Thursday, December 16, 2004

4816/92


தூங்கும் ஜிப்ஸி - ஹென்றி ரூஸ்ஸோ

பரீட்சையில் பாஸ். சரி, அடக்கிவைத்த கையரிப்பை ரிலீஸ் செய்ய ஒரு கதை எழுதினேன். படித்துப்பாருங்கள் (இதைப் படித்துப்பார்க்குமளவு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை). எழுதிய காலம் சாயந்தரம் 5.30 - 8.45; 16 டிசம்பர் 2004!!

4816/92
-மாண்ட்ரீஸர்

அதாவது:

என் நண்பருக்கு வயது நாற்பது. அவரது கையில் எப்போதும் இருக்கும் கறுப்பு ரெக்ஸின் பைக்கு வயது நானூறு என்று நினைத்துக்கொள்வேன். அது கிழிந்து துருத்திக்கொண்டிருக்கும் நூல்பிரிக்கு வயது நாலாயிரமாகக்கூட இருக்கலாமென்றும் யோசிப்பேன். அந்தப் பைக்குள்ளிருந்து எடுத்து நீட்டப்படும் சிகரெட்டுக்காக, அம்மூன்றின் வயதுகளையும் கூட்டினால்கூட முப்பதைத் தாண்டாது என்று கூசாமல் பொய்சொல்வேனென்பதையும் கூறிக்கொள்கிறேன்; என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் பாருங்கள்.

நண்பரின் பெயரைக் கூறுவது இங்கே தேவையற்றது. அவரது உருவத்தை வேண்டுமானால் சற்று விவரிக்கிறேன். எனக்கு அதிகமாகப் பொய்சொல்லும் பழக்கம் உண்டென்பதையும் முதலிலேயே கூறிவிட்டதால், இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். ஒரு சாயலில் பார்த்தால் என் நண்பர் கி. ராஜநாராயணன் மாதிரி இருப்பார். பழக்கவழக்கங்கள் மட்டும் கி.ரா கதையை இருட்டில் படிப்பது மாதிரி இருக்கும். சிலமுறை நூலகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம் எனக்கு அதிர்ச்சியூட்டுவதுதான் அவர் வழக்கம். தொண்ணூறு கிலோமீட்டர் தாண்டிவந்து காத்திருக்கும் நேரத்தில் பொழுதையும் போதையையும் போக்க நானே ஏதொ பாதிக் கிறக்கத்தில் தூசிதும்புக்கிடையில் புத்தகங்களைப் பீராய்ந்துகொண்டிருக்கும்போது ஒரு அலமாரிச் சுவர் என்னைப்பார்த்துப் புன்னகைக்கும். பயத்தில் படக்கென்று ஒருதுளி மூத்திரம் கூட ஒருதடவை வந்துவிட்டது. நன்றாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு பார்த்தால், அலமாரிச் சுவரில் சாய்ந்துகொண்டு இவர் புன்னகைத்துக்கொண்டிருப்பார். திறந்த மணிப்பர்சு மாதிரி இந்தக் காதிலிருந்து அந்தக் காதுவரை. கோயிந்தா நாராயணா, நேரங்காலம் தெரியாமச் சோதிக்காதடா நண்பா என்று நினைத்துக்கொள்வேன். "என்ன தம்பீ இந்தப் பக்கம்" என்பார். இந்த வாக்கியத்தைமட்டும் சிலநூறு முறையும், அந்தப் பொதுநூலகத்தில் பத்திருபது தடவையும் கேட்டிருப்பேன் என்பதைவைத்துக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

அவர் படித்த புத்தகங்களையெல்லாம் அடுக்கினால் அதில் ஏறியே சந்திரனுக்குப் போய் வந்துவிடலாம். நிஜமாகத்தான் சொல்கிறேன். ஒருமுறை, தன் முகத்தையே புரட்டிப் புரட்டிப் படித்துக்கொள்ளலாமென்று சொன்னார் அவர். உண்மைதானென்று தோன்றியது. அந்த வயதுக்கு ஏகப்பட்ட சுருக்கங்கள். பூங்காவில் அமர்ந்துகொண்டு நாங்கள் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது மெலிதாகக் காற்றடித்து அவரது சில சுருக்கங்கள் புரண்டு விழுந்தன. அப்போது அவற்றினடியில் சில வரிகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இருந்தாலும், மேற்கொண்டு படிக்கவிடாமல் என் நாகரீகப் பாடங்கள் தடுத்தன. பெரும்பாலும், புத்தகங்களை அவர் படிக்கப் படிக்க, எழுத்துக்கள் அனைத்தும் ஊர்ந்து அவர்மேல் ஏறிவிடுகின்றன என்று நினைப்பேன். ஒவ்வொரு முறை அவர் ஃப்ரூட்டாங் குடிக்கும்போதும், துளி ஏதும் அவர் கன்னத்தில் வழிந்துவிடக்கூடாதென்று அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன், எழுத்துக்கள் அந்த ஈரத்தில் ஏதும் வழுக்கிக் கீழே விழுந்துவிடுமோ என்று. ஒருதடவை ஃப்ரூட்டாங்கை நக்க மேலேறிய எறும்பின் கால்களில்வேறு பல எழுத்துக்கள் சிக்கிக்கொண்டன, நல்லவேளையாக நான் உடனிருந்ததால், எறும்பைக் காலடியில் போட்டு ஒரே அரையாக அரைத்து, எழுத்துககளைக் கவனமாகப் பிரித்தெடுத்துப் பழையபடி அவர் முகத்தில் பொருத்தினேன். இவ்வளவு நடந்தபோதும் மனிதர், ஆங்கில C போல உட்கார்ந்தவாறே வளைந்து தூங்கிக்கொண்டிருந்தார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமளித்த விஷயம். அவரது சிவப்புநிறக் குற்றாலத்துண்டு மட்டும் கடைவாயில் இறுகச் சிக்கியிருந்தது. ர்ர் ர்ர் என்று நிதானமான குறட்டை வேறு. அவரைச் சற்றுநேரம் ஆதுரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரது நூலக உறுப்பினர் எண் 4816/92. அதாவது, 1992ம் வருடத்தில் உறுப்பினரானதாகவும், எண் 4816 என்றும் கணக்கு என்று நினைக்கிறேன். வருடத் தொடக்கத்தில் முதலில் உறுப்பினராகிறவருக்கு என்ன எண் கொடுப்பார்களென்று தெரியவில்லை. என் அனுமானம், சும்மா உத்தேசமாக 4500 என்ற எண்ணில் தொடங்குவார்கள் என்பது. அந்த நூலகம் மிகவும் பெரியது, அதன் அனைத்து அறைகளையும் நானே பார்த்ததில்லை என்றபோதிலும், 92ம் வருடத்தில் மட்டும் 4815 உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்களென்பதை என்னால் நம்ப முடியாது. ஏனென்றால், 7632/78 என்ற உறுப்பினர் எண்ணையும் நான் எடுத்த சில புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். போதாக்குறைக்கு பெரும்பாலும் ஈயடித்துக்கொண்டிருக்கும் அந்த நூலகத்தில், பிரதான நூலகர் ஒருவரைத்தவிர பிற அலுவலர்களையும் நான் பார்த்ததில்லை. அவரும் தன் மேசைமீது கவிழ்ந்துகொண்டு எப்போதும் எண்களிலேயே உழன்றுகொண்டிருப்பார். எண்கள் மிகவும் அச்சந்தருபவை. நிமிர்ந்து பார்க்கும்போதெல்லாம் எனக்கு க்றிஸ்டோஃபர் லீ ஞாபகம்தான் வரும், அவரது பாட்டி ஏதாவது சைத்தியனுடன் படுத்தாளா என்று கேட்கத்தோன்றும். நாம் இருப்பது நமது ஊர் பாருங்கள். இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசிய.

அன்று அவரைச் சந்தித்தது நூலகத்தில் அல்ல. ரயில்வே கிராஸிங் அருகிலேயே பேருந்திலிருந்து இறங்கி வேல்ச்சாமி கடைக்குள் நுழைந்து, கறுப்பு எலுமிச்சை டீயும் இரண்டு ஆம்லெட்களும் போடச்சொல்லிவிட்டு சிகரெட்டைப் புகைத்தவாறு தினசரியில் அன்றைய 'இந்தக் குண்டி யார் குண்டி' புகைப்படப் புதிரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தென்னங்கீற்றுக் கூரையின் இடுக்குவழியாக நுழைந்த சூரிய ஒளிவேறு சரியாக அங்கே விழுந்து புதிய பரிமாணமொன்றைக் 'கு'னாவிற்கு அளித்துக்கொண்டிருந்தது. இரண்டு இலைகளில் ஆம்லெட் வந்ததும் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தால் - எதிரே நண்பர். முகம் சிறிது கவலையுற்றிருந்தது. ரொம்பக் கவலைப்படாதீங்க தோழர், எழுத்துக்களுக்கு வலிக்கப்போகுது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

"நீங்களே வாங்கி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா தம்பி" என்றார் தோழர். இது எத்தனாவது முறை என்று நினைவில்லை. நான் மையமாகப் புன்னகைத்தேன். "ஒரு சின்னப் பிரச்சினை" என்று சொல்ல ஆரம்பித்தார்.

சில புத்தகங்களைச் சமீபத்தில் எடுத்திருக்கிறார். அவை அப்போது அவரிடம் இருந்தன. அறுசுவை அசைவச் சமையல், ரம் ரம் வைரம், The Life of Peggy Guggenheim ஆகிய மூன்று புத்தகங்கள். என்ன தோழர், வெரைட்டி காட்டறீங்களா என்றேன். பதில் சொல்லாமல், அறுசுவை அசைவச் சமையல் புத்தகத்தின் முதல்பக்கத்தை என்முன் விரித்து வைத்தார். "என்ன தோழர்" என்றேன். நீயே பார் என்ற ரீதியில் பதிலேதும் வராமல் போகவே, அப்பக்கத்தைக் கூர்ந்து பார்த்தேன். அட்டைக்கடுத்த அப்பக்கத்தில், நீலநிறத் தடித்த தாளில் நூலக ஆவணச்சீட்டு ஒட்டப்பட்டிருந்தது - இன்னின்ன தேதியில் இன்னின்ன உறுப்பினர்கள் இப்புத்தகத்தை எடுத்திருக்கிறார்கள் திருப்பியிருக்கிறார்கள் என்ற விபரங்களுடன். தோழர் ஏதாவது புத்தகத்தை ஆட்டையப் போட்டுவிட்டுக் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் கடைசி எண்ணைப் பார்த்தேன். அது தோழரின் எண் தான். 4816/92. மேலும் யோசிக்கவிடாமல், கக்கன்ஹைம் புத்தகத்தையும் அதேபோல என்முன் விரித்து வைத்தார். கடைசியாக எடுத்தது தோழர் தான். அவரது உறுப்பினர் எண் அதிலும் இருந்தது. இடைவெளியேதும் விடாமல் ரம் ரம் வைரத்தையும் அதேபோலப் பிரித்து வைக்க, அதேபோல் அவரது எண். அவரது கைகள் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்தன. நான் சற்றுக் கலவரமடைந்தவனாக, எது அவ்வளவு தெளிவாக இருக்கிறது, எந்த அதை நாம் இப்படிக் கோட்டைவிடுகிறோம் என்று யோசித்தவாறு திரும்பத் திரும்ப அந்த மூன்று ஆவணச்சீட்டுக்களையும், அவை ஒட்டப்பட்டிருந்த தாள்களையும் கவனமாக ஆராய்ந்தேன். அம்மூன்று புத்தகங்களில் ரம் ரம் வைரத்தை மட்டும் ஏகப்பட்ட பேர் படித்துக் கிழித்திருந்தார்கள். குதறப்பட்ட சொறிநாய் மாதிரி இருந்தது புத்தகம். அறுசுவைச் சமையலுக்கு அடுத்த இடம். சிலர் மட்டும். கக்கன்ஹைம் புத்தகத்தைத் தோழருக்கு முன்பாக ஒரே ஒரு ஆசாமி மட்டும் எடுத்திருந்தான். அல்லது எடுத்திருந்தாள். நான் நிமிர்ந்து தோழரைப் பார்த்தேன். அவரது கண்களில் தெரிந்த கலவரம் என்னை மேலும் குழப்பியது, அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் நுனி கொள்ளிக்கட்டை போலாகியிருந்தது. அவரது துண்டை எடுத்து ஏற்கனவே மேசைமீது போட்டிருந்தார்.

மறுபடிப் பார்க்க ஆரம்பித்தபோது சட்டென்று என் பார்வை கூர்மையடைந்தது. கக்கன்ஹைம் புத்தகத்தை எடுத்த மற்றொரு ஆசாமியின் உறுப்பினர் எண் 4815/92. சட்டென்று பிற புத்தகங்களையும் பார்த்தேன். தோழருக்கு முன்பாக அந்த இரண்டு புத்தகங்களையும் அதே ஆசாமி எடுத்திருந்தான். நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தேன். "சுவாரஸ்யமான விஷயம் தோழர், இந்தச் சகநிகழ்வு. வித்தியாசமான மூன்று புத்தகங்கள், மூன்றையும் உங்களுக்குமுன்பாகப் படித்தது ஒரே ஆள். ஒருவேளை உங்கள் இருவரது ரசனைகளும் ஒரேபோலிருக்கின்றதோ என்னவோ" என்றேன். நரேந்திரன் போல, தோழர் சிகரெட்டை ஆழ இழுத்துப் நெஞ்சுநிறையப் புகையை நிரப்பி வெளியேற்றினார். "மூன்று புத்தகங்கள் அல்ல, நானூற்றி ஐம்பத்தாறு புத்தகங்கள்" என்றார்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். "என்ன சொல்கிறீர்கள்?" தன் ஸ்கபால் சூட்டைப் போட்டுக்கொண்டு ஏதாவதொரு பெண்ணிடம் அவர் உறவுகொள்ளும் அனைத்து நாட்களுக்கடுத்த பகல்களிலும் இதுபோல ஏதாவது வினோதமாகச் சொல்வது தோழரின் வழக்கம். "நேற்று ஸ்கபால் வேலையா தோழர்" என்றேன்.

"இது நடந்துகொண்டிருக்கிற ஒரு விஷயம். கடந்த பத்தொன்பது மாதங்களாக. போன ஆவணியில் ஆரம்பித்தது" என்றார், நாடகீயமாகக் குரலைத் தாழ்த்திக்கொண்டு. "நேற்றுக் காலையிலேயே நூலகத்துக்குப் போய்விட்டேன். நான் படித்த புத்தகங்களின் பெயர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு" தன் சட்டைப்பையிலிருந்து மடிக்கப்பட்ட சில காகிதங்களை உருவி மேஜைமேல் வைத்தார். "இதைக் கொண்டுபோய் அனைத்துப் புத்தகங்களையும் மறுபடிப் பார்வையிட்டேன். நான் படித்த அந்த அத்தனை புத்தகங்களையும் எனக்குமுன் படித்திருப்பது இதே ஆசாமிதான். உனக்கு இது ஆச்சரியமளிக்கலாம், எனக்கு ஏனோ கவலையாக இருக்கிறது" என்றார், குரலில் நிஜமான குழப்பத்துடன்.

"அல்லது, அந்த ஆசாமி படித்து முடிக்கும் அனைத்துப் புத்தகங்களையும் அவனுக்கடுத்து நீங்கள் படிக்கிறீர்கள்" என்றேன்.

"மிகச் சரி" என்றார். "பிரச்னை என்னவென்றால், இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு வாரத்துக்கு முன்பாக நான் கண்களை மூடிக்கொண்டு தேர்ந்தெடுத்தேன்"

"என்ன சொல்கிறீர்கள்?"

"இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தபின், நான் புத்தகங்களைப் புரட்டிப்பார்த்துத் தேர்ந்தெடுப்பதில்லை. ஏதோவோர் அறையின் ஏதோவோர் அலமாரிமுன் போய் நின்றுகொண்டு ஏதோவோர் திசையில் கைநீட்டிப் புத்தகத்தை உருவுவேன். இதுபோல ஒவ்வொரு முறையும் மூன்று புத்தகங்கள். அவற்றைப் பிரித்துப் பார்த்தால், அப்புத்தகங்களைக் கடைசியாகப் படித்த ஆசாமி 4815/92 வாக இருப்பான். கடந்த பதினாறு முறைகள் - நாற்பத்தெட்டுப் புத்தகங்களாகத்தான் இதைக் கவனித்து வந்திருக்கிறேன். அதன்பின் நேற்றுப் போய் பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோதுதான், இது இவ்வளவு நாட்களாக நடந்துவந்திருக்கிறதென்று தெரிகிறது. சொல்லப்போனால், நான் அந்த நூலகத்தில் உறுப்பினராகி எடுத்த அனைத்துப் புத்தகங்களையும் அவன் படித்தபின்தான் நான் படித்திருக்கிறேன். அவன் அல்லது அவள் யாரென்று தெரிந்துகொள்ள நூலகரிடம் விசாரித்தேன். அவர் பதிவேடுகளைப் பார்த்தபோது அந்தப் பக்கம் இல்லை."

நான் சிரித்தேன். "அப்போது உங்கள் எண்ணும், விலாசமும்கூட இல்லையா அதில்? அடுத்த எண்ணாயிற்றே?"

"என் எண், பதிவேட்டின் ஒரு புதுப் பக்கத்தின் முதல் பதிவு. புரிகிறதா? முந்தைய பக்கம் காணோம் தம்பீ, அதுதான் பிரச்னையே."

"அப்போது எப்படித் தினமும் புத்தகம் எடுக்கிறான் அந்த ஆள்? எனக்கு அந்தக் கிழட்டு நூலகன் மேல் சந்தேகம். ஒருநாள் என் செருப்புக் காலை அவன் வாய்க்குள் திணிக்கப்போகிறேன்" என்றேன், எரிச்சலுடன். "அவனைப் பிடித்து உதையுங்கள் ஒரு நாள்."

"வேறொரு மாதிரி நான் யோசித்தேன் தம்பி" என்றார் அவர். "அதாவது, அந்த நூலகத்தில் நான் படிக்கவேண்டிய அத்தனை புத்தகங்களையும் அவன் ஏற்கனவே படித்துவிட்டான் தம்பி. அதை நான் படித்து முடிக்கவேண்டியதுதான் பாக்கி. இது ஒரு நோய் மாதிரி ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளேன். ஒவ்வொரு மாதமும் இருபதிலிருந்து முப்பதுக்குள் புத்தகங்கள் படித்துவிடுகிறேன். சிலநாட்களில் ரைஸ்மில்லை மூடிவிட்டுக்கூட வீட்டிலிருந்து படிக்கவேண்டியதாகிப்போகிறது - பெரிய புத்தகங்களாகப் படித்து என்னை மாட்டிவிட்டுவிடுகிறான் சண்டாளன். நான் படிக்கவேண்டாமென்று நினைக்கும் புத்தகங்களைக்கூட இதனால் படிக்கவேண்டியதாய்ப் போய்விடுகிறது. சற்று நாள் முன்பு ஜஸ்டீன் என்ற புத்தகத்தைப் படித்தேன் தம்பி. என்ன கொடுமை. சிலசமயங்களில் என்னை வேண்டுமென்றே அவன் பழிவாங்குகிறான். இதை நான் கண்டுபிடிக்குமுன்பு, The Future lasts forever புத்தகத்தை மட்டும் ஒன்பது முறை படித்திருக்கிறேன். அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன் - ஒன்பது முறை, தம்பீ. இப்போது அல்துஸ்ஸர் என்ற பேரைக் கேட்டாலே வாந்தி எடுத்துவிடுவேன். சில நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறான் என்பதையும் என்னால் மறுக்க முடியாது. Dreams of a young girl புத்தகத்தைப் பார்த்து, வாசித்தபிறகுதான் ராபெ-க்ரியெவின் பிற புனைகதைகளைப் படித்தேன் - அது எனக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும், இது எனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை தம்பீ. தமிழிலும் ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் நான் படித்த புத்தகங்களை நானாகப் படித்தேனா இல்லை படிக்கச் செய்யப்பட்டேனா என்பதும் ஒரு கேள்விக்குறியே. இத்தனை புத்தகங்களின் பெயர்களையும் ஆசிரியர்களையும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் என்ன பயன் அதனால்? அத்தனையையும் படித்துவிட்டேனே, அதற்குமேல் என்ன உபயோகம் அதனால்? குறிப்பாக, போர்ஹேஸின் Labyrinths தொகுதியைப் படித்ததுதான் அதீத நகைமுரண். மேற்கொண்டு நான் விளக்காமலே உனக்குப் புரியும்".

ஆம்லெட்டுகளையும் டீயையும் சிகரெட்டுகளையும் சலிக்குமளவு தீர்த்திருந்ததால், கிளம்பலாமா என்ற ரீதியில் அவரைப் பார்த்தேன். நூலகத்துக்கு வந்தால், நிலைமையை நேரடியாக விளக்குவதாகக் கூறினார். எனக்கும் இன்னும் சிலமணி நேரங்கள் செலவழிக்க இருந்ததால், கிளம்பினேன். பொருட்காட்சியின் ராட்டினம் காம்பவுண்டுச் சுவர்களுக்கு மேலாகச் சீரான வேகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது. சின்னதாகத் தூறல் விழுந்திருக்க, வெப்ப மணம் காற்றில் ததும்பிக்கொண்டிருந்தது. வழியெங்கும் புன்னகைகள், பணத்தை நாளைக்குக் குடுத்திர்ரேன் தம்பிகள், சுக்கா வறுவல், மல்லிகைப்பூ மணங்கள்.

"தோழர். நமக்குப் புத்தகம் படிக்கச் சொல்லிக்கொடுத்ததே நீங்கள்தான். இப்போது உங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை. ஒருவேளை அவன் படித்து நீங்கள் படித்த புத்தகங்களையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்கிறேனோ? ஏனென்றால் சமீபகாலமாக நானும் அதிகமாகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பெரும்பாலும் ரமணிசந்திரன் நாவல்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஞானபீடம் பெறத் தகுதியுள்ள ஒரே எழுத்தாளர். அகிலனைவிட எவ்வளவோ மேல்" என்றேன்.

தோழர் புன்னகைத்தார். "ரமணிசந்திரன் ஒரு தலையாய இலக்கிய சக்தி என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன் தம்பி. ஆனாலும், ஞானபீட விருது மிகவும் குறைச்சல். அதற்கு மேலும் அங்கீகாரம் வேண்டும்" என்றார். அதற்குள் நூலகம் வந்துவிட்டிருந்தது. நூலகர்க்கிழடு வழக்கம்போல பெயர்களையும் எண்களையும் உழுதுகொண்டிருந்தது. "இருந்தாலும், தம்பீ, அவன் படித்து நான் படித்து நீங்கள் படிப்பது என்பதெல்லாம் சும்மா. ஏதாவது கதைக்கு வேண்டுமானால் உபயோகமாயிருக்கலாம். வேண்டுமானால், நீங்கள்தான் அவன் என்று நான் நினைத்துக்கொள்ளலாம். அது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்."

நான் ஒன்றும் பேசாமல் நடந்தேன். ஒரு அறைக்குள் கண்களை மூடிக்கொண்டு நுழைந்தார் தோழர். அவ்வாறே சுற்றிச்சுற்றி நடந்தவாறு ஒரு அலமாரி முன் நின்றார். நீட்டிய அவரது கை பச்சைநிறத்தில் பைண்டு செய்யப்பட்ட புத்தகமொன்றை உருவியெடுத்தது. "அதுதான் தெரியுமே, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி" என்றார். புத்தகத்தை வாங்கிப் பிரித்தேன். சில பேர் மட்டுமே எடுத்திருந்தார்கள். கடைசியாகப் படித்த ஆளின் எண், 4815/92. நான் நம்பிக்கையற்றுப்போய் அவரை மறுபடிப் பார்த்தேன். "என்ன புத்தகம் அது" என்றவாறு கண்களைத் திறந்தார். The world as will and idea. சரி தான் என்றவாறு, திரும்பவும் கண்களை மூடிக்கொண்டு, மரப்படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினார், வேறு தளத்துக்குப் போகலாம் என்றவாறு. மௌனமாக அவரை நான் தொடர, சிலர் வினோதமாகப் பார்த்தவாறு கடந்துசென்றனர். வெவ்வேறு தளங்களில், கண்ணை மூடியவாறே மேலும் இரண்டு புத்தகங்களை உருவினார். அதிகப்படியாக மூன்று புத்தகங்கள்தான் எடுக்கமுடியும் ஒரு நாளில். பிற இரண்டையும் கடைசியாகப் படித்திருந்தவன் 4185/92 தான். வேறென்ன இருக்கப்போகிறது. ஆடு போல அவரைத் தொடர்ந்தேன். கடைசியாக நான் படித்த ஐந்தாறு புத்தகங்களை என்னால் நினைவுகூர முடிந்தது. அவரை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அப் புத்தகங்களைத் தேடினேன். ஐந்து புத்தகங்களைக் கண்டுபிடிக்கமுடிந்தது. ஐந்து புத்தகங்களையும் எனக்குமுன்பு வேறுவேறு வாசகர்கள் படித்திருந்தனர். என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. தோழரின் எண்ணோ அவனின் எண்ணோ எந்தப் புத்தகத்திலும் இல்லை. ஒருவேளை அவர் இதையும் பலமாதங்கள் முன்பு படித்திருக்கலாம், அந்த ஆவணச்சீட்டு மாற்றப்பட்டிருக்கலாம். இருந்தாலும், இப்போதைக்கு ஆசுவாசமே.

நூலகத்துக்கு வெளியே வந்தேன். சாயங்காலம் ஆகியிருந்தது. அகலக் கொம்புகளுடன் எருமைகள் தெருவில் அசைபோட்டவாறு நுழையத்தொடங்கின. தோழர் - வேறென்ன, சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார், உலகத்தில் வேறு எதையுமே செய்யமுடியாதது போல. "இதற்கு என்ன முடிவு தோழர்" என்றேன். "எனக்குப் பிரச்னை இல்லை, எனக்கு இதுமாதிரி ஆசாமி யாரும் கிடையாது" என்றேன்.

"என் விஷயத்தில், அது ஒரு பெண்ணாக இருக்குமென்று நினைக்கிறேன்." என்றார்.

"இது எப்போது முடியுமென்று நினைக்கிறீர்கள்? அல்லது முடியாதா?"

அவர் என்னைநோக்கித் திரும்பினார். அந்தப் பார்வையிலிருந்த ஏளனத்தை, பரிகாசத்தை, விவரிக்கமுடியாத அந்த உணர்வுறுத்தலை அதற்கு முன்பும் பின்பும் நான் கண்டதில்லை. அதன்பிறகு நாங்கள் எப்போதும் சந்தித்துக்கொள்ளவுமில்லை.

3 comments:

Mookku Sundar said...

சாமி..காப்பாதுங்க...மண்டை காயுது...

பாம்பு, கதை நடை அட்டகாசமா இருக்கு..

ஆனா, முடிவு, முடியை பிடுங்குது...

சன்னாசி said...

மூக்கன்; நன்றி. இந்தக் கதையை 'பஞ்ச்'சுடன் முடிக்கவேண்டுமென்றால் ஏகப்பட்ட சாத்தியங்கள் உள்ளன. அவற்றையும் கதை மத்தியிலேயே அவர்களிருவரும் விவாதித்துவிடுகிறார்கள் - கதைசொல்லியே '4815/92' வாக இருந்துவிடுவது, அல்லது கதைசொல்லியைச் சிக்கவைக்க தோழர் செய்யும் சதி என்று போகலாம். அல்லது '4815/92' கூடத் தோழர் தான், 'தான் படித்த புத்தகங்களை வேறொருவனாகப் படித்துப் பார்க்க' முயன்று அவர் இப்படிச் செய்துகொண்டிருக்கலாம் (என்னை மிகவும் வசீகரித்த சாத்தியப்பாடு இது, கிட்டத்தட்ட கதையை அப்படி முடிக்க நினைத்தேன், பின்பு மாற்றிவிட்டேன்) என்றும் கொள்ளலாம்.

பொதுவாக, 'கடைசிவரி பஞ்ச்'சின்மேல் எனக்குள்ள வெறுப்பு சொல்லி மாளாது. அந்த யுக்தியை அற்புதமாகக் கையாளும் கதைகளும் உள்ளன, அவை எனக்குப் பிடித்தவையே. ஆனால், சும்மா ஒரு சம்பவத்தை எடுத்து முடிவைமட்டும் re-engineer செய்யும் இன்ஸ்டண்ட் காப்பி கதைகள்தான் பொதுவாக ஜாஸ்தி. அப்படி எழுதுவது அவர்கள் விருப்பம், அதை நான் குறைசொல்லமாட்டேன்; என்றாலும்....என்ன சொல்வது? அவை எதுவும் அல்ல. அவ்வளவுதான்.

இதை இன்னும் விரித்து எழுதலாம்; ஆனால், உங்கள் 'உயர்ந்தது எப்படி' பதிவின் எதிர்வினையில் காசி குறிப்பிட்டதுபோல, 90-95 சதவீதத்துடன் 'போங்கப்பா சாமி' என்று சோம்பலடையும் அதே மனப்பான்மைதான் தடுக்கிறது!!

Jayaprakash Sampath said...

ரெண்டு பேரும் ஒருத்தரே என்கிற மாதிரி எதிர்பார்த்தேன்.சும்மா சொல்லப்படாது... கதை அப்படியே வழுக்கிகிட்டுப் போவுது...