Tuesday, April 05, 2005

Disgrace

ஐம்பத்திரண்டு வயது, இரண்டு முறை விவாகரத்தான வெள்ளைக்காரப் பேராசிரியர் டேவிட் லூரீ, வெள்ளை ஆட்சியிலிருந்து மண்டேலா தலைமைக்கு மாறிய தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆட்சி மாற்றத்தின்பின், பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தாலும், முன்னமிருந்த உயிர்ப்பில்லாததுபோல் தோன்றினாலும், பொறுப்பாகவே வகுப்புக்களை நடத்தி வருகிறார். வதங்கிக்கொண்டிருக்கும் இளமையைக்குறித்தா அல்லது சுற்றியுள்ள சூழல்மாற்றம் திணித்த வெறுமையா அல்லது பெரும்பாலான குட்ஸீ புத்தகங்களிலும் வரும் "அவன்"களிலுள்ள உள்ளார்ந்த அகன்ற (detached), அபத்தத்தின் விளிம்பில் நின்று சாவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு அ-பிரக்ருதியின் சுவாரஸ்யமின்மை என்றோ விளக்கமுடியாத நியதிச்சக்கரத்தின் ஒரு பல்லாகத் தினமும் சுழன்றுகொண்டிருக்கிறார். சொராயா என்னும் விலைமாதுவுடன் பொழுதைக் கழிக்கையில், "சின்ன அறுவைசிகிச்சைதான்: மிருகங்களுக்குத் தினமும் செய்கிறார்கள், சின்ன வருத்தத்தைத்தவிர பெரும்பாலும் அவை நல்லபடியாகவே தொடர்கின்றன. முடிச்சுப் போடுதல், கத்திரித்தல்: வலிநீக்கி மருந்து, நடுங்காத கை, பாடப்புத்தகங்களிலிருந்துகூடச் செய்துவிடலாம். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் தனதைத் தானே அறுத்துக்கொள்வது: அசிங்கமான காட்சி, ஆனால், ஒருவகையில் பார்க்கையில், அதே மனிதன் தன்னை ஒரு பெண்ணுக்குள் செலுத்திக்கொள்வதைவிட அசிங்கமானதொன்றுமல்ல" என்று தன்னைத்தானே காயடிப்பதைப்பற்றி யோசித்துக்கொள்கிறார். தற்காலிகமாகப் பிடிப்புவைத்திருக்கும் சொராயா, தனது கணவனுடன் வேற்றிடம் போகிறாள். லூரீ தொலைபேசியில் அவளைப் பிடிக்க, குடும்பத்துடனிருக்கும்போது லூரீ அழைத்துவிட்ட அருவருப்பு அவள் குரலில் தெரிய, திரும்பி வருகிறார்.

நகரத் தெருக்களில் போய்க்கொண்டிருக்கும்போது மரூன் நிற குட்டைப்பாவாடை மஞ்சள்நிற மேல்சட்டை என்று நடந்துபோய்க்கொண்டிருக்கும் மெலனி ஐஸாக்ஸ் என்ற தனது மாணவியொருத்தியைச் சந்திக்கிறார். பின் அவரது வீட்டில் அவர்கள் உணவருந்திவிட்டு காஃபியில் சிறிது விஸ்கியை ஊற்றி அருந்திக்கொண்டிருக்கும்போது லூரீ கூறுகிறார்: "இரு. இரவை என்னுடன் கழி"
"ஏன்?"
"அப்படித் தான்"
"ஏன் அப்படித் தான்?"
"ஏனா? ஏனென்றால் ஒரு பெண்ணின் அழகு அவளுக்குமட்டும் உரித்தானதல்ல. உலகுக்கு அவள் கொண்டுவரும் செல்வங்களுள் அதுவுமொன்று. அதைப் பகிர்ந்துகொள்வது அவள் கடமை."
"அதைப் பகிர்ந்துகொள்வதென்றுவிட்டால்?"
"இன்னும் ஆவேசமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்"
அன்றைய இரவு கழிகிறது. அடுத்த சில இரவுகளும் பகல்களும். உன்னுடனே வந்து தங்கிவிடட்டுமா என்கிறாள் மெலனீ ஒரு நாள். சற்றுத் தயக்கத்துடன் சரி என்கிறார் ஒருநாள். அவரது முந்தைய மனைவியின் படம் இருக்கிறதா என்கிறாள் மெலனீ. "படங்களைச் சேகரிப்பதில்லை. பெண்களைச் சேகரிப்பதில்லை" என்கிறார் லூரீ.
"என்னைச் சேகரிக்கவில்லையா நீங்கள்?"
"இல்லை"

அவள் வெளியேறிப்போக, அடுத்த நாள் லூரீயின் அலுவலகத்துக்கு மெலனியின் நண்பன் வருகிறான்.
"ஆகவே, நீங்கள்தான் அந்தப் பேராசிரியர்" என்கிறான். "பேராசிரியர் டேவிட். உன்னைப்பற்றி மெலனீ என்னிடம் சொல்லியிருக்கிறாள்"
"அப்படியா. என்ன சொல்லியிருக்கிறாள்?"
"அவளை நீ செருகிக்கொண்டிருக்கிறாயென".
அவர் நடத்தி, மெலனீ ஆஜராகும் வகுப்பறைகளுக்குள் அவளது நண்பனும் வந்து அமர்ந்துகொள்ளத்தொடங்க, பிறருக்கும் விஷயம் கசிந்திருக்க, வகுப்பறைக்குள் தொடர்ந்து சங்கடமான இறுக்கம் நிலவுகிறது. வகுப்பறைக்கு அவள் வராமல் போக, அவள் எழுதாத பரீட்சைக்கும் மதிப்பெண் போட்டு வைக்கிறார் லூரீ. சற்று நாள் கழித்து கல்லூரிக்குள் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது, குள்ளமான, ஒல்லியான, தோள்க்கூனலுடன் சிகரெட் வாசனையுடன் தனது அளவைவிடப் பெரிதான சூட் ஒன்றைப் போட்டுக்கொண்டிருக்கும் மெலனீயின் தந்தையைச் சந்திக்கிறார். "நீங்கள் படித்திருக்கலாம், அது இதுவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் செய்தது சரியில்லை." தலையைக் குலுக்கிக்கொள்கிறான். "சரியில்லை". பிள்ளைகளை உங்களை நம்பி அனுப்பிவிட்டுப் போனால் இப்படியா என்று சீறுகிறான். பல்கலைக்கழகத்திடம் புகார் பதிக்கப்படுகிறது. பல்கலைக்கழக விசாரணைக் குழு லூரீயை விசாரிக்கிறது. எழுதாத பரீட்சைக்கு மதிப்பெண் போட்டதைக்கூட. எதையும் படித்துக்கூடப் பார்க்காமல், "மெலனீ சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் ஒத்துக்கொள்கிறேன்" என்கிறார் லூரீ. குழுவினர் திகைக்கின்றனர். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று. முதலில் ஒரு மன்னிப்புக் கடிதம், பிறகு தன்னிச்சையான ராஜினாமா என்று நேர்க்கோட்டில் ஒரு வீழ்ச்சி நிகழவேண்டாமோ? குழு உறுப்பினர் ஃபரோடியா ரசூல் கூறுகிறாள்: "ஒப்புக்கொள்வதற்குமுன் படித்துப்பார்ப்பது புத்திசாலித்தனமில்லையா?"
"புத்திசாலித்தனமாக இருப்பதைவிட முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன" என்கிறார் லூரீ.

வெளியே போகையில் பத்திரிகையாளர்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்கிறார்கள். "Enriched" என்றுவிட்டுப் போகிறார். "Enriched" என்று மறுநாள் பத்திரிகைகள் வீறிடுகின்றன.

* * *

நாட்டுப்புறத்தில் ஒரு சின்ன நகரத்தில் பண்ணை வீடொன்றில் விவசாயம் பார்த்துக்கொண்டு ஒண்டிக்கட்டையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன் லெஸ்பியன் மகள் லூசியுடன் வாழச் செல்கிறார் லூரீ. நாட்டுப்புறம் நகரத்தைவிட வித்தியாசமாக இருக்கிறது. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகத்துக்குச் சுருங்கியிருக்கிறது. லூரீ தூங்கப்போகிறார். இரவின் மத்தியில் ஏகப்பட்ட குலைப்புக்கள் அவரை எழுப்புகின்றன. ஒரு நாய், குறிப்பாக, இயந்திரத்தனமாக இடைவெளியேயின்றிக் குரைத்துக்கொண்டிருக்கிறது; பிற நாய்கள் அவ்வப்போது சேர்ந்துகொள்கின்றன, நிசப்தமாகின்றன, பின்பு தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி மறுபடியும் சேர்ந்து குரைக்கத் தொடங்குகின்றன.
"ஒவ்வொரு இரவும் அப்படித்தானா?" என்கிறார் லூரீ, தன் மகளிடம்.
"பழக்கமாகிவிடும். மன்னிக்க" என்கிறாள். தலையை உதறிக்கொள்கிறார் லூரீ.

பிராணிகள் நலக் கூட்டமைப்பு ஒன்றை நடத்தும் பெவ் ஷா என்ற தன் கறுப்பினத் தோழியிடம் லூரீயை அழைத்துச்செல்கிறாள் லூசி. அவர்கள் செய்யும் மிருகசேவையைப் பற்றிச் சிலாகித்தவாறே வரும் லூசியிடம், "பாராட்டத்தக்கதுதான். நீ செய்வது, அவள் செய்வது எல்லாம்; ஆனால், மிருகசேவகர்களும் ஒருவகையில் கிறிஸ்துவர்கள் போலத்தானென்று நினைக்கிறேன். அனைவரும் களிப்புடனும் வெள்ளை மனதுடன் இருப்பதைப்பார்த்துச் சற்றுக்காலம் கழித்து சில வெறியாட்டங்களும் கற்பழிப்புக்களும் செய்யலாமென்று அரிப்பு எடுக்கும். அல்லது ஒரு பூனையை எத்தலாம்" என்று குரைக்கிறார்.

அப்போது, நான் வாழ்க்கையில் இன்னும் முக்கியமான விஷயங்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டுமென்று நினைக்கிறாய் நீ. ஓவியங்கள் வரைவது, ரஷ்யமொழி கற்றுக்கொடுப்பது - இந்த மாதிரி. மேம்பட்ட வாழ்க்கை அல்ல அது, ஏனெனில் மேம்பட்ட வாழ்க்கை என்று ஒன்று இல்லை. இங்கிருக்கும் வாழ்க்கை இதுதான். பிராணிகளுடனான வாழ்க்கை. பெவ் இதைத்தான் நிறுவமுயல்கிறாள், அதைத்தான் நானும் தொடரவிரும்புகிறேன். நமது சில மனித சௌகரியங்களை மிருகங்களுடன் பகிர்ந்துகொள்வதை. மற்றொரு பிறப்பின் ஒரு நாயாகவோ பன்றியாகவோ நமக்கடியில் பிறக்க விரும்பவில்லை - என்கிறாள் லூசி. மௌனமாக வீட்டுக்குத் திரும்புகிறார்கள். பிறகு லூரி, பெவ்வுக்கு உதவிப் பணி புரிய ஒத்துக்கொள்கிறார்.

பெவ் லூரீயிடம் கேட்கிறாள், மிருகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா திரு லூரீ?
"எனக்கு மிருகங்கள் பிடிக்குமாவா? நான் அவற்றை உண்கிறேன், அதனால் அவற்றை நான் விரும்பியாகவேண்டும், சில பாகங்களையாவது" என்கிறார்.

* * *

லூரீ, லூசி இருவரைநோக்கியும் இரண்டு கறுப்பின ஆண்களும் ஒரு சிறுவனும் வருகிறார்கள். அவர்களை லூசியும் அதற்குமுன் பார்த்ததில்லை. "பெட்ரஸ்" என்று தன் உதவியாளனை அழைக்கிறாள் லூசி. அவன் இல்லை. காட்டுக்குள் குடியிருப்பவர்களென்றும், ஒரு விபத்து நடந்துவிட்டதென்றும் கூறி, தொலைபேசி செய்துகொள்ளவேண்டுமென்று உதவி கேட்கின்றனர். லூரி வெளியே நிற்க, லூசி அவர்களை வீட்டுக்குள் அழைக்கிறாள். இருவரும் புகுந்துகொள்ள, கதவு சாத்தப்படுகிறது. "பெட்ரஸ்" என்று உரக்க அழைத்தவாறு லூரீ, வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார். பின்னங்கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைய, உச்சந்தலையில் அடித்து வீழ்த்தப்பட்டு பாத்ரூமுக்குள் அடைக்கப்படுகிறார். அவரது கார் சாவிகள் பிடுங்கப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை நாய்களும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. பாத்ரூம் கதவு திறக்கப்பட, வெளியே வரும் லூரீ, தரையில் சிந்தியிருக்கும் திரவத்தில் வழுக்கி விழுந்து தலைமுதல் கால்வரை நனைகிறார். தீக்குச்சி கொளுத்தப்பட்டு எறியப்பட்டு, பாத்ரூமுக்குள் மறுபடி உதைத்துப் பூட்டப்படுகிறார். தலையின் பின்புறம் பற்றி எரியத்தொடங்கி முடி பொசுங்கும் வாசம் மூக்கிலேறுகிறது. கழிப்பறைத் தொட்டிமுன் தொங்கி நின்றுகொண்டு தண்ணீரை வாரி வாரி ஊற்றி பொசுங்கும் தலையின் தீயை அணைக்கிறார். தலையின் மேல்பக்கம் முழுவதும் எரிந்துபோய் மெதுமெதுப்பாக இருக்கிறது.

"லூசி, இருக்கிறாயா அங்கே" என்று கூவுகிறார். இருவருக்கிடையிலும் நசுங்கித் திமிறும் லூசியின் பிம்பம் அவர்முன் கடந்துபோகிறது. நெளித்துக்கொண்டு அந்தப் பிம்பத்தைத் துடைத்தெறிய முயல்கிறார். லூசி வெளியே இருக்கிறாள். வீடு அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி உட்பட. மிச்சமிருக்கும் காரின் டயர்கள் துளைத்தெறியப்பட்டிருக்கின்றன. அருகிலிருக்கும் ஜெர்மானிய வயோதிகன் எட்டிங்கர் வருகிறான் உதவிக்கு. "இதனால்தான் எனது பெரட்டா இல்லாமல் எங்கும் போவதில்லை" என்று துப்பாக்கியைத் தொட்டுக்காட்டுகிறான் எட்டிங்கர். லூசி, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக் கேட்டுக்கொள்கிறாள். போகும் வழியில், "போலீஸிடம், உனக்கு நேர்ந்ததை நீ சொல், எனக்கு நேர்ந்ததை நான் சொல்லிக்கொள்கிறேன்" என்கிறாள். போலீஸிடம் திருட்டு குறித்துச் சொல்லிவிட்டு, மறுபடியும் பண்ணைக்கே போகலாம் என்கிறாள். வீட்டிற்கு வந்ததும் லூரீயும் லூசியும் பேசிக்கொள்கிறார்கள். லூசி சொல்கிறாள்: "நான் ஏன் ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டை போலீஸிடம் வைக்கவில்லை என்று தெரிந்துகொள்ள உனக்கு இஷ்டம். என்னைப் பொறுத்தவரையில், எனக்கு நிகழ்ந்தது ஒரு மிகத் தனிப்பட்ட விஷயம். வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் இது பொது விஷயமாக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில், இந்த நேரத்தில், அப்படி இல்லை. அது என்னுடைய விஷயம் மட்டுமே"
"இந்த இடம் எனில்?"
"இந்த இடம் எனில் தென்னாப்பிரிக்கா"
மேலும் சிறிது நேரம் விவாதித்தபின்பு லூரீ, "அப்படியானால் என்ன? ஏதாவது தனிப்பட்ட பிராயச்சித்தமா? தற்காலத்தில் வேதனைக்குட்படுத்திக்கொள்வதன்மூலம் கடந்தகாலத்தின் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யலாமெனப் பார்க்கிறாயா?"
"இல்லை. என்னைத் தப்பாகவே புரிந்துகொள்கிறாய். குற்றவுணர்ச்சியும் பிராயச்சித்தமும் குணரூபமானவை. குணரூபங்கள்வழி நான் நடப்பதில்லை. அதை நீ உணரமுயலும்வரை, என்னால் உனக்கு விளக்கமுடியாது" என்கிறாள் லூசி.

* * *

பண்ணை வீட்டைவிட்டு வெளியேறுமாறு லூசியைக் கேட்டுக்கொள்கிறார் லூரீ. ஒப்புக்கொள்ளமாட்டேனென்கிறாள். கற்பழிக்கப்பட்டபோது அவர்களிடம் வெறுப்பை மட்டுமே உணர்ந்தேன் என்கிறாள் லூசி, பின்னொரு தருணத்தில்: "வெறுப்பு... டேவிட், ஆண்களையும் உடலுறவையும் யோசிக்கும்போது எதுவும் என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. நீ ஒரு ஆண், உனக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஏதோ வேற்றுமனுஷியுடன் உடலுறவு கொள்ளும்போது - அவளை மடக்கும்போது, உனக்கடியில் வீழ்த்தும்போது, உன் பாரமனைத்தையும் அவள்மேல் கிடத்தும்போது - அதுவும் ஓரளவு கொலை மாதிரியே இல்லை? ஒரு கத்தியைச் சொருகுதல்; பின்பு உருவியெடுத்தல், ரத்தக் குளத்தில் உடலை மட்டும் விட்டுவிட்டு - கொலைபோலத் தோன்றுவதில்லை அது? கொலைசெய்து தப்பிப்பதுபோல் தோன்றுவதில்லை?"

தன்னைத்தானே குத்தி ரணமாக்கிக்கொள்வதென்று லூரீக்குத் தோன்றுவதை லூசி அதற்குமேல் விளக்கவோ, நியாயப்படுத்தவோ முயற்சிப்பதில்லை. தொடர்ந்து பெவ் ஷாவின் மிருகசேவைச்சாலைக்குச் சென்று, வேதனையில் வாடும் நாய்களை கருணைக்கொலை செய்ய உதவுகிறார் லூரீ. கட்டையாக, குட்டையாக, கறுப்பாக இருக்கும் அவளுடனும் உறவுகொள்கிறார். சம்பவங்கள் கல்லின்மேல் நீர்த்துளிகள்போல் உருண்டு ஓடுகின்றன. பத்தொன்பதாம் அத்தியாயத்தில், மெலனீயின் தகப்பனாரை மறுபடித் தேடிச்செல்கிறார் லூரீ. இந்த அத்தியாயத்தை விவரிப்பது அதன் இறுக்கத்தைக் குலைத்துவிடுமென்பதால் அப்படியே விடுகிறேன். தன் மகள் கற்பழிக்கப்பட்டபின், தான் 'சீரழித்த' பெண்ணின் தகப்பனிடம் போவது, இறுதியில் 'மன்னிப்பு' என்னும் வார்த்தையை உபயோகப்படுத்துவது என்று இருக்கும் இந்த அத்தியாயம், பெரும்பாலும் பாவமன்னிப்பு என்ற ரீதியில் இல்லாமல், பாவமன்னிப்பை இன்னும் இழிவுபடுத்திச் சாக்கடையில் தள்ளுவது போலவே இருக்கிறது. சாக்கடைக்குள் விழுந்தபின் மேலும் சாக்கடைக்கழிசல்கள் கொட்டப்படுவதுபோல, மெலனீயின் தந்தை "கடவுள் என்ற பதத்தை உபயோகிக்கட்டுமா" எனக் கேட்டு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறான்/ர் (He என்பதை அவன் என்று மொழிபெயர்ப்பதா அவர் என்று மொழிபெயர்ப்பதா என்று குழப்பம். அவன் அவர் என்பதிலுள்ள வெளிப்படை Heயில் இல்லாததாலேயே இம்மாதிரி எழுத்துக்களிலும், பழைய இருத்தலியல் எழுத்துக்களிலும் ஆங்கிலத்தில்/ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது உணரமுடியும் உள்ளார்ந்த வெறுமையைத் தமிழுக்குக் கடத்தமுடியாமற்போகிறது. மரியாதையற்ற ஒரு ஜனரஞ்சகப் பதம் கண்டுபிடிக்கப்பட்டுப் புழக்கத்தில் வரும்வரை இதுமாதிரியான எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது அவன்/அவரிலேயே தடுக்கி விழுந்து பாதிப் பற்களைப் பெயர்த்துக்கொள்ளவேண்டியதிருக்குமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவில் லூரீயை மற்றும் "அவர்" என்பது வேண்டுமென்றே செய்யப்பட்டது. அதிலும் ஒரு உள்ளர்த்தத்தைப் பார்க்கமுடியும்படி ;-) மெலனீயின் தகப்பன், 'அவன்' ஆகவே நின்றுபோவது, புத்தகத்தின் உரைநடையுடன் பார்க்கும்போது சரியாகவே இருக்கும், ஆனால் அதில் political correctness இருக்கிறதா, என்றால் கிடையாது).

* * *

லூசி கர்ப்பமடைகிறாள். அந்தக் கர்ப்பத்தைத் தொடர்ந்து சுமக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப்பொறுத்தவரையில், நிகழ்ந்த கற்பழிப்பு, கிட்டத்தட்ட வட்டி வசூலித்த மாதிரி. "I am marked" என்கிறாள். எனக்காக அவர்கள் மறுபடி வருவார்கள் என்கிறாள். வராவிட்டாலும், கற்பழித்த மூவரில் ஒரு சிறுவன், லூசியின் உதவியாளன் பெட்ரஸ் வீட்டிலேயே வந்து தங்குகிறான். பெட்ரஸ், அவனைச் சொந்தக்காரன் என்கிறான். இறுதியில், பெட்ரஸ் ஒரு தீர்மானத்தைச் சொல்கிறான். கறுப்பினப் பெட்ரஸ், லூசியைத் தனது மூன்றாவது மனைவியாக ஏற்றுக்கொள்வதான அபிப்ராயத்தை முன்வைக்கிறான். அவனுக்குத் தனது பண்ணை மேல்தான் கண் எனும் லூசி, அதற்கு ஒத்துக்கொள்கிறாள். அந்தத் 'திருமணம்' அவளுக்கு ஒரு அரண் போல இருக்கும், என்பதை இறுதியில், ANCயினால் 'இனவெறி வாதம்' என்று குற்றம்சாட்டப்பட்ட பின்வரும் உரையாடல்களில் (பக்கம் 205) பேசிக்கொள்கிறார்கள். லூசியைப்பற்றிக் கூறுகையில்
"எவ்வளவு அவமானகரமானது" என்கிறார் லூரீ "எவ்வளவு உயர்ந்த நம்பிக்கைகள், இப்படித்தான் முடியவேண்டுமா"
"ஒத்துக்கொள்கிறேன், அவமானகரமானதுதான். ஆனால், முதலிலிருந்து தொடங்குவதில் ஒரு நல்லதும் இருக்கக்கூடும். ஒருவேளை அதைத்தான் நாம் ஒத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலிலிருந்து தொடங்குவது. ஒன்றுமில்லாததிலிருந்து. ஒன்றுமேயில்லாததிலிருந்து. ஆயுதங்களின்றி, சொத்தின்றி, உரிமைகளின்றி, மரியாதையின்றி"
"ஒரு நாயைப் போல"
"ஆம், ஒரு நாயைப் போல"

* * *

ஒரு வெள்ளைக்காரனும் அவனது bleeding heart மகளும் செயற்கையாக முன்வைக்கும் 'தியாகக் கீற்றுக்களுக்குள்'ளும், குட்ஸீக்குள்ளும் ஒளிந்திருப்பது "ஆப்பிரிக்கர்கள் வன்முறையால் வெள்ளையர்களை நசுக்குகிறார்கள்" என்ற அடிப்படைவாத வெள்ளை இனவெறி என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு 1999ல் குட்ஸீக்கு வழங்கப்பட்டபோதுகூட தாபோ பெகி தலைமையிலான ANC அரசு அதை உற்சாகமாக வரவேற்கவில்லை என்றும், "நோபல் பரிசு, வெள்ளையர்களின் கலையுணரும் தன்மையை அளவுகோலாகக் கொண்டு அளிக்கப்படுவதால் அதற்குத் தரப்படும் மரியாதை அர்த்தமற்றது" என்ற ரீதியிலும் விமர்சனங்கள் இருந்தன. நோபல் பரிசு கிடைத்த காலகட்டத்தில் குட்ஸீ ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். பேட்டிகளே பெரும்பாலும் அளித்திராத, வெகு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த குட்ஸீயும் பேராசிரியராக வேலைபார்த்தவர் என்பதால், லூரீயே குட்ஸீதான் எனப்படும் விமர்சனங்களும் தவிர்க்கமுடியாமல் இருக்கின்றன. சமீபத்தில் இதைத் திரும்பப் படித்ததால் கோர்வையாக எழுதமுடிந்தது, Waiting for the barbarians, Life and times of Michael K போன்றவற்றையும் திரும்பப் படித்து இதனுடனான கோர்வையாக எழுதினால் நல்லபடியாக இருக்குமென்று நினைப்பதுண்டு - தினமும் ஒருமணிநேரம் படிப்பது நன்றாகவே இருந்தாலும், அங்கங்கே குறித்து வைத்ததை வைத்து இந்தமாதிரி கோனார் நோட்ஸ் பதிப்பிப்பதற்குத் தட்டச்சுவதுதான் மகா கடியாக இருக்கிறது. நான் வாசித்த சில படைப்புக்களையும் கட்டுரைகளையும் வைத்து குட்ஸீயிடம் தென்படுவது conservatism என்பதைவிட, ஒரு placid narration என்ற ரீதியில்தான் இருக்கிறது. இந்தமாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இறுக்கமான எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம், இந்த வெற்று எளிமை எத்தனை கட்டங்களில் நம்மை முட்டாளாக்குகிறதோ என்ற ஐயம் ஏற்படுத்தும் ஈகோ அரிப்பு தவிர்க்க இயலாதது. என் பார்வை வேறாக இருக்கலாம். சிலசமயம் "பாத்திர வார்ப்பு சரியாகத் திரண்டு வரவில்லை" என்ற ரீதியிலான குட்ஸீயின் சில ஈய விமர்சனங்களையும் படித்து வந்திருப்பதால், ஒரு அபிப்ராயம் உருவாக்குவதைவிட, புத்தகத்தைச் சுருக்கமாக அறிமுகமாவது செய்யலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு. முன்பு வெங்கட்டின் பதிவு ஒன்றின் பின்னூட்டத்திலும் இதைக் குறிப்பிட்டிருந்தேன். ருஷ்டீயின் Moor's Last Sigh புத்தகத்தைப்பற்றிய கட்டுரையொன்றில் குட்ஸீ, "பால் தாக்கரே போன்ற கோமாளிகளைத் தவளை அரசன் என்று, Raman Fielding" என்று நக்கலடித்திருப்பதும், பம்பாய் அரசியல் நிலவரம் பற்றியும் படிக்கும் மேற்கத்திய வாசகன் அதில் எவ்வளவு தூரம் ஆழமுடியும் என்று தெரியவில்லை" என்றிருப்பார். வெளிநாட்டுப் படைப்புக்கள் பெரும்பாலானவற்றுக்கு அதே நிலைமைதான் எனினும், ருஷ்டீ அதில் Madhuri Dickshit என்று மாதுரி தீட்சித்தை நக்கலடித்திருப்பார் - வெளியாட்களுக்கு மாதிரி தீட்சித் என்ன முக்கியம் எனினும், அனைத்தும் கலாச்சாரமே. ருஷ்டீயிடம் மிகத் திறமையாக வெளிப்படும் palimpsesting போன்ற பல்வேறு அடுக்குக் கதைகள் மீது குட்ஸீக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருப்பதாக நான் படித்தவரையில் தெரியவில்லை. "நல்ல அபிப்ராயம்" என்பது எனது சோம்பலில்/தூக்கத்தில் வரும் வார்த்தைகள் - வேறு உபயோகித்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு பேராவது இப் புத்தகத்தைப் படித்துப்பார்த்தால் ஏதோ எழுதியதற்குப் பிரயோஜனமிருக்கிறதென்று நினைத்துக்கொள்ளலாம். முடிந்தமட்டும் சொந்த அபிப்ராயங்களைத் தவிர்க்க முயன்றிருக்கிறேன். அதுதாண்டியும் ஏதாவது துருத்திக்கொண்டிருந்தால் கண்டுகொள்ளாதீர்கள், Goodnight!!

Disgrace - J.M.Coetzee, Penguin Books 1999, 220 பக்கங்கள்.
படங்கள் நன்றி: நோபல், Topwritercorner

12 comments:

Thangamani said...

நீங்கள் வெங்கட்டின் பதிவில் பின்னூட்டமிட்டபோதே படிக்கவேண்டுமென நினைத்தேன். எப்ப நடக்குமெனச் சொல்ல முடியாது! ஆனால் மிக்க நன்றி.

Balaji-Paari said...

நல்ல விவரணை. ஏதோ திரைப் படம் போல இருந்தது விவரணை. நன்றிகள்.
படிக்க முயல்கின்றேன்.

ஒரு பொடிச்சி said...

நோபல் பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டு படிக்கவேண்டுமென்று நினைத்த படைப்பு. நானும், நீங்கள் வெங்கட் இன் பதிவில் சொல்லியிரக்காவிட்டால் இப்போதைக்குப் இதைப் படித்திருக்கவாய்பபில்லை. இந் நூல் குறித்த எனது பார்வையை எழுதிவிட்டு உங்கட இந்தப் பதிவைப் பற்றி எழுதுகிறேன். நன்றி!

Vijayakumar said...

ம்ஹூம்ம்ம்... படிப்பாளிங்களை பார்த்து பெருமூச்சி தான் விட முடியுது. இருந்தாலும் நீங்க சொன்ன குறிப்புகள் அருமை. எடுத்து வைத்துக் கொள்கிறேன். நன்றி.

இளங்கோ-டிசே said...

மாண்ட்ரீஸர்,
மிக அருமையான பதிவு. இதை வாசித்துக்கொண்டிருக்கும்பொது உங்களுக்குள் இருக்கும் நிறைய வாசித்திருக்கும் பின்னணி தெரிகிறது. இல்லாவிட்டால் இப்படியொரு விரிவும் ஆழமும் உள்ள நெடுங்குறிப்பை எழுதியிருக்கமுடியாது. நீங்கள் வாசித்தவற்றை/பார்த்தவற்றை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். உடனே இவற்றையெல்லாம் வாசிக்க/பார்க்க முடியாவிட்டாலும், ஆகக்குறைந்து நினைவில் வைத்துக்கொண்டாவது எப்போதாவது நேரங்கிடைக்கும்போது என்னைப்போன்றவர்கள் வாசிக்கமுடியும்.
.....
சற்று இந்தக்குறிப்புக்கு வெளியே, நீங்கள் 'கற்பழிப்பு' என்ற வார்த்தையை பலவிடங்களில் உபயோகித்ததை வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலாய் இருந்தது. குஜராத் பற்றிய உங்கள் பதிவிலும் இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்தேன். நிச்சயம் வேறு யாராவது எழுதியிருந்தால் இதைக் கவனப்படுத்தியிருக்கமாட்டேன். நீங்கள் என்றபடியால் ஒரு குறிப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி

சன்னாசி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

பொடிச்சி: இந்தப் பதிவை வெறும் மேற்கோள்களுடன் பொதுவான ஒரு கதைச்சுருக்கம் போல மேலோட்டமாகவே எழுதியிருப்பதாக எனக்குப் பட்டது. உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன் - இன்னும் தெளிவாக இருக்குமென்று நம்புகிறேன்.

டிஜே: இந்தப் புத்தகத்திலும், ஆவணப்படத்திலும் rape என்னும் பதமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால் அதன் நேரடி மொழிபெயர்ப்பை அப்படியே எழுதவேண்டியதாகப்போயிற்று. தமிழில் எழுதும்போது மங்கலச்சொல் என்னும் விஷயம், இந்தப் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பதுபோல He/She என்றவற்றுக்கு, மரியாதையைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத ஒரு நடுநிலை வார்த்தை இல்லாதது போன்ற சிக்கலொன்றில் தடுமாறுகிறது - என் குறையாகவும் இருக்கலாம் அது. மற்றப்படி, அந்த வார்த்தை ஏதும் derogatory யாக உபயோகப்படுத்தவில்லை - என்னளவில். அப்படியொரு தொனி இருப்பின் அது என் தவறே. மேலும், இம்மாதிரிப் புத்தகங்களில் euphemistic gloss-over ஏதும் உபயோகமாயிருக்குமா என்று தெரியவில்லை!!

கறுப்பி said...

மாண்ட்ரீஸர் நல்ல பதிவு. தங்களிடம் ஒரு கேள்வி. விரும்பினால் பதில் தரலாம். கறுப்பி தங்கள் பதிவுகளில் அனேகமாக அனைத்தையும் படித்து வருகின்றாள். தங்களிடம் ஆளுமை மிக்க காத்திரமான தமிழ் இருக்கின்றது. இருந்தும் தங்கள் பதிவுகள் அனேகமாக வேற்று மொழிப்படைப்புக்களைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. இதில் தவறொன்றுமில்லை. அதற்குப் பிரத்தியேக காரணம் ஏதாவது இருக்கின்றதா? இல்லாவிட்டால் தற்செயலான தெரிவுகளா? தங்கள் சிறுகதைகளில் கூட பாத்திரங்களுக்கு வேற்றுமொழிப் பெயரை பாவிக்கின்றீர்கள். அதுதான் கேட்டேன்.

மு. சுந்தரமூர்த்தி said...

மாண்ட்ரீசர்,
Saul Bellow என்கிற எழுத்தாளர் இறந்துபோனாதாக நேற்று செய்தித்தாளில் படித்தேன். நோபெல், புலிட்சர் உள்பட பல பரிசுகளை வென்றதாக உள்ள இவரைப் பற்றி அந்த செய்தியில் "a master of comic melancholy who in "Herzog," "Humboldt's Gift" and other novels both championed and mourned the soul's fate in the modern world" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களையோ, இவருடைய வேறு படைப்புகளையோ படித்திருக்கிறீர்களா? (நேற்றுவரை இவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது).

மு. சுந்தரமூர்த்தி said...

http://abcnews.go.com/Entertainment/wireStory?id=644295

http://nobelprize.org/literature/laureates/1976/bellow-bio.html

சன்னாசி said...

சுந்தரமூர்த்தி: சால் பெல்லோ இறந்துபோனதை நானும் நேற்றுப் படித்தேன். Confessions of an opium eater, Sexus-Nexus-Plexus என்று 'வித்தியாசமாக இருப்பதாகப் பட்ட' புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தபோது ஹெர்ஸாக் படித்ததுண்டு - நினைவில் தங்கவில்லை, அதன்பிறகு சால் பெல்லோவின் வேறெந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை, மேலும் யதார்த்தவாத எழுத்துக்கள்மேல் அடிப்படையாகவே ஆர்வமிருந்ததில்லை (தாஸ்தாயெவ்ஸ்கி போன்ற தவிர்க்கமுடியாத சிலரைத் தவிர - அதை 'யதார்த்தம்' எனக் கொண்டால்...). அதிலும் 'அமெரிக்க யதார்த்தவாதம்' என்பதே ஒரு hypercultural oxymoron ஆகப் பட்டதால், ஆர்வமின்றிப் போயிற்று என்று நினைக்கிறேன்!!

கறுப்பி: நீங்கள் சொல்வதுமாதிரி இருப்பது தற்செயலான ஒரு விஷயம்தான் என்று நினைக்கிறேன்.
//தங்கள் சிறுகதைகளில் கூட பாத்திரங்களுக்கு வேற்றுமொழிப் பெயரை பாவிக்கின்றீர்கள். அதுதான் கேட்டேன்//
பெயரே வைக்காவிட்டால் இன்னும் சௌகரியம். 'கதை'யுடன் ஒத்துப்போகும் பெயரை வைத்திருப்பேனென்று நினைக்கிறேன், அல்லது பெயரொன்று செலுத்திக் 'கதை'யை எழுதியிருப்பேன் - 'விரற்கடை' மாதிரி!!

Anonymous said...

//இந்தப் புத்தகத்திலும், ஆவணப்படத்திலும் rape என்னும் பதமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால் அதன் நேரடி மொழிபெயர்ப்பை அப்படியே எழுதவேண்டியதாகப்போயிற்று. //

rape என்ற வார்த்தைக்குச் சரியான (politically correct word) தமிழ்ச் சொல் 'வன்புணர்ச்சி'.

மாண்ட்ரீஸர், மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்களின் எழுதுபொருள்களில் நான் அறிந்து கொண்டவை ஏராளம்.

நீங்கள் வசிப்பது நியூஜெர்ஸியா? வந்தால் சந்திக்க ஆசை!

நன்றி - சொ. சங்கரபாண்டி

சன்னாசி said...

சங்கரபாண்டி, வார்த்தையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

//நீங்கள் வசிப்பது நியூஜெர்ஸியா? வந்தால் சந்திக்க ஆசை!//
நியூஜெர்ஸி அல்ல. மேற்கே...