையில்லை. இது என் தனிப்பட்ட விஷயம் என்கிறார். அப்போது டெர்ரி எழுதிக் கையெழுத்துப் போட்டது ஏதாவது இருந்தால் சரி, அதுதான் இல்லையே என்கிறார்கள். லாரி கிங்கின் நிகழ்ச்சிக்குப் பேட்டிக்கு வந்த ஒருவர், "அறவியல் படி..." என்று தொடங்க, கிங், "உமது அறவியல் வேறாக எனது அறவியல் வேறாக இருக்கலாம், அதல்ல பிரச்னை" என்று கத்திரித்தார். பின்பு "டென் கமாண்ட்மெண்ட்ஸில் சொல்லியிருப்பது போல..." என்று தொடங்க, மறுபடி "நீதிமன்றம் சட்டத்தை வைத்து இயங்குவது, வேதாகமங்களைக் கொண்டு அல்ல" என்று மறுபடிக் கத்திரித்தார். உண்மை, உண்மை (லாரி கிங் யூதர் என்பதை ஒரு விமர்சனமாக வைக்கலாம்; ஆனாலும் அவர் சொன்னது உண்மையே).

கருணைக் கொலை என்பதுபற்றி யோசிக்கச் சந்தர்ப்பங்கள் எழுந்ததில்லை. உயிர் போகும் நிலையில், வேதனையை முடித்துவைக்க வாயில் பால் ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன் - அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், கணவர் பக்கமா பெற்றோர் பக்கமா என்று பார்த்தால் - பெற்றோர் பக்கம்தான் சாயத் தோன்றுகிறது. உணவுக்குழாயை நீக்குவதுதான் இறுதிக் கட்டம், உயிர்நீக்கம் என்று நினைத்தால், அதற்குப்பதில் பெற்றோரிடம் டெர்ரியை ஒப்படைத்துவிட்டு, அதுவும் ஒரு உயிர்நீக்கம்தான் என்று கொள்ளலாமே - தன் மனைவி இப்படி செயலற்றுக் கிடப்பதைப் பார்த்து மைக்கேல் அடையும் வேதனைக்கு சமாதானம் கூறுவது யாராலும் இயலாத காரியம் எனினும். "டெர்ரிக்குப் பதிலாக யார் வருவார்கள்? இதைவைத்து ஓட்டு ஆதாயம் தேடப்பார்க்கும் ஜெப் புஷ் போன்ற அரசியல்வாதிகளா?" என்கிறார் மைக்கேல். தனிமனித சுதந்திரம் என்பதுதான் இப்போது பிரச்னையாக இருக்கிறதோ என்னமோ இவர்களுக்கு. "விசாரணை" கதையிலாவது படுக்கை வரையில்தான் அதிகாரிகள் வருகிறார்கள், ஆனால் போகிறபோக்கில் பார்த்தால், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் பெண்களின் கருப்பைக்குள்ளும் அரசாங்கத்தின் கை பாய்ந்துவிடும் போல்தான் இருக்கிறது.

அனைத்துத் தகவல்களும் தெரிந்திராததால், பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்... கவனிக்கத்தக்க வழக்கு. திங்கட்கிழமை காங்கிரஸில் புதிதாக சட்டம் ஏதும் இயற்றப்படுகிறதா என்று எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம். முன்பொரு முறை, நீக்கிய உணவுக்குழாயை மறுபடிப் பொருத்தியிருக்கிறார்கள். இந்தத் தடவையும் அதுமாதிரிச் செய்து பாவம் உணர்வற்றுக் கிடக்கும் அந்தப் பெண்ணுடன் சடுகுடு விளையாடி அவமானப்படுத்தாமலிருந்தால் சரி.

10 comments:

இளங்கோ-டிசே said...

மாண்ட்ரீஸர்,
இந்தக் கருணைக் கொலைகள் விவாதற்குரியவை. நீங்கள் எழுதிய விடயத்தை சில தினங்களுக்கு முன் தான் அறிந்திருந்தேன். விபரமாக நீங்கள் எழுதும்போது இதன் முழுப்பின்னணியும் விளங்குகிறது. ஒரு உயிரைப் பறிக்கும் சட்டம் யாருக்கிருக்கிறது என்பது இந்த மாதிரியான விடயங்களில் சிக்கலானது போலத்தான் தோன்றுகின்றது. இதுமாதிரியான ஒரு கருணைக்கொலை சிலவாரங்களுக்கு முன் கனடாவில் ஒட்டாவாவில் நடந்ததை பத்திரிகையொன்றில் வாசித்திருந்தேன். ஒரு முதியவர் தனது நோயின் கடுமைகாரணமாக தன்னைக் கருணைக்கொலை செய்யுமாறு வேண்டியிருந்தார். ஆனால் இங்கே சட்டம் அதற்கு இடங்கொடுக்காததால், அனைவருக்கும் வெளிப்படையாக தானாக தன் இறுதி முடிவை தானே எடுப்பதாய் அறிவித்து, ஓரிரவில் அவருக்கு உயிர்வாழ்வதற்கு உதவிவழங்கப்படும் மருத்துவ உபகரணங்களை தானாகவே நீக்கிவிட்டு இறந்திருந்தார் (தற்கொலை செய்துகொண்டார்?). நிச்சயமாக நீங்கள் சொல்வதுபோல கருணைக்கொலைகளுடன் கருக்கலைப்புக்களும் ஏதோ ஒரு விவாதப்புள்ளியில் சந்திக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்.

Narain Rajagopalan said...

இதேப்போல் ஒரு விவாதம் இந்தியாவிலும் இருந்தது. அந்த வழக்கினைப் பற்றிய விவரங்கள் சரியாக ஞாபகமில்லை. ஆனால், ஒரு தாய், தன் மகனை கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி கேட்டிருந்தார். இது விவாதத்துக்குரிய விசயமே. டிசே, கருக்கலைப்பு என்பது வேறு விதமான விவாதம். கத்தோலிக்க திருச்சபை, கருக்கலைப்பினை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஆனால், இளமையில் அதிகமாக கர்ப்பமாகிறவர்கள், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகம். இதனாலேயே போப்பிற்கு நோபல் பரிசிற்கான சிபாரிசு செய்யப்படுவதில்லையென்றும் செய்தி படித்திருக்கிறேன். ஆனால், தனிமனிதனாய் என்னளவில், கருணைக்கொலையை ஆதரிக்கிறேன். ரேஸ் குதிரைகளில் காயம் பட்டு ஒட இயலாத குதிரைகளை சுட்டுவிடும் பழக்கமிருக்கிறது. இதனால், கருணைக்கொலை செய்யப்படுவர்கள் உபயோகமற்றவர்கள் என்று பொருளல்ல. அவர்களின் தொடர் வேதனையிலிருந்தும், சுற்றம் சூழல் கவலைகளிலிடமிருந்தும் ஒரு முழுமையான விடுதலை. ஆனால் கருக்கலைப்பு என்பது வேறு விஷயமாகிறது. நோயின் கொடுமையாலும், விபத்துகளினாலும் கருணைக்கொலையை எதிர்ப்பார்பவர்கள் வேறு, ஆனால், படுக்கும்போது காண்டம் போடாமல் அவசர அவசரமாய் படுப்பவர்கள் வேறு. முன்னது எதிர்பாராதது, பின்னது, வேண்டாம் கெட்ட வார்த்தையாய் போய்விடும்.

Anonymous said...

கருணை கொலை என்பது பொதுவில் வைக்க முடியாது என்பதே என் எண்ணம். அந்த செயல் குறிப்பிட்ட case சார்ந்து மட்டுமே செயல்படாமல், பொதுவில் வைக்க என்ன வழிமுறைகள் கொண்டு வந்தாலும், அது தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

கருணை கொலை என்பது ஒரு சமூகம் தன்னளவில் சுதந்திரமாக, பொதுவான ஒப்புதலுடைய மிகக் குறைந்த அளவு கட்டுகளுடன் இயங்கும் ஒரு நிலையில் மட்டுமே சாத்தியம் என நினைக்கின்றேன்.

இன்றைய நிலையில் சிறப்பு அனுமதி வேண்டி, இவ்விஷயத்தை வழக்காடு மன்றங்களுக்கு கொண்டு சென்ற பின்புதான் முடிவெடுக்க முடியும். அத்தகைய நிலையில் தான் இன்றைய சமூகம் உள்ளதாக பார்க்கின்றேன்.

சன்னாசி said...

டிஜே, நாராயண், பாலாஜி-பாரி: பொதுப்படையாக இதை எழுதியது, ஒரு தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதைக்குறித்துத்தான். மற்றபடி, கருணைக் கொலை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட case அடிப்படையிலும் தீர்மானிக்கப்படவேண்டுமென்பதில் மாற்று அபிப்ராயத்துக்கே இடமில்லை.

இளங்கோ-டிசே said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

நரேன்,
//கருணைக்கொலைகளுடன் கருக்கலைப்புக்களும் ஏதோ ஒரு விவாதப்புள்ளியில் சந்திக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்.//
என்று நான் குறிப்பிட முனைந்ததும், கருணைக்கொலைகளோ அல்லது கருக்கலைப்புக்களோ தனிப்பட்டவர்களின் முடிவுகளாக எடுக்க விடவேண்டுமே தவிர, ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் இதனை அடக்கிவிடமுடியாதென்பதுதான். நேற்று ரொரண்டோவில் பெண்களால் மட்டும் தயாரித்து, இயக்கப்பட்ட நாடகத்திலும் இந்தக் கருக்கலைப்புப் பற்றி அவர்களின் தெளிவான கருத்தை முன் வைத்திருந்தனர். கரு உருவாவதற்கு ஆணும், பெண்ணும் காரணமெனினும், அதை அழிக்கவோ, வளர்க்கவோ வேண்டியதற்கான சுதந்திரம் பெண்ணுக்கு மட்டுமே உள்ளதென்று அந்தப்பெண்கள் கூறியதில் எனக்கும் உடன்பாடே.
மற்றபடி, நீங்கள் கூறுவதுமாதிரி, abortions பற்றி திருச்சபைகளின் கருத்துக்களும், conservativeயான மேற்கத்தைய அரசியல்வாதிகளின் கருத்துக்களும் நாமெல்லோரும் அறிந்ததே. வயது போன காலத்தில் புத்தகம் எழுதிய நமது போப்பாண்டவரும் தனது பங்கிற்கு கருக்கலைப்புப் பற்றியெல்லாம் திருவாய் மொழிந்துள்ளார் (Gays பற்றியும்தான்).
//படுக்கும்போது காண்டம் போடாமல் அவசர அவசரமாய் படுப்பவர்கள் வேறு. முன்னது எதிர்பாராதது, பின்னது, வேண்டாம் கெட்ட வார்த்தையாய் போய்விடும்//
நரேன் முற்றுமுழுதாய் உங்களுடன் இதில் உடன்படுகின்றேன்.

p.s: Was removed my preivous post in order to correct some spelling mistakes.

Narain Rajagopalan said...

என்ன தான் முன்னேறிய நாடாயிருந்தாலும், கருக்கலைப்பு என்பது தொழில்நுட்பரீதியாக சாதாரணமாய் போய்விட்டாலும், இன்னமும், அது சமூக விதிகளின் மீறலாகவே அறியப்படுகிறது. நீங்கள் சொன்னதில் 90% ஒத்துக்கொள்கிறேன். கருக்கலைப்பின் உரிமை பெண்களுக்குரியதே. அதில் எவ்வித சந்தேகமுமில்லை. உங்களூரில் பரவாயில்லை. இந்தியாவில் இது மகா மோசம். 3 வருடங்களுக்கு முன்பு வரை, தி.நகரில் திரும்பிய பக்கமெல்லாம் இதுப்போல கருக்கலைக்கும் கிளினிக்குகள் இருந்தன. இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் தான், நான் மாலனின் பதிவில் எழுதிய கிறிஸ்துவ அடிப்படைவாதம். அவர்கள், கருக்கலைப்பினை தீவிரமாக எதிர்ப்பவர்கள்.

சரி அதை விடுங்கள். வலைப்பதிவுகளைப் புத்தகமாக்கும் விவாதத்தினை நீங்கள் பதிகிறீர்களா?

கருணைக்கொலை case-to-case அடித்தளத்தில் பார்க்கவேண்டும் என்பதோடு ஒத்துப்போகிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

மாண்ட்ரீசர்,டி.சே,நரைன்
நீங்கள் சொல்வதுமாதிரி கருணைக்கொலை என்பது அந்தந்த சம்பவங்களினடிப்படையில் எடுக்கவேண்டிய முடிவு என்பதில் வேறு கருத்து இல்லை.ஆனால் கருணைக்கொலை செய்யப்படவேண்டியதை தீர்மானிப்பது யார்?நோயாளியா,உறவினரா,வைத்தியரா அல்லது மூன்று பேரும் இணங்கும் பட்சத்தில் செய்யவேண்டுமா?ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை இன்னொருவருக்கு இல்லை என்பது அதீத ஜனநாயகமாகத் தான் இருக்கும் சில சந்தர்ப்பங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை என்பதே முதன்மையாக இருக்கும்.

கருக்கலைப்புக்கும் பொதுப்படையான தடைச் சட்டம் கொண்டுவர முடியாது அங்கவீனனாகவே பிறக்கும் என உறுதி செய்யப்பட்ட கருவைக் கலைப்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை

ஈழநாதன்(Eelanathan) said...

நரைன் காலந்தாழ்த்தாமல் சிறந்த வலைப்பதிவுகளைப் புத்தகமாக்குவது பற்றி வலைப்பதியுங்கள் எனது ஆதரவு என்றுமுண்டு

கறுப்பி said...

மாண்ரிஸர் நானும் செவாவோவின் கேஸை முடிந்தவரை ஃபொலோ பண்ணி வருகின்றேன். அவரின் குடும்பத்தாருக்கு கணவன் மைக்கல் மேல் சந்தேகம் வந்துவிட்டாலும் இது ஒரு வாரமோ ஒரு மாதமோ விவாதிக்கப்படும் விடையம் அல்ல. பல வருடங்களாக தொடரப்படுவதால் மைக்கெலுக்கு உள்நோக்கமோ வேறு எதுவோ இருந்திருந்தால் அதை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய காலம் கிடைத்திருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை மீண்டு எழுந்த வரமாட்டாள் என்று மருத்துவர்கள் நம்புவதாலும் செவாவோவின் விருப்பமும் அதுவாக இருக்கும் பட்சத்தில் (சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும்) கருணைக் கொலையால் அவளின் உயிரை எடுப்பதை நான் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றேன். படுத்த படுக்கையாக இருந்து இழுபட்டு ஏன் ஒரு உயிர் சிரமப்பட வேண்டும். பெற்றோர்களின் உணர்வு மைக்கெலின் உணர்வு என்பதை மீறி இது செவாவோவின் உயிர் உடல் அது வீணே கிடந்து ஏன் அல்லல் பட வேண்டும்.

டீசே. அப்போ கருமையத்தின் நாடக விழாவிற்கு வந்திருக்கின்றீர்கள். நன்றி. முழுதாக ஒரு விமர்சனம் எழுதலாமே.