Monday, November 29, 2004
மற்றொரு அறிவியல் கதை, Goodbye!
அறிவியல் கதைகள் என்றவிதத்தில் சுஜாதா தவிர அவ்வளவாக அறிவியல் கதைகளைத் தமிழில் படித்திராததால், பெரும்பாலும் ஆங்கில (அல்லது மொழிபெயர்ப்பு)க் கதைகளையே அடிப்படையாகக் கொண்டு கூறவேண்டியதாயிருக்கிறது. சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வந்தபோது நான் மிகவும் சின்னப் பையன். அதனால், படித்தது பாதி புரியும் பாதி புரியாது. லேசர் ஆன்ட்டி லேசர், பாரி சிபி, இன்னொரு நாய்க்குட்டி (பெயர் நினைவில்லை) என்று பாத்திரங்கள் மட்டும் மேலோட்டமாக நினைவிருக்கின்றன. விஞ்ஞானக் கதைகள் என்று எனக்குத் தெரிந்து சுஜாதாவைவிட்டு யாரும் எழுதியிருக்காததால், இப்போது விஞ்ஞானக் கதைகள் என்று யாராவது எழுதும்போது, எழுத்தாளரின் பின்னணியைப் பார்ப்பதும் தவிர்க்கமுடியாததாகிப்போய்விடுகிறது. மேலும், நமது கலாச்சாரம் அறிவியலுடன் எவ்வளவுதூரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தும்தான் அறிவியல் கதைகளின் தாக்கமும் அவற்றின் களன்களும் விரிவடையுமென்பது என் அபிப்ராயம். Science, New England Journal of Medicine, Nature போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் வரும் புது அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் CNNல் நமது வரவேற்பறையில் கூறக்கிடைப்பது போல சன் செய்திகள் தொலைக்காட்சியிலும் நமது பிற தொலைக்காட்சிகள் மற்றும் பிற வெகுஜன ஊடகங்களிலும் இடம்பெறுகிறதோ, எப்போது அறிவியல் விழிப்புணர்வு பெருமளவு வெகுஜன ரசனையில் இடம்பெறுகிறதோ, அப்போதே ஆராய்ச்சிகள், அதைச்சுற்றிலும் கட்டமைக்கப்படும் கதைகள், திரைப்படங்கள் போன்றவை அதிகப் பிரபலம்பெறும் என்பது என் அபிப்ராயம்.
நான் படித்தவரையில், தமிழ் அறிவியல் புனைகதைகளைப்பற்றிய பேச்சுக்கள் ஐஸக் அஸிமோவையே அதிகமாகக் குறிப்பிடுவதாகப் படுகிறது. அஸிமோவ் வெறும் விஞ்ஞான எழுத்தாளர் மட்டுமல்ல. ஷேக்ஸ்பியர் நாடகங்களைப்பற்றிய ஒரு விளக்கப்புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் (Asimov's guide to Shakespeare). மேலும், ரோபாட்டிக்ஸ் என்ற பிரிவிலேயே அவரது பெரும்பாலான பிரபலமான கதைகள் இயங்கின. சமீபகால அறிவியல் புனைவைப்பற்றி ஏனோ குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. இருநூறு வருடங்களுக்குமுன்பு, பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்திருக்கவேண்டியவன் என்று என்னை நானே கற்பனை செய்துகொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், சற்று காலத்துக்கு முந்தைய கதாசிரியர்களுடனே நிறுத்திக்கொள்கிறேன். பள்ளிக்கூடத்திலிருந்தபோது படித்த அறிவியல் புனைகதையாளர்களில் முக்கியமானவர் ஹெச்.ஜி.வெல்ஸ். அறிவியல் புனைகதைகளில் பெரும்பாலாகக் கையாளப்பட்ட மூன்று கருத்தாக்கங்கள் இவரது புத்தகங்களிலிருந்து உருவானவையே.
1) The Time machine - கால யந்திரம். இதைப்பற்றி அதிகம் சொல்ல அவசியமிருக்காது. காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பிரயாணிக்கும் கதைகள், திரைப்படங்கள் அனைத்தும் ஒருவகையில் இங்கிருந்து தொடங்கியவைதான்.
2) Invisible Man - கண்ணுக்குத்தெரியாத மனிதன். எண்ணற்ற திரைப்படங்கள். திகில், நகைச்சுவை இரண்டுக்கும் சாத்தியமுள்ள கருத்தாக்கம்.
3) The war of the worlds - பூமிமேல் வேற்றுக்கிரகப் படையெடுப்பு. மூன்றிலும் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட idea. கணக்கற்ற படங்கள், கணக்கற்ற வேற்றுக்கிரக ஜந்துக்கள், இத்யாதி.
காலப் பயணம், மறைந்துபோதல், வேற்றுக்கிரகங்கள் - ஹெச்.ஜி.வெல்ஸின் இந்த மூன்று புத்தகங்களிலிருந்தும் கிளைபரப்பிய அனைத்துப் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் காணக்கிடைக்கும் மைய ஓட்டம் - சாதாரண மனிதர்கள் அசாதாரணமான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்வது. குறிப்பாக, கால யந்திரம் கதையில், எதிர்காலத்துக்குப் போய்வந்த கதாநாயகனை சக விஞ்ஞானிகள் நம்பமறுக்கும்போது, அவனது கோட்டுப்பையில் அக்கிரகப் பெண்ணொருத்தி அளித்த மலர் ஒன்று அகப்படும். அப்போதைய பூமியில் காணக்கிடைக்காத அந்த மலரை விஞ்ஞானிகள் நம்பிக்கையின்மையுடன் பார்ப்பதுடன் அந்தக் கதை முடியும். இப்போதுவரை எனக்கு ஒரு மறக்கவியலாத உருவகமாக இருப்பது அந்த மலர். இந்த மூன்று விஷயங்களும் மிகவும் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டன என்பவர்களும் இருக்கிறார்கள். அம் மூன்று விஷயங்களில் வேற்றுக்கிரகப் படையெடுப்பு மட்டும் (எதிர்த்திசையில் - நாம்தான் இப்போது வேற்றுக்கிரகங்களுக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறோம்) தற்போதைய சூழ்நிலையில் யதார்த்தமாகிவருகிறது. Invisible man போல வல்லரசுகள் கண்ணுக்குத்தெரியாத ராணுவங்களை உருவாக்கி எதிரிநாடுகளைத் துவம்சம் செய்வது, காலயந்திரத்தில் பின்னாலோ முன்னாலோ போய் முக்கிய நிகழ்வுகளை மாற்றியமைப்பது என்றவிதத்தில் கணக்கற்ற சாத்தியங்களைத் திறந்துவிட்ட கதைகள் இவை.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட ஜூல்ஸ் வெர்னின் 'Twenty thousand leagues under the sea', 'Journey towards the centre of the earth', 'Around the world in 80 days' போன்றவை, அறிவியல் புனைகதைகள்/அறிவியல் புனைகதைகள் அல்ல என்ற விதத்தில் எப்படிவேண்டுமானாலும் வாதிடலாம். ஆனால், From earth to moon கதையில், கதாநாயகனை ஒரு பெரும் பீரங்கிக்குள்ளிருத்தி நிலவைநோக்கிச் சுடுவது போன்ற சாத்தியமற்ற கருத்துக்களும் கூறப்பட்டன. இவையனைத்தும், மேற்கத்திய அறிவியல் தழைத்து கிட்டத்தட்ட உலகம் முழுதும் பரவத்தொடங்கிய 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. மேலும், வெறும் அறிவியல் புனைகதை என்ற எல்லைகளைத் தாண்டியும் கேள்விகளை எழுப்பியவை. சொல்லப்போனால், ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் புனைகதைக் கருத்துக்களும், நிர்ணயங்களைத் தகர்ப்பதாகவும் ஊகங்களைப் புரட்டிப்போடுவதாகவுமே இருந்திருக்கின்றன. கண்ணுக்கு அனைத்தும் தெரிகிறதா, தெரியாதவனைப்பற்றி எழுது; காலம் ஓர்திசை கொண்டதா, இல்லை, முன்னும் பின்னும் போகமுடியுமென்று எழுது; ஜீவராசிகளனைத்தும் பூமியின் மேற்பரப்பில் வசிக்கின்றனவா, பூமியின் உள்ளும் ஒரு உலகம் இருப்பதாக எழுது (ஜூல்ஸ் வெர்னின் கதாநாயகர்கள் மகாபலிச் சக்கரவர்த்தியைச் சந்திப்பதாக யாராவது கதை எழுதலாமே?) என்ற ரீதியில், அனைத்தும் எதிர்-கருத்தாக்கங்களாக முன்வைக்கப்பட்டவை என்ற விதத்தில்தான் நான் படித்துள்ள அனைத்து முக்கியக் கதைகளும் தோன்றுகின்றன. எவ்வளவு காலம் ஹெச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன் என்று புலம்பிக்கொண்டிருப்பாய் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது இந்தக் கதைகள் அத்தனையையும் சித்திரக்கதைகளாகப் படித்தேன் (Paico pocket classics என்று நினைவு...), அதன்பிறகுதான் முழுப் புத்தகங்களாகப் படித்தேன். எத்தனை காமிக்ஸ் புத்தகங்கள் - முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று - அனைத்தும் வெள்ளைக்காரக் கதாநாயகர்கள்!! இந்திரஜால் காமிக்ஸில் மட்டும் அவ்வப்போது நமது கதாநாயகர்கள் வருவார்களென்று நினைக்கிறேன். முதலில் கார்ட்டூன் என்று இலக்கியக் கதைகளில் குறிப்பிட்டவர்களே வெகு குறைவு. சொல்லப்போனால், எஸ்.ராமகிருஷ்ணனின் 'புத்தரின் கார்ட்டூன் மொழி' தவிர வேறெந்தக் கதையிலும் நான் சித்திரக்கதையைப் பற்றிய ஒரு குறிப்பைக்கூடப் படித்ததில்லை!!
ரே ப்ராட்பரியின் முக்கியமான கதையொன்று ஃபாரன்ஹீட் 451 (மைக்கேல் மூரின் சமீபத்திய ஃபாரன்ஹீட் 9/11 கிட்டத்தட்ட இந்த ஐடியாவில்தான் பெயரிடப்பட்டதென்று நினைக்கிறேன்). ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), ஃபாரன்ஹீட் 451 ஐப் படமாக எடுத்திருக்கிறார். எதிர்காலத்தில், புத்தகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஒரு சூழ்நிலை. தனிமனிதர்கள், நூலகங்கள், கல்விச்சாலைகள் அனைத்திலுள்ள புத்தகங்களும் எரிக்கப்படுகின்றன. புத்தகங்களை வைத்திருப்பது தேசத்துரோகம். புத்தகங்களை எரிப்பதற்காகவே தனி 'புத்தக எரிப்புப் படை' இருக்கிறது. ஃபாரன்ஹீட் 451 என்பது, புத்தகத் தாள்கள் கருகிச் சாம்பலாகத் தேவைப்படும் வெப்பத்தைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட புத்தக எரிப்புப் படையிலுள்ள ஒருவன், தற்செயலாகப் புத்தகங்கள்மீது ஆர்வங்கொள்வதும், அதுவே அவனுக்கு ஆபத்தாக முடிவதும், இறுதியாக அவன், எதிர்ப்புக் குழுக்களிலொன்றில் போய்ச் சேர்வான். புத்தகங்களை அழிப்பதன்மூலம் அறிவை அழிக்கமுடியாது என்ற நம்பிக்கையுள்ள அந்த எதிர்ப்புக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடம் செய்துவைத்து, தாங்கள் சாகுந்தறுவாயில் இளையசந்ததியில் ஒருவருக்கு அந்தப் புத்தகத்தைப் பயிற்றுவிப்பதை விவரிப்பதுடன் புத்தகம் முடியும். இதை ஒரு அறிவியல் புனைகதை என்று கூறமுடியுமா? முடியுமென்றே தோன்றுகிறது. இந்தக் கதையில், gadgetryயின் முக்கியத்துவம் பின்னுக்குப்போய், சிந்தனையைப் புனைகதையின் மூலப்பொருளாகக் கொள்வது ஆசுவாசமளிக்கிறது.
இதேபோல, சமீபத்திய எழுத்துக்களில், மைக்கேல் க்ரிக்டனின் பல புத்தகங்களும் (முன்பொரு பதிவில் இவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்) வெகுஜன ரசனையை முன்னெடுத்துச் செல்வதாகவே இருக்கும். ஜூராஸிக் பார்க் போன்ற வெற்றிகரமான படங்களாக்கப்படும்போது, சாமானிய வாசகனுக்கும், பார்வையாளனுக்கும்கூட, DNA, Paleontology, dinosaurs என்ற ரீதியில் rudimentary science புகட்டப்படுகிறது. அதற்குமேல் அவற்றைப் பின்தொடர்வதும் விட்டுவிடுவதும் அவரவர் இஷ்டம். அறிவியல் புனைகதைகள் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் கூறமுடியாது என்றாலும், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுவது நிஜம்தான். சுஜாதாவைத் தாண்டியும் அறிவியல் கதைகள் யாராவது எழுதினால் நன்றாயிருக்கும். மேலும், அறிவியல் கதைகளின் நம்பகத்தன்மைக்கும் வாசக ஈர்ப்புத்தன்மைக்கும் அதன் details (தகவல்நுணுக்கம்) மிக முக்கியம். அழகாக தகவல் ஃப்ரேம் அடிக்கப்பட்ட கித்தானில்தான் அறிவியல் கதை நன்றாக இருக்கும். அதையும் தாண்டிய அறிவியல் கதைகள் என்பது எனக்குத்தெரிந்து வேறெங்கும் இல்லை, அல்லது குறைந்தபட்சம் நானாவது படிக்கவில்லை. தகவல்களின் நுண்மையைத் தீண்டத்தகாதது போல் கருதாமல், கருத்தாக்கங்களை வலுப்படுத்தும் சாரங்களாக அவற்றைக் கொள்வது வரவேற்கத்தக்க ஒன்று என்றால், ஜெயமோகனின் இந்தக் கதையில் நான் காணாதது அது ஒன்றே. சலிப்புத்தரும் தகவல் பொதுப்படைத்தன்மை, உள்ளொளி, பயிற்சி போன்ற வார்த்தைகளின் redundancy (கதையிலல்ல, பொதுவில்), கதையை விழுங்கி ஏப்பம்விடும் உரையாடல்கள் போன்றவை. இதைவிட, ஜெயமோகனின் 'திசைகளின் நடுவே' தொகுதியில் உள்ள ஒரு கதையை (பெயர் நினைவில்லை) இதைவிடச் சிறந்த அறிவியல் புனைகதை என்று கொள்ளலாம். ஏன், அவரது மிகச்சிறந்த கதைகளில் ஒன்றான 'டார்த்தீனியம்' ஐக்கூட நான் படித்தகாலத்தில் அறிவியல் கதையாகவே பாவித்தேன். மிக அற்புதமான கதை அது.
பின்பு ஒருநாள் இதைத் திருத்தி எழுத முயலலாம் (சொல்லிவைத்தால் போகிறது, எழுதாவிட்டால் யார் கேட்பார்கள்?!?!). வேறு வேலைகள் வேறு கழுத்தைப் பிடிக்கிறதால்......
கடைசியாக ஒரு சொல். புனைவு, நிஜம் என்பதை முடிந்தளவு திருகிக் காயப்போடும் ஒரு கதையைப் படிக்க விருப்பம் இருந்தால், 'Tlon, Uqbar, Orbis Tertius' என்ற கதையைப் படித்துப் பார்க்கவும். அக்கதையை ஒரு குறிப்பிட்ட genre க்குள் அடைக்கமுடியாது. தத்துவங்களைப் புனைவின் கயிறுகளால் இறுகப் பிணைத்து மூச்சுத்திணறவைப்பதாக நான் கருதியவற்றுள் முக்கியமான ஒரு கதை அது.
Wednesday, November 24, 2004
ஐ(யோ)ஸ்வர்யா ராய்..
ஒரு சின்ன சந்தேகம். இந்தப் படத்தை இட்டது ஏனென்றால், சற்றுக்கூட அழகுணர்ச்சியின்றி (உடைக்காகச் சொல்லவில்லை...) இதைவிடக் கண்றாவியாக ஐஸ்வர்யா ராயை யாராவது ஃபோட்டோ பிடிக்கமுடியுமா என்று தெரிந்துகொள்ளத்தான்! ஃபோட்டோ புடித்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை - தெரிந்தால் அவ(ர/ள)து காமிராவில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடலாம்!!
Monday, November 22, 2004
திண்ணை - அறிவியல் கதை
//குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான்.//
இது முற்றிலும் உண்மையில்லையென்றாலும், எதுவும் நடக்கலாமென்ற அறிவியல் சூழ்நிலையால், இது பெரிய விஷயமில்லை, ஒரு இறுதியான முடிவாகவுமிருக்காது. மனிதனுக்கு HIV போலக் குரங்குகளுக்கும் SIV (Simian Immunodeficiency virus) உண்டு.
http://pin.primate.wisc.edu/research/biosafety/mmwr.html
இந்தக் கதை பிடித்ததா? இல்லை. கிட்டத்தட்ட ஒரு பேட்டி, வியாக்கியானம் போலக் கதை போய்விட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
//ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குன்னா அது நிரந்தரமான மருந்தாகத்தான் இருக்கமுடியும்//
?? அது என்ன, சாவா? அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது. பூமியைச் சீரழிக்கும் மனிதர்களே, ஆவியாகக் கரைந்துபோய்விடுங்கள் என்று சொல்வது நன்றாகத்தானிருக்கிறது - ஆனால், இடுப்பில் கட்டிய கயிறுக்கும் மறுநுனிக்கும் இடையில் எவ்வளவு தூரமிருக்கிறதென்று யூகிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் விஸ்தீரணமும் அதேயளவு முடிவற்றதாகவே இருக்கும். பூமி என்பதை ஒரு template ஆக நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோமென்பதே உண்மை. நாம் மட்டுமல்ல, பரிணாம வளர்ச்சியின் அடிப்படை விதியும் அதுதான். மற்றபடி நோபல் பரிசு, 'இப்போது மருந்தை வெளியிடுவது' இன்னபிறவெல்லாம்....ம்ஹூம்.
தினமணிகதிரில் 'பிரதிமை' என்று ஒரு கதை வந்தது. அதிலும் இறுதியில் ஒரே ஒரு கேள்வி இருக்கும். ஆனால், அந்தச் சாதாரணக் கதையை அக்கேள்வி வேறெங்கோ கொண்டுபோய் வைக்கும். ஜெயமோகன் தன் 'களைப்பை நீக்குவதற்காக எடுத்துக்கொண்ட பயிற்சி' இந்தக் கதை என்று நினைக்கிறேன். இனி நிஜக் கதைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
ஜெயேந்திரர் - இன்னும்
//The reasons lie in the vagaries of Dravidian politics, particularly the competitive inclination to invoke anti-Brahmin sentiment.//
எத்தனை திரிகளைக் கொளுத்திப் போடமுயல்கிறார்கள்! ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல. சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுவதில் கருணாநிதி லேசுப்பட்ட ஆள் இல்லையென்றாலும் (யோக்கிய சிகாமணி அவருக்குத்தான் பஸ் பெயருக்குக்கூட சாதித்தலைவர்கள் பெயர் வைக்கத் தோன்றும்!! இதில் கடுப்பாகிப்போன எங்கள் ஊரில் சில இளைஞர்கள், ஒருநாள், "எங்கள் தங்கத் தலைவி சிலுக்கு மற்றும் நக்மா பெயரில் போக்குவரத்துக்கழகம் தொடங்குக" என்று போஸ்டர் அடித்து, ஊருக்குள் வரும் அனைத்து பஸ்களிலும் ஒட்டிவிட்டார்கள்), ஒரேயடியாக 'திராவிட அரசியல்' என்று கட்டம்கட்ட முயல்வது மொத்தத் தமிழ்நாட்டின் முகத்திலும் காறித்துப்புவது போலத்தான். திராவிட அரசியலும் இல்லாவிட்டால், இப்போது தமிழ்நாடும் கிட்டத்தட்ட பீஹார் மாதிரி ஆகிப்போயிருக்கும். அல்லது, ஆந்திரா போல ரெட்டி-கம்மா ஆக்கிரமிப்பில் பிற சமுதாயங்களெல்லாம் கிட்டத்தட்டக் காயடிக்கப்பட்டிருக்கும். ஆக மொத்தம், 'திராவிடக் கட்சிகள்' என்பதை political dalitize பண்ணுவதில் அடடா இவர்களுக்குத்தான் என்ன ஆனந்தம்!!
வீரத்துறவி ராமகோபாலன் வேலூர் சிறைமுன்பு கற்பூரம் கொளுத்தி சாமியாடியதைப் பார்த்தால் தமாஷாகத்தான் இருக்கிறது. இதேநேரத்தில் மற்றொன்றையும் நினைவுகொள்ளவேண்டும். இதே, ஜெயேந்திரருக்குப் பதிலாக மற்றொரு சிறுபான்மை மதத் தலைவர் கைதாயிருந்தால் இந்நேரம் கருணாநிதி படமெடுத்து ஆடியிருப்பார். கேரளாவில் ஏ.கே.அந்தோணி, "Minority terrorism is as bad as majority terrorism" என்றதைப்போல் முதுகெலும்புள்ள ஆசாமிகள் யாராவது சொல்வார்களா இங்கே? நாளாக நாளாக விஷயங்கள் மேலும் மேலும் அரசியலாக்கப்பட்டுவரும் இந்த விஷயத்தில், "சங்கரராமனின் மற்றொரு முகம்" என்பதுபோன்ற விறுவிறுப்பான செய்திகளை விகடன் வேறு வெளியிடுகிறது. செய்திகளைப் படிப்பதில் தோன்றுவது என்னவென்றால், நாசூக்காக அனைவரும் பக்கச்சார்பு எடுக்கிறார்கள் என்பதுதான். ஒரு கட்டத்துக்குப்பின் இது வெளிப்படையாகும், பிற விஷயங்கள் முன்னுக்கு வந்து ஜெயேந்திரர் விஷயம் பின்னுக்குப் போகும்போது, சார்புநிலை படு வெளிப்படையாகும், அப்போது அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். செய்தித்தாளின் முதல்பக்கச் செய்தியைவிட உள்பக்கச் செய்திகள் துல்லியங்குறைந்தவையாக இருக்கலாமென்பதை நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், அவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டோம். அப்போது ஜெயேந்திரர் ஆதரவு ஊடகங்களும், ஜெயேந்திரர் எதிர்ப்பு ஊடகங்களும் தங்கள் நாசூக்குகளையெல்லாம் களைந்துவிட்டு சண்டைச்சேவல்கள் மாதிரித் தங்கள் உட்பக்கங்களில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும். அப்போதும் இந்த விஷயங்களைத் தொடர்ந்து படித்துவருபவர்கள் தங்களையறியாமலே ஒரு பக்கத்திற்குப் போய்விடுவார்களென்றுதான் தோன்றுகிறது. இப்படிக் காஞ்சி மடம் சீரழிவதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், institutionalize செய்யப்பட்ட ஒவ்வொரு மதப்பிரிவும் ஒரு காலகட்டத்தில் விரிசல்விடும் என்பது வரலாறு கூறும் உண்மை. அதற்கு உலகின் எந்த மதமும் விதிவிலக்கல்ல.
இதில் ஜெயலலிதா எங்கே வருகிறார்? சொந்தக் காரணங்களுக்காக ஜெயேந்திரரைப் பழிவாங்கிவிட்டார், கருணாநிதியின் அழுத்தத்தைச் சமாளிக்கவே ஜெயேந்திரரைக் கைதுசெய்தார், இது அவரது மற்றொரு எடுத்தேன் கவுத்தேன் முடிவு - ஆச்சா போச்சா என்று ஏகப்பட்ட conspiracy theory கள். நான் யோசித்துப் பார்த்தவரையில், எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஒருவேளை ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளுமளவுக்கு எனக்கு (ஏன், எவருக்குமே...) அனுபவம் பத்தாதோ என்னவோ. இதே தமிழ்நாட்டில், இதே அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா இடத்தில் உமா பாரதி அல்லது சுஷ்மா ஸ்வராஜ் போன்ற வீரசன்னியாசினிகள் இருந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்த்தால், அதைவிட இப்போதைய நிலைமை பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
Tuesday, November 16, 2004
தேவதச்சன் கவிதைகள்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
-தேவதச்சன்
மிகவும் அபூர்வமாக எழுதும் தேவதச்சன், எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர். பிற கவிதைகளுக்கு இப்போதைய காலச்சுவடு பார்க்க. மிக நுட்பமான கவனிப்பு, மிக அபாயமற்ற வார்த்தைகளினூடே மின்னி மறையும் ஒருகணத் தெறிப்பு (இக்கவிதையில் 'இன்னொரு பகலில்') என்று எத்தனையோ கவிதைகள் உள்ளன. என் முந்தைய பதிவுகளில் ஒன்றில்கூடக் குறிப்பிட்டிருப்பேன் - அவரது ஒரு கவிதை, ஒரு ஓவியத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைக்கும் ஓவியத்துணிக்குமிடையிலுள்ள இடைவெளியைப்பற்றிப் பேசும். சுலபத்தில் என்னால் மறக்கவியலாத ஒரு உருவகமாக அமைந்துவிட்டது அது. அந்த இடைவெளியைத் தேடித்தானே உலகம் நாயாய் அடித்துக்கொண்டிருக்கிறது? நான், நீ என்று விளித்து எழுதப்படும் நூறு கவிதைகள் தரும் அலுப்பை இம்மாதிரிக் கவிதைகளில் ஒன்றேயொன்று ஒரு சொடக்கில் நீக்குகிறது.
'நான் நீ'க் கவிதைகளின் மனவியல், நிகழ்பரப்புக் குறுக்கத்தை (சில கவிதைகள் விதிவிலக்கு என்பது உண்மை) அதை எழுதுபவர்களே உணர்ந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு 'கடைசி வரி பஞ்ச்' வேறு தவிர்க்கமுடியாமல் இருந்துபோகிறது!!
ஒரு தலைப்பு...
Monday, November 15, 2004
மேதாவி
இதை எத்தனைபேர் கவனித்திருப்பீர்களென்று தெரியவில்லை. சுபம் பிரகார் தான் இந்தியாவின் மேதாவி மாணாக்கர் என்று ரிடிஃப்பில் செய்தியைப் படித்தபோது, சரி சற்றுப் பின்னே போகலாமென்று படித்தேன். முதல் பரிசு பத்து லட்சம் ரூபாய்கள்! நடத்தியவர் சித்தார்த்த பாசு என்பதால், ஏதோ மேம்போக்கான அறிவுப்போட்டியாக இருக்காது என்று தோன்றினாலும், இந்தப் போட்டி இன்று முடிவடைந்தது, ரிடிஃப்பில் படித்ததுதான் இதைப்பற்றி எனக்குத் தெரிந்த முதல் செய்தி என்றும் முதலில் கூறிவிடுகிறேன். மற்றப்படி நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவேயில்லை என்பதால் வேறு விவரம் ஒன்றும் தெரியவில்லை. சென்ற வருடமும் இதுபோல நடந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை. வேறு யாரேனும் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருந்தாலோ மேலும் அதிக விவரம் அறிந்திருந்தாலோ எழுத முயலலாமே?
இதைப் படித்ததும் முதலில் தோன்றியது, எத்தனை பேர் எப்படியெப்படியெல்லாம் என்னை மேதாவியாக்க முயன்றிருக்கிறார்கள் என்பதுதான். எப்போதும் முதல் ராங்க் வரவேண்டுமென்று ஒரு ஆர்வம் அனைத்துப் பெற்றோருக்கும். பிற ராங்க்குகளெல்லாம் எங்கே போவது? Dead poets society என்று ஒரு படம் உள்ளது - அதன் கதை போல நமது ஊரில் எத்தனை நடக்கிறது? ஒருகாலத்தில் கல்லூரி வந்தபின்னும் என் வீட்டில் முதல் இடம் பற்றி விசாரித்தார்கள். அதெல்லாம் நமக்கெதுக்கு என்று ஜாலியாக இருந்த காலம். விசாரிப்பு அதிகமாகிக்கொண்டே போக, ஒருநாள், "இதோ பாருங்க, ஒரு இஞ்சின் பத்து கம்பார்ட்மெண்ட் இழுக்கமுடியும்னா பத்துதான் இழுக்க முடியும், இருபது கம்பார்ட்மெண்ட்டை மாட்டினா இஞ்சின், கம்பார்ட்மெண்ட் எல்லாம் சேர்ந்து கவுந்துபோயிரும்" என்றேன் தத்துவார்த்தமாக. சரி, அதிகப்பிரசங்கித்தனத்தில் முதல் ராங்க்குதானென்று அதற்குப்பிறகு நாகரீகமாக ஏதும் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்.
உபயோகமாக எத்தனை விஷயங்கள் செய்திருக்கலாம் என்று நினைக்கையில், தவறெல்லாம் நம்மீதுதானிருக்குமே தவிர, பிறர்மீதிராது. கொலம்பஸ் ஆவதற்குப் பதிலாக நான் புலம்பஸ் ஆனேனென்றால் அதற்கு முழுக் காரணமும் நானே. ஒரு சின்னக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். கல்லூரியிலிருந்தே எடுத்துக்கொள்வோம்; கல்லூரி மத்தியிலிருந்து, சமீபத்தில் புகையை நிறுத்தியவரை (குறைத்தது என்று கொள்ளலாமே...), ஒரு நாளைக்கு 20 சிகரெட்கள் என்று கணக்குப் போட்டால், 43800 சிகரெட்டுகள்! ஒரு சிகரெட் உத்தேசமாக 7 நிமிடங்களை ஆயுளில் குறைக்கிறது என்றால்... வாழ்க்கையில் 213 நாட்கள் புகையாக வெளியேறியிருக்கின்றன! ஒரு சிகரெட்டைப் புகைக்க 3 நிமிடங்கள் என்றால், புகைக்கச் செலவான நேரமே 2190 மணி நேரங்கள்! இவ்வளவு நேரத்தில் மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மன் கற்றுக்கொண்டிருக்கலாம், அலையான்ஸ் ஃப்ரான்ஸேயில் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டிருக்கலாம், அல்லது நிஜமாகவே இருபது கம்பார்ட்மெண்ட்டுகளை இழுக்க முயன்றிருக்கலாம்!! எலூர் நூலகத்தில் இன்னும் பல புத்தகங்களை உண்டு செரித்திருக்கலாம்....எத்தனை விஷயங்கள்!! இது புகைக்கு மட்டும். பிறவற்றுக்கு எங்கே போவது!
எதையாவது படிக்கலாம் என்று ஸ்வெலபில்லின் ஒரு புத்தகத்தைத் தேடிப் போனால், காணோம். சரி என்று பக்கத்திலுள்ள புத்தகங்களைப் பீராய்ந்துகொண்டிருந்தபோது பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian or South-Indian family of languages)' சிக்கியது. சரி, ஏகப்பட்ட மேற்கோள்களில் இதைப் பார்த்திருக்கிறோமே, படிக்கலாமென்று எடுத்து வந்து ஒரு நாற்பது பக்கங்கள் இப்போதுதான் படித்திருக்கிறேன். முப்பத்தேழு வருடங்கள் தமிழைப் படித்திருக்கிறார் என்றது முன்னுரை. உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான், மதமாற்றத்துக்கு மொழி ஒரு அவசியம் என்றிருந்தாலும்கூட. இப்போதைய அளவு அறிவியல் இறுக்கம் அப்போதுள்ள மொழியியல் ஆராய்ச்சியில் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை என்றபோதிலும், தமிழர்கள் குறித்து அவர் கூறும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் நாம் கவனித்துக்கொள்ளவேண்டும்!! புத்தகம் இப்போது என்னருகில் இல்லாததால், உத்தேசமாக எழுதுகிறேன்..
//எந்தெந்த இடங்களிலெல்லாம் aristocratic மற்றும் சிரத்தையற்ற மனோபாவமுடைய ஜனங்கள் இருக்கிறார்களோ, அங்கு கிரேக்கர்கள், ஸ்காட்டியர்கள் போலத் தெற்கத்திய உலகின் தமிழர்கள் போவார்களேயாயின், கடைசியில் அவ்விடத்து மக்களை eject செய்துவிட்டுத் தங்களை ஸ்தாபிதம் செய்துகொள்வார்கள்//
//இரண்டாயிரம் வருடங்கள் சமஸ்கிருதத்துக்குத் தென்னிந்திய மொழிகள் தாக்குப்பிடித்துவிட்டதால், இனி வேறெந்த மொழியும் இம்மக்களுக்குத் தாய்மொழியாக வாய்ப்பே இல்லை// (இதைப் படித்ததும் மயிர்கூச்செறிந்தது..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... வாழ்க மஞ்சத்துண்டு மாணிக்கம்!!)
//சமஸ்கிருதத்திலிருந்து தென்னிந்திய மொழிகள் கடன்வாங்கியிருப்பதுபோல, சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் நோக்கிய பரிமாற்றமும் இருந்திருக்கக்கூடும், ஆனால், வலிமையான உடல்வாகுடைய ஆரியர்களின் மொழி, முரட்டுத்தனமான (rude) தென்னிந்தியர்களின் மொழியை விடவும் பண்பட்டவையாகவே இருந்திருக்கக்கூடும், திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்துக்குப் போய்ச்சேர்ந்த சொற்கள் பெரும்பாலானவை, அப்போதைய இந்தியப் பிரதேசத்தின் செடிகள், மிருகங்கள், உணவுவகைகள் போன்றவற்றைக் குறிக்கும் சொற்களாகவே இருக்கும்//
//திராவிட மொழிகள், விஞ்ஞானம், அறிவுத்துறை போன்றவற்றில் பயன்படுத்தும் சொற்களில் சமஸ்கிருதக் கலப்பிருப்பது, அத்துறைகளில் சமஸ்கிருதத்தின் superiority ஐ உணர்த்துகிறது//
இதுபோன்று ஏகப்பட்ட விஷயங்கள், உண்மைகள், ஊகங்கள், இத்யாதி. அப்போது மாக்ஸ் ம்யுலர் போன்றவர்கள் பிரஸ்தாபித்த ஆரியப் படையெடுப்புக் கருத்தை அடிப்படையாகக்கொண்ட ஏகப்பட்ட ஊகங்கள். ஆனால், ரஷ்ய ஸ்டெப்பிப் பிரதேசங்களிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஆரிய மக்கள், இந்தியா வந்து சேருமுன்பே தங்களது மொழியை, வேதக் கலாச்சாரத்தை உருவாக்கி, அதை ரஷ்ய, மத்திய ஆசியப் பிரதேசங்களில் எங்கும் ஒரு துளி கூடச் சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து, இந்தியா வந்தபின்பே கட்டவிழ்த்துவிட்டனர் என்பதைமட்டும் மறுபேச்சேயில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன்! wink wink!! ஹி ஹி!! இதைப்பற்றி மேலும் பேசுமளவு நமது சிற்றறிவில் சரக்கில்லை என்பதால், மொழி பற்றி கால்டுவெல் கூறுவதை விட்டுவிட்டு இதிலென்ன ஆர்வம் என்றால் - அடிப்படைச் சிக்கலே அதுதான்.
நிபுணத்துவமற்ற ஒரு விஷயம் பற்றிப் படிக்க முயல்கையில், ஒரு கட்டத்துக்குப்பின், குறைந்தபட்ச நிபுணத்துவம் கொண்டதாக நாமே நம்மைத் தட்டிக்கொடுத்துக்கொண்டு, அபிப்ராயங்கள் சொல்லத் தயாராகிவிடுகிறோம் (நான் இந்தக் கணக்கில் சேர்த்தியில்லை என்பவர்கள், ஓம் ஓம் என்பதை ஏன் ஏன் என்று மாற்றிப் படித்துக்கொள்க!). Jack of all trades, King of nothing என்ற பொருளில் மிகவும் மலினமாக்கப்பட்ட இந்த அறிவுச்சேகரம் எதற்கு உபயோகப்படும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வதற்காகவாவது இப்படி எழுதிப்பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். கால்டுவெல்லின் புத்தகத்தை சொல்லப்போனால் ஒரு புனைகதை, ஒரு புதினம் போல்தான் படிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு மொழியியல் மாணவன் அல்ல, என்னால் அதை அப்படித்தான் படிக்க முடியுமென்று நினைக்கிறேன். Pleasure of reading, vanity of mastering இரண்டுக்குமிடையில் தேர்ந்தெடு என்றால் (அந்தப் பிரயோகம் காப்பியடித்தது...) முன்னதையே ஏனோ தேர்ந்தெடுக்கத் தோன்றும். பின்னது நிபுணர்களுக்கு. அதனால்தான் வினோதமாக இருக்கிறது. அது அறிவுச்சேகரம் அல்ல, பின்பு மேற்கோள் காட்ட உபயோகப்படும் குறிப்புக்களாக இல்லாமல், நடந்துசெல்லும் பாதையின் ஆயிரக்கணக்கான புற்களிலொன்றாக, கற்களிலொன்றாக, யாம் விரும்பும் பெண்ணின் பற்களிலொன்றாக(உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், மன்னிக்க!!)க் கொள்ளலாம்தான்.....
'புரிகிற, புரியாத எழுத்துக்கள்' குறித்து ஏகப்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள், கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்...ஏதாவது ஒருநாள் அவற்றுக்குப் பொறுமையாக உட்கார்ந்து பதில் எழுதலாமென்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், சமயம் வாய்ப்பதில்லை. 'புரியாத எழுத்துக்கள்' என்று ஏதாவது உள்ளதா என்ன? 'எனக்குப் புரியாத எழுத்துக்கள்' என்று வேண்டுமானால் இருக்கலாம். அதேதான் மற்றதற்கும் என்பது என் அபிப்ராயம். கால்டுவெல்லின் புத்தகத்திலும் சிலது புரிவதில்லை, சிலதை வரிசைப்படி படிப்பதில்லைதான். ஆனாலும் அதைப் படிக்கமுடிகிறது. வாசக வலிமையின் அதி அதீத அனுபவம், புத்தகத்தைத் திறக்காமலே புத்தகத்தைப் படித்து முடித்துவிடமுடிவதுதானென்று நினைக்கிறேன்! அந்தமாதிரி ஏதோ ஒரு புத்தகத்தை முயன்று பார்க்கச் சிபாரிசு செய்யுங்களென்றால் 'A complete idiot's guide to being useful to the world' போன்ற புத்தகங்களை அன்பளிப்பாகப் பெற்றுவிட வாய்ப்பிருப்பதால்...இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். சில மாதங்கள் கழித்து, பரீட்சைத் தொல்லைகள் முடிந்தபின்பு புரியுதா புரியலையா என்பதை ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுத முயல்கிறேன்.
ஆகமொத்தம், பரிசு பெற்ற சுபம் பிரகாருக்கு வாழ்த்துக்கள். உன் புண்ணியத்தில் இன்று ஏதோ எழுதினேன்... சற்று soul-search செய்தேன். எழுதநினைத்தது, மேதாவித்தனத்தை அளக்க ஏதாவது வழிமுறைகளிருக்கிறதா என்று. உண்மையில், மேதாவித்தனம் என்பதே ஒரு nebulous விஷயமாகப் படுவதால் (அதாவது, நம்மை மேதாவி என்று நிரூபணம் செய்ய உதவும் ஒரு வழிமுறை இருந்தால், அதை உடனடியாக அங்கீகரித்துவிடுவோமென்பது வேறு விஷயம்!!), சரி, இதுவும் ஒரு reality show போலத்தான் என்று கொள்ளலாம். ஆனாலும், அச் சிறுவர்களின் மகிழ்ச்சிதானே இதில் முதல் விஷயம். பரிசென்ன, பாராட்டென்ன, எல்லாம் பின்புதான்.... குழந்தையின் சிரிப்பில் கடவுளைக் காணமுடியுமென்பது உண்மைதான்.
Friday, November 12, 2004
ஜெயேந்திரர்
இந்த வரிசையில் அவரைச் சேர்த்துவிடுவதை நான் செய்யாவிட்டாலும், சேர்க்கப்பட்டுவிடுவது காலத்தின் கட்டாயம்.
சங்கரர் என்று அவரை அழைக்க ஏனோ எப்போதும் எனக்குத் தோன்றியதில்லை.
இப்போதுவரை படித்த பதிவுகளில் மிகவும் பிடித்தது இதுதான். பெரிய தத்துவ/சூழல் அலசல் என்றில்லாமல், மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொன்னதற்கு என் பாராட்டுக்கள். எப்போதோ ஒருமுறை வலைப்பதிவுகளில் கிடைக்கும் இந்தமாதிரியான அலங்காரமற்ற பதிவுகளைப் படிக்கும்போதுதான் சற்று ஆசுவாசம் கிடைக்கிறது.
Sunday, November 07, 2004
ஸ்டிங் & காலாவதி
இதேபோல் கல்லூரியில் என் நண்பனின் ஒரு சிடியில் Cat Stevens ன் 'Sad Lisa' வைத் திரும்பத் திரும்பக் கேட்டு அதைத் தேய்த்தழித்தேன். இங்கே அவரது முழு ஆல்பமொன்றை வாங்கியபோது மிஞ்சியது ஏமாற்றமே. ஒரு நல்ல பாடலைக் கேட்கும்போது 'அதற்குள் நம்மைத் தொலைப்பது' என்ற க்ளிஷேவைத் தாண்டி, அதை வைத்து என்ன செய்வதென்ற பதற்றமே மிஞ்சுகிறது...போனி எம்மின் 'See the stars coming shining down from the sky' கேட்டவாறு அப்போது டைரியில் ஏதோ எழுதிக்கொண்டேயிருந்தேன். அதற்கு அர்த்தமேதும் இருந்திருக்காது, இப்போது படித்துப் பார்த்தாலும், அந்தத் தருணத்தை என்னால் மீட்டெடுத்துவிடமுடியாது. ஒரு தருணத்தை முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்வதென்ற பேராசை எத்தனை முறை தோல்வியில் முடிந்தாலும் மனது கேட்பதாயில்லை. Haphazard ஆகக் கேட்கும் பாடல்களனைத்தும் பில்போர்ட் சார்ட்டில் முதலிடம் பெற்றிருக்காது, சமீபத்தவையாக இருக்காது, ஏதாவதொரு obscure குழுவின் ஹிட்டாகாத பாடலாக இருக்கும் - Ace of base ன் 'Cruel summer' ஐ எத்தனை தடவை கேட்டிருப்பேன்; இப்படித்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நமது விருப்பங்களுக்கேற்ப வளைக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
'I don't drink coffee, I drink tea my dear' என்ற 'Englishman in New York' பாடலின் முதல் வரியினுள் என்னையே நுழைக்க முயன்றுகொண்டு ஒவ்வொரு முறையும் அபத்தமாக, சந்தோஷமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு பாடலை, ஒரு பிம்பத்தைக்கொண்டு நினைவுகொள்ள முயல்வது எவ்வளவு உன்னதமான விஷயம் - மூன்று நிமிடங்களில் கடந்துவிடும் ஒரு பாடலும் சில கணங்களில் மறைந்துவிடும் ஓர் பிம்பமும் பெயரற்ற சாலைகளில் தனித்தெரியும் சோடியம் வேப்பர் விளக்குகளின் இணையற்ற தனிமையும் திரும்பத்திரும்பப் புகையாகக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்னை. ஒருவேளை 'திருடப்பட்ட காரின்' முதல்வரியில் சிறிதாகத் தொடங்கும் தபலா ஒலியும் எனது பிரத்யேக அலைவரிசைகளின் தாக்குதல்களும் இன்றையபொழுதின் நிம்மதியையும் நிம்மதியின்மையையும் தீர்மானிக்கின்றனவோ என்னவோ. தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்: கட்டளைகளுக்குட்பட்டு யோசிக்கமுயன்று உழன்றலைந்த காலங்களை அலுத்தவாறு. முடிந்தளவு குப்பைகளைச் சேர்க்கிறேன்.
'There's a wire in my jacket, this is my trade
It only takes a moment, don't be afraid
I can hotwire an ignition like some kind of star
I'm just a poor boy in a rich man's car'
-Sting, 'Stolen car'
Friday, November 05, 2004
நான் எழுதிய ஒரு கதை
இதைப் படித்தபோது, சரி, சும்மா கமெண்ட் எழுதிச் சாவதைவிட, 'இணைய இலக்கிய'த்துக்கு அடிக்கல் நாட்ட நாம் முதலில் ஒரு கதை எழுதி வைப்போமே என்று தோன்றியது! இதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்களா அல்லது பகடியாகக் கொள்கிறீர்களா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன். இது தமிழில் எழுதப்பட்ட கதை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆணும் பெண்ணும் சொன்ன கதை
-மாண்ட்ரீஸர்
ஒரு கதை எழுதலாம் என்றுதான் முதலில் முதலில் நினைத்திருந்தான். நடந்து நடந்து தன் கைகள் மிகவும் பலவீனப்பட்டுவிட்டபடியால் நிசாத் தனது காலால் கதைசொல்லவேண்டியதாகிப்போயிற்று. அவன் சிகரெட் புகைப்பதில்லை என்பதால் அவனுக்கும் சேர்த்து நான் புகைத்துக்கொண்டிருக்கும் காலங்களிலொன்றில் அவனது கால் பின்வரும் கதையை எனக்குச் சொன்னது. நாங்கள் ஒரு மரத்தினடியிலிருந்த சிமெண்ட் திண்டிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருந்ததால், வழிந்தோடும் கதை திண்டின் கீறல்களில் சிக்கிக்கொள்ளும். அதைக் கவனமாகப் பிய்த்தெடுக்கும் நான், அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் - கீறல்களில் சிக்கிக்கொண்ட துகள்களையும் துளிகளையும்பற்றி அலட்டிக்கொள்ளுமளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல என்று நினைக்கிறேன்.
தனது சட்டைப்பையிலிருக்கும் பிள்ளையாரைத் தினமும் பிரார்த்தித்து முடித்தபின் ஆமென் சொல்லும் வசீகரமான பழக்கத்தால்தான் அன்று அந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டானென்பது என் அபிப்ராயம். அன்று காலையில் அவன் எழுந்தபோது உறக்கம் கலைந்து அருகில் எழுந்த என் கண்ணில் முதலில் பட்டது அவன் முகத்தடியில் நசுங்கிக்கிடந்த நீல மலர். அதன் சுருக்கங்களை நீவிவிட்டுக்கொண்டிருந்தபோது அவனது பிரார்த்தனை தொடங்கியிருந்தது. தலைமுடியின் ஈரம் இன்னும் காய்ந்திராமலிருக்க, அதன் கருமையை வெறித்தவாறிருந்தேன். நிசாத் என்னை அழைத்துக்கொண்டிருந்தானென்று விளங்கச் சிலநேரம் ஆனது. முதலில் தென்பட்டது அவனது அசையும் உதடுகள் தான். பூனைமயிரை எனது பார்வையிலிருந்து சவரம் செய்தெறிந்தேன். அவனது பெரிய ரோஜாநிற உதடுகள் அசைந்துகொண்டிருந்தன - "என் கண்களைத் திறக்கமுடியவில்லை". எழுந்து படுக்கையில் அமர்ந்தேன். "பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன், ஆமென் சொல்லி முடித்தபின் கண்களைத் திறக்கமுடியவில்லை, ஆனால் அனைத்தையும் பார்க்கமுடிகிறது" என்றான், என்னைப் பார்த்தவாறு. அவனது இமைகள் மூடியிருந்தன.
நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவாறு அவனைப் பார்த்தேன். "என்னைப் பார்க்க இன்று உனக்கு இஷ்டமில்லையென்றால் சொல், போய்விடுகிறேன்". அதில்லை என்றான், அவனது இமைகள் இன்னும் மூடியேயிருந்தன. சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்து அவனுமொன்று பற்றவைத்துக்கொள்ள, நான் அவனையே பார்த்தவாறிருந்தேன். "ஒத்திகை செய்வதில் உன்னை வெல்ல ஆளில்லை" என்றேன். அவன் உதட்டோரத்தில் ஒரு புன்னகை நெளிந்தது. நான் சொல்வதை இன்னும் நீ நம்பவில்லை என்றான். இதைப் நான் பற்றவைத்தது முன்பே ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும், என் கண்களைத் திறக்கமுடியவில்லையென்பது பொய்யாகவும் உனக்குத் தெரிகிறது என்றான், புகையை வெகு சரியாக என் முகத்தில் ஊதியவாறு. "இது நீயென்று நம்பமுடியவில்லை". அந்த நீல மலரின் சுருக்கம் இன்னும் போனபடியாயில்லை, நீவிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுருக்கம் நீங்காது என்றான். "அந்த மலரை நான் கசக்கிவிட்டபடியால்தான் எனக்கு இந்தத் தண்டனை என்று நினைக்கிறேன்". "உனக்கென்ன தண்டனை. அனைத்தும் தெரிகிறதல்லவா, பிறகென்ன" எனது விரல்கள் இன்னும் அழுத்தமாக மலரை நீவத்தொடங்கின. "அதைக் கொன்றுபோடப்போகிறாய்". "துணியைக் கொல்லமுடியாது" என்றேன், எரிச்சலுடன்.
"நாள்முழுவதும் அறைக்குள்ளேயே கிடக்கப்போகிறோமா?"
"தவறில்லை. வெளியே போய் நீ கைகாலை உடைத்துக்கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. உன் கண்கள் திறந்தபின் வெளியே போகலாம்."
"சொன்னேனே, இது ஒரு தண்டனை. சொல்லப்போனால், பிரார்த்தித்து முடித்தபின் சில வினாடிகளுக்கு என் கண்கள் திறந்திருந்தன."
நான் அவனையே பார்த்தவாறிருந்தேன். என்ன அப்படிப் பார்க்கிறாய் என்றான். இதுபோல் முன்பு எனக்கு நிகழ்ந்ததில்லை, பின்பு உன்னை எப்படி நம்பவைப்பதென்று எனக்கெப்படித் தெரியும்?
"உண்மை, பிரார்த்தித்து முடித்தபின் பிள்ளையாரைச் சற்றுநேரம் பார்க்கமுடிந்தது, அதன்பின்னும் பார்க்கமுடிகிறது, ஆனால் என் கண்கள் மூடியிருப்பதை உணர்கிறேன். இதை நீ நம்புகிறாயென்று தெரிகிறது, ஆனாலும், நம்ப இன்னும் சிறிது நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள். இதுதான் உண்மை. வெளியில் போய்க்கொண்டே பேசலாம்" என்று உடுத்திக்கொண்டான். தலையை உதறியவாறு கிளம்பினேன். பைக் தெருவில் போய்க்கொண்டிருந்தபோதுகூட அவன் கண்கள் திறந்திருக்கவில்லை. ஆனாலும், சாலையைப் பார்க்கமுடிகிறது என்றான், சரியாகவே ஓட்டிக்கொண்டிருந்தான். மோதிச் செத்துவிடுவோமென்ற பயம் இல்லாதபோதும், மோதிவிடுவோமோ என்ற சின்ன அச்சம் இருந்ததுமட்டும் நிஜம். புனித ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்குள் வண்டி திரும்பியது. குடிசைகளிலிருந்து மீன் வறுக்கும் வாசனை வந்துகொண்டிருக்க, வாசனையாவது பார்க்கமுடிகிறதா உன்னால் என்றேன்.
"இந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம். எனது புலன்களனைத்தும் சரியாகவே உள்ளன. அபத்தமாக யோசிப்பதை முதலில் நிறுத்தித்தொலை. கட்டிட வாசல் முகப்புக்கருகில் பதினாறு பேர் நிற்கிறார்கள், உன் வலது ஷூவில் லேஸ் அவிழ்ந்திருக்கிறது..." கண்களை மூடியவாறு எண்ணினான், "நாற்பத்துமூன்று பைக்குகள் நிற்கின்றன - நம்முடையதையும் சேர்த்து, அர்ச்சனா இன்னும் தன் குடிசை வாசலுக்கு வரவில்லை, இங்கிருந்து பார்த்தால் ஏழு மீன்பாடி வண்டிகள். உண்மையில் இது தண்டனை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை, நன்றாகத்தான் உள்ளது, இன்றைக்குப் புல்லைக் கத்திரித்திருக்கிறார்கள், பஸ் ஸ்டாப்பில் ஒருவர்கூட இல்லை...பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு அலுப்பாக இருக்கிறது. புதிதாகச் சொல்வதற்கென்று ஏதாவது இருக்கிறதா என்ன?"
அன்றைக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் எங்கள் பொழுதைக் கழித்தோம். சனிக்கிழமைக் காலை கேட்பாரற்று உருகித் தெருக்களில் ஓடியது. நிசாத்தின்மேல் எனக்குப் பரிதாபமேதும் தோன்றவில்லை. எங்களைக் கடந்துசென்றவர்கள் அவனைப் பார்த்தார்களா என்பதை மறந்துவிட்டேன். பார்த்தவர்களுக்குமென்ன. ஒருகணம் மூடியிருக்கும் யாரோ ஒருவனது கண் அவர்கள் வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது. மரங்களின் நூறுவிதப் பச்சைகளை, கடந்துசென்றவாறு என்னை வெறித்த ஆண்களை, எனது பாதத்தை, எனது கலைந்துகிடக்கும் முடியை, என் சாயம்போன ஜீன்ஸை, எனது நெளிந்த தாமிரக் கைவளையத்தை, ஆடிக்கொண்டிருக்கும் பைக் கிக்கரை, வெறும்நெற்றியுடன் சென்ற பெண்களின் வசீகரத்தை...ஜே.டி.சாலிஞ்சர் போலப் பட்டியலிடுவதை எப்போது என்னால் நிறுத்தமுடியுமென்று தெரியவில்லை. என் பாதம் புல்லில் மெதுவாக இடவலமாக அசைந்துகொண்டிருந்தது. நானும் நிசாத்தும் பேசிக்கொண்டுதானிருந்தோமென்றாலும், இன்று ஏதோ என்னையே நான் அதிகமாகப் பார்த்துக்கொண்டிருந்தாற்போல் பட்டது. கிளம்பலாமா என்றேன்.
நிசாத்தும் நானும் பள்ளியிலிருந்து ஒன்றாக இருக்கிறோம். நான் சொன்ன மரத்திண்டு எங்கள் பள்ளியில்தான் இருக்கிறது. நாங்கள் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தபோது வெயில் நன்றாக ஏறியிருந்தது. இன்னும் கண்களை மூடிக்கொண்டுதான் ஓட்டிக்கொண்டிருந்தான். எங்களுக்கடியில் நழுவும் தார்ச்சாலைகளில் என் முகத்தை வைத்துத் தேய்த்துவிடலாம். எங்கெங்கு உன்னை வெயில் தொடுகிறது என்றேன். உன்னைத்தவிர மற்ற இடங்களிலெல்லாம் என்றான், நான் புன்னகைத்தேன்.
அவனை இறுக்கிக்கொண்டேன். இன்னும் கண்ணைத் திறக்கமுடியவில்லையா என்றேன். இல்லை என்றான்.
"இதைக் கதையாக எழுதப்போகிறேன்."
"இந்த நிஜம் எனக்குப் புரியவில்லை, ஒருவேளை கதையாக நீ எழுதிப் படித்தால் விளங்குமோ என்னவோ."
"இதைப்பற்றி யோசிக்கத் தோன்றவில்லை உனக்கு?"
"அதுதான் அனைத்தும் தெரிகிறதே, கண் மூடியிருந்தால் என்ன? நீ எழுதாமல் இதை மாண்ட்ரீஸர் எழுதினால் எப்படியிருக்குமென்று யோசித்துப்பார்!"
படீரென்று இருவரும் சிரித்துவிட்டோம். இரண்டு கைகளையும் அவன் உயர்த்திச் சிரித்ததில் பைக் நிலைதடுமாறி ஆட்டோவொன்றை உராய்ந்துகொண்டு சென்றது. பின்னால் உட்கார்ந்தவாறு நான் வாய்விட்டுச் சிரித்ததை மற்றொரு ஆட்டோ பொறாமையுடன் பார்த்துக்கொண்டு சென்றது.
"யார் சொன்னது இன்றைய கதையை?"
"நீதான்".
Wednesday, November 03, 2004
நன்றிகள்!
அமெரிக்கத் தேர்தல் - மேலும் சில
1) புஷ் பெற்ற மொத்த ஓட்டுக்கள் (popular vote) கெர்ரியைவிட மூன்று மில்லியன் அதிகம்
2) Electoral vote எண்ணிக்கையிலும் புஷ்ஷே வெற்றி பெறுவார்
3) அமெரிக்க செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி இப்போது பெரும்பான்மை பெற்றுள்ளது
4) அமெரிக்க காங்கிரஸிலும் குடியரசுக் கட்சியே இப்போது பெரும்பான்மை பெற்றுள்ளது
ஆக மொத்தம், இது குடியரசுக் கட்சிக்கும் புஷ்ஷுக்கும் ஒரு clean sweep. ஜனநாயகக் கட்சிக்கும், அதற்கு ஓட்டளித்தவர்களுக்கும் மரண அடி. அனைத்தும் இப்போது குடியரசுக் கட்சியின் பிடிக்குள் இருப்பதால், புஷ் எடுக்கும் எந்தவொரு முடிவும் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கெதிரான சட்டத்திருத்தம், கருக்கலைப்புக்கெதிரான சட்டங்கள், embryonic stem cell ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை, மறுபடியும் பணக்காரர்களுக்கே வரிக்குறைப்பு (இதை மட்டும் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை), தற்போதைய வெளியுறவுத் திட்டங்களின்மீதான கூடுதல் thrust ... ஆகமொத்தம், அமெரிக்க 'பைபிள் பெல்ட்' டின் கருத்தாக்கங்களனைத்தும் ஒரு பெரும் தாண்டவத்துக்குத் தயாராகின்றன என்று நினைக்கிறேன். ஆனாலும், அதுதான் தங்களுக்கு வேண்டுமென்று அமெரிக்கர்கள் தீர்மானித்திருப்பதால், அதைப்பற்றிக் கருத்துக்கூறும் உரிமை எனக்கில்லை என்று நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் வினோதமாகப் பட்ட விஷயம், இந்தமாதிரி விமர்சனம் செய்யப்பட்ட புஷ்ஷையே ஜனநாயகக் கட்சியால் தோற்கடிக்கமுடியாமல் போனால், இனி எந்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களை இவர்களால் தோற்கடிக்கமுடியும் என்று தோன்றுவதுதான்! ஜனநாயகக் கட்சிக்கு ஓட்டளித்தவர்கள், தாங்கள் கையாலாகாதவர்களாக, disenfranchise செய்யப்பட்டவர்களாக உணர்வது தவிர்க்கமுடியாது. அவர்களுக்குத் தோன்றும் மனோநிலை வெறுமையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஃப்ளோரிடா, சென்றமுறையும் புஷ்ஷூக்குத்தான் ஓட்டளிக்க நினைத்திருக்கிறது என்பதை, புஷ்ஷுக்குக் கிடைத்த வெற்றி விளிம்பைக்கொண்டு இப்போது உறுதிசெய்துகொள்ளலாம்! சென்றமுறை தமிழ்நாட்டை பிஜேபியினர் சபித்துத் தள்ளியதுபோல இந்தமுறை ஜனநாயகக் கட்சியினரும் ஃப்ளோரிடாவையும் ஓஹையோவையும் சபித்துத் தள்ளலாம். போதாக்குறைக்கு பாராளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாம் டாஷ்ல் வேறு தோற்றிருக்கிறார். அது கிட்டத்தட்ட அத்வானி தோற்பதற்குச் சமம். காரணம், தன் சொந்த மாநிலமான தெற்கு டகோட்டாவைவிட்டு வாஷிங்டனுக்குத் தன் ஜாகையை மாற்றிக்கொண்டதுதானென்று யூகிக்கிறார்கள்!
அதெல்லாம் சரி, நம் விஷயம்? சில வாரங்கள் முன்பு, 'ஜனநாயக சர்வாதிகாரி' (Democratic dictator) முஷாரஃப்பை சிஎன்என் பேட்டிகண்டது. புஷ்ஷின் கதாநாயகக் குணாம்சங்களை வெகுவாகச் சிலாகித்த முஷாரஃப், கெர்ரியைப்பற்றித் தனக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாதென்றார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா Major non NATO ally அந்தஸ்து கொடுத்துவிட்டதால், அந்த உறவு இனியும் தொடரும் என்றும், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆஃப்கானிஸ்தானைச் சீரழித்தது போதாதென்று அதேமாதிரிப் பிரச்னையை இன்னும் கிழக்கில் தள்ளி, கடைசியில் முஷாரஃப், நீங்கள் எல்லாம் ஒதுங்குங்கள் என்று நம்மையெல்லாம் கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளவும் கூடும்! நம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு tinpot dictator உடன் நாம் உட்கார்ந்து பேசவேண்டியதாயிருக்கிறது! கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகள் கலாச்சார, பொருளாதார gangrape செய்யப்பட்டபின்னும் இந்தியா இன்னும் யாரையும் உதைக்காமலே பிழைக்கமுயன்றுகொண்டிருக்கிறது என்பதை யாரும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. இந்தவகையில் பார்க்கும்போது அதனால்தான் பிஜேபி காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகளின் தற்போதைய நிலைமைகளில் ஒருவித equilibrium இருப்பதாகப் படுகிறது. பிஜேபி ஆட்சியிலிருந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை, பிஜேபியே இல்லாமல் காங்கிரஸ் மட்டும் ஆட்சியிலிருந்தால் பெரும்பான்மையினருக்குப் பாதுகாப்பில்லை (இது தமாஷ் அல்ல, உண்மை! மதச்சார்பின்மை என்ற போர்வையில் மதங்களுக்கிடையில் பெரும் பிளவுகளை ஏற்படுத்துவது காங்கிரஸும், கருணாநிதி போன்ற கருங்காலிகளும்தானென்று நினைக்கிறேன். கருணாநிதி தன் மந்திரிகளை ரம்ஜான் நொய்க்கஞ்சி குடிக்க மசூதிகளுக்கும், அப்பம் தின்ன தேவாலயங்களுக்கும் அனுப்புவார், இந்து என்றால் திருடன் என்பார்! நான் ஏதோ ஒரு மதம் சார்பாகப் பேசவில்லை. திட்டுகிறாயா? அனைத்து மதங்களையும் திட்டு. திட்டவில்லையா? எந்த மதத்தைப்பற்றியும் பேசாமல் மூடிக்கொண்டு இரு. தமிழ்நாட்டில் புத்த ஓட்டுக்கள் அவ்வளவாக இல்லை. இல்லையென்றால் திமுக நாத்திக சிரோன்மணிகள் திபெத்தியத் துறவிகள்போலக் காவி உடை, மொட்டைத்தலை, கட்டைச்செருப்புடன் தம்மபதம் ஓதிக்கொண்டிருப்பார்கள். Grrrrrrrrrrrrrrrrrrrrrrr...) என்பதுதான் உண்மை.
Tuesday, November 02, 2004
அமெரிக்கத் தேர்தல்
1) தெளிவான முடிவு தெரிந்திருக்கலாம்
2) போனமுறை போல இழுபறியில் முடிந்திருந்தால், தனது தேர்தல் முறையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகும்
3) இது இரண்டும் இல்லாமல் மூன்றாவதொரு ரகமாக முடிவு வந்து, நீங்கள் என்ன யூகிப்பது என்று நம் முகத்தில் முடிவுகள் கரியைப் பூசலாம்.
இங்கே என்னைச் சுற்றியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கெர்ரிக்கு ஓட்டளித்தவர்களே. சற்று நாள் முன்புவரை நான்கூட புஷ் தான் மறுபடி ஆட்சிக்கு வருவார் என்று நினைத்திருந்தேன்; ஆனால் கடைசிநேரத்தில் ஓட்டளிக்கப் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை கூரையைப் பிய்த்துக்கொண்டு எகிறுவதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுவதாலும், புதிதாகப் பதிவுசெய்துகொண்டு ஓட்டளிப்பவர்கள் பெரும்பாலும் ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராகவே ஓட்டளிப்பார்கள் என்ற மரபுசார்ந்த யூகமும், கெர்ரிக்குச் சற்றுத் தெம்பளிப்பதாகவே உள்ளது. அதாவது, வெற்றி என்றாலும் பெரும் வெற்றியாக இருக்கப்போவதில்லை, தோல்வி என்றாலும் மிகப்பெரும் தோல்வியாக இருக்கப்போவதில்லை. கிட்டத்தட்ட நம் ஊர் போல, படித்தவர்கள் பெரும்பாலும் கெர்ரிக்கும், குறைந்தளவு படிப்பறிவுள்ளவர்கள் புஷ்ஷுக்கும் (அல்லது தினமலர் ஸ்டைலில் புஷ்சுக்கும்) வாக்களிக்கிறார்கள். தேர்தல் தினமான இன்று கூட பிரச்சாரங்கள் நடக்கின்றன - இதைவிட, நம் வழிமுறையான - சில வாரங்களுக்கு முன்பே பிரச்சாரங்களை நிறுத்திவிடுவது எனக்குச் சரியாகப் படுகிறது.
குளறுபடிகள்? இல்லாமலா? நேற்றோ முந்தாநேற்றோ சி.என்.என்னில் பில் ஷ்னைடர், 'இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் ஓட்டளித்தார்கள், ஓட்டளித்தவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள், அப்படியிருக்க அமெரிக்கத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதுபற்றிய அச்சம் தேவையில்லாத ஒன்று' என்ற ரீதியில் கருத்துச் சொன்னார். அது முதல் விஷயம்.
அடுத்து, குடியரசுக் கட்சியினர், ஓட்டுச்சாவடி அருகில் தங்கள் ஏஜெண்ட்டுகளைக்கொண்டு, ஓட்டளிக்க வருபவர்கள் சரியான முறையில் பதிவு செய்திருக்கிறார்களா என்று சோதிக்க அனுமதிக்கவேண்டுமென்று மனு செய்ததை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும், மிஷிகன், ஓஹையோ, ஃப்ளோரிடா போன்ற கத்திமுனைப் போட்டி மாகாணங்களில், வாக்காளர்களுக்குத் தவறான தகவல்களைத் தரும் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகப் புகார்கள். நவம்பர் முதல் தேதியோடு absentee ஓட்டளிக்கும் தேதி முடிந்துவிட்டதென்று, நவம்பர் மூன்றாம் தேதி தேர்தலில் மறக்காமல் ஓட்டளிக்குமாறு (தேர்தல் இரண்டாம் தேதி!) பலவிதமான தவறான தகவல்கள்! இதில், ஃப்ளோரிடா மாகாண ஜனநாயகக் கட்சித் தலைவருக்கே ஒரு தொலைபேசி அழைப்பு - அவரது absentee ஓட்டை நவம்பர் பத்தாம் தேதி அளிக்குமாறு! இதையெல்லாம் பார்த்தபோது, நமது தேர்தலின்போது, 'ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டளித்தால் ஷாக் அடிக்கும்' என்று மற்றொரு கட்சியினர் பாமர மக்களைப் பயமுறுத்தியதாகப் படித்தேன் - இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை!! அரசியல் அரசியல்தான். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு கொரியப் பாராளுமன்றத்தில் சட்டையைப் பிடித்துக்கொண்டும் ஷூக்களைக் கழற்றியும் வீசுவதும், நமது நகர்மன்றக் கூட்டங்களில் மைக்கை உருவி அடிப்பதும், ஐ.நா சபையில் குருஷ்சேவ் தன் ஷூவைக் கழற்றி மேஜையில் அடித்ததும், க்ளிண்ட்டன் நமது பாராளுமன்றத்துக்கு வந்தபோது ஷாருக்கானிடன் ஆட்டோகிராஃப் வாங்குவதைப்போல நமது உறுப்பினர்கள் முண்டியடித்ததும் நினைவுக்கு வருகிறது.
எனது அபிப்ராயம்: புஷ் மறுபடி ஆட்சிக்கு வந்தால், தனது வெளியுறவுத்துறைத் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று நினைத்துக்கொண்டு மேலும் போர்கள், பேட்ரியாட் சட்டம் என்று இருக்கும் சிக்கலை மேலும் அதிகரித்துவிடவும் (அமெரிக்காவின் தேசியக் கடன் 7 ட்ரில்லியன் டாலர்கள்) வாய்ப்புள்ளது. நாம் ஜெயலலிதாவுக்கு மற்றொரு வாய்ப்புக் கொடுத்த மாதிரி (அய்யோ பாவம், ஒரு லேடி தன்னந்தனியா எவ்வளவு கஷ்டப்படுது, அதுக்கு புள்ளையா குட்டியா பாவம், அது என்ன செஞ்சிரப்போவுது)!! அல்லது, கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்லமுறையில் ஆட்சி நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது. குடியரசுக்கட்சியின் இந்த வலைத்தளத்தையும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவும்.
கெர்ரி ஜெயித்தால்....இப்போதுள்ள குழப்பங்களைத் தீர்ப்பதற்கே நாலு வருடம் சரியாகப் போய்விடும், அப்போது குடியரசுக் கட்சியினர் மறுபடிப் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டு, நாலு வருஷமாக என்ன செய்தாய் என்று அவரை வாட்டியெடுத்துவிட்டு மறுபடி வாரிவிடவும் வாய்ப்புண்டு. கெர்ரி ஜெயித்தால், அடுத்த முறை ஹில்லாரி க்ளிண்ட்டன் நிற்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அந்தபட்சத்தில் எட்டு வருடங்கள் கழித்து என்ன நடக்கும், அப்போது ஹில்லாரியின் அரசியல் செல்வாக்கு எப்படியிருக்குமென்று சொல்ல இயலாததால், ஒரு பெண் அமெரிக்க ஜனாதிபதியாவதென்ற விஷயம் எட்டாக்கனியாகிவிடும்.
அடுத்த ஜனாதிபதி புஷ்ஷோ கெர்ரியோ, மிகவும் கஷ்டமான காலங்கள் என்று நினைக்கிறேன். வயதில் மூத்த என் நண்பன் ஒருவன், தன் வாழ்க்கையிலேயே இதுதான் முக்கியமான தேர்தல் என்றான். பலரும் அப்படித்தான் நினைக்கிறார்களென்று தோன்றுகிறது. இந்தத் தேர்தலை அனைத்துச் செய்தி நிறுவனங்களும் அலசிப் பிழிந்து காயப்போட்டுவிட்டதால், புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறதென்று தோன்றுகிறது!
நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இது எப்படி இருக்கு? இயா ஹா ஹா ஹா! ரஜினி ஸ்டைலில் ஒரு தடவை தலையைக் கோதிவிட்டுக்கொள்க!
Monday, November 01, 2004
கவர்னர் மாற்றம்...
கவர்னர்களைப்பற்றி ஜெயலலிதா?! ஆண்டவா! இப்போது சிவலோகத்திலிருக்கும் சென்னா ரெட்டியை யாராவது அழைத்துவந்தால் அவர் சொல்லுவார் கதை கதையாய்! 'என்னிடம் ஆளுநர் தவறாக நடந்துகொண்டார்' என்றது ஒருவேளை வேறு ஜெயலலிதாவாக இருக்கும்.