ஒரு இறப்பு, ஒரு திரைப்படம். நாடகாசிரியர் ஆர்த்தர் மில்லர் நேற்று இறந்துபோனார். Death of a salesman என்பது அவரது மிகப் பிரபலமான நாடகம் - டஸ்டின் ஹாஃப்மன், ஜான் மால்க்கோவிச் நடித்துப் படமாகவும் வந்திருக்கிறது. ஏகப்பட்ட நல்ல விமர்சனங்கள் அதைக்குறித்து இருப்பினும், திரைப்படம் என்ன காரணத்தாலோ பிடித்ததில்லை. சிலகாலம் மேரிலின் மன்ரோவின் கணவனாகவும் இருந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய.
நேற்று Motorcycle diaries படம் - எர்னெஸ்டோ 'சே' குவாராவும் அவரது நண்பர் ஆல்பர்ட்டோ க்ரானடோவும் தென்னமெரிக்கக் கண்டம் முழுதுமாக ஒரு மோட்டார்சைக்கிளில் தொடங்கி, பின் கிடைத்த வழியில் பிரயாணம்செய்கிறார்கள். க்ரானடா ஒரு உயிர்வேதியியலாளர், எர்னெஸ்டோ, ஒரு செமஸ்டர் மட்டுமே முடிப்பதற்குப் பாக்கிவைத்திருக்கும் மருத்துவக்கல்லூரி மாணவர். பிரயாணத்தில் தென்னமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும் காணும் வறுமை, ஒடுக்குமுறை, நோய், சுரண்டல் அவலக்காட்சிகளாலும் காலனியாதிக்கத்தினால் சிதைந்த கலாச்சாரங்களின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, பெருவின் பூர்வகுடி இன்காக்களின் மலைமுகட்டு கோட்டை நகரமான மச்சு பிச்சுவில் தன்னையறியாமல், "துப்பாக்கியின்றிப் புரட்சி சாத்தியமில்லை" என்று கூறுவதின்மூலம், எர்னெஸ்டோ, 'சே'வாகத்தொடங்கும் காலகட்டம்வரை நீள்கிறது படம். சேகுவாரா எழுதிய Motorcycle diaries மற்றும் ஆல்பர்ட்டோ க்ரானடோ எழுதிய Traveling with Che Guevara (என்று நினைக்கிறேன்) இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். தென்கோடி அர்ஜென்டினாவில் ப்யூனஸ் அயர்ஸில் தொடங்கும் பயணத்துடன் தொடங்கும் படம், பல தென்னமெரிக்க நாடுகளைத்தாண்டி, பெருவில் சான் பாப்லோ (San Pablo) தொழுநோய் முகாமில் சிலகாலம் தங்கி மருத்துவச் சேவைசெய்து, பின் பயணத்தை வெனிஸூலாவில் முடித்து, நண்பர்கள் இருவரும் பிரிந்துசெல்வதுடன் படம் முடிகிறது. இரவில் சிலி நாட்டில் பாலைவனத்தில் நடந்துசென்றுகொண்டிருக்கும் எர்னெஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் சுரங்கக் கூலிவேலைசெய்யும் ஒரு தம்பதி சந்திக்கிறது. அந்தப் பெண் கேட்கிறாள்: "எதற்காகப் பிரயாணம் செய்கிறீர்கள்?" ஒருநிமிடம் எர்னெஸ்டோவுக்கு ஒன்றும் புரிவதில்லை, நிதானித்துப் பின் நிச்சயமின்றிப் பதிலளிக்கிறார்: "பிரயாணத்துக்காக". அந்தப் பெண்ணின் முகம் சலனமற்று இருக்கிறது. எர்னெஸ்டோவின் பதில் கல்லில் மோதிய மழைத்துளி போல அவளில் மோதிச் சிதைந்து வீழ்கிறது. வாழ்க்கையின் நிர்த்தாட்சண்யத்துக்குமுன்னான தனது பதிலின் பலஹீனத்தை வேதனையுடன் உணரும் எர்னெஸ்டோ, தன் மேலங்கியையும் வேறுசில பொருட்களையும் கழற்றிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்கிறார்.
சில காட்சிகள் திரைப்படத்துக்கேயுரியவகையில் நாடகீயமாகப் பட்டாலும், அதிகம் உறுத்துவதில்லை. சேகுவாரா பற்றிய வெவ்வேறு விமர்சனங்கள் இருப்பினும், அரசியல் சித்தாந்தங்கள் என்பவற்றைத் தாண்டி, மனித அவலத்தைக்கண்டு தனிமனிதனொருவன் பெறும் உந்துதல் என்ற ரீதியிலாவது பார்க்கமுடிந்ததில் மகிழ்ச்சியே. எர்னெஸ்டோவாக நடித்திருக்கும் கயேல் கார்சீயா பெர்னால் (Gael Garcia Bernal) மற்றும் அவரது ப்ளேபாய் நண்பனாக வந்து, பின்னர் க்யூபாவில் Santiago School of Medicineஐ ஸ்தாபித்த ஆல்பர்ட்டோவாக நடித்த ரோட்ரிகோ டி லா செர்னா இருவரும், படம் சொல்வதுபோல "சிறிதுகாலம் இணையாகச் சென்ற இரண்டு வாழ்க்கைகளைப்பற்றிய குறிப்புக்கள்" என்பதை வெகு அழகாகச் சித்திரித்துள்ளார்கள். குறிப்பாக, வளர்ந்துவரும் மிகத்திறமையான நடிகர் என்றே பெர்னாலைச் சொல்வேன். தமிழில் சூர்யா நினைவுதான் வருகிறது. இதைத்தவிர இன்னும் மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன் - Amores Perros, Y tu mama tambien, The Crime of Father Amaro - வளர்ந்துவரும் இந்த மெக்ஸிக சூப்பர்ஸ்டாருக்கு யாராவது ரசிகர்மன்றம் திறந்தால் சொல்லியனுப்புங்கள், இணைந்துகொள்கிறேன் ;-)
மோட்டார்சைக்கிள் டயரீஸ் படம் நன்றி: Amazon
Saturday, February 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
வேறு என்ன சொல்ல! கலக்குங்கள், தொடருங்கள்!
நல்ல பதிவு. அண்மையிலே Arthur Miller-Elia Kazan இருவருக்குமிடையே Marlin Manroe, Mc Carthy Era குறித்த நாட்களிலான ஒரு விவரணத்தைப் பார்க்கமுடிந்தது. பின்னாலே. அதிலே Mc Carthy காலத்திலே Arthur Miller பற்றிய இன்னொரு பக்கமே எனக்கு அவரிலே மதிப்பினை ஏற்றியது.
Bernal, Almodந்var இன் இயக்கத்திலே நடித்துச் சென்றாண்டு அவருடைய La Mala educaciந்n வந்தது. அது பற்றிய செவ்வி ஒன்றை (Charlie Rose உடன்) பார்க்கக்கிடைத்தது. Almodந்var இன் வழக்கமான பால்மாறி ஆடையணிவு உட்பட்டெல்லாம். செவ்வியிலே பார்த்தால், அநியாயத்துக்கும் வெட்கப்படும் இளைஞராக Bernal இருக்கின்றார். Y tu mama tambien ஒரு விதமாக Summer 42, அழியாதகோலங்கள் சாயலடிக்கவில்லையா? :-)
சென்ற வாரமும் இந்த வாரமும் Fidel Castro பற்றி ஓர் இரு மணிநேர விவரணம் PBS அலைவரிசையிலே நாடு முழுக்கப்போகின்றது. கிடைத்தாற் பாருங்கள். கொஞ்சம் கோணலான (அமெரிக்கக்கியூபரின்) பார்வை என்றாலுங்கூட, நல்லதொரு காட்சித்தொகுப்பு.
விபரமான பின்னூட்டம்
:-(
சொல்லவந்தது,
"விபரமான பின்னூட்டம் பின்னாலே"
நல்ல பதிவு. சென்றவாரம்தான் இந்தப்படம் பார்க்க எண்ணி இங்கு பல்கலைக்கழக நூலகத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு ரஷ்யர் எழுதிய சே என்ற புத்தகத்தைப் படித்தபொழுது இந்தப்பயணத்தைப் பற்றி அறிந்துகொண்டேன். பின் இது படமாக வந்திருப்பதை சமீபத்தில் அறிந்துகொண்ட போது பரவசமும், பயமும் ஒருங்கே அடைந்தேன் (மோகமுள் அனுபவத்தால்). இப்போது உங்கள் பதிவைப்படித்த பிறகுதான் துணிந்து பார்க்க முடிவு செய்தேன். நன்றி!
Montresor, நீங்கள் எங்கைய்யா இருக்கின்றீர்கள்? ரோசாவசந்திற்கு wine+fried chicken+fried fries ரெசிப்பி கொடுத்தவுடனேயே உங்களுக்கு பக்கத்திலோ அல்லது ரோசாவசந்திற்கு பக்கத்திலோ ஒரு இடம் எடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ரோசாவசந்த் என்னைப்போன்றவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துவிடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கையில் ஜப்பானிற்கு போய் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கை நடத்துகிறார். தமிழ்ப்பாம்பு தான் இப்போதைய கடைசி நம்பிக்கை. சரி அதை விடுங்கோ.
மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புக்கள் தியேட்டரில் திரையிடப்பட்டபோது (selected theatres only) பார்க்கவேண்டும் என்று ஆவலில் அடிக்கடி show time எல்லாம் பேப்பரில் பார்ப்பேன். ஆனால் ஒருத்தரும் இப்படியான படம் பார்க்கவரமாட்டார்கள் என்று கையைவிரித்துவிட்டததால் வேறொன்றும் செய்யவியலாது, rage against the machine என்று எழுதப்பட்டு சேகுவராவின் படம் போட்ட t-shirt ஒன்றை வாங்கி என்னை ஆசுவாசுப்படுத்துக்கொண்டேன் :). இப்ப DVDயில் வந்துவிட்டால் ஒருக்கா பார்த்துவிடவேண்டியதுதான். பதிவுக்கு நன்றி, படத்தைப்பார்க்கவேண்டும் என்ற என் ஆவலை இன்னும் தூண்டியதற்கு.
சில தினங்களுக்கு புத்தக்கடையில் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தபோது சேகுவராவின் புத்தகம் ஒன்று (பெயர் மறந்துவிட்டது) கண்ணில்பட்டது. அதைவிரித்தபோது, சேகுவரா பொலிவியாவிற்கு போக முன்னர் காஸ்ரோவுடன் மற்றும் தனித்து எடுத்தபடங்களைப் பார்த்தபோது தாடியும் தொப்பியும் இல்லாது கோட்டும் சூட்டும், clean shaveவுமாய் சேகுவராவைப் பார்த்தது எனக்கு புது அனுபவம்.
/rage against the machine என்று எழுதப்பட்டு சேகுவராவின் படம் போட்ட t-shirt ஒன்றை வாங்கி என்னை ஆசுவாசுப்படுத்துக்கொண்டேன் :)./
EEEEEEEEEEEEEEEErrrrrrrrrrr!
http://ravisrinivas.blogspot.com/2005/01/i-2005.html
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110290243165236074.html
அய்யய்யோ matter அப்படியா போகின்றது? ஆளை விடுங்கடா சாமி.
அதுசரி, நான் யாரோ விற்ற t-shirtஜத்தான் வாங்கினேன். சிலரெல்லாம் சேகுவராவின் பெயரையெல்லாம் சேர்த்துவைத்துக் கொண்டு 'அலைவதாய்' காற்றுவாக்கில் கேள்விப்பட்டிருக்கின்றேன் :)).
ஆஆ டிசே நீங்களுமா?ரவியின் கட்டுரை படித்துவிட்டு என்னிடமிருக்கும் சிவப்பு பிண்ணணிக் கறுப்புச் சே இலகுரக ஆடை(பெயரிலி டி.சேர்ட்டுக்கு என்ன தமிழ்)பற்றி சொல்லாமல் மறைத்துவிட்டேன்.
சேகுவேரா வாழ்வும் மரணமும்,கனவிலிருந்து போராட்டத்திற்கு இரண்டு நூல்களும் வாங்கி வைத்திருக்கிறேன்.இப்போதுதான் வாழ்வும் மரணமும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.கனவிலிருந்து போராட்டத்திற்கு நூல் அவரது மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் தென்னமரிக்க பயணக் குறிப்புகளை உள்ளடக்கியது.ஆனால் ஒரு பதிவில் பொலிவிய நாட்குறிப்புகள் பற்றி ஒரு குறிப்புப் படித்தேன்.கனவிலிருந்து போராட்டத்திற்கு நூலில் அதுவும் உள்ளடங்குமா இல்லையா என்று பெயரிலிதான் சொல்ல வேண்டும்.
பெயரிலியிடம் எனக்கிருக்கும் ஒரே கோபம் சே என்றொரு புனைபெயர் வைப்பமெண்டால் சித்தார்த்தா சேகுவேராதான் முன்னாலை நிக்குது.உரிமக் காப்பு அப்படி ஏதும் எடுத்து வைச்சிருக்கிறாரோ தெரியேலை
// பால்மாறி ஆடையணிவு உட்பட்டெல்லாம்//
பார்த்ததில்லை. Transvestites பற்றியா சொல்லவந்தது? வாய்ப்பிருப்பின், ரோமன் போலன்ஸ்கி இயக்கி நடித்த 'The tenant' பார்க்கவும். பெர்னாலுக்கு ரஜினி மாதிரி கூர்மையான கண்கள்!! என்ன, எஸ்பிபி பின்னணிக் குரலில் அறிமுகப் பாட்டுதான் இருப்பதில்லை.
அழியாத கோலங்கள்: தமிழில் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று - காரணமே தெரிவதில்லை, ஒருவிதமான infantile loyalty அதன்மீது.... அந்த ஒரு படத்தில் நடித்ததற்காகவே வெண்ணிற ஆடை மூர்த்தியின் பிற படங்களை மன்னிக்கலாம்.....
Amores Perros இல் எந்த பாத்திரமாக வருகிறவர் என்று சொல்லமுடியுமா ? (நாய் சண்டைக்கு நாய் வளர்க்கும் இளைஞனா?) சேயின் வாழ்வும், மரணமும் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த படத்தை இங்கு தேடிப் பார்க்கிறேன். Y tu mama tambien டிவிடி இருக்கிறது, ஆனாலும் இன்னமும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
ஈழநாதன், டிசெ ..சீனிவாசின் கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். என் வலைப்பதிவின் புகைப்படமே, சே பாதிப்பில்தான் இருக்கும். சிகப்பிற்கு பதில் பச்சை. ஆனால், அதற்கு, அ.மார்க்ஸின் எதிர்வினையை அடுத்த இதழில் படித்தீர்களா ? சே வின் மீது இருக்கும் சில விமர்சனங்களையொட்டி அமைந்த பார்வை அது. பொலிவிய நாட்குறிப்புகள் யார் வெளியிட்டுள்ளார்கள் என்ற விவரங்கள் இருக்குமா ? படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
தொடர்ந்து, தென்னமரிக்க படங்கள் பார்த்து வருவதால், கொஞ்சம் லேட்டாக, ஸ்பானிஷ் கற்றுக் கொள்ளும் ஆசையும் வந்திருக்கிறது ( இது மாதிரிதான் பிரெஞ்ச் ஆசையும் அப்புறம் போய்விட்டது..அதனால சீரியஸா எடுத்துக்க தேவயில்லை)
நாராயண் - ஆம்: அமோரஸ் பெர்ரோஸில் நாய்ச்சண்டைக்கு நாய் வளர்க்கும் ஆக்டேவியோ என்ற இளைஞன் பாத்திரம்.
அப்படியே, அமோரஸ் பெர்ரோஸில் ஒரு கூலிக் கொலைகாரருக்கு கார்ல் மார்க்ஸ் மாதிரி தாடி மீசைவைத்துக் கலாய்த்திருப்பார்கள்...
மாண்ட்ரீஸர் முதன் முறையாக சிங்கப்பூரில் இருக்க நேரிட்டதையுற்று கவலைப்படுகிறேன்.இந்தப் படமெல்லாம் இங்கு கிடைக்காது(ஒருவேளை எனது கண்ணுக்கு அகப்படவில்லையோ)உங்கள் பதிவுகள் சேமித்து வைக்கவேண்டியவை.
நரைன் உயிர்மை இப்போதுதான் கையில் கிடைத்தது வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.சாருவிடம் உங்களைப்பற்றிக் கேட்டேன் நல்ல நண்பர் என்று சொன்னார் அவசரத்தில் நிறையப் பேச முடியவில்லை.சாருவே தனக்குப் பிடித்த வேற்று மொழி எழுத்தாளர்களது சிறுகுறிப்புடன் அவர்களது சிறுகதைகளை மொழிபெயர்த்து கடற்கன்னி என்று வெளியிட்டிருக்கிறார்.எடுத்து வந்திருக்கிறேன் இனித்தான் வாசிக்கவேண்டும்
பொலிவிய நாட்குறிப்புப் பற்றி காந்தளகத்தின் www.tamilnool.comதளத்தில் பார்த்தேன்
படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
மாண்டீ, உங்களிடம் நீங்கள் எழுதிய உலகப்படங்களைப் பற்றிய கோப்புகள் தனியாக உள்ளதா ? மாற்று/உலக சினிமா பற்றிய உங்களின் பதிவுகள் மிக முக்கியமானவை. இவை அனைத்தையும் ஒரு கூட்டு வலைப்பதிவில் சேமித்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களின் அனுமதியையும், இந்த திட்டத்தின் சாதக பாதகங்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
நாராயண்: பொதுவாக, வலைப்பதிவில் எழுதும் text file-களின் backup கூட, சில பதிவுகளைத்தவிர பொதுவாக வைத்துக்கொள்வதில்லை. பொதுத்தகவலுக்காக கூட்டு வலைப்பதிவில் சேர்த்துவைக்க என் பதிவுகளை உபயோகித்துக்கொள்வதில் எந்த ஆட்சேபணையுமில்லை - வணிக ரீதியாகப் போகாத வரை! கூட்டு வலைப்பதிவு என்பது வரவேற்கத்தக்க ஒன்றே. சாதகங்கள் மட்டுமே இருக்கிறதே தவிர, பாதகங்கள் எதுவும் தோன்றவில்லை. இந்த வலைப்பதிவில் திரைப்படம் குறித்து எதை எழுதினாலும், தாராளமாக அதைப் பொது வலைப்பதிவில் உபயோகித்துக்கொள்ளலாம் - எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை.
நன்றி மாண்டீ. வணிக ரீதியில் என்ன பிரச்சனைகள் வருமென்று நினைக்கிறீர்கள். எனக்கொன்றும் தற்போது தோன்றவில்லை, ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். யோசிக்க உபயோகமாய் இருக்கும்.
நாராயண்: பிரச்னைகள் என்பதல்ல மனதில் தோன்றியது. இஷ்டம் குறைவு, அவ்வளவுதான். அது ஒரு தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. மற்றபடி, முன்பே சொன்னபடி, பொதுவில் உபயோகப்படுமெனில், தாராளமாக உபயோகித்துக்கொள்ளுங்கள். My pleasure.
நான் இன்னும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. நண்பன் ஒருவன் சிலாகித்த விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்: Dude, Where's My Revolution?
பாலா, விமர்சனத்தைப் படித்தேன்; நன்றி. பொதுவாக, ஒரு பிரபலமான ஆளுமையைப்பற்றிப் படம் எடுக்கும்போது பல்வேறு தரப்புகள் முறுக்கிக்கொள்வது இயல்பு. நீங்கள் குறிப்பிட்டுள்ள விமர்சனத்தில் சொல்லப்பட்டிருப்பது, "சேகுவாரா என்ற ஆளுமையைப்பற்றிச் சொல்லாமல் சும்மா ரொமான்டிசைஸ் செய்துவிட்டார்கள்" என்ற ரீதியிலான சுட்டிக்காட்டல். ஓரளவு அதில் உண்மை இல்லாமலில்லை. நாடகீயத்தனமான காட்சிகள் உள்ளன என்று நானும் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் படம், எர்னெஸ்டோ குவாரா என்ற மருத்துவக்கல்லூரி மாணவன், 'சே'வாக ஆவதற்கு முந்தைய காலகட்டத்தையே சித்தரிக்கிறது. அந்த விமர்சனம் குறிப்பிடும் புரட்சிகளெல்லாம் அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்தவை என நினைக்கிறேன். பொலிவிய நாட்குறிப்புகளைப் படமாக எடுப்பின் அவற்றுக்கு வாய்ப்பிருக்குமென்று நினைக்கிறேன்.
மாண்ரீஸர் கனேடியத்திரையரங்கில் “மோட்டசைக்கிள் டையரி” பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. “சே” இல் ஒரு காலப்பகுதியை மட்டும் எடுத்துப் படமாக்கியிருப்பதால் பெரிய பாதிப்பை படம் தரவில்லை. இருந்தாலும் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. திரையரங்கில் பல்இனமக்களும் இருந்து பார்த்தார்கள். திரைப்படம் முடிந்த போது எழுந்து நின்று கைதட்டி ஒருவித அஞ்சலி போல் செய்தார்கள். இருக்கும் போது தலைவர்கள் அழிப்பதும்ää இறந்த பின்னர் மக்கள் அனுதாபப்படுவதும் ஒன்றும் புதிதில்லைத் தானே
“கொட்டேல் றொவெண்டா” பார்த்தீர்களா? மனதை நெருடுவைக்கும் திரைப்படம் அது
Post a Comment