Tuesday, February 22, 2005

ஓலம்

தன் பிரபலத்தன்மை மூலமாகப் பார்வைக்குக் கிடைக்கும் சில ஓவியங்கள், பிரபலத்தன்மை அதற்களித்த நீர்த்துப்போன குணாதிசயங்களையும் தாண்டி மனதை வெகுவாக உலுக்கும் தன்மைகொண்டவை. எட்வர்ட் மங்க்கின் 'ஓலம்' (The Scream) ஓவியத்தை முதன்முதலில் எதில் பார்த்தேனென்று நினைவில்லை. முத்தாரம் என்று ஒருகாலத்தில் வந்துகொண்டிருந்த புத்தகத்திலா என்று யோசித்துப்பார்க்கிறேன். அதன்பின்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்காண்டிநேவிய ஓவியத்தொகுப்புக்களுள்ள ஒரு புத்தகத்தில் பார்த்தது நினைவுக்குவருகிறது. புகைப்படங்களில் பார்க்கும் ஓவியங்களை நேரில் பார்க்கும்போது எப்படியிருக்குமென்று தெரிந்துகொள்ளும் அனுபவத்தை கிட்டத்தட்ட ஒன்றேகால் வருடங்களுக்குமுன்பு சில சால்வடார் டாலி, மார்செல் டுஷாம்ப், மாக்ஸ் எர்ன்ஸ்ட், ரொபெர்த்தோ மாத்தா போன்ற சிலரது ஓவியங்கள் பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கு வந்தபோது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்றுவரை மங்க்கின் The Scream ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, கிடைக்குமா என்பதும் சந்தேகமே. நார்வேயில் ஆஸ்லோ அருங்காட்சியகமொன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தையும், மங்க்கின் இன்னொரு ஓவியமான Madonnaவையும் பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளையர்கள் ஏழெட்டு மாதங்களுக்குமுன்பு கொள்ளையடித்துச்சென்றனர். இந்த இரண்டு ஓவியங்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட இருபது மில்லியன் பவுண்டுகள் என்று பிபிஸி சொல்கிறது (ஸ்வரூப் குழுமம் நூறு கோடிக்கு வாங்கிய எம்.எஃப்.ஹூசேனின் மொத்த ஓவியங்களின் மதிப்பையும்விட அதிகமென்று நினைக்கிறேன்).

1890ன் பிந்தைய காலகட்டங்களில் வரையப்பட்ட மங்க்கின் ஓவியங்களான Melancholy, The Kiss போன்றவற்றி்ல் வெளிப்படும் நிலையின்மை, இனம்புரியாத சோகத்தின் தொனியில் அமைந்த The Scream (1893) ஐ, மேற்கத்தியக் கலாச்சாரத்தின் எந்தவொரு உயிரினமும் பார்த்தவுடன் அடையாளங்கண்டுகொள்ளும். நீல, வயலெட், ஆரஞ்சு நிறங்களாலான சுழல் போன்றவொரு வடிவத்தின்மேல், நிறத்தால் மட்டுமே பிரிந்திருப்பதாகத் தெரியும் சிவப்பு மஞ்சள் நீலத் தீற்றல்களாலான வானம், சுழல் போன்ற ஆற்றின்மேல் நீண்டிருக்கும் பாலம், அதில் இரண்டு கன்னத்திலும் கைவைத்தவாறு (அல்லது காதைப் பொத்தியவாறு), கண்கள், மூக்கு, வாய் என்பவையெல்லாம் தெளிவற்ற குறிப்புக்களால் உணர்த்தப்படும் ஒரு முகமுடைய, உடல் கீழ்நோக்கி நெளிந்து, கிட்டத்தட்ட நமது 'ஆவி' போன்ற சித்திரிப்புக்களை ஒத்த ஒரு உருவம், ஓ என்று ஒரு ஓலத்தை எழுப்பிக்கொண்டிருக்கிறது. ஓலம் என்பது சுற்றுப்புறங்களைச் சிதைத்து நிறங்களைக் குழப்பியதா, அல்லது சித்திரிக்கப்பட்டதாக நான் உணரும் எரிக்கும் நிறங்களும் அதைவிழுங்கும் இருளும் நெளிக்கும் உருவங்கள், அழுத்தந்தாங்காமல் ஓலமிடுகிறதா என்று விளங்கிக்கொள்ளமுடியாத அளவு துக்கமும் திகிலும் பரிதாபமும் ஒருங்கே எழுவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அடோபி ஃபோட்டோஷாப்பில் தற்போதைய காலங்களில் ஒரு சொடுக்கலில் செய்துவிடக்கூடியதாக உணரமுடியும் இந்த ஓவியம், தனிப்பட்ட அளவில் வெகு நெருக்கமாக இருப்பது அதன் தனிமையாலா, மனதில் ஏற்படுத்தும் அழுத்தத்தாலா அல்லது அந்த ஓலத்தின் இடத்தில் நம்மைப் பொருத்திவைத்துப்பார்க்கமுயலும் அபத்த/நிர்த்தாட்சண்யத்தாலா என்று விளங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த ஓவியத்துக்கு அடிப்படையாக இருந்தது பெருவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழங்காலத்து இன்கா மம்மிதான் என்றும் கூறுகிறார்கள் - இன்னும் இது நிரூபிக்கப்படவில்லை எனினும், மம்மிக்கும் இந்த ஓவியத்துக்கும் இடையிலுள்ள ஒற்றுமை முதற்பார்வையிலேயே ஒதுக்கிவிடமுடியும் ஒன்றல்ல (இன்னும் உருப்படியான படம் கிடைக்கவில்லை, மன்னிக்க).

தனிமை, நோய் போன்றவை பீடித்த மனிதர்களை/இடங்களை விவரிக்கும் ஏராளமான மங்க் ஓவியங்கள் உள்ளன - The Sick Girl, The mother at the sick girl's bedside போன்று. ஆனாலும், என்னைப்பொறுத்தவரையில் மிக அழுத்தமுடையதும், இன்னொரு ஸ்காண்டிநேவியக் கலைஞரான இங்மார் பெர்க்மனின் அற்புதமான படமான Cries and Whispersல் நோய்ப்படுக்கையின் கொடூரத்தைத் தயவுதாட்சண்யமின்றி விவரிக்கும் வீட்டின் சிவப்பு நிற உட்புறத்தை நினைவுபடுத்தியதுமானவை 'The Death Bed', 'Death in the sick chamber', 'The Dead Mother and the Child' போன்ற ஓவியங்கள். மறைந்திருக்கும் முகங்களிலும் கவிழ்ந்திருக்கும் முகங்களிலும் மறைக்கப்பட்டிருக்கும் வலியைச் சுவர்களிலும் தரைகளிலும் வழிந்திருக்கும் செம்மண் நிறம் வெளிப்படுத்துவதாகவே இன்று யோசிக்கும்போதும் தோன்றுகிறது.

ஸ்காண்டிநேவியப் பிரதேச எழுத்துக்களாகட்டும், ஓவியங்களாகட்டும் - ஏதோ ஒரு தனிமை அவற்றில் வியாபித்து நிற்பதாகவே தோன்றுவது நிஜமாகவா அல்லது ஸ்காண்டிநேவியப் பிரதேசம் என்பதை நேரில் பார்க்காமலே உலக வரைபடத்தில் பார்த்து நாமாக உருவாக்கிக்கொள்ளும் பனியில் மூழ்கிக்கிடக்கும் நிலப்பரப்பின் பிம்பத்தின் வெளிப்பாடுகளை அப்பிரதேசத்தின் கலைவெளிப்பாடுகளில் பொருத்திக் கற்பனைசெய்து பார்த்துக்கொள்கிறோமா? நட் ஹாம்ஸன், இங்மார் பெர்க்மன், மங்க் - ஏன், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் போன்ற நடிகர்களைப் பார்க்கும்போதுகூட சர்ரென்று சுரத்து இறங்கிவிடுவதன் காரணம் தெரியவில்லையா அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லையா என்றுதான் தெரியவில்லை.

சரியோ தவறோ, தோன்றியதையெல்லாம் எழுதிவைக்க வலைப்பதிவுகளை விட்டால் வேறு மார்க்கத்தைத் தேடவே தோன்றுவதில்லை. கிட்டத்தட்ட டைரியைவிட அந்தரங்கம் குறைவாக, அச்சுப்பதிப்பைவிட பாவனைகள் குறைவாக, Director's cut என்ற ரீதியில் எழுதமுடிவதுதான் மிகவும் வசீகரமளிப்பது. இதிலும் பிரயத்தனப்பட்டு எழுதலாம், தனிப்பட்ட இமேஜை செதுக்கிக்கொள்ளலாம் - ஆனால் என்ன செய்வது அதை வைத்து, யாருக்குத்தான் என்ன உபயோகம்? பேசாமல் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு தோன்றுவதையெல்லாம் எழுதுவது என்னவொரு சௌகரியம்!! சற்றுக்காலம் முன்பு டைம் பத்திரிகை, வலைப்பதிவாளர்கள் பற்றி சில கட்டுரைகள் வெளியிட்டிருந்தது. கிட்டத்தட்ட pajama journalists என்ற ரீதியில் ஒரு பெயர்கொடுத்திருந்ததாக நினைவு. அனைத்தும் decay links என்பதால், சுட்டிகள் கொடுப்பது உபயோகமற்றது. அதேபோல தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்? லுங்கி/வேட்டி/பெர்முடா/சேலை/ஜீன்ஸ் பத்திரிகையாளர்கள்?!?!? டைம் கட்டுரைகளில் கூறியிருந்த மற்றொரு கூற்றும் யோசிக்கவைத்த ஒன்றே. அச்சுப்பத்திரிகை, செய்தி ஊடகங்களில் வரும் செய்திகளின் துணையின்றி வலைப்பதிவாளர்கள் இயங்குவது அரிதே என்று கூறப்பட்டிருந்ததில் முற்றுமுழுக்க இல்லாவிட்டாலும், பெரும்பாலும் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது. அந்தக் கட்டுரைகள், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எழுதப்பட்டதால், வலைப்பதிவர்கள் என்பவர்கள் மொத்தமுமே அரசியல் ரீதியாகத் தங்கள் கருத்துக்களை உரக்கக் கூவியவர்கள் என்ற ரீதியில் ஓரளவு தட்டையாக எழுதப்பட்டிருந்ததாகவே பட்டது. எவ்வளவு நாள் எழுதமுடியும் என்பது வேறு விஷயம், எழுதத் தோன்றுவதையாவது அங்கங்கே கிறுக்கிவைக்கலாம். மாமரம் நட்டுக்கொண்டிருந்த கிழவனைப்பார்த்து ஏன் நடுகிறாய் தாத்தா என்று கேட்டது யார், அக்பரா??

படங்கள் நன்றி: Mark Harden, Discovery.com

10 comments:

Thangamani said...

உங்களது ஓவியங்களைப் பற்றிய பதிவுகளை நான் விரும்பிப்படிப்பேன். நான் வின்சென்ட் வான்கோவின் ஓவியங்களை மிகவும் விரும்புகிறவன். ஓவியங்களை மட்டுமல்லாமல் அவரையும் எனக்குப் பிடிக்கும். தியோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் என்னைப் பாதித்தவை.

Chandravathanaa said...

ஓவியங்களைப் பற்றிய உங்கள் பதிவு நன்றாக உள்ளது. தமிழில் இப்படியான பதிவுகள குறைவு.
சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்கள் தந்த இணைப்புகளில் மிகவும் அழகான வனப்பான ஓவியங்களைக் கண்டு ரசித்தேன்.
நன்றி.

Narain Rajagopalan said...

வின்செனட் வான்காக் , டேலி, சற்றே அதிகமாக ரபெல் . தமிழில் ஒவியங்களைப்பற்றிய பதிவுகளும், தெரிதல்களும் மிகக்குறைவு. வேலை தாளிக்குது தல, வந்து பதியறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

ஓவியங்களின் அறிமுகத்திற்கு நன்றி மாண்ட்ரீஸர்.அருமையான ரசனை உங்களுக்கு ரசிப்பதோடு நின்றுவிடாமல் பகிர்ந்தும் கொள்வதற்கு நன்றி.
அப்பால் தமிழின் ஓவியக் கூடம் பற்றி இங்கே -www.kavithai.yarl.net -குறிப்பிட்டிருக்கிறேன்.பார்த்து உங்கள் கருத்துக்களையும் கூறி ஊக்கப்படுத்துங்கள்

சன்னாசி said...

மறுபடி அனைவருக்கும் நன்றி. தங்கமணி: வான் கோ எனக்கும் பிடித்த ஓவியரே. வான் கோவும், அன்புள்ள தியோவுக்கு கடிதத்தொகுப்பு பிடித்திருப்பின், இதோ இன்னும் இரண்டு சிபாரிசுகள்:
ஒன்று காஃப்காவின் Letters to Felice,மற்றொன்று குரோஸவாவின் Dreams: ஒரு ஜப்பானிய ஓவியன், வான் கோவின் ஓவியங்களுக்கூடாக வான் கோவைத் தேடும் ஒரு பகுதி உள்ளது. ஜார்ஜ் லூக்காஸின் Industrial Light and Magic தயவில் அற்புதமாகப் படமாக்கப்பட்ட பகுதி. The crows ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே, ஓவியத்தினுள் போய், ஓவியத்தின் கோதுமை (அல்லது corn?)வயல்களூடாகப் போய் வான் கோவை ஒரு ஜப்பானிய ஓவியன் தேடுவது.

நாராயண்: தமிழில் இந்திரன், ஓவிய, சிற்பங்களைக்குறித்து எழுதியிருக்கிறாரென நினைக்கிறேன். அதுதவிர ஓவிய அறிமுகங்கள் பெருமளவில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஈழநாதன், சந்திரவதனா: நன்றி. ஈழநாதன், அங்கே ஒரு பதிவை இட்டிருக்கிறேன். ஓவியத்தில் மேலும் ஆர்வமுள்ளவர்கள் www.artchive.comஐப் பார்க்கவும்.... திண்ணையில் கூட ஓவியத்தைப்பற்றித் தொடர்ச்சியாக ஒரு கட்டுரையாளர் எழுதிவருகிறார் (http://www.thinnai.com/author1283.html)தகவலை முன்பு கொடுத்த பாலாஜி-பாரிக்கும் நன்றி.

கறுப்பி said...

மாண்ட்ரீஸர் நல்ல வேலை பார்த்தீர்கள். நல்ல நாவல்கள் என்று யாராவது கூறினால் Library சென்று எடுத்து வாசித்துவிடலாம். படங்களுக்கும் DVD கடைகள் இருக்கின்றன. ஆனால் நல்ல ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்பம் எமக்கு மிகக்குறைவாகவே இருக்கின்றது. அண்மையில் Toronto Starல் எட்வெட் மங்க்கின் இந்த ஓவியத்தை முற்பக்கத்தில் போட்டிருந்தார்கள். தாங்கள் இப்போது பல நல்ல ஓவியங்களை இணைத்திருக்கின்றீர்கள். இப்படி யாராவது செய்தால் நாம் தேடலை விட்டு இலகுவாக நல்ல விடையங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தகவலுக்கும் தேடலுக்கும் நன்றி.

கறுப்பி said...

மீண்டும் நான்தான் கறுப்பி. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஜெயமோகனின் இணையத்தளம் பற்றிய படைப்பிற்குத் தாங்கள் எங்கோ விமர்சனம் எழுதியிருப்பதாக எனது நண்பி கூறினாள். நானும் கிண்டு கிண்டென்று தங்கள் தளத்தைக் கிண்டி விட்டேன் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதன் தொடுப்பை ஒருமுறை எனக்கு அடையாளப்படுத்தி விடுங்களேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்

-/பெயரிலி. said...

நன்றாக உள்ளது

சன்னாசி said...

நன்றி பெயரிலி...
கறுப்பி: எதைக் கேட்கிறீர்களென்று தெரியவில்லை. விமர்சனம் என்று எதுவும் எழுதியதில்லை - என் பதிவில் எனில், அவ்வப்போது அவரது திண்ணை அறிவியல் புனைகதைகளைக்குறித்து எனக்குப் பட்டது ஏதாவது எழுதியிருப்பேன் - இறுதி திண்ணை அறிவியல் புனைகதை குறித்து எழுதியதுதான் ஓரளவு நீண்ட பதிவென்று நினைக்கிறேன்; அதுதவிர எதைக் குறிக்கிறீர்களென்று விளங்கவில்லை. ஒருவேளை 'இணையத்தளம் பற்றிய ஜெயமோகனின் படைப்பு குறித்த பதிவு' என்று இதைக் கேட்கிறீர்களோ?

Thangamani said...

மாண்ட்ரீஸர் நன்றி!