காப்ரியல் கார்சீயா மார்க்வெஸ்ஸின் சுயசரிதையின் முதல் பாகமான Living to tell the taleஐப் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு பேட்டியில் மார்க்வெஸ் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது:
இன்னும் உங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, எங்களைப்பற்றிப் பேசுவது எப்போதென்று இளைய எழுத்தாளர்கள் கேட்கிறார்கள். நான் இளைஞனாக இருந்தபோது என்னைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை, மிகயில் ஏஞ்சல் அஸ்தூரியாஸ் (Miguel Angel Asturias) போன்ற மூத்த தலைமுறையினர்களைக் குறித்தே அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்" என்றிருப்பார். இந்தத் தலைமுறை எழுத்தாளர்களைப்பற்றி எழுதாமல் மார்க்வெஸ் புராணம் ஏன் பாடுகிறாய் என்று சந்தேகமிருப்பின் - மார்க்வெஸ் வாயாலேயே அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறேன்!
தமிழ் மொழிபெயர்ப்புக்களிலும் ஆங்கிலத்திலுமாக மார்க்வெஸ்ஸின் ஏகப்பட்ட கதைகளைப் படித்ததுண்டு - சிலசமயம் ஒரே கதையை இரண்டு மூன்று வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புக்களிலும். Light is like water என்ற கதையின் இரண்டோ மூன்றோ மொழிபெயர்ப்புக்களைப் படித்ததுண்டு;
One hundred years of solitudeன் முதல் அத்தியாயம், களங்கமற்ற எரிந்திரா குறுநாவல் உட்பட மார்க்வெஸ்ஸின் கதைகள் ஏராளமானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
எதிர்பார்த்தது போலவே, முதல் அத்தியாயம், மார்க்வெஸ் அவரது தாயாருடன் தன் பாட்டி காலத்தைய வீட்டை விற்க பூர்வீக ஊரான அரக்கடக்காவுக்குச் (Aracataca) செல்வதுடன் தொடங்குகிறது. எழுத்தாளனுக்கேயுரிய அடையாளங்களுடன் ("உன்னை இவ்வளவு நாள் கழித்து முதலில் பார்த்ததும் ஏதோ பிச்சைக்காரன் என்று நினைத்தேன்" என்பார் அவரது தாய், மார்க்வெஸ்ஸைச் சந்திக்கையில்), பெற்றோர் பேச்சைக் கேட்காமல் கல்லூரிக்குப் போகாமல் எழுத்தாளனாகவேண்டும் என்ற கனவுடன் திரிந்துகொண்டிருக்கும் மார்க்வெஸ்ஸை அவரது தாயார் துணைக்கு அழைக்கிறார். பூர்வீக ஊரைநோக்கிப் பயணம் தொடங்குகிறது. தொடரத் தொடர, அவரது வாழ்வும் கதைகளும் பிணைந்து பயணிக்கையில் கதை வாழ்விலிருந்து வந்ததா அல்லது எழுதப்படாத கதைகள் வாழ்வின் சம்பவங்களைத் தீர்மானித்தனவா என்ற கேள்வி எழுவதென்னவோ நிஜம்.
ஊரை நெருங்கையில் அவர்கள் மேற்கொண்ட ரயில்பயணத்தையும் அவர்கள் ஊரில் ஒரு தனிப் பெண்மணியால் சுட்டு வீழ்த்தப்பட்ட திருடனையும் இணைத்து எழுதப்பட்ட சிறுகதையே தாள்களிலேயே அசதியூட்டும் வெயிலையும் வெறுமையையும் தன் பக்கங்களில் விசிறிச்செல்லும் Tuesday siesta (இது தமிழில் செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது) என்ற சிறுகதை என்று விளங்கிக்கொள்ள அதிக நேரம் ஆவதில்லை. என் மொத்த வாழ்விலும், என் அம்மாவுடன் பூர்வீக ஊருக்குச் செல்வது என்று எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையிலேயே முக்கியமானது என்றிருப்பார் மார்க்வெஸ். எட்டு வயதுக்குப்பின் பலகாலம் பார்த்திராத பூர்வீக ஊர்குறித்த பிம்பங்கள் வருடங்கள் ஓடியதில் கரைந்து சிதைந்து ஏமாற்றத்தையும் தாங்கவொண்ணா துக்கத்தையும் ஏற்படுத்தியது தனது எழுத்துக்களுக்கு ஒரு முக்கியமான உந்துசக்தி என்று பல சமயங்களில் குறிப்பிட்டிருப்பார் மார்க்வெஸ். மக்காந்தோ (Macondo) என்ற அவரது கற்பனையான ஊரும்கூட, இந்தப் பிரயாணத்தின்போது பார்த்த வாழைத்தோப்பு ஒன்றின் பெயரே என்று கூறுகிறார். ஏன் அந்தப் பெயரை வைத்தேன் என்று தெரியவில்லை - அதன் ஒலி வசீகரமாக இருக்கிறது என்றிருப்பார்.
A short film about love படத்தில் விடலைப்பையன் டோமெக்கை, அவன் நேசிக்கும் வயதுமூத்த பெண், "என்ன தெரியும் உனக்கு" என்பாள்; "மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம், தற்போது பல்கேரிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்பான். "பல்கேரிய மொழியா? ஏன்?" டோமெக் பதிலளிப்பான்: "அனாதை இல்லத்தில் இரண்டு பல்கேரியத் தோழர்கள் இருந்தார்கள்". காரணகாரியங்கள் குறித்துக் கவலையற்ற, தர்க்கச் சுவர்களில் முட்டிக்கொள்ளாத, அவற்றை உண்மையில் சட்டைசெய்யாத, தெள்ளிய பதில்களே இவை இரண்டும் என்று படுகிறது.
சிலசமயம் அவரது pun களை ஊகித்துவிட முடிந்தாலும், அலுப்புத் தட்டவில்லை என்பதே நிஜம். சுயசரிதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்வதும் ஒரு கலை. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் பலகாலமாய் அங்கிருக்கும் மருத்துவர் ஒருவரைச் சந்திக்கிறார்கள். அவர்களைத் தொடும் மருத்துவரின் கை நெருப்புப் போல் சுடுகிறது. "ஒரு வருடமாகக் காய்ச்சலடிக்கிறது" என்பார் மருத்துவர். "மாயாஜாலக் கதைகளைக் கூறும்போது எனது பாட்டி, முகத்தில் எந்த உணர்வையும் மாற்றங்களையும் காண்பிக்காமல், சொல்லும் அதீதமான விஷயங்களை நம்பும்படிக் கதைசொல்வாள் - அதேபோன்ற ஒரு தொனியைத்தான் என் புத்தகங்களில் நான் உபயோகிக்கமுயன்றது" என்று கூறியிருப்பார் மார்க்வெஸ். சிறுவயதில் பார்த்துப் பயந்த மருத்துவருடன் தற்போது வெகு சௌஜன்யமாகப் பழகமுடிவதும், எழுத்தாளனாவது என்ற மார்க்வெஸ்ஸின் முடிவை ஆதரித்துப் பேசும் மருத்துவர், "பாரு, நானும் ஒரு மருத்துவராக இருக்கிறேன், என் நோயாளிகளில் எத்தனை பேர் கடவுள் சித்தத்தால் செத்தார்கள், எத்தனை பேர் நான் கொடுத்த மருந்தால் செத்தார்கள் என்றுகூடத் தெரியாமல்" என்று தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்வதில் தெறிக்கும் நக்கலும் புத்தகம் முழுவதும் தாராளமாகப் பரவியிருக்கும் சுயபகடிக்கொரு உதாரணங்களே.
வீட்டில் குடியிருப்பவர்களிடம் விலைபேசப்போகும் மார்க்வெஸ்ஸின் தாயார், கடைசியில் வெறுங்கையுடன் திரும்பிவரவேண்டியதாயிருக்கிறது. குடியிருப்பவர்கள், இதுவரை பழுதுபார்ப்பதற்கு நாங்கள் செலவழித்ததையெல்லாம் கணக்குப் பார்த்தால் நீங்கள்தான் எங்களுக்குப் பணம்தரவேண்டியதிருக்கும் என்று சொல்லிவிட, தாயாரும் மார்க்வெஸ்ஸும் திரும்பிச் செல்கிறார்கள். வீட்டைத் திரும்பிப் பார்க்கும் மார்க்வெஸ்ஸுக்கு, சிறுவயதில், சொல்கிறவரைப்பொறுத்து வீட்டின் வடிவங்களும் திசைகளும் எப்படியெல்லாம் வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கப்படுகின்றன என்று நினைவுக்கு வருகிறது. சிறு குழந்தையாக இருந்தபோது உள்ளாடையில் ஷிட்டடித்துவிட்டு, மேலாடையைக் கறைப்படுத்திவிடக்கூடாதே என்ற சுயமரியாதைநிறைந்த அழகியல் உணர்ச்சிமிகுப்பில் மிகக் கவனமாக சமாளித்து நின்றுகொண்டு, தன் உள்ளாடையை யாராவது வந்து களையுமாறு கூச்சலிட்ட கணம்தான் ஒரு எழுத்தாளராகத் தான் உணர்ந்த முதல் அனுபவம் என்கிறார்! அவர்களது வீட்டில் வளர்ந்துகொண்டிருந்த, கொள்ளுத்தாத்தா காலத்தைய கிளி ஒன்று (நூறு வயது அதற்கு!) ஸ்பெயின் எதிர்ப்புக் கோஷங்களையும் கொலம்பிய விடுதலைப்போர் பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கும் என்றும், கிட்டப்பார்வை உள்ள அது ஒருநாள் எங்கோ மெதுவாக நகர்ந்துபோகிறேன் பேர்வழி என்று கொதிக்கத் தொடங்கியிருந்த குழம்புச் சட்டிக்குள் விழுந்து தப்பித்து உயிர்பிழைத்தது என்றும் போகிறபோக்கில் எழுதியிருந்ததையும் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன்!
ஊர் போய்ச் சேர்ந்து திரும்புகையில், மெல்லிதாக மார்க்வெஸ்ஸின் தாயார் மற்றும் தந்தையின் காதல் வாழ்வையும், வீட்டை எதிர்த்துக்கொண்டு, சங்கடங்களுக்கிடையிலும் எவ்வளவு தீவிரமாகக் காதலித்தார்கள் என்று முதல் அத்தியாயம் முழுவதும் கூறப்படுகிறது. பலமுறைகள் இதைக் கேட்டிருப்பினும்,
Love in the time of cholera புதினத்தில் அதைப் புனைவாக எழுதுகையில் மார்க்வெஸ்ஸூக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டிருக்கிறது. "காலரா சமயத்தில் காதல்" ஒரு அற்புதமான புத்தகம் - One hundred years of solitude (ஒரு நூற்றாண்டு காலத் தனிமை) போன்று விரிந்து பரவியிராவிட்டினும், இழந்த காதல் என்ற கருத்து காலங்களை, கலாச்சாரங்களைத் தாண்டிப் பொதுமையானது என்பதாலும், மார்க்வெஸ்ஸின் அற்புதமான உரைநடையாலும் எனக்கு மிக நெருக்கமான புத்தகம். மார்க்வெஸ்ஸின் தந்தை, மருத்துவப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, தந்தி அலுவலராக வேலைபார்த்தவர். அவருக்கும் தனது தாயாருக்கும் ஏற்பட்ட காதலையும், அவரது தாயாருக்கு முதலில் மார்க்வெஸ்ஸின் தந்தை மேலிருந்த வெறுப்பையும், பின்பு அதுவே வலிமையான காதலாக மாறுவதையும், தொடர்ந்து நிகழ்ந்த சிக்கல்களையும், கல்யாணம் செய்துகொண்டதும் குடும்பங்கள் தம்பதியரை ஒதுக்கிவைத்ததும், பின்பு மார்க்வெஸ் என்ற குழந்தை பிறந்ததும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டதுவரை (ரொம்ப பழக்கமானது போல் இல்லை?) விவரிக்கின்றன ஆரம்பகட்ட அத்தியாயங்கள். அமராந்தா, உர்ஸுலா போன்ற மார்க்வெஸ் கதைப் பெண்கள் போலவே மார்க்வெஸ்ஸின் பாட்டிமாரும் தாயாரும் உறுதியான பெண்களாக இருக்கிறார்கள். One hundred years of solitude நாவலின் Mauricio Babilonia அல்லது Love in the time of Cholera வின் Dr.Urbino போன்ற ஒரு ரொமான்டிக் கதாநாயகனாகத் தன் தந்தையை இந்தப் புத்தகத்தில் சித்தரிக்க முயன்றாரா அல்லது அவரைக்கொண்டுதான் நாவல்களின் பாத்திரங்கள் உருவானவையா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
மார்க்வெஸ்ஸின் நாவல்களைப்போலவே இங்கும் உரைநடை நேர்க்கோட்டில் செல்வதில்லை. சிறிது குழந்தைப்பருவம், சிறிது Baranquilla நகரத்தில் இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகள், விவாதங்கள், கற்றுக்கொண்டவைகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட இழைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. தனது குடும்பத்தினரின் வீரப் பிரஸ்தாபங்கள் கூட. தாத்தாவின் பிறந்தநாளுக்கு, யுத்தத்தில் அவர் சென்ற ஊர்களில் பிறப்பித்த பிள்ளைகளெல்லாம் வாழ்த்துச்சொல்ல வருகிறார்கள், தன்னை அவமானப்படுத்திய ஒருவனை அவரது மாமா சுட்டுக்கொல்கிறார். துப்பாக்கிகள் போர்கள் கொலைகள் என்று இருப்பவற்றையெல்லாம் கேலிச்சித்திரங்களாக மாற்றவும், அதேசமயத்தில் அவற்றின் உக்கிரங்களைத் தயவுதாட்சண்யமின்றிக் கூறவும் கூடிய உரைநடை நெகிழ்வு மார்க்வெஸ்ஸுக்கு வாய்த்த வரம். தன்னை அவமானப்படுத்தியவனைச் சுட்டுக்கொல்லக் கிளம்பும் தனது மாமாவை வர்ணிக்கும் மார்க்வெஸ், மிகவும் ஒல்லியானவர், சிறுவர்களின் அளவு ஷூக்கள் அணிந்திருந்தார், சட்டைக்குள் வைத்திருந்த துப்பாக்கி பெரும் பீரங்கி மாதிரித் துருத்திக்கொண்டிருந்தது என்று வர்ணிப்பது புன்னகையையே வரவழைக்கிறது. மார்க்வெஸ்ஸின் பாட்டி ஒருநாள் காலையில் படுக்கையைச் சுத்தம்செய்யும்போது படீரென்று ஒரு போர்வையை இழுக்க, தலையணைக்கடியிலிருந்த தாத்தாவின் ரிவால்வர் இயக்கப்பட்டு முகம்வழியாகக் குண்டு துளைத்து பாட்டி இறந்துபோனதாக இரண்டு மூன்று வரிகளில் முடித்துவிடுகிறார். மரணத்தின் புகழ்பாடி வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் சிந்தனைகளுக்கு மத்தியில், மரணத்திற்கு மரியாதை கொடுப்பது தேவையற்றது என்று போதிக்கும் மார்க்வெஸ்ஸின் மூதாதையர்களின் பிம்பங்களும், No one writes to the Colonel போன்ற புத்தகங்களில் திரும்பத்திரும்பக் குறிப்பிடப்படும் வயதானவர்களின் கால்சராயைத் தாங்கிநிற்கும் suspenderகளும், பிரதேசத்தின் அனலையும் வறுமையிலும் களிப்பென்பதைத் தியாகம்செய்யவிரும்பாத வாழ்க்கையையும் சில கோடுகளில் அற்புதமான ஓவியமாகத் தீட்டிச்செல்கின்றன. எங்களது மூதாதையர் வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு புனிதர் இருந்தார், ஒவ்வொரு அறையிலும் ஒரு சாவாவது நிகழ்ந்திருந்தது என்கிறார் மார்க்வெஸ். தனது பாட்டியின் உலகத்துக்குள் புகுந்து பார்க்கவேண்டுமென்ற தணியாத ஆவலைக் குறிப்பதும், ஒருமுறை மருத்துவர் தாத்தாவை ஏதோ காரணத்துக்காக ஆராயும்போது அவரது தொடையிடுக்கிலிருக்கும் ஒரு தழும்பைப் பார்த்து, போரில் குண்டடிபட்ட இடம் என்று தெரிந்துகொண்டதைச் சொல்வதில் தெறிக்கும் நகைச்சுவையும், தனது தாத்தாவின் உடையலங்காரங்களை விவரிக்கும்போது, suspenderகளில் தொங்கிக்கொண்டிருக்கும் தாத்தாவின் கால்சராய் போலவே No one writes to the Colonel (இது படமாக வந்திருக்கிறது) குறுநாவலின் கர்னல் நமக்குப் படுவதும் - யோசித்துப் பார்க்கும்போது, எந்த விதத்தில் இந்த அனுபவங்கள் நம்மை மார்க்வெஸ்ஸின் உரைநடையுடன் இவ்வளவு நெருக்கமடையச் செய்கின்றதென்று ஆலோசிக்கத் தூண்டுகிறது. பொதுவாக, நான் படித்தவரையிலான லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில், பிற எழுத்தாளர்களான மரியோ வர்கஸ் ல்லோஸா, கார்லோஸ் ஃப்யுண்டஸ், கொர்த்தஸார், ஹோர்ஹே அமேடோ போன்றவர்களின் எழுத்துக்களில் இல்லாத ஒரு மென்மையான நகைச்சுவையும் (உண்மை எனினுமே: டான் குவிஹாத்தே புத்தகத்தைப் படிக்க முயன்று முடியாமல், நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி கழிப்பறையில் அதை வைத்து, தினம் சில பக்கங்களாகப் படித்து முடித்துப் பாண்டித்யம் பெற்றதாகச் சொல்வது!), ஒருவிதமான ஏமாற்றுக்காரத்தனமான பாமரத்தன்மையுமே மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களில் கிடைக்கும் அதீத ஈர்ப்புக்குக் காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது. தான் எழுத்தை ஒரு 'வித்தை' (craft) யாகப் பழகிக்கொண்ட விதத்தைப் பல இடங்களில் மார்க்வெஸ் குறிப்பிட்டிருந்ததைக்கொண்டு, "எழுத்து அப்படியே ஊற்றெடுத்து வருகிறது" என்ற ரீதியிலான தேய்பதங்களைத் (cliche) தாண்டி, சில இடங்களில் predictable puns ஐ எளிதில் நாமுமே அடையாளங்காண முடிந்தாலும், அதையும் தாண்டி அவரது எழுத்துக்களை ரசிக்கமுடிவது மேற்கூறிய காரணங்களாலும், பத்திரிகை எழுத்தனுபவம் தந்த சுவாரஸ்யத்துக்கான வழிமுறைகளைத் தன் புனைவுகளில் திறமையாக உபயோகப்படுத்தியதாலும்தான் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.
சின்ன வயதில் மார்க்வெஸ் சொல்லும் பொய்களைக் கேட்ட ஒருவர், "குழந்தைகளின் பொய்கள் மிகத் திறமைவாய்ந்தவை" என்கிறார். பெரியவர்கள் கூடியிருக்கும் இடத்தில் கவனிப்புப் பெற அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளைச் சற்றுப் புனைவு கலந்து சொல்வதிலிருந்து (பின்பு மார்க்வெஸ்ஸைக் கண்டால் அவர்களே ஓட்டம்பிடிப்பது வரை!!) அவரது கதைசொல்லல் அனுபவம் துவங்கியிருக்கிறது. பெரியவர்கள் பேசும் விஷயங்களை, சிறுவர்கள் சுற்றியிருக்கும்போது தெளிவாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சங்கேத முறையிலும் விவாதிக்கப்பட்ம் விஷயங்களை அப்படியே நினைவிலிருத்தி, சம்பவங்களை மற்றும் மாற்றி அடுக்கி அவர்களிடமே திரும்பச் சொல்லி, "அடடே, நாம் நினைத்துக்கொண்டிருந்ததை அப்படியே சொல்லிவிட்டானே" என்று அவர்களை ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருந்ததே அவரது புனைவின் தொடக்கமாக இருந்திருக்கும். நாம் படைக்கும், படிக்கும் புனைவுகளும் அடிப்படையில் அப்படிப்பட்டவையே அல்லவா?
சிறுவனாக இருந்து விடலையாகும் பருவத்தில் பாலியல் உணர்ச்சிகள் மெதுவாக வடிவம்பெறுவதையும் (கழுதைகளுடன், கோழிகளுடன் 'பாவம்செய்யும்' (அவரது வார்த்தைகள்தான், நான் திரிக்கவில்லை) சிலர்பற்றித் தெளிவின்றி ஏதோ யூகித்துவைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்!! பின்பு விவரம் தெரிந்த விடலையானதும், போலீஸ்காரன் ஒருவனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்து, பிறகு அவனிடம் சிக்கிக்கொள்வதை விவரிக்கும் பகுதி, கிட்டத்தட்ட ஒரு சிறுகதையின் வடிவத்துடன், அதே கடும் நகைச்சுவையுடன் இருக்கிறது. முதன்முதலாக ஒரு அகராதியைத் தன் தாத்தாவுடன் சேர்ந்து பார்த்து, பின் அதையே ஒரு புதினம் போலப் படித்ததையும், பள்ளியில் கற்கும்போது முதலில் தடுமாறி, பின் அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக ஒப்பிக்கும், கணக்கு போன்றவற்றில் தடுக்கிவிழும் மாணவனாக இருந்ததையும், Baranaquilla வில் தனது இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புக்களையும், பேச்சுக்களையும் குடித்துத் திரிந்ததையும் குறிப்பிடுகிறார். வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் நடத்திக்கொண்டிருந்த இலக்கியச் சந்திப்புக்கு அடிக்கடி வந்துபோன திருடன் ஒருவன் குறித்த சில குறிப்புக்கள் சுவாரஸ்யமானவை: காதல் கவிதைகளில் மிகுந்த நாட்டமுள்ள அந்தத் திருடன், திருட்டுக்குத் தேவையான ஆயத்தங்களுடன் (இறுக்கிப் பிடிக்கும் கால்சராய்கள், டென்னிஸ் ஷூக்கள், பேஸ்பால் தொப்பி, குறைந்த எடையுள்ள உபகரணங்கள்) வந்து ஒரு வார்த்தை விடாமல் விவாதங்களைக் கேட்டுவிட்டு, நள்ளிரவுக்குப்பின் தொழிலுக்குப் போய், திரும்பி வரும்போது வேட்டையில் சிலவற்றை அவர்களுக்குப் பரிசாக அளித்துப்போவான், "உங்கள் காதலிகளுக்குக் கொடுத்துவிடுங்கள்" என்று!
வீட்டில் இல்லாமல் தனது அப்பா தேசாந்திரியாகத் திரிந்தபோதெல்லாம் வறுமையில் பட்ட கஷ்டங்களை, தன் தாய் கௌரவங்குறையாமல் குடும்பத்தை நடத்தியதை - படிக்க நேர்கையில், தன் தாயை 'lioness' என்று வர்ணிக்கையில், கஷ்டங்களைப் படிக்கமுடிந்தாலும், நாம் வாழும் பிரதேசங்கள் அதைவிட எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல என்பதால், வறுமையை அறிந்திராத ஒரு மேற்கத்திய வாசகனுக்கு உண்டாகும் பச்சாதாபம் நமக்கு ஏற்படுவது சிரமமே. பெண் சிங்கம் என்பது தற்காலத் தமிழ்ப் புனைவில் உபயோகப்படுத்தப்பட்டாலே மிகவும் நெருடலாக இருக்கும். அரசியல் கட்சி மேடைகளில், சினிமாக்களில், ஜாதிக்கூட்டங்களில் ஏகப்பட்ட சிங்கங்கள் கர்ஜிப்பதைப் பலகாலமாகப் பார்த்துவிட்டதால் ஒருவேளை இருக்கலாம். ஒருவிதத்தில், மேற்கத்திய சமுதாயங்களைவிட நமது சமுதாயத்தில் மிருகங்களுடனான நெருக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. செல்லப்பிராணிகளை விட்டுவிட்டாலும், நியூயார்க்கின் தெருக்களில் அலையும் ஒரு புலியைவிட தமிழ்நாட்டுத் தெருக்களில் அலையும் ஒரு புலியை வெகு எளிதில் கற்பனை செய்துவிடமுடியுமென்றுதான் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பேசத்தெரியாததை ஒரு குறையாகத்தான் சொல்கிறார் மார்க்வெஸ். ஒருமுறை போர்ஹேஸ் கூட "I wish English was my birthright" என்றிருப்பார். தாஸ்தாயெவ்ஸ்கியின் The double புத்தகத்தைத் திருடநினைத்து, விட்டுவிட்டு, வேறெங்கோ ஒரு தருணத்தில் எதிர்பாராத ஒருவனிடமிருந்து பெற்றதைக் குறிப்பிடுகிறார். தாஸ்தாயெவ்ஸ்கியைத் திருடமுயலாத எழுத்தாளர்களே, வாசகர்களே இருக்கமுடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புதினமான In Evil Hour பிரசுரமான கதையே கிட்டத்தட்ட அவரது மற்றொரு புனைகதை போல இருக்கிறது. அவ்வப்போது கிறுக்கி முடித்து தாள்களைச் சுருட்டி, பழைய டை ஒன்றைக்கொண்டு அதைச் சுற்றி முடிச்சுப் போட்டு மூலையில் போட்டபிறகு, ஒரு புதினப் போட்டிக்கு அவரது நண்பன் ஒருவன் அதேபோல் அனுப்பி வைக்க, முதல் பரிசு பெறுகிறது அந்தக் கையெழுத்துப் பிரதி. அதற்குத் தலைப்பு இல்லாததால், தலைப்பொன்றைச் சொல்லுமாறு போட்டியை நடத்தும் குழுத்தலைவரான பாதிரியார் மார்க்வெஸ்ஸைக் கேட்டுக்கொள்ள, மார்க்வெஸ், "Shit-eating town" என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பாதிரியாரை மூச்சடைக்க வைக்கிறார்! இறுதியில், கருணை காட்டி, 'In Evil Hour' என்று பெயர் மாற்றி, condom, masturbation ஆகிய இரண்டு ஆட்சேபகரமான வார்த்தைகளில் ஒன்றை நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்போது, ஒன்றை வேண்டுமானால் நீக்கலாம் என்று ஒப்புக்கொண்டு, masturbation என்ற வார்த்தை மட்டும் நீக்கப்படுகிறது. இத்தனையும் நடந்து முடிந்தபின், பிரசுரமான புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் டப்பிங் செய்த சீனப் படம் போல, கொலம்பிய பூர்வீக குடிகள் பேச்சுவழக்கில் எழுதப்பட்ட அனைத்தும் மாட்ரிட்(Madrid) பேச்சுவழக்குக்கு மாற்றப்பட்டு ஏகத்துக்குக் குதறப்பட்டிருந்ததால், அந்தப் பதிப்பு தன்னுடையதில்லை என்று தீர்மானித்துவிட்டு, அதன் அசல் வடிவம் பின்பு மெக்ஸிகோவில் வேறொரு பதிப்பாக வெளியிடப்பட்டதென்று கூறுகிறார். தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் அரைவேக்காட்டு பதிப்பாளர்கள் தொல்லை எந்த ஊருக்குப் போனாலும் ஒன்றுதான் போல! ஊரிலிருந்து பொகோட்டாவிற்குப் புறப்படும்போது விமான ஓடுதளத்தில் சுற்றிக்கொண்டிருந்த பசுமாடுகளை விலக்கும்வரை விமானம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமானப் பயணம் மீதான பயம் இப்போதுவரை தொடர்வதாகவும் கூறுகிறார்.
எது புனைவு, எது மிகைப்படுத்தல், எது யதார்த்தம் எது உண்மை எது பொய் என்பவற்றுக்கு இடையிலான இடைவெளிகளைக் கரைத்துக் காணாமற்போகச்செய்யும் உரைநடை வழி, பத்திரிகையியலை ஒரு இலக்கிய வடிவமாக மார்க்வெஸ் பார்க்கமுயல்வது மிக முக்கியமான ஒரு கூற்று. கொலம்பிய பாப் பாடகி
ஷக்கீரா வேறொரு இடத்தில் "மார்க்வெஸ்ஸுக்கு மரணமே கிடையாது" என்றிருப்பாள்: ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பும் அவளது லத்தீனோ உச்சரிப்புக்காகவே Whenever, wherever பாடலைக் கணக்கற்ற முறை கேட்டிருக்கிறேன். ஒருநாள் எங்கோ போய்க்கொண்டிருந்தபோது FMல் அவளது சின்னப் பேட்டியைக் கேட்டேன். எப்படி இருக்கிறாய் ஷக்கீரா என்றதற்கு, "Oh, well, I'm doing OK"; மறுபடி "எப்படியிருக்கிறது வாழ்க்கை" என்றதற்கு "It's OK, it's going on" என்ற ரீதியில் பதில்கூறினாள் - காரணம்தெரியாமல் அந்த பதில் பிடித்துப்போனது (அடுத்த ஆல்பம் வராததால் ஏற்பட்ட சோர்வு என்று சொல்லி மூடு அவுட் செய்துவிடாதீர்கள்! அதுவே உண்மையாயிருப்பினும் நான் நம்பத் தயாராயில்லை!!). பொதுவாகப் பாப் பாடக/பாடகிகளின் பேட்டிகளில் கணக்கற்று வழியும் தயாரிக்கப்பட்ட பதில்கள் - "Oh, I'm doing great, I'm really excited about this project, it's the best so far in my career, I'm having the best time of my life, blah blah blah..." ப்ளா ப்ளா என்ற ரீதியில் இல்லாமல், அப்போதைய கணத்தின் அப்போதைய உயிர்ப்புடன் சொன்ன மாதிரியான பதில் என்பதில். நான் படித்துள்ளவரையிலான பிற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் எழுத்துக்களில் அபூர்வமாகவே கிடைக்கும் இதுபோன்ற தருணங்களும் தொனியும் மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களில் கணக்கற்றுப் பரவிக்கிடப்பதே ஒருவகையில் மார்க்வெஸ்ஸின் எழுத்துக்களையும், அவரே விரும்புகிறாரோ இல்லையோ, முத்திரை குத்தப்பட்ட 'மாயா யதார்த்தவாதம்' (Magical realism) என்ற வகையையும் (genre) மிக வசீகரமாக ஆக்குகிறதென்று நினைக்கிறேன். சுவாரஸ்யமான புத்தகம் - வாய்ப்புக் கிடைப்பின் படித்துப் பார்க்கவும். மூன்று பாகங்களாக வரப்போகும் புத்தகத்தின் முதல் பாகம் இது. புத்தகத்தின் பிந்தைய அத்தியாயங்களைப்பற்றி பின்பொருமுறை நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் - ஒருவேளை இதையே மறுபடித் திருத்தி, சேர்த்து எழுதியும் பதியலாம்....
படங்கள் நன்றி:
Amazon,
Modernword