முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்டு நிக்ஸன் (குடியரசுக் கட்சி), வாட்டர்கேட் ஊழலில் சிக்கி மரியாதையிழந்து பதவியிழந்த கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பிருந்தும், எதற்கும் இருக்கட்டுமே என்று கூலியாட்களைவைத்து ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்கும் கருவிகளைப் பொருத்திய விஷயம் வெளிவந்ததில் நிக்ஸன் பதவியிழக்க நேர்ந்தது. இந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டைன் இருவரில், இந்த ஊழல் குறித்து முக்கியமான துப்புக்களை பாப் உட்வர்டுக்குக் கொடுத்த 'Deep throat' என்ற பெயரால் மட்டுமே குறிக்கப்படும் நபரின் அடையாளம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பாப் உட்வர்ட், Deep throat இறக்கும்வரையில் அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லுவதில்லை என்று உறுதிமொழியிட்டு, இன்றுவரை சொல்லாமலே இருக்கிறார். நேற்று சி.என்.என்னில், Deep throat நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டபோது, இது உண்மையா இல்லை வெறும் புரளியேவா என்று சந்தேகமே ஏற்பட்டது முதலில். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எத்தனை தியரிகள் இதுவரை கூறப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ள deep throat என்று கூகிளில் கொடுத்துப் பாருங்கள். இந்த வாட்டர்கேட் ஊழல், ராபர்ட் ரெட்ஃபோர்ட், டஸ்டின் ஹாஃப்மேன் நடித்து All the President's men என்ற படமாக வந்திருக்கிறது. பத்திரிகைத் துப்புத்துலக்கலையும் வைத்து இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்கமுடியும் என்று நிரூபித்த ஆலன்.ஜே.பக்கூலா படம்.
வாட்டர்கேட் ஊழலைப்பற்றிய வாஷிங்டன் போஸ்ட்டின் முழு விவரணத்தொகுப்பு இங்கே.
Tuesday, February 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பாம்பு,
இன்னொரு படம் பார்த்திருக்கிறீர்களா - Nixon. அது கூட வாட்டர்கேட் ஊழலை தொட்டிருக்கும். All the president's men பார்க்கவில்லை இதுவரை.
ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினாலே என் விருப்புப்படங்களிலே ஒன்று; வோட்டர்கேட் சம்பந்தப்பட்டதால்; பிடித்த நடிகர்களான டஸ்டின் ஹொப்மென், ரொபேர் ரெட்போர்ட் நடித்ததால்; அது எடுக்கப்பட்ட விதத்திலே. ஆனால், உண்மையான பேன்ஸ்ரைன், உவுட்வேர்டுக்கும் படத்திலே வந்தவர்களுக்குமிடையிலே வித்தியாசங்கள் உண்டு. Deep Throat பற்றி இந்த வருடம் பேசப்படுவது இதுவல்ல முதன்முறை; இந்த Deep Throat இற்குப் பெயர் தந்த அந்த Deep Throat பற்றி ஏற்கனவே ஒரு விவரணம் வந்து இந்த வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
என்னைப் பொருத்தவரை வாட்டர்கேட் என்பதெல்லாம் நம் நாட்டிலும் மற்ற தேசங்களிலும் நடந்தவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்றுமேயில்லை. நிக்ஸன் செய்தது ஒரு தேவையற்ற முட்டாள்தனமானக் காரியம். அவர் மேல் ஒன்றும் அப்படியெல்லாம் அனுதாபம் இல்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு அச்சமயம் நம் நாட்டு இடதுசாரியினர் தேவையற்ற ஆட்டம் போட்டனர். அவர்களின் புண்ணியத்தலங்களாகிய சோவியத் யூனியனும் மக்கள் சீனமும் செய்யாத அட்டூழியங்களா? நம்மூர் அன்னை இந்திரா செய்யாத அடாவடிகளா?
ஒரு பிரெஞ்சு நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்: "வாட்டர்கேட்? நாங்கள் எத்தனை முறை எங்கள் அரசாங்கத்தால் வாட்டெர்கேட் செய்யப்பட்டோம் என்று உங்களுக்குத் தெரியுமா?"
இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் நிச்சயம். அதாவது அமெரிக்காவின் அபரிதமானப் பத்திரிகைச் சுதந்திரம். சோவியத் யூனியனின் அக்கால நிரந்தர ஜாலராவான ப்ளிட்ஸ் கூட வேண்டா வெறுப்பாக இதை ஒத்துக் கொண்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Deep throat என்பது வெறும் அடித்தொண்டைக் குரல் என்பதைk குறிக்க உபயோகப்பட்ட பெயர் என்று நினைத்தேன் -பெயரிலி, நீங்கள் கொடுத்த சுட்டி சரிதானா? சரி என்றால், அது எனக்குத் தெரியாத தகவல்! :-O
தமிழ்ப்பாம்பு,
Deep Throat என்ற சொல் அடையாளம் காணப்படாத 'மர்ம மனிதன்' இனைக் குறிக்க நீங்கள் சொன்னதுபோல பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அந்தப்பெயரை இடக் காரணமானது, மேலே சொன்ன முதலாவது பேரோட்ட 'நீல'ப்படமான Deep Throatதான் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். இணையத்திலே அது தொடர்பான குறிப்பினைத் தேடிக் கிடைப்பின், இணைப்பினை இங்கே இடுகின்றேன். அந்த Deep Throat இற்கு ஏன் அப்படியான காரணப்பெயர் என்ற கேள்வி யாராவது எழுப்பமுன்னால், ஓடியே ஓடிவிடுகிறேன் :-)
இந்த deep throat விசயம் சுவாரசியமா இருக்கே!
Deep Throat கைகளிலே அகப்பட்டுக்கொண்டது
//Deep Throat கைகளிலே அகப்பட்டுக்கொண்டது//
பொடி வைத்து எழுதுவதென்றால் இதுதானோ!! நிக்ஸன் சம்பந்தப்பட்ட ரகசியத் தகவல்கொடுத்த Deep throatன் வேர்ப்பதம் இங்கிருந்து வந்ததென்பது எனக்குப் புதிய தகவல். நன்றி :)
Post a Comment