
இன்னொரு திசையில் பார்க்கும்போது, ஜானி டெப்பும் பிடிக்கும், டிம் பர்ட்டனும் பிடிக்கும், திருட்டுக்கேஸில் மாட்டிக்கொண்டபிறகு வினோனா ரைடரையும் முன்பைவிட அதிகமாகப் பிடித்துப்போயிற்று (இதன் உளவியல் காரணத்தை நானே ஆராய்ந்துகொள்ளவேண்டும் முதலில்) - இவர்கள் அனைவரும் இருந்த Edward Scissorhands படமும் வெகுவாகப் பிடித்துப்போயிற்று: ஒரு மெல்லிய காதல் கதை. ஒரு கற்பனையான குடியிருப்புப்பிரதேசத்தினருகில் ஒரு மலைமுகட்டின்மேல் ஒரு கோட்டையில் வசிக்கும் விஞ்ஞானியொருவன் ஒரு செயற்கை மனிதனை உருவாக்குகிறான். அவனது அனைத்துப் பாகங்களையும் உருவாக்கும் விஞ்ஞானி, கைகளைக் கடைசியில் உருவாக்கிக்கொள்ளலாமென்று, கத்திரிக்கோல்போன்ற சில இரும்புத்துண்டுகளைக் கைகளுக்குப்பதில் தற்காலிகமாகப் பொருத்திக்கொண்டு பின்பு கைகளைப் பொருத்திவிடலாமென்று நினைக்கும்போது இறந்துபோகிறார். கீழே நகரத்தில் வசிக்கும் ஒரு விற்பனைப்பெண் தற்செயலாக அந்தக் கோட்டைக்கு வரும்போது, தனியாக அங்கிருக்கும் எட்வர்டை (Johnny Depp) கண்டுபிடிக்கிறாள்; கைகளுக்குப்பதிலாக கத்திரிக்கோல்களைக்கொண்டு, ஒவ்வொருமுறையும் தன் கோரைமுடியை ஒதுக்கமுயலும்போது முகத்தை அறுத்துக்கொள்ளும் எட்வர்டின்மேல் பரிதாபப்பட்டுக் கீழே தன் வீட்டுக்கு அழைத்துவருகிறாள். அவளது வீட்டில் ஒன்றிப்போகும் எட்வர்ட், அவளது மகள் கிம் (Winona Ryder) மேல் காதல்கொள்கிறான். அவளுக்கொரு நண்பன், அவனுக்கு எட்வர்ட் மேல் கடுப்பு. எட்வர்டின் கத்திரிக் கைகள், அந்தக் குடியிருப்புப் பிரதேசத்தின் மரங்களையெல்லாம் சரசரவென்று கத்திரித்து எறிந்து, அழகான மரச்சிற்பங்கள்போல மாற்றுகின்றன; அதுதாண்டி நாய்களுக்கும், பெண்களுக்கும் கண்சிமிட்டும் நேரத்துக்குள் சிகையலங்காரம் செய்துமுடிக்கிறான் எட்வர்ட். தனது கத்திரிக் கையுடன், ஊதிப் பெரிதாக்கப்பட்ட குடியிருப்புப் பிரதேசத்தின் மக்களால் சிறிதுநாளிலேயே மிகவும் விரும்பப்படுபவனாகவும், பின்பு அதே வேகத்தில் வெறுக்கப்படுபவனாகும் மாறிப்போகும் எட்வர்டின் கதை, இறுதியில் சோகமான முறையில் எட்வர்ட், கிம்மின் பாய்ஃப்ரண்டைக் கொல்வதுடன் முடிகிறது. அங்கே இருக்கும் கிம், வேடிக்கைபார்க்கவரும் மக்களிடம், எட்வர்டும் செத்துவிட்டான் என்கிறாள். அனைவரும் திரும்பிப் போகின்றனர். படம் முடிகிறது - சுருக்கங்கள்விழுந்த (வெகு செயற்கையாக இருப்பதும் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை!) முகத்துடன், கிம், தனது பேத்தியிடம் கதைசொல்லிக்கொண்டிருக்கிறாள் - மலைமுகட்டின்மேலிருக்கும் கோட்டையில் வசிக்கும் மனிதனைப்பற்றி. வெளியே பனி பொழிந்துகொண்டிருக்கிறது. "எட்வர்ட் பனியில் சிற்பங்களைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான்" என்கிறாள் பாட்டி கிம். செதுக்கையில் தெறிப்பதே பனியாக ஊர்மேல் பொழிகிறது என்கிறாள், சிலசமயம் அந்தப் பனியில் நனைந்துகொண்டே நடனமாடுவதுமுண்டு என்கிறாள் பேத்தியிடம் பாட்டி. படம் முடிந்துபோகிறது. அற்புதமான பின்னணி இசை. திரும்ப ஒருமுறை பார்த்து முதல் அனுபவத்தைச் சிதைத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாததால் இன்றுவரை மறுபடி பார்த்ததில்லை. சில படங்கள் அப்படியே நழுவிவிடுவதுண்டு. ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது... அப்போது பிரபலமாயிராத பீட்டர் ஜாக்ஸனின் Bad taste பார்த்துவிட்டு, பயப்படுவதா சிரிப்பதா என்று தெரியாத ஒரு வினோத மனோநிலையில் குழம்பிக்கிடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஏதோவொருவிதத்தில் இது நினைவுபடுத்தும் எங்கள் பள்ளியைப்பற்றி எழுதவேண்டுமென்று பலகாலமாக யோசித்திருக்கிறேன் - அவ்வப்போது ஏதோ கிறுக்கிவைத்ததும் உண்டு; ஒருபக்கம் தேசிய நெடுஞ்சாலை, மறுபக்கம் ரயில்வே தண்டவாளங்கள், தண்டவாளங்களை ஒட்டியிருக்கும் கம்பிவேலிகளின் கம்பிகளை முறித்துவிட்டுத் தாண்டிப்போனால் சின்னதாகக் கொய்யாத்தோப்புக்களும் ஏகப்பட்ட நாவற்பழங்களும். நாவற்பழங்களைச் சுவைத்துவிட்டு கல்லில் நைத்து உள்ளிருப்பதை எடுக்கையில் கறைப்படுத்திக்கொண்ட எண்ணற்ற கால்சட்டைகள், ஏப்ரல் மே மாதங்களில் திருட்டுத்தனமாக அடித்த மாங்காய்கள், கணக்கற்ற வகுப்புக்கள், கெமிஸ்ட்ரி லாபின் கூரையில் பச்சைநிறப் பால்வெளிபோல் சிதறிக்கிடந்த ஏதோவொரு திரவம், வாக் இன் இங்கிலீஷ் டாக் இன் இங்கிலீஷ் கோஷ்டிகளைச் சரிக்கட்டப் படித்த எண்ணற்ற எனிட் பிளைட்டன், அலிஸ்டர் மக்லீன், ஃபோர்ஸித், இர்விங் வாலஸ், ஃப்ராங்க்ளின் W டிக்ஸன், ராபின் குக், ஹாம்லினின் டெல் மீ ஒய் தொகுப்புக்கள், ஏகத்துக்குப் பரந்துகிடந்த பார்த்தீனியச் செடிகள், கிட்டத்தட்ட ஒரு ரயிலை நினைவுபடுத்திய மெஸ், நினைவுதெரிந்த நாளில் அதிலிருந்த கனி அண்ணனின் பெருத்த டேப்ரிக்கார்டரில் ஓடிக்கொண்டிருந்த 'வனிதாமணி வனமோகினி வந்தாடு...', காவி நிறமடித்த வேப்பமரங்கள்சூழ்ந்த ஹாஸ்டல்.... இரண்டு சனிக்கிழமைக்கொருமுறை போட்ட வீடியோ ஷோக்களில் (Principal sir, can we please have a video show this week? We need an out-pass!!) பார்த்த எண்ணற்ற படங்கள், பிஞ்சிலே பழுத்தபிறகு சைடில் ஒதுக்கி ரகசியமாகப் பார்த்த படங்கள் (பிசாசே, அதையெல்லாமா சொல்வாய் இங்கே!!), விளையாண்ட எண்ணற்ற கிரிக்கெட், வாலிபால் விளையாட்டுக்கள், ஒளித்துப் படித்த எண்ணற்ற புத்தகங்கள், நூலகங்களின் Sportstar தொகுப்புக்களில் ஒன்றுவிடாமல் ஸ்டெஃபி க்ராஃப், காப்ரியெலா சபாதினி படங்களிலெல்லாம் போட்ட பிளேடுகள் (சிலவாரங்கள் கழித்து, Unless the culprit replaces the damaged books, a serious investigation will be undertaken and the offender, if found, will be dismissed from the school with immediate effect!! அய்யோ சாமி!!), கமல் ரஜினி சண்டைகள் (பரட்டத்தல மெண்டல் டேய், பொம்பளப்பொறுக்கி டேய்!!), வகுப்பிற்குவெளியில் போட்ட எண்ணற்ற முட்டிக்கால்கள் (வேறென்ன பதம் அதற்கு, முழங்கால் போடுவதா?), வார்டன் ஐயா - முடிவெட்ட டவுனுக்குப் போகவேண்டும் என்று அனுமதி வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டுப் பத்தரை ஷோ படம்பார்த்துவிட்டு (பஸ்ஸே கிடைக்கல சார்!!) மெதுவாக வந்து, இரவில் பதினொரு மணிக்குப்பின்னால் மாடிவழி ஏறிக் குதித்து, வேலிதாண்டிப் போய் புரோட்டாக் கடைகளில் புரோட்டா சால்னா சாப்பிட்டுவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தவாறு திருட்டு தம் அடித்துக்கொண்டு, உலகத்தையே வென்றுவிட்டதுபோல் நள்ளிரவுக்குப்பின் சரக்கு லாரிகளும் நாகர்கோவில் கன்னியாகுமரி பேருந்துகள் சீறிக்கொண்டிருக்கும் இருண்ட நெடுஞ்சாலைகளில் ராஜநடை போட்டுவந்த நாட்களை நினைவுபடுத்தும் படம் எந்தக் குப்பைப் படமாய் இருந்தால் என்ன - ஏதோவொரு கண்ணி நமது நினைவுகளின் மகிழ்ச்சியான நாட்களையும், நம் கைக்குள் அடங்காப் புகைபோன்ற இன்றைய வாழ்வையும் இணைத்துக் கழற்றி இணைத்துக் கழற்றி அன்றாடப் பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது, நினைவுகளின் வருடலில் பிறக்கும் ஒரு மெல்லிய புன்னகை மூலம். அந்தக் கண்ணி ஒரு படமாய் இருந்தாலென்ன, ஒரு கவிதையாய், ஓவியமாய், சாலையில் வழுக்கவைக்கும் நனைந்த புல்லாக இருந்தாலென்ன, இழந்த சொர்க்கங்களாயிருந்தாலென்ன................................... இந்தக் கணம் தப்பிவிடும்முன் இதை இட்டுவிட்டு ஓடியே போகிறேன்..........
(இணையச் சுட்டிகளைக் கடமைக்கே எனத் தேடிப் பொருத்திவிட்டு....................)
படம் நன்றி: Amazon
3 comments:
நனவிடை தோய்தல் அருமை.கவிதையாய் படமாய் ஓவியமாய் எதுவாய் இருந்தால் என்ன பார்க்கும் ஒரு கணப்பொழுதில் கடந்த காலத்தை கண்முன்னே இழுத்துவந்து நிறுத்திவிடும் படைப்புகள் எந்தவித காரணமும் தேவையின்றி பிடித்துவிடுகின்றன.
Tim Burton இயக்கியதிலே (பார்த்தவற்றிலே) எனக்குப் பிடித்தது, Mars Attacks!. 50 களின் Mars Attacks படங்களின் Send off. பெரிய நட்சத்திரங்களைப் போட்டு, அதே வண்ணத்திலே ஜிகினாவிளையாட்டுக் காட்டியிருப்பார். Tim Burton தயாரித்த The Nightmare Before Christmas ; தமிழிலே செங்கை ஆழியான் எழுதின 'கொத்தியின் காதல்' போன்ற கலகலப்பான பேய்க்கதை :-) எனக்குப் பிடித்திருந்தது. (அவ்வப்போது, ஏனோ Sam Raimi இன் ஒழுங்கான பயங்கரப்படமான The Evil Dead இன் மிகுதிக்கலவையிலே ஐதாக்கப்பட்டு வந்து நகைச்சுவைப்படமாகிப் போன Army of Darkness இன் காட்சிகள் ஞாபகம் வந்தாலுங்கூட).
ஆனால், Edward Scissorhands உட்பட ஜொனி டெப்பின் பெரும்பாலான ஆரம்பகாலத்துப்படங்களும் ஒரு விதமான B-Movie தன்மையைத்தான் கொண்டிருந்தன என்று தோன்றுகின்றன (Fred Krueger was around :-)). அவருக்கு மாறுதலான பாத்திரத்திலே நினைவிலே நிற்கும் படமாக அந்நேரத்திலே வந்தது, What's Eating Gilbert Grape. கிட்டத்தட்ட தமிழ்ப்படங்களின் குடும்பத்தலைவன் இல்லாத குடும்பத்து மூத்த புத்திரன் பாத்திரம். அவரும் மனநில குன்றிய சிறுவனாக Leonardo DiCaprio உம் அருமையாகச் செய்திருப்பார்கள்.
Vincent Price நடித்த House of Usherஇனைப் பார்த்திருக்கின்றீர்களா? எந்த மேலதிகமான சிறப்பு வேலைப்பாட்டு விளையாட்டு, ஜிகினா வேலை இல்லாத படம். Vincent Price (Christoper Lee உம் கூட) இப்படியான படங்களுக்கென்றே பிறந்தவரென்று தோன்றும்.
pulp இற்குக் கூழ் என்று வைத்துக்கொல்லலாமா? ;-)
அடிக்கடி, இப்படியாகத் தும்முகிற அளவுக்குத் தடிமன் பிடிக்கும் வகையிலே நனவிடைத்தோயுங்கள் :-)
பெயரிலி; உண்மைதான். What's eating Gilbert Grape நல்ல படம்தான். ஜானி டெப்பின் ஆரம்பகட்டப்ப் படங்கள் அப்படியிருந்தது நிஜமென்பதே என் அபிப்ராயமும் கூட - பின்னாட்களில் வந்த ரோமன் போலன்ஸ்கியின் The ninth gate கூட ஒருவகையில் பிடித்ததா பிடிக்காவில்லையா என்று தெரியாத ரீதியிலிருக்கும் இரண்டுங்கெட்டான் படம்...
மேலும், டெப், டிகாப்ரியோ இருவரும் ஆரம்பகாலங்களில் முறையே Nightmare of the Elm street, Critters என்று பேய்ப்படங்களிலும் நடித்திருக்கிறார்களென்று நினைவு...
Post a Comment