சென்றவாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் காதல்கவிதைகளாகப் படித்துப் பழைய நினைவுகளில் மூச்சுத்திணறி மீண்டுகொண்டிருந்தபோது, காரணமே இல்லாமல், குள்ளர்களைப்பற்றிய கவிதை ஏதாவது தமிழில் படித்திருக்கிறோமா என்று யோசிக்கத்தோன்றியது - ஏதோ மளிகை வாங்கப்போனபோது அபூர்வ சகோதரர்கள் ஒளிப்பதிவுநாடாவைக் கடையில் பார்த்ததும் என்று நினைக்கிறேன். வழக்கம்போல, பின்னுக்குத்திரும்பிய நினைவுகள், படத்தில் பார்த்த குள்ளர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவரத்தொடங்கியது - பழைய தவக்களை, அப்பு கமல், டேவிட் லிஞ்ச்சின் Twin peaks மற்றும் Twin peaks: Firewalk with me யில் 'கார்மன்போஸியா' என்று குழறிக்கொண்டே உளறும் மர்மக் குள்ளன், குள்ளனா இல்லையா என்று இன்றுவரை தெரிந்துகொள்ள - திரும்பக் கதையைப் படித்துப்பார்க்க விரும்பாத எட்கர் ஆலன் போவின் Hop-frog கதையின் கொடூரக் கோமாளி, இவர்கள் அனைவரையும் தன் சின்னச்சின்ன அடிகளால் மெதுவாகக் கடந்துவந்து நினைவில் நின்ற சமீபக் குள்ளன், ஐந்தாறு மாதங்களுக்குமுன்பு பார்த்த 'ஸ்டேஷன் ஏஜண்ட்' படத்தில் வந்த ஃபின்பார் என்ற குள்ளன் பாத்திரம். வெறும் blurb படித்து, போனால் போகிறதென்று நம்பிக்கையின்றி எடுக்கும் எத்தனையோ படங்கள், "என்னையா கீழ்ப்பார்வை பார்த்தாய் நீ" என்று தலையில் ஒரே போடாகப் போடும். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இந்தப் படமும். பார்த்துப் பலநாளாகிவிட்டதால், திரும்ப அதைப் பார்த்திராததால், தனிப்பட்ட கோணல் ஒரேயடியாக அதைப் புகழத்தோன்றுகிறதா என்பதைப் படம்பார்த்தபின் நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம்.
ஃபின்பார், மூன்றடி உயரம்கொண்ட ஒரு குள்ளன். அவனுக்குப் பிடித்தவை ரயில்கள். ஒரு பொம்மை ரயில் செய்யும் கடையில் வேலைசெய்கிறான், அதன் முதலாளிதான் அவனுக்கு ஒரே தோழன். பொட்டென்று ஒருநாள் கட்டையைச் சாய்த்துவிடும் முதலாளி, போகுமுன்பு ஃபின்பார் பெயருக்கு நியூஜெர்ஸியிலுள்ள ஒரு ரயில்பாதையோரக் கூண்டுவீட்டை (cabin) எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறான். சேமிப்பில் கொஞ்சம் பணம் மிச்சமிருப்பதால், அந்தக் கூண்டுவீட்டுக்கு இடம்பெயர்கிறான் ஃபின்பார். நட்பெதிர்ப்பு என்ற எல்லைவரை நீளுமளவு அழுத்தமான தனிமையைக் கடைப்பிடிக்கும் ஃபின்பார், அந்தக் கூண்டுவீட்டுக்கு எதிராகவுள்ள பல்வேறு தண்டவாளங்களில் செல்லும் ரயில்களைப் பார்த்தவாறும், அவ்விடத்துக்கு அருகிலுள்ள சிறிய குடியிருப்புப்பிரதேசங்களில் நடந்தவாறும் தன் அன்றாட வாழ்வைத் துவங்குகிறான். அக் கூண்டுவீட்டுக்கு எதிரில் ஒரு நகரும்-உணவகம் வைத்திருக்கும் ஒரு க்யூபனின் நட்புரீதியான விசாரிப்புக்களை முற்றிலுமாகத் தவிர்க்கமுயலும் ஃபின்பார், பின்பு அந்தக் க்யூபனின் அபரிமிதமான உற்சாகம், நிராகரிப்பென்பதைப் புரிந்துகொள்ளமுடியாதளவு வலிமையானதென்று தெரிந்தபிறகு அவனது நண்பனாகிறான். மகனை இழந்த சோகத்தில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஓவியை ஒருத்தி இரண்டுமுறை ஃபின்பாரைத் தன் காரால் இடிக்கப்போய், மயிரிழையில் தவிர்த்து, பின்பு அவனுக்குத் தோழியாகிறாள். அந்தச் சிறு நகரத்தின் நூலகத்தில் நூலகனாயிருக்கும் விடலைப்பெண்ணுக்கும் அவன்மேல் ஒரு கண்.
க்யூபனும் ஓவியையும் ஃபின்பாரும் வெகு நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சற்றே தயக்கத்துடன் கேட்கிறான் க்யூபன்: "உடலுறவு கொண்டிருக்கிறாயா?" "ஆமாம்." "அதாவது...நிஜ அளவு உயரமுள்ள பெண்ணோடு?" "ஆம், நிஜ அளவு உயரமான பெண்ணோடு". ஓவியை மீது ஃபின்பாருக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஃபின்பார் மீது நூலகிக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஓவியைக்கு ஃபின்பார் மேல் பரிதாபமா பாசமா என்று இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு இரவில் ஓவியை வீட்டில் பெரும் தீர்த்தயாத்திரை போட்டுவிட்டு ஃபின்பாரும் க்யூபனும் அங்கேயே உறங்கிப்போக, மறுநாள் காலையில் அவளைப் பார்க்கவரும் தனித்து வாழும் கணவன், சட்டையுடன் படியில் இறங்கி வரும் 'குள்ளனை'ப் பார்க்கிறான்....
கதையைத் தொடர்ந்து சொல்வதிலோ மேற்கொண்டு விவரிப்பதிலோ அர்த்தமில்லை; ஒருவிதமான நேர்த்தியற்ற முடிவைத்தவிர, படத்தை மிக ரசிக்கத்தக்கதாய்ச் செய்தவை வெகு நுட்பமான கவனிப்பு, ஃபின்பார் பாத்திரத்தில் நடித்த பீட்டர் டிங்க்லேஜின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு, இந்தப் பாத்திரத்தை மையம்கொண்ட நகைச்சுவை என்பதைக் காட்சிகளிலிருந்து கத்திரித்து எறிந்து, சிரிப்பதற்குப்பதிலாக ஒவ்வொரு தருணத்திலும் அழுத்தமான தர்மசங்கடமொன்றை உருவாக்குவது, கதைக்களன் - நிகழும் இடம் மீதான ஒரு இனம்புரியாத ஈர்ப்பு என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஐந்தாறு தண்டவாளங்கள்; வலப்பக்கம் ஒரு கூண்டுவீடு; அந்தப்புறம் ஒரு சின்னக் கடை; பச்சைப் புல்வெளி; சில மனிதர்கள்; ஏளனத்துடன் தன்னைப் பார்க்கும் பிறரைக் கூனிக்குறுகவைக்குமளவு தன் முகத்தில் காட்டும் ஆயுதமான வித்தியாசமின்மையை, அதேயளவு புதிருடன் தன்னைப் பார்க்கும் ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க குண்டுச்சிறுமியிடம் உபயோகிக்கமுடியாமல் ஃபின்பார் தோற்கும் கணங்கள்; கவனிப்பாரற்றுக்கிடக்கும் பழைய ரயில்பெட்டிகள் - இத்தனைக்கும் மேலாக, கிட்டத்தட்ட ஹிட்ச்காக் படம் போல ஒரு சின்ன கதைக்களன், சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சம்பவங்கள் என்ற வடிவநேர்த்தியுடன், சாதாரண சம்பவங்களை சாதாரண மனிதர்களைக்கொண்டு (குள்ளன் என்ற ஒரு விஷயத்தின் நினைவுறுத்தலை ஃபின்பாருடன் சேர்ந்து படமும் கத்திரிக்க முயல்கிறது) இருப்பது இனம்புரியாதவகையில் நினைவுகொள்ளச்செய்தது இந்தப் படத்தை. முன்முடிவுகள் ஏதுமின்றி, இதைப் படித்ததை மறந்துவிட்ட ஏதோவொரு தருணத்தில் இப்படம் உங்களுக்குச் சிக்கி, பார்த்து, பிடித்திருக்கவும் செய்ததென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்!!
படம் நன்றி: Amazon
Thursday, February 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Montresor, பதிவிற்கு முதலில் நன்றி. உங்கள் பதிவுகள் பார்த்துவிட்டு பார்க்கின்ற படங்களின் பட்டியல் அனுமான் வால் போல நீண்டு கொண்டேயிருகின்றது. நேற்றுத்தான், Cold Mountain எடுத்துவிட்டு அரைகுறையில் பார்த்தபடி கிடக்கிறது.
நிற்க,
தமிழிலும் மலையாளத்திலும் குள்ளர்களைப்பற்றி ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்று எங்கையோ வாசித்ததாய் நினைவு (இயக்குநனர் வினயன்?).
Willow என்கிற ஸ்பீல்பர்க்கின் படம் குள்ளர்களை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு பேன்டசி கதை. டிசே நீங்கள் சொன்னது உண்மை. வினயன் அப்படியொரு படத்தினை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Twins பார்த்திருக்கிறீர்களா. அர்னால்டும், டேனி டிவிட்டோவும் நடித்த படம். ஹாலிவுட்டில் டேனி டிவிட்டோ ஒரு குள்ளமான, திறமை ஏகத்துக்கும் இருக்கிற நடிகர்.
கொஞ்சமாய் ஆராய்ந்துவிட்டு மீண்டும் பதிகிறேன்.
குள்ளர்கள் என்றால் Tin Drum உடனே நினைவுக்கு வருகிறது. ஃபோல்கர் ஷ்லோண்டோர்ப் இன் இயக்கத்தில் சிறப்பாக வந்த கூந்தர் க்ரோஸ் இன் கதை. அதில் ஒஸ்கார் ஆக வரும் சிறுவன் முகத்தில் தெரியும் சில உணர்வுப் பிரதிபலிப்புகள் அப்படியே கமலஹாசனின் அப்பு வில் இருக்கும். முதலில் TinDrum பார்த்திருந்தேன். அபூர்வசஹோதரர்கள் பார்க்கும் போது உடனே பட்டது கமல் எங்கிருந்து வருகிறார் என்று. ஷ்லோண்டோர்ப்பின் The lost honor of Katherina Blum கூட நல்ல படம்தான். மறக்காமல் பாருங்கள்.
அருள்
i second arul in all.
எண்பதுகளில் பெங்களூரில் படிக்கும் போது நிறைய ஐரோப்பிய படங்களை பார்க்க வாய்ப்பிருந்தது. ஏறக்குறைய எல்லா classic களையும் முறைவைத்து பிலிம் சொஸைட்டியில் பார்த்து விடுவோம். ஜெர்மானியப் படங்களைப் பற்றி பேசும் போது, அப்போது சற்றே இடது சிந்தனையுள்ள நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்த படம் ரைனெர் ஃபாஸ்பைண்டர் இன் 'mother kusters goes to heaven' நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதை படத்தைப் பார்த்து அறியுங்கள். :-) ஃபாஸ்பைண்டரின் முற்றிலும் ஐரோப்பிய அழகியல் சார்ந்த படங்கள் அப்போது வயத்தை கலக்கினாலும் பார்க்க முடிந்தது. இப்போது முடியுமா எனத் தெரியவில்லை. மான்டீசார் நீங்கள், பெயரிலி எல்லாம் ஐரோப்பிய சினிமாக்களை - ஹெர்ஸோக் இன் "where the green ants dream", ட்ஸாபோ வின் "mephisto" - பார்த்து விவரமாக எழுதுங்கள். படிக்க நல்லா இருக்கும்
அருள்
நன்றி மாண்ட்ரீஸர்
நீங்கள் பெயரிலி விஜய் ஆகியோர் தொடர்ந்தும் பிறமொழித் திரைப்படங்கள் பற்றி வலைப்பதிவுகளில் எழுதுவது ஆக்கபூர்வமான விடயம்.இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இப்படியான திரைப்படங்கள் மீது கவனத்தைத் திருப்புகிறேன்.டி.சே சொன்னமாதிரி உங்கள் பதிவுகள் நீளும்போது நான் பார்க்கவேண்டிய பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. பார்த்தேன் விமர்சனம் எழுதுமளவுக்கு அனுபவமில்லை.இன்று பார்க்கப்போகிறேன் நீங்கள் எல்லோரும் இணைந்து இவ்வாறான திரைப்படங்களை விமர்சிப்பதற்கும் அரிமுகஞ் செய்வதற்கும் வலைப்பதிவொன்று ஆரம்பித்தால் நன்றாகவிருக்கும்
பதிலிட்ட அனைவருக்கும் நன்றி: நாராயண் - நடுநிலைப்பள்ளிக் காலத்தில் வில்லோ பார்த்திருக்கிறேன்; அதற்குப்பின் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனினும், இப்போதுவரை நல்ல படம் என்ற நினைவுகளே தங்கியிருக்கிறது. ஒருகாலத்தில் பெரிய ஷ்வார்ஸெனெகர் விசிறியாக இருந்ததால், கானன் த பார்பேரியன் படத்துக்குப் பிறகு வந்த அத்தனை படங்களையும் பார்த்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். ட்வின்ஸ் - ஆமாம்.
அருள்: இங்கே வந்த புதிதில் மெஃபிஸ்டோ பார்த்தேன் - நினைவுபடுத்திவிட்டீர்கள். "லாவண்டர் மணம்வீசும் வாசனைத்திரவியம் போட்டிருக்கும் ஆணை இப்போதுதான் பார்க்கிறேன்" என்பாள் ஒரு பெண், Claude Maria Brandeurஐப் பார்த்து! நமது ஊரில் கலைஞர்களைப்பற்றிப் படம் எடுப்பதும் அதேயளவு அரிதாகத்தானிருக்கிறது. சந்தர்ப்பமிருப்பின் எழுதுகிறேன் அதைப்பற்றி - நம்மைப்போன்ற சாதாரணர்கள் எழுதுவதைவிட, அசலான நாடகக்கலையிலுள்ள எவராவது மெஃபிஸ்டோ பற்றி எழுதினால் இன்னும் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்...
பாம்பு, உங்க மின்னஞ்சல் முகவரி வேணும்.
எனக்கு எழுதுவீங்களா?
kasi @ thamizmanam dot com
நன்றி.
இப்போது தான் டெஹல்காவில் படித்தது. "Turtles can fly" என்கிற படம் கிடைக்கிறதா என்று தேடிப்பாருங்கள். பாஹமென் கபோடி என்கிற குர்திய இயக்குநர் எடுத்த படம். சதாமின் வீழ்ச்சிக்கு பிறகு, ஈராகிய-குர்த் எல்லைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கொண்டு போரின் கொடுமைகளைப் பற்றி பேசும் படமது. இங்கே தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அங்கே கிடைக்குமென்றூ நினைக்கிறேன். டெஹல்காவின் செய்தியை இரண்டொரு நாட்களில் என்பதிவில் ஆங்கிலத்திலேயே பதிகிறேன்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி வேணும். எனக்கு எழுதுவீங்களா? narain at gmail dot com
Post a Comment