Tuesday, March 08, 2005

சுருக்கப்பன்

சுருக்கப்பன்

என் பெயர் புளியடிப்பட்டி சுருக்கப்பன். என் வயது --. என் தொழில், புத்தகங்களுக்குப் பின்னட்டைச்சுருக்கம் எழுதுவது. ஆங்கிலத்தில் blurb என்பார்கள். இதே தொழிலைத்தான் கடந்த பதினேழு வருடங்களாகச் செய்துவருகிறேன். எனக்கு மூன்று மனைவிகள், ஏழு குழந்தைகள். அதில் மூன்றாவது குழந்தை, என் இரு மனைவிகளுக்குப் பிறந்தது. மிக மகிழ்ச்சியான குடும்பம் என்னுடையது. எனது முதல் மற்றும் இரண்டாம் மனைவிகளுக்கு என்னைத்தவிர முறையே மூன்று மட்டும் இரண்டு கணவர்கள் இருக்கிறார்கள். எனது தொழிலை எவ்வளவு நேசிக்கிறேனென்று சொல்லி விளங்கவைக்கமுடியாது. இத்தனை புத்தகங்களுக்குப் பின்னட்டைச்சுருக்கம் எழுதியிருக்கிறோமே, நமது வாழ்க்கையையும் ஒரு கதையாக எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவுதான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கதை. எழுத எழுதக் கழுத்துப்பின் நீங்கள் நின்றுகொண்டு பாம்புமாதிரி மூச்சுவிட்டுக்கொண்டு படித்துக்கொண்டிருப்பது எவ்வளவு எரிச்சலாக இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?

பதினாறு வயதில் பிரிண்டிங் பிரஸ்ஸொன்றில் தொடங்கியது என் வாழ்க்கை. பெரும்பாலும் கல்யாணப்பத்திரிக்கைகளும் அவ்வப்போது சில புத்தகங்களையும் அச்சடித்துக்கொண்டிருந்த ஒரு சின்ன அச்சகம். ஆயிலுக்குப்பதில் குவார்ட்டரை ஊற்றும் முதலாளி. டவுசருக்குள் அடங்காத தொடைகளை கஷ்டப்பட்டு இடுக்கிக்கொண்டுதான் அங்கே வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டாவது நாளே இரண்டு பழைய லுங்கிகள் கிடைத்தன. இப்படித்தான் தொடங்கியது எனது வாழ்க்கை. இதன்மேலான எனது மேல்நோக்கிய பயணத்தைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினால் லட்சக்கணக்கில் விற்கவைப்பேன், ஆனால் என்ன ஒரு பிரச்னை பாருங்கள், எந்தவொரு புத்தகத்தைப் படித்தாலும், அதை ஒரே மிதியாக மிதித்துச் சுருக்கி ஒரு மூலையில் போட்டு அதன் முகரக்கட்டையில் எகிறி எகிறி உதைத்து உதைத்து அதை ஒரு பத்திச் சுருக்கமாக்கிவிடுவேன். அதனால், பெரிதாக எதையும் எழுதவோ யோசிக்கவோ முடிவதில்லை. நாளாக நாளாக இந்தத் திறமை என்னுள் கிளைபரப்பி விரிந்து, போதாக்குறைக்கு முதலாளிச் செட்டியின் கழுத்தையும் நெறிக்க ஆரம்பித்தது. ஒருமுறை எங்கள் அச்சாபீசுக்கு வருகைதந்த ஒரு எழுத்தாளர், முதலாளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையிலிருந்த, அவர் எழுதிய புத்தகத்தை மேஜைமீது வைத்தார். எனக்கென்னமோ அன்று மகா எரிச்சல். முதலாளியின் பல்லையே பார்த்துக்கொண்டிருந்தேன். போதாக்குறைக்குப் பக்கத்து வீட்டில் மாடியை விரிவுபடுத்த ஏகப்பட்ட செங்கற்களைக் கொண்டுவந்து அடுக்கிவைத்திருந்தார்கள். உ-ய-ர-மாய். கவனத்தைத் திசைதிருப்ப, எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்தேன். அட்டையின் மஞ்சள் நிறத்தைக்கொண்டு என் மூன்று பெண்டாட்டிகளையும் குளிப்பாட்டிவிடலாம். அருவருப்புடன், வேறு பக்கத்தில் தலைப்பைப் பார்த்துக்கொள்ளலாமென்று உள்ளே பிரித்தேன். 'ஐநூறுவருடத் தமிழின் அறிவுச்சேகரம்: கி.பி.1100-1600' என்றிருந்தது தலைப்பு. கையில் தூக்கிப் பார்த்தேன். குறைந்தபட்சம் அரைக் கிலோவாவது இருக்கும். புரட்டத் தொடங்கினேன்.

"டே தம்பி, உப்பு கம்மியாப் போட்டு ஒரு போஞ்ச் வாங்கியா; முதலாளிக்கு ஒரு நன்னாரி" என்று எழுத்தாளர் பாக்கெட்டிலிருந்து பணத்தை உருவியதை நான் ஏதோ ஒரு கனவு என்று நினைத்திருக்கிறேன் போல.

"செகுட்டு மூதி; காதுல வுழுதா" என்று அடுத்து வழிந்த தேனும் பாலும் செட்டி - மன்னிக்க, ஷெட்டி வாயிலிருந்துதான் என்றும், அது கனவாக இருக்கச் சத்தியமாக வாய்ப்பில்லை என்று உறைத்ததும், நிமிர்ந்து பார்த்து இளித்தேன். "இ இ இ இ... செரி மொலாளி..." பணத்தை வாங்கிக்கொண்டு வழியெங்கும் கறுவிக்கொண்டு நடந்தேன். உன் நன்னாரியிலயும் போஞ்ச்சுலயும் எலிமருந்தைக் கலக்கறேண்டே. பின்பு அது சாதாரணமெனத் தோன்றியது. உர் உர்ரென்று உறிஞ்சிக்கொண்டிருக்க, படிக்கட்டு மூலையில் அமர்ந்துகொண்டு சிட்டிபாபு பீடி வலித்துக்கொண்டிருந்தான். லுங்கிக்கு வெளியில் எலும்புக்கால்கள் துருத்திக்கொண்டிருந்தன. கோர்ட்டிலிருந்து கறுப்புக்கோட்டுக்களும் மடித்துக்கட்டிய வேட்டிகளும் கோப்புகளைத் தலைக்குமேல் பிடித்து வெயிலில் மறைத்தவாறு வந்துகொண்டிருக்க, நான் அரைக்கிலோவைப் பிரித்தேன். சீட்டுக்கட்டுகளை விர்ர்ருவது போல ஒருமுறை புத்தகத்தைப் படித்துமுடித்துச் சுற்றிலும் தேடினேன். முருகன் பத்மாவதி திருமண அழைப்பிதழ் உறை ஒன்று கசங்கிக் கிடந்தது. காதில் சொருகியிருந்த பென்சிலை உருவிச் சரசரவென்று எழுதத்தொடங்கினேன். சில எழுத்துப்பிழைகளைமட்டும் அடித்துத் திருத்தியதாய் நினைவு. மற்றப்படி, நான்கு நிமிடங்களில் வேலை முடிந்துவிட்டது. அந்தச் சுருக்கத்தைச்சுற்றியும் திருமண அழைப்பிதழ் டிசைனைக் காப்பியடித்து ஒரு மண்டபத்தைப் போட்டேன். எழுதிய வாசகங்களுக்கு ஒரு பீடம் அமைத்து, மண்டபத்தின் நடுநாயகமாக அதை அமர்த்தினேன். ஒக்கா மக்கா உன் போஞ்ச் புரையேறப்போவுது பார். இதுக்கா இத்தனை பக்கத்தை எழுதினே நீ!!

புழுதியைப் பெருக்கிக்கொண்டிருந்த தனது பெல்பாட்டமை இழுத்துவிட்டுக்கொண்டு எழுத்தாளர் எழுந்தார். "புஸ்தகத்தை அதுக்குள்ள படிச்சிட்டியாடே! படம் வேற போட்டிருக்கெ போல, அட்டெல போட்ருவமா?" என்று படக்கென்று உருவினார். "மண்டபம் போட்டுருக்காண்ணே, உள்ளவேற ஏதோ எழுதியிருக்கான்..." என்று ஷெட்டியும் எழுத்தாளரும் சிரித்துக்கொண்டனர். வாசிக்க ஆரம்பித்த எழுத்தாளரின் முகம் மெதுவாக மாறியது. ஒருதரம் என்னை நிமிர்ந்து பார்த்தார். புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, முன்பே எழுதப்பட்ட காட்சி போல ஸ்டூலில் மறுபடி அமர்ந்தார். ஷெட்டி எட்டிப் பார்ப்பதும் என்னை முறைப்பதுமாய் சில நிமிடங்கள் கழிந்தன. ஒருமுறை படிக்க அவ்வளவு நேரமாயிருக்காது என்பதால், எழுத்தாளர் என் சுருக்கத்தை திரும்பத்திரும்பப் பலமுறை படிக்கிறார் என யூகித்துக்கொண்டேன். கிட்டத்தட்ட பதினைந்து இருபது நிமிடம் கழித்து எழுத்தாளர் நிமிர்ந்து என்னையும் ஷெட்டியையும் பார்த்தார்.

சுருக்கமாகச் சொன்னால், என் சுருக்கத்தில் இல்லாத எதுவும் அந்தப் புத்தகத்துக்குள் இல்லை. அல்லது, புத்தகத்தில் சொன்ன அனைத்தையும் சுருக்கத்தில் சொல்லியிருந்தேன். அன்றே எனக்கு வேலை போனது. சில வாரங்கள், ஏகப்பட்ட சினிமாக்கள், பீடிகள் கழித்து வேறொரு பிரஸ்ஸில் சேர்ந்தேன். இது சற்றே பெரிது. அவ்வப்போது சுருக்கங்கள் எழுதுவதுண்டு, மறுபடியும் வேலையை இழக்கவிரும்பாத காரணத்தால் யாருக்கும் காட்டுவதில்லை. அப்படியுமொருமுறை தவறுதலாக ஒரு சுருக்கம் பார்க்கப்பட்டுவிட்டது. இந்தமுறை பார்த்தது ஒரு பதிப்பாளர். பேர் அனுமந்துவோ ஏதோ, மறந்துவிட்டேன். அவர்தான் எனக்கு ப்ளர்ப் என்னும் சொல்லை முதலில் அறிமுகப்படுத்தினார். 'ஹொய்சளக் கோவிற்கலை' என்ற அந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய சுருக்கம் முதன்முறையாகப் பின்னட்டைச்சுருக்கமாகப் பிரசுரமானது. அதைப் படித்துப் பிறரும் தேடிவந்தனர். வரிசையாகத் தொடர்ந்து எழுதினேன். தொழில்முறையில் தொடர்ந்து வெற்றிகளே. உதாரணச் சுருக்கங்கள் என்று இங்கே கொடுத்து உங்களை இம்சைக்காளாக்க விரும்பவில்லை. பிறகு சில வருடங்கள் அதே ஊரில் இருந்தேன். பைக்கில் போகும்போதும் பின்பு டேவூவில் பின்சீட்டில் உட்கார்ந்து போகும்போதும் ஷெட்டி காறிக் காறித் துப்புவான். ஒருநாள் அவனது எச்சில், மோனத்துடன் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு ஏதோ ஒரு சிறு உருண்டையை உருட்டிக்கொண்டிருந்த ஒரு ஈயை முற்றுமுழுதாக மூழ்கடிப்பதைப் பார்த்தேன். பிழைத்ததா செத்ததா என்று தெரியுமுன்னர் ரங்கன் காரை வேகமாகக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். துப்புடே துப்பு, உன் தொண்டைத்தண்ணிதான் வத்தும், எனக்கென்ன.

வகை வகையாகப் புத்தகங்கள். அதன்பிறகு பலமுறை நான் திருமணங்கள் செய்துகொண்டபோதும்கூட, பலமுறை என் மனைவிகள் என்ன பொழப்பு இது என்று சலித்துக்கொண்டபின்னரும்கூட விடுவதாயில்லை நான். ஏகப்பட்ட பணம் வந்து கொட்டியது எவரையும் பெரிதாகக் குறைகூற விட்டுவிடவில்லை. நான் மிகவும் ரசித்துச் செய்த விஷயம், முதல் படைப்பைச் சுருக்குவதுதான். கட்டம்போட்ட சட்டைகள், வேஷ்டிகள், ஒல்லிக் கழுத்துக்களில் புடைத்த தொண்டைக்குழிகள், சதைமலைகள், வெகு சிலவே வெகு சில பெண்கள், ஒரு அலி, ஏன், ஒரு கோழி கூட ஒரு புத்தகம் எழுதியிருந்தது. முதல் படைப்பை எழுதிவிட்டிருந்த கோழி, பதிப்பாளருடன் வந்திருந்தது. சின்னப் புத்தகம்தான். அலெக்ஸாந்தர் டாவ்ஜெங்கோவின் 'பூமி' திரைக்கதையை மொழிபெயர்த்திருந்தது கோழி. மத்திமப் பால் என்பதற்காகவும், வார்த்தை கணீரென்றிருப்பதனாலும், அது சேவலே ஆனாலும்கூட கோழி என்றே குறிப்பிடுகிறேன். புத்தகத்தை நான் புரட்டிக்கொண்டிருக்க, பதிப்பாளர் வெளியே போய் தம்மடித்துக்கொண்டிருக்க, எதிரே நாற்காலியில் நெளிந்தவாறு அமர்ந்திருந்தது கோழி. பக்பக்பக்பக்பக்பக்... பக் பக்... பக்... நான் புத்தகத்தையும் அதையும் மறுபடி மறுபடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பக் பக் பக். பக். கழுத்தை ஒருச்சாய்த்து தன் குமிழ்க்கண்களால் என்னைப் பார்த்தபோது சிவப்புக் கொண்டை ஒருபுறமாய்ச் சாய்ந்துகொண்டது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, புத்தகத்தையும் என்னையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சிறகுகளை அ க...................ல விரித்து புட்டத்தை நாற்காலியில் அழுத்தி எழும்பி தொண்டைவரை வந்துவிட்ட கொக்கரக்கோவை என்ன காரணத்தாலோ அமுக்கி, பொளக் என்று சின்னதாக சற்று எச்சத்தை மட்டும் போட்டுவிட்டுச் சலிப்புடன் மறுபடி நாற்காலியில் முதுகைக் குறுக்கி அமர்ந்துகொண்டு என் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தது. நான் மெதுவாக நடந்துபோய் MLTRன் மகா மட்டமான Breaking my heart ஐ அழுத்திவிட்டு வந்தேன். கோழியின் கொண்டை இப்போது இடப்புறம் சாய்ந்திருந்தது. முதலில் சாய்ந்திருந்தது வலப்புறத்தில் என்று சொன்னேனா உங்களுக்கு? பேனாவையும் ஒரு தாளையும் எடுத்தேன். விர்ர்ர்... கோழி தனது காலைச் சிரமப்பட்டுத் தூக்கி, நகத்தைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. There is no ex.....cuse my friend என்ற வரி ஒலித்து முடிப்பதற்குள் சுருக்கத்தை எழுதியெறிந்தேன். "மரம் மேலிருந்து வைக்கோல்போருக்குள் பாய்ந்துவிடு..." என்பது அதில் ஒரு வாக்கியம். முழுதாகச் சொல்ல உத்தேசமில்லை. கோழி இப்போது நாற்காலியிலிருந்து குதித்துக் கீழிறங்கி கொக் கொக் என்றவாறு என்னருகில் வந்து, சுருக்கம் எழுதப்பட்டிருந்த தாளை வாங்கி, மாடியின் திறந்த மறுபுறத்துக்குப் போனது. இங்கிருந்து அதைப் பார்க்கமுடிந்தது என்னால். முகத்துக்கு வெகு அருகில் - இரண்டு அங்குலத் தூரம்தான் இருக்கும் - வைத்து ஏதோ சீனத் துறவிபோல நுணுக்கி நுணுக்கிப் படித்துக்கொண்டிருந்தது கோழி. மத்தியான வெயிலின் எரிச்சல் சுவரைத்தாண்டிவந்து எரிச்சலேற்றிக்கொண்டிருக்க, சிறிதுநேரம் கண்ணயர்ந்துவிட்டேன். சற்றுநேரம் கழித்து வெகு வேகமாகச் செலுத்தப்பட்ட என் கால் யார் முகத்திலோ இறங்கியது என்று நினைக்கிறேன். தூங்கும்போது எழுப்பிவிட்டிருக்கிறார்கள் போல. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். கோழியின் பதிப்பாளன் முகத்தைப் பிடித்துக்கொண்டு அறையின் மூலையில் சில பீங்கான் தட்டுக்களையும் முகமூடிகளையும் சில புத்தகங்களையும் தள்ளி இறைத்துக்கொண்டு கிடந்தான். சில்லுமூக்கு நொறுங்கிப்போனது போல. கொடகொடவென்று ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. "என்னய்யா இப்படிக் கழுதை மாதிரி உதைக்கறே. நேரமே சரியில்லை; கோழி கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்கிச்சு" என்றான், பாதிப் புலம்பல், மீதி எரிச்சல் வேதனையுடன். வேட்டிநுனியைச் சுருட்டி மூக்குக்குள் திணித்தான்.

தூக்கம் கலைந்துபோக, அவிழ்ந்த லுங்கியை இறுக்கிக்கொண்டு ஓடினேன். எட்டிப்பார்த்தேன். சுருக்கம் எழுதப்பட்ட தாள் கிடக்க, அதன்மேல் சிதறியிருந்தது கோழி. சற்றுத்தூரத்தில் கோழியைக் குறிவைத்து நின்றுகொண்டும் மெலிதாக நகர்ந்துகொண்டுமிருந்தன பச்சைத் தென்னைமரப் படம்போட்ட சில டால்டா டின்கள். ஒரு கவிதை போல, புத்தகமும் கோழிக்கருகிலேயே விழுந்து நசுங்கிக் கிடந்தது. ஒரு தம் பற்றவைத்துக்கொண்டேன். பதிப்பாளன் மூக்கைக் குடைந்தவாறே வந்தான். வேட்டியெல்லாம் ரத்தம். காட்டேரி மாதிரி நடக்காதேய்யா என் வீட்டுக்குள்ள என்றேன் சாவதானமாக. கீழே மறுபடி எட்டிப் பார்த்தான். செத்தா மட்டும் சுருக்கத்தை மாத்திரப் போறேனா நான் என்றேன். ஒரு சுருக்கத்தைப் படிக்கத் துப்பில்லை, இவனுகளெல்லாம் வந்துடறானுக என்று கீழே சிதறிக்கிடந்த கோழிமீது காறித் துப்பினேன். பதிப்பாளனிடம் திரும்பினேன். "என்ன நினைச்சுக்கிட்டு வர்றானுவ இவனுவ?" என்றேன். சுருக்கிச் சுருக்கி, என் பேச்சுமொழியே ஏகத்துக்கு உருமாறியிருந்தது. "நம்ம வீட்டுல வந்து செத்து வுழுந்தா நாம சுருக்கமாட்டோமாமா? மக்கா, எப்பவாச்சும் விடலாமான்னு யோசிக்கப்ப இதுமாரி எதாவது பண்ணி நமக்கு மறுபடி புத்துயிர் கொடுத்துர்ரானுவ" என்று புன்னகைத்தேன். "நரபலிங்கறதா கோழிப் பலிங்கறதா இதை" என்று இளித்தான் பதிப்பாளன். அவனது மஞ்சப்பை கிடுகிடுவென்று கிழவன் கைத்தடி மாதிரி ஆடிக்கொண்டிருந்தது.

இதுமாதிரி ஏகப்பட்ட சாவுகளுக்குக் காரணமாயிருந்திருக்கிறேன் நான். இவ்வளவு ஏன். இரண்டாங் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது அவளையே ஒரு தாளில் சுருக்கிவிட்டேன். இரண்டாம் நாள் அந்தத் தாளை அவளிடம் காட்டினேன். பிரமை பிடித்தவள் போல ஒரு மாதம் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கிடந்தாள். முதல் பொண்டாட்டியிடமிருந்து வசவுவாங்கித் தீரவில்லை எனக்கு அடுத்த ஆறு மாதங்களாய். ஒருகட்டத்தில் மூன்று பேரின் தொல்லையும் தாங்கமுடியாமல் போனதால், மூன்று பேரையும் ஒரே தாளில் சுருக்கினேன். அதற்குமுன்பு புத்தகங்களைக்கூட அப்படிச் செய்யமுடிந்ததில்லை. ஒரே சுருக்கு. வேலை முடிந்ததும் அந்தத் தாளைக் கிழித்துப்போட்டேன். மூன்று பேரும் சேர்ந்து நொச்சி எடுத்தார்கள் சிலநாள். அவர்களது புருஷர்களையும் சுருக்கியதுண்டு சிலசமயம் பொறாமையில்... என்னதான் இருந்தாலும் நானும் மனுஷன்தானே!

என்னைப்பற்றி நானே எழுதிக்கொள்ளலாமென்று நினைத்தபோதே நீங்கள் யூகித்திருக்கவேண்டும். என் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. நடுவில் சிலகாலம் மந்தமாக இருந்தபோது, போட்டி எழுத்தாளர்களின் கதையைச் சுருக்க, ஆடு மாடுகளின் குரல்களைச் சுருக்க, திரைப்படங்களைச் சுருக்கியெழுதி அவற்றைச் சாகடிப்பதென்று கிட்டத்தட்ட கூலிக் கொலைகாரன் மாதிரிச் சுருக்கியெறிந்துகொண்டிருந்தேன். ஒருசமயம் சாயந்தரம் நாலு மணிக்குத் தொடங்கி, இரண்டு நாள் கழித்து அதே நேரம்வரை சுருக்கித் தீர்த்ததில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் காலி. அத்தனை சுருக்கங்களும் தாள்களாகவும் துண்டுப்பிரசுரங்களாகவும் இணையப்பக்கங்களாகவும் திசையெங்கும் பறந்தன என் அனைத்துப்பிற சுருக்கங்களைப்போலவும். சட்டரீதியாக என்மேல் ஏகப்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. நான் செய்வது தவறென யாராலும் நிரூபிக்கமுடியவில்லை. என் சுருக்கங்களைப் படித்தவர்கள் அதன்பின் அந்தப் புத்தகங்களைப் படிப்பதில்லை, திரைப்படங்களைப் பார்ப்பதில்லை, பாடல்களைக் கேட்பதில்லை, ஓவியங்களை ரசிப்பதில்லை, ஜீவராசிகளைக் கொஞ்சுவதில்லை என்றெல்லாம் கூறி, சமூகவிரோதி என்று என்னைக் கட்டம்கட்ட முயன்றனர். என்வீட்டுக் கூரைமீது நின்றுகொண்டு கொக்கரித்தேன். கொக்கரிப்பு திசையெங்கும் பரவி அதிர்ந்தது. எனக்குப் பாதுகாவலர்கள் அதிகரித்தார்கள். கணிப்பொறிகளையும் சுருக்கத்தொடங்கியது நானே எதிர்பாராதது. தொடங்கியது என் கணினியில்தான். இரண்டே வரிகள்தான் எழுதினேன். தொடர்ந்து, கணிப்பொறித் திரை நெளிந்து அவ்விரு வாக்கியங்களுக்குள் செல்வதாகவும், உள்ளிருந்து காப்பாற்று காப்பாற்று என்று கதறுவதாகவும் கற்பனை செய்துகொண்டேனெனினும், அதுவும் நன்றாகவே இருந்தது. சுருக்கப்பித்தம் தலைக்கேறிக்கொண்டிருந்தாலும், என்ன நடக்கிறதென்பதைத் தெளிவாக உணரும் கெதியிலேதான் இருந்தேன். ஒருகாலத்தில் எங்கள் நாட்டின் தலையாய இரண்டு அரசியல் கட்சிப் பிரச்சாரங்களையும்.... சுருக்கினேன். அதாவது, பிரச்சாரத்துக்கு யாரும் போகவில்லை. கடைசி ஒரு வருடத் தேர்தல் பிரச்சாரத்தையும் ஒரே பக்கத்தில் (ஒரு பக்கத்தைச் சற்று முன்புவரை தாண்டியதேயில்லை) சுருக்கினேன். இரண்டு கட்சிகளுக்கும் நானே செய்ய, தோற்றுப்போன கட்சியிலிருந்து வந்து என்னைத் துவைத்துவிட்டார்கள். அதன்பிறகு அந்தக் கட்சியையே சுருக்கினேன். அந்தப் பக்கம், மற்றொரு பிரதான எதிர்க்கட்சி அலுவலகத்தின் பாதாள அறைக்குள் ரகசியமாக உறங்குகிறது. சுருக்கிய கட்சி, எது அதைத் தாக்கியதென்று உணரக்கூடச் சந்தர்ப்பமின்றித் தேய்ந்துபோனது.

என் வீழ்ச்சி எப்படித் தொடங்கியிருக்குமென்று நினைக்கிறீர்கள்? சிலவருடங்களுக்கு முன்புதான் அந்த மாற்றங்களை உணரத்தொடங்கினேன். கடைத்தெருக்களில் இப்போது எனக்குப் பரிச்சயமான மொழியைப் பெரும்பாலானோர் பேசுவதில்லை. திரையரங்கங்களிலும் கூட. என் குழந்தைகள் என் மனைவிகள் அனைவரின் மொழியும் மாறத்தொடங்கிவிட்டிருந்தது. ஒரு சாவதானத்துக்கு பழம் உடைகளைப் போட்டுக்கொண்டு பேருந்தில் ஏறி நாற்பத்தைந்து கிலோமீட்டர் பயணிக்கலாமெனப்போனால் நடத்துனரும் ஓட்டுனரும் பயணிகளும் இன்னபிறரும் ஒரு கோணலாகப் பேசினர், அவர்கள் நான் பேசுவதைக் கேட்டுவிட்டு "என்ன சார் க்ராஸாப் பேசறே" என்ற பொருட்படும்படி அவர்களது கோணல்வழக்கில் கேட்டனர். அதை அபவாதமெனக் கொள்ளவில்லை நான். சுருக்கத்தில் ஆழ்ந்துபோய் உலகத்தைத் தவறவிட்டுவிட்ட மடையனாக நானிருப்பின், சுருக்கப்பட நேற்றுவரை வந்துகொண்டிருந்த அனைத்துப் படைப்புக்களிலுமிருந்த மொழியை எப்படித் தவறவிட்டேன். சமீபகாலமாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கும் இவை என்னை, வாழ்க்கையின் முதன்முறையாக அச்சமடையச்செய்தன.

என் மனம் கிட்டத்தட்ட முற்றுமுழுதாகப் பிறழ்வதன் விளிம்புக்குப்போய்ப் பின் தப்பித்தது சிலநாள் முன்புதான். சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தேன். சப்தம் ஏதோ வினோதமாக வருவதைக்கேட்டு அதிர்ந்து, என்னடா இது என்று கூவினேன். சத்தியமாகச் சொல்கிறேன், என் தொடையிடுக்கிலிருந்து வந்த பதில் நான் பேசும் மொழியில் இல்லை. அதை வெகு லேசாக உணர்ந்தேன்... சமீபகாலமாக நான் கேட்டுவரும் எனக்குப் பரிச்சயமற்ற பொதுமொழியின் மற்றொரு சாய்ப்பான வடிவம். அவசர அவசரமாகக் கால்சராயை இழுத்துவிட்டுக்கொண்டு தெருவில் வேகமாக நடந்தேன்.

இதைத்தான் விதி என்பார்கள் போல. ஷெட்டி கடைக்குமுன்னால் நின்றேன். காலம் ஷெட்டியின் முதுகில் ஏறி நின்றுகொண்டு இடப்பக்கமும் வலப்பக்கமும் நன்றாக மிதித்திருந்தது. கூனை நிமிர்த்திக் கண்ணாடியை நிமிர்த்திப் புன்னகைத்தவாறு நிமிர்ந்த ஷெட்டியின் முகத்திலிருந்த முதிய உற்சாகம் என்னைப் பார்த்ததும் சர்ரென்று பாதாளத்துக்குப் போனது. ஷெட்டி யோ என்று அவசர அவசரமாக என் கால்சராயைக் கழற்றினேன். பாரு ஷெட்டி. வேறேதோ பேசுது இது என்றேன். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன். பிறகுதான் மெதுவாகத் தெரியவந்தது. என் ஒருவனை இந்த உலகம் எப்படிப் பழிவாங்குகிறதென்று. என் சுருக்கங்களைத் தாங்கமுடியாமல் அனைவரும் புது மொழி கற்றுக்கொண்டிருக்கினர் என்று நாட்போக்கில் அறிந்தேன். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்தில், வயோதிகர்களுக்குப் பேரன்பேத்திகள், ஏன், எவ்வளவு திட்டமிட்டுச் செய்திருக்கின்றனர்! நான் திரைப்படம் பார்க்கப்போகும்போதுகூட என்னைச்சுற்றி ஏதோ ஒரு மாயக் குமிழ்மாதிரித் தடுப்பு ஏற்படுத்திவிட்டுப் பிறருக்கெல்லாம் புது மொழியில் படம் ஓட்டியிருக்கின்றனர். எப்போது போனாலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் குறிப்பிட்ட இருக்கைகளிலேயே திரும்பத்திரும்ப உட்காருகிறேனே என்று அப்போது யோசித்ததன் நிஜம் இப்போதுதான் உறைக்கிறது. இதேபோலத்தான் அனைத்து இடங்களிலும். இப்போதும் நான் சுருக்கலாமென்பதே நிஜம். அதை என்னிடமிருந்து யாரும் பிரித்துவிடமுடியாது. ஆனால், இனிமேல் நான் சுருக்குவதனைத்தும் எனக்கே. இதனைத்தையும் அரசாங்கம் செய்தது என்றார்கள் என் நெருங்கிய சில நண்பர்கள். இருக்கமுடியாது என்றேன். சிரித்தேன். எவ்வளவு அபத்தம் என்றேன் அன்றைக்கு எபனேசருடன் பேசிக்கொண்டிருந்தபோது. "எபனேசர்" என்று அவனை இடித்தேன். "என் ஆயுளில் சிலகாலம் இன்னும் மிச்சமிருக்கிறது... செய்யாத விஷயங்கள் சில இருக்கின்றன. செய்யவேண்டுமென்று பலநாளாக யோசித்து யோசித்துத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்த விஷயமொன்று... இப்போதுதான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒருவகையில் சில விஷயங்களை மிகத் துல்லியமாகக் கணக்குத்தீர்த்த மாதிரியும் இருக்கும்" என்றேன்.

"என்ன அது" என்றான் எபனேசர், பெரிதாகச் சிரத்தையேதுமின்றி.

"சுருக்குவதற்கு ஒரு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கவேண்டும்; விரிப்பதற்கு அது தேவையா என்ன?" என்று புன்னகைத்தேன்.

10 comments:

Badri Seshadri said...

Vow! நவீனக் கதை சொல்லல் உங்களுக்கு நன்றாகவே வருகிறது. துளியும் போரடிக்கவே இல்லை. நல்ல எழுத்து!

அதே சமயம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த மாதிரியும் இல்லாமல், சுயமாகவே தமிழிலேயே எழுதியது போலும் உள்ளது.

-/பெயரிலி. said...

நடை மிகவும் பிடித்திருக்கின்றது

Anonymous said...

It is very good.Amazing.first I thought it is some translated story,but after reading the ful context i found it is originally written.Though the writing reminds "Magical realism",still as badri said your writing style is very good.tons of appreciation.

Jayaprakash Sampath said...

அடங்..... என்னமா எழுதறீங்க..

பொதுவா உங்களுடைய கதைகளை நான் படிப்பதில்லை. ஆனால் 'மூன்றாவது குழந்தை என் இரு மனைவிகளுக்குப் பிறந்தது' என்று எழுதியிருந்தது கண்ணில் பட்டு சட்டென்று வாசித்து முடித்த போது ஏதோ ஒரு மாயச்சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போலத் தோன்றியது. சின்னச் சின்ன வாக்கியங்களில் எத்தனை இம்பாக்ட்? படிக்க படிக்க சலிக்காத நடை. அடிக்கடி எழுதுங்க

Thangamani said...

உங்கள் நடை நன்றாக இருக்கிறது

சன்னாசி said...

மறுமொழிகளனைத்துக்கும் நன்றி...

Vijayakumar said...

மாண்டீ அண்ணே, சூப்பரா இருக்குதுண்ணே. நீளம் காரணமாக தண்டி செல்ல முற்பட்டாலும் பின்னூட்டங்களின் பாராட்டி என்னை முழுவது படிக்க வைக்க, வைத்த கண் மாறாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்தது. நன்றி உங்கள் படைப்பிற்கு

ஈழநாதன்(Eelanathan) said...

மாண்ட்ரீசர் அருமையான கதை வித்தியாசமான நடை தொடர்ந்தும் எழுதுங்கள்(பத்ரி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு என்று ஏதோ சொன்னாரே?)

சன்னாசி said...

மறுபடி நன்றி.. விஜய், ஈழநாதன்...

ஈழநாதன்:
//(பத்ரி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு என்று ஏதோ சொன்னாரே?)//
:-O !! பத்ரி, மொழிபெயர்ப்பு (அ) 'முழிபெயர்ப்பு'(!!) போன்றதொரு நடையில் இல்லாமல், சாதாரணமாக தமிழ்க்கதை போலவே உள்ளது என்ற அர்த்தத்தில், ஒரு compliment ரீதியில் சொன்னாரென்று அர்த்தப்படுத்திக்கொண்டேன்...

தொடர்ந்து வேலைச்சுருக்கு கழுத்தை இறுக்குவதால், இனிமேல் மறுமொழி இடுபவர்களுக்கும் இப்போதே ஒரு நமஸ்காரா...

ஒரு பொடிச்சி said...

பழகிய ஒரு விடயத்தைக்கூட நூதனமாய் ஏதோ புதியதொன்றுபோல சொல்வார்கள் பேர்போன(!) கதைசொல்லிகள். சுருக்கப்பன் இன் அங்கதம் + சுவாரசியமான தொடர்ச்சி நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தது. உங்களது பிற கதைகள் படிக்கவில்லை, அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்ல முடியவில்லை. இந்தக் கதையில் வந்த மனைவிகள், எழுத்தாளர்கள், கோழி எல்லாமே 'வித்தியாசமாய்' சொல்லப்பட்டிருக்கிற ஆனால் அன்றாடம் சந்திக்கிற பிறவிகள்! எனக்குள், அவை ஒவ்வொன்றுக்கும் பதிலீடாக ஒரு முகம் வந்தண்டே இருந்தது.

"ஒக்கா மக்கா உன் போஞ்ச் புரையேறப்போவுது பார். இதுக்கா இத்தனை பக்கத்தை எழுதினே நீ!!"
"இதுமாதிரி ஏகப்பட்ட சாவுகளுக்குக் காரணமாயிருந்திருக்கிறேன் நான். இவ்வளவு ஏன். இரண்டாங் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது அவளையே ஒரு தாளில் சுருக்கிவிட்டேன். இரண்டாம் நாள் அந்தத் தாளை அவளிடம் காட்டினேன். பிரமை பிடித்தவள் போல ஒரு மாதம் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கிடந்தாள். முதல் பொண்டாட்டியிடமிருந்து வசவுவாங்கித் தீரவில்லை எனக்கு அடுத்த ஆறு மாதங்களாய். ஒருகட்டத்தில் மூன்று பேரின் தொல்லையும் தாங்கமுடியாமல் போனதால், மூன்று பேரையும் ஒரே தாளில் சுருக்கினேன். அதற்குமுன்பு புத்தகங்களைக்கூட அப்படிச் செய்யமுடிந்ததில்லை. ஒரே சுருக்கு. வேலை முடிந்ததும் அந்தத் தாளைக் கிழித்துப்போட்டேன். மூன்று பேரும் சேர்ந்து நொச்சி எடுத்தார்கள் சிலநாள். அவர்களது புருஷர்களையும் சுருக்கியதுண்டு சிலசமயம் பொறாமையில்... என்னதான் இருந்தாலும் நானும் மனுஷன்தானே!"
போன்ற
நிறைய இடங்களில் நன்றாய் சிரிக்கமுடிந்தது. அதனால், மனைவிகளைச் சுருக்கியதைக்கூட சகிக்க முடிந்தது. இந்த கதைசொல்லல் நல்ல வாசிப்பனுபவம். மீதிக் கதைகளை ஆறுதலாய்ப் படிக்கணும். நன்றி.