பிறழ்ந்தகுறிப்புக்கள்
-மாண்ட்ரீஸர்
"கோரைமுடி உனக்குப் பிடிக்குமா?" என்றேன். ஜூன்'கோ, கோக்கை உறிஞ்சியவாறு சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டு "ம்; சற்றுநாள் நானும் சிவப்புச்சாயம் அடித்திருந்தேன் முடிக்கு" என்றாள். ஆவணப்படம் திரையிட இன்னும் இருபது நிமிடங்கள் மிச்சமிருக்க, அறை முழுதும் வாசனையின்மை நிரம்பியிருந்தது. எனக்கும் ஜூன்'கோவிற்கும் இடையில் ஏழு நாற்காலி தூரம் என்பதால் நான் சத்தமாகவே பேசவேண்டியிருந்தது. அவளும் சத்தமாகப் பேசுவதில்லை என்பதைச் சற்று நேரத்தில் புரிந்துகொண்டு அந்த ஏழு நாற்காலி தூரத்தைக் குறைக்க நானோ அவளோ முயலவில்லை.
"இந்தப் பெண்ணைப்பற்றி உனக்கு முன்னமே தெரியும் என்றா சொன்னாய்?" என்றாள் ஜூன்'கோ. அன்றைய ஆவணப்படம், 1946ல் இந்தியாவில் பிறந்த ஒரு பெண்ணைப்பற்றியது. அப்பெண்ணின் தந்தையின் சில ஆங்கிலேய நண்பர்கள், 1946லிருந்து கிட்டத்தட்ட 1953 வரை அவளைப்பற்றி ஏராளமான குறும்படங்களைத் தயார் செய்திருந்தனர். அவையும், அதன்பிறகு அப்பெண்ணின் தந்தையும் பிற உறவினர்களும், மருத்துவக்குழுவினரும் எடுத்த படங்கள், ஆராய்ச்சிக்குறிப்புகள் அனைத்தும் 1999 வரை வெகு ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. 1999லிருந்துதான் அவளது குடும்பத்தினர் அவளைப்பற்றிய தகவல்களை ஊடகங்களுக்குக் குறிப்பிட்ட அளவு கொடுக்கவும், அவற்றை ஊடகங்கள் செய்திகளுக்கு உபயோகித்துக்கொள்ள அனுமதியளிக்கவும் செய்திருந்தனர். அவளை ஆராய கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யுட், ஸூரிக், ஹார்வர்டு, கெட்டிங்கன், கோப்பன்ஹேகன், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக உயிரியல் நிபுணர்கள் பல்வேறு கட்டங்களில் சேர்ந்து உருவாக்கிய, இப்போதுவரை 536 மில்லியன் டாலர்களை விழுங்கியுள்ள, 1966ல் தொடங்கிய ஆராய்ச்சித்திட்டம், 2005ல் நிறைவுபெற வேண்டுமென்பது குறிக்கோள். இதுவரையிலான ஆராய்ச்சித் தகவல்கள் முறைப்படித் தொகுக்கப்பட்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டும் வந்திருந்தாலும், ஆராய்ச்சியின் முடிவென்ற புள்ளியை 2005ல்தான் நிர்ணயிக்க முடியுமென்று மத்தியாஸ் ஹைடல்பெர்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அறிவித்துவிட்டிருந்தது.
"ஆமாம், தெரியும், அவள் பெயர் வெகு நீளமானது. சுருக்கமாக சுபா என்று வைத்துக்கொள்ளலாம். அவளது மகன் எனது கல்லூரித்தோழன்" என்றேன் நான்.
ஊடகங்களில் கேள்விப்பட்டதையும், சித்தார்த்தன் தனது அம்மாவைப்பற்றிக் கூறியதையும்வைத்தே நான் இதையெல்லாம் சொல்கிறேன். தவறுகள் இருப்பின் அவை என்னிடமிருந்தோ சித்தார்த்தனிடமிருந்தோ, ஊடகங்களிலிருந்தோ அல்லது சுபாவிடமிருந்தோகூட கிளைத்திருக்கக்கூடும். இதை நான் முதலிலேயே கூறியிருந்தால் ஒருவேளை இது உங்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாயிருந்திருக்கும்! 1946ல் சுபா பிறந்தபோது அவளது தந்தை ஒரு ஐசிஎஸ் அதிகாரி. பிரசவ அறைக்கு வெளியே காத்திருந்த மனோரஞ்சனையும் உறவினரையும் நோக்கி வந்த டாக்டரின் மேலங்கியின்மேலும் கையுறைகளின் மேலும் திட்டுத் திட்டாக ரத்தம். அனைவரின் முகத்திலும் பீதி சரசரவென்று ஏறியது. டாக்டர் மனோரஞ்சனை மட்டும் அறைக்குள் அழைத்துப் போனார்.
களைத்த போர்க்களம் போலிருந்தது அந்த அறை. மூன்று செவிலிகள் மயங்கிக் கிடந்தனர். மனோரஞ்சனின் மனைவி அறுவைசிகிச்சைப் படுக்கையின்மேல் இறந்துகிடந்தாள். அவளைச்சுற்றிலும் தேங்கியிருந்த ரத்தக்குளத்தின் கரைகள் ஏற்கனவே உறையத்தொடங்கியிருக்க, அறுவைசிகிச்சைக் கருவிகள் அறைமுழுதும் சிதறிக்கிடந்தன. டாக்டர் மனோரஞ்சனின் தோளைப் பிடித்துக்கொண்டு தள்ளாடினார். கட்டிலின் வலது மூலைக்கருகில் கட்டிலின் விளிம்பைப் பிடித்தவாறு ஒரு கிழவி தரையில் அமர்ந்திருந்தாள். அவளின் நீண்டு சொதசொதத்த தலைமுடியும் அவள்மேல் பரவியிருந்த ரத்தமும் அவளது நிர்வாணத்தின் ஆழமும் மனோரஞ்சனை மூச்சடைக்கச் செய்தன.
"அதுதான் இப்போது பிறந்த உங்கள் மகள், மனோரஞ்சன்" என்றார் டாக்டர், மூலையில் அமர்ந்திருந்த கிழவியைக் காட்டி. அந்தக் கணம் ஸ்தம்பித்து நின்றது.
* * *
மனோரஞ்சன் குடும்பத்தின் கதவுகள், நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும்தவிர பிறருக்கு இறுக மூடப்பட்டன. அவரது நெருங்கிய நண்பர் சார்ல்ஸ் டட்டன் மட்டும் அவரது விருப்பப்படி மனோரஞ்சனின் மகளை ஆவணப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். வெளியே கசிந்த தகவல்கள், அவளை இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டுமென்று அப்போதைய அரசாங்கம் மனோரஞ்சனை மிரட்டுமளவு போய்ச்சேர்ந்தது. சுபா என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணைப்பற்றிய விஷயங்களை அவர்கள் தொகுக்க வெகுகாலமாகவில்லை. பிறக்கும்போது அவளுக்கு அறுபது வயதென்று தீர்மானித்திருந்தார்கள் நிபுணர்கள். நாளாக நாளாக அவளது வயது குறைந்துகொண்டிருந்தது. பிறந்தபோது அவள் வயது 60, மனோரஞ்சனின் வயது 28 என்றிருக்கையில், 1962ல் இருவருக்கும் வயது 44 ஆக இருந்தது. அதற்குப்பின் அவளது வயது இன்னும் குறையத்தொடங்கியபோதுதான் அந்தப் பெரும் கேள்வி எழுந்தது. கிழவியாக இருந்து வயது குறைந்து இளம்பெண்ணாக மாறிப் பின்னும் வயது குறைந்து சிறுமியாகிப் பின்னும் வயது குறைந்து குழந்தையாகிப் பின்னும் வயது குறைந்து.....?
அதற்கு மேலும், முந்தைய நாள் நடந்ததெல்லாம் மறுநாள் அவளுக்கு நினைவிருப்பதில்லை என்பதைப் பின்புதான் கண்டுபிடித்தார். ஆனால்...என்று யோசிக்கையில் அவருக்குக் குழப்பம்தான் எழும். இவளின் இப்போதைய வாழ்வை இன்று என்பதா, நேற்று என்பதா, நாளை என்பதா. பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கும் அவளது வசீகர வாழ்க்கையின் விஸ்தீரணம். நியதிகளின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து முறித்துக்கொண்டு வந்துவிட்ட இவளை உலகத்தின் எந்தக் கணத்தில் வைப்பது. எதிரெதிர் பாதைகளில் அவர்கள் பிரயாணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு சாதாரண வாக்கியம். அவளது இன்று என்பது அவருக்கு இன்றா நேற்றா நாளையா என்று அவருக்குத் தெரியவில்லை.
முந்தைய நாள் நடந்ததெல்லாம் அவளுக்கு மறுநாள் நினைவிருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் தனித்தனியாக வாழ்ந்தாள். ஒரு பெண்... அதை எப்படிச் சொல்வது. அவள் மூளை இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அன்றைக்கு மட்டும். அடுத்த நாள் அந்த நினைவுகளை அழித்துவிட்டு, ஆனால் பிழையின்றி இயங்கத்தொடங்கியது. இது மேஜை, இது நாற்காலி, இது ஆண், இது பெண், இது அப்பா என்று நினைவு வைத்துக்கொள்ள முடிந்ததே தவிர, அப்பா நேற்று நம்முடன் பேசிக்கொண்டிருந்தார், நாய்க்குட்டி காலை நக்கியது போன்ற விஷயங்கள் அவளுக்கு நினைவில் இல்லை. இதன் சூட்சுமங்களை விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு நாள் நேராகக் கழிகிறது அவளுக்கு. காலையில் விடிகிறது, மதியம் வெயிலடிக்கிறது இரவில் குளிரடிக்கிறது... இத்தனையையும் அனைவரையும்போலத்தான் உணர்ந்தாள் அவள். இருந்தாலும், அவளின் வயது குறைந்துகொண்டிருக்கிறதென்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டபோது இந்தக் கேள்வி எழுந்தது. ஒரு நாள் உலகத்தில் கழிகிறது. அதன்படி அவளும் ஒரு நாள் வாழ்கிறாள். ஆனால் அவள் வினோதக் கணக்குப்படி ஆயுளில் ஒருநாள் பின்னோக்கிச் சென்று, குறைகிறது. இது எதில் சேர்த்தி என்பதை வல்லுநர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. உறவுமுறைகளை அவளுக்குப் பரிச்சயப்படுத்த அவர்கள் பட்ட கஷ்டம் சற்றில்லை. அப்பா என்பவர் தன்னைப் பெற உதவிசெய்பவர், அம்மா தன்னைப் பெற்றெடுப்பவள், மாமா, அத்தை இன்னபிறவர்களெல்லாம் சொந்தக்காரர்கள் என்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்களைக்குறித்த சம்பவங்கள் மட்டும் அவளுக்கு நினைவிருப்பதில்லை. வயது குறையக் குறைய, ஒரு கட்டத்துக்குப்பின் இந்த உறவுமுறைகள் அனைத்தும்கூட மறந்துபோயிருக்கும் என்பதும் மனோரஞ்சனுக்குத் தெரிந்தது. அப்போது நிகழக்கூடியதெல்லாம் நமக்குப் புரியாத, குழந்தைகளின் அடையாளங்கண்டுபிடிப்பு யுக்திகள்தான். இருந்தாலும், முதல்நாள் காய்ச்சல் குணமாகி மறுநாள் காய்ச்சல் தொடங்குவது போன்றெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
அவளைத் தெய்வம் என்றனர், பிசாசு என்றனர், உலக அழிவின் குறியீடு என்றனர், மனிதகுலத்தின் அடுத்த சாத்தியம் என்றனர். சொர்க்கங்களையும் நரகங்களையும் எதிர்த்திசையில் சமைத்தனர். உலகம் முழுவதும் இப்படிப்பட்ட பிற குழந்தைகளின் பிறப்பு எதிர்நோக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவு இப்படிப் பிறந்த குழந்தைகளையெல்லாம் உடனுக்குடன் கொன்றுவருவதாகவும், அதுகுறித்த தகவல்கள் ஆழப் புதைக்கப்பட்டுவிடுவதாகவும் தகவல்களோ புரளிகளோ வந்தவண்ணமிருந்தன. போலிக் 'குழந்தைகள்' உலகம் முழுவதும் பிறந்தன. நான்கைந்து வருடங்களில் அவர்கள் வயது குறையாததால், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மனோரஞ்சனின் மனைவியின் உடல் எரிக்கப்பட்டுவிட்டதால், அதன்மேல் ஆராய்ச்சி நடைபெறவில்லை. அதுவே மிகப்பெரிய இழப்பு என்றனர் ஆராய்ச்சியாளர்கள். நிஜத்தில், சுபாவுக்குப் பிறகு அப்படி யாரும் பிறந்ததாகத் தெரியவில்லை, பிறந்திருந்தாலும் தகவல்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
* * *
"அப்படியானால் எப்படி அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்?" என்றாள் ஜூன்'கோ.
"டொமினிக் டட்டனுக்கும் சுபாவுக்கும் பிறந்தவன்தான் என் கல்லூரித் தோழன் சித்தார்த்தன். சார்ல்ஸ் டட்டனின் குடும்பம் இந்தியாவிலேயே தங்கிவிட்டது. அவன் பிறந்தபோது சுபாவுக்கு 24 வயது. அதாவது, 1982ம் வருடத்தில். சித்தார்த்தனை அவளிடமிருந்து பிரித்தே வளர்த்தார்கள். அவனுக்குப் ஐந்து வயதாகும்போதுதான் அவளிடம் கொண்டுசென்றார்கள். அப்போது அவளுக்குப் பத்தொன்பது வயது. இப்போது அவளுக்கு ஒரு வயது. இப்போது அவள் முழு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், அவனும் அவளுடனேயே இருக்கிறான். ஒரு வயது என்பதைவிட, துல்லியமாகச் சொல்லப்போனால், ஒன்பதரை மாதங்கள் அவள் வயது. குறைந்துகொண்டேயிருக்கிறது. அவளது வயது 0 நாள் ஆகும்போது என்ன ஆகுமென்பதுதான் இப்போதைய கேள்வி" என்றேன் நான்.
"அதை நானும் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளைச் செயற்கைக் கருப்பைக்குள் வைத்திருக்கிறார்கள் இல்லையா"
"ஆமாம். அதுதான் ஏகப்பட்ட பணத்தை விழுங்கியிருக்கிறது. மனோரஞ்சனையும் சித்தார்த்தனையும் நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவர்களது மொத்த வாழ்க்கையும் கேள்விகளுடனும் ஆய்வுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனுமே கழிந்துவிட்டிருக்கிறது." என்றேன், சிறிது கழிவிரக்கத்துடன். அவள் மௌனமாக இருந்தாள். அரங்கம் இப்போது கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. எங்கள் பல்கலைக்கழகத் திரைப்படத்துறை மாணவர் முழுவொன்றின் ஆவணப்படம் இது. சுபாவின் நான்கு வயதிலிருந்து இரண்டு வயது வரை எடுக்கப்பட்ட காட்சித்தொகுப்புக்கள், ஹைடல்பர்கர், மனோரஞ்சன், சித்தார்த்தன், டொமினிக் டட்டன் போன்றவர்களின் பேட்டிகள், பிற அறிவியல் வல்லுநர்களின் கருத்துக்கள், மதத்தலைவர்களின் கருத்துக்கள் என்று ஒரு 'தரமான' டாக்குமெண்ட்டரியின் அனைத்து அம்சங்களுடனும் இருந்தது அது. முன்பே இரண்டுமுறை இதைப் பார்த்திருக்கிறேன் - டோக்கியோவில் ஒருமுறையும் ஔரங்காபாதில் ஒருமுறையும். குறுகிய காலத்தில் மிக அதிக முறை திரையிடப்பட்ட ஆவணப்படம் இதுவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இல்லை, இது தான். நேற்று வளாகம் முழுதும் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளும் அப்படித்தான் சொன்னன. ஒரு வருடத்தில் 59 முறை என்றால்...கிட்டத்தட்ட வாரத்துக்கொரு திரையிடல். தெரியவில்லை, ஒருவேளை சுபா பற்றிய திரைவடிவம் பெறாத ஆவணப்படங்களில் மிகவும் வெற்றிகரமானது இதுதானென்று நினைக்கிறேன். ஹைடல்பர்கர் குழுவினர் 2006ல் வெளியிடப்போகும் 60 மணி நேர டிவிடி தொகுப்புதான் சுபா குறித்த படங்களிலேயே மிகவும் வெற்றிகரமானதாக இருக்குமென்று நினைக்கிறேன்.
படம் தொடங்கியது. கெண்டால் முன்வரிசைக்குச் சென்று ஒலிபெருக்கியைப் பிடித்தவாறு சுபாவைப் பற்றியும், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகளைப்பற்றியும், சமூக, இறையியல் தளங்களில் சுபாவின் நிகழ்வு எழுப்பியுள்ள கேள்விகளைப்பற்றியும் ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுத்தான். கணிசமானவர்கள், கையிலிருந்த தகவற்பிரசுரத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். விளக்குகள் அணைந்ததும் பேச்சுக்குரல்கள் உடனடியாக அமிழ்ந்துபோயின. படம் ஓடத்தொடங்கியது.
சுபாவின் வெவ்வேறு வயதுப் புகைப்படங்கள், பின்னணி வர்ணனைகள். மூன்றாவது முறையாக இதைப் பார்ப்பதால் அப்போதே ஒருவிதமான அசிரத்தை வந்துவிட்டிருந்தது. ஆனாலும், சுற்றுப்புறங்களில் இந்தப் படம் எங்காவது திரையிடப்பட்டால் மறுபடிப் போய்ப் பார்ப்பேன் என்பதில் சந்தேகமில்லை. மனோரஞ்சனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் ஒருவிதத்தில் எரிச்சலடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். தான் தொலைத்த பரிமாணங்களை வேறு பரிமாணங்களைக்கொண்டு நிரப்பக் கடந்த சில வருடங்களாக மனோரஞ்சன் முயன்றுகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது பேட்டிகளில் ஒருவித செயற்கைத்தன்மை வந்துவிட்டிருக்க, அவர் கூறும் சில விஷயங்களும் மிக சிறுபிள்ளைத்தனமாக, அளவுக்கதிகமாய் இழுத்து விரித்துச் சட்டமடிக்கப்பட்டதாக இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக, நான் இதுவரை பார்த்த ஆவணப்படங்களில் இதில்தான் அவரது உளறல் அளவுக்கதிகமாய் இருந்தது. ஒருவேளை அவருக்கு எண்பது வயதுக்கு மேலாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். கேளுங்கள்:
"சிலசமயம் என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள நானும் சுபாவும் எங்களுடன் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வீணோ என்று தோன்றும். எங்கள் இந்தக் குமிழிவாழ்க்கையினால் நாங்கள் பெற்றதைவிட இழந்ததே அதிகம். அவள் இருந்த, புழங்கிய அறைகளுக்குள் போய் அமர்ந்திருக்கும்போதெல்லாம், அவள் தொட்ட பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம், அவளது ஒவ்வொரு நினைவும் மறுபடி என்முன் விரியும்போதும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. என் மகளை மரணத்துக்கு இழப்பது என்ற விஷயம் இதைவிட எவ்வளவோ ஆசுவாசமானதாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது. நானும் அவளும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தேர்ந்தெடுப்பட்ட கருவிகள்தான் என்று புரிந்துகொண்டபின்தான் அறிவியலை நுழைய அனுமதித்தேன். எனக்கு அதன் முடிவுகளில் ஆர்வமில்லை எனினும், மனித மனத்தின் முயற்சிகளுக்குத் தடைபோடுவது என்பது அர்த்தமற்றது என்று உணர்ந்ததாலேயே விஞ்ஞானிகள் வசம் அவளை ஒப்படைக்க நேர்ந்தது." மெலிதாக நடுங்கும் தனது கைகளால் கண்ணாடியைக் கழற்றி விழியோரம் இருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். நான் நாற்காலியில் நெளிந்தேன். ஜூன்'கோவைப் பார்த்தேன். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள், திரும்பி என்னைப் பார்த்தாள். மறுபடிப் படத்தைப் பார்க்கத் தொடங்கினோம். கண்ணீர் ஒத்திகையாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. பல குறும்படங்களில் வெவ்வேறு வயதுகளில் அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொள்வதைப் பார்த்ததால் இருக்கலாம். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். "எங்கள் வீடே வரவர ஒரு கோட்டை மாதிரி ஆகிப்போய்விட்டது. சிலசமயம் அவளது சில பொருட்களைத் தேடுவேன், கிடைக்காது. அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு சதுரங்கப்பலகை, சில காலணிகள், பட்டாம்பூச்சிவடிவ தலைமுடிக் க்ளிப்புகள் சில, முப்பத்திநான்கு வயதுக்கும் இருபத்திரண்டு வயதுக்குமிடையில் அதிகமுறை அவள் கட்டிய ஒரு மயில்துத்த நிறச் சேலை - அவளே பலமுறை இவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்த சில தந்தச் சீப்புக்கள் இரண்டே மாதத்தில் காணாமற்போயின. இதெல்லாம் பொருட்கள் என்றமட்டில் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும்கூட, நினைவுகளைப் பொறுத்தவரை விலைமதிப்பற்றவை என்பதால் சொல்கிறேன்..." அவர் குரல் நிதானமாகத் தொடர்ந்துகொண்டேயிருந்தது.
நான் மெதுவாக வெளியே நடந்து வந்தேன். எத்தனை முறை இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது? வெளியே வந்து, அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். திறந்தே கிடந்த கதவு வழியாக ஹைடல்பர்கரின் குரல் மெதுவாகக் கசிந்து வந்துகொண்டிருக்க, மனப்பாடமாயிருந்த அவரது வாக்கியங்களை அவரது குரலுடன் சேர்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். "தத்துவார்த்தமான விவாதங்களுக்குப் போக தற்போது எங்களுக்கு நேரமில்லை. 2005 எங்களுக்கு ஒரு முக்கியமான வருடம். சூபாவுக்காகத் தயார்செய்திருக்கும் செயற்கைக் கருப்பையில் முற்சோதனைகள் செய்வதற்கேற்ற மாதிரிகள் இல்லாததால், நேரடியாக அவள் உள்ளே போகவேண்டியிருக்கும். எந்த நாளில் அவளை உள்ளே செலுத்தவேண்டுமென்பதை எங்களால் மிகத் துல்லியமாக நிர்ணயிக்க முடியாவிட்டாலும், அவளது 278ம் நாளில் கருப்பைக்குள் அவளைச் செலுத்தத் தீர்மானித்திருக்கிறோம். அது சரியான நாள் என்று எங்களால் நிச்சயமாகக் கூறமுடியாது எனினும், கணக்கற்ற மாதிரிச்சோதனைகள் (simulations) மூலம் தீர்மானிக்கப்பட்ட நாள் என்பதால், அதன்மேல் எங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த அளவு நம்பிக்கை உள்ளது...ளுளூழுழூஊஊழிழீஈஈஈஈஈஈ......"
கட்டிடத்துக்கு வெளியே வந்தேன். இப்போது சுபா கருப்பைக்குள் இருப்பதால், குறிக்கப்பட்ட தேதி சரியாகவே இருந்ததெனக் கூறிவிடமுடியும். அதுவே ஹைடல்பர்கர் குழுவினருக்குப் பெரிய வெற்றி எனப்படும் பிற்காலங்களில். நாளாக நாளாக அவள் கருப்பைக்குள் சுருங்கிக்கொண்டே போனால்...எந்தக் கணத்தில் செல் குவியலாக மாறுகிறாளோ, அப்போதிருந்து அவளது பின்வளர்ச்சியைத் தொடர அதே கருப்பைக்குமேல் ராட்சத ஊடுருவி மைக்ரோஸ்கோப்புகள் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரங்களில் கருப்பையின் குறிப்பிட்ட பாகங்களைப் பார்க்கவும், சினையாக்கப்பட்ட அண்டத்தைப் பின்தொடரவும் பார்வையிடவும், கருப்பைக்கு உள்ளேயும் வெளியேயுமாக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் நுண்ணிய ஒளிநெளிக் காமெராக்களும் (diffraction cameras) பொருத்தப்பட்டிருந்தன. சினையாக்கப்பட்ட அண்டம் பின்னோக்கிச் செல்லும்போது, அதிலிருந்து சினைமுட்டையும் விந்தணுவும் பிரியும் என்பதுவரை விஞ்ஞானிகளால் யூகிக்க முடிந்தது. அந்தக் கணம்தான் உயிரின் அசலான பிருஹத் சரீர வடிவம் என்றனர் சிலர், புடுக்கு சரீர வடிவம் என்றனர் சிலர். விஞ்ஞான யூகம், கருப்பையின் ஃபாலோப்பியன் குழாயின் எந்த ஸ்தலத்தில் சினைமுட்டையாகவும் விந்தணுவாகவும் சினையாக்கப்பட்ட அண்டம் பிரியும் என்பதுவரை நீண்டுவிட்டிருக்க, அந்த இடத்தைநோக்கி மட்டும் கிட்டத்தட்ட நூற்றைம்பது காமெராக்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து பொருத்தப்பட்டிருந்தன. இவ்வளவு பிரயத்தனங்களிலும் ஏதோவொரு இடத்தில் ஏதோவொரு தவறு நிகழ்ந்திருக்க அளவற்ற வாய்ப்புகள் உள்ளன என்றபோதிலும் எந்தத் தவறும் நிகழ்ந்திராதது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எந்தத் தவறும் நிகழாது என்றே நினைக்கிறேன். வேறு ஏதோ ஒரு உணர்வு குறுகுறுவென்று உணர்த்திக்கொண்டே இருந்தது, ஆனால் என்னவென்று பிடிபடவில்லை. ஆழ்மனத்தில் அறிவியல் தோற்கவேண்டுமென்று எனக்குள் எழுந்த எதிர்ப்புணர்வாக இருக்கலாம் என்றாலும், அறிவியலில் தோல்வி என்று எதுவும் கிடையாது என்பதையும் உணர்ந்திருந்தேன்.
* * *
வேலை மும்முரத்தில் அதைப் பின்பு மறந்துவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, பக்கத்து நகரத்தில் அதே குறும்படம் திரையிடப்படுகிறதென்ற அறிவிப்பைப் பார்த்தேன். ஒருமணி நேரப் பிரயாணமென்பதால் கிளம்பிவிட்டேன். வழியெல்லாம் Hell's bells பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு போகையில் மனது சிறிதாகப் புலனாய்வு செய்து பார்த்தது. கடந்த மூன்று முறையும் இதே படத்தைப் பார்க்கும்போது எதையோ தவறவிட்டுவிட்டதுபோல் தோன்றியது. அதை இந்த முறை கண்டுபிடித்து விடுவேனென்றும் பட்சி உரத்துக் கூவியது.
பெருத்த ஏமாற்றமடைந்தேன். படம் திரையிடப்படவே இல்லை. கெண்டால் தனது அதே முன்னுரையை இங்கும் கூறி முடித்ததும் படம் திரையில் தொடங்கவில்லை. ஏதோ ப்ரொஜக்டரில் சிக்கல் என்றனர் என்று நினைவு. அவர்கள் கொண்டுவந்திருந்த ஒரு உபரிப் பிரதியை ஓட்டமுயன்றபோதுதான் சிக்கல் தெரிந்தது. திரையில் படம் ஏதும் வரவில்லை. பிற பிரதிகளை ஓட்டிப்பார்த்தபோது, ப்ரொஜக்டரில் இல்லை சிக்கல் என்று தெரியவந்தது. நேரம் ஆக ஆக கூட்டம் கலைந்துபோகத் தொடங்கியது. டையைத் தளர்த்தியவாறு கெண்டால் செல்ஃபோனில் யாருடனோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தான். நேரம் சரியில்லை என்று கிளம்பி வந்துவிட்டேன். பின்பு பல மாதங்களுக்கு அதுகுறித்து மறந்துவிட்டேன். சுபாவினது 0 நாளும் கழிந்தது. நான் எதிர்பார்த்ததுபோல, அந்த நாளில் அத்தனை காமெராக்களும் விஞ்ஞானிகளும், தங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைச் சொல்ல இயலாதவர்களாகவே இருந்தனர். சினையாக்கப்பட்ட அண்டம் எங்கே போனதென்று தெரியவில்லை. விந்தணுவும் சினைமுட்டையையும்கூட காமெராக்கள் படம்பிடித்திருக்கவில்லை. நான் களைப்பாக உணர்ந்தேன். சிலசமயம் முடிவுகள் நமக்குத் தெரிந்தும் அதன் வழிமுறையைக் கண்டுபிடிப்பதிலேயே காலத்தைச் செலவழிக்கிறோமென்று தோன்றியது. அந்த விஷயத்தைப் பலநாட்களுக்கு மறந்துவிட்டேன்.
* * *
எங்கெங்கோ சுற்றிவிட்டு அன்று இரவு வெகு தாமதமாக வீட்டுக்குத் திரும்பினேன். உறைகலனிலிருந்து வாட்காவை உருவி ஷாட்கிளாஸில் ஊற்றிக்கொண்டு மின்னஞ்சல்களைத் திறந்து மேய்ந்தேன். புதிதாக வந்திருந்த பத்துப்பதினைந்து மின்னஞ்சல்களுக்கு நடுவில் ஜூன்'கோ கோமியாமா என்று ஒரு பெயர். மூளையைக் கசக்கிக்கொண்டு திறந்தால்... ஓ!
"ஹலோ மாண்ட்ரீஸர், பாஸ்டனில் சந்தித்தோம், நினைவிருக்கிறதா?
"அன்றைக்குப் பார்த்த அந்த விவரணப்படத்தை மறுபடி ஒருமுறை ஓக்கினாவாவில் பார்த்தேன். வேறு சில விவரணப்படங்களையும் பார்த்தேன். சில விஷயங்களைக் கூறுகிறேன், நீ என்ன நினைக்கிறாய் என்று சொல். இங்கே டோக்கியோ பல்கலைக்கழகத்தில் என் நண்பன் ஒருவனும் சுபா குறித்த விவரணப்படமொன்றைத் தயாரித்திருக்கிறான். இப்போதைக்குக் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகின்றன. தனிப்பட்ட திரையிடல்கள் மட்டுமே. இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கே திரையிட முயன்றபோது திரையில் படம் எதுவும் வரவில்லை. சொல்லப்போனால், அந்த விவரணப்படம் ஒரு நேர்த்தியற்ற தயாரிப்பு - வெறுமனே சில புகைப்படங்கள், செய்திக்கத்திரிப்புகள், சுபா வேஷத்தில் எங்கள் தோழி ஒருத்தி என்று. அதை அத்துடன் அவனும் விட்டுவிட்டான். ஆனால், வேறு சில விவரணப்படங்களும் அதே கதிக்கு ஆளாயின. அவை வேலைசெய்யவில்லை. இது ஏதோ புரளி என்று நினைத்தேன். இங்குள்ள செய்தி ஊடகங்களுக்கு இது தெரியுமென்றாலும், வெளியிடத் தயங்குகிறார்கள். இன்னும் சற்றுநாட்களில் புரளி தானாகக் கலைந்துவிடும் என்பது அவர்கள் எண்ணம்.
"உன் நண்பன் சித்தார்த்தனுடன் பேச முயற்சிசெய்தேன், சுத்தமாகப் பேச மறுத்துவிட்டான். இன்னும் சில மாதங்களில் ஹைடல்பெர்கரை ஐரோப்பிய யூனியன், அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் நெருக்கத் தொடங்குவதைப்பற்றி உனக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அவ்வளவு பணத்தை விழுங்கிய ஆராய்ச்சியில் அவர்களிடம் மிச்சமிருப்பது கடைசி இரண்டு மாதத்துக்குள்ளான தகவல்களே"
என் மூச்சு அடைத்தது. இவளை நான் சந்தித்ததே ஒருமுறைதான், இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது என்று தெரியவில்லை. அவள் பத்திரிகைத்துறையில் இருப்பதாகச் சொன்னதாக நினைவு. தொடர்ந்து படித்தேன்.
"இதைத்தான் என்னால் நம்பமுடியவில்லை. தாள்கள் காணோம் என்கிறார்கள், கணிப்பொறிகளில் சேமிக்கப்பட்ட தகவல்களும் படங்களும் காணோம் என்கிறார்கள், இதெல்லாம் உண்மையா ஏதும் சதியா என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் பொருட்கள் காணாமற்போயிருக்கின்றன, தகவல்கள் காணாமற்போயிருக்கின்றன என்று புரளி... இது இப்போதில்லை, கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்து வருவதாகக் கூறுகிறார்கள், இதற்கு முன்பு ஆராய்ச்சி இயக்குனர்களாக இருந்த எரிக் சிங்க்ளேர், நரஹரி இருவருக்கும்கூட இந்தத் தகவல்மறைப்பில் பங்குண்டு என்கிறார்கள்.
"இதுகுறித்துத் தகவல்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன். சொன்னால் ஆச்சரியப்படுவாய், எத்தனை தகவல்கள் இதுவரை காணாமற்போயிருக்கின்றன தெரியுமா? புகைப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள், ஓவியங்கள், விவரணப்படங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள், குறுந்தகடுகள்... நான் ஜப்பானை இன்னும் தாண்டவில்லை. எனக்குச் சில ஊகங்கள் உள்ளன. எனக்கு மட்டும்தான் இந்தச் சந்தேகங்கள் உள்ளன என்று நான் நம்பத் தயாரில்லை. உன்னுடன் பேசவேண்டும்; சரியான சந்தர்ப்பங்கள் என்னவென்று பதிலிட்டு, தயவுசெய்து உன் தொலைபேசி எண்ணையும் தருவாயானால் உன்னைத் தொலைபேசியில் அழைக்கிறேன்.
-ஜூன்'கோ".
நான் கணிப்பொறித் திரையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தேன். வாட்கா பாட்டிலின்மேல் உறைந்திருந்த பனிக்கட்டித் துகள்கள் கரைந்து வழியத் தயாராயிருந்தன. என் தொலைபேசி எண்ணை அவளுக்குத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் இரண்டு வரிகளும் எழுதினேன்.
"அங்கே உனக்குத் தெரிந்து வேலைசெய்யாமல் போன விவரணப்படங்கள், திரையிடப்பட்ட எத்தனாவது தடவையில் வேலைசெய்யாமல் போயின என்றுமட்டும் விசாரித்து எனக்குச் சொல். இரவு ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வரையிலும் எந்த நேரத்திலும் நீ என்னைக் கூப்பிடலாம்.
-மாண்ட்ரீஸர்"
(திண்ணையில் அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் வந்துவிட்டன: இந்தக் கதையை அனுப்பியிருந்தேன். Busted என்பதால், சரி, ரிலீஸ் செய்துவிடலாம் என்று இங்கே இடுகிறேன்!! எழுத்துருச் சிக்கல்களைத் தவிர்த்து அனுப்ப உதவிய பி.கே.சிவக்குமாருக்கு நன்றி.)
Sunday, March 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
wow.!!!!fascinating!!! என்ன கற்பனை???.. இது போலக் களம் அமைப்பதற்கான உங்கள் கற்பனையை எண்ணி மீண்டும் மீண்டும் வியக்கிறேன். கட்டக் கடேசியில், நீங்கள் ஜூன்கோ வை, ஆறுவருடம் கழித்து நேரில் சந்திக்கிற மாதிரி வைத்து, அவருக்கு அப்போது ஆறு வயது குறைந்திருந்தது என்று ' முதுகுத் தண்டைச் சில்லிட " வைக்கிற மாதிரி கதையை முடித்திருந்தால், உங்களுக்கு முதற்பரிசு கிடைத்திருக்கும். :-). பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ஆஹா! ரொம்ப நாள் கழித்து திரில்லிங்கான ஒரு கதை. எவ்வளவு நாள் ஆச்சு, இந்த மாதிரி, கடைசி பக்கத்தைப் படிக்காமல், விவரணைகளில் கதை வளர்ந்து கொண்டு போவதை. விடுங்க. ஆடியன்ஸ் அவார்டு நாங்க தர்றோம்.
பிரகாஷ், நாராயண்: நன்றி. கிட்டத்தட்ட 80-90 பக்கங்களுக்கு 98ல், வேறு மாதிரி எழுதியிருந்த கதை இது - திரும்பப் படித்துப் பார்க்கக்கூடப் பொறுமையின்றி ஒரே சுருக்காக சுருக்கியாயிற்று! தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் என்ன மாதிரி களனைக் கையாண்டிருக்கின்றன என்று பார்க்க ஒரு curiosity - பார்க்கலாம் :-)
மாண்ட்ரீஸர் மிக விசித்திரமான கற்பனை. கற்பனைக் கதை அதுவும் அறிவியல் புனை கதை என்பதால் சாத்தியமற்ற பல கற்பனைகளை (ஒரு கிழவி எப்படி ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அவளின் நிறை உயரம் என்ன? ஸ்கானிங் மூலம் எப்படிக் கண்டு பிடிக்காமல் விட்டார்கள்) தாங்கள் புகுத்தியிருப்பினும் கேள்வி கேட்காமல் சுவாரசியமாக வாசித்து முடித்தேன். Bill Murray நடித்த "Groundhog day" படம் பார்த்தீர்களா? சில கேள்வி எழுப்ப முடியாத புனைகதையைக் கொண்டு எடுக்கப்பட்டது
//சாத்தியமற்ற பல கற்பனைகளை (ஒரு கிழவி எப்படி ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அவளின் நிறை உயரம் என்ன? ஸ்கானிங் மூலம் எப்படிக் கண்டு பிடிக்காமல் விட்டார்கள்)//
கறுப்பி, பின்னூட்டத்துக்கு நன்றி: நிகழ்தகவுகளைப்பற்றிய கேள்விகள் இதைப்பொறுத்தவரையில் தேவையா எனத் தெரியவில்லை. சம்பவங்களைக் கத்திரிக்க முயன்று, கஷ்டமாயிருக்கும் பட்சத்தில் , முறைமைசெய்யப்பட்ட சம்பவக்கோர்வைத் தண்டவாளங்களில் ரயிலை ஓட்டாமலிருக்கவாவது முயல்வதன் ஒரு வெளிப்பாட்டு artifact என்ற அளவிலான முயற்சி மட்டுமே இது! Groundhog day பார்த்ததில்லை. பார்க்க முயல்கிறேன். நன்றி.
Post a Comment