Monday, November 22, 2004

ஜெயேந்திரர் - இன்னும்

அடடா, கருணாநிதி மூளையே மூளை. இப்போது ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்குகிறார்! ரிடிஃப்பில் ஸ்வபன் தாஸ்குப்தா எழுதிய இந்தப் பத்தியையும் படித்துவிடுங்கள். "சங்கராச்சாரியார் போன்ற ஒருவரைக் கைது செய்ததற்கு எதிராக உரித்தான எதிர்வினை எதுவுமே எழும்பவில்லை" என்ற ரீதியில் வருத்தப்படுகிறார். மறைமுகமாக, "இன்னும் போட்டுத் தாக்காமல் ஏன் விட்டுவைத்திருக்கிறீர்கள் சிறுபான்மையினரை" என்பதுபோல்தான் எனக்குப் படுகிறது. போதாக்குறைக்கு "திராவிட அரசியல்" என்று ஒரு வாரு வாருவது வேறு.

//The reasons lie in the vagaries of Dravidian politics, particularly the competitive inclination to invoke anti-Brahmin sentiment.//

எத்தனை திரிகளைக் கொளுத்திப் போடமுயல்கிறார்கள்! ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல. சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுவதில் கருணாநிதி லேசுப்பட்ட ஆள் இல்லையென்றாலும் (யோக்கிய சிகாமணி அவருக்குத்தான் பஸ் பெயருக்குக்கூட சாதித்தலைவர்கள் பெயர் வைக்கத் தோன்றும்!! இதில் கடுப்பாகிப்போன எங்கள் ஊரில் சில இளைஞர்கள், ஒருநாள், "எங்கள் தங்கத் தலைவி சிலுக்கு மற்றும் நக்மா பெயரில் போக்குவரத்துக்கழகம் தொடங்குக" என்று போஸ்டர் அடித்து, ஊருக்குள் வரும் அனைத்து பஸ்களிலும் ஒட்டிவிட்டார்கள்), ஒரேயடியாக 'திராவிட அரசியல்' என்று கட்டம்கட்ட முயல்வது மொத்தத் தமிழ்நாட்டின் முகத்திலும் காறித்துப்புவது போலத்தான். திராவிட அரசியலும் இல்லாவிட்டால், இப்போது தமிழ்நாடும் கிட்டத்தட்ட பீஹார் மாதிரி ஆகிப்போயிருக்கும். அல்லது, ஆந்திரா போல ரெட்டி-கம்மா ஆக்கிரமிப்பில் பிற சமுதாயங்களெல்லாம் கிட்டத்தட்டக் காயடிக்கப்பட்டிருக்கும். ஆக மொத்தம், 'திராவிடக் கட்சிகள்' என்பதை political dalitize பண்ணுவதில் அடடா இவர்களுக்குத்தான் என்ன ஆனந்தம்!!

வீரத்துறவி ராமகோபாலன் வேலூர் சிறைமுன்பு கற்பூரம் கொளுத்தி சாமியாடியதைப் பார்த்தால் தமாஷாகத்தான் இருக்கிறது. இதேநேரத்தில் மற்றொன்றையும் நினைவுகொள்ளவேண்டும். இதே, ஜெயேந்திரருக்குப் பதிலாக மற்றொரு சிறுபான்மை மதத் தலைவர் கைதாயிருந்தால் இந்நேரம் கருணாநிதி படமெடுத்து ஆடியிருப்பார். கேரளாவில் ஏ.கே.அந்தோணி, "Minority terrorism is as bad as majority terrorism" என்றதைப்போல் முதுகெலும்புள்ள ஆசாமிகள் யாராவது சொல்வார்களா இங்கே? நாளாக நாளாக விஷயங்கள் மேலும் மேலும் அரசியலாக்கப்பட்டுவரும் இந்த விஷயத்தில், "சங்கரராமனின் மற்றொரு முகம்" என்பதுபோன்ற விறுவிறுப்பான செய்திகளை விகடன் வேறு வெளியிடுகிறது. செய்திகளைப் படிப்பதில் தோன்றுவது என்னவென்றால், நாசூக்காக அனைவரும் பக்கச்சார்பு எடுக்கிறார்கள் என்பதுதான். ஒரு கட்டத்துக்குப்பின் இது வெளிப்படையாகும், பிற விஷயங்கள் முன்னுக்கு வந்து ஜெயேந்திரர் விஷயம் பின்னுக்குப் போகும்போது, சார்புநிலை படு வெளிப்படையாகும், அப்போது அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். செய்தித்தாளின் முதல்பக்கச் செய்தியைவிட உள்பக்கச் செய்திகள் துல்லியங்குறைந்தவையாக இருக்கலாமென்பதை நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், அவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டோம். அப்போது ஜெயேந்திரர் ஆதரவு ஊடகங்களும், ஜெயேந்திரர் எதிர்ப்பு ஊடகங்களும் தங்கள் நாசூக்குகளையெல்லாம் களைந்துவிட்டு சண்டைச்சேவல்கள் மாதிரித் தங்கள் உட்பக்கங்களில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும். அப்போதும் இந்த விஷயங்களைத் தொடர்ந்து படித்துவருபவர்கள் தங்களையறியாமலே ஒரு பக்கத்திற்குப் போய்விடுவார்களென்றுதான் தோன்றுகிறது. இப்படிக் காஞ்சி மடம் சீரழிவதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், institutionalize செய்யப்பட்ட ஒவ்வொரு மதப்பிரிவும் ஒரு காலகட்டத்தில் விரிசல்விடும் என்பது வரலாறு கூறும் உண்மை. அதற்கு உலகின் எந்த மதமும் விதிவிலக்கல்ல.

இதில் ஜெயலலிதா எங்கே வருகிறார்? சொந்தக் காரணங்களுக்காக ஜெயேந்திரரைப் பழிவாங்கிவிட்டார், கருணாநிதியின் அழுத்தத்தைச் சமாளிக்கவே ஜெயேந்திரரைக் கைதுசெய்தார், இது அவரது மற்றொரு எடுத்தேன் கவுத்தேன் முடிவு - ஆச்சா போச்சா என்று ஏகப்பட்ட conspiracy theory கள். நான் யோசித்துப் பார்த்தவரையில், எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஒருவேளை ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளுமளவுக்கு எனக்கு (ஏன், எவருக்குமே...) அனுபவம் பத்தாதோ என்னவோ. இதே தமிழ்நாட்டில், இதே அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா இடத்தில் உமா பாரதி அல்லது சுஷ்மா ஸ்வராஜ் போன்ற வீரசன்னியாசினிகள் இருந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்த்தால், அதைவிட இப்போதைய நிலைமை பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

3 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

watch out for more fun,stunts, somersaluts and what not !

Anonymous said...

Very well written. Balanced views.
But, I don't accept that Swapan Das Gupta is instigating Hindus to go against Muslims. This is not correct and please do not bring that aspect unnecessarily into this discussion on Jayendrar.
What Swapan is highlighting is that because of Brahminical stranglehold, HINDU UNITY is not gaining MOMENTUM, which is TRUE.
EnRenRum anbudan,
BALA

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.