Tuesday, November 16, 2004

தேவதச்சன் கவிதைகள்

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
-தேவதச்சன்

மிகவும் அபூர்வமாக எழுதும் தேவதச்சன், எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர். பிற கவிதைகளுக்கு இப்போதைய காலச்சுவடு பார்க்க. மிக நுட்பமான கவனிப்பு, மிக அபாயமற்ற வார்த்தைகளினூடே மின்னி மறையும் ஒருகணத் தெறிப்பு (இக்கவிதையில் 'இன்னொரு பகலில்') என்று எத்தனையோ கவிதைகள் உள்ளன. என் முந்தைய பதிவுகளில் ஒன்றில்கூடக் குறிப்பிட்டிருப்பேன் - அவரது ஒரு கவிதை, ஒரு ஓவியத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைக்கும் ஓவியத்துணிக்குமிடையிலுள்ள இடைவெளியைப்பற்றிப் பேசும். சுலபத்தில் என்னால் மறக்கவியலாத ஒரு உருவகமாக அமைந்துவிட்டது அது. அந்த இடைவெளியைத் தேடித்தானே உலகம் நாயாய் அடித்துக்கொண்டிருக்கிறது? நான், நீ என்று விளித்து எழுதப்படும் நூறு கவிதைகள் தரும் அலுப்பை இம்மாதிரிக் கவிதைகளில் ஒன்றேயொன்று ஒரு சொடக்கில் நீக்குகிறது.

'நான் நீ'க் கவிதைகளின் மனவியல், நிகழ்பரப்புக் குறுக்கத்தை (சில கவிதைகள் விதிவிலக்கு என்பது உண்மை) அதை எழுதுபவர்களே உணர்ந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு 'கடைசி வரி பஞ்ச்' வேறு தவிர்க்கமுடியாமல் இருந்துபோகிறது!!

No comments: