Sunday, February 27, 2005

ஃப்யூஸ் பிடுங்கியாச்சு...

ஒரு வாரத்துக்குமுன்பு 'நட்சத்திரம்' என்று ;-! அறிவிக்கப்பட்டபோது, எதையாவது எழுதலாம் என்று நினைத்தபோதுதான் தெரிந்தது கஷ்டம் - தினமும் எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை என்று... போதாக்குறைக்கு கடந்த வாரம் முழுவதும் எதிர்பாராமல் வந்துசேர்ந்த வேலை வேறு கழுத்தை நெரிக்க, தலையை அழுத்த, மூச்சை நிறுத்த (எல்லாம் மூன்று மூன்றாகத்தான் சொல்வதென்று முடிவெடுத்திருக்கிறது இப்போ) - இரவுகளில் zombie போல உட்கார்ந்துகொண்டு பெரும்பாலான பதிவுகளை எழுதினேனென்று நினைவு. இந்த வாரத்திய impromptu பதிவுகளிலிருக்கும் (எதுதான் அப்படியில்லை) அவசரத்தை, நேர்த்தியின்மையை, அதிகப்பிரசங்கித்தனங்களைச் சகித்துக்கொண்டு படித்த, மறுமொழி இட்ட அனைவருக்கும், இந்த வலைப்பதிவை நட்சத்திரமாகத் தேர்வுசெய்த தமிழ்மணர்களுக்கு நன்றி.

கண்மண்தெரியாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டேயிருக்கும்போது ஏதோவொரு முட்டுச் சந்தின் சுவற்றில் மோதி நிலைகுலைந்து விழுவது ஒருவிதம். ஓடிக்கொண்டேயிருக்கும்போது விதிவசம் நுழையும் சில சந்துகள் முடிவற்று நீளும் - அவற்றின் வசீகரம் களைப்பை நீக்கும். அவற்றின் வசீகரத்தில் ஆழ்ந்துபோய் ஓடுவது தெரியாமல் ஓடிக்கொண்டேயிருப்போம், பாதைகள் திசைமாறிப்போயிருப்பினும். பின்னொரு கணத்தில் நின்று திரும்பிப் பார்க்கும்போது அதன் வெளிவாயிலைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நினைக்கமுடியும் - கண்முன் இருப்பது அதுவா என்ற நிச்சயமேதும் இல்லாதபோதும். வாசல்தான் நான், நானேதான் வாசல், நானேதான் சந்து, சந்துதான் நான் என்பது போல - எனக்குள் நானே ஓடிக்கொண்டிருப்பேன் போல என்று ஒரு அற்புதமான அனுபவம் - கிட்டத்தட்ட இதே அனுபவத்தை விளக்குவது போர்ஹேஸின் The Zahir, Blue tigers போன்ற கதைகள். முதன்முதலில் 'குறுக்குவெட்டுப் பாதைகளின் தோட்டம்' என்று தமிழ் மொழிபெயர்ப்பில் 1997ல் போர்ஹேஸின் The Garden of forking paths கதையையும், வெகுவாகச் சிலாகிக்கப்பட்ட, பிரமிளின் அற்புதமான மொழிபெயர்ப்பில் அதற்குமுன்பாகவே வந்த 'வட்டச்சிதைவுகள்' (The Circular Ruins) கதையை அதன்பின்பும்தான் படித்தேன். அதன்பிறகு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அவரது பதிப்பான அனைத்துக் கதைகளையும் (Collected Fictions, Jorge Luis Borges, Viking, 1998), சில கதைகளை எண்ணற்ற தடவைகளும் படித்துவிட்டிருந்தாலும், வரிசையாக அவரது கதைகளைப் படிக்க ஆரம்பித்தபின் சிலவருடங்கள் கழித்துத்தான் விளங்கிக்கொள்ளமுடிந்தது மேலே குறிப்பிட்ட சந்துகள் போன்ற ஒரு சந்தில் நுழைந்துவிட்டோமென்று... விமர்சனச் சிக்கல்கள், பிரயத்தனங்களற்ற ஒரு வாசக அனுபவம் என்ற ரீதியில் கூறவேண்டுமெனில். அதன்பிறகு அவரது பிற புத்தகங்களை, அ-புனைவுகளை, ஏன், Book of imaginary beings போன்ற புத்தகங்கள் வரை, அவரைப் 'பற்றிய' புத்தகங்களைப் படித்து முடித்தபோதும், படித்துக்கொண்டிருந்தபோதும், சிக்கிக்கொண்ட 'முடிவற்ற' என்ற ரீதியிலான ஒரு paradoxical cul-de-sac க்குள்ளிருந்து வெளிவந்துவிட்டோம், இல்லை, வெளிவந்துவிட்டோம், இல்லை என்று 1999 முதல் சில வருடங்கள் சற்று உழன்றிருக்கிறேனென்றே தோன்றுகிறது: இதை ஒரு வாசகனின் தற்காலிகத் தேக்கம் என்பதா, அல்லது எழுத்தாளனின் வெற்றி என்பதா என்று தெரியவில்லை. இத்தனைக்கும், மாதத்துக்கு நான்கைந்து புத்தகங்கள் என்ற ரீதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்லூரி வகுப்பறைகளின் கடைசிபெஞ்ச்சில், நள்ளிரவுக்குப் பின்னர் என்று இடது வலது பாராமல் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் படித்த கணக்கற்ற புனைவுகளனைத்தையும் போர்ஹேஸின் கதைகளின் வீச்சுடன் ஒப்பிட்டு நோக்கத்தோன்றியபோதுதான் ஒவ்வொரு தனிப்பட்ட வாசகன்மேலும் ஒரு எழுத்தாளரின் தாக்கம் தூக்கலாக இருக்குமென்பதை ஒப்புக்கொள்ளமுடியுமளவு விளங்கிக்கொள்ளமுடிந்தது - என்ன இருந்தாலும் தி.ஜா போல வராது, என்ன இருந்தாலும் ஜெயமோகன் போல வராது, என்ன இருந்தாலும் சுஜாதா போல வராது என்ற ரீதியைத் தாண்டிய ஒரு தளத்திலும் கூட. Raising the bar என்பார்களே, அதுபோல: 'Funes the memorious', 'Pierre Menard, author of the Quixote', 'The Aleph', 'Tlon Uqbar Orbis Tertius', 'The library of Babel', 'Death and the compass', 'Secret Miracle' போன்ற கதைகள், மேலே குறிப்பிட்ட பிற கதைகள் இன்று படிக்கும்போதும், இத்தனை வருடங்களாக அலசிக் காயப்போட்டுவிடப்பட்டபின்னரும், குறைந்தபட்சம் என்னளவிலாவது வேறேதோ ஒரு அதீதத் தளத்தில் உலவிக்கொண்டிருக்கின்றன. "அணுவைத் துளைத்தேழ் கடலைக்குறுக்கி குறுகத் தரித்த குறள்" (சரியா?) என்ற ரீதியில், போர்ஹேஸ் எழுதிய கதையின் அதிகபட்ச நீளமே கிட்டத்தட்ட பதினைந்து பக்கங்கள்தான் என்பதைக்கொண்டும், "போர்ஹேஸ் இல்லையெனில் லத்தீன் அமெரிக்க நாவலே இல்லை" என்று கூறப்படுமளவு அச் சிறுகதைகளின் தாக்கம் இருந்ததையும் வைத்துப் பார்க்கும்போது, இலக்கியத்தில் ஒரு மிகப்பெரும் paradigm shiftஐச் சில சின்னக் கதைகள்கூட உருவாக்கமுடியுமென்பதும், பக்க எண்ணிக்கைகள் ஒரு கணக்கல்ல என்பதும் விளங்கவே செய்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்களில் போர்ஹேஸின் கதைகளைப் படிக்கும்போது பெரும்பாலும் சிக்கலாயிருப்பது, பெரும்பாலான பெயர்ச்சொற்களின் உச்சரிப்புப் பிறழ்வும், வார்த்தைத் துல்லியங்கள் பற்றிய கவனமின்மை/போதாமையும் - பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் வந்த கதைகள் உட்பட. இதைத் தவறெனச் சுட்டிக்காட்ட முடியாதென்றே நினைக்கிறேன் - சில மொழிகளின் pun கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படக்கூடிய சாத்தியமேயற்றவை என்பதே நிஜம். Through the looking glassல் வரும் Jabberwocky யைத் தமிழில் மொழிபெயர்க்க முயல்வது போல!! மேற்கொண்டு ஏதோ எழுதலாமென்று நினைத்தேன், மறந்துவிட்டேன்... இன்றுடன் நட்சத்திரத்தின் ஃப்யூஸ் பிடுங்கப்படுவதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன் ;-) மற்றொருமுறை, அனைவருக்கும் நன்றி...

படம் நன்றி: Modernword

24 comments:

Venkat said...

இந்த வாரம் (மாத்திரமல்ல) உங்கள் பதிவுகள் அனைத்தையும் இரசித்துப் படித்தேன். நன்றிகள்.

போர்ஹேயின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொஞ்சம் படித்துவைத்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் படிக்க ஆசை. உங்கள் இந்தப் பதிவு அதற்கு இன்னும் தூபம் போட்டிருக்கிறது.

-/பெயரிலி. said...

ஓஸ்கார் பார்க்க ஓடமுன்னால், வாரம் ஒன்றே செய்தீர்; அதுவும் மிக நன்றே செய்தீர். நிறைய அறிந்து கொண்டேன். நன்றி.

Thangamani said...

நன்றி. நல்ல பதிவுகள்!

இளங்கோ-டிசே said...

Montresor, You did an excellent job for a week. We all were impressed by your postings. Like, Peyarili said, I'm in the middle of Oscar. Yeah, Enjoying Chris Rock comments about 9/11 and the Passion of the Christ.
{Sorry to write in English}

Narain Rajagopalan said...

மாண்டீ ஒரே வார்த்தை - கொன்னுட்டிங்க1[இதையும் அபூர்வ சகோதரர்கள் வசனத்தையும் போட்டு குழப்பிக்க வேண்டாம் ;-)] நிறைய விசயங்களை ஒரு விரிவான தளத்தில் முன்வைத்திருக்கிறீர்கள். இவையனைத்தையும் படிக்க முயற்சிக்கிறேன்.

டிசே, பெயரிலி வயித்தெரிச்சலை கொட்டிங்காதீங்கய்யா....நாங்க இங்க பார்க்க முடியாது, அதுகூட சென்னையில் மட்டும்தான் நற...நற....

ROSAVASANTH said...

மாண்ட்ரீ, ஒருவாரம் இருந்தாலும் அதை திருவாரமா இருந்தது.

என்னால் எதையும் மறுமொழிய முடியவில்லை. விரிவாக பிறகு வரமுடியுமா என்று கூட தெரியாததால் இப்போதைக்கு இதை தட்டி வைக்கிறேன்.

துளசி கோபால் said...

வாரம் முழுவதுமே நல்ல பதிவுகளாத்தான் போட்டீங்க! வாழ்த்துக்கள்!!! நல்லா இருங்க!
என்றும் அன்புடன்,
துளசி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
ஈழநாதன்(Eelanathan) said...

மாண்டீ
அருமையான வாரம் இன்னும் கொஞ்சம் எழுதமாட்டீர்களா என்ற ஏக்கம் எழுகிறது.போர்ஹேயின் புலிகள் என்ற கட்டுரையை உயிர்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார்.இப்போதுதான் நூலகத்தில் போர்ஹேயின் கதைகள் தொகுப்பைக் கண்டுபிடித்திருக்கிறேன் நீங்கள் சொல்லிவிட்டீர்களல்லவா இனி வாசிக்கவேண்டியதுதான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Duh! I have deleted all 8 responses. grrrr...

Montresor, this week has been great[as all weeks are. :)]

Mookku Sundar said...

உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் உங்கள் ரசனைத்தளத்தின் ஒரு ஓரத்தையாவது தொட்டு விட முடியும் என்பது ஒரு ஆசைதான்.

தினமும் எழுத முயலவேண்டாம். குறைவாக எழுதினாலும், விரிவாக, நைறைவாக எழுதுங்கள் இப்போது போலவே. துணுக்கு எழுத என்னைப் போல ஏராளமான பேர் இருக்கிறோம் இங்கே.

சன்னாசி said...

வெங்கட், பெயரிலி, தங்கமணி, டிஜே, நாராயண், ரோஸாவசந்த், துளசி, ஈழநாதன், சுந்தர், gr8 என்று மின்னஞ்சல் மொழி ஸ்டைலில் போடநினைத்தோ என்னமோ unabbreviated ஆக எட்டுப் பின்னூட்டங்களை symbolicஆக இட்டு நீக்கிய (அல்லது இட்டு symbolicஆக நீக்கிய ;-)) மதி - அனைவருக்கும் மிக்க நன்றி (ஆஸ்கார் விருது விழாவைப் பார்த்ததால் வந்த நன்றிசொல்லும் எஃபக்டு - கண்டுகொள்ளவேண்டாம்....!!).

ஈழநாதன், வெங்கட் - இன்னும் கொஞ்சம் எழுதலாமென்றுதான் நினைத்தேன் போர்ஹேஸ் பற்றி - எங்கே தொடங்குவதென்று குழப்பம், நேரமின்மை. பிறகொரு தரம் எழுத முயலலாம்... Borges, a life (Edwin Williamson) என்ற அவரது வாழ்க்கைச்சரிதத்தைச் சில வாரங்களுக்குமுன்புதான் வாங்கினேன், காத்திருக்கிறது படிக்க...

நாராயண், சென்னையில் பார்க்கமுடியாதா? ஏன்?

சுந்தர்: நான் சந்தித்து, வாழ்க்கைச்சுழலில், நெருக்கடியில் தொலைத்த சில நண்பர்களுக்குமுன் இதெல்லாம்/நானெல்லாம் வெறும் சுண்டைக்காய்... இருந்தாலும், நன்றி, முடிந்தமட்டும் முயல்கிறேன்...

Anonymous said...

மாண்டி, சில எழுத்துக்களை பார்க்கும்பொழுது, ஒற்றை வரியில் நன்றாக இருக்கிறது என்றோ, சூப்பர் என்றோ சொல்ல கூச்சமாய் இருக்கும். ஆனால் அதை தாண்டி எதுவும் சொல்ல முடியாத நிலைமை. வெங்கட்டின் பதிவில் மறுமொழிகள் படித்ததும், கற்றுக் கொண்ட நிறைவு. அங்கு என்ன என்னால் எழுத முடியும்? மூக்கன் சொன்ன மாதிரி, தினமும் வேண்டாம், நீங்கள் எல்லாம் வாரமொரு முறை எழுதுங்கள் போதும். இல்லை என்றால் எனக்கு அஜீரணம் ஆகிவிடும் :-))
உஷா

Narain Rajagopalan said...

அந்த கொடுமையை ஏன் கேக்கறிங்க? இந்தியாவில் ஸ்டார் தொலைக்காட்சியில் தான் ஓஸ்கார் 'லைவ்' ஆக வந்தது. சென்னையில் கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் இருப்பதால் [CAS - அது ஒரு தனிக்கதை] சில குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே பார்க்க இயலும். காலையிலிருந்து ஒஸ்கார்.காமே கதியாய் என் செல்லில் மக்களுக்கு விசயதானம் செய்து கொண்டு இருக்கிறேன். என்னத்த சொல்ல, எல்லாம் நேரம்

Chandravathanaa said...

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ரசித்துப் படிக்கக் கூடிய விதமாக நன்றாக அமைந்திருந்தன.
நன்றி

Meyyappan Meyyappan said...

வாரம் முழுவதும் நல்ல பதிவுகள். நன்றி.

கறுப்பி said...

நான் படிக்கும் தளங்களில் தங்களுடையது முக்கியமான ஒன்று. தரமான படைப்புக்களைத் தந்தீர்கள் நன்றி. நட்சத்திர வாரம் முடிந்து விட்டது என்று எழுதுவதை நிறுத்திக் கொள்ளாதீர்கள்

SnackDragon said...

அவ்வப்போது உங்கள் அளவுக்கு மேற்கத்திய இலக்கியம் தெரியவில்லையே என்று உணர்ந்தாலும், அதுக்கு உங்களை குத்த்ம் சொல்லமுடியாது என்ற ஞானம் உள்ளது. :))
சூப்பர் பாம்பு !!

ROSAVASANTH said...

மாண்ட்ரீஸர் உங்க மின்னஞ்சல் முகவரி உங்கள் தளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லையே! வெளியிட முடியாவிடில் ஒரு மெயில் rksvasanth@yahoo.comற்கு அனுப்ப முடியுமா?