Sunday, November 07, 2004

ஸ்டிங் & காலாவதி

இன்று வெளியே போய்விட்டு வரும்போது தமிழ்ப்பாட்டு போடு என்றான் என் அறைத் தோழன். அனைத்து சிடிக்களையும் அறையில் கொண்டுபோய் வைத்துவிட்டபடியால் ஒலித்துக்கொண்டிருந்த எஃப் எம்மை மாற்றினேன் இருக்கும் சிடி ஓடட்டுமென்று. ஏற்கனவே மந்தமாக இருந்த சாயங்கால நேரத்தையும் மனதையும் ஸ்டிங்கின் 'Stolen car' சுற்றிக்கொள்ளத்தொடங்கியது. ஸ்டிங்கை நான் கண்டடைந்தது ஒரு வித்தியாசமான வழியில். ஒருகாலத்தில் குமுதத்திலோ விகடனிலோ சுரேஷ் பீட்டர்ஸின் ஒரு பேட்டியைப் படித்தேன். 'சிலசமயம் ஸ்டிங்கின் ஒரே வரிகள் என் மனதிலும் என் மனைவியின் மனதிலும் தனித்தனியாக ஒரேநேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும்' என்பதுபோலான ஒரு வாக்கியத்தைச் சொல்லியிருப்பார். இதேபோல ஒரு நாவலில் 'காஃப்கா என்கிறோம் போர்ஹே என்கிறோம், மு.தளையசிங்கத்தை மறந்துவிட்டோம்' என்று ஒரு வாக்கியம் வரும். அந்த வாக்கியத்தைத் தொடர்ந்த காலங்கள் எவ்வளவு. அப்போதைக்கு அதை மறந்துவிட்டாலும், பின்பு ஒருசமயம் குறுக்கெழுத்துப்போட்டிகள் பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்டிங் பற்றிய ஒரு கட்டுரையைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. மைல்ஸ் டேவிஸ் தனக்கு மிகவும் பிடிக்குமென்று குறிப்பிட்டிருந்ததும், 'silence is the wavelength of the soul' என்றிருந்ததும் மிகவும் பிடித்துப்போக, அப்போது என் நண்பனிடமிருந்த பழைய 'Police' ஆல்பமொன்றைக் கேட்டுப் பின்பு மறந்துவிட்டேன். ஆனால், இப்போதுவரை, ஸ்டிங் தனியாகப் பாடிய பாடல்களைவிட 'போலீஸ்' குழுவுடன் பாடிய பாடல்களே ஏனோ பிடித்திருக்கிறது. 'Stolen car' பாடலை நீங்கள் கேட்கும்போதோ, அல்லது பிறிதொரு தருணத்தில் நானே கேட்கும்போதுகூட பிடிக்காமல் போகலாம், ஆனால், ரசித்த தருணத்தைத் தக்கவைத்துக்கொள்ள இயலாமையும், அதைப் பிரதியாக்கம் செய்ய இயலாததுமே நம்மை மனிதர்களாக்குகிறதென்று நினைக்கிறேன். அதன்பின் தொடரும் இழப்பின் சுவையில், ரணத்தில் காலத்தைக் கழிக்கிறோம். காரணமே இல்லாமல் ஸ்டிங்கின் பல பாடல்கள் சமீபத்தில் பிடித்துப்போனது. அல்லது, காரணங்களை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. 'Englishman in New York' 'Shape of my heart' 'Fields of Gold' 'Desert Rose' பாடல்களைச் சில நூறு முறையாவது கேட்டிருப்பேனென்று நினைக்கிறேன். ஒரு பாடல் எவ்விதத்தில் நம்முடன் இணைகிறதென்று சிலநேரங்களில் யோசிக்கத் தோன்றும். ஒரே வரிகளை, ஒரே ராகத்தில், ஒரே தொனியில் நூறு குரல்கள் பாடலாம். வரிகளும், ராகங்களும், தொனிகளும் குரல்களும் ஒரேபோலிருந்தாலும் அவற்றில் ஏதோவொன்றுடன் மட்டுமே நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம். ஏதோவொரு காரணத்தால் இன்று 'Stolen car' பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; அதை ஒரு analgesic போலப் பயன்படுத்திக்கொள்வதைப்பற்றி என்னை நானே சபித்தவாறு. அதன் வரிகளை இங்கே கொடுக்கவில்லை, வரிகளில் என்ன இருக்கிறது. வரிகள் அனைத்தும் ஒன்றே பாடல்களில். கார் திருடன் ஒருவனின் பாடலில் முக்தியைத் தேடவேண்டுமா நான்; அதில் ததும்பி வழிவது வாழ்க்கையின் உன்னதமே.

இதேபோல் கல்லூரியில் என் நண்பனின் ஒரு சிடியில் Cat Stevens ன் 'Sad Lisa' வைத் திரும்பத் திரும்பக் கேட்டு அதைத் தேய்த்தழித்தேன். இங்கே அவரது முழு ஆல்பமொன்றை வாங்கியபோது மிஞ்சியது ஏமாற்றமே. ஒரு நல்ல பாடலைக் கேட்கும்போது 'அதற்குள் நம்மைத் தொலைப்பது' என்ற க்ளிஷேவைத் தாண்டி, அதை வைத்து என்ன செய்வதென்ற பதற்றமே மிஞ்சுகிறது...போனி எம்மின் 'See the stars coming shining down from the sky' கேட்டவாறு அப்போது டைரியில் ஏதோ எழுதிக்கொண்டேயிருந்தேன். அதற்கு அர்த்தமேதும் இருந்திருக்காது, இப்போது படித்துப் பார்த்தாலும், அந்தத் தருணத்தை என்னால் மீட்டெடுத்துவிடமுடியாது. ஒரு தருணத்தை முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்வதென்ற பேராசை எத்தனை முறை தோல்வியில் முடிந்தாலும் மனது கேட்பதாயில்லை. Haphazard ஆகக் கேட்கும் பாடல்களனைத்தும் பில்போர்ட் சார்ட்டில் முதலிடம் பெற்றிருக்காது, சமீபத்தவையாக இருக்காது, ஏதாவதொரு obscure குழுவின் ஹிட்டாகாத பாடலாக இருக்கும் - Ace of base ன் 'Cruel summer' ஐ எத்தனை தடவை கேட்டிருப்பேன்; இப்படித்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நமது விருப்பங்களுக்கேற்ப வளைக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.

'I don't drink coffee, I drink tea my dear' என்ற 'Englishman in New York' பாடலின் முதல் வரியினுள் என்னையே நுழைக்க முயன்றுகொண்டு ஒவ்வொரு முறையும் அபத்தமாக, சந்தோஷமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு பாடலை, ஒரு பிம்பத்தைக்கொண்டு நினைவுகொள்ள முயல்வது எவ்வளவு உன்னதமான விஷயம் - மூன்று நிமிடங்களில் கடந்துவிடும் ஒரு பாடலும் சில கணங்களில் மறைந்துவிடும் ஓர் பிம்பமும் பெயரற்ற சாலைகளில் தனித்தெரியும் சோடியம் வேப்பர் விளக்குகளின் இணையற்ற தனிமையும் திரும்பத்திரும்பப் புகையாகக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்னை. ஒருவேளை 'திருடப்பட்ட காரின்' முதல்வரியில் சிறிதாகத் தொடங்கும் தபலா ஒலியும் எனது பிரத்யேக அலைவரிசைகளின் தாக்குதல்களும் இன்றையபொழுதின் நிம்மதியையும் நிம்மதியின்மையையும் தீர்மானிக்கின்றனவோ என்னவோ. தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்: கட்டளைகளுக்குட்பட்டு யோசிக்கமுயன்று உழன்றலைந்த காலங்களை அலுத்தவாறு. முடிந்தளவு குப்பைகளைச் சேர்க்கிறேன்.

'There's a wire in my jacket, this is my trade
It only takes a moment, don't be afraid
I can hotwire an ignition like some kind of star
I'm just a poor boy in a rich man's car'
-Sting, 'Stolen car'

No comments: