Saturday, December 25, 2004

இந்தியப் பெருங்கடல்


Pietr de Hooch

இந்தியப் பெருங்கடல்
-மாண்ட்ரீஸர்

எரிச்சலூட்டும் வெயில், சிலைகளின் தலையைப் பிளந்துகொண்டிருந்தது. சுபா மௌனமாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த கறுப்புநிற ப்ராதா கைப்பைக்குள் என் அறுக்கப்பட்ட தலை இருந்தது. தலை அறுபட்டுவிட்டதால், எப்போது அறுத்தாளென்ற சரியான நேரம் தெரியவில்லை, இருந்தாலும், மிஞ்சிப்போனால் இரண்டுமணி நேரத்துக்கு மேல் இருக்காதென்று நினைக்கிறேன். அந்தப் ப்ராதா பையை விற்றால் இந்த ஊரில் ஒரு தெருவை வாங்கிவிடலாமென்பது யாருக்கும் தெரிந்திராததால், பையும், பையுனிள்ளிருந்த என் தலையும் திருடப்படாமல் பத்திரமாகவே இருந்தது. இரண்டுமணி நேரம்தான் ஆகியிருக்குமென்று நான் நினைப்பதால், உயிர் போய்விடுவதற்குள் என்னைப்பற்றியும், இந்தத் துர்ப்பாக்கிய நிலையைப்பற்றியும் கூறிவிட முயல்கிறேன். பையினுள் கிட்டத்தட்ட முற்றுமுழுதான இருள். என் முகத்தில் அவளது தலைவியர்வை வாசமும் நறுமணமும் கலந்து வீசும் சீப்புக்களும் மடக்கப்பட்ட கத்தி ஒன்றும் சில ஊசிகளும் நெம்ப்யுட்டால் குப்பிகளும் நடக்கநடக்க மோதியவண்ணம் இருந்தன. என்னதான் ஊசியைச் சொருகியிருந்தாலும், கழுத்தை அறுக்கும்போதுகூடக் கத்தாமல் கதறாமல் இருந்திருக்கிறேனென்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

கடல் முழுவதையும் குடித்துவிடுவேன் என்ற உறுதியளிப்பின்பேரில்தான் என்னை இங்கே சுபா அழைத்துவந்தாள். நானும் என் பணியை ஒழுங்காகவே செய்துவந்திருக்கிறேன். அது ஏதும் சுலபமான வேலையும் அல்ல என்பார்கள். மூன்று கடல்கள் சேரும் இடத்திலிருந்து ஒரு கடலைமட்டும் உறிஞ்சி எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்னைப்போன்ற வெகுசிலரே உள்ளனர். மிகச் சுலபமானது என்று எனக்குத் தோன்றும் என் வேலை ஏன் பிறருக்கு இவ்வளவு கடினமாகப் படுகிறதென்று எனக்குத் தெரியவில்லை. இங்கே வந்து சேர்ந்த முதல் நாளில் சுபாவும் நானும் கடற்கரையைப் பார்த்தமாதிரியிருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அடுத்த நாள்முதலே கடலைக் குடிக்கவேண்டியிருந்ததால் சற்று நிதானமாகவே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மலாக்கா ஸ்ட்ரெயிட்டில் அப்படி என்ன கண்டுபிடித்தாளென்று தெரியவில்லை, அடுத்தநாளே என்னைத் தேடி வந்துவிட்டிருந்தாள். சம்பளம் ஒருபுறம் கவர்ச்சியாக இருந்தாலும், எனக்கு அவளைப் பிடித்திருந்தது என்பதும் நான் ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம். அவளது தொழிலைப்பற்றியும் அவள் என்னிடம் வந்துசேர்ந்த பாதையைப்பற்றியும் சில தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சற்றுநேர இணையத் தேடல்மூலம் அறிந்துகொண்டிருந்தேன். நேற்றுக் காரில் வந்துகொண்டிருந்தபோது ஜன்னலைத் திறந்துவைத்திருந்ததால் ஏற்பட்ட எரிச்சலில் இருந்தேன். சென்ற வழியெல்லாம் வெள்ளைநிறத்தில் ராட்சதக் காற்றாடிகள் ஆதிகாலத்தின் பொறுமையுடன் காற்றில் மெதுவாகச் சுழன்றுகொண்டிருக்க, திறந்த கார் ஜன்னல்கள் வழியாக வெக்கைக் காற்று முகத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது. அவளது சிகரெட் புகை வேறு காருக்குள் பிசாசு போலச் சுற்றியலைந்து பின் வெளியேறிக்கொண்டிருக்க, மிக வட்டமான துஷ்யந்தனின் தொந்தி பின்சீட்டில் தொடங்கி, யாருமற்ற முன்சீட்டை எட்டிச் சற்று முன்தள்ளி நெளித்துக்கொண்டிருந்தது. அவனது கனமான மூச்சிரைப்பின் ஹ்ம் ஹ்ம்முடன் சீட் முன்னும் பின்னுமாக நகர்ந்துகொண்டிருக்க, அவனது உருண்டு திரண்ட இடதுகையும் நாய்ச்சங்கிலி மாதிரியான வெள்ளி கைச்சங்கிலியும் ஜன்னலின் வெளியே தொங்கியவாறு காற்றில் சூத்திரங்களை எழுதிக்கொண்டிருந்தன. இப்படி என் கதையைக் காருக்குள் அலைந்துகொண்டிருந்த காற்றில் நான்பாட்டுக்கு மௌனமாக எழுதிக்கொண்டிருந்தேன். ஸ்டியரிங்கில் ஒரு கையை வைத்தவாறு, மற்றொரு கையுடன் என்னைநோக்கித் திரும்பினாள் சுபா. "வேலை சீக்கிரம் நடக்கவேண்டியது முக்கியம். நமது ஒத்திகை எனக்கு ஏகப்பட்ட திருப்தியளித்தது. அதேபோல நிகழ்வும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்" என்றாள். பறந்துகொண்டிருந்த அவளது தலைமுடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் டையைச் சற்றுத் தளர்த்திக்கொண்டேன். "என்னிடம் வருமுன்னர் என்னைப்பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்களென்றும், என்னை யாரேனும் இடித்து வேலைவாங்க முயல்கிறார்களென்று நினைத்தால் உறிஞ்சிய தண்ணீரைக் கூசாமல் வேறிடத்தில் துப்பிவிடுவேன் என்று கேள்விப்பட்டிருப்பீர்களென்றும் நம்புகிறேன்". என்றேன், உணர்ச்சியின்றி. One day, or A Nother என்று பாடல் காற்றில் கரைந்துகொண்டிருந்தது. சுபா திரும்பிக்கொண்டாள். துஷ்யந்தன் என் இடுப்பில் இடித்தான். "உன்னைக் கிறுக்கன் என்று சும்மாவா சொன்னார்கள்".

கடைசியில் துஷ்யந்தனைப் பலிகொடுக்க நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் ஒரு மாந்தோப்பு. இறங்கிக்கொண்டிருந்த சூரிய ஒளி தோப்பெங்கும் தங்கக்காசுகளை இறைத்திருந்தது. ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை ஆர்வத்துடனும் ஆர்வமற்றும் எங்கோ பார்த்தவாறும் கடலைக்காய்களைக் கொறித்தவாறும் தார்க்குச்சிகளைக் கக்கத்தில் சொருகிக்கொண்டும் மடக்கிக் கட்டிய வேட்டியின் சுருக்கங்களை நீவியவாறும் கேட்டவாறு தொலைவில் ஒரு மரத்தடியில் சிலர் அமர்ந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தவனது எங்களைநோக்கிய பார்வை, எனக்கும் சுபாவுக்குமிடையில் மடங்கித் தரையில் விழுந்து இழுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த துஷ்யந்தனின் மயங்கிய பருத்த உடலையும் ஒரு சொடுக்கலில் அளந்தது. பிற அனைவரும் எங்களுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தபடியால், அவனது பார்வை அவர்கள் அனைவரது பார்வைகளையும் விழுங்கியதாகப் பட்டது, ஒரு பார்வையைச் சந்திப்பதில் ஒரு கூட்டத்தைத் தவிர்க்கிறோம். அந்தப் பார்வை எங்களை விட்டு அகலாது, எங்களைத் தடுக்காது என்றும் நினைத்தேன். துஷ்யந்தனைப் படுக்கவைத்துப் பின் தன் மடக்குக் கத்தியை விரித்தாள் சுபா. துஷ்யந்தனது வயிற்றை மட்டும் தனியாக அறுத்து எடுத்தாள். சாக்குக்குள் போனது அந்த வயிறு. இந்தளவு நேர்த்தி மேல் அபிமானமுள்ள வாடிக்கையாளர்களை இதற்குமுன்பு நான் சந்தித்ததில்லை. மத்தியதரைக்கடல், காஸ்பியன் கடல், கருங்கடல் போன்றவை துஷ்யந்தன் குடித்த சில கடல்கள். என்னைப்பற்றி அவனுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், தான்தான் கடலைக் குடிக்கப்போகிறோமென்ற நம்பிக்கையில் எங்களுடன் வந்திருக்கமாட்டான். தோப்பின் உரிமையாளினி என்று ஏதோ பெயர் சொன்னார்கள், அம்ரபாலியோ என்னவோ. எனது கவனமெல்லாம் அறுக்கப்பட்ட துஷ்யந்தனின் தொந்தி மேல் இருந்தது. எத்தனை கடல்கள் அதனுள் இருக்கின்றன. மத்தியதரைக்கடலைக் குடித்தபின் அவன் என்றும் சிறுநீரே கழித்ததில்லை என்று நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. பார்த்துவிடுகிறேன்.

கார் மறுபடி சீறிக்கொண்டிருந்தது, கத்தி போல். பின்சீட்டில் எனக்கருகில் துஷ்யந்தனின் தொந்தி கிடந்தது. ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்ட சுபா, எனது அறுக்கப்பட்ட தலை சிறிதுகாலம் குடியிருக்கப்போகும் கறுப்புப் பையினுள்ளிருந்து ஒரு அகலமான உறிஞ்சுகுழலை உருவிப் பின்புறம் திரும்பிப் பாராமல் என்பக்கம் நீட்டினாள். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் மௌனமாக அமர்ந்திருந்தேன். துஷ்யந்தனின் தொப்புள், கார் மேடுபள்ளங்களில் ஏறிக் குலுங்கும்போதெல்லாம் உருகித் தளும்பியவாறு என்னை அழைத்துக்கொண்டிருந்தது. ஸ்ட்ராவின் காகிதத் தோலை உரித்து நிதானமாக நாபிச்சுழியில் பொருத்தினேன். என் கண்கள் தாழ்ந்தன. துணி வாசம் கரைந்து நாசிக்குள் நுழைய, உறிஞ்சத்தொடங்கிய என் நாக்கில் கடல்களின் சுவையை உணர்ந்தேன். எண்களிலும் எழுத்துக்களிலும் கடல்களின் சுவையைச் சித்தரிக்கவேண்டிய என் விதியை நொந்துகொள்ளாமல் இருக்கவில்லை நான். என் நாக்கின் கணுக்களில் இரக்கமற்று ஏறின கனவுகளும் சமுத்திரங்களின் முடிவற்ற அமைதியும் மர்மமும் அதன் எண்ணற்ற உயிரினங்களின் மௌன ஓலமும். இன்னும் எங்களைத் தொடர்ந்துகொண்டிருந்த காற்றாலைகளின் மௌனச் சுழற்சியின் அச்சுறுத்தலுடன் துஷ்யந்தனின் வயிற்றினுள் அடங்கியிருந்த கடல்களை உறிஞ்சினேன். சுபா திரும்பி என்னைப் பார்த்தவாறு காரை ஓட்டிக்கொண்டிருந்தாள். "எப்படி இருக்கிறது" என்றாள். போதையில் என் கண்கள் செருகிக்கொண்டன. கடல்களை உறிஞ்சியவாறு குழிந்த என் கன்னங்களுடனும் மின்னும் என் கண்களுடனும் அவளைநோக்கிச் சாய்ந்தேன். ஒருநிமிடம் நிறுத்தி "உன்னையும் உறிஞ்சிவிடவா" என்றேன். அவள் புன்னகைத்தாள். கடவுளே என்று நினைத்துக்கொண்டேன். உறிஞ்சும், உறிஞ்சவேண்டிய கடல்களின் பிம்பங்கள் என் கண்முன் கடந்துபோயின. ஓரக்கண்ணில் துஷ்யந்தனின் தொந்தியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அறுபட்ட கொடி போல துரிதமாக வற்றிக்கொண்டிருந்தது அது. ஸ்ட்ரா வழியாக என் நாக்கில் படகுகளும் கப்பல்களும் கபிலநிறமும் ஆலிவ் இலைகளும் வாள்களும் கோடரிகளும் குதிரைகளும் சுக்கிலமும் துன்மார்க்கங்களும் உருகிய மூளைகளும் மலைகளும் சர்ப்பம்போலேறின. என் நாக்கில் கொத்திய சர்ப்பங்கள் தந்த ஆவேசத்தில் காரின் பின்சீட்டில் சாய்ந்து ஏறிய கடலின் போதையில் ஜன்னல்களையும் கதவையும் வெறியுடன் உதைத்தேன். சுபா புன்னகைத்தவாறு தன் குளிர்கண்ணாடியை அணிந்துகொண்டாள். அவளது பெரும் காதுவளையம் என்னைச்சுற்றிலும் பைசாசச் சக்கரங்களை, எல்லைகளை அலட்சியத்துடன் விசிறியெறிந்தது. அவளைநோக்கி நீண்ட கைகளை என்னால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அவளது தோள்கள் நளினத்துடன் ஒதுங்கின. "கடல்களின் போதையைத் தாக்குப்பிடிக்க முடியாத நீ எப்படி நாளையோ மறுநாளோ சமுத்திரத்தைக் குடிக்கப்போகிறாய்" என்றது அவளது ஒதுங்கிய தோள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றனுள்ளாகச் செருகிக்கொள்ளும் டெலஸ்கோப்பின் எண்ணற்ற குழாய்கள்போலச் செருகிக்கொண்ட காலங்கள் என்னுள் புகுந்த கடல்களைக் கணக்கற்றுப் பெருக்கின, சிதைத்தன. என் கண்கள் சிவந்தன, என் மூளை ததும்பியது, மூச்சு பெரும் சூறாவளியாகிக் காருக்குள் சுற்றியலைந்தது. துஷ்யந்தனின் தொந்தி என்னை ஆட்கொண்டது. கடல்களை உறிஞ்சினேன் நான்.

கண்விழித்தபோது கருப்பையினுள்ளிருக்கும் பிண்டம்போல முழங்காலை நாடியில் வைத்திருந்தேன். எனது மற்றொரு கால் துவஜஸ்தம்பம் போல வெகு நேராய் நீண்டிருந்தது. பூப்போட்ட அவளின் மேற்சட்டையும் கறுப்புத் தொப்பியும் திரும்பத் திரும்பக் காற்றில் அலையும் முடியும் இதுவல்ல நிஜம் என்றன. அடிக்கடி என் இடுப்பின் பழம் பெரட்டா அருகில் சென்ற என் கைகளை வெகு பிரயத்தனத்துடன் தடுத்து நிறுத்தினேன். அவளது சுவாசத்தின் நறுமணம் முடிவின்றி என்னைக் கொன்றது. அவளது கண்களின் தீவிரமும். "கிளம்பத் தயாரா" என்றாள். சிறிது நேரம் என்றபின் சிறிது நேரத்தில் தயாரானேன். ஸ்நானத்தின்பின் அமர்ந்திருந்த என்னைச்சுற்றிலும் இருபத்தேழு பேர். வாசனைத் திரவியங்களுடன் கொலையாயுதங்களுடன் அங்கவஸ்திரங்களுடன் பொற்சரிகைகளுடன் மெழுகுடன் எனது சதைமிகுந்த கெண்டைக் கால்களுடன். என் தொண்டையை அலங்கரிக்க மட்டும் பதினாறு பேர். கடற்கரை மணலில் கால்கள் புதைய நடந்தோம். முடிவற்றுச்செல்லும் தவளைக்கல்லாய்ச் சறுக்கியது கடலில் அவள் பார்வை. என்னைப்பார்த்து மறுபடிப் புன்னகைத்தாள். "தயார் தானே நீ" என்றாள். பிறகு? பிறகு? வெகுதூரம் நடந்தோம், அதிக மக்களில்லாத இடத்துக்கும். யாருமேயில்லாத இடமொன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடற்கரையில், கடலைநோக்கி நான் குப்புறப் படுத்தேன். என் வஸ்திரங்களில் ஈரம் சரசரவென்று ஏறியது. மூடிய கண்களையும் வாயையும் திறந்தேன். குடிக்கத்தொடங்கினேன். அலைகள் மெலிதாகத் தொடர்ந்து என் முகத்தை அறைந்தவண்ணமிருந்தன. நெகிழ்ந்த மணற்பரப்பில் சறுக்கும் கட்டுமரம்போலச் சமுத்திரத்தைக் குறிவைத்து சறுக்கத்தொடங்கியது என் உடலும் உதடுகளும். என் உதடுகளுக்குள் நுழையத்தொடங்கியது சமுத்திரம். அலைகளுக்கு இது புரிந்ததோ என்னவோ அவை பதட்டமடைந்ததுபோல் தோன்றியது. என்னருகில் வேடிக்கைபார்க்கவந்த குழந்தைகளின் கையிலிருந்த பலூன்கள் நழுவித் தரையில் வீழ, அவற்றின் அகன்ற கண்களில் தோன்றிய திகில் விரிய விரிய அவை பெற்றோரைநோக்கி ஓட்டமெடுத்தன. பெரும் கூச்சல்கள் கேட்டன. சமுத்திரத்தின் எல்லை சரசரவெனக் கரையத்தொடங்கியது. நான் அவளைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. என் தொண்டைக்குள் இறங்கும் நீரூழியைத் தாண்டி எதுவும் நான் கவனிப்பதில்லை. இப்போது மீன்களையும் சேர்த்து விழுங்கத்தொடங்கினேன். மீன்கள், கடல்பாசிகள், சிலைகளும் கட்டிடங்களும் தகர்ந்து வீழ்ந்தன. சுக்குநூறாகச் சிதைந்து வீழ்ந்த கட்டிடங்களையும் சிலைகளையும் சுறாக்களையும் திமிங்கிலங்களையும் நிலப்பரப்புக்களையும் சேர்த்து விழுங்கினேன். என்னுள் நுழைந்த தண்ணீர் என்னால் மிகத் துல்லியமாக அடையாளங்காணப்பட்டது. நான் உறிஞ்சும் சமுத்திரம் உருவாக்கிய கரும் அகழியில் சுற்றியிருக்கும் கடல்கள் பாய்ந்தன. துஷ்யந்தனின் கடல்கள் எனக்குள் சிதறத்தொடங்க, தொடர்ந்து உறிஞ்சினேன். கப்பல்களை விழுங்கினேன். விவரிக்கத் தேவையற்ற பெரும் கருமையை விழுங்கினேன். உருவான பெரும் கரும் பள்ளத்தைச்சுற்றிலும் மக்கள் சிதறி ஓடினர். தடதடவென்று ஹெலிகாப்டர்கள் மேலே பறந்தன. என்னை அவை ஒன்றும் செய்துவிடமுடியாதென்பது எனக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். அன்றைய பொழுதின் அஸ்தமனத்துக்குள் உறிஞ்சி முடித்த சமுத்திரத்துடன் களைப்புடன் நான் கடற்கரையில் வீழ்ந்தேன். பல நூறு மைல்கள் தள்ளிப் போயிருந்தது கடற்கரை. சுபாவும் அவளது கூலிக் கைத்தடிகளும் என்னை மேலே இழுத்தனர். எங்கள் அறையில் என்னைக் கொண்டு சேர்த்தனர். அப்போதுகூட சுயநினைவுடன்தான் இருந்தேன். இப்போது என் அறுக்கப்பட்ட தலை சுபாவின் பைக்குள் இருப்பதைக்கொண்டுதான் என்ன நிகழ்ந்ததென்று யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நானும் துஷ்யந்தனும் என்னைப்போன்றவர்களும் உறிஞ்சித் தீர்த்த கடல்கள் எத்தனை என்று யாருக்கும் தெரியாது என்றே சொல்கிறார்கள். என்னதான் என் தலை அறுக்கப்பட்டிருந்தாலும், ஒருதுளி ரத்தம்கூடப் பைக்குள் சொட்டவில்லை. ஏதோ செய்திருக்கிறாள். க்ளிப்புகளைப் போட்டு அனைத்தையும் மூடியிருக்கிறாளென்று நினைக்கிறேன். இருக்கலாம்.

கடைசியாக, பை அசைவது நின்றது. மெலிதான பேச்சுக்குரல்கள் கேட்டன. எனது கதை இப்படி முடியவேண்டுமா என்று நானே யோசித்துப்பார்க்கிறேன். எனது போக்கில் கடல்களைக் குடித்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தேன். ஒருபொழுது நான் குடித்த கடல்களனைத்தையும் துப்பிவிடுவதுதான் என் உத்தேசம். எனக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை, இருப்பதாக யாரேனும் நினைப்பதையும் நான் விரும்பவில்லை. பையின் ஸிப் மென்மையாகத் திறக்கப்பட்டது. என் தலைமுடியைப் பற்றித் தூக்கி வெளியில் வைத்தாள். பிரகாசமான வெளிச்சத்தில் மூடக்கூட முடியாமல் என் கண்கள் திறந்து கிடந்தன. "மாண்ட்ரீஸர், இதைப் பார்த்தாயா" என்று புன்னகைத்தாள் சுபா. அதே கைப்பையில் ஸ்ட்ராக்கள் கிடந்ததைக் கவனிக்கவில்லையா நான்? "பார் மாண்ட்ரீஸர், இவ்வளவுதான்" என்றாள். அவன் ஸ்ட்ராவை வாங்கி அதன் காகித உறையை உரித்தான்.

என் தலையைத் தலைகீழாகப் பிடித்தவாறு சுபா, க்ளிப்புகளை ஒவ்வொன்றாக அகற்றத்தொடங்கினாள். அப்போதுதான் சிறிது சிறிதாக ரத்தம் வழியத்தொடங்கியது. மாண்ட்ரீஸர் தன் ஸ்ட்ராவை அதில் வைத்து உறிஞ்சத்தொடங்கினான்.

No comments: