Wednesday, March 23, 2005

குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படம்

ராகேஷ் ஷர்மா என்ற இயக்குனரின் குஜராத் மதக்கலவரம் குறித்த Final Solution என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இதைத் திரையிடுவது குறித்த மின்னஞ்சல் அறிமுகத்தில், //Final Solution is a study of the politics of hate. Set in Gujarat during the period Feb/March 2002 - July 2003, the film graphically documents the changing face of right-wing politics in India through a study of the 2002 genocide of Moslems in Gujarat. It specifically aims political tendencies reminiscent of the Nazi Germany of early/mid-1930s. Final Solution is antihate/violence as "those who forget history are condemned to relive it"// என்றிருந்ததில், Final Solution என்பது, யூதர்களைக் கொல்ல நாஜிகள் வடிவமைத்த திட்டத்தின் பெயர் என்பது, பல மாணவர்களைச் சங்கடப்படுத்தியதால், படத்தைத் திரையிட அனுமதி மறுக்க மின்னஞ்சல் அனுப்புமாறு ஒரு கோரிக்கை வந்தது. அதை எத்தனை பேர் கண்டுகொண்டார்கள் என்று தெரியவில்லை. படத்தைப் பார்க்காமலே எதிர்ப்புக்குரலோ ஆதரவுக்குரலோ கொடுக்கக்கூடாதென்பதால் நான் எதுவும் எழுதவில்லை. படம் பார்த்தேன். சுமாரான கூட்டம். நிறைய இந்தியர்கள், சில பாகிஸ்தானியர், பல வெளிநாட்டவர் என்று கிட்டத்தட்ட நூறு பேர். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடிய படம். இந்தியாவில் தணிக்கைக்குழுவால் பொதுவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டு, பொதுவில்தானே திரையிடக்கூடாது, தனிப்பட்ட முறையில் திரையிடலாமென்று தனிப்பட்ட முறையில் திரையிட்டு, மேலும் piracy என்பதையே ஒரு உத்தியாக, ஒருவனுக்கு இலவச விசிடி கொடுத்தால் அவன் மேலும் ஐந்து பேருக்கு அதைப் பிரதி எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட 12000 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டுப் பார்க்கப்பட்ட ஆவணப்படம். சுருக்கமாக, நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு, கோத்ராவைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை எப்படி மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்தது, அடுத்த சட்டசபைத் தேர்தலில் கோத்ராவையே எப்படி மையமான ஒரு விஷயமாக்கி ஜெயித்தது என்பதை, நரேந்திர மோடியில் "கௌரவ யாத்திரை" துணையுடன் காட்டியது. கலவரம் நிகழ்ந்த நேரத்தில் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, 'இந்து' வின் முதல்பக்கத்தில் கொலைகாரர்களிடம் கண்ணீரோடு கைகளைக் கூப்பிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதினனின் படம் மனத்தைப் பிசைந்ததுண்டு. இந்தப் படம், எதிர்-பாஜக நிலைப்பாட்டுடன், பெரும்பாலும் முஸ்லீம்கள் பார்வையில், அவ்வப்போது சில இந்துக்களின் பார்வையில் சொல்லப்பட்டிருந்ததென்பதால், நடந்த கற்பழிப்புக்கள், நினைவு தப்பும்வரை ஒருவனை அடித்துப்போட்டு எரியும் டயரை அவன்மேல் வைத்துவிட்டுப் போவது, பெண்களின் கருப்பைக்குள்ளிருக்கும் குழந்தைகள் உருவிக் கொலைசெய்யப்படுவது, குடும்பத்தோடு பத்துப் பேர் இருபது பேர் என்று கொலைசெய்யப்படுவது என்று எடுக்கப்படும் பேட்டிகளுடன், ஒரு முஸ்லிம் சிறுவனிடமும் ஒரு இந்துச் சிறுமியிடமும் எடுக்கப்பட்ட பேட்டிகள்தான் இன்னும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. படத்தை எடுத்த ராகேஷ் ஷர்மா, அந்த முஸ்லிம் பள்ளிச்சிறுவனிடம் (ஆறேழு வயதிருக்கும்) கேட்கிறார்: "பெரியவனாகி என்ன செய்வாய்?" "Soldier ஆவேன்."
"ஆகி?"
"இந்துக்களைக் கொல்லுவேன்."
"ஏன்?"
"இந்துக்கள் எங்கள் குடும்பத்தினரைக் கொன்றார்கள்"
"நானும் ஒரு இந்துதான். என்னை விட்டுவிடுவாயா?"
பையனுக்கு சிறிதுநேரம் குழப்பம். அங்குமிங்குமாகப் பார்க்கிறான்.
"ஆமாம். விட்டுவிடுவேன்"
"ஏன்? நானும் ஒரு இந்து தானே?"
"இல்லை, நீ ஒரு முஸ்லிம்".

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் சாமியார்களின், மோடியின் பேச்சையும், பிரஹலாத் சாஸ்திரி என்ற பேச்சாளருடனான (ஐக்கிய நாடுகளின் சட்டங்களிலிருந்து சடசடவென்று உடைந்த ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டும், விஷங்கக்கும் பேச்சாளரொருவர். "இந்து அடிப்படைவாதம் இதுவரை உருவாகவில்லை; ஆனால் உருவானால், பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும்" ரீதியில்...) நேர்முகங்கள், குஜராத் மாநில ஆதிவாசிகள் விஹெச்பியினரால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆள்திரட்டுவது (சொல்லும் காரணம்: Abstination: மது, சிகரெட் இதெல்லாம் இங்கே சேர்ந்தபின் கிடையாது. முஸ்லிம்கள் இதையெல்லாம் காட்டி ஆளை மயக்கி, வீட்டைவிட்டு இந்துப் பெண்களை அழைத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். நாம் மரியாதையுடன் பிழைக்கவேண்டாமா?) என்றும், எப்படி சிறுபான்மையினர் ghettoisationக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும், மிக வலிமையான சில நேர்முகங்களுடன் இருந்த படம். என் மகளின் மார்பை அறுத்தார்கள் என்றும், ஒரு கையில் மொபைல் ஃபோன் மறுகையில் வாளுடன் தான் எங்களை வெகு திட்டமிட்டுத் தாக்கினார்கள், குடும்பத்தோடு மொத்தமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள், வா வந்து கற்பழிப்பதைப் பாரு என்று எக்காளமிட்டுக்கொண்டே பெண்களைக் கற்பழித்தார்கள் என்று முஸ்லிம்களும், இந்துக்களாவது கம்பு வாள் கொண்டு தாக்கினார்கள்; இந்த முஸ்லிம்களுக்கு ஆயுதங்களெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை என்றுகொண்டு இந்துக்களும் என்று இருபக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள். அடுத்து ஆகாஷ்தர்ம் கோவிலில் கமாண்டோப் படையினரால் சுடப்பட்டு இறந்த தீவிரவாதிகள் இருவரைப்பற்றியும், அது எப்படி அரசியலாக்கப்பட்டது என்றும், தேர்தலில் ஜெயித்தபிறகு அத்வானி "கோத்ரா பற்றிப் பேச்செடுக்காமலே தேர்தலில் ஜெயித்தோம். It is remarkable" என்றும், hate mandate எப்படி பாஜக மறுபடி ஆட்சிக்கு வர உதவியதென்றும் கூறுகிறது இரண்டாம் பாகம். கண்ணுக்குக் கண் என்று அனைவரும் களத்தில் இறங்கினால் உலகமே குருடாகிவிடும் என்று காந்தி சொன்னதைத்தான் நினைவுகூரவேண்டியிருக்கிறது. பேட்டிகாணப்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தார், காங்கிரஸ் பாஜக முஸ்லிம் இந்து என்று அரசியல் சித்துவிளையாட்டுக்களில் பொதுஜனங்கள் மாட்டிக்கொண்டு சாகிறார்கள் என்ற ரீதியில் கருத்துக் கூறினார்கள்.

மேலும், என்னளவில் விமர்சனமென்று ஒன்று வைக்கவேண்டுமெனில், சங்பரிவார், விஹெச்பி, பாஜக இந்தப் பிரச்னையில் உபயோகித்த காட்டுமிராண்டித்தனம் மேலான இந்த ஆவணப்படத்தின் நியாயமான விமர்சனத்தைத் தவிர்த்து, தெற்காசிய மதநிலவரங்களைப்பற்றித் தெரியாத ஒரு நடுநிலைப் பார்வையாளனுக்கு (neutral foreign spectator), இந்தப் படம் மட்டும், தன்னளவில் இந்துக்களைப்பற்றி என்ன உணர்வுகளை அளிக்குமென்றுதான் யோசிக்கத் தோன்றியது. இண்டியானா ஜோன்ஸ் அண்டு த டெம்பிள் ஆஃப் டூம் பார்த்துவிட்டு அம்ரீஷ்புரி ரீதியிலும், ISKCON ரீதியிலும் அபிப்ராயம் வைத்திருப்பவர்களிடம், இந்துமதம் குறித்த எந்தவித அபிப்ராயம் கொடுக்கும் என்று யோசித்தபோது, படம், குஜராத் கலவரத்தில் தொடங்கி, குஜராத் கலவரத்தில் முடிகிறதால், "இந்து" என்பவன் இவ்வளவுதானா என்ற ரீதியில் அடங்கிப் போகிறதா என்று கேட்டேன். மழுப்பலான ஏதோ பதில். செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு மெல்லிசாக மீசை, நீளமான தாடி என்று இருந்தாலே இஸ்லாமியத் தீவிரவாதி என்று சந்தேகத்துடன் பார்ப்பதுபோன்ற மடத்தனமான பார்வையை மேற்கத்திய உலகம் வரித்துக்கொண்டுவிட்டதுபோல, "இந்துக்கள் அனைவரும் பாஜக, விஹெச்பி பூட்ஸுக்குப் பாலிஷ் போட்டுக்கொண்டு, பிற மதத்தினரை வெட்டிக் கொல்பவர்கள்" என்ற ரீதியில் மொட்டையாக சித்தரித்திருக்கிறீர்களே என்று சில கேள்விகள். கிடைத்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. சரி, "இந்துக் காட்டுமிராண்டிகள்" (மேற்கண்ட பூட்பாலிஷ் ரீதியில்...) திருந்துவோமென்று முடிவெடுத்து, இந்துமதத்தை அடியோடு வேரறுத்துவிட்டு சீனா போல அதிகாரபூர்வமான இறைநம்பிக்கையின்மையைத் (atheism) தழுவினால் அதன்பிறகு அதன் எதிர்காலம் எப்படியிருக்குமென்று ஊகிக்க முடியுமா உங்களால் என்று ஒரு கேள்வி. பதில் திருப்தியளிக்கவில்லை. சர்வதேசத் தளத்தில் இந்தப் பிரச்னை என்று இயக்குனர் சொல்ல, தற்போதைய சூழ்நிலையில் மதச்சார்பின்மை குறித்து இந்தியாவுக்கு அறிவுரை சொல்லுமளவு பிறமதத் துவேஷமில்லாத "முன்னேறிய நாடுகள்" இருக்கின்றதா என்று கேட்டதற்கு, "Nation state குறித்த எனது கருத்தாக்கம் வேறுபட்டது. என்னை ஒரு தேசத்துக் குடிமகனாக குறுகிய கண்ணோட்டத்தில் நான் கருதுவதில்லை" என்ற ரீதியில் ஒரு பதில். குஜராத் பள்ளிக்கூடங்களில் ஹிட்லர் பற்றிய ஒரு வரி "தன் இனத்தவரைப் பெருமைகொள்ளச்செய்து தன்னம்பிக்கையூட்டினார்" என்று புகழ்ந்து எழுதப்பட்டிருப்பதை, சிறுபான்மையினர் தனியாகப் பிரித்து வைக்கப்படுவதையும் படம் குறிப்பிடுகிறது.

ஷ்யாம் பெனகலிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் விபரங்கள் அறிய அவரது தளத்தைப் பார்க்கவும். இந்தப் படத்தின்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் இருப்பினும், நிஜத்தின் குரூரமுகத்தை நெருக்கத்தில் காணக்கிடைத்த வாய்ப்பு என்ற ரீதியில், ஒரு நினைவில் தங்கும் அனுபவம்.

15 comments:

Narain Rajagopalan said...

இந்த படத்தினை ஒரு திரைவிழாவில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. அது படம் சென்சார் ஆகும் முன், வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை என உலகத் திரைப்பட விழாவில் ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தியப்படங்களை காட்டும் ஒரு அமைப்பின் வழியாக காண்பிக்கப்பட்டது. குருரமான நிஜத்தின் யதார்த்தம் கண்முன் நிறுத்தப்படும். பட்வர்தன் என்பவர் தான் அவ்வமைப்பின் நிர்வாகி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்தப்படத்தின் இன்னொரு முகம் தான் அனுபம் கெர் சென்சார் போர்டு அதிகாரத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தூக்கியடிக்கப்பட்டது. இந்தப் படத்தினை தணிக்கை செய்ய அனுமதிக்கவில்லை, படத்தினை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்து அடங்கி, அனுபம் கெர் என்.டி.டிவியில் கண்ணீர் மல்க தன்நிலையினை நிறுத்தி என நீளும் சூழ்நிலையில் இந்த படம் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். எல்லோராலும் விமர்சிக்கப்பட்டு, பரவலாக ஊடகங்களின் வாயிலாக பேசப்பட்ட படமிது. ஆனாலும், எனக்கென்னவோ, அந்த விழாவில் நான் பார்த்த "நர்மதா" என்கிற ஆவணப்படம் மிகவும் பிடித்திருந்தது. நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தாமோதர் அணையினால் ஏற்பட்ட ஆதிவாசி, பழங்குடிகளின் இடமாற்றங்களும், சுற்றுச்சூழல் பாதிப்பும், இடமாற்றங்களுக்கு உள்ளானவர்களுக்கான நஷ்டஈட்டினை இன்னமும் தராத அரசாங்கம் என நீளும் படத்தில் மேதா பட்கர் என்றொரு தனிமனுஷியின் தன்னலமற்ற சேவையும், போராட்ட குணமும், ஆளுமையும் நன்றாக தெரியவரும். கொஞ்சம் நர்மதா வலைத்தளத்திறகு சென்று பார்த்தால், இந்திய அரசின் மெத்தனமும், அரசாங்க இயந்திரத்தின் முட்டாள்தனமும் தெரியவரும். நிறைய பேர் பார்க்காத படமது, பார்த்தாலும், பைனல் சொல்யுசன் போல் பேசப்படாத படமது.

ROSAVASANTH said...

நல்ல பதிவு. இந்த படம் குறித்து ஏகப்பட்ட பேர் பேசி, எழுதி, செய்தி தந்து பார்தாகிவிட்டது. இன்னும் படத்தை பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் குஜராத் குறித்து படிக்கவும் பார்க்கவும் இருக்கவும் விஷயங்களுக்கு அளவிருக்க போகிறதா என்ன?

சுந்தரவடிவேல் said...

எங்கள் பல்கலையில் திரையிடப்பட்டபோது் பார்க்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன்!

சன்னாசி said...

மேற்படியான தகவல்களுக்கு நன்றி நாராயண். தொழிற்சங்கங்களே இதைத் திரையிட வெகுவாகத் தயங்கின என்றார் இயக்குனர்.
ரோஸாவசந்த், சுந்தரவடிவேல், நன்றி: ரோஸாவசந்த்: உண்மைதான் - அளவிருக்கப் போவதில்லை, இருந்தாலும், செய்தி ரீதியான வெகுஜன ஊடகங்களைத் தாண்டி, ஒரு தனிப்பட்ட கண்ணோட்டத்தில் கோர்க்கப்பட்ட சம்பவங்களாகப் பார்க்கும்போது அது தரும் அனுபவம் வேறாகவே இருக்கிறது.

Anonymous said...

நான் இப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் ஆனந்த் பட்வர்த்தன், மற்றும் ராகேஷ் சர்மாவின் மற்ற சில ஆவணப் படங்களை பார்த்துள்ளேன்.

குறிப்பாக ராம் கே நாம்.

சரி. இப்பதிவை பற்றி.
மாண்டீ, இந்த பதிவு ஏதோ இடதுசாரிகளின் பிரச்சார பீரங்கியாக இந்த படம் இருப்பதான தோற்றத்தை கொடுக்கின்றது. இதில் எந்த ஒளிவோ மறைவோ வேண்டாம். இது இடதுசாரிகளின் படம் மட்டுமே.

ஆனால் நான் நினைப்பது என்னவென்றால் இத்தகையதான ஒரு முயற்சி. நடந்தவைகளை கண்முன் நிறுத்துவதான ஒரு செயல். அதில் உரைக்கப்படும் உணமைகள், அதில் உறையும் அதிர்வுகள். இதுவே மிக முக்கியம். இதை பற்றியும் நீங்கள் பேசி இருக்கலாம். இதை ஒரு அனுபவமாக சொல்வது, மேல் சொன்ன உணர்வுகளின் ஒட்டு மொத்த
கலவை என்றே நான் உணர்ந்தாலும், சிலவற்றை சொல்லிவிட வேண்டும் என்றும் நான் நினைக்கின்றேன்.

கோத்தராவில் என்ன நடந்தது என்பதை பற்றிய இன்னொரு ஆவணப்படமும் உள்ளது. அதையும் பார்த்து விட்டு, என் ப்ளாக் சரியாகிவிட்டால் ஒரு பதிவை இடுகின்றேன்.

நன்றிகள்.

சன்னாசி said...

//மாண்டீ, இந்த பதிவு ஏதோ இடதுசாரிகளின் பிரச்சார பீரங்கியாக இந்த படம் இருப்பதான தோற்றத்தை கொடுக்கின்றது. இதில் எந்த ஒளிவோ மறைவோ வேண்டாம். இது இடதுசாரிகளின் படம் மட்டுமே. //

உண்மை. நேரடியாக இதுவா விஷயம் என்று கேட்பதை, நான் உட்பட, சபைநாகரிகம் கருதிப் பலர் தெரிந்தே தவிர்த்தார்கள் என்பதுதான் நான் கண்டது. நேரடியாகக் கேட்டிருக்கலாம்; கெட்ட வார்த்தை ஏதும் அல்ல. அவர்களிடம் உள்ள பதிலுக்கேற்றவாறு நமது கேள்விகள் திரிக்கப்படச் சாத்தியமுள்ளது என்பதை ஓரளவு முன்பே கண்டிருப்பதால்....... புரியுமென்று நினைக்கிறேன்!!

உங்களது பதிவையும் இடுங்கள்.

சன்னாசி said...

//ஆனால் நான் நினைப்பது என்னவென்றால் இத்தகையதான ஒரு முயற்சி. நடந்தவைகளை கண்முன் நிறுத்துவதான ஒரு செயல். அதில் உரைக்கப்படும் உணமைகள், அதில் உறையும் அதிர்வுகள். இதுவே மிக முக்கியம். இதை பற்றியும் நீங்கள் பேசி இருக்கலாம்.//
பாலாஜி: முந்தைய என் பதில் பின்னூட்டத்தில் சொல்லாமல் விட்டது. ஏற்பட்ட உணர்வுகள் குறித்துப் பதியாததால், இந்தப் படம் எந்தவிதப் பாதிப்பையும் நிகழ்த்தவில்லை என்று அர்த்தமில்லை. படம் இடதுசாரிப் பார்வையில் இருப்பதாக எனக்கும் பலருக்கும் பட்டதே தவிர, கோரங்களைக் கணக்கில் கொள்ளாமல், இடதுசாரிப் பார்வையைக் குறைசொல்லி மட்டும் எழுதப்பட்டதாக இந்தப் பதிவு உங்களுக்குப் பட்டால், பெரும்பாலும் தவறு என்னுடையதாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நோக்கத்தில் எழுதவில்லை என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்.

Anonymous said...

உங்கள் பதிலுக்கும் புரிதலுக்கும் நன்றிகள்!

Anonymous said...

இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.
ஆனால் Son, father and holy war என்ற படத்தையும் கோத்ரா டக் என்ற கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு விசாரணையை ஒட்டி எடுக்கப்பட்ட படத்தையும் பார்த்திருக்கிறேன். Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை என்றும் காட்டியிருக்கும்.போர்/மதம்/ வன்முறையினை மத சக்திகள் (மும்மதங்களும்) எவ்வாறு பெருமைப்படுத்துகின்றன, அதன் அடிப்படையில் கற்பு, ஒழுக்கம், இவைகள் எப்படி கிளைக்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகிற படம்.
அந்தப்படம் இரண்டு தரப்பினரையும் (இந்து, முஸ்லீம்) சரியாகவே காட்டியது.

முஸ்லீம்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளை ஒரே வரியில் ஒத்துக்கொண்ட நீங்கள் இந்தியர்கள் மதவெறியர்களாக சித்தரிக்கப்படும் அபாயம் இருப்பதைப்பற்றி நீங்கள் அதிகம் பேசியிருக்கிறீர்கள். இப்படி ஒரு கவலை நியாயமானதே. மேலும் அதைப்பற்றி நாம்தான் கவலையும் படமுடியும்; வேண்டும். ஏனெனில் நாங்கள் இந்துக்கள் அனைவரும் மத அடிப்படைவாதிகள்தான் என்ற கருத்தை விமர்சனமின்றி பரவவிடுவது நம்மை நாமே பிஜேபியில் உறுப்பினராக்குவதற்கு சமம். அதே சமயம் மற்ற நாடுகள் எவருக்கு நம்மை அடிப்படைவாதிகள் என்று சொல்ல தகுதி இருக்கிறது என்று கேட்பது சரியாக தோன்றவில்லை; படம் எடுத்தவர் அயல்நாட்டினர் அல்லர். மேலும் வங்கதேசத்தில் இந்துக்கள் மேல் செலுத்தப்பட்ட வன்முறை ஏன் இப்படி விவாதிக்கப்படவில்லை என்றும் கேட்கமுடியாது. இப்படிப்பட்ட புறவயமான அணுகுமுறைகள் பொதுவாக சங்கபரிவார்கள் கைக்கொள்ளுபவை. அதே சமயம் இந்து அடிப்படைவாதம் இந்த சங்கபரிவாரங்களால் எப்படித் தூண்டப்படுகிறது; அதன் பின் உள்ள அரசியல் நோக்கங்கள் எவையெவை? அது உண்மையில் யாருக்கு எதிராக இருக்கிறது? (நான் அது உண்மையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் எதிரானது என்று சொல்வேன்)என்ற கேள்விகள் மிகவும் கூர்மையாக எழுப்பப்படவேண்டும் அதே சமயம் பன்மைத்தன்மையை மிக இயல்பாக அனுமதிக்கும் ஒரு சாதரண இந்து(தியனின்) பின்ணனியும் மிகத்தெளிவாகக் காட்டப்படவேண்டும். அது படம் பார்க்கும் மக்கள் தங்களை சரியாக அடையாளங்கண்டு இந்த சங்கபரிவாரங்களோடு அடையாளம் காணவொட்டாமல் செய்யும். இது இந்து இயக்கங்களுக்கு மக்களைச் சேராமல் செய்யும் வழியாக இருக்கும். நான் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை; ஆனால் இதை ஒரு முக்கியமான விமர்சனமாக நான் நினைப்பேன்.

Thangamani said...

மேலெ இருக்கும் நீண்ட ஆனமதேயம் நாந்தான். எப்படியோ அப்படி வந்துவிட்டது.

Anonymous said...

அப்பாடா, நான் நினைச்சத தங்க மணி சொல்லிட்டார். நன்றிகள் தங்கமணி.
மேலும் நீங்கள் குறிப்பிட்ட படத்தை நினைவுபடுத்தியதற்கும்.

சன்னாசி said...

தங்கமணி:

//முஸ்லீம்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளை ஒரே வரியில் ஒத்துக்கொண்ட நீங்கள் இந்தியர்கள் மதவெறியர்களாக சித்தரிக்கப்படும் அபாயம் இருப்பதைப்பற்றி நீங்கள் அதிகம் பேசியிருக்கிறீர்கள். இப்படி ஒரு கவலை நியாயமானதே. மேலும் அதைப்பற்றி நாம்தான் கவலையும் படமுடியும்; வேண்டும். ஏனெனில் நாங்கள் இந்துக்கள் அனைவரும் மத அடிப்படைவாதிகள்தான் என்ற கருத்தை விமர்சனமின்றி பரவவிடுவது நம்மை நாமே பிஜேபியில் உறுப்பினராக்குவதற்கு சமம்.//
நான் நினைத்து எழுதியதும் இதே அர்த்தத்தில்தான். கொடுமைகளைப்பற்றிச் சில வரிகள் மட்டும் எழுதினாலும், என்னளவில், அதில் பாதிக்கப்பட்டவர்கள்மீதுள்ள அனுதாபமும், நிகழ்த்தியவர்கள் மேலுள்ள அருவருப்பும் சற்றும் குறைவல்ல என்பது வெளிப்படையாகக் கூறாமலே புரிந்துகொள்ளப்படும் என்று நினைத்தேன்.

//ஏனெனில் நாங்கள் இந்துக்கள் அனைவரும் மத அடிப்படைவாதிகள்தான் என்ற கருத்தை விமர்சனமின்றி பரவவிடுவது நம்மை நாமே பிஜேபியில் உறுப்பினராக்குவதற்கு சமம்.//
இதைத்தான் நானும் சொல்லநினைத்தது. மிகவும் சரியாகக் கூறியிருக்கிறீர்கள். கருத்துக்களுக்கு நன்றி.

arulselvan said...

நல்ல பதிவு. தொடர்ந்து வந்த விவாதங்களும் நன்று.
எனக்குச் சில சந்தேகங்கள்:
1. இந்த விஷயத்தில் இடது சாரிப் பார்வை என்றால் என்ன? சாதாரண அரசியல் பார்வையிலேயே (அ) இதை நடத்தியது பஜக (ஆ) இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் (இ) இது அரசு இயந்திரமும் முன்னின்று நடத்தியது என்பது பொதுவாக எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒன்று. மனிதாபிமானப் பார்வையில் பார்த்தால் இதெல்லாம் செய்யக்கூடாது செய்பவர்கள் கெட்டவர்கள் என்று கூடச் சேர்த்து சொல்லலாம். படத்தை எடுத்தவர் இடதுசாரி என்பதைத் தாண்டி படத்தில் வர்க்கப் புரட்சி, ஆன்மீகத்தின் பொருளாதார முரணியக்கம் என்றெல்லாம் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படத்தைப் பார்க வில்லை. ஆகவே இதை தெளிவாக்கவும். இல்லாவிட்டால் இந்த இடதுசாரி tag எதற்கு? அதையே ஒரு காரணமாய் வைத்து இத்தகைய முயற்சிகளை discredit செய்தலும் நடக்கலாம்.
2. "Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை"

போர் வன்முறை இதெல்லாம் ஆண்களாலேயே செய்யப்படுவது அதனால் இது ஆணாதிக்க முயற்சி என்பதில் எனக்கு பெரிய சந்தேகமிருக்கிறது. பெண்களுக்கு வன்முறை தெரியாதா? அல்லது அவர்கள் போர்புரிய மாட்டார்களா? ஆண்கள் எல்லாம் வில்லம்புகளைக் கீழே போட்டு அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் அப்புறம் உலகத்தில் ஒரே நாடாகி போர் நின்று விடுமா? Territory markingம், தனியுடைமையும் ஆண் உயிரினங்களுக்கே உரித்தானதா என்ன?
பெண்ணியவாதிகள் கூட இதை நம்புவார்களா என்று தெரியவில்லை.
Poets sing about the harmony and beauty of life and nature while biologists hide their giggles.

சன்னாசி said...

அருள்: உங்கள் முதல் கேள்விக்கு, பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தக்கூடிய அளவு சுருக்கமாக என்னால் பதிலளிக்க முடியுமென்று தோன்றவில்லை... இதைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால், பின்பு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், அந்த முத்திரையை வைத்து படத்தை discredit செய்யும் வாய்ப்பில்லை. நீங்கள் சொன்னதுபோல, இது கூறும் சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்தவை, பொதுஜனப் பார்வைக்குத் தெரிந்தவை - எதையும் இது திரிக்கவில்லை என்பதால், குறைகள் என்பவற்றை அங்கங்கே மிதக்கவிட்டிருக்கும் buoys போலக் கொள்ளலாமே தவிர, அவை மிதக்கும் கடல்கள், நிகழ்ந்த வன்முறைகள் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்று.

//போர் வன்முறை இதெல்லாம் ஆண்களாலேயே செய்யப்படுவது அதனால் இது ஆணாதிக்க முயற்சி என்பதில் எனக்கு பெரிய சந்தேகமிருக்கிறது. பெண்களுக்கு வன்முறை தெரியாதா? அல்லது அவர்கள் போர்புரிய மாட்டார்களா?//
யாரேனும் தானாகக் கேள்வி எழுப்பினால் சொல்லலாமென்று இருந்தேன். படத்தில், கலவரத்தில் முக்கியப் பங்கு வகித்த ஒரு இந்துத்துவ சிறு-தலைவரின் மகள்களைப் பேட்டி கண்டனர். அதில் இளைய மகள் - பதினெட்டோ பத்தொன்பதோ வயது - "ஒன்றும் நிகழவில்லை, சேதம் ஒன்றும் பெரிதாக இல்லை" என்ற ரீதியில், தந்தைக்கு ஆதரவாகப் பேசினாள். திரையிடலுக்குப்பிறகு off-the-record ஆக இயக்குனர் சொன்ன, "அதனாலேயே திரைப்படத்தில் நான் இணைக்கவில்லை" என்று, நடந்த வன்முறையில் அந்தப் பெண்ணின் பங்கு பற்றிச் சொன்ன விஷயத்தை நானும் இங்கு நேரடியாகப் பதிவது எவ்வளவுதூரம் சரி என்று தெரியவில்லை. அந்தக் கூற்றை வைத்துப் பார்த்தால், வன்முறை என்பது பெண்களிடம் இல்லவே இல்லை என்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை. போர், வன்முறை என்பவற்றை வெறும் physical arrogance என்று மட்டும் பார்க்க வாய்ப்பில்லை எனும்போது, இவற்றில் பால்பேதம் இருக்க எவ்வளவுதூரம் சாத்தியம் என்பதும் சந்தேகத்துக்குரிய விஷயமே.

Anonymous said...

மாண்டி,அருள்:
//"Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை"//
எனக்கு மாண்டியின் எண்ணம் பற்றி சொல்ல இயலவில்லை FS பார்க்காததால். ஆனால், நான் S-F-HW, பார்த்துள்ளேன். அதில் எவ்வாறு ஆணாதிக்க முறை போர்களுக்கு தோற்றுவாய்-ஆக இருக்கின்றது என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதில், சதி- பற்றியும், அதை செய்வதில் காட்டும் தீவிரம் குறித்தும், அதன் மூலம் என்ன என்பதான கேள்விக்கு பதிலும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், சில பெண்கள் போரிடவோ அல்லது வன்முறையை நாடவோ செய்தால், அதன் origin- அவர்கள் எவ்வாறு ஆணாதிக்க முறையை தனதாக்கி கொள்ள முயல்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயலும்.