Tuesday, March 15, 2005

அசோகமித்ரன்

அசோகமித்திரனின் கதைகளிலுள்ள காஃப்காவின் தாக்கம் பற்றிய தமிழவனின் சிறு குறிப்பு. பெரும்பாலும் கவனிக்கப்படாமலே விட்டுவிட்ட அசோகமித்திரனின் 'ஒற்றன்' பற்றித் தமிழவன் குறிப்பிட்டிருந்ததைப் படித்து ஆச்சரியமடைந்தேன். ஒற்றன் படித்தபோது நான் உணர்ந்ததும் அதுவே. Kafkaesque என்று. இதில் தமிழவன் குறிப்பிடும் காஃப்கா கதைகளில், பேசித் தீர்த்துவிடப்பட்ட உருமாற்றம் (The metamorphosis) தவிர்த்த சிறுகதைகளான தீர்ப்பு (The Judgment) மற்றும் நாட்டுப்புற வைத்தியன் (The country doctor) இரண்டும், படித்த காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. குறிப்பாக, நாட்டுப்புற வைத்தியன் கதையைத் தனிப்பட்ட உபயோகத்துக்காகச் சொந்தமாக மொழிபெயர்த்ததுண்டு - காஃப்காவின் கதைகளிலேயே உனக்குப் பிடித்தது எது என்று கேட்கப்படும்போதெல்லாம் பட்டென்று இந்தக் கதையையே சொல்லியிருக்கிறேன். ஐந்தாறு பக்கங்கள்தான் இருக்கும் - உண்மையில், கல்லூரிக்காலத்தில் பெருமளவு பாதித்த கதை அது. போர்ஹேஸுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் காஃப்கா; அசோகமித்திரனைப் படிப்பவர்கள் போர்ஹேஸைப் படிப்பது சிரமம் என்ற ரீதியிலும் தமிழவன் சொல்லியிருக்கிறார். ஒரு தளத்தில் இது உண்மை எனினும், போர்ஹேஸின் Secret Miracle ஐ அடிப்படையாகக் கொண்டு அசோகமித்திரனும் ஒரு கதை எழுதியிருப்பார் (ஏதோ ஒரு தினமணி தீபாவளி மலரில் வந்ததென்று நினைக்கிறேன்). அதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில், அந்தக் கதையிலேயே Secret Miracle பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். உண்மையில், 'யதார்த்தத்தை விண்டு காட்டிய' என்ற ரீதியிலேயே அசோகமித்திரனைப்பற்றிய பொதுப்படையான வாசகப் பார்வை முடிவுற்றுவிட்டதோ என்று தோன்றுகிறது (அதே எண்ணத்தில் நானும் பலகாலம் இருந்ததுண்டு என்றாலும்). அசோகமித்திரனின் 'ஒற்றன்' போல நகுலனின் கடைசி நாவலும் (சை, பெயர் மறந்துவிட்டேன்; கதாநாயகன் பெயர் ராஜசேகரன் என்று நினைவு), ஏமாற்றுகிறதா ஏமாற்றவில்லையா என்ற அளவிலேயே கடைசிவரை புதிராக இருந்தது... இந்தவிதமான Kafkaesque தன்மை பலமா பலவீனமா என்று தெரியவில்லை என்கிறார் தமிழவன்...

வாய்ப்பிருப்பின் தமிழவனின் குறிப்பைத் தீராநதியில் படித்துப் பார்க்கவும்.

5 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

நானும் படித்தேன்.அசோக மித்திரனின் புலிக்கலைஞன் கதை காஃப்காவின் கதையொன்றுடன் ஒத்திருந்த தன்மையையும் குறிப்பிட்டிருந்தார்.

சன்னாசி said...

இந்த ப்ளாகரின் தொல்லை தாங்கமுடியவில்லை. இந்தப் பதிவை எடுத்துவிட்டிருந்தேன், தானாக மூன்று தடவை போட்டுத் தொலைத்திருக்கிறது, இரண்டுதடவை நீக்கிவிடலாம் என்று பார்த்தால், நாலுதடவை போஸ்ட் போஸ்ட் போஸ்ட் போஸ்ட் என்று அழுத்தியிருக்கிறேன் போல, நாலுதடவை போட்டுவைத்திருக்கிறது. இப்போது Comcastக்கும் கூகிளுக்கும் என்ன பிரச்னையோ தெரியவில்லை, வீட்டிலிருந்து அடித்தால் ப்ளாகர் பெரும் தகராறு. சின்னப் பதிவுகளுக்கே இப்படி பெரும் தகராறு, கடந்த பத்து நாட்களாய்.

நாராயணன், இந்தப் பின்னணியில், ஒரு பிரதிப் பதிவை நீக்குகிறேனென்று நீக்கியதில், நீங்கள் இட்டிருந்த பின்னூட்டமும் அம்போ. ஆனால், அதற்கான பதில்: நான் மொழிபெயர்த்தது கல்லூரியில் - 1996ல். அதெல்லாம் கல்லூரி விட்டு வரும்போதே நோட்ஸ் மத்த குப்பையுடன் சேர்ந்து காலி. கல்லூரி கடைசிநாட்களில் "குடி வாரம்" கொண்டாடியபோது தண்ணியடித்துவிட்டு bonfireக்குள் விட்டெறிந்தவைகளில் எது என்னதென்று யாருக்குத் தெரியும்!! மேலும், வெகு சாதாரணமாக இருந்திருக்கும் அது... அதனால்: நை நை... மேலும், மொழிபெயர்ப்பு ஆளை விழுங்கும் விஷயம் என்பதால், குறிப்பிட்ட கட்டத்துக்குப்பின் அதன் சங்காத்தத்தையும் கத்திரித்து எறிந்தாயிற்று. சுயநலம் தான்!!

Narain Rajagopalan said...

என்னமோ போங்க.. நான் கொஞ்சம் லேட்டு... ஒரு உருப்படியான விஷயத்தை தெரிஞ்சுக்க விடமாட்டேன்னு சொல்லிட்டிங்களே அப்பு... சரி பாத்துக்கறேன்.

Vijayakumar said...

இன்னான்னமோ சொல்றீங்க. சொல்றத கேட்டுகிட வேண்டியது தான். ஆ... புலிக்கலைஞன்... நேத்து தான் நான் படிச்சேன். புலிக்கலைஞன் மாதிரி துள்ளி எம்பி குதித்து எனக்குள் காணாமல் போய்விட்டேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

விஜய் காந்தியும் புலிக்கலைஞனும் புத்தகத்தைப் படித்தீர்களா?எனக்கு புலிக்கலைஞன் பிடித்திருந்தது காந்தி பிடிக்கவில்லை.தொகுப்பில் புலிக்கலைஞன் கதைக்கு முன் வரும் கதைகள் அநேகமாக நல்ல கதைகள் பின் வருபவை என் அறிவுக்கு பரவாயில்லை என்ன வரிசையில் அவற்றைத் தொகுத்தார்களோ என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

மாண்ட்ரீஸர் நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்புக் கதைகளோடு இன்னும் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் குறிப்பிடுங்களேன் மறக்காமல் நூலின் மூலத்தையும் குறிப்பிடுங்கள்.எனக்கென்னவோ உங்களின் ரசனையுடன் பொருந்திப் போக முடிகிறது.