Wednesday, March 23, 2005

பூமியின் எதிர்ப்பதம்

பூமியின் எதிர்ப்பதம்

கரும்பலகைக்கு முன்னிருந்து
பொன்னையா சாரின் நரைமுடி எங்களைப் பார்த்தது
பிரம்பும் எங்களைப் பார்த்தது
நாங்கள் கணுக்கள் செதுக்கிய பிரம்பு

எதிர்ப்பதங்கள் நெளிந்தன எங்கள் கால்சராய்களுக்குள்
மயிர்முளைக்கா கெண்டைக்கால் சதைகளில்
நாற்காலிகளின் மரக்கிறீச்சிடல்களில் டிஃபன்பாக்ஸ்களில்

பூமியின் எதிர்ப்பதம் என்ன எனக்
கேட்டிருந்தார் பொன்னையா

ராயப்பன் ஒரு பருக்கையை உருவிக்காட்டினான்
யோசேப்பன் நரகம் என்றான்
பின்பு குழம்பி, சொர்க்கம் என்றான்
நான் யோசித்தேன்,
பூமி என்றேன்

இருக்கலாம் என்றார் பொன்னையா
ஆனால் நான் பதம் என்றேன் என்றார்
பதத்துக்குப் பதம் மட்டுமே எதிரா என்றேன்
ஆம் என்றார், மேலும்
உனது பதில் நாடகீயமானதென்றார்
எங்களில் அலுப்படைந்தார்

சரி உங்களுக்குச் சில
சுலபமான கேள்விகளென்றார் பொன்னையா
நில் என்பதன் எதிர்ப்பதமென்ன?
உட்கார் என்றோம்
உட்கார் என்பதன் எதிர்ப்பதமென்ன?
நில் என்றோம்
பிரம்பு அசைந்தது

4 comments:

Anonymous said...

last line :o)

Anonymous said...

நல்லா இருக்கு

Narain Rajagopalan said...

உங்க கவிதையா ? சூப்பர் அப்பு

சன்னாசி said...

நன்றிகள். நாராயண்: நான் எழுதியதுதான். ஆனால், இங்கே சொன்னதுபோல, நெப்போலியனையும் என்னையறியாமல் ஒரு தழுவு தழுவியிருக்கிறேனென்று தோன்றுவது வகுப்பறை என்னும் களத்தைக்கொண்டா தெரியவில்லை!!