Friday, February 11, 2005

பட்ரேபள்ளி விலக்கு

பட்ரேபள்ளி விலக்கு
-மாண்ட்ரீஸர்

கயிற்றுக்கட்டிலின்கீழ் கறுப்பும் வெளுப்புமாகப் படுத்துக் கிடந்தது நாய். விடாமல் அசைந்துகொண்டிருந்தது அதன் வால். ஈரக்கறுத்த மூக்கை மண்தரையில் கொட்டிக்கிடந்து ஊறியும் ஊறாமலும் கிடந்த தேனீரின் அருகில் மெதுவே கொண்டுசென்றுத் தலையைப் பின்னிழுத்து மறுபடி அருகில் கொண்டுசென்று சுவாரஸ்யமற்றுப் பின் தலையைப் பின்னிழுத்துக்கொண்டு திரும்பித் தன் அழகிய விழிகளால் பைக்கைப் பார்த்தது. பைக்கின் பெட்ரோல் டாங்க் கழுவப்பட்டுப் பளபளவென்று மின்னிக்கொண்டிருக்க, நெளிந்து இழுபட்டுப் பாதி திறந்து தெரிந்த கதவு வழி அறைக்குள்ளிருந்த மற்றொரு கயிற்றுக் கட்டிலில் சல்மாவின் மெல்லிய உடலும் கணுக்காலருகில் வாழ்நாள் முழுதும் ஈரமாகவேயிருக்கும் சேலையும் ரோஜாநிறப் பாவாடையும் அவளது கணவனின் எடைக்குக்கீழ் நசுங்கிக்கொண்டிருந்தன. பார்த்தால் பார்க்கட்டும் அதற்குத்தானே வருகிறது என்றான் கணவன். சிவப்புப் பெயிண்ட் அடித்த பேருந்துகள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்று கடந்து சென்றன. சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தியிராத நிலப்பரப்பின் குருதிகரைக்கும் வெயில் அடர்த்தியான கூரைகளுக்குக்கீழ் நுழையவிருப்பமின்றி வெயிலில் அமர்ந்திருந்த கிழவர்களின் தலைப்பாகைகளில் முகச்சுருக்கங்களில் நகக்கணுக்களின் அழுக்கில் தேங்கித் தளும்பிக்கொண்டிருக்க, அங்கே பரவியிருந்த பதினாறு கூரைவேய்ந்த கடைகளைக் குறுக்குநெடுக்காகப் பிளந்திருந்தது நிலப்பரப்பு. நாகமுனெப்பனின் அருகிலமர்ந்திருந்த லாரிக்காரனொருவன், சிமெண்ட் படிந்திருந்த தனது வலதுகையைக் குஸ்காவில் நுழைத்து இடக்கை வெங்காயத்தைக் கடித்து அக்கா இன்னுங் கொஞ்சம் குழம்பு ஊற்று. மெதுவாக எழுந்த நாய் முன்னங்கால்களை வெ-கு முன் வைத்துப் பின்னங்கால்களை வெ--கு பின் வைத்து உடலை நீ---ட்டிச் சோம்பல்முறித்துச் சரசரவென்று கூரைக்கு முட்டுக்கொடுத்திருந்த தடித்த கம்பங்களின் கணுக்களில் தன் பாதங்களைப் பதித்து ஏறத்தொடங்கியது. பெட்ரோல் டாங்க் இன்னும் சற்றுநேரத்தில் நாயை இழந்துவிடும். கம்பங்களில் ஏறிக்கொண்டிருந்த நாய், அலுமினியப்பாத்திரங்களில் கொதித்துக்கொண்டிருந்த கறிக்குழம்பை, அடுத்த அடுப்பில் வறுபட்டுக்கொண்டிருந்த மிளகு மூளையை, உரிக்கப்பட்ட வெங்காய மலைகளை, அடுத்த அடுப்பின் கணப்பின்மேலிருந்த குஸ்காவைச் சிரத்தையற்றுப் பார்த்தவாறு பிரயாணித்து, குடிசைக்கடையின் கூரை உச்சிக்குச் சென்றது.
"வங்க்காயனி ஏமண்ட்டாரு சார்... கத்ரிக்கா காதா?"
சலசலவென்று ச்ள்ள்ட்ச்ச்ச்ச்ப்ப்ள்ளென்று சப்தங்கள் கேட்டன சிலவினாடிகளுக்கு.
"த்தூ நீ யம்ம, உச்ச போசிந்தி தர்த்துரன்னா *** ப்பைனநிஞ்ச்சி..."
குஸ்காத் தட்டை விசிறியடித்த லாரிக்காரன் வெறியுடன் எழுந்து சுற்றுமுற்றும் தேடிச் சில கற்களையும் கையடக்கக் கட்டைகளையும் எடுத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியே ஓடிக் கண்ணாடி டீகிளாஸ்கள் தடுமாறி வீழ்ந்தன. "நீ யம்ம நீ குண்டெ தலக்காயனு பகல***த்தா நேனு" லாரிக்காரனின் கையிலிருந்த கல் ஒரு துப்பாக்கிக்குண்டு போலக் கூரைநோக்கிக் கிளம்பிச்சென்றதை மட்டும் பெட்ரோல் டாங்க்கினால் பார்க்கமுடிந்தது. கடந்துசென்ற லாரியில் கலகல சப்தமா இல்லை லக்கசமுத்ரம் மலைப்பாதையின் வலப்புறத்தில் கல்குவாரி டைனமைட்டுகள் வெடித்த சப்தமா தெரியவில்லை, கூரைமேலிருந்து எழுந்த மரண ஓலத்தின் குளிர்பாய்ச்சும் சிதைவு டாங்க்கின் நெஞ்சைப் பிளந்தது. சக்கரங்கள் துடித்தன. க்ளட்ச்சுக்குப் படக்கென்று கண்ணீர் துளிர்த்தது. லாரிக்காரன் கையிலிருந்து இன்னும் இரண்டு கற்களும் ஒரு தடித்த கட்டையும் கூரைநோக்கிக் கிளம்பிச்சென்றன அதே உக்கிரத்துடன்.

கூரைக்குக்கீழ் வெளியேறிக்கொண்டிருந்த சிகரெட் புகைவளையங்கள், மாமிச வாசனைகள், கயிற்றுக் கட்டிலின் கிரிச் கிரீச் சப்தம், உற்றுநோக்கும் பார்வைகள் மத்தியில், குடிசைக்கடையின் வலதுபக்கத்தில் பாதி வெயிலில் பாதி வெயிலில் மற்றொரு கயிற்றுக்கட்டிலில் மூத்திரமொழுக்கிக்கொண்டு கிடந்த கிழவனின் மார்பில் நெஞ்சைப் பிளக்கும் ஓலத்துடன் கூரைமீதிருந்து நாய் வீழ்ந்தது. கிழவனின் வாய்க்கடையோரம் வழிந்திருந்தது வெற்றிலைச்சாறா நாயின் தலைரத்தமா என்று டாங்க்கினால் தீர்மானிக்க முடியவில்லை. பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கும் கிழவனின் கட்டில் கிடந்த இடத்துக்கும் மத்தியில் கெரோஸின் பம்ப் அடுப்பின் மேல் கொதித்துக்கொண்டிருந்த டீக்கெட்டில்களும் வளைத்த இரும்புக்கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த பாலிதீன் பைக்குள்ளிருந்த பன்களும் கண்ணாடி பாட்டில்களில் அடுக்கப்பட்டிருந்த ஒருரூபாய் பிஸ்கட்டுகளும் மிக்சரும் உக்கானி கலக்கும் அலுமினியத் தட்டும் பொரிப் பையும் கறிவேப்பிலைக் கொத்துக்களும் டாங்க்கின் பார்வையை மறைத்தன. கிழவனுக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு யமஹாவின் டாங்க்கின் பிரதிபலிப்புவழி பார்த்துக்கொண்டிருந்தது டாங்க். பெரும்பாலும் வளைந்தே தெரிந்துகொண்டிருப்பினும், நாய் இன்னும் கிழவனின் நெஞ்சுமேல் கிடந்தவாறு கைகாலை மரணவேதனையில் உதைத்துக்கொண்டிருக்க, கிழவனின் கூச்சல் கடையை உலுக்கியது. சல்மாவின் கணவன் சபித்தவாறு அவள்மேலிருந்து எழுந்து லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு தொப்புளை நோண்டிக்கொண்டு காதைக் குடைந்துகொண்டு வெளியே வந்து, நாயைக் கிழவன் மேலிருந்து அகற்றித் தரையில் போட்டு, லாரிக்காரனை முறைத்தான்.

இரவுநேரங்களில் காவலுக்கிருந்த நாய். என்ன செய்வது இப்போது.

சல்மா அறைக்குள்ளிருந்து வெளியே வந்து, டாங்க்கில் வளைந்து ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்தாள். அதன் வெகு அருகில் வந்து மறுபுறம் நின்றுகொண்டு, கால்களை உயர்த்தி எக்கியவாறு அந்தப்புறத்தில் பார்வையிட்டாள். நாய் இருக்கிறதா செத்ததா என்றாள் தனது பிரத்யேகமான கீச்சுக்குரலில், தலைமுடியை அவிழ்த்துக் கொண்டையிட்டவாறு. முனெப்பன், நாராயணரெட்டி, ஓபுலய்யா இன்னும்பலர் இப்போது கிழவனின் கட்டிலருகிலும் சுற்றியும் நின்று டாங்க்கின் பார்வையை முற்றும் மறைத்துவிட்டகாரணத்தால் சப்தங்களைவைத்தும் தன்மேல் பிரதிபலித்த புட்டங்களைவைத்தும் பெட்ரோல்டாங்க் சித்திரித்துக்கொள்ளத்தொடங்கியது...

நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் மெதுவாகக் கடைவலமூலைக்கயிற்றுக்கட்டிலருகில் வரத்தொடங்கினார்கள். புறப்பட்ட பஸ் கட்டிலருகில் ஒருசிலகணங்கள் தயங்கி நின்று பின் கிளம்பிப் போனது புகைகக்கி. நாயின் வாய் திறந்து திறந்து மூடியது. சம்ப்பேசினாவேரா மூர்க்குடா என்றான் நாராயணரெட்டி. "ஏமன்னா புர்ர உண்ட்டே காதா, வாடி மொக்ஹம்".

சல்மா இன்னும் நாயினருகில் போகவில்லை. வெயிலில் கொதித்துக்கொண்டிருந்த சீட்டின்மேல் காயப்படாமல் கைவைத்து ஊன்றிக்கொண்டு பெட்ரோல்டாங்க்கின்மேல் தன் தொடைகளைச்சாய்த்து எம்பி எம்பிப் பார்த்தாள். சல்மாவின் மகள் அதிர்ச்சிமாறாது விரிந்த கண்கள் தன் இரட்டைச்சடை பூப்போட்ட ஃப்ராக் நடுங்க கண்களில் ததும்பும் கண்ணீருடன் ஓடிவந்து அவள் இடுப்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். பிள்ளையைப் பார்க்க விடாதே என்றான் நாகமுனெப்பன், அங்கிருந்து திரும்பி. எம்பிப் பார்த்துக்கொண்டே தன் மகள் தலையைக் கன்னங்களை ஆதுரமாக வருடிக்கொண்டிருந்த சல்மாவின் கண்ணாடி வளையல்கள் காலதேசவர்த்தமானமற்றுச் சலீர் சலீரென்றன. நாயின் கடைவாய் சொல்லவொணாக் குரூர வேதனையுடன் சுண்டிச் சுண்டி இழுக்க, அதன் கூர்த்த நாய்ப்பற்களைத் தள்ளிக்கொண்டு வெளிவந்து விகாரமாய் இரைத்த நாக்கு சுற்றியிருந்த அனைவரைநோக்கியும் இலக்கற்றுச் சுழன்றது. பீளை தள்ளிப் பிதுங்கியிருந்த கண்களையே அனைவரும் உற்று நோக்கிக்கொண்டிருந்ததாய்ப் பட்டது. சல்மாவின் கணவன் குத்துக்காலிட்டு நாயினருகில் அமர்ந்து அதன் தலையை ஆராய்ந்தான். ரத்தப்போக்கு கூட அவ்வளவாய் இல்லை. சல்மாவின் தொடைகளும் பட்டாம்பூச்சி இறகசைப்புகள் போன்ற அவள் மகளின் இடைவிடாத மெலிதான நடுக்கத்திலும் தன்னையிழந்த பெட்ரோல்டாங்க் கண்களை மூடிக்கொண்டது. அதன் தலையைப் பிளந்தது முதல் கல்லாகத்தான் இருக்கவேண்டும். தலையில் படக்கூடாத இடத்தில் பட்டதா அல்லது கல் தேக்கிவைத்திருந்த கொலைவெறியா தெரியவில்லை, வலப்பக்கத்தில் மண்டையெலும்பு மூன்று விரற்கடையளவு சுக்கல் சுக்கலாகச் சிதறியிருந்தது. சற்று வேகமாய் வீசத்தொடங்கிய காற்றில் சின்னதாக ஒரு சுழல் உருவாகிச் சில காய்ந்த இலைகளைக் காகிதங்களைச் சுழற்றி வீசியெறிந்து சோர்ந்து வீழ்ந்தது. பின்புறமாய் நீண்ட தார்ச்சாலைகளின் இருபக்கமும் நின்றுகொண்டிருக்கும் ஆலமரங்களின் துவக்கத்தில் தனித்திருந்த பெட்டிக்கடை வாசலிலிருந்து பாவாடைசட்டைச் சிறுமி அவளால் முடிந்தமட்டுமான உயரத்துக்கு ஏறிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். சல்மா இப்போது பைக் சீட்மேல் அமர்ந்துகொண்டு, மடிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்ட மகள் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். இரு கட்டை விரல்களுக்கிடையிலும் நசுங்கிக்கொண்டிருந்தன இருந்த பேன்கள் இல்லாத பேன்கள்.

சைடுஸ்டாண்டில் இருக்கும்போது உட்காராதே ஒடிந்துவிடும் என்றுவிட்டு மறுபடி நாயைநோக்கித் திரும்பிக்கொண்டான் முனெப்பன். லாரிக்காரன் ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். கிழவனின்மேல் படிந்திருந்த ரத்தத்தை ஈரத்துணி ஒன்றைக்கொண்டு துடைத்தாள் சல்மாவின் கணவனின் அக்காள். தலையை மட்டும் வலதுபுறம் திருப்பிச் சாய்ந்தவாறு நாயின் சவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் கிழவன். நாயின் தலைக்கும் குஸ்காப் பாத்திரத்துக்கும் இடையிலாகச் சில ஈக்கள் சுறுசுறுப்பாகப் பறந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ வந்து அங்கே வளர்ந்துவிட்டிருந்த காரணத்தால் அது சல்மா கடையின் நாயா இல்லையா என்று அவர்களாலேயே சொல்லமுடியாவிட்டாலும், அவர்கள் கடை நாய்தான் என்று அவர்கள் சொன்னதும் தவறாகப் படவில்லை. பணம் எதுவும் வேண்டாம் என்றார்கள் சல்மாவின் அக்காளும் சல்மாவின் கணவனும். நாலு பிளேட் குஸ்கா, சில ரொட்டிகளுக்காகுமா அது. கோணி ஒன்றைக் கொண்டுவந்து, நாயை அதற்குள் திணித்தான் கணவன். ஜனங்கள் கலைந்து சென்றனர். கோணியையும், சின்ன சுண்ணாம்புச் சாக்கையும் கடையின் பின்புறமாய் இழுத்துச்சென்றதைப் பக்கத்தில் பார்த்தீனியங்கள் சுற்றியிருந்த பலகைத்தடுப்புச் சலூன் கண்ணாடியில் சுழன்றபடி பார்த்துக்கொண்டிருந்தான் எங்கட்ரமணா. சலூன் கண்ணாடிகளில் நிலைத்த கண்களுடன் நாய் கணக்கற்றுப் பெருக்கமடைந்தது.

* * *

சிலவாரங்கள் கழிந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தேகாலுக்கு சல்மா கடையும் மேட்டுக் கடையும் மட்டுமே விழித்திருந்தன. சோம்பலுடன் வந்துநின்ற பைக்கின் பெட்ரோல்டாங்க் சிகரெட் பற்றவைத்துக்கொண்டது. உச்சிவெயில் எரிக்கும் மதியம்பற்றி ஏதும் பிரக்ஞையற்ற அதிகாலை அதன் மோனத்துடன், விளக்கவியலாத் தனிமையுடன், அசையும் மரங்களின் ரகசிய சம்பாஷணைகளுடன், காளைக்கண்நீல ஆகாயத்துடன் குளிர்ந்த நிலத்துடன் காற்றில் மிதக்கும் மெல்லிய திரை போல் அசைந்துகொண்டிருந்தது. தூக்கம் கலையாத சல்மா டீ பாத்திரங்களை அப்போதுதான் சூடுபடுத்தத்தொடங்கியிருந்தாள். மேட்டுக்கடையில் அரவமில்லை, எப்போதும்போலும் அதே வித்தியாசமற்ற சவக்குழியைத் தலைகீழாக உருவிப்போட்டுச்சில மஞ்சள் குமிழ்விளக்குகளைப் பொருத்தியதுபோல. பெட்ரோல்டாங்க்கைப் பார்த்து அதே தூக்கக்கலக்கத்துடன் புன்னகைத்தாள் சல்மா. உடலைச்சுற்றியும் தலையை மூடும் குல்லாய் போலவும் தடித்த கம்பளிப்போர்வையைச் சுற்றியிருந்தாள். கண்ணாடி கிளாஸில் டீ எடுத்துவந்தாள், பெட்ரோல்டாங்க்கைத் திறந்தாள் ஊற்றினாள், சாய்ந்து நின்றுகொண்டாள் அதன்மேல். மெதுவாக எழுந்த பெட்ரோல்டாங்க் முன்னங்கால்களை வெ-கு முன் வைத்துப் பின்னங்கால்களை வெ--கு பின் வைத்து உடலை நீ---ட்டிச் சோம்பல்முறித்துச் சரசரவென்று கூரைக்கு முட்டுக்கொடுத்திருந்த தடித்த கம்பங்களின் கணுக்களில் தன் பாதங்களைப் பதித்து ஏறத்தொடங்கியது.

ஓவியம் நன்றி: Mark Harden

4 comments:

-/பெயரிலி. said...

நுணுக்கமான விவரணை பிடித்திருக்கின்றது

ROSAVASANTH said...

இங்கே இதற்கு முன் நான் படித்த இரண்டு கதைகளைவிட சரளமான வாசிப்பிற்கு உகந்ததாக இருந்தது. ஒரு வாசிப்பும் கிடைத்தது.

//கூரைமேலிருந்து எழுந்த மரண ஓலத்தின் குளிர்பாய்ச்சும் சிதைவு டாங்க்கின் நெஞ்சைப் பிளந்தது.//

சன்னாசி said...

நன்றி பெயரிலி, ரோஸாவசந்த்...

ஈழநாதன்(Eelanathan) said...

இரண்டாவது வாசிப்பில் பெயரிலி சொன்னதுபோல் விவரணைகள் பிடித்திருக்கின்றன.