Friday, February 25, 2005

முத்தமெனும் சிலந்தி

குளிர்காலத்துக்கொரு கனவு
-ஆர்தர் ரிம்போ

குளிர்காலத்தில், நீலக் குஷன்களுடைய
கத்திரிப்பூநிற ரயில்பெட்டியில் பயணிப்போம்.
சௌகரித்திருப்போம். ஒவ்வொரு மென்மையான மூலையிலும் காத்திருக்கும்
வெறிமிகுந்த முத்தங்களின் கூடு.

உன் கண்களை மூடிக்கொள்வாய், சாயந்தர நிழல்கள் முகங்களை இழுப்பதைக்
கண்ணாடிவழிக் காண விருப்பமற்று.
கரும்பேய்கள், கறுப்பு ஓநாய்களாலான
அந்தச் சிக்கலான ராட்சதர் கூட்டம்!

பிறகு உன் கன்னம் வருடப்படுவதை உணர்வாய்...
உன் கழுத்தைச்சுற்றி ஓர் உன்மத்தச் சிலந்திபோலோடும்
ஒரு சின்ன முத்தம்...

கழுத்தைச் சாய்த்தவாறு என்னிடம் சொல்வாய்: "கண்டுபிடி!"
-வெகுநேரம் எடுத்துக்கொள்வோம் பின்னர்
-ஏகத்துக்குப் பயணிக்கும் அச் சிருஷ்டியைக் கண்டுபிடிக்க...

* * *

நன்றி: A Dream for Winter (Arthur Rimbaud) - mag4
தமிழில்: அதே ரயில்பெட்டியில் பயணித்த(?) ஒரு பாம்பு!!
பிற மாற்றங்கள் நன்றி: நாராயண், கார்த்திக்ராமாஸ்

மொழிபெயர்ப்பில் இன்னும் சரியாக வார்த்தைகள் தோன்றினால், அப்படியே மாற்றி முழுக்கவிதையையும் பின்னூட்டத்தில் இடவும். அல்லது, இதே கவிதையை முதலிலிருந்து நீங்கள் மொழிபெயர்க்க முயலவும். முத்தத்தைச் சிலந்தியாகப் பார்க்குமளவு தீட்சண்யமுள்ள நுட்பவாதியிடமிருந்து முத்தம்பெறுபவர்கள் கொடுத்துவைத்தவர்களென்றே நினைக்கிறேன்!

19 comments:

-/பெயரிலி. said...

/முத்தங்களின் கூடு/
அருமையான சொற்றொடர்.

பாம்பு சிலந்தியைப் பற்றிப் பேசுகிறது. ஹ¥ம்! ;-)

Narain Rajagopalan said...

//உன் கண்களை மூடிக்கொள்வாய், சாயந்தர நிழல்கள் முகங்களை இழுப்பதைக்
கண்ணாடிவழிக் காண விருப்பமற்று.
அந்த ராட்சதர்கள் கூட்டம்! கறுப்புச் சைத்தான்கள், கறுப்பு ஓநாய்கள்.//

//You will close your eyes, so as not to see, through the glass,
The evening shadows pulling faces.
Those snarling monsters, a population
Of black devils and black wolves.//

கண்ணாடியினூடே ஒடிக்கொண்டிருக்கும்
நிழல்படிந்த முகங்கள், இராட்சதர்கள்
சைத்தான்களூம் ஒநாய்களுமானான
மக்கள் கூட்டம்................
கண்களை முடிக்கொள்வாய் எதையும் பாராமல்

சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.....

Thangamani said...

வாவ்!

சன்னாசி said...

நாராயண்: நன்றி - உங்கள் version இன்னும் எளிதாக உள்ளது. The evening shadows pulling faces என்பது, ரயில்பெட்டி வேகமெடுக்கும்போது வெளியே நின்றிருக்கும் முகங்கள் இழுபட்டு அடையும் smudgeஐக் குறிக்கிறதென்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோலும் இருக்கலாம்...
//Those snarling monsters, a population
Of black devils and black wolves// என்பதைச் சொல்லிப்பார்க்கும்போது, ஜன்னல் வெளியில் இருக்கும் மனிதர்களைப்பற்றிய மட்டுமறுத்தப்பட்ட ஒரு வசையுறுமல் போலத்தான் பட்டது. Snarlingஐ விட்டுவிட்டேனென்பதை இப்போதுதான் பார்த்தேன். திருத்துகிறேன் - திருத்திய தடயம் ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன்...எனவே, no strikethrough on any word. 'கூட்டம்' என்பதையும் விட்டுவிட்டேன் - புகுத்திவிடுகிறேன், நன்றி. Those snarling monsters என்பதற்கு அடுத்துள்ள comma, அவர்கள்பற்றிய அருவருப்பைச் சுட்டப் பயன்படும் ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்தப்படுவதாகப் படுவதால், தமிழில் கமாவை எடுத்துவிட்டு, கிட்டத்தட்ட பொருந்திவரும் ஒரு ஆச்சரியக்குறியைப் போடுகிறேன்....

பெயரிலி, சாதாரணச் சிலந்தியாக இருந்தால் பரவாயில்லை, Black widow, tarantula போன்று பாம்பையே சாகடிக்கும் சிலந்திகளாக இருப்பின்!! :O

//உன் கண்களை மூடிக்கொள்வாய், சாயந்தர நிழல்கள் முகங்களை இழுப்பதைக்
கண்ணாடிவழிக் காண விருப்பமற்று.
அந்த ராட்சதர்கள் கூட்டம்! கறுப்புச் சைத்தான்கள், கறுப்பு ஓநாய்கள்.//
-என்று முதலில் மொழிபெயர்த்திருந்ததை

//உன் கண்களை மூடிக்கொள்வாய், சாயந்தர நிழல்கள் முகங்களை இழுப்பதைக்
கண்ணாடிவழிக் காண விருப்பமற்று.
கறுப்புச் சைத்தான்கள், கறுப்பு ஓநாய்களாலான
உறுமும் அந்தச் சிக்கலான ராட்சதர் கூட்டம்!//
-என்று மாற்றிவிடுகிறேன் இப்போது.

ஒரு பொடிச்சி said...

மொ.பெயர்ப்பு நன்றாக இருக்கிறது மாண்ட்ரீஸர், மூலத்தின் உயிர்ப்புக் குறையாமல். very beautiful.
இந்த வாரம், ஓவியம், கதை, கவிதை, திரைப்படம் என்று இந்தக் கலவை நல்லா இருக்கு.

கறுப்பி said...

மண்ட்ரீஸர் நான் கேட்டது அந்த இணைப்பைத் தான் தந்ததற்கு நன்றி. வாசித்தேன் மிகவும் நன்றாக உள்ளது.

Mookku Sundar said...

இந்த வாரம் ஒரே கலக்கலா போய்ட்டிருக்கு. பாதி எனக்கு புரியலைங்கிறது வேற விஷயம். :-)

"இந்தியர்களுக்கு முத்தம் கொடுக்கவே தெரியவில்லை. They suck..."
- சொன்னது ஒரு அமெரிக்கப்பெண். (என்னிடமில்லை...:-) )

கறுப்பி said...

மூக்கன்

இந்தியர்கள் எனும் போது அதற்குள் இலங்கையர்கள் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...

பொ,மூ,க,த: நன்றி.
// "இந்தியர்களுக்கு முத்தம் கொடுக்கவே தெரியவில்லை. They suck..."//
கொடுத்த ஆளுக்கு மூக்கு கொஞ்சம் நீளமோ என்னமோ, இடித்ததோ என்னமோ!! ;-)

SnackDragon said...

சிலந்தி கொடுக்கும் காதலை , நம்மூர் "கட்டெறும்பு" ஏன் கொடுக்க மாட்டெங்குது? :) எல்லாம் சொல்லுகிற விதத்தினாலேதானோ? :)

சன்னாசி said...

சிலந்திக் கடியும் கட்டெறும்புக் கடியும் ஒண்ணா! ;-) வலைபின்னுவது, மாட்டிய ஈயைச் சாகடிப்பது , அற்புதமான ஒரு வடிவம் என்று சிலந்தியின் உருவக மதிப்பே (metaphorical value) தனி என்று நினைக்கிறேன்!! கட்டெறும்புக்கு நான் எதிரியில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்!! (யார்பா, உடைங்க ஒரு சோடா, புஸ்ஸ்ஸ்......)

இளங்கோ-டிசே said...

Montresor, மொழிபெயர்ப்பு அருமை. என்னதான் இருந்தாலும், தாய்மொழியில் வாசிக்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு நிகர் எதற்கும் இல்லை.
கவிதையைப் போலவே,
//முத்தத்தைச் சிலந்தியாகப் பார்க்குமளவு தீட்சண்யமுள்ள நுட்பவாதியிடமிருந்து முத்தம்பெறுபவர்கள் கொடுத்துவைத்தவர்களென்றே நினைக்கிறேன்!//
என்றதும்
//சாதாரணச் சிலந்தியாக இருந்தால் பரவாயில்லை, Black widow, tarantula போன்று பாம்பையே சாகடிக்கும் சிலந்திகளாக இருப்பின்!! //
என்ற உங்களின் வார்த்தைகள் கவிதையயின் வாசிப்பை இன்னும் அடர்த்தி ஆக்குகின்றன.
.....
கார்த்திக், எஙகள் ஊரில் சிலந்திகள் இருந்தாலும் எங்கே அவற்றை பொறுமையாக வலை பின்ன விடுகின்றோம்? கட்டெறும்பு கதையை நீங்கள் சொன்னதன் பிறகுதான், 'சின்ன ராசாவே சிற்றெறும்பு உன்னைக் கடிச்சதா?' என்பது முத்தத்தைப் பற்றிய வரிகள் என்பது புரிந்தது. அர்த்தத்தைப் புரியவைத்தற்கு நன்றி :-).

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

குளிர்காலக் கனா

குளுமை பூக்கும் குளிர்காலம்
கரும்புகை கக்கும் புகையிரதம்
நீல மெத்தெனும் இருக்கைகள்
நீயும் நானும் பயணித்திருப்போம்

இமைகளை மூடி நீ
எதிர்ப்படும் காட்சியைத்
தவிர்த்திருப்பாய்.
சன்னலின் வழியே
மிருகக்கூட்டம்.
கரும்பேய்கள்,
ஓநாய்கள்.

உன் கண்ணத்தை வருடியபடியே
ஓர் சிலந்தியின் ஊர்தலாய் என் முத்தம்
சிலந்திதானோ என்று , என்னிடம்
"கண்டுபிடி " என்பாய்
கழுத்தை சாய்த்த்வாறு.

அந்த சிலந்தியின் பாதையைத்
தொடர்ந்து
பயணித்திருப்போம் வெகுநேரம்
சிலந்திகளோடு.

SnackDragon said...

இமைகளை மூடி நீ
எதிர்ப்படும் காட்சியைத்
தவிர்த்திருப்பாய்
//குழந்தைபோல் //.
என்றிருந்தால் இன்னும் நன்றாகவிருக்குமோ? இப்போது தோன்றியது :)

சன்னாசி said...

நன்றி கார்த்திக்...நல்ல மொழிபெயர்ப்பு... நான் முதலில் செய்ததால் வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டியதாய்ப் போய்விட்டது. உங்களது மொழிபெயர்ப்பில் அதிகச் சுதந்திரமெடுத்துக்கொண்டிருக்கிறீர்களெனும்போதும், அதுவும் நன்றாகவே உள்ளது. 'கறுப்புச் சைத்தான்கள்' என்பதைவிட 'கரும்பேய்கள்' இன்னும் வார்த்தைச் சிக்கனத்துடன், ஒலியொழுங்குடனிருக்கிறது. 'கருஞ்சைத்தான்கள்' என்பதைவிடவும், அர்த்தம்மாறாமலிருப்பதுபோலப் படுவதால், அப்படியே மாற்றிவிடுகிறேன்... நன்றி...

SnackDragon said...

//நான் முதலில் செய்ததால் வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டியதாய்ப் போய்விட்டது.//
அதனால்தானே உங்கள் வார்த்தைகளை உபயோகபடுத்த முடியாமல் மாட்டிக்கொண்டேன். :)
நல்லா இருக்கு என்று சொன்னதற்கு நன்றி; எதிர்ப்பார்க்கவில்லை. :)

ஈழநாதன்(Eelanathan) said...

அருமையானதொரு மொழிபெயர்ப்பு மாண்ட்ரீஸர்,கார்த்திக்கின் மொழிபெயர்ப்பு கூட வித்தியாசமக நன்றாக இருக்கிறது.ஒரே கவிதையின் பல்வேறு மனிதர்களின் மொழிபெயர்ப்பே பல கவிதைகளைத் தரக்கூடும் எனப் புரிகிறது.