Wednesday, December 22, 2004

மகாபாரதம்



பீட்டர் ப்ரூக்கின் 'மகாபாரதம்' திரைப்பட-நாடகத்தை நேற்றும் அதற்கு முந்தைய நாளுமாக மொத்தம் ஆறரை-ஏழு மணி நேரத்தில் பார்த்தேன். மூன்று பாகங்களான மகாபாரதத்தையும், பின்பு வழக்கம்போல நடிகர்கள், இயக்குனர், திரைக்கதாசிரியரின் பேட்டிகளையும். முதலில் ஃப்ரெஞ்ச்சிலும் பின்பு ஆங்கிலத்திலும் மேடை வடிவத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த நீண்ட நாடகத்தைப் பின்பு திரைப்பட வடிவமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். திரைப்பட-நாடக வடிவம் என்பது பொருத்தமாக இருக்கும்.

திரௌபதி வேடத்தில் நடித்த மல்லிகா சாராபாயைத் தவிர நடிகர்கள் அனைவரும் பிறநாட்டவர் என்பது முதலிலேயே கேள்விப்பட்டதுதானென்றாலும், சில குறிப்பிட்ட நடிகர்களைப் பார்த்து விசித்திரமாக உணர்ந்தன் காரணம் பட்டும் படாமலும் எனக்கே தெரிகிறது. குறிப்பாக, வாய்மொழிக் கதைகளில் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுவிட்ட (அல்லது நாமாக உருவகித்துக்கொண்ட) நெடிய, உறுதியான ஆகிருதி கொண்ட, நீண்டு பறக்கும் வெண்தாடியுடைய, சாந்தமான கண்களையுடைய பீஷ்மரின் பாத்திரத்தைப் படத்தில் செய்திருப்பது ஒரு ஒல்லியான, பஞ்சடைந்த கண்களை, அரைகுறைத் தாடியைக் கொண்ட, கிட்டத்தட்ட ஷெர்வாணி போல ஒரு உடையணிந்த ஒரு ஆஃப்ரிக்க நடிகர்! துரோணர் வேஷத்தில் ஒரு ஜப்பானியர், திருதராஷ்டிரன் வேஷத்தில் ஒரு போலந்து நாட்டவர், அர்ஜுனனாக ஒரு இத்தாலியர், துரியோதனனாக ஒரு ஃபிரான்ஸ் நாட்டவர், தர்மனாக ஒரு ஜெர்மானியர், பீமனாக ஒரு செனெகல் நாட்டவர், கர்ணனாக ஒரு கரீபியர் (ட்ரினிடாட்), குந்தியாக ஒரு கறுப்பினப் பெண்மணி, காந்தாரியாக ஒரு இந்தோனேசிய/தாய்லாந்துப் பெண்மணி (கடைசி இருவருக்கும் தகவல்கள் IMDB யில் இல்லை) என்று, நிஜமாகவே ஒரு சர்வதேச நடிகர் கூட்டம். கிருஷ்ணர் வேஷம், நமது கிருஷ்ணர் வேஷங்களுக்கு நேரெதிர். வழுக்கை விழும் தலையுடனும், ஒட்டிய கன்னங்களுடனும் வெள்ளை நிறத்தில் ஒரு கிருஷ்ணர்.

பல தொகுதிகளைக் கொண்ட பெரிய எழுத்து மகாபாரதம் படிக்க நினைத்தது கடைசிவரை கனவாகவே போய்விட, சிறுவயதில் படிக்கமுடிந்தது ராஜகோபாலாச்சாரியின் மகாபாரதம் மட்டுமே. நமது பார்வைகளும் அந்நியப் பார்வைகளும் வேறாக இருப்பினும், விஷயகனத்தைப் புதிய முறையில் சொல்லியிருக்கின்றதா, அல்லது மேற்கத்தியப் பார்வையாளர்களுக்கான ஒரு முதற்பிரதியாகச் செயல்பட முயன்றிருக்கிறதா என்று பார்க்கத்தான் ஆர்வம் இருந்தது. மேலும், நாடக வடிவங்களைப் பார்க்கும் வாய்ப்பு வாழ்க்கையில் சிலமுறையே வாய்த்திருப்பதால், சரி அதற்கு நெருங்கிய ஒரு வடிவத்தைப் பார்ப்போம் என்ற ஆர்வமும் தான்.

மேற்கத்தியப் பார்வையாளனுக்கான ஒரு முதற்பிரதி (rough draft) என்ற ரீதியிலேயே இது முழுதும் இயங்குவதாக எனக்குப் பட்டது. பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதத்தை நாம் இதில் எதிர்பார்க்கமுடியாது என்பதால், ஐந்தரை மணி நேரத்துக்குள் அத்தனை கதாபாத்திரங்களையும் அடக்கவேண்டியதைத் திறமையுடன் செய்திருக்கிறதா என்றால் - ஆமாம் என்றே கூறவேண்டும். விதுரன் பாத்திரம் தட்டுப்படவே இல்லை. மேலும், திரௌபதியை பாண்டவர்கள் திருமணம் செய்தபிறகு பீமன் இடும்பியைச் சந்தித்து கடோத்கஜனைப் பெறுவதாகக் கூறப்பட்டுள்ள காலப்பிழை (அல்லது நான் சொல்வது தவறா) போன்ற சிலவற்றைத் தவிர்த்துவிட்டால், முக்கியமான அனைத்துப் பாத்திரங்களும் உள்ளன.

என்னதான் இருந்தாலும், திரௌபதி பாத்திரத்தில் மல்லிகா சாராபாயிடமிருக்கும் உயிர்ப்பு பிறரிடம் இல்லை என்றே கூறவேண்டும். துச்சாதனன் அவளை அழைத்துவர அவளது இருப்பிடத்தில் நுழையும்போது "தோற்க யுதிஷ்டிரனிடம் வேறு ஏதுமே இல்லையா" என்று கேட்கும் குரலின் கம்பீர-வெறுமை என்ன, இறுதியில் வீழ்ந்து கிடக்கும் துச்சாதனனின் ரத்தத்தில் ஒரு சொடுக்கில் தன் தலைமுடியை வீசி நனைக்கும் கோர-நளினம் என்ன. நமது பாத்திரங்களில் நாம் எதிர்பார்க்கும் emotional hyperboles பெரும்பாலானவர்களில் இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிவெளிப்பாடுகளாக இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். நமது வெளிப்பாடுகளில், 'நிகழ்த்தல்' என்ற செயல்பாட்டைப்பற்றிய பிரக்ஞை உள்ளுக்குள்ளேயே - அறிந்தோ அறியாமலோ கட்டுப்படுத்தப்படுவிடுவதால், உள் அமைதி-வெளிப்புற ஆரவாரம் என்று இருக்கையில், மேற்கத்திய 'நிகழ்த்தல்' என்பதன் வெளிப்பாடே (output) ஆரவாரமற்ற முறையிலான உள் அமைதியாக இருந்துபோவதில், வண்ணமயமான சம்பவக்கோர்வைகளை எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்குப் பிற நடிகர்களைவிட, unmuffled மல்லிகா சாராபாயே பிடித்துப்போகிறது. இது ஒன்றும் வெறுமனேயான நம்மூர்ப் பிரேமை இல்லை என்றும் தோன்றுகிறது. பொதுவாக, மிகவும் அற்புதம் என்றெல்லாம் தோன்றவில்லை பார்த்து முடித்ததும். ஏணியில் ஏறி யுதிஷ்டிரன் சொர்க்கத்துக்கு (முதலில் சொர்க்கம் நரகம் என்பது கிறிஸ்துவ மதத்துக்குப் பிரத்யேகமானது என்றல்லவா நினைத்திருந்தேன்? இந்திய சிந்தனை மரபிலும் அது உள்ளதா என்ன?)போவதுபோன்ற காட்சிகளையெல்லாம் இன்னும் உருப்படியாக எடுத்திருக்கலாம். மற்றபடி, one thumb up. அவ்வளவு தான்.

சற்றுநாட்களுக்குமுன் ஒரு பதிவில், சிறிது வருத்தத்துடனேயே சில பின்னூட்டங்களை இட்டேன். அதேபோன்ற வருத்தம்தான் இப்போதும் உள்ளது. மகாபாரதம், ராமாயணம் மற்றும் நமது புராணக்கதைகள், நல்லதங்காள் கதை போன்ற நாட்டார் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றை முன்முடிவுகளின்றி சிறுவனாக இருக்கும்போது படித்துத் தீர்த்ததில் கிடைத்த மகிழ்ச்சியும் குதூகலமும் இன்றி, இப்போது வளர்ந்தபின் அதை வேறு கற்பிதங்களைப் போர்த்திப் பார்க்கும்போது (அல்லது பிறர் போர்த்தும்போது) இங்கேயா அங்கேயா என்று எழும் தடுமாற்றமே வாசக அனுபவத்தின் மிகப்பெரும் சாபக்கேடு. புராணங்களின் விஸ்தீரணத்தை அவை கபளீகரம் செய்த கலாச்சாரங்கள், பிற படைப்புக்களைக்கொண்டு அளப்பது, நிர்ணயிப்பது, குதர்க்க அர்த்தங்கள் கற்பிப்பது போன்றவை, "ignorance is bliss" என்ற முடிவைநோக்கியே தள்ளுகின்றன. விற்பன்னர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆராய்ந்துகொண்டிருக்கும் விஷயங்களுக்கான விடைகளை இரண்டு டிவிடி குறுந்தகடுகள் பார்த்துவிட்டதால் நான் கண்டுபிடித்து ஞானோதயமடைந்துவிடமுடியுமென்ற நம்பிக்கை ஏதையும் வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலும், ராஜகோபாலாச்சாரியின் மகாபாரதம் படித்தபோது நான் பாண்டவனாயிருந்தேன், கௌரவனாயிருந்தேன், கர்ணனாயிருந்தேன், பீமனுக்குக் குறுக்காகத் தன் வாலைப் போட்டிருந்த அனுமனாயிருந்தேன், கர்ணனாயிருந்தேன், கிருஷ்ணனாயிருந்தேன், சல்லியனாயிருந்து கர்ணனுக்குத் தேரோட்டினேன், அபிமன்யுவாக இருந்து பத்ம வியூகத்தைப் பிளந்தேன், ஆனந்தத்தில் கழிந்த அந்த நாட்களைத் தாண்டி, பிற 'புத்திசாலிகள்' போல என் மூளையின் பரிமாணங்கள் கண்டபடி பெருக்கமடைந்தபின் இப்போது இனம்புரியாத ஒரு குரோதத்துடன் ஹைனெக்கன் பாட்டில்களைக் காலிசெய்தவாறு சோஃபாவில் நெளிந்தவாறு மகாபாரதத்தைக் காந்தாரி போன்றவொரு primordial archetypeன் கர்ப்பத்திலிருந்து வீழ்ந்த மர்ம அண்டமாகக் கருதி, அதன் மீதுள்ள இனம்புரியாத வெறுப்புடன் அதை நொறுக்கித் துகள் துகளாக்கிக் கரைத்துக் குடித்துவிட ஒரு sledge hammer ஐத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கீழ்ப்பிறவியாகவே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் படத்தில் ஏதோவொரு தவற்றைக் கண்டுபிடிக்கும்போதும் 'இல்லை'...என்று சுதாரிப்பது என் எந்தப் பக்கம்? நானாகக் கண்டுபிடித்துப் படித்தவைகளை, என் பிரத்யேக வாசக அனுபவங்களைச் சமுதாயங்களின் கற்பிதங்கள் சற்றும் கருணையின்றிக் கொலைசெய்தன என்று நான் கூறுவேனாயின், அதில் என் தவறும் இருக்கலாம் - ஆனால் எதில் உள்ளது அந்தத் தவறு?

5 comments:

Anonymous said...

"ராமானந்த சாகரின் மகாபாரதத்தை நாம் இதில் எதிர்பார்க்கமுடியாது "

It is B.R.Chopra. Have you read Iravati Karve's Yugandha.

Thanks
GS

சன்னாசி said...

GS, நன்றி, திருத்திவிட்டேன். ஐராவதி கார்வேயின் யுகாந்தா படித்ததில்லை. தமிழிலேயே அதன் மொழிபெயர்ப்பு (சாகித்ய அகாதெமி?) இருக்கிறது என்று நினைக்கிறேன். மகாபாரதம் தொடர்பாகச் சமீபத்தில் தமிழில் வந்தவை என்றால் எஸ்.ராமகிருஷ்ணனின் 'உபபாண்டவம்' ஒன்று ('சமீபத்தில்' என்பதைச் 'சிலவருடங்களுக்கு முன்பு' என்று கொண்டால்) - அதைப் படித்திருக்கிறேன்.

Arun Vaidyanathan said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
மீண்டும் சில விஷயங்களைப் படிக்கணும்.
நிறைய எழுதுங்க!

- அன்புடன்,அருண் வைத்யநாதன்

Anonymous said...

=========
மேலும், திரௌபதியை பாண்டவர்கள் திருமணம் செய்தபிறகு பீமன் இடும்பியைச் சந்தித்து கடோத்கஜனைப் பெறுவதாகக் கூறப்பட்டுள்ள காலப்பிழை (அல்லது நான் சொல்வது தவறா) போன்ற சிலவற்றைத் தவிர்த்துவிட்டால்,
=========
பீமன் - ஹிடிம்பி சந்திப்பு, கடோத்கஜன் பிறப்பு ஆகியவை அரக்கு மாளிகை நிகழ்வை உடனடியாக அடுத்து நிகழ்பவை. அதாவது பாண்டவர்கள் ஏகசக்ரபுரத்துக்குக் போவதற்கும் முன்னால். ஆகவே காட்சி அப்படி அமைக்கப்பட்டிருந்தால் அது காலப் பிழையே. (கடோத்கஜன் - கட உத் கஜன் - என்றால் முடி இல்லாத மண்டையன். பிறக்கும் போதே சொட்டைத் தலையன்.) ஏகசக்ரபுரத்தில் சில மாதங்கள் கழிந்து, பகாசுர வதம் முடிந்த பிறகல்லவா திரெளபதி திருமணம். ஆகவே காட்சி அப்படி அமைக்கப்பட்டிருந்தால் அது காலப் பிழையே.

--ஹரி கிருஷ்ணன்.

சன்னாசி said...

வேறெதையோ Schuler Booksல் தேடிக்கொண்டிருந்தபோது இந்த டிவிடி தட்டுப்பட்டு, வாங்கினேன். Netflix போன்றவற்றிலும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு எச்சரிக்கை - நான் வாங்கியது புத்தம்புது டிவிடி என்றாலும், படம் ஏகத்துக்கு pixelated ஆக இருந்தது.

ஹரி, கடோத்கஜன் என்றால் தலைமுடி அற்றவன் என்றால், இன்னொரு தப்பும் இருக்கிறது - இதில் கடோத்கஜனுக்குப் பிரம்மாண்டமான சடைமுடி!! அரக்கு மாளிகை பற்றிய காட்சிகள் ஏதும் இல்லை. சந்தர்ப்பம் வாய்ப்பின் படத்தைப் பார்க்க முயலவும்.

குறிப்பாக, படம் பார்த்து முடித்தபின், Lord of the rings trilogy போல மகாபாரதத்தைத் திரைப்பட வடிவமாக்கமுடியுமா என்றுதான் யோசிக்கத் தோன்றியது.