Tuesday, November 02, 2004

அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஜூரம் முழுவேகத்தில் இருக்கிறது. இதை நீங்கள் படிக்கும்போது பெரும்பாலாக

1) தெளிவான முடிவு தெரிந்திருக்கலாம்
2) போனமுறை போல இழுபறியில் முடிந்திருந்தால், தனது தேர்தல் முறையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகும்
3) இது இரண்டும் இல்லாமல் மூன்றாவதொரு ரகமாக முடிவு வந்து, நீங்கள் என்ன யூகிப்பது என்று நம் முகத்தில் முடிவுகள் கரியைப் பூசலாம்.

இங்கே என்னைச் சுற்றியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கெர்ரிக்கு ஓட்டளித்தவர்களே. சற்று நாள் முன்புவரை நான்கூட புஷ் தான் மறுபடி ஆட்சிக்கு வருவார் என்று நினைத்திருந்தேன்; ஆனால் கடைசிநேரத்தில் ஓட்டளிக்கப் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை கூரையைப் பிய்த்துக்கொண்டு எகிறுவதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுவதாலும், புதிதாகப் பதிவுசெய்துகொண்டு ஓட்டளிப்பவர்கள் பெரும்பாலும் ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராகவே ஓட்டளிப்பார்கள் என்ற மரபுசார்ந்த யூகமும், கெர்ரிக்குச் சற்றுத் தெம்பளிப்பதாகவே உள்ளது. அதாவது, வெற்றி என்றாலும் பெரும் வெற்றியாக இருக்கப்போவதில்லை, தோல்வி என்றாலும் மிகப்பெரும் தோல்வியாக இருக்கப்போவதில்லை. கிட்டத்தட்ட நம் ஊர் போல, படித்தவர்கள் பெரும்பாலும் கெர்ரிக்கும், குறைந்தளவு படிப்பறிவுள்ளவர்கள் புஷ்ஷுக்கும் (அல்லது தினமலர் ஸ்டைலில் புஷ்சுக்கும்) வாக்களிக்கிறார்கள். தேர்தல் தினமான இன்று கூட பிரச்சாரங்கள் நடக்கின்றன - இதைவிட, நம் வழிமுறையான - சில வாரங்களுக்கு முன்பே பிரச்சாரங்களை நிறுத்திவிடுவது எனக்குச் சரியாகப் படுகிறது.

குளறுபடிகள்? இல்லாமலா? நேற்றோ முந்தாநேற்றோ சி.என்.என்னில் பில் ஷ்னைடர், 'இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் ஓட்டளித்தார்கள், ஓட்டளித்தவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள், அப்படியிருக்க அமெரிக்கத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதுபற்றிய அச்சம் தேவையில்லாத ஒன்று' என்ற ரீதியில் கருத்துச் சொன்னார். அது முதல் விஷயம்.

அடுத்து, குடியரசுக் கட்சியினர், ஓட்டுச்சாவடி அருகில் தங்கள் ஏஜெண்ட்டுகளைக்கொண்டு, ஓட்டளிக்க வருபவர்கள் சரியான முறையில் பதிவு செய்திருக்கிறார்களா என்று சோதிக்க அனுமதிக்கவேண்டுமென்று மனு செய்ததை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும், மிஷிகன், ஓஹையோ, ஃப்ளோரிடா போன்ற கத்திமுனைப் போட்டி மாகாணங்களில், வாக்காளர்களுக்குத் தவறான தகவல்களைத் தரும் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகப் புகார்கள். நவம்பர் முதல் தேதியோடு absentee ஓட்டளிக்கும் தேதி முடிந்துவிட்டதென்று, நவம்பர் மூன்றாம் தேதி தேர்தலில் மறக்காமல் ஓட்டளிக்குமாறு (தேர்தல் இரண்டாம் தேதி!) பலவிதமான தவறான தகவல்கள்! இதில், ஃப்ளோரிடா மாகாண ஜனநாயகக் கட்சித் தலைவருக்கே ஒரு தொலைபேசி அழைப்பு - அவரது absentee ஓட்டை நவம்பர் பத்தாம் தேதி அளிக்குமாறு! இதையெல்லாம் பார்த்தபோது, நமது தேர்தலின்போது, 'ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டளித்தால் ஷாக் அடிக்கும்' என்று மற்றொரு கட்சியினர் பாமர மக்களைப் பயமுறுத்தியதாகப் படித்தேன் - இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை!! அரசியல் அரசியல்தான். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு கொரியப் பாராளுமன்றத்தில் சட்டையைப் பிடித்துக்கொண்டும் ஷூக்களைக் கழற்றியும் வீசுவதும், நமது நகர்மன்றக் கூட்டங்களில் மைக்கை உருவி அடிப்பதும், ஐ.நா சபையில் குருஷ்சேவ் தன் ஷூவைக் கழற்றி மேஜையில் அடித்ததும், க்ளிண்ட்டன் நமது பாராளுமன்றத்துக்கு வந்தபோது ஷாருக்கானிடன் ஆட்டோகிராஃப் வாங்குவதைப்போல நமது உறுப்பினர்கள் முண்டியடித்ததும் நினைவுக்கு வருகிறது.

எனது அபிப்ராயம்: புஷ் மறுபடி ஆட்சிக்கு வந்தால், தனது வெளியுறவுத்துறைத் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று நினைத்துக்கொண்டு மேலும் போர்கள், பேட்ரியாட் சட்டம் என்று இருக்கும் சிக்கலை மேலும் அதிகரித்துவிடவும் (அமெரிக்காவின் தேசியக் கடன் 7 ட்ரில்லியன் டாலர்கள்) வாய்ப்புள்ளது. நாம் ஜெயலலிதாவுக்கு மற்றொரு வாய்ப்புக் கொடுத்த மாதிரி (அய்யோ பாவம், ஒரு லேடி தன்னந்தனியா எவ்வளவு கஷ்டப்படுது, அதுக்கு புள்ளையா குட்டியா பாவம், அது என்ன செஞ்சிரப்போவுது)!! அல்லது, கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்லமுறையில் ஆட்சி நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது. குடியரசுக்கட்சியின் இந்த வலைத்தளத்தையும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவும்.

கெர்ரி ஜெயித்தால்....இப்போதுள்ள குழப்பங்களைத் தீர்ப்பதற்கே நாலு வருடம் சரியாகப் போய்விடும், அப்போது குடியரசுக் கட்சியினர் மறுபடிப் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டு, நாலு வருஷமாக என்ன செய்தாய் என்று அவரை வாட்டியெடுத்துவிட்டு மறுபடி வாரிவிடவும் வாய்ப்புண்டு. கெர்ரி ஜெயித்தால், அடுத்த முறை ஹில்லாரி க்ளிண்ட்டன் நிற்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அந்தபட்சத்தில் எட்டு வருடங்கள் கழித்து என்ன நடக்கும், அப்போது ஹில்லாரியின் அரசியல் செல்வாக்கு எப்படியிருக்குமென்று சொல்ல இயலாததால், ஒரு பெண் அமெரிக்க ஜனாதிபதியாவதென்ற விஷயம் எட்டாக்கனியாகிவிடும்.

அடுத்த ஜனாதிபதி புஷ்ஷோ கெர்ரியோ, மிகவும் கஷ்டமான காலங்கள் என்று நினைக்கிறேன். வயதில் மூத்த என் நண்பன் ஒருவன், தன் வாழ்க்கையிலேயே இதுதான் முக்கியமான தேர்தல் என்றான். பலரும் அப்படித்தான் நினைக்கிறார்களென்று தோன்றுகிறது. இந்தத் தேர்தலை அனைத்துச் செய்தி நிறுவனங்களும் அலசிப் பிழிந்து காயப்போட்டுவிட்டதால், புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறதென்று தோன்றுகிறது!

நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இது எப்படி இருக்கு? இயா ஹா ஹா ஹா! ரஜினி ஸ்டைலில் ஒரு தடவை தலையைக் கோதிவிட்டுக்கொள்க!

2 comments:

Mookku Sundar said...

அண்ணே..சும்மா பின்னு பின்னு ன்னு பின்றீங்க...

நான் என்ன எழுத வேண்டுமென நினைத்தேனோ, அப்படியே வந்திருக்கிறது.

நடத்துங்க...

Balaji-Paari said...

சும்மா சுத்தி சுத்தி எழுதிட்டீங்க...
கலக்குங்க