Sunday, March 13, 2005

விரற்கடை

விரற்கடை

"இதோ வருகிறான் சொப்பனக்காரன்"
-ஆதியாகமம் 37:19

நாக்கில் படும் மாமிசம் நாக்கில் தங்கித் தவழ்ந்து கடிபட்டு உள்ளேசென்று மறையுமுன்பு, வெகு நேர்த்தியாக வெட்டப்பட்ட ஒன்றரை அங்குலத் துண்டுகளாக அப்பழுக்கற்ற பீங்கான் தட்டுக்களில் வைக்கப்பட்டிருக்கும். நாகரிகம் முன்னேறியிராத அக்காலங்களில் தட்டச்சு செய்யப்பட்ட தாள்கள் அதே நேர்த்தியுடன் பேனாக்கள் பென்சில்கள் அழிப்பான்கள் சிவப்பு நீலக் கரும் மைக்குடுவைகளுடன் அவற்றினருகில் அமர்ந்திருக்கும் மோனத்தில். வட்ட மேஜையைச்சுற்றி நின்றிருக்கும் தலைகளனத்தும் குவிந்து உருவாகும் கூம்பின் மத்தியின் அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரனின் நடுங்காக் கையிலிருக்கும் பிடிப்பான், சதையிழைகள் அலுங்காமல் மாமிசத்துண்டைப் பிடித்தெடுக்கும். மெதுவாகத் திறக்கும் யுதிஷ்டிரனின் வாய் அண்ணாரும்போது கூம்பின் உச்சிவழி வரும் வெளிச்சங்களுடன் சேர்ந்து மாமிசத்துண்டு உள்ளே போகும். சுழற்றிப்பார்க்கும் நாக்கின் வழுக்கும் பரப்பில் மாமிசத்துண்டு அதன்பிறகு தன் இழைகள் குறுக்காயிருக்குமாறு பற்களிடையில் அமர்ந்து கடிபடும். வெள்ளிக் காப்புவளையம் அசையும் யுதிஷ்டிரக் கைகள் தாள்களில் குறிப்பெழுதி மதிப்பிடும்.

அன்று அவனை அழைத்துச்செல்லக் காருடன் வந்திருந்தார்கள். யுதிஷ்டிரனது சட்டையின் ஒளிவீசும் நிறங்களின் வெளிச்சப்பிரதிபலிப்பு கண்களைத் தாக்கிக் கூசாமலிருக்கத் தங்கள் குழிந்த உள்ளங்கைகளைப் புருவங்களுக்கு மேலாக வைத்துக்கொண்டு அவனைப்பார்த்துச் சங்கடத்துடன் சிரித்தனர். தனிப்பட்ட வேலை அது. ஒழுங்குடன் எதையும் கற்றிராததால், அவர்களுடன் செல்வது சட்டபூர்வமானதா என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் தந்தையின் கார் சவாரி தப்பிப்போவதை விரும்பாத யுதிஷ்டிரனின் மகன் தொந்தரவு செய்தான். இப்படியாகத்தான் முன்பணம் பெற்றுக்கொண்டு ஒத்துக்கொண்டான் யுதிஷ்டிரன். ஒன்றரை அங்குலக் கறித்துண்டங்களின் சாறுகளின் ஆயிரக்கணக்கான உச்சங்களைப்பார்த்திருந்த அவனது ரோஜாநிற நாக்கு மூடிய உதடுகளுக்குப்பின் மெதுவாய் அசைந்தது, குத்தும் பெண்ணின் மெல்லிய முஷ்டியில் சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்குமிடையில்துருத்தும் கட்டைவிரல்போல்.

கார்சவாரி பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு, குளிர்ந்த நாளொன்றுக்குப் பிரமாதமான உணவாயமையக்கூடிய ரோஜாநிறத் தசைகளாலான தெருவில் வேகமெடுத்த காரின் கண்ணாடி ஜன்னல்களுக்குவெளியில் நிறங்கள் சிதறிச் சீறின. திடீரென்று சோகவுணர்வு யுதிஷ்டிரனைப் பற்றிக்கொள்ள, உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் குனிந்து சக்கரங்களைப் பார்த்தான். சாதாரணமாகவேயிருந்து, சாலைக்கு நான்கு விரற்கடை மேலாக ஓடியபடி. திருப்தியடைந்தவனாக, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். நீண்ட இமைமயிர்களுக்குக்கீழ் விழிக்கோளம் துடிப்புற்றது, தாங்கமுடியான பிரகாசங்கொண்ட நட்பான திரையில், களைத்த கண்கள்முன் அவாழ்க்கையின் சுழன்ற பாதைகள் விரிந்தன. சதைகளுடனான நெடும்பயணம் அது, தன் வேட்கைகொண்ட கணவனுடன் கசங்கிய படுக்கைவிரிப்பு வெளிச்சங்குறைந்த அறைகழித்த நாட்களைவிட அதிகமானவை அவற்றின் மென்மை, சாற்றுத்தன்மை, மணம், நிறங்களை அளந்துகழித்த காலங்கள். ஆயிர வாசனைகள், சுவைகளை, குரூரமான புன்னகைநிறங்களையென்று அனைத்தையும் மறந்திருந்தான். எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. தூக்கமற்ற இரவுகளில் பல்லோரு தருணங்களில் அவனை மிரட்டியிருக்கின்றன அவை. அவர்களது தனிப்பிரதேசத்துக்குள் சந்திரவொளி நுழைவதை விரும்பியிருக்கவில்லை அவனது கணவன். ஆயிரமாமிசத்துண்டங்களை வருடியிருந்த அவனது நாக்கு உணர்வற்றிருந்ததிப்போது... அதைக்குறித்துக் கூறவிரும்பவில்லை இப்போது. அவனது நாக்கின் தீர்ப்புக்கள் பழங்காலத்தைப்போலிருப்பதில்லையென்று புகார்கூறப்பட்டன. கருணைமேலீட்டால் அவனது சகாக்கள் அவனது திறமைக்கசிவை எங்கும் குறிப்பிடவில்லை. அதையும் உணர்ந்துகொண்ட அவனது நாக்கு புனிதச் சீற்றத்துடன் அக்கூற்றுக்களை எதிர்த்தது.

மூன்று அல்லது நான்குவயதுக் குழந்தையாக அவனிருந்தபோது தொடங்கியது அதனைத்தும். அவனது கிராமத்தின் பின்புறத்தில் ஒரு ஆறு எரிந்துபோயிருந்தது. அப்போது நீரற்றுக் களைத்திருந்த பழுப்புப் பொடிமணலில் விளையாடிக்கொண்டிருந்தபோது சப்பாத்திக்கள்ளிகள் அடர்ந்திருந்த புதர்களுக்குள் ஒரு பெரும் பிணத்தைக் கண்டுபிடித்தான். பார்க்கும்தூரம்வரை யாருமற்றிருக்க அதை வெறித்துக்கொண்டிருந்தான் வெகுநேரம். கொடூரமான அதிர்ச்சியொன்றில் விரிந்துறைந்த கண்களுடன் அனைத்துத் துவாரங்களிலும் வழிந்து உறைந்திருந்த ரத்தத்துடன் இறந்துபோயிருந்தது மிருகம். கரையோர மரங்களிடையில் சிதிலமடையும் மௌனமாகத் தன் கட்டமைப்புக்களுடன் பிடிவாதமான கண்களுடன் கோவில் சம்பவத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரன் பிணத்தருகில் முழந்தாளிட்டு மெதுவாக அதை ஆராய்ந்தான். நிலைத்திருந்த இமைகளை மூடமுயல, காய்ந்த நீரோடைமணற்கோடுகளில் சரிந்துவந்த அனல் பிணத்தைத்தழுவி ரோமங்களை நிமிர்த்திச்சென்றது. அடர்த்தியான குத்துச்செடிக்குள் கல்கத்தி கிடந்தது; தன் சிறு கைகளைக்கொண்டு பிணத்தை அறுக்கத்தொடங்கினான். தன் சிறு கைகளால் பிணத்தின் தோலையுரித்துக்கொண்டு வெகுநேரம் மணலில் அங்கே செலவழித்தான், காய்ந்திருந்த ரத்தம் வழியமறுத்தது. பொழுதுசாயும் நேரம் அவனின்மை கிராமத்துள் நுழைந்தது. தேடல் தொடங்கியது, ஆழ்ந்து இருண்ட கிணறுகளுக்குள் லாந்தர்கள் சென்றன, ஒருசிலர் கோவிலில் தேடச்சென்றனர், ஆட்டுப்பட்டிகளுக்குள், மாட்டுவண்டிகளுக்குக்கீழ், மடத்தின் சிதிலமடைந்த மாடாக்குழிகளுக்குள், எட்டுத்திசைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் தூண்களின்பின்னென்று தேடினர். பின்பு, சரிந்து வழியும் காற்றின் சப்தத்தில் அதிர்ந்துகொண்டிருந்த மௌனத்தில் நீரோடையின் மணற்பரப்பில் நடுங்கும் லாந்தர் சுடருடன் அவனைக் கண்டனர், மிருகத்தின் முன்னங்காலொன்றை ஏற்கனவே அவன் தீர்த்திருக்க, மாமிசத்துண்டுகள் வழக்கம்போல் அவனது வாய்க்கடைவாயோரம் ஒட்டிக்கொண்டிருந்தன.

பின்பு, நீரோடைக்குத் தேடிச்சென்றவர்களிலொருவனாயிருந்த கிராமத்து முதியவனொருவன் சிறுவன்முன்பு மண்டியிட்டு அவனது பாதங்களைப் பற்றினான். ஒரு சிறு அசைவுமற்று முகத்தில் சிறுவன் நின்றிருந்தான் சலனமின்றி. குரல் நடுங்கியது. "ஓ..... தெரிகிறதெனக்கு". அசுரகர்ஜனைபோல் கடந்துபோனதொரு இடி. கிழவன், பின்பு பிணத்தைக் கிராமத்துக்கு எடுத்துச்செல்லுமாறு ஆட்களுக்கு ஆணையிட்டான்.

கிராமம் விழித்திருந்தது அந்த இரவில். படுக்கையிலிருந்து இழுத்துவரப்பட்ட சிறுவர்கள் ஹரிக்கேன் விளக்குப் பனிமூடிய கதிர்கள்நடுவில் காட்டுநடனமாடிக்கொண்டிருந்த மஞ்சள் நிழல்களின் மனிதர்களைத் தூக்கக்கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். கிராமத்து மத்தியிலிருந்த மேடையில் பொருத்தப்பட்டிருந்த பிணத்தைப்பார்க்க மக்கள் முண்டியடித்தனர். பிணத்தினருகில் நின்றிருந்த யுதிஷ்டிரனை வழிபாட்டுச் சல்லடைவழியர்கள் பார்த்தநேரம் அப்பிரதேசத்துக் காற்று களிப்புடனும் திகிலுடனும் ராட்சச அதிர்வுற்றது. சுற்றுப்புறத்தை மௌனமாகப் பார்த்து விழித்தவாறிருந்த குழந்தைகள் பிற்காலத்துக் குழந்தைகளின் உதடுகளுக்குள் அக் கொண்டாட்டத்துக் காற்றைத் தங்களுக்குள் மிச்சமிருப்பதை இறகொன்று இடம்பெயர்க்கும் காற்றுப்போலூதுவர். இரும்புப் பட்டியடித்த வண்டிச்சக்கரங்களூடாக நெரிசலான தெருக்களின் மனிதத்தாவர அடர்வுகளைப் பசுக்கள் வாலசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

கூர்மையான கண்களுடன் மேடையைப் பார்த்துக்கொண்டு அனைத்து கிராமமக்களும் நிற்க, யுதிஷ்டிரன் மேடைமேலே ஏறினான். பாதி மூடியிருந்தன அவனது கண்கள். குளிர்ந்த காற்றொன்று கூட்டத்தைக் கிழித்துச்செல்ல, பூக்கள்நிறைந்த முந்தானைகளால் குழந்தைகளின் தலையைமூடிப் பாதுகாத்த பெண்கள் அவனைக் கூர்ந்து கவனித்தனர். பாதங்களில் முன்பு வீழ்ந்த வயோதிகன் தன் நீள அகலங்கள்முழுவதும் அவன்முன் மறுபடித் தரையில்பரப்பி மணலின் சீரற்ற நுனிகளைத் தன்னுள் புதைத்தநேரம் ஹரிக்கேன்விளக்குகளின் பைசாச ஒளிகளூடே அவனைக் கருணையுடன் பார்த்தான் யுதிஷ்டிரன். வியர்த்திருந்த அவனது நெற்றியையும் புருவமுடிச்சுக்களையும் பெயர்க்கமுடியவில்லை எவராலும். பின்னால் பிணைந்த கைகளுடன் கல்குழம்புபுகுந்த உடல் இறுகத்தொடங்க இறுகத்தொடங்க அவன் பேசும்விதத்தை மெதுவாக உணர்ந்துகொண்டனர் கிராமமக்கள். அவனது உதடுகள் துடித்தன, நிதானமாக உருவெடுக்கத்தொடங்கிய நடுக்கம் அவனுள் பரவத்தொடங்க, உடல் அதிரத்தொடங்கியது. வியர்வைக்கசிவு, கால்சராயும் கசங்கிய சட்டையும் கழன்றன வெளுத்த உடல் அவிழ்ந்தது ரத்தமிழந்த தோலின்குறுக்காக நெளிந்திருந்த சவுக்கடித் தடங்களுடன்; கீழே உதிர்ந்தது கால்சராயின் ஆகாயநீலம். நிலைத்த பாவத்துடன் பதிந்திருந்த கிராமப்பார்வைகளின் நடுவில் யுதிஷ்டிரனின் உடலடைந்த நிலை முன்பெப்போதுமில்லாதபடி உலுக்கமடைந்தது. குரூரமான புன்னகையொன்றுதிர்த்த அவன் உதடுகளின் கீழிருந்து இறுகிய முஷ்டி துளைத்தேறியது காற்றில். தாளமுடியாமல் காற்றில் பரவிக்கொண்டிருந்த ஒத்திசைவைச் சிதைத்துக்கொண்டு வெடித்துச் சிதறின விளக்குகள். அவனைச்சுற்றிக் கசிந்த ஒளிவெள்ளத்தினூடாக நழுவி அவன்முன் பொருந்திய முகமூடியைக் கவனித்தது காலத்தைத் தூரங்களாலளக்கும் வித்தைக்காரனொருவன் மட்டுமே - அதன் இழைகளில் தன் நீண்ட நகங்களைநுழைத்து உதிர்க்கமுயன்றபோது மார்பைப் பிடித்துக்கொண்டதில் புழுதி கிளம்பியபின் வீழ்ந்து இறந்தான். அவனைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இது தெரிந்திருக்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காமலிருக்கக்கூடிய யுதிஷ்டிரன் தன் இறுக்கமான இயக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான் சோர்வடையச் சாத்தியமற்ற கூட்டத்தின்மேலான பிடி தளர்ந்துவிடாமலிருக்குமாறு.

அவன் உறங்கிக்கொண்டிருக்க, குமைச்சலூட்டும் தெருக்களில் முழுவீச்சிலிருந்த முடிவற்ற பெருங்குழப்பத்தினுள் கரைந்துபோனது குறட்டை. சிகரெட் பற்றவைத்த ஒருவன் பின்பு அருகிலமர்ந்திருந்த யுதிஷ்டிரனின் முகத்தினுள் நேராகப் பார்க்கத் துணிச்சல்பெற்றுப் பின்பு சொன்னான்: "இன்னும் சாலைக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறதா பார்". தன் ஒளியனைத்தும் இழந்திருந்து அடிபட்ட பாதைகளின் மிச்சங்களாய்க் கண்களில் நிலைத்திருந்த திறந்த கருவிழிகளின்மேல் நேராகப் புகையை ஊதினான். மறுபடியும் கார் நெரிசலானெ தெருவொன்றுக்குள் பிரயாணித்துக்கொண்டிருக்க, கார்மனிதர்கள் பார்த்த நித்திரைமுகம் ஆபத்தற்றிருந்தது. தட்டைத்தன்மையொன்று தங்கிவிட்டிருந்தது அதில். திரும்பி அகன்று புன்னகைத்தான் டிரைவர். தெருக்கள் மிகவும் நெரிசலுடனும் திருகல்களுடனுமிருந்தன அதன் ஹாவர்ஷியன் சுழற்கால்வாய்கள் நகரத்தின் அடர்வுகளுக்குள் முடிவற்று நீண்டவாறு. தங்கள் இருப்பை உணர்த்தத்தொடங்கியிருந்தன வானுரசிக் கட்டிடங்களின் பாதங்களில் நடந்துகொண்டிருந்தவர்களின் கால்கள் கொன்ற தூரம் அக் கட்டிடங்களின் உயரங்களை வெகு எளிதில் துடைத்தெறியும். ஒருதரம் துப்பாக்கிமுனையில் இதுபோன்றதொரு நகரத்தில் அவனைக் கடத்திச்சென்றார்கள். அழுகிய மாமிச நாற்றம்வீசும் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுப் பின் அவன்முன் மாமிசத்துண்டங்கள் வைக்கப்பட்டன சுவையளக்க. இறந்த மிருகங்களின் சோகமான சதைகளால் சூழப்பட்ட அந்த அறையின் துர்நாற்றத்தினொரு கணத்தில் தன் நாக்கை இழந்தான். அப்போது தனது நாக்கில் வைத்த மாமிசத்துண்டமொன்று தனது நாக்கின் ஏதோவொரு பட்டியை உரித்தெடுத்தது என்றான் தனது நண்பர்களிடம், பிறிதொருநாள். கனக்கும் இதயத்துடன் கண்ணீர்விட்டு அழுதான். அவனது அந்தஸ்தும் சமூகநிலையும் இன்னும் சிறிதுநாட்களில் கேள்விக்குட்படுத்தப்படும். இறந்த சதைநிரம்பிய அந்த நரகத்தின் அறைக்குள்ளமர்ந்திருந்த யுதிஷ்டிரனின் நடுங்கும் கைகள்: உருகிவழிந்து கொதித்துப்பரவும் பயத்துடன் ஒரு துண்டத்தையெடுத்து அலுமினியத்தட்டிலிருந்து வாய்க்குச் செலுத்தின முடிவற்ற விரல்கள். வரிசைக்கிரமப்படி அவன் ஏதும் செய்திருக்கவே இல்லையென்று அவனுக்குணர்த்தியது எழுந்த உமிழ்நீர் அலை. பயப்பட ஏதுமில்லையென்று தேற்றிக்கொண்டான். கையில் பிடித்த தாளிலிருந்த அளவுகோல் வரிசைப்படித் தன் முடிவுகளைக் குறித்துக்கொள்ளத் தொடங்கினான். அந்தக் கணம் கலைந்து போனது.

அந்த நிகழ்வைப்பற்றி அதன்பிறகு கிராமத்தில் யாரும் அவ்வளவாகப் பேசவில்லை. தங்கள் மூளைகளின் புழக்கமற்ற மூலைகளில் அவற்றை ஒதுக்கினர். ஒற்றையிரவில் அதே மேடையில் கம்பீரமான நாற்காலியிலமர்ந்த சிறுவன் அவனது வெளிப்பாட்டில் மூச்சடைத்துப்போன மக்கள் நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவாறு. முடிவற்று நீண்டது இரவு. பின்பொழுதொன்றில் அவனது இமைகள் தாழத்தொடங்கி தூக்கம் அவனைத் தழுவத்தொடங்குவதை அவர்கள் கவனித்ததும் கூட்டத்தில் சிறிதாக எழுந்தன சலசலப்புக்கள். சிறிது தெளிவுற்றுத் தூக்கம்கலைத்த அவன் கண்கள் கூட்டத்தின் அகன்ற வாயை அடைத்தன. கம்பீரமான நாற்காலியில் பின்பு அவனது தூக்கம் ஆதிக்கம்பெற்றபோது அதனடுத்து நிகழ்ந்தவைகளை அவனது கூர்த்த பார்வைகள் கட்டுப்படுத்தவில்லை. மேடைமேல் ஏறினார்கள், யுதிஷ்டிரனின் கைகளைப்பிடித்திழுத்து தெருவுக்குக் கொண்டுசென்று உதைத்தார்கள். தன் பார்வைகளில் அவர்களை உறையவைக்கமுயன்றான் யுதிஷ்டிரன்.

பளாரென்று ஒருவன் யுதிஷ்டிரனைச் செவிட்டிலறைந்தான். "மூத்தவர்களை முறைக்காதே".

கால்சராயையும் சட்டையையும் அவன் முகத்தில் விட்டெறிந்து உறுமினார்கள். "ஒழிந்து போ. உன் பெற்றோர் செத்துவிட்டார்கள்".

அகன்றான். அதோர் இரவின் தனியான பயணம், கிராமத்தின் எல்லையை அவன் கடந்தபின்புதான் சூரியன் எழுந்தது உதயம். கிராமத்தின் வரலாற்று நினைவுகளிலிருந்து அவன் பெயர் அழித்தெறியப்படவில்லை, ஆனால் உள்ளும் வெளியும் அவனை வெறுத்தனர் அவனது சமகாலத்தவர். அவன் தனியாக நடந்தான், உடன்வர யத்தனித்த யாவரையும் மறுத்துக்கொண்டு; அவனது சகபயணிகள் ஒன்று அவனைப் பின் விட்டுச்சென்றார்கள் அல்லது மணல்நிரம்பிய நீண்ட பாதைகளில் அவனைப்பற்றி மறந்துசென்றார்கள்.

கனவிலிருந்து தன்னை உலுக்கியெடுத்தான், உணர்வுகளின் குழப்பச்சகதி சூழ்ந்தது.

எப்போதும்போல், கனவைப்பற்றிய எந்தக் கேள்விகளும், அர்த்தப்பெயர்ப்புக்களும், அவற்றின் முக்கியத்துவமும் உபயோகத்தன்மையும் கேட்கப்படாது. கனவு கனவாக விட்டுவிடப்படவேண்டும், கனவு நிஜமாக விட்டுவிடப்படவேண்டும், நிஜம் கனவாக, நிஜம் நிஜமாக விட்டுவிடப்படவேண்டும், கனவு நிஜமாக விட்டுவிடப்படவேண்டும். நெரிசலான தெருக்களூடாகக் கார் சீறிக்கொண்டிருந்தது, அதே தெருக்களூடாகத் திரும்பத்திரும்பப் பயணித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள், எந்தவொரு ஆட்டத்திலும் களைப்படையாத வார்த்தைகள் போல். முன்சீட்டில் அமர்ந்திருந்தவன் ஒரு கூர்மையான, எடைமிகுந்த குத்துவாளை உருவியெடுத்து பட்டுத்துணியால் துடைத்தான். அதே இரவில் கிராமத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த மிருகப்பிணம், விவசாயநிலங்களேதும் அருகிலற்ற ஊரின் ஒதுக்குப்புறமொன்றில் புதைக்கப்பட்டது.

இப்போதுவரை யுதிஷ்டிரனின் தூக்கம் தடைப்படவில்லை. நகரத்தின் இரவுவிளக்குகள் ஒளிவீசத்தொடங்கியிருந்தன. தங்களுக்கென்றொரு இதயம்கொண்ட மனிதர்களை அச்சுறுத்தத்தயங்காத இரவின் கவர்ச்சிகரமான குரூரங்களின் அசுரத்துள் மூழ்கிக்கொண்டிருந்தது சாயங்காலம். தூய வெள்ளை வேட்டியில் சொருகிய குத்துவாளுடையவனருகில் இறந்த நாக்குடனமர்ந்திருந்த யுதிஷ்டிரனுடன், உள்ளே பரவியிருந்த முடிவற்ற நிச்சயமின்மையுடன், புலனுக்குப் பிடிபடா இரண்டு பாகங்களாகச் சாலையைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருந்தது கார், சோதிக்கப்படவேண்டிய நல்ல அல்லது அழுகிய சதைக்கோளங்கள்நிரம்பிய தொட்டிகளில் மூழ்கிய பழக்கமற்ற இடமொன்றுக்கு. இன்னும் சாலைக்கு நான்கு விரற்கடை மேலாக ஓடிக்கொண்டிருந்தது கார்; அதைப் பார்ப்பதொரு அற்புதமான விஷயம்.

3 comments:

-/பெயரிலி. said...

ஹி ஹி!! இரவு பார்த்தால், இரண்டு பந்தி; கடைசியாக ஒரு தனி வரி; ஒரு பெட்டி. இது குறுங்கதையா வசனகவிதையா என்று கேட்க நினைத்துப் பின்னூட்டப்பெட்டியை அழுத்தினால், அது நெடு நேரம் பின்னும் ஊடிக்கொண்டே இருந்தது. இப்போது வந்து பார்க்கத்தான், உங்கள் மெய்யான "கோணங்கி"த்தனம் தெரிகின்றது. இனித்தான் வாசிக்கவேண்டும்.

ROSAVASANTH said...

ஓ அதுதானா! நானும்...

Unknown said...

விரற்கடை, what is equivalent length of விரற்கடை