Friday, December 31, 2004

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Mark Harden

துயரில் இருப்பவர்களின் துயர் நீங்க, அனைவரும் நலத்துடன் இருக்க, உலகம் மகிழ்ச்சிபெற...

ஆந்தலூசிய நாய்



சரி, படம் பார்த்துப் பலநாளாயிற்றே என்று வீடியோக் கடையில் மேய்ந்துகொண்டிருந்தபோது Un Chien Andalou படத்தைப் பார்த்ததும் துள்ளி விழாத குறைதான். சில வருடங்களுக்கு முன்பு,இறுதி சில நிமிடங்களை மட்டுமே ஆமைவேக இணையத்தின் துணையுடன் ஒரு சாதாரணமான வீடியோ க்ளிப்பிங்கில் பார்த்ததுண்டு, மற்றப்படி அதன் மிகப் பிரபலமான முதல் காட்சி குறித்து எண்ணற்ற குறிப்புக்களையும் படித்ததுண்டு என்பதால், இம்முறை படம் பார்க்கும்போது அந்த முதல் காட்சி அதிரச்செய்யாது என்றே தோன்றியது. பதினைந்து சொச்ச நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்தப் படத்தின் முதல் காட்சி இப்படித் தொடங்குகிறது: இயக்குனர் லூயி புனுவெல், தொடர்ந்து புகைத்தவாறு ஒரு சவரக்கத்தியைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். சற்றுநேரம் தீட்டி முடித்தபின்பு தன் நகத்தை வெட்டி அதன் கூர்மையைச் சோதித்துக்கொள்கிறார். வலைக்கதவைத் திறந்து பால்கனிக்கு வருகிறார். அடர்ந்த வானத்தின் நடுவில் நிர்மல வெள்ளை வட்டமாக நிலவு. ஒல்லியாக நீண்ட சர்ப்பம் போன்ற ஒரு கறுத்த மேகம் வானத்தின் குறுக்காக நிலவைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒரு பெண்ணின் முகம் திரையில் வெகுநெருக்கக் காட்சியாகத் (tight close-up) தோன்றுகிறது. அவளது இடக்கண்ணை புனுவலின் இடக்கை விரல்கள் நன்றாக விரிக்கின்றன, அவரது வலக்கையிலிருக்கும் சவரக்கத்தி அவளது கண்ணின் மிக மத்தியை ஒரேயொரு கீற்றலில் அறுக்கிறது. படக்கென்று விழிக்குள்ளிருக்கும் சதைக்கோளங்கள் பொத்துக்கொண்டு வந்து தொங்குகின்றன. அடுத்துக் காண்பிக்கப்படும் வானத்தில் வெள்ளை நிலவைக் கறுப்பு மேகம் கத்தி போல அறுத்துக்கொண்டு செல்கிறது.

தாஜ்மஹாலுக்குள் முதலில் நுழைந்தபோது, இத்தனை புகைப்படங்களில் பார்த்ததுதானே, புதிதாக என்ன தோன்றிவிடப்போகிறது என்ற அசிரத்தையுடனேயே நுழைந்தேன். ஆனால், அதன் வாயிலுக்கருகில் நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்தபோதுதான் எனது சிறுமையும் எறும்புத்துவமும் புரிந்தது. அதேபோல்தான் இப்போதும் இருந்தது. 1929ல் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒரு பதினைந்துநிமிட அமெச்சூர் படம் கிட்டத்தட்ட 75 வருடங்கள் கழித்தும் ஒரு திரைப்பட ரசிகனை அதிர்ச்சியடையச் செய்கிறதென்றால் அது சாமானிய விஷயமல்ல. எஸ்.ராமகிருஷ்ணன், உலக சினிமா என்ற தொகுப்பு கொண்டுவருவதாகத் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தார். இந்தப் படம் குறித்தும் லூயி புனுவல் பற்றிய குறிப்புக்களும் அதில் நிச்சயம் இருக்குமென்பது என் நம்பிக்கை. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து முன்பு தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The eye of the serpent தவிர, குறிப்பிடத்தக்க வகையில் உலகத் திரைப்படங்களையும் தமிழ்த் திரைப்படங்களையும் குறித்த தொகுப்பு தமிழிலிலேயே வருவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பிற கலாச்சாரங்களின் திரைப்படங்களையும், அவர்கள் பார்வையிலான கலைவெளிப்பாடுகளையும் குறித்த எளிய அறிமுகங்களைப் பெறமுடிந்தாலே, ஆரம்பகட்ட உலகத் திரைப்பட ரசிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையிலான சரியான ஓர் இணைப்புப்பாலமாக அது இருக்கும்.

ஆந்தலூசிய நாய் என்று மொழிபெயர்க்கப்படக்கூடிய Un Chien Andalou எழுப்பிய கேள்விகள் கணக்கற்றவை. தொடக்கத்தில், சால்வடார் டாலி, லூயி புனுவல் இருவருக்கேற்பட்ட சில கனவுகளைக்கொண்டு இருவரும் விவாதித்து விவாதித்துச் செதுக்கிய சம்பவங்களின் காட்சிக்கோர்வைதான் இந்தக் குறும்படம். பாரிஸில் இது திரையிடப்பட்டபோது புனுவெல் திரைக்குப்பின் நின்றுகொண்டு ரிச்சர்ட் வாக்னரின் Tristan and Isolde இசைக்குறிப்பை ஆளியங்கி (manual) கிராமபோன் மூலம் பின்னணி இசைக்காகத் திரும்பத்திரும்ப இயக்கிக்கொண்டிருந்ததாகவும், படம் ஏகப்பட்ட எதிர்ப்புக்களைக் கிளப்பலாம் என்ற ஐயத்தில், தேவைப்பட்டால் கூட்டத்தின்மேல் எறியத் தன் கோட்டுப் பைகளிலும் கால்சராய்ப் பைகளிலும் பெரிய பெரிய கற்களைப் பொறுக்கி வைத்திருந்ததாகவும், திரையிடுதலுக்கு அப்போது பிரபலமடைந்துகொண்டிருந்த பிக்காஸோ, ழான் காக்டேயு, கார்ஸியா லோர்க்கா போன்றவர்கள் வந்திருந்ததாகவும் புனுவலின் மகன், பிந்தைய நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். பூர்ஷ்வாக்களைக் குமட்டவைக்கவும் அதிர்ச்சியடையச்செய்யவும் இந்தப் படத்தை எடுத்த புனுவலும் சால்வடார் டாலியும் பிற்காலங்களில் பிரபலமடைந்ததே பூர்ஷ்வாக்களின் ஆதரவாலேயே என்பது நிஜம் என்பதை நாம் அறிந்தாலும், புனுவலின் மகன் விவரிக்கும் சென்ட்ரல் பார்க்கில் சால்வடார் டாலியின் அமெரிக்க கெடில்லாக் கார்ப்பயணமும் அவரைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த பணந்தின்னிக் கழுகுகளின் (எழுத்துப்பிழையில்லை இது) செயல்பாடுகளும், பூர்ஷ்வா எதிர்ப்பைப் பூர்ஷ்வாத்துவம் எப்படிக் கரைத்துத் தன்னுள் சங்கமித்துக்கொள்கிறதென்பதை நிர்த்தாட்சண்யமாக விளக்குகிறது.

ஆந்தலூசிய நாய் குறித்த விளக்கங்களை அளிப்பதைவிட, நினைவிருக்கும் காட்சிகளை சரசரவென்று சொல்ல முயல்கிறேன், முன்பு சொன்னவற்றுடன் சேர்த்து – தீட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சவரக்கத்தி, பால்கனி, வெள்ளை நிலா, கறுப்பு மேகம், அறுக்கப்படும் கண், பிதுங்கி வழியும் கண், சைக்கிள் பயணி நடைபாதையில் விழுகிறான், பெண் மேலே அழைத்துச் செல்கிறாள், விரிக்கப்பட்டிருக்கும் கஷ்கம், அதில் வழியும் முடி, fade-out ல் ஒரு குற்றுச்செடி, நின்றுகொண்டு தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவன் கையிலிருக்கும் துளையுள்ளிருந்து கட்டெறும்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, கீழே சாலையில் ஒரு அறுபட்ட கை, மணிக்கட்டு எலும்புகளுடன் கிடக்கிறது, போலீஸ்காரர் ஒருவர் அதை ஒரு பெட்டியில் போட்டு சாலையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணிடம் அளித்துவிட்டுப் போகிறார், சாலை நடுவில் அவள் மயக்கத்துடன் நிற்கிறாள், மேலேயிருந்து அவனும் அந்தப் பெண்ணும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், சாலைப்பெண்ணை ஒரு கார் அரைத்து நசுக்கிவிட்டுப் போகிறது, காமம் பீறிட அவன், தன்னுடனிருக்கும் அந்தப் பெண்ணின்மீது பாய்கிறான், தப்பித்து ஓடும் அவள், கையிலகப்பட்டதை எடுத்துக்கொண்டு அவனைத் தாக்கத் தயாராக நிற்கிறாள். நின்று நடைபயின்று ஆலோசிக்கும் அவன் தடுமாறி விழுந்து, எழுகையில் தான் பற்றிக்கொண்ட இரண்டு கயிறுகளுடன் அவளைநோக்கி நகர முயல்கிறான், கயிற்றில் இரண்டு பாதிரிகளும் இரண்டு பியானோக்களும் பிணைக்கப்பட்டிருக்கின்றன, பியானோக்களின்மேல் இரண்டு கழுதைகளின் அழுகிய பிணங்கள் கிடக்கின்றன, அனைத்தையும் இழுத்துக்கொண்டு நெருங்கமுயல்கிறான் அவளை, முடியவில்லை, அடுத்துக் காய்ச்சலில் கிடக்கிறான், அவனைப் பார்க்க ஒருவன் வருகிறான்.....

இப்படியாகத் தொடர்பற்று நீளும் கனவுச்சிதறல்களில் ஏகப்பட்ட அர்த்தங்களை விமர்சகர்கள் கண்டுள்ளனர். கண்ணை அறுப்பது, ‘புதிய பார்வையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது, புதிய பார்வை வேண்டும்’ என்பதைக்குறிப்பதாகவும், கழுதை சாவாகவும், பியானோக்கள் வாழ்வாகவும், பாதிரிகள் மதமாகவும், கயிறுகள் சமுதாய ஒடுக்கங்களாகவும் இன்னபிறவாகவும் அர்த்தங்கள் கூறப்பட்டன எனினும், காட்சிகளின் அர்த்தங்களைவிடவும், கனவுச்சிதறல்களின் காட்சிக்கோர்வைகள் நமக்கு உணர்த்தமுயலும் அதிபயங்கரம்/அதிகருணையின் இயக்கத்தின் தாக்கமே முக்கியமானது. பிரஸ்தாபங்களையும் வறட்டு வேதாந்தங்களையும் அதிதெளிவெனக் கருதிக்கொள்ளும் தர்க்கத்தின் அதிகுருட்டுத்தன்மையையும் தாண்ட இலக்கியத்தில் நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடிய தாண்டுகோல்கள் இத் தாக்கங்களே. நமது தமிழில், இதுபோன்ற அதீதக் கணங்களைச் சினிமாவில் செத்தாலும் பார்க்கமுடியாது என்றாலும், எழுத்து மட்டில், நகுலனது எந்தக் கவிதையிலும் எழுத்திலும், கோணங்கியின் பிற்கால எழுத்துக்களில் மட்டுமே காணக்கிடைத்தது என்பது என் அபிப்ராயம்.

படக் காட்சிகளின் சுட்டி
படத்தின் காட்சிக்கோர்வை

அனைவருக்கும் அவரவர் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 29, 2004

ஜாபர் அலியின் 'இரக்கமுள்ள' பதிவு

வெங்கட்டின் பதிவிலிருந்து ஜாபரின் வலைப்பதிவுக்குப் போய், அங்கிருந்து அவரது சிவப்பெழுத்திலிருக்கும் முந்தைய பதிவுக்குப் போய், அதனையும், எதிர்வினைகளையும், எதிர்வினைகளுக்கு ஜாபர் அளித்த பதிலையும் படித்ததில் தலைசுற்றிப் போனது, இத்தனை சாவுகள் நடந்திருக்கும் நேரத்தில் இப்படியும் ஈவிரக்கமின்றிப் பேசும் ஆட்கள் இருக்கிறார்களா என்று.

அந்த டிசம்பர் 28 பதிவில், சிவப்பு எழுத்தில், கீழ்க்கண்டவாறு கூறுகிறார்....

//11:102 அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும், மிகக் கடினமானதாகவும் இருக்கும்
அல் குர்ஆன்: சூரா - ஹூத்.//

என்கிறார். இப்படிப்பட்ட கோரங்களைச் செய்ய மனமுள்ள கடவுள் யாராயிருந்தாலும் சரி - விஷ்ணுவோ சிவனோ அல்லாவோ கிறிஸ்துவோ புத்தரோ யாராயிருந்தாலும் பாராட்டுவதற்கு என்ன மயிரு இருக்கிறது? இறைநம்பிக்கை என்பது வழிநடத்த உதவுவது என்பதை விடுத்து, அதை பயமுறுத்தும் கருவியாக உபயோகிக்கும் இவரைப் போன்றவர்களையும், சாமியாரை உள்ளே போட்டதால்தான் கடல் கொந்தளித்தது எனும் முட்டாள்களையும் முதலில் கடலுக்குள் எறியவேண்டும்.

//சுய ஆராய்ச்சி. இப்படி ஒட்டு மொத்த மனித உயிர்களின் இழப்புக்கு காரணம் என்ன? சிந்தியுங்கள். பூமியின் கால்வாசி கடலோர அழிவு சாதாரணமாக வந்து விடவில்லை. அங்கே வாழ்ந்த, அங்கே வந்து போய் கொண்டிருந்த மக்களின் கெட்ட நடத்தயால்தான் ஏற்பட்டு இருக்கிறது. தாய்லாந்தின் கடலோர ரிசார்ட்டுகளை அன்னிய நாட்டவர் அதிகமாக நாடி வருவதின் உள் நோக்கம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். விபசாரத்தை தொழிலாகவே கொண்ட கூட்டத்திற்கும், அதற்கு உடந்தையாக இருக்கும் சமூக அமைப்புக்கும் நீங்கள் வணங்கும் கடவுளிடமிருந்து என்ன தண்டனையை எதிர்பார்க்கிறீர்கள்.//

என்கிறார் அதே பின்னூட்டத்தின் தன் பதிலில். அன்னிய நாட்டவர் என்கிறார். தமிழில் எழுதும் இவர், எந்த நாட்டிலிருந்துகொண்டு எழுதுகிறார்? குவைத் இந்தியாவின் ஒரு மாநிலமா என்ன? அவர் அன்னியர் இல்லையா? இல்லையென்றால் குவைத் தான் அவரது சொந்த நாடா? விபச்சாரிகளை அழிக்கக் கடல் கொந்தளித்தது என்றால் பம்பாய் காமத்திபுராவிலும் கல்கத்தா சோனா கஞ்சிலும் டெல்லி ஜிபி ரோடிலும் புகுந்திருக்கவேண்டும். வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் இப்படிச் சீரழிந்த வாழ்க்கை வாழும் அவர்களைக் கருணையுடன் பாராமல் மூன்றாந்தரக் குடிமக்கள் போலப் பார்க்கும் இவருக்கு அடுத்தவர்களை விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் பிறக்கும்போதே விபச்சாரம் செய்வதென்று முடிவெடுத்துக்கொண்டு பிறந்தார்களா என்ன? அப்படியென்றால், செத்த குழந்தைகள் கூட விபச்சாரம் செய்துகொண்டிருந்தார்களா? அதற்கும் அடுத்தாற்போல் விளக்கம் அளிக்கிறார்.

//உயிரிழந்த குழந்தைகள் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அநியாயக்காரர்களின் உலக உடைமைகள் இவ்வாறுதான் இறைவனால் கைப்பற்றப்படும். இன்னும் பிள்ளைகள் மட்டுமா? அவன் அடுத்தவரை ஏய்த்து சேர்த்த செல்வம், எவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன வந்தது எனக்கு கட்ட வேண்டிய வட்டியை கட்டு என்று மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைக்கும் கோர முகம் கொண்டவர்களின் அனைத்து உடைமைகளும்தான்.//

//ஒரு நம்பிக்கை கொண்டவனின் பார்வையில்...

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்;//

கடவுளே! எங்கே கொண்டுபோய் வைப்பது இவரை? இந்துமதம் கூட உலகமே மாயை என்கிறது. அதற்காக, குடும்பத்தினரும் மாயை தான் என்று அவர்களைக் கடலுக்குள் தள்ளிவிடவா முடியும்? ஆசையே துன்பத்துக்கு அடிப்படை என்றது புத்தமதம். ஜப்பானில் அனைவரும் தங்களது செல்வங்களையும் குழந்தைகளையும் கடலுக்குள்ளா வீசிவிட்டார்கள்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்றார் ஏசு. இந்தக் காலத்தில் கன்னத்தைக் காட்டினால் பழுக்கப் பழுக்க அறைந்துகொண்டேயிருப்பார்கள் என்பதல்லவா நிஜம்? Armageddon பற்றி பைபிளும் கல்கி அவதாரம், கலியுகம் பற்றி இந்து மதமும் பேசுகின்றன. அதற்காக, குஜராத் பூகம்பத்தில் செத்தவர்களும், சற்று வருடங்கள் முன்பு சூரத்தில் பிளேக் வந்து செத்தவர்கள் அனைவரும்கூட அநியாயம் செய்தவர்களா?

//இலங்கையின் சில முக்கிய இடங்களை குறிவைத்து ஹோமோசெக்ஸ் - ஓரிணபுணர்ச்சியாளர்கள் படையெடுப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்காக சிறுவர்கள் விற்கப்படுவதும், இந்த முறைதவறிய செயலுக்கு சமூகம் துணை போவதும் இறைதண்டனையை பெற்றுதர போதுமானதல்லவா? வேதனை வந்த பின் கூக்குரலிட்டு என்ன பயன்? முன்னரே எம் சமூகம் குறித்து, அதனுடைய நடத்தைகள் குறித்து கவலை படாததின் விளைவுகளைதான் ஒட்டு மொத்த சமூகமும் அனுபவித்து வருகிறது.//

என்கிறார் ஜாபர். ஓரினச்சேர்க்கையை சட்டரீதியாக அங்கீகாரப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் ஏன் கடல் புகவில்லை? ஒருவேளை அடுத்து ஏதாவது சுனாமி வருவது இவரின் ஞானதிருஷ்டியில் தெரிகிறதா?

//பொருளாதாரத்தை மட்டுமே நினைக்க தெரிந்த பணமுதலைகளும், கேடுகெட்ட அரசியல் வாதிகளும், அவர்களை ஜனநாயகம் என்ற பெயரால் தேர்ந்தெடுத்த மக்களும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டுமல்லவா?//

அடுத்து, ஜனநாயகம். ஜனநாயகம் என்ற பெயரால் தேர்ந்தெடுத்த மக்கள் என்று இவர் யாரைச் சொல்கிறார் என்று விவரம் தெரிந்தவர்கள் யாராவது எனக்குக் கொஞ்சம் விளக்குகிறீர்களா? என்னய்யா இது? சரி, அதை நான் விளக்கத் தேவையில்லை, மாயவரத்தான், //Rosavasanth..no tension...hez talking about Iraq..thatz all..!!// என்று கமெண்ட் எழுதியிருந்தார். அதை எதிர்கொள்ள ஜாபர் பின்வருமாறு தன் பதிலில் எழுதுகிறார்:

//இன்னும் ரோஸாவசந்தை சூடேற்றும் அதற்கு கீழுள்ள பின்னூட்டத்தைக் கவனியுங்கள். அவர் ஒன்றை அறிந்து கொள்ள தவறி விட்டார். ஈராக்குடைய முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறை நாம் நியாயப்படுத்துவோம் என்று எண்ணி கொண்டார் போலும். ஒருக்காலும் இல்லை. பக்கத்து நாட்டுடன் வலிய சண்டைக்குப் போய், அந்த நாட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களின் உடைமைகள் முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர்களாலேயே அபகரிக்கப்பட்டு, அங்கிருந்து ஏராளாமானவர்களை கைதிகளாக பிடித்துக் கொண்டு வந்து, தங்களுடைய சிறை கொட்டடிகளில் சொல்லொண்ணா சித்ரவதைகளுக்கு ஆட்படுத்தி கொலை செய்து, அந்த எழும்புகளையும் பத்திரப்படுத்தி வைத்தார்களே; இன்று வரை அந்த எழும்பு கூடுகளுடன் கூடிய சவப்பெட்டிகள் குவைத் வந்து கொண்டிருக்கிறதே! இது அநியாயம் இல்லையா? அந்த அநியாயத்துக்குதான் முந்தைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து அடாவடியில் ஈடுபட்ட மக்களுக்கும் இறைவனிடமிருந்து வரும் இறை வேதனை. விளங்கி கொள்ளுங்கள்.//

சதாம் உசேனைத்தான் குறிப்பிடுகிறார் என்று என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. முதலில் கேடுகெட்ட ஜனநாயகத்தைத் திட்டியாயிற்று, இப்போது சதாம் உசேனைக் கூறினால், அவரையும் திட்டியாயிற்று, ஆக, ஜனநாயகமும் வேண்டாம் சர்வாதிகாரமும் வேண்டாம். ஆக, இவர் சொல்வதுபடிப் பார்த்தால், ஜனநாயக நாட்டைக் கடல் கொந்தளிப்பு பார்த்துக்கொள்ளும். ஈராக் போன்ற சர்வாதிகார நாட்டை (அவர் சொற்படி) அமெரிக்கா கவனித்துக்கொள்ளும், இப்படியே போனால் அமெரிக்காவைப் பிறிதொருநாள் கடல் கவனித்துக்கொள்ளும், கடலைப் பிறிதொருநாள் வானம் விழுங்கும், ஆக மொத்தம், அனைத்தும் அழிந்துபோகும் என்ற nihilistic மனப்பான்மையுடன் துக்க வாழ்க்கை வாழவேண்டும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது, அது எந்த மதம் சொல்வதாக இருந்தாலும். சரி, குவைத் என்ன பாவம் செய்ததென்று சதாம் உசேன் அதன்மேல் படையெடுத்தாராம்?

ஜாபரது வார்த்தைகள் எந்தளவு உண்மையாக இருக்கிறதென்று பார்க்க, பின்னூட்டங்களுக்கான தனது பதில் பின்னூட்டத்தில் அவரே கூறுவதை நான் இங்கே இடுகிறேன்:

//பார்வைகள் பேதப்படுவதால் தான் நீங்களும் நானும் வெவ்வேறு மதங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்.இந்த தளத்தில் பின்னூட்டத்திற்கான கதவு திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது//

திறக்கப்பட்ட கதவு வழியாக இடப்பட்ட ஒரு கமெண்ட் உதைத்துத் தள்ளப்பட்டிருக்கிறது என்று கணேசன் சொல்கிறார். உண்மையா என்பதை ஜாபர் தான் சொல்லவேண்டும். தன் வார்த்தைகளுக்கே தன்னால் உண்மையாக இருக்கமுடியவில்லை, அதற்கு என்ன தண்டனை என்று அவரே நிர்ணயித்துக்கொள்ளட்டும்.

பெருமாளைக் கும்பிடு எனும் தினமலரும், ஜாபர் போன்றவர்களும் தானாக ஒருநாள் திருந்துவார்கள். ஆட்கள் செய்யாததை நாட்கள் செய்யும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

எங்கள் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கம் நிதி உதவி திரட்டிக்கொண்டிருக்கிறது. திரு.ஜாபர், அதுபோல உங்கள் பக்கத்திலும் யாராவது இருப்பார்கள், கண்ணைத் திறந்து பாருங்கள். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே தங்களால் முடிந்ததைச் செய்யும்போது, இந்தமாதிரி எதையாவது உளறிக்கொண்டிருக்காமல் உருப்படியாக ஏதாவது செய்ய முயலுங்கள். Current trendக்குத் தகுந்தவாறு ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை.

இதே விஷயம் தொடர்பாக - ஈழநாதன்

Tuesday, December 28, 2004

கரையும் கனவுகள்

சூனாமியின் கோரத்தாண்டவத்தைக்குறித்து எதுவும் எழுதக்கூடத் தோன்றவில்லை. காசி எழுதியதுபோல சிஎன்என்னில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பேட்டிகள், Phuketல் அவர்களது சங்கடங்கள் என்று தொடக்கத்தில் காட்டியது தாண்டிப் பிற பாதிப்புக்களையும் காண்பிக்கத்தொடங்கி, பின்பு, இதனால் அமெரிக்காவுக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று அலசி முடிக்கும்வரை எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகமாகிப்போவதை, பண உதவி செய்ததைத்தவிர, இயலாமையுடன் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க மட்டும்தான் முடிகிறது. இதனிடையில், கடல் பற்றிய மற்றொரு செய்தியையும் படிக்க நேர்ந்தது.

குற்றாலீஸ்வரன் என்னும் சிறுவனைப்பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். மாரத்தான் நீச்சலில் கைதேர்ந்த குற்றாலீஸ்வரன், ஆறு கடல்வழிகளை ஒரே வருடத்துக்குள் கடந்தபோது அவருக்கு வயது பன்னிரண்டு. நான் பள்ளியிறுதியில் இருந்தபோது, 1994ல் குற்றாலீஸ்வரன் அந்தச் சாதனையை நிகழ்த்தினார் - நம்மைவிட சின்னப் பையன், இந்த வயதில் என்ன சாகசம் செய்கிறான் பார் என்று அப்போது ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் நினைத்ததுண்டு. நாங்கள் திருட்டு தம் அடித்துக்கொண்டிருந்த நாட்களில், அந்த வயதில் குற்றாலீஸ்வரன் கின்னஸ் சாதனை செய்தது, அர்ஜூனா விருது பெற்றது எல்லாம் சாமானிய விஷயங்கள் அல்ல.

சமீபத்திய விகடனில் அவரது பேட்டியைப் படித்தேன், பின்பு இணையத்தில் தேடி, இந்து பத்திரிகை எடுத்த மின்னஞ்சல் பேட்டியையும், ரிடிஃப்பின் மற்றொரு பழைய செய்தியையும் படித்தேன். கனவுகளும் திறமையும் தவறான (அல்லது வாய்ப்பற்ற) இடங்களில் தோன்றிவிடுவதால் எப்படிச் சிரமப்பட்டுத் தேய்ந்துபோகின்றன என்பதை விகடன் பேட்டி துல்லியமாக விளக்குகிறது. ஹிந்து பேட்டியில் அவர் கூறுகிறார்: //In fact, when I was in Italy to compete, the Government offered to adopt me if I would swim for them. I declined. For, pride and satisfaction lie in representing one's own country. And let me tell you, the feeling is unparalleled.//
மேற்கொண்டு மாரத்தான் நீச்சலை அவர் தொடரவிரும்பாததற்குக் காரணம், விளையாட்டு குறித்த நமது சமுதாயத்தின் அசிரத்தை/போதாமைகள்தான் என்று அவர் கூறுவதிலிருந்து தோன்றுகிறது. அப்போதைய ஜெயலலிதா அரசாங்கம் அவருக்கு ஸ்பான்ஸர் செய்ததாக இணையத்தில் அறிகிறேன், அவரும் கூறியிருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நீச்சலுக்கும் ஸ்பான்ஸர்ஷிப் பெறுவதற்கு அவர்களது பெற்றோர் அலைந்த அலைச்சலைப் பார்க்கப் பொறுக்காமல், நீச்சலைவிடப் படிப்பில் கவனம் செலுத்துவது மேல் என்று அமெரிக்காவில் மேற்படிப்புப் படித்துக்கொண்டிருக்கிறார். "பின்பொருநாள் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க ஆர்வமுள்ளது" என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதே நீச்சற்பிரிவு அல்ல என்றாலும், ஒலிம்பிக்ஸில் சமீபத்தில் பட்டையைக் கிளப்பிய அமெரிக்க மைக்கேல் ஃபெல்ப்ஸூம், சென்ற, இந்த ஒலிம்பிக்ஸ்களின் நீச்சல் ஹீரோவான இயன் தார்ப்பும் ஒலிம்பிக்ஸில் பதக்கங்கள் பெற்றபோது அவர்களது வயதும் இருபதுக்குள்ளேயேதான் என்பதையும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் ஊக்கத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். அங்கேயெல்லாம் இல்லாமல், ஏன், சற்றுத் தள்ளி சீனாவில் பிறந்திருந்தால்கூட குற்றாலீஸ்வரனும், அவரைப்போன்ற எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடுமென்று நினைக்கிறேன். ஏழை நாடு, பணமில்லை என்றால், எத்தியோப்பியா, கானா போன்ற நாடுகளெல்லாம்? அதன் வீரர்கள்கூட மாரத்தான் ஓட்டத்தில் பதக்கங்கள் வாங்குவதில்லையா? கிரிக்கெட் கிரிக்கெட் என்கிறோம், ரஞ்சி ட்ராஃபி போன்ற நமது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டுக்களைக்கூட பெரியளவில் பணம் ஈட்டும் பந்தயங்களாக மாற்றமுடியவில்லை, பிறகு என்ன?

Saturday, December 25, 2004

இந்தியப் பெருங்கடல்


Pietr de Hooch

இந்தியப் பெருங்கடல்
-மாண்ட்ரீஸர்

எரிச்சலூட்டும் வெயில், சிலைகளின் தலையைப் பிளந்துகொண்டிருந்தது. சுபா மௌனமாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த கறுப்புநிற ப்ராதா கைப்பைக்குள் என் அறுக்கப்பட்ட தலை இருந்தது. தலை அறுபட்டுவிட்டதால், எப்போது அறுத்தாளென்ற சரியான நேரம் தெரியவில்லை, இருந்தாலும், மிஞ்சிப்போனால் இரண்டுமணி நேரத்துக்கு மேல் இருக்காதென்று நினைக்கிறேன். அந்தப் ப்ராதா பையை விற்றால் இந்த ஊரில் ஒரு தெருவை வாங்கிவிடலாமென்பது யாருக்கும் தெரிந்திராததால், பையும், பையுனிள்ளிருந்த என் தலையும் திருடப்படாமல் பத்திரமாகவே இருந்தது. இரண்டுமணி நேரம்தான் ஆகியிருக்குமென்று நான் நினைப்பதால், உயிர் போய்விடுவதற்குள் என்னைப்பற்றியும், இந்தத் துர்ப்பாக்கிய நிலையைப்பற்றியும் கூறிவிட முயல்கிறேன். பையினுள் கிட்டத்தட்ட முற்றுமுழுதான இருள். என் முகத்தில் அவளது தலைவியர்வை வாசமும் நறுமணமும் கலந்து வீசும் சீப்புக்களும் மடக்கப்பட்ட கத்தி ஒன்றும் சில ஊசிகளும் நெம்ப்யுட்டால் குப்பிகளும் நடக்கநடக்க மோதியவண்ணம் இருந்தன. என்னதான் ஊசியைச் சொருகியிருந்தாலும், கழுத்தை அறுக்கும்போதுகூடக் கத்தாமல் கதறாமல் இருந்திருக்கிறேனென்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

கடல் முழுவதையும் குடித்துவிடுவேன் என்ற உறுதியளிப்பின்பேரில்தான் என்னை இங்கே சுபா அழைத்துவந்தாள். நானும் என் பணியை ஒழுங்காகவே செய்துவந்திருக்கிறேன். அது ஏதும் சுலபமான வேலையும் அல்ல என்பார்கள். மூன்று கடல்கள் சேரும் இடத்திலிருந்து ஒரு கடலைமட்டும் உறிஞ்சி எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்னைப்போன்ற வெகுசிலரே உள்ளனர். மிகச் சுலபமானது என்று எனக்குத் தோன்றும் என் வேலை ஏன் பிறருக்கு இவ்வளவு கடினமாகப் படுகிறதென்று எனக்குத் தெரியவில்லை. இங்கே வந்து சேர்ந்த முதல் நாளில் சுபாவும் நானும் கடற்கரையைப் பார்த்தமாதிரியிருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அடுத்த நாள்முதலே கடலைக் குடிக்கவேண்டியிருந்ததால் சற்று நிதானமாகவே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மலாக்கா ஸ்ட்ரெயிட்டில் அப்படி என்ன கண்டுபிடித்தாளென்று தெரியவில்லை, அடுத்தநாளே என்னைத் தேடி வந்துவிட்டிருந்தாள். சம்பளம் ஒருபுறம் கவர்ச்சியாக இருந்தாலும், எனக்கு அவளைப் பிடித்திருந்தது என்பதும் நான் ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம். அவளது தொழிலைப்பற்றியும் அவள் என்னிடம் வந்துசேர்ந்த பாதையைப்பற்றியும் சில தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சற்றுநேர இணையத் தேடல்மூலம் அறிந்துகொண்டிருந்தேன். நேற்றுக் காரில் வந்துகொண்டிருந்தபோது ஜன்னலைத் திறந்துவைத்திருந்ததால் ஏற்பட்ட எரிச்சலில் இருந்தேன். சென்ற வழியெல்லாம் வெள்ளைநிறத்தில் ராட்சதக் காற்றாடிகள் ஆதிகாலத்தின் பொறுமையுடன் காற்றில் மெதுவாகச் சுழன்றுகொண்டிருக்க, திறந்த கார் ஜன்னல்கள் வழியாக வெக்கைக் காற்று முகத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது. அவளது சிகரெட் புகை வேறு காருக்குள் பிசாசு போலச் சுற்றியலைந்து பின் வெளியேறிக்கொண்டிருக்க, மிக வட்டமான துஷ்யந்தனின் தொந்தி பின்சீட்டில் தொடங்கி, யாருமற்ற முன்சீட்டை எட்டிச் சற்று முன்தள்ளி நெளித்துக்கொண்டிருந்தது. அவனது கனமான மூச்சிரைப்பின் ஹ்ம் ஹ்ம்முடன் சீட் முன்னும் பின்னுமாக நகர்ந்துகொண்டிருக்க, அவனது உருண்டு திரண்ட இடதுகையும் நாய்ச்சங்கிலி மாதிரியான வெள்ளி கைச்சங்கிலியும் ஜன்னலின் வெளியே தொங்கியவாறு காற்றில் சூத்திரங்களை எழுதிக்கொண்டிருந்தன. இப்படி என் கதையைக் காருக்குள் அலைந்துகொண்டிருந்த காற்றில் நான்பாட்டுக்கு மௌனமாக எழுதிக்கொண்டிருந்தேன். ஸ்டியரிங்கில் ஒரு கையை வைத்தவாறு, மற்றொரு கையுடன் என்னைநோக்கித் திரும்பினாள் சுபா. "வேலை சீக்கிரம் நடக்கவேண்டியது முக்கியம். நமது ஒத்திகை எனக்கு ஏகப்பட்ட திருப்தியளித்தது. அதேபோல நிகழ்வும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்" என்றாள். பறந்துகொண்டிருந்த அவளது தலைமுடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் டையைச் சற்றுத் தளர்த்திக்கொண்டேன். "என்னிடம் வருமுன்னர் என்னைப்பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்களென்றும், என்னை யாரேனும் இடித்து வேலைவாங்க முயல்கிறார்களென்று நினைத்தால் உறிஞ்சிய தண்ணீரைக் கூசாமல் வேறிடத்தில் துப்பிவிடுவேன் என்று கேள்விப்பட்டிருப்பீர்களென்றும் நம்புகிறேன்". என்றேன், உணர்ச்சியின்றி. One day, or A Nother என்று பாடல் காற்றில் கரைந்துகொண்டிருந்தது. சுபா திரும்பிக்கொண்டாள். துஷ்யந்தன் என் இடுப்பில் இடித்தான். "உன்னைக் கிறுக்கன் என்று சும்மாவா சொன்னார்கள்".

கடைசியில் துஷ்யந்தனைப் பலிகொடுக்க நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் ஒரு மாந்தோப்பு. இறங்கிக்கொண்டிருந்த சூரிய ஒளி தோப்பெங்கும் தங்கக்காசுகளை இறைத்திருந்தது. ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை ஆர்வத்துடனும் ஆர்வமற்றும் எங்கோ பார்த்தவாறும் கடலைக்காய்களைக் கொறித்தவாறும் தார்க்குச்சிகளைக் கக்கத்தில் சொருகிக்கொண்டும் மடக்கிக் கட்டிய வேட்டியின் சுருக்கங்களை நீவியவாறும் கேட்டவாறு தொலைவில் ஒரு மரத்தடியில் சிலர் அமர்ந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தவனது எங்களைநோக்கிய பார்வை, எனக்கும் சுபாவுக்குமிடையில் மடங்கித் தரையில் விழுந்து இழுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த துஷ்யந்தனின் மயங்கிய பருத்த உடலையும் ஒரு சொடுக்கலில் அளந்தது. பிற அனைவரும் எங்களுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தபடியால், அவனது பார்வை அவர்கள் அனைவரது பார்வைகளையும் விழுங்கியதாகப் பட்டது, ஒரு பார்வையைச் சந்திப்பதில் ஒரு கூட்டத்தைத் தவிர்க்கிறோம். அந்தப் பார்வை எங்களை விட்டு அகலாது, எங்களைத் தடுக்காது என்றும் நினைத்தேன். துஷ்யந்தனைப் படுக்கவைத்துப் பின் தன் மடக்குக் கத்தியை விரித்தாள் சுபா. துஷ்யந்தனது வயிற்றை மட்டும் தனியாக அறுத்து எடுத்தாள். சாக்குக்குள் போனது அந்த வயிறு. இந்தளவு நேர்த்தி மேல் அபிமானமுள்ள வாடிக்கையாளர்களை இதற்குமுன்பு நான் சந்தித்ததில்லை. மத்தியதரைக்கடல், காஸ்பியன் கடல், கருங்கடல் போன்றவை துஷ்யந்தன் குடித்த சில கடல்கள். என்னைப்பற்றி அவனுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், தான்தான் கடலைக் குடிக்கப்போகிறோமென்ற நம்பிக்கையில் எங்களுடன் வந்திருக்கமாட்டான். தோப்பின் உரிமையாளினி என்று ஏதோ பெயர் சொன்னார்கள், அம்ரபாலியோ என்னவோ. எனது கவனமெல்லாம் அறுக்கப்பட்ட துஷ்யந்தனின் தொந்தி மேல் இருந்தது. எத்தனை கடல்கள் அதனுள் இருக்கின்றன. மத்தியதரைக்கடலைக் குடித்தபின் அவன் என்றும் சிறுநீரே கழித்ததில்லை என்று நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. பார்த்துவிடுகிறேன்.

கார் மறுபடி சீறிக்கொண்டிருந்தது, கத்தி போல். பின்சீட்டில் எனக்கருகில் துஷ்யந்தனின் தொந்தி கிடந்தது. ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்ட சுபா, எனது அறுக்கப்பட்ட தலை சிறிதுகாலம் குடியிருக்கப்போகும் கறுப்புப் பையினுள்ளிருந்து ஒரு அகலமான உறிஞ்சுகுழலை உருவிப் பின்புறம் திரும்பிப் பாராமல் என்பக்கம் நீட்டினாள். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் மௌனமாக அமர்ந்திருந்தேன். துஷ்யந்தனின் தொப்புள், கார் மேடுபள்ளங்களில் ஏறிக் குலுங்கும்போதெல்லாம் உருகித் தளும்பியவாறு என்னை அழைத்துக்கொண்டிருந்தது. ஸ்ட்ராவின் காகிதத் தோலை உரித்து நிதானமாக நாபிச்சுழியில் பொருத்தினேன். என் கண்கள் தாழ்ந்தன. துணி வாசம் கரைந்து நாசிக்குள் நுழைய, உறிஞ்சத்தொடங்கிய என் நாக்கில் கடல்களின் சுவையை உணர்ந்தேன். எண்களிலும் எழுத்துக்களிலும் கடல்களின் சுவையைச் சித்தரிக்கவேண்டிய என் விதியை நொந்துகொள்ளாமல் இருக்கவில்லை நான். என் நாக்கின் கணுக்களில் இரக்கமற்று ஏறின கனவுகளும் சமுத்திரங்களின் முடிவற்ற அமைதியும் மர்மமும் அதன் எண்ணற்ற உயிரினங்களின் மௌன ஓலமும். இன்னும் எங்களைத் தொடர்ந்துகொண்டிருந்த காற்றாலைகளின் மௌனச் சுழற்சியின் அச்சுறுத்தலுடன் துஷ்யந்தனின் வயிற்றினுள் அடங்கியிருந்த கடல்களை உறிஞ்சினேன். சுபா திரும்பி என்னைப் பார்த்தவாறு காரை ஓட்டிக்கொண்டிருந்தாள். "எப்படி இருக்கிறது" என்றாள். போதையில் என் கண்கள் செருகிக்கொண்டன. கடல்களை உறிஞ்சியவாறு குழிந்த என் கன்னங்களுடனும் மின்னும் என் கண்களுடனும் அவளைநோக்கிச் சாய்ந்தேன். ஒருநிமிடம் நிறுத்தி "உன்னையும் உறிஞ்சிவிடவா" என்றேன். அவள் புன்னகைத்தாள். கடவுளே என்று நினைத்துக்கொண்டேன். உறிஞ்சும், உறிஞ்சவேண்டிய கடல்களின் பிம்பங்கள் என் கண்முன் கடந்துபோயின. ஓரக்கண்ணில் துஷ்யந்தனின் தொந்தியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அறுபட்ட கொடி போல துரிதமாக வற்றிக்கொண்டிருந்தது அது. ஸ்ட்ரா வழியாக என் நாக்கில் படகுகளும் கப்பல்களும் கபிலநிறமும் ஆலிவ் இலைகளும் வாள்களும் கோடரிகளும் குதிரைகளும் சுக்கிலமும் துன்மார்க்கங்களும் உருகிய மூளைகளும் மலைகளும் சர்ப்பம்போலேறின. என் நாக்கில் கொத்திய சர்ப்பங்கள் தந்த ஆவேசத்தில் காரின் பின்சீட்டில் சாய்ந்து ஏறிய கடலின் போதையில் ஜன்னல்களையும் கதவையும் வெறியுடன் உதைத்தேன். சுபா புன்னகைத்தவாறு தன் குளிர்கண்ணாடியை அணிந்துகொண்டாள். அவளது பெரும் காதுவளையம் என்னைச்சுற்றிலும் பைசாசச் சக்கரங்களை, எல்லைகளை அலட்சியத்துடன் விசிறியெறிந்தது. அவளைநோக்கி நீண்ட கைகளை என்னால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அவளது தோள்கள் நளினத்துடன் ஒதுங்கின. "கடல்களின் போதையைத் தாக்குப்பிடிக்க முடியாத நீ எப்படி நாளையோ மறுநாளோ சமுத்திரத்தைக் குடிக்கப்போகிறாய்" என்றது அவளது ஒதுங்கிய தோள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றனுள்ளாகச் செருகிக்கொள்ளும் டெலஸ்கோப்பின் எண்ணற்ற குழாய்கள்போலச் செருகிக்கொண்ட காலங்கள் என்னுள் புகுந்த கடல்களைக் கணக்கற்றுப் பெருக்கின, சிதைத்தன. என் கண்கள் சிவந்தன, என் மூளை ததும்பியது, மூச்சு பெரும் சூறாவளியாகிக் காருக்குள் சுற்றியலைந்தது. துஷ்யந்தனின் தொந்தி என்னை ஆட்கொண்டது. கடல்களை உறிஞ்சினேன் நான்.

கண்விழித்தபோது கருப்பையினுள்ளிருக்கும் பிண்டம்போல முழங்காலை நாடியில் வைத்திருந்தேன். எனது மற்றொரு கால் துவஜஸ்தம்பம் போல வெகு நேராய் நீண்டிருந்தது. பூப்போட்ட அவளின் மேற்சட்டையும் கறுப்புத் தொப்பியும் திரும்பத் திரும்பக் காற்றில் அலையும் முடியும் இதுவல்ல நிஜம் என்றன. அடிக்கடி என் இடுப்பின் பழம் பெரட்டா அருகில் சென்ற என் கைகளை வெகு பிரயத்தனத்துடன் தடுத்து நிறுத்தினேன். அவளது சுவாசத்தின் நறுமணம் முடிவின்றி என்னைக் கொன்றது. அவளது கண்களின் தீவிரமும். "கிளம்பத் தயாரா" என்றாள். சிறிது நேரம் என்றபின் சிறிது நேரத்தில் தயாரானேன். ஸ்நானத்தின்பின் அமர்ந்திருந்த என்னைச்சுற்றிலும் இருபத்தேழு பேர். வாசனைத் திரவியங்களுடன் கொலையாயுதங்களுடன் அங்கவஸ்திரங்களுடன் பொற்சரிகைகளுடன் மெழுகுடன் எனது சதைமிகுந்த கெண்டைக் கால்களுடன். என் தொண்டையை அலங்கரிக்க மட்டும் பதினாறு பேர். கடற்கரை மணலில் கால்கள் புதைய நடந்தோம். முடிவற்றுச்செல்லும் தவளைக்கல்லாய்ச் சறுக்கியது கடலில் அவள் பார்வை. என்னைப்பார்த்து மறுபடிப் புன்னகைத்தாள். "தயார் தானே நீ" என்றாள். பிறகு? பிறகு? வெகுதூரம் நடந்தோம், அதிக மக்களில்லாத இடத்துக்கும். யாருமேயில்லாத இடமொன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடற்கரையில், கடலைநோக்கி நான் குப்புறப் படுத்தேன். என் வஸ்திரங்களில் ஈரம் சரசரவென்று ஏறியது. மூடிய கண்களையும் வாயையும் திறந்தேன். குடிக்கத்தொடங்கினேன். அலைகள் மெலிதாகத் தொடர்ந்து என் முகத்தை அறைந்தவண்ணமிருந்தன. நெகிழ்ந்த மணற்பரப்பில் சறுக்கும் கட்டுமரம்போலச் சமுத்திரத்தைக் குறிவைத்து சறுக்கத்தொடங்கியது என் உடலும் உதடுகளும். என் உதடுகளுக்குள் நுழையத்தொடங்கியது சமுத்திரம். அலைகளுக்கு இது புரிந்ததோ என்னவோ அவை பதட்டமடைந்ததுபோல் தோன்றியது. என்னருகில் வேடிக்கைபார்க்கவந்த குழந்தைகளின் கையிலிருந்த பலூன்கள் நழுவித் தரையில் வீழ, அவற்றின் அகன்ற கண்களில் தோன்றிய திகில் விரிய விரிய அவை பெற்றோரைநோக்கி ஓட்டமெடுத்தன. பெரும் கூச்சல்கள் கேட்டன. சமுத்திரத்தின் எல்லை சரசரவெனக் கரையத்தொடங்கியது. நான் அவளைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. என் தொண்டைக்குள் இறங்கும் நீரூழியைத் தாண்டி எதுவும் நான் கவனிப்பதில்லை. இப்போது மீன்களையும் சேர்த்து விழுங்கத்தொடங்கினேன். மீன்கள், கடல்பாசிகள், சிலைகளும் கட்டிடங்களும் தகர்ந்து வீழ்ந்தன. சுக்குநூறாகச் சிதைந்து வீழ்ந்த கட்டிடங்களையும் சிலைகளையும் சுறாக்களையும் திமிங்கிலங்களையும் நிலப்பரப்புக்களையும் சேர்த்து விழுங்கினேன். என்னுள் நுழைந்த தண்ணீர் என்னால் மிகத் துல்லியமாக அடையாளங்காணப்பட்டது. நான் உறிஞ்சும் சமுத்திரம் உருவாக்கிய கரும் அகழியில் சுற்றியிருக்கும் கடல்கள் பாய்ந்தன. துஷ்யந்தனின் கடல்கள் எனக்குள் சிதறத்தொடங்க, தொடர்ந்து உறிஞ்சினேன். கப்பல்களை விழுங்கினேன். விவரிக்கத் தேவையற்ற பெரும் கருமையை விழுங்கினேன். உருவான பெரும் கரும் பள்ளத்தைச்சுற்றிலும் மக்கள் சிதறி ஓடினர். தடதடவென்று ஹெலிகாப்டர்கள் மேலே பறந்தன. என்னை அவை ஒன்றும் செய்துவிடமுடியாதென்பது எனக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். அன்றைய பொழுதின் அஸ்தமனத்துக்குள் உறிஞ்சி முடித்த சமுத்திரத்துடன் களைப்புடன் நான் கடற்கரையில் வீழ்ந்தேன். பல நூறு மைல்கள் தள்ளிப் போயிருந்தது கடற்கரை. சுபாவும் அவளது கூலிக் கைத்தடிகளும் என்னை மேலே இழுத்தனர். எங்கள் அறையில் என்னைக் கொண்டு சேர்த்தனர். அப்போதுகூட சுயநினைவுடன்தான் இருந்தேன். இப்போது என் அறுக்கப்பட்ட தலை சுபாவின் பைக்குள் இருப்பதைக்கொண்டுதான் என்ன நிகழ்ந்ததென்று யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நானும் துஷ்யந்தனும் என்னைப்போன்றவர்களும் உறிஞ்சித் தீர்த்த கடல்கள் எத்தனை என்று யாருக்கும் தெரியாது என்றே சொல்கிறார்கள். என்னதான் என் தலை அறுக்கப்பட்டிருந்தாலும், ஒருதுளி ரத்தம்கூடப் பைக்குள் சொட்டவில்லை. ஏதோ செய்திருக்கிறாள். க்ளிப்புகளைப் போட்டு அனைத்தையும் மூடியிருக்கிறாளென்று நினைக்கிறேன். இருக்கலாம்.

கடைசியாக, பை அசைவது நின்றது. மெலிதான பேச்சுக்குரல்கள் கேட்டன. எனது கதை இப்படி முடியவேண்டுமா என்று நானே யோசித்துப்பார்க்கிறேன். எனது போக்கில் கடல்களைக் குடித்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தேன். ஒருபொழுது நான் குடித்த கடல்களனைத்தையும் துப்பிவிடுவதுதான் என் உத்தேசம். எனக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை, இருப்பதாக யாரேனும் நினைப்பதையும் நான் விரும்பவில்லை. பையின் ஸிப் மென்மையாகத் திறக்கப்பட்டது. என் தலைமுடியைப் பற்றித் தூக்கி வெளியில் வைத்தாள். பிரகாசமான வெளிச்சத்தில் மூடக்கூட முடியாமல் என் கண்கள் திறந்து கிடந்தன. "மாண்ட்ரீஸர், இதைப் பார்த்தாயா" என்று புன்னகைத்தாள் சுபா. அதே கைப்பையில் ஸ்ட்ராக்கள் கிடந்ததைக் கவனிக்கவில்லையா நான்? "பார் மாண்ட்ரீஸர், இவ்வளவுதான்" என்றாள். அவன் ஸ்ட்ராவை வாங்கி அதன் காகித உறையை உரித்தான்.

என் தலையைத் தலைகீழாகப் பிடித்தவாறு சுபா, க்ளிப்புகளை ஒவ்வொன்றாக அகற்றத்தொடங்கினாள். அப்போதுதான் சிறிது சிறிதாக ரத்தம் வழியத்தொடங்கியது. மாண்ட்ரீஸர் தன் ஸ்ட்ராவை அதில் வைத்து உறிஞ்சத்தொடங்கினான்.

Thursday, December 23, 2004

கிறிஸ்துமஸ் பரிசு

என் நண்பனுக்கு ஒரு புத்தகத்தை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்தேன், இன்றைக்கு அவனும் ஒரு புத்தகம் கொடுத்தான். ட்ரெக்கிங், பறவைக் கவனிப்பு என்று அவன் ஒரு இயற்கையாளன் என்பதால், ஏன் நான் திறந்தவெளியை விரும்புகிறேன் என்று இது உணர்த்தும் என்று, தனக்குப் பிடித்த கவிதாயினியான மேரி ஆலிவரின் ஒரு கவிதைத்தொகுப்பைக் கொடுத்தான். இதற்குமுன்பு நான் அப்பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்பதால், அனைத்துக் கவிதைத்தொகுப்புகளிலும் செய்வதையே இதிலும் செய்தேன் - சின்ன வயசில் புத்தக கிரிக்கெட் விளையாடுவதுபோலப் பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்து, even pageல் உள்ள கவிதையைப் படிப்பது. இப்படி இன்றைய புத்தகத்தில் சிக்கிய கவிதை The Esquimos Have No Word for "War". சரி, நம்மால் முடிந்ததென்று அதை மொழிபெயர்க்கிறேன். காப்பிரைட் என்று யாரேனும் குதறிவிடாமலிருந்தால் சரி.

-------------------------------------------------------------------------------------
எஸ்கிமோக்களிடம் "போர்" என்ற வார்த்தை கிடையாது
-மேரி ஆலிவர்

அவர்களுக்கு அதை விளக்கமுயலும்போதெல்லாம்
ஒருவருக்கு மிஞ்சுவது அசட்டுத்தனமும் அசிங்கமுமே.
ஆதிகாலப் பனிப்பொழிவுகளாலான புற்சமவெளிகளில் அமர்ந்திருக்கின்றன
வெள்ளைக் கிண்ணங்கள் போலான அவர்களது வீடுகள்,
இளக்கத்தையும் அல்லது பகலிரவுகளின்
துரித மாற்றங்களையும் தாண்டி.
அடக்கத்துடன் கேட்டபடி விலகிச்செல்கிறார்கள்

ஈட்டிகளுடன் பனிவாகனங்களுடன் குரைக்கும் நாய்களுடன்
உணவை வேட்டையாட.
கழிக்கவேண்டிய மணித்துளிகள் அதிகமிருக்கின்றன என்றும்
வேட்டைக்காரனின் அதிர்ஷ்டம் காலதாமதமானது என்றும்
தெரிந்த பெண்கள் காத்திருக்கின்றனர்,
தோல்களைச் சுவைத்தவாறோ பாடல்களைப் பாடியவாறோ.

பிறகு, எரியும் தீயினருகில், கெட்டிலில் கொதிக்கும் எலும்புகளினருகில்
என்னை, தூரத்து உறவினரை, வெளுத்த சகோதரனை வரவேற்கின்றனர்
சிரமமிகுந்த நிலப்பரப்பின் பசித்த காலங்களில் அவர்களிடமிருக்கும்
உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு.
தெற்கத்திய அரசுகளை, பீரங்கிகளை, ராணுவங்களை,
மாறும் கூட்டணிகளை, விமானங்களை, சக்தியைப் பற்றியெல்லாம்
நான் பேசும்போது
எலும்புகளைச் சுவைத்தவாறு, ஒருவரையொருவர் பார்த்துப்
புன்னகைத்துக்கொள்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------
(கெட்டில் - kettle, இளக்கம் - thaw)

Wednesday, December 22, 2004

அவுட்சோர்ஸிங் பற்றிய கூறுகெட்ட பஜனை

ரிடிஃப் அவ்வப்போது வெளியிடும் பொறுப்பற்ற செய்திகளில் இதுவும் ஒன்று. முன்னோட்டச் சிகிச்சை (clinical trials)களுக்கு ஏன் இந்தியா மிகப் பொருத்தமான இடமாகி வருகிறது என்று சிலாகித்துக்கொள்ளும் இந்தக் கட்டுரை, முன்னோட்டச் சிகிச்சைகளில் என்ன நடக்கிறது என்றும், யாருக்கு அவை உபயோகமாகின்றன என்பதுபற்றியுமான அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஹூ ஹா என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ள ஒன்று. அணுகுண்டு வெடிப்பை அவுட்சோர்ஸிங் செய்தால்கூடப் பாராட்டி எழுதுவார்கள் போல. முன்னோட்டச் சிகிச்சைகளுக்கு மருந்து நிறுவனங்கள் செலவழிக்கும் தொகை பல பில்லியன் டாலர்கள். இவ்வளவு செலவிற்கு அடிப்படைக் காரணம், வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்னோட்டச் சிகிச்சை நடத்த, நோயாளிகளிடம் புது மருந்தைப் பரிசோதித்துப் பார்க்க உள்ள கடுமையான சட்டதிட்டங்கள்தான். இந்தச் செலவினங்களைக் குறைக்கவே ஆசிய நாடுகளுக்கும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் படையெடுப்பது. அந்நாடுகளில் தார்மீக விதிகளும் சட்டதிட்டங்களும் அவ்வளவு காற்றுப்புகாத தன்மையுடனிராதது செலவைப் பெருமளவு குறைப்பது. எப்போது நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாமென்றால், அந்தந்த நாட்டின் மக்களை உபயோகித்து நிகழ்த்தப்படும் முன்னோட்டச் சிகிச்சைகளின் நேரடிப் பலன்கள் அந்தந்த நாட்டிற்கே முதலில் உபயோகப்படும் எனும்போதுதான். இங்கே நிகழ்த்தப்படும் முன்னோட்டச் சிகிச்சைகளின் முடிவுகளைக்கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் குடிமக்கள் முதலில் பயன்பெறுவார்கள், காப்புரிமை செய்யப்பட்ட அந்த மருந்துகள் காப்புரிமைக்காலம் முடிந்து அடிப்படை மருந்தாக (generic drug) ஆகும்வரை நாம் காத்திருக்க வேண்டுமென்றால், நமது மக்களின் பங்கும் guinea-pigs ன் பங்கும் ஒன்றேதான். இல்லையென்றால், அந்த மருந்துகளுக்கு பன்னாட்டுக் கம்பெனிகள் நிர்ணயிக்கும் விலையை அழவேண்டியதுதான். சலுகை விலையில் மு.சி நடந்ததே என்று சலுகை விலையில் மருந்துகளை விற்குமா என்ன நிறுவனங்கள்? இந்திய மருந்துத் தொழிலின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 5.0 பில்லியன் டாலர்கள்.ஃபைஸர், மெர்க், எலி-லில்லி போன்ற பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் 2002 வருட விற்பனையைப் பார்த்து (இந்தச் சுட்டி powerpoint), அத்துடன் நமது நிலவரத்தையும் ஒப்பிடுங்கள்.ஃபைஸரின் லிப்பிட்டார் மருந்து ஒன்று மட்டுமே 9 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே? இல்லை மூன்றா? ஜாக்கிரதை அவசியம் அவசியம் என்று பலரும் பலநாட்களாகச் சொல்லி வருகிறார்கள். நடக்கிறதா பார்ப்போம்.

தொடர்புள்ள சில சுட்டிகள்:
உலகச் சுகாதார நிறுவனம்
வாஷிங்டன் போஸ்ட்டில் பிரசுரமாகிப் பின் வேறிடத்திலும் கிடைத்தவை
மற்றொரு சுட்டி
கடைசியாக, அமெரிக்காவில் முன்னோட்டச் சிகிச்சை நிகழ்த்தவேண்டுமென்றால் என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிந்துகொள்ள இங்கே சுட்டுக. இதெல்லாம் நம்மூரில் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று மேற்கண்ட சுட்டிகளைப் படித்தால் தெரிந்திருக்குமே!

மகாபாரதம்



பீட்டர் ப்ரூக்கின் 'மகாபாரதம்' திரைப்பட-நாடகத்தை நேற்றும் அதற்கு முந்தைய நாளுமாக மொத்தம் ஆறரை-ஏழு மணி நேரத்தில் பார்த்தேன். மூன்று பாகங்களான மகாபாரதத்தையும், பின்பு வழக்கம்போல நடிகர்கள், இயக்குனர், திரைக்கதாசிரியரின் பேட்டிகளையும். முதலில் ஃப்ரெஞ்ச்சிலும் பின்பு ஆங்கிலத்திலும் மேடை வடிவத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த நீண்ட நாடகத்தைப் பின்பு திரைப்பட வடிவமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். திரைப்பட-நாடக வடிவம் என்பது பொருத்தமாக இருக்கும்.

திரௌபதி வேடத்தில் நடித்த மல்லிகா சாராபாயைத் தவிர நடிகர்கள் அனைவரும் பிறநாட்டவர் என்பது முதலிலேயே கேள்விப்பட்டதுதானென்றாலும், சில குறிப்பிட்ட நடிகர்களைப் பார்த்து விசித்திரமாக உணர்ந்தன் காரணம் பட்டும் படாமலும் எனக்கே தெரிகிறது. குறிப்பாக, வாய்மொழிக் கதைகளில் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுவிட்ட (அல்லது நாமாக உருவகித்துக்கொண்ட) நெடிய, உறுதியான ஆகிருதி கொண்ட, நீண்டு பறக்கும் வெண்தாடியுடைய, சாந்தமான கண்களையுடைய பீஷ்மரின் பாத்திரத்தைப் படத்தில் செய்திருப்பது ஒரு ஒல்லியான, பஞ்சடைந்த கண்களை, அரைகுறைத் தாடியைக் கொண்ட, கிட்டத்தட்ட ஷெர்வாணி போல ஒரு உடையணிந்த ஒரு ஆஃப்ரிக்க நடிகர்! துரோணர் வேஷத்தில் ஒரு ஜப்பானியர், திருதராஷ்டிரன் வேஷத்தில் ஒரு போலந்து நாட்டவர், அர்ஜுனனாக ஒரு இத்தாலியர், துரியோதனனாக ஒரு ஃபிரான்ஸ் நாட்டவர், தர்மனாக ஒரு ஜெர்மானியர், பீமனாக ஒரு செனெகல் நாட்டவர், கர்ணனாக ஒரு கரீபியர் (ட்ரினிடாட்), குந்தியாக ஒரு கறுப்பினப் பெண்மணி, காந்தாரியாக ஒரு இந்தோனேசிய/தாய்லாந்துப் பெண்மணி (கடைசி இருவருக்கும் தகவல்கள் IMDB யில் இல்லை) என்று, நிஜமாகவே ஒரு சர்வதேச நடிகர் கூட்டம். கிருஷ்ணர் வேஷம், நமது கிருஷ்ணர் வேஷங்களுக்கு நேரெதிர். வழுக்கை விழும் தலையுடனும், ஒட்டிய கன்னங்களுடனும் வெள்ளை நிறத்தில் ஒரு கிருஷ்ணர்.

பல தொகுதிகளைக் கொண்ட பெரிய எழுத்து மகாபாரதம் படிக்க நினைத்தது கடைசிவரை கனவாகவே போய்விட, சிறுவயதில் படிக்கமுடிந்தது ராஜகோபாலாச்சாரியின் மகாபாரதம் மட்டுமே. நமது பார்வைகளும் அந்நியப் பார்வைகளும் வேறாக இருப்பினும், விஷயகனத்தைப் புதிய முறையில் சொல்லியிருக்கின்றதா, அல்லது மேற்கத்தியப் பார்வையாளர்களுக்கான ஒரு முதற்பிரதியாகச் செயல்பட முயன்றிருக்கிறதா என்று பார்க்கத்தான் ஆர்வம் இருந்தது. மேலும், நாடக வடிவங்களைப் பார்க்கும் வாய்ப்பு வாழ்க்கையில் சிலமுறையே வாய்த்திருப்பதால், சரி அதற்கு நெருங்கிய ஒரு வடிவத்தைப் பார்ப்போம் என்ற ஆர்வமும் தான்.

மேற்கத்தியப் பார்வையாளனுக்கான ஒரு முதற்பிரதி (rough draft) என்ற ரீதியிலேயே இது முழுதும் இயங்குவதாக எனக்குப் பட்டது. பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதத்தை நாம் இதில் எதிர்பார்க்கமுடியாது என்பதால், ஐந்தரை மணி நேரத்துக்குள் அத்தனை கதாபாத்திரங்களையும் அடக்கவேண்டியதைத் திறமையுடன் செய்திருக்கிறதா என்றால் - ஆமாம் என்றே கூறவேண்டும். விதுரன் பாத்திரம் தட்டுப்படவே இல்லை. மேலும், திரௌபதியை பாண்டவர்கள் திருமணம் செய்தபிறகு பீமன் இடும்பியைச் சந்தித்து கடோத்கஜனைப் பெறுவதாகக் கூறப்பட்டுள்ள காலப்பிழை (அல்லது நான் சொல்வது தவறா) போன்ற சிலவற்றைத் தவிர்த்துவிட்டால், முக்கியமான அனைத்துப் பாத்திரங்களும் உள்ளன.

என்னதான் இருந்தாலும், திரௌபதி பாத்திரத்தில் மல்லிகா சாராபாயிடமிருக்கும் உயிர்ப்பு பிறரிடம் இல்லை என்றே கூறவேண்டும். துச்சாதனன் அவளை அழைத்துவர அவளது இருப்பிடத்தில் நுழையும்போது "தோற்க யுதிஷ்டிரனிடம் வேறு ஏதுமே இல்லையா" என்று கேட்கும் குரலின் கம்பீர-வெறுமை என்ன, இறுதியில் வீழ்ந்து கிடக்கும் துச்சாதனனின் ரத்தத்தில் ஒரு சொடுக்கில் தன் தலைமுடியை வீசி நனைக்கும் கோர-நளினம் என்ன. நமது பாத்திரங்களில் நாம் எதிர்பார்க்கும் emotional hyperboles பெரும்பாலானவர்களில் இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிவெளிப்பாடுகளாக இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். நமது வெளிப்பாடுகளில், 'நிகழ்த்தல்' என்ற செயல்பாட்டைப்பற்றிய பிரக்ஞை உள்ளுக்குள்ளேயே - அறிந்தோ அறியாமலோ கட்டுப்படுத்தப்படுவிடுவதால், உள் அமைதி-வெளிப்புற ஆரவாரம் என்று இருக்கையில், மேற்கத்திய 'நிகழ்த்தல்' என்பதன் வெளிப்பாடே (output) ஆரவாரமற்ற முறையிலான உள் அமைதியாக இருந்துபோவதில், வண்ணமயமான சம்பவக்கோர்வைகளை எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்குப் பிற நடிகர்களைவிட, unmuffled மல்லிகா சாராபாயே பிடித்துப்போகிறது. இது ஒன்றும் வெறுமனேயான நம்மூர்ப் பிரேமை இல்லை என்றும் தோன்றுகிறது. பொதுவாக, மிகவும் அற்புதம் என்றெல்லாம் தோன்றவில்லை பார்த்து முடித்ததும். ஏணியில் ஏறி யுதிஷ்டிரன் சொர்க்கத்துக்கு (முதலில் சொர்க்கம் நரகம் என்பது கிறிஸ்துவ மதத்துக்குப் பிரத்யேகமானது என்றல்லவா நினைத்திருந்தேன்? இந்திய சிந்தனை மரபிலும் அது உள்ளதா என்ன?)போவதுபோன்ற காட்சிகளையெல்லாம் இன்னும் உருப்படியாக எடுத்திருக்கலாம். மற்றபடி, one thumb up. அவ்வளவு தான்.

சற்றுநாட்களுக்குமுன் ஒரு பதிவில், சிறிது வருத்தத்துடனேயே சில பின்னூட்டங்களை இட்டேன். அதேபோன்ற வருத்தம்தான் இப்போதும் உள்ளது. மகாபாரதம், ராமாயணம் மற்றும் நமது புராணக்கதைகள், நல்லதங்காள் கதை போன்ற நாட்டார் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றை முன்முடிவுகளின்றி சிறுவனாக இருக்கும்போது படித்துத் தீர்த்ததில் கிடைத்த மகிழ்ச்சியும் குதூகலமும் இன்றி, இப்போது வளர்ந்தபின் அதை வேறு கற்பிதங்களைப் போர்த்திப் பார்க்கும்போது (அல்லது பிறர் போர்த்தும்போது) இங்கேயா அங்கேயா என்று எழும் தடுமாற்றமே வாசக அனுபவத்தின் மிகப்பெரும் சாபக்கேடு. புராணங்களின் விஸ்தீரணத்தை அவை கபளீகரம் செய்த கலாச்சாரங்கள், பிற படைப்புக்களைக்கொண்டு அளப்பது, நிர்ணயிப்பது, குதர்க்க அர்த்தங்கள் கற்பிப்பது போன்றவை, "ignorance is bliss" என்ற முடிவைநோக்கியே தள்ளுகின்றன. விற்பன்னர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆராய்ந்துகொண்டிருக்கும் விஷயங்களுக்கான விடைகளை இரண்டு டிவிடி குறுந்தகடுகள் பார்த்துவிட்டதால் நான் கண்டுபிடித்து ஞானோதயமடைந்துவிடமுடியுமென்ற நம்பிக்கை ஏதையும் வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலும், ராஜகோபாலாச்சாரியின் மகாபாரதம் படித்தபோது நான் பாண்டவனாயிருந்தேன், கௌரவனாயிருந்தேன், கர்ணனாயிருந்தேன், பீமனுக்குக் குறுக்காகத் தன் வாலைப் போட்டிருந்த அனுமனாயிருந்தேன், கர்ணனாயிருந்தேன், கிருஷ்ணனாயிருந்தேன், சல்லியனாயிருந்து கர்ணனுக்குத் தேரோட்டினேன், அபிமன்யுவாக இருந்து பத்ம வியூகத்தைப் பிளந்தேன், ஆனந்தத்தில் கழிந்த அந்த நாட்களைத் தாண்டி, பிற 'புத்திசாலிகள்' போல என் மூளையின் பரிமாணங்கள் கண்டபடி பெருக்கமடைந்தபின் இப்போது இனம்புரியாத ஒரு குரோதத்துடன் ஹைனெக்கன் பாட்டில்களைக் காலிசெய்தவாறு சோஃபாவில் நெளிந்தவாறு மகாபாரதத்தைக் காந்தாரி போன்றவொரு primordial archetypeன் கர்ப்பத்திலிருந்து வீழ்ந்த மர்ம அண்டமாகக் கருதி, அதன் மீதுள்ள இனம்புரியாத வெறுப்புடன் அதை நொறுக்கித் துகள் துகளாக்கிக் கரைத்துக் குடித்துவிட ஒரு sledge hammer ஐத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கீழ்ப்பிறவியாகவே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் படத்தில் ஏதோவொரு தவற்றைக் கண்டுபிடிக்கும்போதும் 'இல்லை'...என்று சுதாரிப்பது என் எந்தப் பக்கம்? நானாகக் கண்டுபிடித்துப் படித்தவைகளை, என் பிரத்யேக வாசக அனுபவங்களைச் சமுதாயங்களின் கற்பிதங்கள் சற்றும் கருணையின்றிக் கொலைசெய்தன என்று நான் கூறுவேனாயின், அதில் என் தவறும் இருக்கலாம் - ஆனால் எதில் உள்ளது அந்தத் தவறு?

Friday, December 17, 2004

அறிவியல் கலைச்சொற்கள்

//இது தவிர ஆங்கிலத்தில் எழுதும் போது கலைச்சொற்கள் ஒரு பிரச்சினையேயில்லை. தமிழில் அது ஒரு முக்கியமான பிரச்சினை.//

மிகவும் உண்மை இது.முதல் வரியில் இருக்கும் ரவி ஸ்ரீனிவாஸ் பதிவைப் படித்ததும் தோன்றிய சில எண்ணங்களைப் பின்னூட்டமாக இடலாம் என்று நினைத்தேன். Theorizingல் எனக்குள்ள பலவீனம் உடனே புரிந்துவிட்டதால், சரி, ஒரு அறிவியல் வாக்கியத்தை உருவி ஒரு சின்ன case-study செய்யலாமென்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு. அவர் கூறியது குறித்தான பின்னூட்டம் போலத் தொடர்ந்தாலும், ஒருவகையில் இது அதைவிடச் சற்று விலகியிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், தோன்றியவற்றை எழுதிவைக்கிறேன். நான் கீழே சொல்வது பெரும்பாலும், ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுத் தேய்ந்துபோன பழங்கருத்துக்கள்தான் என்று நினைக்கிறேன், எதுவும் பெரிதாகப் புதிதாக இருக்கிறதா என்று தெரியவில்லை.

தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துக்களில் கலைச்சொற்கள் இல்லாதது பெரும் சங்கடமே. இருக்கும் சொற்களும் எவ்வளவு துல்லியமானவை என்று கூறமுடியாது. Words are notoriously imprecise எனலாம், சுருக்கமாக. உதாரணத்துக்கு, gene என்ற சொல்லைத் தமிழில் மரபணு என்று குறிக்கிறோம். அசல் ஆங்கில வார்த்தையை மறந்துவிடலாம். 'மரபணு' என்பது முதன்முதலில் தமிழில் தோன்றியது என்று கொள்ளலாம் (ஆங்கிலம் gene என்பதைக் குறிக்கும் அதே அர்த்தத்துடன்). 'மரபணு' என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயலும்போது, அதை 'hereditary atom' என்று மொழிபெயர்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல்தான் பெரும்பாலான ஆங்கில-தமிழ் மொழியாக்கங்களும் உள்ளன - குறைந்தபட்சம் புழக்கத்தில் உள்ளவையாவது. 'பேருந்து' என்பதை 'a large pushing force' என்று யாரும் அர்த்தம் செய்துகொள்ளமாட்டார்கள் என்றாலும், ஆங்கிலம் பிறமொழி வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தொடங்கியபோது அதனிடமிருந்த irreverenceதான் தற்போது நமக்குத் தேவை என்பது என் அபிப்ராயம் - குறைந்த பட்சம் அறிவியல் துறைகளிலாவது. சொற்கள் மீதான பக்தி அழகியலில் மிகவும் அவசியம் எனினும், அறிவியலில் அதுவே மிகப்பெரிய தடைக்கல். கிரேக்க, லத்தீன் மொழிகள் பேசப்படாத, ஆங்கிலம் பேசப்படும் இடங்களில் ஆங்கிலம் கிரேக்கத்தை எப்படி decompose செய்து தன் நுட்ப அறிவியலுக்கும், லத்தீனையும் பிற Germanic மொழிகளையும் தன் வெளிக்கட்டமைப்புக்கும் பயன்படுத்திக்கொண்டதோ, அதுபோல் நாம் ஆங்கிலத்தை decompose செய்து அதை தமிழின் கட்டமைப்புக்குள் hybridize செய்வதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். வேற்றுமொழிச் சொற்களின் தமிழ்ப் பிரயோகங்களைக் கண்டுபிடிக்க பழம் தமிழ் வார்த்தைகளைத் தேடுவதில் நேரத்தைச் செலவழிப்பது உசிதமா அல்லது இருக்கும் சொற்கிடங்கை (langue) ஐ உபயோகித்து தேவைக்கேற்ப உடனுக்குடன் சொற்களை உருவாக்கிக்கொள்வதில் நேரத்தைச் செலவழிப்பது உசிதமா என்று முதலில் தீர்மானித்துக்கொள்வது நலம் என்று நினைக்கிறேன். இவ்விரண்டையும் சமகாலத்தில் செய்வது இன்னும் அதிக உபயோகமளிக்கும்.

தூய்மைவாதிகளின் (purists) '100% தூய தமிழ்' என்பதெல்லாம் சாத்தியமில்லை. வேண்டுமானால் 1950ன் உலக அறிவியலை 2000த்தில் தூய தமிழில் கொண்டுவர முடியும். 2004ன் அறிவியலை 2005லாவது தமிழில் கொண்டுவரவேண்டுமென்றால் மொழித்தூய்மை மேலுள்ள போலிப் பிடிமானங்களை உதறிவிட்டு, முடிந்தால் சரிநிகர்த் தமிழ்ச்சொல், முடியாவிட்டால் அப்படியே ஆங்கிலத்திலிருந்து transliteration என்பதுதான் தற்போதைக்கு உசிதம். வினைச்சொற்களை வேற்றுமொழி அறிவியலில் படிப்பதுதான் சிக்கல், பெயர்ச்சொற்களை அல்ல.

உதாரணத்துக்கு, ஒரு அறிவியல் கட்டுரையில் முதல் இரண்டு வாக்கியங்களை எடுத்து ஒரு சின்ன case-study.

Genomic microsatellites (simple sequence repeats; SSRs), iterations of 1-6 bp nucleotide motifs, have been detected in the genomes of every organism analysed so far, and are often found at frequencies much higher than would be predicted purely on the grounds of base composition (Tautz&Renz 1984; Epplen et al. 1993). Bell (1996) suggested that the abundance and length distribution of SSRs across the genome could result from unbiased single-step random walk processes. (Li et al., Molecular Ecology (2002) 11, 2453-2465)

இதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கவேண்டிய அவசியமில்லை. அப்படியே செய்தாலும் அது கீழ்க்கண்டவாறு இருக்கும். அகராதித் துணைகளேதும் இல்லாததால், எனக்குத் தெரிந்த தமிழையும் அறிவியலையும் வைத்து அதை மொழிபெயர்க்க முயல்கிறேன், இதைவிடவும் தெளிவாக யாரேனும் மொழிபெயர்க்க முடிந்தால் கமெண்ட் பகுதியில் இடவும். நல்ல விஷயம்தான். இப்போது மொழிபெயர்ப்பு:

"மரபகராதி நுண்மறுபடியாக்கங்கள் (எளிமையான நியூக்ளிக் அமிலவரிசை மறுபடியாக்கங்கள்; எ.நி.ம) என அழைக்கப்படும் 1-6 நியூக்ளிக் அமிலமூலங்கள் மறுபடியாக்கம் செய்யப்படும் பகுதிகள், ஆராயப்பட்ட அனைத்து உயிரினங்களின் மரபகராதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன; நியூக்ளிக் அமிலமூலங்களின் கட்டமைப்பைமட்டும் கொண்டு யூகிக்கப்படும் எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது (டாட்ஸ்&ரென்ஸ் 1984; எப்லன்&மற்றையோர் 1993). மரபகராதியில் எ.நி.ம களின் பரவல் மற்றும் நீளம், பாரபட்சமற்ற, நிகழ்தகவற்ற ஓர்-நிலை நடத்தலால் நிகழ்கிறது என்று பெல் (1996) கருதுகிறார்."

இதில் எனக்கு ஏகத்துக்கு இடறும், இடறிய வார்த்தைகள்:
Genome - மரபகராதி என்று நான் தற்போதைக்கு உபயோகப்படுத்தியுள்ள வார்த்தையில் ஸ்பானர் போட்டால், dictionary of heredity என்று கழலும். ஆனால், அதை மரபகராதி என்று கூறலாம் என்றே நினைக்கிறேன்.
genomic - 'ic' என்பதை 'இன்' சேர்த்து 'மரபகராதியின்' என்று ஆக்கிவிடலாம்
microsatellites - ஹிஹி!! transliteration செய்தால், நுண்செயற்கைக்கோள் என்று வரும். சரியான அர்த்தத்துக்கு சுட்டியைச் சுட்டவும். நுண்மறுபடியாக்கங்கள் என்று நான் குறிப்பிட்டுள்ள வார்த்தை ஏகத்துக்கு இடறுகிறது.
sequence - வரிசை என்பது சரி தான். ஆனால், sequence of events என்பதற்கும், உயிரியலில் sequence என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த sequence என்பது nucleotide sequence ஐக் குறிக்கிறது. இது ஆங்கில உயிரியலில் ஒரு taken for granted அர்த்தம். வரிசை என்றே நாமும் உபயோகிக்க முடியும், ஆனால் அதற்குமுன்பு அந்தக் கருத்தாக்கம் குறித்த புரிதல் வாசகர்களிடம் இருக்கவேண்டும்.
repeat - மறுபடியாக்கம் (microsatellite என்பதற்கும் இதே பதத்தை ஒரு பகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். சொற்குவியலைத் தடுக்க சொற்களின் மறுபடியாக்கமும் தேவைதான். தமிழ்ப் புலவர்கள் மறுபடியாக்கம் என்பது doing it again ஐக் குறிக்கிறது, repeat என்பதன் அசல் அர்த்தத்தைச் சுட்டவில்லை என்றால் நான் அப்பீட் மக்கா!
nucleotide - ஹிஹி! நியூக்ளிக் அமிலமூலமாம் இது. எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. எங்கே போய் முட்டிக்கொள்ள. இதற்குப் பேசாமல் நியூக்ளியோட்டைடு என்று எழுதிவிடலாம். பேச்சுத்தமிழ் மற்றும் இலக்கணத் தெலுங்கில் 'உ'ஓசையோடு பெரும்பாலான சொற்கள் முடிவதால் (உபயம் கால்டுவெல் பாதிரி), t என்று முடியும் சொற்களைக் குறிக்க ட்/ட வையும், d/de ஓசைகளைக் குறிக்க 'டு' வையும் உபயோகப்படுத்தலாம். அப்படியே பிறமொழிச் சொற்களை உள்வாங்கும்போது இந்த நேர்த்திக்கும் சற்றுக் கவனம்செலுத்துவது அவசியமென்று நினைக்கிறேன்.
frequency - இதற்குக் கட்டாயம் தமிழில் வார்த்தை இருக்கும் என்று நினைக்கிறேன், தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறவும்.
base - அடித்தளம்!! இன்னொரு ஹிஹி! adenine, guanine, thymidine, cytosine, uracil ஐந்தையும் nucleotides என்றும் விளிக்கலாம், அல்லது இன்னும் சாதாரண மொழியில் bases என்றும் அழைக்கலாம்.
composition - கட்டமைப்பு என்பது பொருத்தமான வார்த்தை. ஆனால் ஏதோவொன்று இடறுகிறது.
random walk process - அப்பீட். அறிவியலில் இது எதைக் குறிக்கிறதென்று எனக்குத் தெரிகிறது, அதைச் சரியான முறையில் தமிழ் வார்த்தைகளில் கொண்டுவரமுடியவில்லை.
motif - இதுவும் அதேபோலத்தான். 'பகுதி' என்று நான் குறித்தது இதைத்தான். என்ன ஒரு பலவீனமான தமிழ் சமவார்த்தை. motif என்பதன் சரிநிகர் வார்த்தையை, அதேயளவு அறிவியல் துல்லியத்துடன் (scientific correctness) கூறவேண்டுமென்றால், புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கவேண்டும்.
random - நான் உபயோகித்துள்ள 'நிகழ்தகவற்ற' என்பது நிஜத்தில் 'not probable' அல்லது 'improbable' என்பதையே குறிக்கிறது. random என்பதற்கு ஒரு தமிழ் வார்த்தையை என்னால் யோசிக்க இயலவில்லை என்பதே பெரும் அவமானமளிக்கிறது.

இப்போது, அதே வாக்கியங்களை, எனக்கு சுலபத்தில் தமிழில் விளங்கிக்கொள்ளுமாறு இப்படி மொழிபெயர்க்க முயல்கிறேன்:
"மரபகராதி மைக்ரோசாட்டிலைட்டுகள் (இந்தச் சுருக்கங்களைத் தூக்கிக் கடாசுங்கள், அதெல்லாம் தமிழில் அறிவியல் மொழி ஓரளவு வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம்) என அழைக்கப்படும் 1-6 நியூக்ளியோட்டைடு மறுபடியாக்க மொட்டீஃபுகள், இதுவரை ஆராயப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நியூக்ளியோட்டைடு கட்டமைப்பை மட்டும் கொண்டு யூகிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது (டாட்ஸ்&ரென்ஸ் 1984; எப்லன்&மற்றையோர் 1993). மரபகராதியில் மைக்ரோசாட்டிலைட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ள முறை மற்றும் அவற்றின் நீளம், பாரபட்சமற்ற ஒரு single-step random walk process மூலம் நடக்கிறது."

எனக்கு, மேற்கண்ட வாக்கியம் இன்னும் எளிதாகப் படுகிறது. single-step random walk process என்பதை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. இது, மொழிபெயர்ப்பு என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். சாரத்தை உள்வாங்கிக்கொண்டு நமது சொந்த நடையில், பொருள் மாறாமல் எழுதுவது இன்னும் சுலபமாக இருக்கும் என்பது என் அபிப்ராயம் - அதாவது, இந்தத் துறையில் உள்ள ஓர் அறிவியலாளன் எழுதினால். Transliteration செய்யப்பட்டுள்ள வார்த்தைகளுக்கான அகராதியை முதலில் தயாரித்துவிட்டு பின் மேற்கண்ட வாக்கியத்தை மொழிபெயர்ப்போமென்பது ஒரு பிரயோஜனமற்ற வாதம்.

மேற்கண்ட வாக்கியத்தின் வினைச்சொற்களை anglicize செய்து பார்க்கிறேன்.

"மரபகராதி மைக்ரோசாட்டிலைட்டுகள் என காலப்படும் (call செய்யப்படும்) 1-6 நியூக்ளியோட்டைடு மறுபடியாக்க மொட்டீஃபுகள், இதுவரை இன்வெஸ்டிகேட்டப்பட்ட ஆல் உயிரினங்களிலும் ஃபைண்டப்பட்டுள்ளன. நியூக்ளியோட்டைடு கட்டமைப்பை மட்டும் கொண்டு ப்ரிடிக்டப்பட்ட எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக தேர்(there). மரபகராதியில் மைக்ரோசாட்டிலைட்டுகள் டிஸ்ட்ரிபியூட்டப்பட்டுள்ள மெத்தடு மற்றும் அவற்றின் நீளம், பாரபட்சமற்ற ஒரு single-step random walk process மூலம் ஹாப்பனிங்" - கேட்கவே கொடூரமாக இல்லை? வினைச்சொற்களில் கைவைத்தால் மொழி காலி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல்கள் எழும்பியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனந்த விகடனும், கேபிள் தொலைக்காட்சி காம்பியர்களும் டூவுவது திஸ்ஸுதான்.

கடைசியாக, என்ன சொல்ல வந்தேன் என்பதை, இந்த slogல் தவறவிட்டிருந்தால் - சில விளக்கங்கள் சுருக்கமாக:
* இந்தமாதிரியான hybridization தமிழின் தனித்துவத்தைப் பாதித்து மொழியைக் கொன்றுவிடும் என்பவர்கள், பின்வரும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 1) தமிழ் பேசும் மனிதர்களின் வளர்ச்சிக்கு உதவுமாறு தமிழை உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும். 2) தமிழ் பேசும் மனிதர்கள் தங்கள் வளர்ச்சியைத் தியாகம் செய்தாவது தமிழின் தூய்மையைக் காப்பாற்றவேண்டும்.
* இந்தமாதிரியான hybridization னால் தமிழின் அழகியல் காணாமற்போய்விடும் என்பவர்களுக்கு: சரி, அதனால்தான் ஆங்கிலம் இவ்வளவு கண்றாவியாக, அழகியல் உணர்ச்சியின்றி இருக்கிறது! வேற்றுமொழிப்பிரேமை ஆங்கிலத்தையும் விட்டுவைத்ததில்லை; எட்கர் ஆலன் போவைப் படியுங்கள். ஃப்ரெஞ்சை வாரித் தெளித்திருப்பார்!

சரி, மேற்கத்திய வாலைப் பிடிக்கவேண்டாமென்றால், நான் கூறியதை சமஸ்கிருதத்திலிருந்து ஆரம்பிக்கலாம், ஏனென்றால் சமஸ்கிருதத்தில் ஏரோப்ளேன் பற்றியும், கோபுர வடிவமைப்புக்கள் போன்றவற்றை யூக்ளிடுக்கு முன்பேயும் கூறிவிட்டார்கள். இப்போது நாம் போட்டுக்கொள்ளும் பெனிசிலின் கூட அங்கேயிருந்து வந்ததுதான் - ஹிஹி! அடடா, ஆரிய வாலைப் பிடிக்கவேண்டாமென்றால், பழந்தமிழ் அகராதிகளை போர்க்கால நடவடிக்கைபோல எடுத்து, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் அனைத்துத் தமிழற்ற வார்த்தைகளுக்கும் தமிழ் நிகரொன்றைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அங்கேதான் வரும் பிரச்சினை. நூத்தியெட்டுச் சாதிகள், நூத்தியெட்டு விதமான சொலவடைகள். ஒரு சாதி இன்னொரு சாதி வாலைப் பிடிக்காது. ஆதி தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலைத் தோண்டி குமரிக்கண்டத்திலும் பஃறுளியாற்றங்கரையிலும் இன்னும் தூய்மையைத் தேடவேண்டும். அதிலும் ஏதாவது சாதிகள் இருந்தால் போச்சு. முதற்சங்க நூல்களைக் கண்டுபிடித்தபின் -1, -2 என்ற ரீதியிலும் தேடவேண்டும். அது வேறு விஷயம். அதுதானே முக்கியம் வாழ்க்கைக்கு. என்னடா மெட்டீரியலிஸ்ட்டு ஹெடானிஸ்ட்டு ரேஷனலிஸ்ட்டு, நீ எப்போது ஸ்பிரிச்சுவலிஸ்ட்டு கல்ச்சுரலிஸ்ட்டு நேச்சுரலிஸ்ட்டு ஏஸ்த்தடிஸ்ட்டு ஆவது, உன் கால்களில் ரூட்டை முளைக்கவிட்டு ஊன்றிக்கொள்வது என்ற குரல்களும் நன்றாகவே கேட்கிறது (ஒருவேளை என் மனச்சாட்சியோ அது!?!?). யப்பா சாமி, அதையெல்லாம் ஒருகாலத்தில் தீவிரமாக நம்பி, பித்தம் தெளிந்தபின் அதையே புளிக்கும்வரை தின்று பெரிதாக ஒரு ஏப்பமும் விட்டாச்சு.

நான் உபயோகப்படுத்திய அந்த வாக்கியங்கள், கையில் கிடைத்த முதல் அறிவியல் சஞ்சிகை ஒன்றிலிருந்து random ஆக உருவியது. 100% தூய தமிழ் கொண்டு அறிவியலை வளர்க்கக் காத்திருப்பவர்கள், சால்வையைப் பின்னிப் பிரித்து பின்னிப் பிரித்து பின்னிப் பிரித்தவாறு காத்திருந்த 'ஒடிஸி'யின் பெனிலோப் போலக் காத்திருக்கவேண்டியதுதான். கிரேக்கத்தின், லத்தீனின் மூலக்கூறுகளை தன் தேவைகளுக்கேற்றவாறு கட்டுடைத்து (ஹா, எவ்வளவு பெரிய வார்த்தை, கீழே போட்டால் தரை கிராக் விட்டுவிடும்) ஆங்கிலம் உபயோகப்படுத்திக்கொண்டதுபோல, பின்னொரு காலத்தில் ஆங்கிலத்தையும் வேறொரு மொழி உடைத்து, அதை ஒரு சொற்கிடங்காக மட்டும் உபயோகப்படுத்திக்கொள்ளும் சாத்தியங்களும் உள்ளதென்பதை என்னால் ஓரளவு நம்பமுடிகிறது. தமிழும் ஆங்கிலத்தை அப்படி உபயோகப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இந்தப் பதிவு.

ஜப்பானியர்களின் அறிவியல் ஆராய்ச்சி அமெரிக்கர்களதைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பதால், அவர்களது அறிவியலில் ஆங்கிலத்தின் பங்கு என்ன என்பதுகுறித்து அங்கே இருப்பவர்களது கருத்தையும் அறிய ஆவல்.


Thursday, December 16, 2004

4816/92


தூங்கும் ஜிப்ஸி - ஹென்றி ரூஸ்ஸோ

பரீட்சையில் பாஸ். சரி, அடக்கிவைத்த கையரிப்பை ரிலீஸ் செய்ய ஒரு கதை எழுதினேன். படித்துப்பாருங்கள் (இதைப் படித்துப்பார்க்குமளவு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை). எழுதிய காலம் சாயந்தரம் 5.30 - 8.45; 16 டிசம்பர் 2004!!

4816/92
-மாண்ட்ரீஸர்

அதாவது:

என் நண்பருக்கு வயது நாற்பது. அவரது கையில் எப்போதும் இருக்கும் கறுப்பு ரெக்ஸின் பைக்கு வயது நானூறு என்று நினைத்துக்கொள்வேன். அது கிழிந்து துருத்திக்கொண்டிருக்கும் நூல்பிரிக்கு வயது நாலாயிரமாகக்கூட இருக்கலாமென்றும் யோசிப்பேன். அந்தப் பைக்குள்ளிருந்து எடுத்து நீட்டப்படும் சிகரெட்டுக்காக, அம்மூன்றின் வயதுகளையும் கூட்டினால்கூட முப்பதைத் தாண்டாது என்று கூசாமல் பொய்சொல்வேனென்பதையும் கூறிக்கொள்கிறேன்; என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் பாருங்கள்.

நண்பரின் பெயரைக் கூறுவது இங்கே தேவையற்றது. அவரது உருவத்தை வேண்டுமானால் சற்று விவரிக்கிறேன். எனக்கு அதிகமாகப் பொய்சொல்லும் பழக்கம் உண்டென்பதையும் முதலிலேயே கூறிவிட்டதால், இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். ஒரு சாயலில் பார்த்தால் என் நண்பர் கி. ராஜநாராயணன் மாதிரி இருப்பார். பழக்கவழக்கங்கள் மட்டும் கி.ரா கதையை இருட்டில் படிப்பது மாதிரி இருக்கும். சிலமுறை நூலகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம் எனக்கு அதிர்ச்சியூட்டுவதுதான் அவர் வழக்கம். தொண்ணூறு கிலோமீட்டர் தாண்டிவந்து காத்திருக்கும் நேரத்தில் பொழுதையும் போதையையும் போக்க நானே ஏதொ பாதிக் கிறக்கத்தில் தூசிதும்புக்கிடையில் புத்தகங்களைப் பீராய்ந்துகொண்டிருக்கும்போது ஒரு அலமாரிச் சுவர் என்னைப்பார்த்துப் புன்னகைக்கும். பயத்தில் படக்கென்று ஒருதுளி மூத்திரம் கூட ஒருதடவை வந்துவிட்டது. நன்றாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு பார்த்தால், அலமாரிச் சுவரில் சாய்ந்துகொண்டு இவர் புன்னகைத்துக்கொண்டிருப்பார். திறந்த மணிப்பர்சு மாதிரி இந்தக் காதிலிருந்து அந்தக் காதுவரை. கோயிந்தா நாராயணா, நேரங்காலம் தெரியாமச் சோதிக்காதடா நண்பா என்று நினைத்துக்கொள்வேன். "என்ன தம்பீ இந்தப் பக்கம்" என்பார். இந்த வாக்கியத்தைமட்டும் சிலநூறு முறையும், அந்தப் பொதுநூலகத்தில் பத்திருபது தடவையும் கேட்டிருப்பேன் என்பதைவைத்துக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

அவர் படித்த புத்தகங்களையெல்லாம் அடுக்கினால் அதில் ஏறியே சந்திரனுக்குப் போய் வந்துவிடலாம். நிஜமாகத்தான் சொல்கிறேன். ஒருமுறை, தன் முகத்தையே புரட்டிப் புரட்டிப் படித்துக்கொள்ளலாமென்று சொன்னார் அவர். உண்மைதானென்று தோன்றியது. அந்த வயதுக்கு ஏகப்பட்ட சுருக்கங்கள். பூங்காவில் அமர்ந்துகொண்டு நாங்கள் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது மெலிதாகக் காற்றடித்து அவரது சில சுருக்கங்கள் புரண்டு விழுந்தன. அப்போது அவற்றினடியில் சில வரிகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இருந்தாலும், மேற்கொண்டு படிக்கவிடாமல் என் நாகரீகப் பாடங்கள் தடுத்தன. பெரும்பாலும், புத்தகங்களை அவர் படிக்கப் படிக்க, எழுத்துக்கள் அனைத்தும் ஊர்ந்து அவர்மேல் ஏறிவிடுகின்றன என்று நினைப்பேன். ஒவ்வொரு முறை அவர் ஃப்ரூட்டாங் குடிக்கும்போதும், துளி ஏதும் அவர் கன்னத்தில் வழிந்துவிடக்கூடாதென்று அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன், எழுத்துக்கள் அந்த ஈரத்தில் ஏதும் வழுக்கிக் கீழே விழுந்துவிடுமோ என்று. ஒருதடவை ஃப்ரூட்டாங்கை நக்க மேலேறிய எறும்பின் கால்களில்வேறு பல எழுத்துக்கள் சிக்கிக்கொண்டன, நல்லவேளையாக நான் உடனிருந்ததால், எறும்பைக் காலடியில் போட்டு ஒரே அரையாக அரைத்து, எழுத்துககளைக் கவனமாகப் பிரித்தெடுத்துப் பழையபடி அவர் முகத்தில் பொருத்தினேன். இவ்வளவு நடந்தபோதும் மனிதர், ஆங்கில C போல உட்கார்ந்தவாறே வளைந்து தூங்கிக்கொண்டிருந்தார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமளித்த விஷயம். அவரது சிவப்புநிறக் குற்றாலத்துண்டு மட்டும் கடைவாயில் இறுகச் சிக்கியிருந்தது. ர்ர் ர்ர் என்று நிதானமான குறட்டை வேறு. அவரைச் சற்றுநேரம் ஆதுரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரது நூலக உறுப்பினர் எண் 4816/92. அதாவது, 1992ம் வருடத்தில் உறுப்பினரானதாகவும், எண் 4816 என்றும் கணக்கு என்று நினைக்கிறேன். வருடத் தொடக்கத்தில் முதலில் உறுப்பினராகிறவருக்கு என்ன எண் கொடுப்பார்களென்று தெரியவில்லை. என் அனுமானம், சும்மா உத்தேசமாக 4500 என்ற எண்ணில் தொடங்குவார்கள் என்பது. அந்த நூலகம் மிகவும் பெரியது, அதன் அனைத்து அறைகளையும் நானே பார்த்ததில்லை என்றபோதிலும், 92ம் வருடத்தில் மட்டும் 4815 உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்களென்பதை என்னால் நம்ப முடியாது. ஏனென்றால், 7632/78 என்ற உறுப்பினர் எண்ணையும் நான் எடுத்த சில புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். போதாக்குறைக்கு பெரும்பாலும் ஈயடித்துக்கொண்டிருக்கும் அந்த நூலகத்தில், பிரதான நூலகர் ஒருவரைத்தவிர பிற அலுவலர்களையும் நான் பார்த்ததில்லை. அவரும் தன் மேசைமீது கவிழ்ந்துகொண்டு எப்போதும் எண்களிலேயே உழன்றுகொண்டிருப்பார். எண்கள் மிகவும் அச்சந்தருபவை. நிமிர்ந்து பார்க்கும்போதெல்லாம் எனக்கு க்றிஸ்டோஃபர் லீ ஞாபகம்தான் வரும், அவரது பாட்டி ஏதாவது சைத்தியனுடன் படுத்தாளா என்று கேட்கத்தோன்றும். நாம் இருப்பது நமது ஊர் பாருங்கள். இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசிய.

அன்று அவரைச் சந்தித்தது நூலகத்தில் அல்ல. ரயில்வே கிராஸிங் அருகிலேயே பேருந்திலிருந்து இறங்கி வேல்ச்சாமி கடைக்குள் நுழைந்து, கறுப்பு எலுமிச்சை டீயும் இரண்டு ஆம்லெட்களும் போடச்சொல்லிவிட்டு சிகரெட்டைப் புகைத்தவாறு தினசரியில் அன்றைய 'இந்தக் குண்டி யார் குண்டி' புகைப்படப் புதிரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தென்னங்கீற்றுக் கூரையின் இடுக்குவழியாக நுழைந்த சூரிய ஒளிவேறு சரியாக அங்கே விழுந்து புதிய பரிமாணமொன்றைக் 'கு'னாவிற்கு அளித்துக்கொண்டிருந்தது. இரண்டு இலைகளில் ஆம்லெட் வந்ததும் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தால் - எதிரே நண்பர். முகம் சிறிது கவலையுற்றிருந்தது. ரொம்பக் கவலைப்படாதீங்க தோழர், எழுத்துக்களுக்கு வலிக்கப்போகுது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

"நீங்களே வாங்கி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா தம்பி" என்றார் தோழர். இது எத்தனாவது முறை என்று நினைவில்லை. நான் மையமாகப் புன்னகைத்தேன். "ஒரு சின்னப் பிரச்சினை" என்று சொல்ல ஆரம்பித்தார்.

சில புத்தகங்களைச் சமீபத்தில் எடுத்திருக்கிறார். அவை அப்போது அவரிடம் இருந்தன. அறுசுவை அசைவச் சமையல், ரம் ரம் வைரம், The Life of Peggy Guggenheim ஆகிய மூன்று புத்தகங்கள். என்ன தோழர், வெரைட்டி காட்டறீங்களா என்றேன். பதில் சொல்லாமல், அறுசுவை அசைவச் சமையல் புத்தகத்தின் முதல்பக்கத்தை என்முன் விரித்து வைத்தார். "என்ன தோழர்" என்றேன். நீயே பார் என்ற ரீதியில் பதிலேதும் வராமல் போகவே, அப்பக்கத்தைக் கூர்ந்து பார்த்தேன். அட்டைக்கடுத்த அப்பக்கத்தில், நீலநிறத் தடித்த தாளில் நூலக ஆவணச்சீட்டு ஒட்டப்பட்டிருந்தது - இன்னின்ன தேதியில் இன்னின்ன உறுப்பினர்கள் இப்புத்தகத்தை எடுத்திருக்கிறார்கள் திருப்பியிருக்கிறார்கள் என்ற விபரங்களுடன். தோழர் ஏதாவது புத்தகத்தை ஆட்டையப் போட்டுவிட்டுக் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் கடைசி எண்ணைப் பார்த்தேன். அது தோழரின் எண் தான். 4816/92. மேலும் யோசிக்கவிடாமல், கக்கன்ஹைம் புத்தகத்தையும் அதேபோல என்முன் விரித்து வைத்தார். கடைசியாக எடுத்தது தோழர் தான். அவரது உறுப்பினர் எண் அதிலும் இருந்தது. இடைவெளியேதும் விடாமல் ரம் ரம் வைரத்தையும் அதேபோலப் பிரித்து வைக்க, அதேபோல் அவரது எண். அவரது கைகள் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்தன. நான் சற்றுக் கலவரமடைந்தவனாக, எது அவ்வளவு தெளிவாக இருக்கிறது, எந்த அதை நாம் இப்படிக் கோட்டைவிடுகிறோம் என்று யோசித்தவாறு திரும்பத் திரும்ப அந்த மூன்று ஆவணச்சீட்டுக்களையும், அவை ஒட்டப்பட்டிருந்த தாள்களையும் கவனமாக ஆராய்ந்தேன். அம்மூன்று புத்தகங்களில் ரம் ரம் வைரத்தை மட்டும் ஏகப்பட்ட பேர் படித்துக் கிழித்திருந்தார்கள். குதறப்பட்ட சொறிநாய் மாதிரி இருந்தது புத்தகம். அறுசுவைச் சமையலுக்கு அடுத்த இடம். சிலர் மட்டும். கக்கன்ஹைம் புத்தகத்தைத் தோழருக்கு முன்பாக ஒரே ஒரு ஆசாமி மட்டும் எடுத்திருந்தான். அல்லது எடுத்திருந்தாள். நான் நிமிர்ந்து தோழரைப் பார்த்தேன். அவரது கண்களில் தெரிந்த கலவரம் என்னை மேலும் குழப்பியது, அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் நுனி கொள்ளிக்கட்டை போலாகியிருந்தது. அவரது துண்டை எடுத்து ஏற்கனவே மேசைமீது போட்டிருந்தார்.

மறுபடிப் பார்க்க ஆரம்பித்தபோது சட்டென்று என் பார்வை கூர்மையடைந்தது. கக்கன்ஹைம் புத்தகத்தை எடுத்த மற்றொரு ஆசாமியின் உறுப்பினர் எண் 4815/92. சட்டென்று பிற புத்தகங்களையும் பார்த்தேன். தோழருக்கு முன்பாக அந்த இரண்டு புத்தகங்களையும் அதே ஆசாமி எடுத்திருந்தான். நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தேன். "சுவாரஸ்யமான விஷயம் தோழர், இந்தச் சகநிகழ்வு. வித்தியாசமான மூன்று புத்தகங்கள், மூன்றையும் உங்களுக்குமுன்பாகப் படித்தது ஒரே ஆள். ஒருவேளை உங்கள் இருவரது ரசனைகளும் ஒரேபோலிருக்கின்றதோ என்னவோ" என்றேன். நரேந்திரன் போல, தோழர் சிகரெட்டை ஆழ இழுத்துப் நெஞ்சுநிறையப் புகையை நிரப்பி வெளியேற்றினார். "மூன்று புத்தகங்கள் அல்ல, நானூற்றி ஐம்பத்தாறு புத்தகங்கள்" என்றார்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். "என்ன சொல்கிறீர்கள்?" தன் ஸ்கபால் சூட்டைப் போட்டுக்கொண்டு ஏதாவதொரு பெண்ணிடம் அவர் உறவுகொள்ளும் அனைத்து நாட்களுக்கடுத்த பகல்களிலும் இதுபோல ஏதாவது வினோதமாகச் சொல்வது தோழரின் வழக்கம். "நேற்று ஸ்கபால் வேலையா தோழர்" என்றேன்.

"இது நடந்துகொண்டிருக்கிற ஒரு விஷயம். கடந்த பத்தொன்பது மாதங்களாக. போன ஆவணியில் ஆரம்பித்தது" என்றார், நாடகீயமாகக் குரலைத் தாழ்த்திக்கொண்டு. "நேற்றுக் காலையிலேயே நூலகத்துக்குப் போய்விட்டேன். நான் படித்த புத்தகங்களின் பெயர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு" தன் சட்டைப்பையிலிருந்து மடிக்கப்பட்ட சில காகிதங்களை உருவி மேஜைமேல் வைத்தார். "இதைக் கொண்டுபோய் அனைத்துப் புத்தகங்களையும் மறுபடிப் பார்வையிட்டேன். நான் படித்த அந்த அத்தனை புத்தகங்களையும் எனக்குமுன் படித்திருப்பது இதே ஆசாமிதான். உனக்கு இது ஆச்சரியமளிக்கலாம், எனக்கு ஏனோ கவலையாக இருக்கிறது" என்றார், குரலில் நிஜமான குழப்பத்துடன்.

"அல்லது, அந்த ஆசாமி படித்து முடிக்கும் அனைத்துப் புத்தகங்களையும் அவனுக்கடுத்து நீங்கள் படிக்கிறீர்கள்" என்றேன்.

"மிகச் சரி" என்றார். "பிரச்னை என்னவென்றால், இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு வாரத்துக்கு முன்பாக நான் கண்களை மூடிக்கொண்டு தேர்ந்தெடுத்தேன்"

"என்ன சொல்கிறீர்கள்?"

"இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தபின், நான் புத்தகங்களைப் புரட்டிப்பார்த்துத் தேர்ந்தெடுப்பதில்லை. ஏதோவோர் அறையின் ஏதோவோர் அலமாரிமுன் போய் நின்றுகொண்டு ஏதோவோர் திசையில் கைநீட்டிப் புத்தகத்தை உருவுவேன். இதுபோல ஒவ்வொரு முறையும் மூன்று புத்தகங்கள். அவற்றைப் பிரித்துப் பார்த்தால், அப்புத்தகங்களைக் கடைசியாகப் படித்த ஆசாமி 4815/92 வாக இருப்பான். கடந்த பதினாறு முறைகள் - நாற்பத்தெட்டுப் புத்தகங்களாகத்தான் இதைக் கவனித்து வந்திருக்கிறேன். அதன்பின் நேற்றுப் போய் பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோதுதான், இது இவ்வளவு நாட்களாக நடந்துவந்திருக்கிறதென்று தெரிகிறது. சொல்லப்போனால், நான் அந்த நூலகத்தில் உறுப்பினராகி எடுத்த அனைத்துப் புத்தகங்களையும் அவன் படித்தபின்தான் நான் படித்திருக்கிறேன். அவன் அல்லது அவள் யாரென்று தெரிந்துகொள்ள நூலகரிடம் விசாரித்தேன். அவர் பதிவேடுகளைப் பார்த்தபோது அந்தப் பக்கம் இல்லை."

நான் சிரித்தேன். "அப்போது உங்கள் எண்ணும், விலாசமும்கூட இல்லையா அதில்? அடுத்த எண்ணாயிற்றே?"

"என் எண், பதிவேட்டின் ஒரு புதுப் பக்கத்தின் முதல் பதிவு. புரிகிறதா? முந்தைய பக்கம் காணோம் தம்பீ, அதுதான் பிரச்னையே."

"அப்போது எப்படித் தினமும் புத்தகம் எடுக்கிறான் அந்த ஆள்? எனக்கு அந்தக் கிழட்டு நூலகன் மேல் சந்தேகம். ஒருநாள் என் செருப்புக் காலை அவன் வாய்க்குள் திணிக்கப்போகிறேன்" என்றேன், எரிச்சலுடன். "அவனைப் பிடித்து உதையுங்கள் ஒரு நாள்."

"வேறொரு மாதிரி நான் யோசித்தேன் தம்பி" என்றார் அவர். "அதாவது, அந்த நூலகத்தில் நான் படிக்கவேண்டிய அத்தனை புத்தகங்களையும் அவன் ஏற்கனவே படித்துவிட்டான் தம்பி. அதை நான் படித்து முடிக்கவேண்டியதுதான் பாக்கி. இது ஒரு நோய் மாதிரி ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளேன். ஒவ்வொரு மாதமும் இருபதிலிருந்து முப்பதுக்குள் புத்தகங்கள் படித்துவிடுகிறேன். சிலநாட்களில் ரைஸ்மில்லை மூடிவிட்டுக்கூட வீட்டிலிருந்து படிக்கவேண்டியதாகிப்போகிறது - பெரிய புத்தகங்களாகப் படித்து என்னை மாட்டிவிட்டுவிடுகிறான் சண்டாளன். நான் படிக்கவேண்டாமென்று நினைக்கும் புத்தகங்களைக்கூட இதனால் படிக்கவேண்டியதாய்ப் போய்விடுகிறது. சற்று நாள் முன்பு ஜஸ்டீன் என்ற புத்தகத்தைப் படித்தேன் தம்பி. என்ன கொடுமை. சிலசமயங்களில் என்னை வேண்டுமென்றே அவன் பழிவாங்குகிறான். இதை நான் கண்டுபிடிக்குமுன்பு, The Future lasts forever புத்தகத்தை மட்டும் ஒன்பது முறை படித்திருக்கிறேன். அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன், அடுத்து அவன் படித்திருப்பான், அடுத்து நான் படித்திருப்பேன் - ஒன்பது முறை, தம்பீ. இப்போது அல்துஸ்ஸர் என்ற பேரைக் கேட்டாலே வாந்தி எடுத்துவிடுவேன். சில நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறான் என்பதையும் என்னால் மறுக்க முடியாது. Dreams of a young girl புத்தகத்தைப் பார்த்து, வாசித்தபிறகுதான் ராபெ-க்ரியெவின் பிற புனைகதைகளைப் படித்தேன் - அது எனக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும், இது எனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை தம்பீ. தமிழிலும் ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் நான் படித்த புத்தகங்களை நானாகப் படித்தேனா இல்லை படிக்கச் செய்யப்பட்டேனா என்பதும் ஒரு கேள்விக்குறியே. இத்தனை புத்தகங்களின் பெயர்களையும் ஆசிரியர்களையும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் என்ன பயன் அதனால்? அத்தனையையும் படித்துவிட்டேனே, அதற்குமேல் என்ன உபயோகம் அதனால்? குறிப்பாக, போர்ஹேஸின் Labyrinths தொகுதியைப் படித்ததுதான் அதீத நகைமுரண். மேற்கொண்டு நான் விளக்காமலே உனக்குப் புரியும்".

ஆம்லெட்டுகளையும் டீயையும் சிகரெட்டுகளையும் சலிக்குமளவு தீர்த்திருந்ததால், கிளம்பலாமா என்ற ரீதியில் அவரைப் பார்த்தேன். நூலகத்துக்கு வந்தால், நிலைமையை நேரடியாக விளக்குவதாகக் கூறினார். எனக்கும் இன்னும் சிலமணி நேரங்கள் செலவழிக்க இருந்ததால், கிளம்பினேன். பொருட்காட்சியின் ராட்டினம் காம்பவுண்டுச் சுவர்களுக்கு மேலாகச் சீரான வேகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது. சின்னதாகத் தூறல் விழுந்திருக்க, வெப்ப மணம் காற்றில் ததும்பிக்கொண்டிருந்தது. வழியெங்கும் புன்னகைகள், பணத்தை நாளைக்குக் குடுத்திர்ரேன் தம்பிகள், சுக்கா வறுவல், மல்லிகைப்பூ மணங்கள்.

"தோழர். நமக்குப் புத்தகம் படிக்கச் சொல்லிக்கொடுத்ததே நீங்கள்தான். இப்போது உங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை. ஒருவேளை அவன் படித்து நீங்கள் படித்த புத்தகங்களையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்கிறேனோ? ஏனென்றால் சமீபகாலமாக நானும் அதிகமாகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பெரும்பாலும் ரமணிசந்திரன் நாவல்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஞானபீடம் பெறத் தகுதியுள்ள ஒரே எழுத்தாளர். அகிலனைவிட எவ்வளவோ மேல்" என்றேன்.

தோழர் புன்னகைத்தார். "ரமணிசந்திரன் ஒரு தலையாய இலக்கிய சக்தி என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன் தம்பி. ஆனாலும், ஞானபீட விருது மிகவும் குறைச்சல். அதற்கு மேலும் அங்கீகாரம் வேண்டும்" என்றார். அதற்குள் நூலகம் வந்துவிட்டிருந்தது. நூலகர்க்கிழடு வழக்கம்போல பெயர்களையும் எண்களையும் உழுதுகொண்டிருந்தது. "இருந்தாலும், தம்பீ, அவன் படித்து நான் படித்து நீங்கள் படிப்பது என்பதெல்லாம் சும்மா. ஏதாவது கதைக்கு வேண்டுமானால் உபயோகமாயிருக்கலாம். வேண்டுமானால், நீங்கள்தான் அவன் என்று நான் நினைத்துக்கொள்ளலாம். அது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்."

நான் ஒன்றும் பேசாமல் நடந்தேன். ஒரு அறைக்குள் கண்களை மூடிக்கொண்டு நுழைந்தார் தோழர். அவ்வாறே சுற்றிச்சுற்றி நடந்தவாறு ஒரு அலமாரி முன் நின்றார். நீட்டிய அவரது கை பச்சைநிறத்தில் பைண்டு செய்யப்பட்ட புத்தகமொன்றை உருவியெடுத்தது. "அதுதான் தெரியுமே, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி" என்றார். புத்தகத்தை வாங்கிப் பிரித்தேன். சில பேர் மட்டுமே எடுத்திருந்தார்கள். கடைசியாகப் படித்த ஆளின் எண், 4815/92. நான் நம்பிக்கையற்றுப்போய் அவரை மறுபடிப் பார்த்தேன். "என்ன புத்தகம் அது" என்றவாறு கண்களைத் திறந்தார். The world as will and idea. சரி தான் என்றவாறு, திரும்பவும் கண்களை மூடிக்கொண்டு, மரப்படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினார், வேறு தளத்துக்குப் போகலாம் என்றவாறு. மௌனமாக அவரை நான் தொடர, சிலர் வினோதமாகப் பார்த்தவாறு கடந்துசென்றனர். வெவ்வேறு தளங்களில், கண்ணை மூடியவாறே மேலும் இரண்டு புத்தகங்களை உருவினார். அதிகப்படியாக மூன்று புத்தகங்கள்தான் எடுக்கமுடியும் ஒரு நாளில். பிற இரண்டையும் கடைசியாகப் படித்திருந்தவன் 4185/92 தான். வேறென்ன இருக்கப்போகிறது. ஆடு போல அவரைத் தொடர்ந்தேன். கடைசியாக நான் படித்த ஐந்தாறு புத்தகங்களை என்னால் நினைவுகூர முடிந்தது. அவரை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அப் புத்தகங்களைத் தேடினேன். ஐந்து புத்தகங்களைக் கண்டுபிடிக்கமுடிந்தது. ஐந்து புத்தகங்களையும் எனக்குமுன்பு வேறுவேறு வாசகர்கள் படித்திருந்தனர். என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. தோழரின் எண்ணோ அவனின் எண்ணோ எந்தப் புத்தகத்திலும் இல்லை. ஒருவேளை அவர் இதையும் பலமாதங்கள் முன்பு படித்திருக்கலாம், அந்த ஆவணச்சீட்டு மாற்றப்பட்டிருக்கலாம். இருந்தாலும், இப்போதைக்கு ஆசுவாசமே.

நூலகத்துக்கு வெளியே வந்தேன். சாயங்காலம் ஆகியிருந்தது. அகலக் கொம்புகளுடன் எருமைகள் தெருவில் அசைபோட்டவாறு நுழையத்தொடங்கின. தோழர் - வேறென்ன, சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார், உலகத்தில் வேறு எதையுமே செய்யமுடியாதது போல. "இதற்கு என்ன முடிவு தோழர்" என்றேன். "எனக்குப் பிரச்னை இல்லை, எனக்கு இதுமாதிரி ஆசாமி யாரும் கிடையாது" என்றேன்.

"என் விஷயத்தில், அது ஒரு பெண்ணாக இருக்குமென்று நினைக்கிறேன்." என்றார்.

"இது எப்போது முடியுமென்று நினைக்கிறீர்கள்? அல்லது முடியாதா?"

அவர் என்னைநோக்கித் திரும்பினார். அந்தப் பார்வையிலிருந்த ஏளனத்தை, பரிகாசத்தை, விவரிக்கமுடியாத அந்த உணர்வுறுத்தலை அதற்கு முன்பும் பின்பும் நான் கண்டதில்லை. அதன்பிறகு நாங்கள் எப்போதும் சந்தித்துக்கொள்ளவுமில்லை.

Sunday, December 12, 2004

ஒரு quickie...

இந்த அவசரத்திலும்....
மேட்ரிக்ஸ் தமிழ்லோடட்...
சாமியார் - Neo
சாமியின் தம்பி - Agent Smith
டாக்குட்டர் - Creator (குறுந்தாடி விஞ்ஞானி)
Oracle தான் காணோம்.
நீட்ஷேவின் Superman theory வேறு. Eternal recurrence theory யைக் காணோம். ஓ, இருக்குவேதப் பூரணத்தை மறந்துவிட்டேனே....

heh hee!!

Tuesday, December 07, 2004

விரதம் பத்துநாள்



சரி தம்பி, நீ படிப்பது எப்போது என்று மனசாட்சி கேட்கிறது. சால்வடார் டாலியின் இந்த ஓவியம் போலக் காலம் உருகி ஓடுகிறது. எனது PhD முதற்கட்டத் தேர்வு இன்னும் பத்து நாட்களில் இருப்பதால், சற்றுநாட்களுக்கு வலைப்பதிவிலிருந்து கழட்டிக்கொள்கிறேன். இப்போதும் பஜன் பாடிக்கொண்டிருந்தால் சீட்டுக்கடியில் பெரிதாய் ஒரு குண்டு வைத்துக் காலி பண்ணிவிடுவார்கள். ஒரு பத்துநாள் விரதத்துக்குப்பின் திரும்ப வருகிறேன். நன்றி வணக்கம்.

Saturday, December 04, 2004

மூன்றாவது அறிவியல் கதை - ஜெயமோகன்

ஜெயமோகனின் இந்த மூன்றாவது அறிவியல் கதை எனக்குப் பிடித்திருந்தது. பறவையியல போன்ற ஒரு out of the box விஷயம் குறித்து முதன்முதலாக (குறைந்தபட்சம் நானாவது) தமிழில், அதுவும் புனைகதையில் படிப்பதாலும், மற்றப்படி வசனம் எழுதி இம்சை பண்ணாததாலும் ஒரு மகிழ்ச்சி. பறவைகளைத் திசைமாற்றிவிட்டதாக நஞ்சுண்டராவ் மகிழ்ச்சிகொள்ளும் அதே வேளையில், 'திசைமாற்றம்' என்பதை அர்த்தமற்றுப் போகச்செய்யுமாறு நடப்பதாக விவரிக்கப்படும் பிற இடப்பெயர்வுகள், 'point of reference' என்பதை அர்த்தமற்றுப் போகச்செய்கின்றது என்பதாகக் கதை விவரிப்பதாக நான் கொள்கிறேன். நஞ்சுண்டராவின் point of reference எகிப்து, அவர் மட்டிலும் அது வெற்றியாக இருப்பினும், அது எந்தமட்டிலும் உண்மை? சிறுவயதில் வட்டமான பலூனைப் பலவிதமாக ஒடித்துத் தற்காலிக மிருக உருவங்கள் செய்யும் வித்தைக்காரன் கடைசியில் படக் என்று அதைக் காணாமல் போகச்செய்யும்போது மறுபடியும் வட்டமான பலூன் கிடைப்பது, நமது வட்டயோசனைகளை, முழுமை குறித்த சிந்தனைகளை எளிதில் விளக்கும் ஒரு சந்தர்ப்பம். நஞ்சுண்டராவின் point of reference அந்தத் தற்காலிக பலூன் மிருகத்தின் ஒரு இணைப்புக்கண்ணி (joint) தான். அந்த இடத்திலிருந்து பார்க்கும்போது தெரிவது மிருகம் மட்டுமே, அதன் பிற கண்ணிகளிலிருந்து பார்க்கும்போது தெரிவதும் (அல்லது நாம் காண விரும்புவதும்) மிருக உருவம் மட்டுமே, ஆனால் அவற்றின் அர்த்தங்கள் அனைத்தும் தற்காலிக அர்த்தங்களே.

1) சுருக்கமாகச் சொல்வதென்றால் - இதைக் கற்பனை செய்யுங்கள்: அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், வானம் தெரிகிறது, தொடுவானம் வரைதான் நம் பார்வை எட்டும் என்பதால், வானம் என்பதை ஒரு வட்டமான துணி என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் இரண்டு reference point களான சூரியனையும் சந்திரனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். இப்போது நாம் அந்தத் துணியைப் பார்க்கிறோம், மறுபடி சற்று நேரம் கழித்தும் பார்க்கிறோம். அந்தத் துணி வலப்பக்கமோ இடப்பக்கமோ சுழன்றதா என்று நம்மால் கூற இயலாது.

2) ஆனால், சூரியனோ சந்திரனோ அதில் இருந்தால் (heliocentric theory யை மறந்துவிடுங்கள், சூரியன் சந்திரன் என்பதை, வானத்துடன் சேர்ந்து சுழலும் இரு புள்ளிகளாக மட்டுமே கொள்ளுங்கள்), வட்டத்துணி சுழன்றதா இல்லையா என்று கூறமுடியும்.

கதையைப் படித்து நான் ஊகித்துக்கொண்டது - கருணாகர ராவின் யோசனை முதலாவதை அடிப்படையாகக் கொண்டது, நஞ்சுண்ட ராவின் சிந்தனை இரண்டாவதை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில், முழுமை என்ற சாத்தியத்தை அறியமுயல்வதற்கு (அல்லது உருவாக்க முயல்வதற்கு!!) மேற்கண்ட இரண்டு சாத்தியங்களுடன் இதைப்போன்ற கணக்கற்ற சாத்தியங்களையும் உருவாக்கியே ஆகவேண்டும். அறிவியல் முறைப்படி சொல்லப்போனால், ஒரு infinitesimal and self-perpetuating hypothesis testing model. சமீபகால் அறிவியலில், எனக்குத்தெரிந்து உயிரியல் துறையில், இதேபோன்ற கருத்தாக்கங்கள், கட்டுப்படுத்தி வலைப்பின்னல்கள் (regulatory networks) என்ற அளவில், ஒரு உயிரினம் எந்தெந்த விதங்களில் கட்டுப்படுத்தப்படுகிறது, அக் கட்டுப்படுத்தல்கள் எந்தெந்த விதங்களில் வாழ்வின் இயக்கத்தை, வசதியை அல்லது வசதியின்மையைத் தீர்மானிக்கிறது என்று ஆராய உபயோகப்படுத்தப்படுகிறது. இதைப்பற்றி ஒரு சுருக்கமான சிறுகட்டுரையைக் காண இங்கே சுட்டவும். மேற்குறிப்பிட்ட infinitesimal model என்பது இயந்திரவியலில் வர வாய்ப்பிருப்பினும், உயிரியலில் வரச் சாத்தியமில்லை என்பது என் அபிப்ராயம். இயந்திரங்கள் உருவாகுமுன்பே அதன் பயன் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது (பெரும்பாலும், அவை தேவை சார்ந்தவை (need based) என்பதால்; அறிவியல் விபத்துக்களே பின்னால் பெரும் கண்டுபிடிப்புக்களாகியிருக்கின்றன என்பதையும் நாம் மறுக்கமுடியாது), ஆனால் உயிர் என்பதன் நோக்கம் குறித்து நமக்கு முன்னும் தெரியாது, பின்னும் தெரிய வாய்ப்பில்லை என்று நான் கருதுவதால் அந்த அபிப்ராயம்.

இதைப்பற்றி மேலும் விளக்கமாகக் கூற தற்போது சந்தர்ப்பமில்லை, மனமுமில்லை என்பதால், இந்தச் சுட்டியைத் தொடர்க - அது விளக்கமோ எதிர்ப்போ இல்லை, ஒரு தொடர்ச்சி, அவ்வளவுதான். நல்லவேளையாக இது இணையத்தில் முழுதாகக் கிடைக்கிறது, இல்லையெனில் லொங்கு லொங்கு என்று தட்டச்சு செய்யவேண்டியதாயிருந்திருக்கும்... ஜார்ஜ் பெர்க்லியின் 'ஹைலாஸ் அண்ட் ஃபிலொனஸ்' நான் விரும்பிப் படித்த ஒரு படைப்பு. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை காந்திமண்டபம் நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது. விருப்பமுள்ளவர்கள், நேரமுள்ளவர்கள் அதைத் தொடரவும்.....

Thursday, December 02, 2004

லேட்டஸ்ட் துண்டு சுழற்றல்...

'சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்று என்ன உபயோகம்' என்று ஒரு பழமொழி உண்டு. கருணாநிதிக்கு அது உபயோகமாகத்தான் இருக்கிறது என்பதால் பழமொழியை மறுபரிசீலனை செய்யவேண்டியதாயுமிருக்கிறது. சங்கரர் கைது, கொலைசெய்யப்பட்டதும் ஒரு சங்கரராமன் - ஆக, கருணாநிதி நாக்கில் சங்கர குடித்தனம்தான்; வாயைத் திறந்தாலே சங்கரா சங்கரா கூச்சல்தான் சமீபகாலமாக. ஜெயலலிதா அரசாங்கம் சங்கரராமன் குடும்பத்துக்குக் கொடுத்த ஐந்து லட்சம் போல கொலையாகும் பிற அனைவரின் உறவினர்களுக்கும் அரசு உதவி செய்யுமா என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்! சாத்தான் வேதம் ஓதுவது என்று இதைத்தான் சொல்வார்கள் போல.

முதலில்: கொலையான ஒருவர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிப்பது என்பதை, ஜெயலலிதாவோ கருணாநிதியோ யார் செய்துவந்திருந்தாலும், அதை அரசியலாக்கிப் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் பார்ப்பதே நாகரிகம். அந்த அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் உளறுவது கோபாலபுரத்து மடத்தலைவரால் மட்டுமே முடியும். மேலும், சங்கர மடம் போன்ற பெரும் ஸ்தாபனத்தை எதிர்த்ததால் கொலைசெய்யப்பட்டவரின் குடும்பம், அதே ஊரில் வசித்துக்கொண்டு பாதுகாப்பாக உணரமுடியுமா? பணத்தால் என்ன பாதுகாப்பு என்பார் மஞ்சத்துண்டு. சங்கரராமனின் குடும்பத்தார் என்ன சன் டிவி உரிமையாளர்களா வீட்டில் பணம் மரத்தில் காய்த்துத் தொங்க? சம்பாதித்துக்கொண்டிருந்த ஆசாமி இப்போது இல்லை. சோறு தின்னவேண்டாம்? ஒருவேளை காஞ்சிபுரத்தில் கஞ்சித்தொட்டி திறக்கலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ கருணாநிதி. கொலையானவர்களுக்கெல்லாம் கொடுப்பாரா பணத்தை என்றால்? வாய்க்கால் வரப்புத் தகராறில் கொலையாகிறவர்களைப்பற்றியா பத்திரிகைகளும் சன் டிவி போன்ற 'Fair and balanced' தொலைக்காட்சிகளும் நம்மைப்போன்ற இணையர்களும் எழுதி, காட்டிக் கிழிக்கிறார்கள்? இதை உதவி என்று கூறாமல், ஊடகங்கள் எழுதிக் கிழித்ததால் காணாமற்போன சங்கரராமன் குடும்பத்தின் நிம்மதிக்காக சமுதாயம் கொடுக்கும் நஷ்டஈடு என்று கூறலாமென்று நினைக்கிறேன்.

இந்து வெளியிட்டிருக்கும் செய்தியின் தலைப்பிலுள்ள poser என்ற வார்த்தையை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அகராதி அர்த்தத்தையும் சுட்டியைச்சுட்டித் தெரிந்துகொள்ளவும். வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்துவுக்குள்ள அக்கறை நாம் அறிந்ததுதானே!

போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறது அரசு என்பார். உதவியேதும் செய்யாமல் நட்டாற்றில் விட்டால், என்ன மனிதாபிமானமற்ற அரசு என்பார். எதிர்க்கட்சியாக ஜெயலலிதா இருந்திருந்தாலும் இதேபோலக் கூவிக்கொண்டிருந்திருக்கச் சாத்தியமுள்ளது. ஆனால், அராஜகம், தான்தோன்றித்தனம், முரட்டுப் பிடிவாதம் போன்ற பிம்பங்களை உபயோகித்து ஜெயலலிதாவைத் தாக்கும் கருணாநிதிக்கு, அவையெல்லாம் அவரது ஜாதி அரசியல் வாழ்வைவிட எந்தவிதத்திலும் கேவலமானவை அல்ல என்ற உண்மை விளங்காமலா இருக்கும்? ஒருவேளை தா.கி குடும்பத்துக்கும் ஜெயலலிதா ஐந்து லட்சம் கொடுக்கவில்லை என்ற கோபமோ என்னவோ?

Wednesday, December 01, 2004

ஒரு சந்தேகம்...

ஒரு சின்ன சந்தேகம் - சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு இந்தக் கேள்வி. e, o என்ற ஒலிகளின் குறில் ஓசை சமஸ்கிருதப் பேச்சுவழக்கில்/எழுத்துவழக்கில் இருக்கிறதா, அல்லது இருக்கவாவது செய்ததா? e என்பது 'எ' வைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். 'o' என்பது 'ஒ'வைக் குறிக்கிறது.
உதாரணத்துக்கு, 'எந்த' 'ஒப்புமை' போன்ற தமிழ்ச்சொற்களில் வரும் முதல் எழுத்தின் குறில் உச்சரிப்பு சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? அந்தக் குறில் உச்சரிப்புக்களுடன் தொடங்கும் வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளனவா?

தினமும் தூங்கப்போகுமுன்பு சிறிதுநேரம் படிக்கும் வழக்கம் உள்ளதால், தற்போது என்னிடம் சிக்கிக் கதறும் புத்தகங்களில் ஒன்று கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம். அதில் உள்ள ஒரு கூற்றை சரியா என்று தெரிந்துகொள்ளவே மேற்கண்ட கேள்வி. சிலநாட்களுக்குமுன்பு Thanksgiving விடுமுறையைச் சாக்கிட்டு நண்பர்களுடன் சேர்ந்து தண்ணியடித்துக்கொண்டிருந்தபோது ஏதோ பேச்சினிடையில் ஒரு நண்பன் சர்வசாதாரணமாக, 'என்ன இப்படிச் சொல்றே, சமஸ்கிருதத்திலிருந்துதானே தமிழ் வந்தது' என்றான் சர்வசாதாரணமாக, எனக்கு மண்டை காய்ந்துவிட்டது! தமிழ் தனி மொழி என்று நான் சொன்னதைப்பார்த்து அவன் அடைந்த அதிர்ச்சியையும் வியப்பையும் பார்த்ததும் எனக்கு மூச்சே நின்றுவிட்டது! போதாக்குறைக்கு டக்டக்கென்று வலையைத் தட்டி கூகிள் மரத்தின்மேல் ஏறி ஒரு அவசரக் கிளையில் உட்கார்ந்துகொண்டு, நண்பா இங்கே பார் என்றான். தெரியாத்தனமாக ஒரு தமிழ்க் காட்டானிடம் வம்பு வைத்துக்கொண்டுவிட்டாய் தம்பி (சும்மா டமாசு...) என்று சிலநிமிடங்களுக்குள் ஒரு ஆவேசமான கிழவிவேச நடனம் ஆடிமுடித்தேன். அவ்வப்போது சிறிதுசிறிதாய் அந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபடியால், என் அறிவுப்பயிற்சியை, ஞான நீர்த்தேக்கத்தையெல்லாம் (ஹிஹி!!) முழுவீச்சுடன் உபயோகித்தேனென்பதையும், ஆற்றில் தண்ணீர் இருக்கிறது, மோரில் தண்ணீர் இருக்கிறது, ஆகவே ஆறுதான் மோரு என்ற ரீதியில் அரிஸ்டாட்டிலிய syllogism (இதற்குத் தமிழ்ப்பெயர் என்ன?) அம்புகளை விட்டேனென்பதையும் சொல்லவேண்டுமோ?

நிற்க. மேலே நான் குறிப்பிட்ட இவ்விரண்டு குறில் ஒலிகளும் சமஸ்கிருதத்தில் கிடையாது என்று குறிப்பிட்டு, தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து தனித்த ஒரு மொழி என்பதை நிறுவ உதவும் ஆதாரங்களிலொன்றாக அதைக் குறிப்பிடுகிறார் - எனக்குப் புரிந்த வரையில். சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது, இருந்தாலும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே என்றுதான். சந்தேகம் ஏனென்றால், 'ட்ட' என்று ஒலிக்கும் 'ட' போன்ற surd களை முதலெழுத்தாகக் கொண்ட வார்த்தைகள் தமிழில் இல்லை என்றும் கூறுகிறார், நிகண்டுகளைப் புரட்ட வாய்ப்பில்லாததால், 'டக்கர்' போன்ற உதவாக்கரை slangகள் தான் நினைவுக்குள் வருகிறது!! மேலும், Town bus என்னும் சொல் தமிழில் உச்சரிக்கப்படும்போது Davun bassu என்றாவதையும் யோசித்துப் பார்க்கும்போது, அக்கூற்று பெரும்பாலும் சரியாகத்தானிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு விஷயத்தைச் செய்யும்போது வேறுசிலவும் தானே வந்து சேரும். ஆங்கிலத்தில் தமிழ்ச்சொற்களைக் குறிப்பிட்டுவிட்டு, சில இடங்களில் அடைப்புக்குறிக்குள் கிரேக்கத்தில் அதே சொற்களைக் குறிப்பிட்டிருப்பார். விளையாட்டாக ஆங்கிலப்பெயர்களைக் கையால் மறைத்துக்கொண்டு கிரேக்கப் பெயர்களை நேரடியாகப் படிக்கமுயன்றால்... படிக்கமுடிந்தது! அதுதான் ஆச்சரியம். ஆல்ஃபா, பீட்டா, காமா, எப்ஸிலான், டெல்டா, பை என்று பெரும்பாலான கிரேக்க எழுத்துக்களும் சில சொற்களும் பள்ளியிலும் கல்லூரியிலும் பரிச்சயமாயிருப்பதால், பெயர்ச்சொற்களை நம்மில் பெரும்பாலானோரால் சுலபமாகப் (90% சரியாக என்றால் ஏதும் அர்த்தமாகிறதா என்று தெரியவில்லை) படிக்கமுடியுமென்று தோன்றுகிறது. பெயர்ச்சொற்கள் என்பதால் சுலபம் என்று தோன்றுகிறதென்று நினைக்கிறேன், வார்த்தை என்ற அளவில் சரி, மற்றதெல்லாம் இப்போதைக்கு நேரங்கொல்லி வேலைகள்தான்.