Sunday, February 20, 2005

மொட்டை பிளேடு

சிறிது நாட்களுக்கு முன்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தலைவர் லாரி சம்மர்ஸ், ஒரு பேச்சினிடையில், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கு குறைச்சலாக இருப்பதற்கு, பெண்கள் மீதான பாகுபாட்டு மனப்பான்மையைவிட பிற காரணிகளே அதிகப் பொறுப்புடையவை என்று கூறியிருந்தார். அவற்றில் ஒன்றாகக் கூறியிருந்த உள்ளார்ந்த காரணிகள் (intrinsic gender differences) என்ற சொற்பதம், பால் வித்தியாசமின்றி அனைவரையும் கடுப்பேற்றிவிட, ஏகப்பட்ட எதிர்ப்புக்கள் கிளம்பின. பெண்ணாய் இருப்பதாலேயே ஆண்களைத் தாண்டுமளவு/சமமாகப் போட்டியிடுமளவு competitive edge கிடைப்பதில்லை என்ற தொனியில் இருந்த வாக்கியமே அவ்வளவு எதிர்ப்புக்கும் காரணமாக, பிற முக்கியப் பல்கலைக்கழகங்களான எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology), ஸ்டான்ஃபோர்டு மற்றும் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத் தலைவர்கள் மூவரும் சேர்ந்து பாஸ்டன் குளோப் பத்திரிகையில் இதை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்கள். தங்கள் பல்கலைக்கழகத் தலைவர் அந்தக் கட்டுரையில் பங்கேற்காததை எதிர்த்து யேல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தார்கள். பிறகு சம்மர்ஸ் பலமுறை மன்னிப்புக் கேட்கவேண்டிவந்தது. அதன்பிறகும் எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இப்படிப்பட்ட கருத்தாக்கங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது/நிராகரிப்பது கஷ்டமான/சாத்தியமற்ற விஷயம். அறிவியல்பூர்வமாக இவற்றைக்குறித்து ஆராய்பவர்களின் நோக்கம் இவ்வளவு தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அறிவியலின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்ட வித்தியாசங்களைக்குறித்து ஆராய்பவர்களின் முடிவுகளை, தங்களது பிரத்யேக நோக்கங்களுக்காக உபயோகப்படுத்திக்கொள்ள முயல்பவர்களே அபாயமானவர்கள் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு, இந்தியா போன்ற ஒரு ஜனத்தொகையை மரபியல் ரீதியில் ஆராய்வது என்பது அறிவியல் ரீதியான ஆதாயங்களுக்காகச் செய்யப்படவேண்டிய ஒன்றே - ஆராயப்பட்டும் வருகின்றன. மருத்துவ வசதிகள் மேற்கத்திய நாடுகளில் வளருமளவுக்கு வளரும் நாடுகளிலும் வளரும்போது இத்தகைய ஆராய்ச்சித்தகவல்கள் இன்றியமையாததாகவே இருக்கும் - அதற்கு வெகுகாலம் ஆகும் எனினும். மரபியல் ரீதியிலான வேறுபாடுகளைக்கொண்டு குறிப்பிட்ட மனிதர்கள், குறிப்பிட்ட நோய்களால் தாக்கப்படுவதற்கு எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும் கண்டுபிடிக்கமுடியும்/முன்கூட்டியே ஊகிக்கமுடியும். மனிதர்களுக்கிடையிலுள்ள மரபியல் ரீதியான வேறுபாடுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்துவது இதற்கு இன்றியமையாத ஒன்று. International Hapmap consortium போன்ற சர்வதேசக் கூட்டாராய்ச்சி முயற்சிகள் இதற்காகவே பிரத்யேகமாக இயங்கிவருகின்றன. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இலவசமாகத் தங்கள் ஆராய்ச்சிக்கு உபயோகித்துக்கொள்ளமுடியும்.

இந்திய ஜனங்களிலும் இதுபோன்ற மரபியல்ரீதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; குறிப்பாக, தற்போதைய இந்தியாவில் உள்ள மக்கள், பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வந்து தங்கியவர்கள் என்பதை மரபியல்ரீதியாக ஆராய்ந்த சில ஆராய்ச்சிக்கட்டுரைகளை, ஒரு ethics சம்பந்தப்பட்ட வகுப்புக்காக வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது காணநேர்ந்தது. முற்றுமுழுதாக விளக்கி பெரும்பாலானோரைச் சிண்டைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் அபாயத்தைத் தவிர்க்க, சில சுட்டிகளைமட்டும் இறுதியில் கொடுத்திருக்கிறேன், விருப்பமிருப்பவர்கள் படித்துப் பார்த்துக்கொள்ளவும். தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள், வடகிழக்கு இந்தியர் ஆகியோரது மரபியல் கூறுகளைக்கொண்டு, ஐரோப்பிய, மத்திய ஆசிய, திபெத்திய-பர்மிய மக்களது மரபியல் கூறுகளுடன் ஒப்புநோக்கிய மரபியல் ஆராய்ச்சிகளில் சிலவை இருக்கின்றன. மேலும் விருப்பமிருப்பின், சற்றுக்காலம் முன்பு படிக்கநேர்ந்த Luigi Luca Cavalli-Sforza எழுதிய Genes, peoples and languages படித்துப் பார்க்கவும். ஓரளவுக்கு redundancy இருப்பினும், சற்று சுவாரஸ்யமான புத்தகம்.

Genetic evidence on the origin of Indian caste populations

Ethnic India: A Genomic view, with special reference to peopling and structure
Deconstructing the relationship between genetics and race (subscription தேவை)

அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இணையத்தில் குடுமிபிடிச் சண்டைகளைப் பார்த்திருப்பதால் - வடக்கு/தெற்கு, ஹிந்தி/தமிழ், கீழ்ஜாதி/மேல்ஜாதி இத்யாதிகளை. அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் பெறுவது பெரிய சிரமமில்லை, அதன் முடிவுகளை உபயோகித்துக்கொள்வதில்தான் பிரச்னை வரும் எனும்போது அவ்வப்போது இதுபோன்ற விஷயங்கள்குறித்து ஏதோ முடிந்தவரை பொதுவில் பதிந்துவைப்பது என்ற ரீதியில்தான் இதை எழுதமுயல்வது. இருந்தாலும், மேற்கண்ட கட்டுரைகளில், நாலு பிரிவுகளில் ஜாதி மேலே போகப் போக ஐரோப்பியர்களுடனான மரபியல்ரீதியான ஒற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சில மரபியல் குறிப்பான்களைக்கொண்டு (genetic markers) கூறியிருப்பது, அறிவியல் அறிவற்ற, பக்குவமற்ற பிரச்சாரகர்கள் (propagandists) கையில் சிக்கினால் எவ்வளவு விபரீதமாகப் போகும் என்றுதான் முன்னெச்சரிக்கையுடன் யோசிக்கத்தோன்றுகிறது. அதற்கு நேரெதிர்த் திசையில், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால் சமூகப் பிரிவுகள் இன்னும் ஆழமாகும், அதனால் இதையெல்லாம் செய்யாமலிருப்பதே சரி என்று யாரேனும் கூறுவார்களாயின் அது அதைவிட மடத்தனமான வாதம்!! முடிவுகளைக் கையாளும் பக்குவமே முதலில் தேவை. அப்படிப் பார்த்தால், ஐரோப்பிய, ஆஃப்ரிக்க, ஜப்பானிய, சீனப் பிரிவுகள் என்பவற்றுக்கிடையிலும் தகராறுகள் வர வாய்ப்பிருக்கிறதெனலாம் - முடிவின்றிப் போய்க்கொண்டே இருக்கும் அது! எவருக்கும் உபயோகமில்லை அதனால்.

மொட்டை பிளேடு, huh??!! வெகுநாட்களாக வலைப்பதிவுகளை வெறுமனே படித்துக்கொண்டுமட்டும் இருப்பேன், பதில் எப்போதாவதுதான் எழுதுவதுண்டு, அதுவும் பல பதில்களை எழுதுவதில்லை. நேற்றுத் தேவையில்லாமல் போய் கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா ரீதியில் போகுமென்று தெரிந்தே பதிலை எழுத ஆரம்பித்துத் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்! மெக்டொனால்டில் சாப்பிட்டுக் குண்டாகிவிட்டு அதன்மேல் நஷ்ட ஈட்டு வழக்குப் போடுபவர்கள்போல சும்மா சும்மா டொக்கு டொக்கென்று தட்டிக்கொண்டிருக்கும் என் விரல்கள் மேல் நானே வழக்குப் போட்டுக்கொள்ளலாம்; ஒரு surreal lock-up கூடக் கொடுத்துவிடலாம் - தீப்பெட்டி அளவு சிறையறைகளைத் தயார்செய்து விரல்களை அடைத்துவிடலாம் அவற்றுக்குள்!!

என்னய்யா படம் ஏதும் பார்க்கவில்லையா என்று கேட்பதற்குமுன் சொல்லிவிடுகிறேன்: The Grudgeஐ ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் எடுத்துவந்து பார்த்துவிட்டு, இப்போது பாதி அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் என் தலையை மறுபடி ஒட்டவைக்க ஃபெவிகால் தேடிக்கொண்டிருக்கிறேன் ;-)

8 comments:

Thangamani said...

Interesting!

ஈழநாதன்(Eelanathan) said...

கடைசி வரிகளை ரசித்தேன்.

இளங்கோ-டிசே said...

Montresor, நீங்களும் Grudge படம் பார்த்துவிட்டீர்களா? இந்தப்படத்தை தியேட்டரில் ஒரு தோழி பார்த்துவிட்டு, போய்ப் பாரடா பயங்கரப்படம் என்று ·பீலா விட சரி போய்பார்ப்பமென்று தியேட்டருக்கும் போனால் ஒரு மண்ணையும் காணவில்லை. சரி பக்கத்தில் உட்கார்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்தான் ஏதாவது பயப்பிட்டால் அவளுக்கு ஆறுதலிக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டிருந்தால் அவள் ஏதோ comedy படம் பார்க்கின்றமாதிரி சிரித்து சிரித்துப்பார்த்து என்னை மேலும் வெறுப்பேத்திக்கொண்டிருந்தாள்.
பரவாயில்லை, நீங்களாவது நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வுலகம் என்ற மாதிரி Grudge பார்த்துவிட்டதில் எனக்கு ஒரு திருப்தி.

சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவு.
1.இப்படியான விமர்சனங்களின் பின்னர் பெருந்தலை உருளுவது இங்குதான் சாத்தியம். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்ற சங்கராச்சாரியின் பதவி அப்போது இப்படி உருளவில்லை!
2.இனவுட்கலப்புகளால் (endogamous marriages?) பெரிதும் பாதுகாக்கப் பட்டு வரும் இந்திய மரபுக் குறிப்பான்களின் மீதான ஆராய்ச்சிகள் போகப்போக எந்தளவுக்கு ஆதரிக்கப்படும், அதன் முடிவுகள் நாணயமாக விளக்கப்படுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நாடகங்கள்!

ROSAVASANTH said...

//நேற்றுத் தேவையில்லாமல் போய் கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா ரீதியில் போகுமென்று தெரிந்தே பதிலை எழுத ஆரம்பித்துத் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்! //

ஆமாம், இதுவரை உங்கள் எழுத்துகளை படித்து உங்களிடம் இருப்பதாக நினைத்த முதிர்சியில் ரொம்பவே கீழே போய்விட்டதாக தோன்றியது.

ROSAVASANTH said...

இப்போதுதான் இந்த வார நட்சத்திரம் என்பதை கவனித்தேன். ஒரு வாரம் பல தரப்பட்ட விஷயங்களை எழுதி கலக்குவீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!

சன்னாசி said...

//ஆமாம், இதுவரை உங்கள் எழுத்துகளை படித்து உங்களிடம் இருப்பதாக நினைத்த முதிர்சியில் ரொம்பவே கீழே போய்விட்டதாக தோன்றியது.//

எது எப்படியோ! இந்த விஷயத்தை இன்னும்கூடப் பேசிக்கொண்டிருக்கிறார்களா என்ற எரிச்சலில் எழுதியது. அந்தமட்டும், பாவனையேதுமில்லாத எரிச்சலாவது வெளிப்பட்டதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்!! நினைத்தும், நாகரீகங்கருதி சொல்லாமலிருக்காமல், அந்தமட்டுமாவது தோன்றியதை எழுதி personal ossification லிருந்து தப்பித்துக்கொள்ளமுடிகிறதே!!
மற்றப்படி, வாழ்த்துக்களுக்கு நன்றி ரோஸாவசந்த்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
சுந்தரவடிவேல்: ஒரு முன்னோட்டத்துக்கு எழுதியது. சங்கராச்சாரியார் மட்டுமல்ல, எந்தத் தலையாவது உருளுவதாவது! ஜோதிடத்தை ஒரு பட்டப்படிப்பாக வைப்பதென்று உளறிய முரளிமனோகர் ஜோஷி போன்ற படித்த மேதைகள் கையில் இதெல்லாம் சிக்கினால் என்ன மாதிரி சுழற்றியெறிவார்களென்று யோசிக்கத் தோன்றியது....

டிஜே: என் கழுத்து அறுந்து தொங்குவதில் இத்தனை பேருக்கு ஆனந்தமா!! வாழ்க வளர்க ;-)

اخبار المملكة said...

شركة تنظيف مسابح بخميس مشيط
شركة تنظيف مسابح بجدة
شركة تنظيف مسابح بنجران
شركة تنظيف مسابح بمكة
شركة تنظيف مسابح بالمدينة المنورة
شركة تنظيف بالمدينة المنورة
شركة تنظيف بالطائف
شركة تنظيف بخميس مشيط
شركة تنظيف بمكة
شركة تنظيف بنجران