Friday, November 05, 2004

நான் எழுதிய ஒரு கதை

இணையத்தில் இலக்கியமென்று எதுவும் படைக்கப்படுவதாக நான் கருதவில்லை.

இதைப் படித்தபோது, சரி, சும்மா கமெண்ட் எழுதிச் சாவதைவிட, 'இணைய இலக்கிய'த்துக்கு அடிக்கல் நாட்ட நாம் முதலில் ஒரு கதை எழுதி வைப்போமே என்று தோன்றியது! இதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்களா அல்லது பகடியாகக் கொள்கிறீர்களா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன். இது தமிழில் எழுதப்பட்ட கதை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


ஆணும் பெண்ணும் சொன்ன கதை
-மாண்ட்ரீஸர்


ஒரு கதை எழுதலாம் என்றுதான் முதலில் முதலில் நினைத்திருந்தான். நடந்து நடந்து தன் கைகள் மிகவும் பலவீனப்பட்டுவிட்டபடியால் நிசாத் தனது காலால் கதைசொல்லவேண்டியதாகிப்போயிற்று. அவன் சிகரெட் புகைப்பதில்லை என்பதால் அவனுக்கும் சேர்த்து நான் புகைத்துக்கொண்டிருக்கும் காலங்களிலொன்றில் அவனது கால் பின்வரும் கதையை எனக்குச் சொன்னது. நாங்கள் ஒரு மரத்தினடியிலிருந்த சிமெண்ட் திண்டிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருந்ததால், வழிந்தோடும் கதை திண்டின் கீறல்களில் சிக்கிக்கொள்ளும். அதைக் கவனமாகப் பிய்த்தெடுக்கும் நான், அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் - கீறல்களில் சிக்கிக்கொண்ட துகள்களையும் துளிகளையும்பற்றி அலட்டிக்கொள்ளுமளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல என்று நினைக்கிறேன்.

தனது சட்டைப்பையிலிருக்கும் பிள்ளையாரைத் தினமும் பிரார்த்தித்து முடித்தபின் ஆமென் சொல்லும் வசீகரமான பழக்கத்தால்தான் அன்று அந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டானென்பது என் அபிப்ராயம். அன்று காலையில் அவன் எழுந்தபோது உறக்கம் கலைந்து அருகில் எழுந்த என் கண்ணில் முதலில் பட்டது அவன் முகத்தடியில் நசுங்கிக்கிடந்த நீல மலர். அதன் சுருக்கங்களை நீவிவிட்டுக்கொண்டிருந்தபோது அவனது பிரார்த்தனை தொடங்கியிருந்தது. தலைமுடியின் ஈரம் இன்னும் காய்ந்திராமலிருக்க, அதன் கருமையை வெறித்தவாறிருந்தேன். நிசாத் என்னை அழைத்துக்கொண்டிருந்தானென்று விளங்கச் சிலநேரம் ஆனது. முதலில் தென்பட்டது அவனது அசையும் உதடுகள் தான். பூனைமயிரை எனது பார்வையிலிருந்து சவரம் செய்தெறிந்தேன். அவனது பெரிய ரோஜாநிற உதடுகள் அசைந்துகொண்டிருந்தன - "என் கண்களைத் திறக்கமுடியவில்லை". எழுந்து படுக்கையில் அமர்ந்தேன். "பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன், ஆமென் சொல்லி முடித்தபின் கண்களைத் திறக்கமுடியவில்லை, ஆனால் அனைத்தையும் பார்க்கமுடிகிறது" என்றான், என்னைப் பார்த்தவாறு. அவனது இமைகள் மூடியிருந்தன.

நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவாறு அவனைப் பார்த்தேன். "என்னைப் பார்க்க இன்று உனக்கு இஷ்டமில்லையென்றால் சொல், போய்விடுகிறேன்". அதில்லை என்றான், அவனது இமைகள் இன்னும் மூடியேயிருந்தன. சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்து அவனுமொன்று பற்றவைத்துக்கொள்ள, நான் அவனையே பார்த்தவாறிருந்தேன். "ஒத்திகை செய்வதில் உன்னை வெல்ல ஆளில்லை" என்றேன். அவன் உதட்டோரத்தில் ஒரு புன்னகை நெளிந்தது. நான் சொல்வதை இன்னும் நீ நம்பவில்லை என்றான். இதைப் நான் பற்றவைத்தது முன்பே ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும், என் கண்களைத் திறக்கமுடியவில்லையென்பது பொய்யாகவும் உனக்குத் தெரிகிறது என்றான், புகையை வெகு சரியாக என் முகத்தில் ஊதியவாறு. "இது நீயென்று நம்பமுடியவில்லை". அந்த நீல மலரின் சுருக்கம் இன்னும் போனபடியாயில்லை, நீவிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுருக்கம் நீங்காது என்றான். "அந்த மலரை நான் கசக்கிவிட்டபடியால்தான் எனக்கு இந்தத் தண்டனை என்று நினைக்கிறேன்". "உனக்கென்ன தண்டனை. அனைத்தும் தெரிகிறதல்லவா, பிறகென்ன" எனது விரல்கள் இன்னும் அழுத்தமாக மலரை நீவத்தொடங்கின. "அதைக் கொன்றுபோடப்போகிறாய்". "துணியைக் கொல்லமுடியாது" என்றேன், எரிச்சலுடன்.

"நாள்முழுவதும் அறைக்குள்ளேயே கிடக்கப்போகிறோமா?"

"தவறில்லை. வெளியே போய் நீ கைகாலை உடைத்துக்கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. உன் கண்கள் திறந்தபின் வெளியே போகலாம்."

"சொன்னேனே, இது ஒரு தண்டனை. சொல்லப்போனால், பிரார்த்தித்து முடித்தபின் சில வினாடிகளுக்கு என் கண்கள் திறந்திருந்தன."

நான் அவனையே பார்த்தவாறிருந்தேன். என்ன அப்படிப் பார்க்கிறாய் என்றான். இதுபோல் முன்பு எனக்கு நிகழ்ந்ததில்லை, பின்பு உன்னை எப்படி நம்பவைப்பதென்று எனக்கெப்படித் தெரியும்?

"உண்மை, பிரார்த்தித்து முடித்தபின் பிள்ளையாரைச் சற்றுநேரம் பார்க்கமுடிந்தது, அதன்பின்னும் பார்க்கமுடிகிறது, ஆனால் என் கண்கள் மூடியிருப்பதை உணர்கிறேன். இதை நீ நம்புகிறாயென்று தெரிகிறது, ஆனாலும், நம்ப இன்னும் சிறிது நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள். இதுதான் உண்மை. வெளியில் போய்க்கொண்டே பேசலாம்" என்று உடுத்திக்கொண்டான். தலையை உதறியவாறு கிளம்பினேன். பைக் தெருவில் போய்க்கொண்டிருந்தபோதுகூட அவன் கண்கள் திறந்திருக்கவில்லை. ஆனாலும், சாலையைப் பார்க்கமுடிகிறது என்றான், சரியாகவே ஓட்டிக்கொண்டிருந்தான். மோதிச் செத்துவிடுவோமென்ற பயம் இல்லாதபோதும், மோதிவிடுவோமோ என்ற சின்ன அச்சம் இருந்ததுமட்டும் நிஜம். புனித ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்குள் வண்டி திரும்பியது. குடிசைகளிலிருந்து மீன் வறுக்கும் வாசனை வந்துகொண்டிருக்க, வாசனையாவது பார்க்கமுடிகிறதா உன்னால் என்றேன்.

"இந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம். எனது புலன்களனைத்தும் சரியாகவே உள்ளன. அபத்தமாக யோசிப்பதை முதலில் நிறுத்தித்தொலை. கட்டிட வாசல் முகப்புக்கருகில் பதினாறு பேர் நிற்கிறார்கள், உன் வலது ஷூவில் லேஸ் அவிழ்ந்திருக்கிறது..." கண்களை மூடியவாறு எண்ணினான், "நாற்பத்துமூன்று பைக்குகள் நிற்கின்றன - நம்முடையதையும் சேர்த்து, அர்ச்சனா இன்னும் தன் குடிசை வாசலுக்கு வரவில்லை, இங்கிருந்து பார்த்தால் ஏழு மீன்பாடி வண்டிகள். உண்மையில் இது தண்டனை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை, நன்றாகத்தான் உள்ளது, இன்றைக்குப் புல்லைக் கத்திரித்திருக்கிறார்கள், பஸ் ஸ்டாப்பில் ஒருவர்கூட இல்லை...பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு அலுப்பாக இருக்கிறது. புதிதாகச் சொல்வதற்கென்று ஏதாவது இருக்கிறதா என்ன?"

அன்றைக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் எங்கள் பொழுதைக் கழித்தோம். சனிக்கிழமைக் காலை கேட்பாரற்று உருகித் தெருக்களில் ஓடியது. நிசாத்தின்மேல் எனக்குப் பரிதாபமேதும் தோன்றவில்லை. எங்களைக் கடந்துசென்றவர்கள் அவனைப் பார்த்தார்களா என்பதை மறந்துவிட்டேன். பார்த்தவர்களுக்குமென்ன. ஒருகணம் மூடியிருக்கும் யாரோ ஒருவனது கண் அவர்கள் வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது. மரங்களின் நூறுவிதப் பச்சைகளை, கடந்துசென்றவாறு என்னை வெறித்த ஆண்களை, எனது பாதத்தை, எனது கலைந்துகிடக்கும் முடியை, என் சாயம்போன ஜீன்ஸை, எனது நெளிந்த தாமிரக் கைவளையத்தை, ஆடிக்கொண்டிருக்கும் பைக் கிக்கரை, வெறும்நெற்றியுடன் சென்ற பெண்களின் வசீகரத்தை...ஜே.டி.சாலிஞ்சர் போலப் பட்டியலிடுவதை எப்போது என்னால் நிறுத்தமுடியுமென்று தெரியவில்லை. என் பாதம் புல்லில் மெதுவாக இடவலமாக அசைந்துகொண்டிருந்தது. நானும் நிசாத்தும் பேசிக்கொண்டுதானிருந்தோமென்றாலும், இன்று ஏதோ என்னையே நான் அதிகமாகப் பார்த்துக்கொண்டிருந்தாற்போல் பட்டது. கிளம்பலாமா என்றேன்.

நிசாத்தும் நானும் பள்ளியிலிருந்து ஒன்றாக இருக்கிறோம். நான் சொன்ன மரத்திண்டு எங்கள் பள்ளியில்தான் இருக்கிறது. நாங்கள் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தபோது வெயில் நன்றாக ஏறியிருந்தது. இன்னும் கண்களை மூடிக்கொண்டுதான் ஓட்டிக்கொண்டிருந்தான். எங்களுக்கடியில் நழுவும் தார்ச்சாலைகளில் என் முகத்தை வைத்துத் தேய்த்துவிடலாம். எங்கெங்கு உன்னை வெயில் தொடுகிறது என்றேன். உன்னைத்தவிர மற்ற இடங்களிலெல்லாம் என்றான், நான் புன்னகைத்தேன்.

அவனை இறுக்கிக்கொண்டேன். இன்னும் கண்ணைத் திறக்கமுடியவில்லையா என்றேன். இல்லை என்றான்.

"இதைக் கதையாக எழுதப்போகிறேன்."

"இந்த நிஜம் எனக்குப் புரியவில்லை, ஒருவேளை கதையாக நீ எழுதிப் படித்தால் விளங்குமோ என்னவோ."

"இதைப்பற்றி யோசிக்கத் தோன்றவில்லை உனக்கு?"

"அதுதான் அனைத்தும் தெரிகிறதே, கண் மூடியிருந்தால் என்ன? நீ எழுதாமல் இதை மாண்ட்ரீஸர் எழுதினால் எப்படியிருக்குமென்று யோசித்துப்பார்!"

படீரென்று இருவரும் சிரித்துவிட்டோம். இரண்டு கைகளையும் அவன் உயர்த்திச் சிரித்ததில் பைக் நிலைதடுமாறி ஆட்டோவொன்றை உராய்ந்துகொண்டு சென்றது. பின்னால் உட்கார்ந்தவாறு நான் வாய்விட்டுச் சிரித்ததை மற்றொரு ஆட்டோ பொறாமையுடன் பார்த்துக்கொண்டு சென்றது.

"யார் சொன்னது இன்றைய கதையை?"

"நீதான்".

4 comments:

writerpara said...

>>>இன்னும் கண்களை மூடிக்கொண்டுதான் ஓட்டிக்கொண்டிருந்தான். எங்களுக்கடியில் நழுவும் தார்ச்சாலைகளில் என் முகத்தை வைத்துத் தேய்த்துவிடலாம்

:)

Kasi Arumugam said...

சரி, அடுத்து எங்களைப் போல சிற்றறிவு ஜீவன்களுக்குப் புரியற மாதிரி ஒண்ணு...
-காசி

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...

மன்னித்துக்கொள்ளுங்கள் காசி, இன்னும் சிறிது காலத்துக்கு நான் ரிஸ்க் எடுப்பதாக இல்லை!! அதுதான் எனக்கும் நல்லது, அனைவருக்கும் நல்லது! Wink wink!! (ஆதித்தனார் மாதிரி ஆச்சரியக்குறிகளாகப் போட்டுத்தள்ளிவிட்டதற்கு மன்னிக்க!!!)