என் நண்பனுக்கு ஒரு புத்தகத்தை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்தேன், இன்றைக்கு அவனும் ஒரு புத்தகம் கொடுத்தான். ட்ரெக்கிங், பறவைக் கவனிப்பு என்று அவன் ஒரு இயற்கையாளன் என்பதால், ஏன் நான் திறந்தவெளியை விரும்புகிறேன் என்று இது உணர்த்தும் என்று, தனக்குப் பிடித்த கவிதாயினியான மேரி ஆலிவரின் ஒரு கவிதைத்தொகுப்பைக் கொடுத்தான். இதற்குமுன்பு நான் அப்பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்பதால், அனைத்துக் கவிதைத்தொகுப்புகளிலும் செய்வதையே இதிலும் செய்தேன் - சின்ன வயசில் புத்தக கிரிக்கெட் விளையாடுவதுபோலப் பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்து, even pageல் உள்ள கவிதையைப் படிப்பது. இப்படி இன்றைய புத்தகத்தில் சிக்கிய கவிதை The Esquimos Have No Word for "War". சரி, நம்மால் முடிந்ததென்று அதை மொழிபெயர்க்கிறேன். காப்பிரைட் என்று யாரேனும் குதறிவிடாமலிருந்தால் சரி.
-------------------------------------------------------------------------------------
எஸ்கிமோக்களிடம் "போர்" என்ற வார்த்தை கிடையாது
-மேரி ஆலிவர்
அவர்களுக்கு அதை விளக்கமுயலும்போதெல்லாம்
ஒருவருக்கு மிஞ்சுவது அசட்டுத்தனமும் அசிங்கமுமே.
ஆதிகாலப் பனிப்பொழிவுகளாலான புற்சமவெளிகளில் அமர்ந்திருக்கின்றன
வெள்ளைக் கிண்ணங்கள் போலான அவர்களது வீடுகள்,
இளக்கத்தையும் அல்லது பகலிரவுகளின்
துரித மாற்றங்களையும் தாண்டி.
அடக்கத்துடன் கேட்டபடி விலகிச்செல்கிறார்கள்
ஈட்டிகளுடன் பனிவாகனங்களுடன் குரைக்கும் நாய்களுடன்
உணவை வேட்டையாட.
கழிக்கவேண்டிய மணித்துளிகள் அதிகமிருக்கின்றன என்றும்
வேட்டைக்காரனின் அதிர்ஷ்டம் காலதாமதமானது என்றும்
தெரிந்த பெண்கள் காத்திருக்கின்றனர்,
தோல்களைச் சுவைத்தவாறோ பாடல்களைப் பாடியவாறோ.
பிறகு, எரியும் தீயினருகில், கெட்டிலில் கொதிக்கும் எலும்புகளினருகில்
என்னை, தூரத்து உறவினரை, வெளுத்த சகோதரனை வரவேற்கின்றனர்
சிரமமிகுந்த நிலப்பரப்பின் பசித்த காலங்களில் அவர்களிடமிருக்கும்
உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு.
தெற்கத்திய அரசுகளை, பீரங்கிகளை, ராணுவங்களை,
மாறும் கூட்டணிகளை, விமானங்களை, சக்தியைப் பற்றியெல்லாம்
நான் பேசும்போது
எலும்புகளைச் சுவைத்தவாறு, ஒருவரையொருவர் பார்த்துப்
புன்னகைத்துக்கொள்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------
(கெட்டில் - kettle, இளக்கம் - thaw)
Thursday, December 23, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Atanarjuat [The Fast Runner] (2001) இனைப் பாருங்கள். எக்ஸிமோவரிடமும் 'போர்' உண்டு என்று சுட்டப்படுகின்றது.
படத்தைப் பார்த்ததில்லை, பார்க்கிறேன் பெயரிலி. உண்மையில் வேட்டை என்பதே ஒருவிதமான small-scale போர் தானே! அது இந்தக் கவிதைக்குள்ளேயே உள்ளது. கொல்வது என்ற கருத்து அனைவருக்குள்ளும் இருக்குமென்பதில் வேற்றுக் கருத்தில்லை எனினும், அதை எந்தளவு பரிமாணத்தில் யோசிக்கிறோம், எப்படி அதை நியாயப்படுத்துகிறோம் என்பதைப்பொறுத்தே நமது கொலைக்குணம் நிச்சயிக்கப்படுகிறதென்று நினைக்கிறேன். வாழ்க்கையில் oxymoron களுக்குக் குறைச்சலா என்ன!
சரிதான்... :-)
தன் சோற்றுக்காக செய்தால் வேட்டை. அடுத்தவன் சோற்றையோ, உடைமையையோ தட்டிப் பறிப்பதற்காக செய்தால் அது போர். எஸ்கிமோக்களிடம் அந்தக் கலாசாரம் பரவாவது வரை சந்தோஷம் தான்
Post a Comment