Sunday, February 27, 2005

ஓரினச்சேர்க்கை...

ஓரினச்சேர்க்கையைக்குறித்துக் கடந்த/கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல பதிவுகள் பல கோணங்களிலும் எழுதப்பட்டிருப்பதால், தொடர்ந்து பின்னூட்டங்களும் இடப்பட்டு வருவதால், அனைவற்றையும் ஒரே இடத்தில் தொகுத்தால் பின்பு படிப்பவர்களுக்கு உதவியாயிருக்குமென்று தோன்றியதால்...
PBSன் நல்ல ஒரு தொகுப்பு....
ராமச்சந்திரன் உஷா - 1
ராமச்சந்திரன் உஷா - 2
ஸ்விஸ் ரஞ்சி
பொடிச்சி - 1
பொடிச்சி - 2
பொடிச்சி - 3
வெங்கட் - 1
வெங்கட் - 2
நாராயணன் - பின்னூட்டங்களில் பார்க்கவும்
ஷ்ரேயா

அறிவியல்பூர்வமாக ஓரினச்சேர்க்கை ஆராயப்பட்டுவருகிறதா என்று கேட்டால், ஆம்; ஓரினச்சேர்க்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகள் என்பவை, குறிப்பிட்ட எல்லைகளை வரையறுத்துக்கொண்டு தொடங்குபவை (பின்பு அந்த எல்லைகள் தாண்டப்படுவதே வழக்கம் எனினும்...) என்பதால், 'ஓரினச்சேர்க்கை' என்பதை எப்படி நிர்ணயிப்பது என்ற சிக்கலே தற்போது பெரிதான பிரச்னையாக உள்ளதென்று நினைக்கிறேன் (difficulty in defining 'an encompassing phenotype' that is characteristic of homosexuality). இதற்கு மட்டுமல்ல, பெரும்பாலான சிக்கலான நோய்களுக்கும் இதே கதைதான். சுந்தரமூர்த்தி, உஷாவின் பதிவில் இட்டிருந்த பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த டீன் ஹாமரின் கட்டுரையில்தான் முதன்முதலில் X குரோமோஸோமில் ஓரினச்சேர்க்கையைச் செலுத்தும் ஒரு காரணித்தளம் (locus என்பதற்குப் பல அர்த்தங்கள் இருப்பினும், இந்த வாக்கியத்துக்கேற்ப தமிழ்ப்படுத்த என்னால் முடிந்த முயற்சி) உள்ளதென்று குறிப்பிடப்பட்டதென்று நினைவு. காரணித்தளம் (locus) என்பது, linkage analysis என்ற மரபியல் யுக்திமூலம், நோயுள்ள ஒரு ஜனக்கூட்டத்திலுள்ள மனிதர்களின் மரபணுக் குறிப்பான்களை (genetic markers) ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் புள்ளியியல் வரையறைகளைக்கொண்டு ஆராய்ந்து, "இந்த நோய்த் தாக்குதல்/எதிர்ப்புக்கான காரணிகள், இந்தக் குறிப்பிட்ட குரோமோஸோமில்/குரோமோஸோம்களில் (குரோமோஸோம் 1/2/3/4/5/....../22/X/Y) இந்தக் குறிப்பிட்ட மரபுக்குறிப்பானுக்கருகில் எங்கோ உள்ளது" என்றளவில் நிர்ணயிக்க உதவுவது (குரோமோஸோமில் எங்கேயிருக்கிறதென்று முன்பே கண்டறியப்பட்ட மரபுக்குறிப்பான்களின் உதவியுடன்). அதற்குமேல், இந்தக் 'காரணித்தளம்' என்ற பெரிய குரோமோஸோம் பிரதேசத்துக்குள் இருக்கும் 'காரணி' என்பது, ஒரு மரபணு (gene) விலுள்ள வேறுபாடாக இருக்கலாம். சிறிதுகாலம் முன்புவரை, வெறும் நியூக்ளியோட்டைடு வேறுபாடுதான் இந்தக் 'காரணியாக' இருக்குமென்று கூறப்பட்டுவந்தது, இப்போது epigenetic variations எனப்படும் பிற காரணங்களால்கூட இருக்கலாமென்று கூறப்படுகிறது.

அறிவியல்ரீதியாக ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் கருத்தாக்கம் nature vs nurture (அதாவது, மரபுக்குணாம்சமா அல்லது சூழலா என்ற கேள்வி). இது முடிவற்ற ஒன்று என்றே நினைக்கிறேன். அறிவியல்பூர்வமாக 'நிரூபிப்பது' என்பது இதுபோன்ற விஷயங்களில் ஆம்/இல்லை என்ற ரீதியில் முடிவது சாத்தியமில்லை என்பதையும் நினைவுகொள்ளவேண்டும். இப்படியிருக்கையில், சில மாதங்களுக்கு முன்பு ஹாமரின் சமீபத்திய கட்டுரையொன்று, ஆண் பாலுறவுச் சாய்வு (male sexual orientation) குறித்து வெளியானது (PDF). எப்படி ஓரினச்சேர்க்கையை அளக்கிறார்கள் என்பதுகுறித்து பார்த்தால், அதற்கும் ஒன்று இருக்கிறது போல - கின்ஸி அளவுகோல் (Kinsey scales of sexual attraction, fantasy, behavior, and self-identification) என்று: அளவுகோலில் 0 என்பது துல்லியமான பிறபாலீர்ப்பு (heterosexuality), 6 என்பது துல்லியமான தன்பாலீர்ப்பு (homosexuality): இந்த அளவுகோல்கள் உபயோகப்படுத்தப்பட்டதாக கட்டுரையைப் படித்தீர்களானால் தெரியவரும். கட்டுரையின் முடிவுகள்? மரபகராதி அலசலின் (Genome scan) முடிவில் எப்போதும் வருவதுபோன்ற முடிவுகளே. குரோமோஸோம் 7, 8, 10 மூன்றிலும் காரணித்தளங்கள் இருப்பதாக அவர்களது அலசல் கூறுகிறது - காரணித்தளங்களுள்ளிருக்கும் காரணிகளைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகுமென்று தெரியாது... மேலும், ஓரினச்சேர்க்கை என்பது ஒரு சிக்கலான (complex/multifactorial condition) என்று கருதப்படுவதால், இறுதிவரை அதற்கான காரணிகளைக் கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்போம் - குறைந்தபட்சம் இப்போதைய நிலைமையில் இருக்கும் அறிவியலின் போக்கிலாவது.

சகோதரர்களில் கடைசியாகப் பிறப்பவர்களுக்குத் தன்பாலீர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் தந்தைவழி உறவினர்களைவிட தாய்வழி உறவினர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்ட கருத்தாக்கங்களைச் சோதித்துப்பார்த்து, அப்படியே இருப்பதாக உறுதிப்படுத்தியதாகவும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது...(PDF) ஆராய்ச்சிகள் துல்லியமானவை அல்ல என்னும் வாதத்தை, "ஒரேயொரு ஆராய்ச்சி மட்டும் ஒரு பிரச்னையை முழுதாகத் தீர்த்துவிட முடியாது" என்று படிப்பதன்மூலம், மேலும் காத்திருந்து பார்ப்பதற்கான பொறுமையைச் சம்பாதிக்க முயலமுடியுமென்று நினைக்கிறேன்!! ஓரினச்சேர்க்கை என்பது இப்படிப்பட்ட இறுகலான அறிவியல் தளத்தைத் தாண்டி, பெருமளவில் மிஷெல் ஃபூக்கோ போன்றவர்களால் சிந்தனைகளாகவும், ழான் ஜெனே போன்றவர்களால், இன்னும்பலரால் கலைப்படைப்புக்களாகவும் வாசகத்தளத்துக்குக் கிடைக்கின்றன என்பது நான் அறிந்தவரை. ஃபூக்கோவின் The History of sexualityயை ஆர்வமிருப்பின் வாசித்துப்பார்க்கலாம். பழங்கால கிரேக்கத்தில் கூட, அலெக்ஸாண்டருக்கும் ஹெஃபஸ்தியோனுக்கும் ஓரின உறவு இருந்ததென்றே கூறப்படுகிறது. 2002 உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஏதோவொரு வீரர், இங்கிலாந்து அணியின் டேவிட் பெக்ஹமைக் குறிப்பிட்டு, "He's so cute that I don't know if I should kick him or kiss him" என்றது இன்னும் நினைவிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், ஓரினச்சேர்க்கையாளர்களின் விருப்பத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்பதே என் அபிப்ராயமாக இருந்தாலும், உஷாவின் தோழியர் பதிவி்ன் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டதுபோல ஓரினச்சேர்க்கை என்பது brand ஆக்கப்பட்டு வருவதில் துளிகூட உண்மையில்லை என்று யாரேனும் சொல்வாராயின், அதை நம்புவது தற்போதைய சூழ்நிலையில் சிரமமென்றே கூறவேண்டும்...

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் சுட்டிகளைப் படித்து, அது தொடர்புள்ள பின்னூட்டம் இடவிரும்பினால் அங்கேயே இடவும் - அதுகுறித்துப் பின்பு படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்)

11 comments:

Narain Rajagopalan said...

நினைத்தேன் போட்டுவிட்டீர்கள். எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கலாம் என்று நினைத்துக் கொண்டே அடுத்த பதிவினை எழுதலாம் என நினைப்பதற்குள், உங்கள் பதிவு வந்துவிட்டது. தொடரட்டும் பணி!!

Vijayakumar said...

மாண்டீ, நீண்ட நாள் கழித்து வந்து வலைப்பக்கம் ஒதுங்கினால் ஒரு வாரத்தில் ஏகப்பட்ட ஓரின சேர்க்கைப் பற்றிய பதிவுகள். நல்லப் வேலையாக எல்லாவற்றையும் ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் அலச வேண்டும். பதிவுக்கு நன்றி தலைவரே.

மு. சுந்தரமூர்த்தி said...

மாண்ட்ரீசர்:

பல அபூர்வமான மரபியல் னோய்களுக்கான மரபணுக்கள் genetic-linkage அலசல் மூலம் கண்டுபிடிக்க முடிகிறபோது இப்போது பரவலாக பேசப்படுகிற ஓரினச் சேர்க்கைக்கும் அதுபோல மரபணுத் தொடர்பு இருந்தால் கண்டுபிடிக்க முடிவது கடினமல்ல. இவ்வாராய்ச்சிக்கான subjects San Francisco, Boston பகுதிகளில் மட்டுமே தேவைக்கு அதிகமாகவே கிடைப்பார்கள். UCSF, Stanford, MIT, Harvard என்று பெயர் பெற்ற ஆராய்ச்சி னிறுவனங்களும் இவ்விடங்களில் உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் இதுவரை இந்த விஷயத்தில் ஒரு lead கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரிமாக இல்லையா? ஓரினச்சேர்க்கைக்கு உயிரியல் காரணிகளை விட சமூகவியல்/உளவியல் காரணங்களே (இப்போது அரசியலும் சேர்ந்துக் கொண்டது) என்பது என் தனிப்பட்ட கருத்து.
இனச்சேர்க்கையின் அடிப்படைக் காரணமான இனவிருத்தி என்பது இப்போது வேறு வகைகளில் னிகழ முடியும் என்ற னிலை ஏற்பட்டுவிட்டதால் இனச்சேர்க்கையும் வேறு காரணங்களுக்காக, வேறுவகைகளில் னிகழ முடியும், முடிகிறது. ஆகவே ஓரினச் சேர்க்கைக்கான அறிவியலை மயிர்பிளப்பதை விட, அதன் பின்னணியிலுள்ள சமூகவியல், அரசியலை விவாதிப்பதே இப்போதைக்கு செய்யமுடிவது.

சுந்தரமூர்த்தி

Oodam said...

ஒரு வாரத்தில் ஏகப்பட்ட ஓரின சேர்க்கைப் பற்றிய பதிவுகள். நல்ல வேலையாக எல்லாவற்றையும் ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். நன்றி

சன்னாசி said...

சுந்தரமூர்த்தி:
//இப்போது பரவலாக பேசப்படுகிற ஓரினச் சேர்க்கைக்கும் அதுபோல மரபணுத் தொடர்பு இருந்தால் கண்டுபிடிக்க முடிவது கடினமல்ல.//
கடினமல்ல அல்ல, கடினமே. Genetic linkage analysis மூலம் எளிதில் கண்டுபிடிக்கப்படக்கூடிய நோய்கள், பெரும்பாலும் ஒற்றை மரபணுவைக் காரணியாகக்கொண்ட நோய்கள் (single gene disorders) என்பதே தற்போதுவரையிலான உண்மை - cystic fibrosis போன்று. Obesity, diabetes, asthma, alcoholism போன்ற பல-மரபணுக் காரணிகள் கொண்ட நோய்களில் (multigenic disorders) மரபணுக்கள் மற்றும் சூழல் (genes and environment) இரண்டையுமே அடிப்படையாகக் கொண்டவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றே. 'இறுதி முடிவாக' ஒன்றைக் கூறமுடிவது இவற்றில் சாத்தியமற்ற விஷயம். இவற்றில் முடிவுகள் என்பவற்றை therapeutic intervention strategies, prognostic indicators என்ற அளவில் வேண்டுமானால் உபயோகப்படுத்தமுடியும். ஓரினச்சேர்க்கை single gene disorder என்று இருந்துவிட்டால், இன்னும் பல வருடங்கள் கழித்து customized பிள்ளை பெற்றுக்கொடுக்கும் தொழிற்சாலை

//இனச்சேர்க்கையின் அடிப்படைக் காரணமான இனவிருத்தி என்பது இப்போது வேறு வகைகளில் னிகழ முடியும் என்ற னிலை ஏற்பட்டுவிட்டதால் இனச்சேர்க்கையும் வேறு காரணங்களுக்காக, வேறுவகைகளில் னிகழ முடியும், முடிகிறது.//
உண்மைதான். சற்று நாட்களுக்கு முன்பு டோக்கியோவில் ஒரு ஆராய்ச்சிக்குழு உருவாக்கிய ககூயா (Kaguya) என்னும் first parthenogenetic mammal இதற்குச் சாட்சிதான். மனிதன் என்ற வேறொரு உயிரினம், எலிகளை ஆராய்ச்சிகளுக்காக manipulate செய்ததன் விளைவு அது.

//ஓரினச்சேர்க்கைக்கு உயிரியல் காரணிகளை விட சமூகவியல்/உளவியல் காரணங்களே (இப்போது அரசியலும் சேர்ந்துக் கொண்டது) என்பது என் தனிப்பட்ட கருத்து.//
இரண்டும் காரணங்கள் என்பது என் கருத்து. பிற multifactorial disordersல் - நிரூபிக்கப்பட்ட உண்மை.

//ஆகவே ஓரினச் சேர்க்கைக்கான அறிவியலை மயிர்பிளப்பதை விட, அதன் பின்னணியிலுள்ள சமூகவியல், அரசியலை விவாதிப்பதே இப்போதைக்கு செய்யமுடிவது.//
இப்போதைக்கு நான் பிளக்கச் ;-) சாத்தியமில்லை எனினும், பிளக்கமுயல்பவர்கள் குறித்துப் படித்துக்கொண்டாவது இருக்கலாம். அவ்வளவுதானே முடியும் - ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டீன் ஆக இருக்கும்போது, ஆயிரக்கணக்கான incremental/peripheral scientistsம் இருந்துதானே ஆகவேண்டும் - உலக நியதி அல்லவா. குவார்ட்டர் அடித்துவிட்டு தள்ளாடித் தள்ளாடி ரோட்டில் வரும் ழ்ழ்ள்ள்ஸ்..புஸ்புஸ்....ழேய்ய்ய்ய்ய்ய்... குடிகாரர்களைப்பற்றிய சமூகவியல், அரசியலை விவாதிப்பதுடன் alcohol/aldehyde dehydrogenase, NMDA receptor, glutamate receptor என்று என்ன காரணிகள் இருக்கலாமென்று தோண்டித் துருவவில்லையா அறிவியல் ஜனங்கள்!! Cystic fibrosis, fragile X syndrome போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வருமா என்று பெற்றோரை மரபியல் ஆய்வுகளுக்குட்படுத்தி முன்கூட்டியே கணிப்பதுபோல, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராகக் குட்டிக்கரணமடிக்கும் வைதீகச்சாமிகளுக்காவது இந்த முடிவுகள் ஒருகாலத்தில் உபயோகப்படுமோ என்னவோ - பிறந்த குழந்தை இருபது வருடம் கழித்து எந்த சைடு திரும்பிப் பார்க்குமென்று முன்கூட்டியே தெரிந்து ஜாக்கிரதையுடனிருக்க!!

சன்னாசி said...

//ஓரினச்சேர்க்கை single gene disorder என்று இருந்துவிட்டால், இன்னும் பல வருடங்கள் கழித்து customized பிள்ளை பெற்றுக்கொடுக்கும் தொழிற்சாலை//

...களே தொடங்கப்படக்கூடும்" என்று படிக்கவும். கவனக்குறைவுக்கு மன்னிக்க...

-/பெயரிலி. said...

/பிறந்த குழந்தை இருபது வருடம் கழித்து எந்த சைடு திரும்பிப் பார்க்குமென்று முன்கூட்டியே தெரிந்து ஜாக்கிரதையுடனிருக்க!!/
lol

ரவி ஸ்ரீநிவாஸ் said...

the question is can you really categorise homosexuality as an abrnomality or disease.in case of diseases like cystic fibrosis it is possible.but this is not a disease and professional bodies do not consider this to be a disease to be cured.to what extent behavior is determined by genetic factors is a controversial issue.
in view of the past experiences with phrenology, eugenics it is better to be cautious about deterministic explanations that seem to be based on science but are pseudo-scientific.

Kasi Arumugam said...

நல்ல விரிவான விஷயங்களைத் தொட்டுச் சென்ற இந்த வார நட்சத்திரத்துக்கு நன்றி. [என்ன எனக்குத்தான் ஆற அமரப் படிக்க இயலவில்லை.:(]

சன்னாசி said...

ரவி: ஓரினச்சேர்க்கையை ஒரு நோய் எனவோ பிறழ்வு (abnormality) எனவோ வகைப்படுத்தல் தவறே. இருந்தாலும், அறிவியல் ஆராய்ச்சியில் பார்க்கும்போது wild-type, mutant என்பதுபோன்ற - பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட உபயோகப்படுத்த உதவும் சொற்கள்மாதிரிக்கூட உபயோகிப்பளவில் ஓரினச்சேர்க்கையைப்பற்றிக் குறிக்கத் தேவைப்படவில்லை என்றே தோன்றுகிறது. Wild-type, mutant என்பவை வெறுமனே relative ஆனவை தானே. Mutation is a spontaneous deviation from the wild-type எனப்படும் அடிப்படை விளக்கம், பெரும்பான்மையிலுள்ளவற்றிலிருந்து வித்தியாசப்பட்டிருப்பவை என்ற ரீதியிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அது ஒரு அடையாளத்துக்கு மட்டுமே தவிர, ஏதும் inflammatory தொனியில் இருப்பதாகப் படவில்லை, ஆனால் அப்படி உபயோகிப்பவர்களும் இருக்கக்கூடுமென்பதை ஒப்புக்கொள்கிறேன். நாளை ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாகும்போது இதே வாதம் பிறபாற்சேர்க்கையாளர்கள்நோக்கியும் திரும்புமென்றே நினைக்கிறேன். தற்போது பேச்சுவழக்கில் உபயோகிக்கப்படும் moron போன்ற வார்த்தைகள் 1920களில் அமெரிக்காவில் யூஜெனிக்ஸின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் புழக்கத்துக்கு வந்த மருத்துவப் பிரயோகங்கள் என்று படித்திருக்கிறேன். ஒரு சிக்கலான பிரச்னையை/விஷயத்தை ஆராயும்போது, phenotypes reflective of the problem கிடைப்பதுதான் பிரச்னை. அதி துல்லியமாக மரபியலைக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமென்பதால், surrogate markers துணைகொண்டுதான் ஆராய முடியும்: அதாவது, obesity போன்ற பிரச்னைகளில் 'குண்டுத்தன்மை' என்பது தெளிவற்ற ஒரு phenotype. அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது, அதற்குப்பதில் body-mass index போன்ற measureable phenotypesஐ உபயோகப்படுத்தலாம். இதே ஆஸ்துமா போன்ற நோய்களில், 'ஆஸ்துமா' என்பது, eosinophilia, bronchial hyperresponsiveness, serum IgE levels என்ற ரீதியில் பல்வேறு sub-phenotypes ஐக் கொண்டது. இவை ஒன்றோ, பலவோ சேர்ந்து நிகழும்போது 'ஆஸ்துமா' என்று ஒரு physician-diagnosed நோய் இருப்பதாகத் தெரியும். இதேபோன்றுதான் பிற complex disordersம். இதில், bmi, bhr, serum IgE போன்றவற்றை surrogate markers ஆகக் கொண்டுதான், 'இந்த மொத்தப் பிரச்னையில் இதன் பங்கு இவ்வளவு' என்பதை ஆராயமுடியும். மேலும், மனிதகுலம் என்பது மரபியல் ரீதியாக homogenized அல்ல என்பதால் (unlike some inbred strains of mice, where all the members of the strain are genetically identical) வரும் பிரச்னைகள் வேறு. ஓரினச்சேர்க்கை போன்ற மற்றொரு விஷயம், மொழி கற்றுக்கொள்வதற்கு ஏதாவது மரபியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்பவை - ஒரேயடியாக pseudo-scientific என்று கூறிவிடமுடியாதென்பது என் அபிப்ராயம்... ஆனால், இது சரியாக இருந்தே ஆகவேண்டுமென்று என்னால் கூறமுடியுமா என்று தெரியவில்லை....

zayeem anfaaz said...

ஒரு நோயும் இல்லாத ஒருவருக்கு எப்படி எய்ட்ஸ் ஏற்படுகிரது? எதன் மூலம் ஏற்படுகிறது?
ஒர் ஆண் ஒர் பெண்ணுக்கும் எய்ட்ஸ் இல்லை. இப்போது எப்படி எய்ட்ஸ் ஏற்படுகிரது ?
ஓரினச்சேர்க்கை (ஒர் ஆண் இன்னோர் ஆண்(இருவருக்கும் ஒரு நோயும் இல்லை))உடன் உறவு கொண்டால் நோய் ஏற்படுமா?
ஓரினச்சேர்க்கை (ஒர் பெண் இன்னோர் பெண்(இருவருக்கும் ஒரு நோயும் இல்லை))உடன் உறவு கொண்டால் நோய் ஏற்படுமா?