இதை எத்தனைபேர் கவனித்திருப்பீர்களென்று தெரியவில்லை. சுபம் பிரகார் தான் இந்தியாவின் மேதாவி மாணாக்கர் என்று ரிடிஃப்பில் செய்தியைப் படித்தபோது, சரி சற்றுப் பின்னே போகலாமென்று படித்தேன். முதல் பரிசு பத்து லட்சம் ரூபாய்கள்! நடத்தியவர் சித்தார்த்த பாசு என்பதால், ஏதோ மேம்போக்கான அறிவுப்போட்டியாக இருக்காது என்று தோன்றினாலும், இந்தப் போட்டி இன்று முடிவடைந்தது, ரிடிஃப்பில் படித்ததுதான் இதைப்பற்றி எனக்குத் தெரிந்த முதல் செய்தி என்றும் முதலில் கூறிவிடுகிறேன். மற்றப்படி நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவேயில்லை என்பதால் வேறு விவரம் ஒன்றும் தெரியவில்லை. சென்ற வருடமும் இதுபோல நடந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை. வேறு யாரேனும் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருந்தாலோ மேலும் அதிக விவரம் அறிந்திருந்தாலோ எழுத முயலலாமே?
இதைப் படித்ததும் முதலில் தோன்றியது, எத்தனை பேர் எப்படியெப்படியெல்லாம் என்னை மேதாவியாக்க முயன்றிருக்கிறார்கள் என்பதுதான். எப்போதும் முதல் ராங்க் வரவேண்டுமென்று ஒரு ஆர்வம் அனைத்துப் பெற்றோருக்கும். பிற ராங்க்குகளெல்லாம் எங்கே போவது? Dead poets society என்று ஒரு படம் உள்ளது - அதன் கதை போல நமது ஊரில் எத்தனை நடக்கிறது? ஒருகாலத்தில் கல்லூரி வந்தபின்னும் என் வீட்டில் முதல் இடம் பற்றி விசாரித்தார்கள். அதெல்லாம் நமக்கெதுக்கு என்று ஜாலியாக இருந்த காலம். விசாரிப்பு அதிகமாகிக்கொண்டே போக, ஒருநாள், "இதோ பாருங்க, ஒரு இஞ்சின் பத்து கம்பார்ட்மெண்ட் இழுக்கமுடியும்னா பத்துதான் இழுக்க முடியும், இருபது கம்பார்ட்மெண்ட்டை மாட்டினா இஞ்சின், கம்பார்ட்மெண்ட் எல்லாம் சேர்ந்து கவுந்துபோயிரும்" என்றேன் தத்துவார்த்தமாக. சரி, அதிகப்பிரசங்கித்தனத்தில் முதல் ராங்க்குதானென்று அதற்குப்பிறகு நாகரீகமாக ஏதும் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்.
உபயோகமாக எத்தனை விஷயங்கள் செய்திருக்கலாம் என்று நினைக்கையில், தவறெல்லாம் நம்மீதுதானிருக்குமே தவிர, பிறர்மீதிராது. கொலம்பஸ் ஆவதற்குப் பதிலாக நான் புலம்பஸ் ஆனேனென்றால் அதற்கு முழுக் காரணமும் நானே. ஒரு சின்னக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். கல்லூரியிலிருந்தே எடுத்துக்கொள்வோம்; கல்லூரி மத்தியிலிருந்து, சமீபத்தில் புகையை நிறுத்தியவரை (குறைத்தது என்று கொள்ளலாமே...), ஒரு நாளைக்கு 20 சிகரெட்கள் என்று கணக்குப் போட்டால், 43800 சிகரெட்டுகள்! ஒரு சிகரெட் உத்தேசமாக 7 நிமிடங்களை ஆயுளில் குறைக்கிறது என்றால்... வாழ்க்கையில் 213 நாட்கள் புகையாக வெளியேறியிருக்கின்றன! ஒரு சிகரெட்டைப் புகைக்க 3 நிமிடங்கள் என்றால், புகைக்கச் செலவான நேரமே 2190 மணி நேரங்கள்! இவ்வளவு நேரத்தில் மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மன் கற்றுக்கொண்டிருக்கலாம், அலையான்ஸ் ஃப்ரான்ஸேயில் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டிருக்கலாம், அல்லது நிஜமாகவே இருபது கம்பார்ட்மெண்ட்டுகளை இழுக்க முயன்றிருக்கலாம்!! எலூர் நூலகத்தில் இன்னும் பல புத்தகங்களை உண்டு செரித்திருக்கலாம்....எத்தனை விஷயங்கள்!! இது புகைக்கு மட்டும். பிறவற்றுக்கு எங்கே போவது!
எதையாவது படிக்கலாம் என்று ஸ்வெலபில்லின் ஒரு புத்தகத்தைத் தேடிப் போனால், காணோம். சரி என்று பக்கத்திலுள்ள புத்தகங்களைப் பீராய்ந்துகொண்டிருந்தபோது பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian or South-Indian family of languages)' சிக்கியது. சரி, ஏகப்பட்ட மேற்கோள்களில் இதைப் பார்த்திருக்கிறோமே, படிக்கலாமென்று எடுத்து வந்து ஒரு நாற்பது பக்கங்கள் இப்போதுதான் படித்திருக்கிறேன். முப்பத்தேழு வருடங்கள் தமிழைப் படித்திருக்கிறார் என்றது முன்னுரை. உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான், மதமாற்றத்துக்கு மொழி ஒரு அவசியம் என்றிருந்தாலும்கூட. இப்போதைய அளவு அறிவியல் இறுக்கம் அப்போதுள்ள மொழியியல் ஆராய்ச்சியில் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை என்றபோதிலும், தமிழர்கள் குறித்து அவர் கூறும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் நாம் கவனித்துக்கொள்ளவேண்டும்!! புத்தகம் இப்போது என்னருகில் இல்லாததால், உத்தேசமாக எழுதுகிறேன்..
//எந்தெந்த இடங்களிலெல்லாம் aristocratic மற்றும் சிரத்தையற்ற மனோபாவமுடைய ஜனங்கள் இருக்கிறார்களோ, அங்கு கிரேக்கர்கள், ஸ்காட்டியர்கள் போலத் தெற்கத்திய உலகின் தமிழர்கள் போவார்களேயாயின், கடைசியில் அவ்விடத்து மக்களை eject செய்துவிட்டுத் தங்களை ஸ்தாபிதம் செய்துகொள்வார்கள்//
//இரண்டாயிரம் வருடங்கள் சமஸ்கிருதத்துக்குத் தென்னிந்திய மொழிகள் தாக்குப்பிடித்துவிட்டதால், இனி வேறெந்த மொழியும் இம்மக்களுக்குத் தாய்மொழியாக வாய்ப்பே இல்லை// (இதைப் படித்ததும் மயிர்கூச்செறிந்தது..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... வாழ்க மஞ்சத்துண்டு மாணிக்கம்!!)
//சமஸ்கிருதத்திலிருந்து தென்னிந்திய மொழிகள் கடன்வாங்கியிருப்பதுபோல, சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் நோக்கிய பரிமாற்றமும் இருந்திருக்கக்கூடும், ஆனால், வலிமையான உடல்வாகுடைய ஆரியர்களின் மொழி, முரட்டுத்தனமான (rude) தென்னிந்தியர்களின் மொழியை விடவும் பண்பட்டவையாகவே இருந்திருக்கக்கூடும், திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்துக்குப் போய்ச்சேர்ந்த சொற்கள் பெரும்பாலானவை, அப்போதைய இந்தியப் பிரதேசத்தின் செடிகள், மிருகங்கள், உணவுவகைகள் போன்றவற்றைக் குறிக்கும் சொற்களாகவே இருக்கும்//
//திராவிட மொழிகள், விஞ்ஞானம், அறிவுத்துறை போன்றவற்றில் பயன்படுத்தும் சொற்களில் சமஸ்கிருதக் கலப்பிருப்பது, அத்துறைகளில் சமஸ்கிருதத்தின் superiority ஐ உணர்த்துகிறது//
இதுபோன்று ஏகப்பட்ட விஷயங்கள், உண்மைகள், ஊகங்கள், இத்யாதி. அப்போது மாக்ஸ் ம்யுலர் போன்றவர்கள் பிரஸ்தாபித்த ஆரியப் படையெடுப்புக் கருத்தை அடிப்படையாகக்கொண்ட ஏகப்பட்ட ஊகங்கள். ஆனால், ரஷ்ய ஸ்டெப்பிப் பிரதேசங்களிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஆரிய மக்கள், இந்தியா வந்து சேருமுன்பே தங்களது மொழியை, வேதக் கலாச்சாரத்தை உருவாக்கி, அதை ரஷ்ய, மத்திய ஆசியப் பிரதேசங்களில் எங்கும் ஒரு துளி கூடச் சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து, இந்தியா வந்தபின்பே கட்டவிழ்த்துவிட்டனர் என்பதைமட்டும் மறுபேச்சேயில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன்! wink wink!! ஹி ஹி!! இதைப்பற்றி மேலும் பேசுமளவு நமது சிற்றறிவில் சரக்கில்லை என்பதால், மொழி பற்றி கால்டுவெல் கூறுவதை விட்டுவிட்டு இதிலென்ன ஆர்வம் என்றால் - அடிப்படைச் சிக்கலே அதுதான்.
நிபுணத்துவமற்ற ஒரு விஷயம் பற்றிப் படிக்க முயல்கையில், ஒரு கட்டத்துக்குப்பின், குறைந்தபட்ச நிபுணத்துவம் கொண்டதாக நாமே நம்மைத் தட்டிக்கொடுத்துக்கொண்டு, அபிப்ராயங்கள் சொல்லத் தயாராகிவிடுகிறோம் (நான் இந்தக் கணக்கில் சேர்த்தியில்லை என்பவர்கள், ஓம் ஓம் என்பதை ஏன் ஏன் என்று மாற்றிப் படித்துக்கொள்க!). Jack of all trades, King of nothing என்ற பொருளில் மிகவும் மலினமாக்கப்பட்ட இந்த அறிவுச்சேகரம் எதற்கு உபயோகப்படும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வதற்காகவாவது இப்படி எழுதிப்பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். கால்டுவெல்லின் புத்தகத்தை சொல்லப்போனால் ஒரு புனைகதை, ஒரு புதினம் போல்தான் படிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு மொழியியல் மாணவன் அல்ல, என்னால் அதை அப்படித்தான் படிக்க முடியுமென்று நினைக்கிறேன். Pleasure of reading, vanity of mastering இரண்டுக்குமிடையில் தேர்ந்தெடு என்றால் (அந்தப் பிரயோகம் காப்பியடித்தது...) முன்னதையே ஏனோ தேர்ந்தெடுக்கத் தோன்றும். பின்னது நிபுணர்களுக்கு. அதனால்தான் வினோதமாக இருக்கிறது. அது அறிவுச்சேகரம் அல்ல, பின்பு மேற்கோள் காட்ட உபயோகப்படும் குறிப்புக்களாக இல்லாமல், நடந்துசெல்லும் பாதையின் ஆயிரக்கணக்கான புற்களிலொன்றாக, கற்களிலொன்றாக, யாம் விரும்பும் பெண்ணின் பற்களிலொன்றாக(உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், மன்னிக்க!!)க் கொள்ளலாம்தான்.....
'புரிகிற, புரியாத எழுத்துக்கள்' குறித்து ஏகப்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள், கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்...ஏதாவது ஒருநாள் அவற்றுக்குப் பொறுமையாக உட்கார்ந்து பதில் எழுதலாமென்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், சமயம் வாய்ப்பதில்லை. 'புரியாத எழுத்துக்கள்' என்று ஏதாவது உள்ளதா என்ன? 'எனக்குப் புரியாத எழுத்துக்கள்' என்று வேண்டுமானால் இருக்கலாம். அதேதான் மற்றதற்கும் என்பது என் அபிப்ராயம். கால்டுவெல்லின் புத்தகத்திலும் சிலது புரிவதில்லை, சிலதை வரிசைப்படி படிப்பதில்லைதான். ஆனாலும் அதைப் படிக்கமுடிகிறது. வாசக வலிமையின் அதி அதீத அனுபவம், புத்தகத்தைத் திறக்காமலே புத்தகத்தைப் படித்து முடித்துவிடமுடிவதுதானென்று நினைக்கிறேன்! அந்தமாதிரி ஏதோ ஒரு புத்தகத்தை முயன்று பார்க்கச் சிபாரிசு செய்யுங்களென்றால் 'A complete idiot's guide to being useful to the world' போன்ற புத்தகங்களை அன்பளிப்பாகப் பெற்றுவிட வாய்ப்பிருப்பதால்...இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். சில மாதங்கள் கழித்து, பரீட்சைத் தொல்லைகள் முடிந்தபின்பு புரியுதா புரியலையா என்பதை ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுத முயல்கிறேன்.
ஆகமொத்தம், பரிசு பெற்ற சுபம் பிரகாருக்கு வாழ்த்துக்கள். உன் புண்ணியத்தில் இன்று ஏதோ எழுதினேன்... சற்று soul-search செய்தேன். எழுதநினைத்தது, மேதாவித்தனத்தை அளக்க ஏதாவது வழிமுறைகளிருக்கிறதா என்று. உண்மையில், மேதாவித்தனம் என்பதே ஒரு nebulous விஷயமாகப் படுவதால் (அதாவது, நம்மை மேதாவி என்று நிரூபணம் செய்ய உதவும் ஒரு வழிமுறை இருந்தால், அதை உடனடியாக அங்கீகரித்துவிடுவோமென்பது வேறு விஷயம்!!), சரி, இதுவும் ஒரு reality show போலத்தான் என்று கொள்ளலாம். ஆனாலும், அச் சிறுவர்களின் மகிழ்ச்சிதானே இதில் முதல் விஷயம். பரிசென்ன, பாராட்டென்ன, எல்லாம் பின்புதான்.... குழந்தையின் சிரிப்பில் கடவுளைக் காணமுடியுமென்பது உண்மைதான்.
4 comments:
மிதக்கும் படகில் ஏறி உட்கார்ந்துவிட்டு, துடுப்பை தண்ணிக்குள் விட்டுவிட்ட மாதிரி இருக்கு.
திரு.மூக்கன்,
:-) நல்ல கமெண்ட் உங்களுடையது. துடுப்புப் போட்டுக் கரைசேர்பவர்களைவிட, துடுப்பிழந்து கையால் துடுப்புப்போட்டுக் கரைசேர்பவர்களை இன்னும் பெரிய heroக்களாக உலகம் மதிக்கும்! (பின்னொருகாலத்தில் அரசியலில் சேர்ந்தால், இப்போதே இந்தமாதிரி பேசிப் பார்த்துக்கொள்வது மிக உதவியாக இருக்கும்!!) படகிலேயே ஓட்டை இருக்கிறதென்று சொல்லியிருந்தீர்களானால் இன்னும் தமாஷாக இருந்திருக்கும்!
boat is in the ground, river is dry :)
Honest Write up :-)
Post a Comment