Monday, November 29, 2004

மற்றொரு அறிவியல் கதை, Goodbye!

ஜெயமோகனின் கதைகள் பல திண்ணையில் இருப்பதையே நான் இவ்வளவு நாட்களாகப் பார்க்கவில்லை. சரி, ஒவ்வொன்றாகப் படிக்கலாம் என்று மெதுவாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். அறிவியல் கதைகள் என்று அவர் இப்போது எழுதிவரும் கதைகளில் இரண்டாவது கதையை இப்போதுதான் படித்து முடித்தேன். முன்பு ஒரு பதிவில் கூறியதுபோல, இந்தக் கதையும் பெருமளவில் உரையாடல்களைக் கொண்டிருப்பது ஆயாசத்தையே அளிக்கிறது. வாசகன் என்ற விதத்தில் அறிவியல் கதைகள் குறித்த சில கருத்துக்கள் என்று எனக்குப் பட்டதைச் சொல்ல முயல்கிறேன்.

அறிவியல் கதைகள் என்றவிதத்தில் சுஜாதா தவிர அவ்வளவாக அறிவியல் கதைகளைத் தமிழில் படித்திராததால், பெரும்பாலும் ஆங்கில (அல்லது மொழிபெயர்ப்பு)க் கதைகளையே அடிப்படையாகக் கொண்டு கூறவேண்டியதாயிருக்கிறது. சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வந்தபோது நான் மிகவும் சின்னப் பையன். அதனால், படித்தது பாதி புரியும் பாதி புரியாது. லேசர் ஆன்ட்டி லேசர், பாரி சிபி, இன்னொரு நாய்க்குட்டி (பெயர் நினைவில்லை) என்று பாத்திரங்கள் மட்டும் மேலோட்டமாக நினைவிருக்கின்றன. விஞ்ஞானக் கதைகள் என்று எனக்குத் தெரிந்து சுஜாதாவைவிட்டு யாரும் எழுதியிருக்காததால், இப்போது விஞ்ஞானக் கதைகள் என்று யாராவது எழுதும்போது, எழுத்தாளரின் பின்னணியைப் பார்ப்பதும் தவிர்க்கமுடியாததாகிப்போய்விடுகிறது. மேலும், நமது கலாச்சாரம் அறிவியலுடன் எவ்வளவுதூரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தும்தான் அறிவியல் கதைகளின் தாக்கமும் அவற்றின் களன்களும் விரிவடையுமென்பது என் அபிப்ராயம். Science, New England Journal of Medicine, Nature போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் வரும் புது அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் CNNல் நமது வரவேற்பறையில் கூறக்கிடைப்பது போல சன் செய்திகள் தொலைக்காட்சியிலும் நமது பிற தொலைக்காட்சிகள் மற்றும் பிற வெகுஜன ஊடகங்களிலும் இடம்பெறுகிறதோ, எப்போது அறிவியல் விழிப்புணர்வு பெருமளவு வெகுஜன ரசனையில் இடம்பெறுகிறதோ, அப்போதே ஆராய்ச்சிகள், அதைச்சுற்றிலும் கட்டமைக்கப்படும் கதைகள், திரைப்படங்கள் போன்றவை அதிகப் பிரபலம்பெறும் என்பது என் அபிப்ராயம்.

நான் படித்தவரையில், தமிழ் அறிவியல் புனைகதைகளைப்பற்றிய பேச்சுக்கள் ஐஸக் அஸிமோவையே அதிகமாகக் குறிப்பிடுவதாகப் படுகிறது. அஸிமோவ் வெறும் விஞ்ஞான எழுத்தாளர் மட்டுமல்ல. ஷேக்ஸ்பியர் நாடகங்களைப்பற்றிய ஒரு விளக்கப்புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் (Asimov's guide to Shakespeare). மேலும், ரோபாட்டிக்ஸ் என்ற பிரிவிலேயே அவரது பெரும்பாலான பிரபலமான கதைகள் இயங்கின. சமீபகால அறிவியல் புனைவைப்பற்றி ஏனோ குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. இருநூறு வருடங்களுக்குமுன்பு, பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்திருக்கவேண்டியவன் என்று என்னை நானே கற்பனை செய்துகொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், சற்று காலத்துக்கு முந்தைய கதாசிரியர்களுடனே நிறுத்திக்கொள்கிறேன். பள்ளிக்கூடத்திலிருந்தபோது படித்த அறிவியல் புனைகதையாளர்களில் முக்கியமானவர் ஹெச்.ஜி.வெல்ஸ். அறிவியல் புனைகதைகளில் பெரும்பாலாகக் கையாளப்பட்ட மூன்று கருத்தாக்கங்கள் இவரது புத்தகங்களிலிருந்து உருவானவையே.

1) The Time machine - கால யந்திரம். இதைப்பற்றி அதிகம் சொல்ல அவசியமிருக்காது. காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பிரயாணிக்கும் கதைகள், திரைப்படங்கள் அனைத்தும் ஒருவகையில் இங்கிருந்து தொடங்கியவைதான்.
2) Invisible Man - கண்ணுக்குத்தெரியாத மனிதன். எண்ணற்ற திரைப்படங்கள். திகில், நகைச்சுவை இரண்டுக்கும் சாத்தியமுள்ள கருத்தாக்கம்.
3) The war of the worlds - பூமிமேல் வேற்றுக்கிரகப் படையெடுப்பு. மூன்றிலும் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட idea. கணக்கற்ற படங்கள், கணக்கற்ற வேற்றுக்கிரக ஜந்துக்கள், இத்யாதி.

காலப் பயணம், மறைந்துபோதல், வேற்றுக்கிரகங்கள் - ஹெச்.ஜி.வெல்ஸின் இந்த மூன்று புத்தகங்களிலிருந்தும் கிளைபரப்பிய அனைத்துப் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் காணக்கிடைக்கும் மைய ஓட்டம் - சாதாரண மனிதர்கள் அசாதாரணமான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்வது. குறிப்பாக, கால யந்திரம் கதையில், எதிர்காலத்துக்குப் போய்வந்த கதாநாயகனை சக விஞ்ஞானிகள் நம்பமறுக்கும்போது, அவனது கோட்டுப்பையில் அக்கிரகப் பெண்ணொருத்தி அளித்த மலர் ஒன்று அகப்படும். அப்போதைய பூமியில் காணக்கிடைக்காத அந்த மலரை விஞ்ஞானிகள் நம்பிக்கையின்மையுடன் பார்ப்பதுடன் அந்தக் கதை முடியும். இப்போதுவரை எனக்கு ஒரு மறக்கவியலாத உருவகமாக இருப்பது அந்த மலர். இந்த மூன்று விஷயங்களும் மிகவும் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டன என்பவர்களும் இருக்கிறார்கள். அம் மூன்று விஷயங்களில் வேற்றுக்கிரகப் படையெடுப்பு மட்டும் (எதிர்த்திசையில் - நாம்தான் இப்போது வேற்றுக்கிரகங்களுக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறோம்) தற்போதைய சூழ்நிலையில் யதார்த்தமாகிவருகிறது. Invisible man போல வல்லரசுகள் கண்ணுக்குத்தெரியாத ராணுவங்களை உருவாக்கி எதிரிநாடுகளைத் துவம்சம் செய்வது, காலயந்திரத்தில் பின்னாலோ முன்னாலோ போய் முக்கிய நிகழ்வுகளை மாற்றியமைப்பது என்றவிதத்தில் கணக்கற்ற சாத்தியங்களைத் திறந்துவிட்ட கதைகள் இவை.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட ஜூல்ஸ் வெர்னின் 'Twenty thousand leagues under the sea', 'Journey towards the centre of the earth', 'Around the world in 80 days' போன்றவை, அறிவியல் புனைகதைகள்/அறிவியல் புனைகதைகள் அல்ல என்ற விதத்தில் எப்படிவேண்டுமானாலும் வாதிடலாம். ஆனால், From earth to moon கதையில், கதாநாயகனை ஒரு பெரும் பீரங்கிக்குள்ளிருத்தி நிலவைநோக்கிச் சுடுவது போன்ற சாத்தியமற்ற கருத்துக்களும் கூறப்பட்டன. இவையனைத்தும், மேற்கத்திய அறிவியல் தழைத்து கிட்டத்தட்ட உலகம் முழுதும் பரவத்தொடங்கிய 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. மேலும், வெறும் அறிவியல் புனைகதை என்ற எல்லைகளைத் தாண்டியும் கேள்விகளை எழுப்பியவை. சொல்லப்போனால், ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் புனைகதைக் கருத்துக்களும், நிர்ணயங்களைத் தகர்ப்பதாகவும் ஊகங்களைப் புரட்டிப்போடுவதாகவுமே இருந்திருக்கின்றன. கண்ணுக்கு அனைத்தும் தெரிகிறதா, தெரியாதவனைப்பற்றி எழுது; காலம் ஓர்திசை கொண்டதா, இல்லை, முன்னும் பின்னும் போகமுடியுமென்று எழுது; ஜீவராசிகளனைத்தும் பூமியின் மேற்பரப்பில் வசிக்கின்றனவா, பூமியின் உள்ளும் ஒரு உலகம் இருப்பதாக எழுது (ஜூல்ஸ் வெர்னின் கதாநாயகர்கள் மகாபலிச் சக்கரவர்த்தியைச் சந்திப்பதாக யாராவது கதை எழுதலாமே?) என்ற ரீதியில், அனைத்தும் எதிர்-கருத்தாக்கங்களாக முன்வைக்கப்பட்டவை என்ற விதத்தில்தான் நான் படித்துள்ள அனைத்து முக்கியக் கதைகளும் தோன்றுகின்றன. எவ்வளவு காலம் ஹெச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன் என்று புலம்பிக்கொண்டிருப்பாய் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது இந்தக் கதைகள் அத்தனையையும் சித்திரக்கதைகளாகப் படித்தேன் (Paico pocket classics என்று நினைவு...), அதன்பிறகுதான் முழுப் புத்தகங்களாகப் படித்தேன். எத்தனை காமிக்ஸ் புத்தகங்கள் - முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று - அனைத்தும் வெள்ளைக்காரக் கதாநாயகர்கள்!! இந்திரஜால் காமிக்ஸில் மட்டும் அவ்வப்போது நமது கதாநாயகர்கள் வருவார்களென்று நினைக்கிறேன். முதலில் கார்ட்டூன் என்று இலக்கியக் கதைகளில் குறிப்பிட்டவர்களே வெகு குறைவு. சொல்லப்போனால், எஸ்.ராமகிருஷ்ணனின் 'புத்தரின் கார்ட்டூன் மொழி' தவிர வேறெந்தக் கதையிலும் நான் சித்திரக்கதையைப் பற்றிய ஒரு குறிப்பைக்கூடப் படித்ததில்லை!!

ரே ப்ராட்பரியின் முக்கியமான கதையொன்று ஃபாரன்ஹீட் 451 (மைக்கேல் மூரின் சமீபத்திய ஃபாரன்ஹீட் 9/11 கிட்டத்தட்ட இந்த ஐடியாவில்தான் பெயரிடப்பட்டதென்று நினைக்கிறேன்). ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), ஃபாரன்ஹீட் 451 ஐப் படமாக எடுத்திருக்கிறார். எதிர்காலத்தில், புத்தகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஒரு சூழ்நிலை. தனிமனிதர்கள், நூலகங்கள், கல்விச்சாலைகள் அனைத்திலுள்ள புத்தகங்களும் எரிக்கப்படுகின்றன. புத்தகங்களை வைத்திருப்பது தேசத்துரோகம். புத்தகங்களை எரிப்பதற்காகவே தனி 'புத்தக எரிப்புப் படை' இருக்கிறது. ஃபாரன்ஹீட் 451 என்பது, புத்தகத் தாள்கள் கருகிச் சாம்பலாகத் தேவைப்படும் வெப்பத்தைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட புத்தக எரிப்புப் படையிலுள்ள ஒருவன், தற்செயலாகப் புத்தகங்கள்மீது ஆர்வங்கொள்வதும், அதுவே அவனுக்கு ஆபத்தாக முடிவதும், இறுதியாக அவன், எதிர்ப்புக் குழுக்களிலொன்றில் போய்ச் சேர்வான். புத்தகங்களை அழிப்பதன்மூலம் அறிவை அழிக்கமுடியாது என்ற நம்பிக்கையுள்ள அந்த எதிர்ப்புக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடம் செய்துவைத்து, தாங்கள் சாகுந்தறுவாயில் இளையசந்ததியில் ஒருவருக்கு அந்தப் புத்தகத்தைப் பயிற்றுவிப்பதை விவரிப்பதுடன் புத்தகம் முடியும். இதை ஒரு அறிவியல் புனைகதை என்று கூறமுடியுமா? முடியுமென்றே தோன்றுகிறது. இந்தக் கதையில், gadgetryயின் முக்கியத்துவம் பின்னுக்குப்போய், சிந்தனையைப் புனைகதையின் மூலப்பொருளாகக் கொள்வது ஆசுவாசமளிக்கிறது.

இதேபோல, சமீபத்திய எழுத்துக்களில், மைக்கேல் க்ரிக்டனின் பல புத்தகங்களும் (முன்பொரு பதிவில் இவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்) வெகுஜன ரசனையை முன்னெடுத்துச் செல்வதாகவே இருக்கும். ஜூராஸிக் பார்க் போன்ற வெற்றிகரமான படங்களாக்கப்படும்போது, சாமானிய வாசகனுக்கும், பார்வையாளனுக்கும்கூட, DNA, Paleontology, dinosaurs என்ற ரீதியில் rudimentary science புகட்டப்படுகிறது. அதற்குமேல் அவற்றைப் பின்தொடர்வதும் விட்டுவிடுவதும் அவரவர் இஷ்டம். அறிவியல் புனைகதைகள் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் கூறமுடியாது என்றாலும், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுவது நிஜம்தான். சுஜாதாவைத் தாண்டியும் அறிவியல் கதைகள் யாராவது எழுதினால் நன்றாயிருக்கும். மேலும், அறிவியல் கதைகளின் நம்பகத்தன்மைக்கும் வாசக ஈர்ப்புத்தன்மைக்கும் அதன் details (தகவல்நுணுக்கம்) மிக முக்கியம். அழகாக தகவல் ஃப்ரேம் அடிக்கப்பட்ட கித்தானில்தான் அறிவியல் கதை நன்றாக இருக்கும். அதையும் தாண்டிய அறிவியல் கதைகள் என்பது எனக்குத்தெரிந்து வேறெங்கும் இல்லை, அல்லது குறைந்தபட்சம் நானாவது படிக்கவில்லை. தகவல்களின் நுண்மையைத் தீண்டத்தகாதது போல் கருதாமல், கருத்தாக்கங்களை வலுப்படுத்தும் சாரங்களாக அவற்றைக் கொள்வது வரவேற்கத்தக்க ஒன்று என்றால், ஜெயமோகனின் இந்தக் கதையில் நான் காணாதது அது ஒன்றே. சலிப்புத்தரும் தகவல் பொதுப்படைத்தன்மை, உள்ளொளி, பயிற்சி போன்ற வார்த்தைகளின் redundancy (கதையிலல்ல, பொதுவில்), கதையை விழுங்கி ஏப்பம்விடும் உரையாடல்கள் போன்றவை. இதைவிட, ஜெயமோகனின் 'திசைகளின் நடுவே' தொகுதியில் உள்ள ஒரு கதையை (பெயர் நினைவில்லை) இதைவிடச் சிறந்த அறிவியல் புனைகதை என்று கொள்ளலாம். ஏன், அவரது மிகச்சிறந்த கதைகளில் ஒன்றான 'டார்த்தீனியம்' ஐக்கூட நான் படித்தகாலத்தில் அறிவியல் கதையாகவே பாவித்தேன். மிக அற்புதமான கதை அது.

பின்பு ஒருநாள் இதைத் திருத்தி எழுத முயலலாம் (சொல்லிவைத்தால் போகிறது, எழுதாவிட்டால் யார் கேட்பார்கள்?!?!). வேறு வேலைகள் வேறு கழுத்தைப் பிடிக்கிறதால்......

கடைசியாக ஒரு சொல். புனைவு, நிஜம் என்பதை முடிந்தளவு திருகிக் காயப்போடும் ஒரு கதையைப் படிக்க விருப்பம் இருந்தால், 'Tlon, Uqbar, Orbis Tertius' என்ற கதையைப் படித்துப் பார்க்கவும். அக்கதையை ஒரு குறிப்பிட்ட genre க்குள் அடைக்கமுடியாது. தத்துவங்களைப் புனைவின் கயிறுகளால் இறுகப் பிணைத்து மூச்சுத்திணறவைப்பதாக நான் கருதியவற்றுள் முக்கியமான ஒரு கதை அது.

2 comments:

Venkat said...

நண்பரே,

>ஸ்டானிஸ்லா லெம் (Stanislaw Lem) என்ற போலந்து நாட்டு எழுத்தாளரின் முக்கியமான கதையொன்று ஃபாரன்ஹீட் 451

ஃபாரன்ஹீட் 451 ஐ எழுதியவர் ரே ப்ராட்பரி. ஸ்டானிஸ்லா லெம் - Memoirs Found in a Bathtub ஒடுக்குமுறையை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார். - வெங்கட்

சன்னாசி said...

மன்னிக்க வெங்கட்,
ஃபாரன்ஹீட் 451 எழுதியது ரே ப்ராட்பரி தான். Solaris ஐ நினைத்துக்கொண்டே 451 பற்றி எழுதியதில் வார்த்தை தவறிவிட்டதென்று நினைக்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன், திருத்திவிட்டேன்.