அமெரிக்கா
-ஆலன் கின்ஸ்பெர்க்
அமெரிக்கா உனக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டேன், இப்போது நானொரு பூஜ்யம்.
அமெரிக்கா இரண்டு டாலர்களும் இருபத்தேழு சென்ட்டுகளும் ஜனவரி 17, 1956.
என் எண்ணங்களை என்னாலேயே சகிக்கமுடியவில்லை.
அமெரிக்கா எப்போது மனிதப் போரை முடிப்போம்?
உன் அணுகுண்டைக்கொண்டு உன்னையே புணர்ந்துகொள் போ.
நானேதும் நன்றாயில்லை என்னைத் தொந்தரவு செய்யாதே.
என் புத்தி தெளிவாயிருக்கும்வரையில் என் கவிதையை எழுதமாட்டேன்.
அமெரிக்கா எப்போது தேவதைத்துவமடைவாய் நீ?
எப்போது உன் ஆடைகளைக் களைவாய்?
எப்போது சவக்குழிகளிவழி உன்னையே பார்த்துக்கொள்வாய்?
எப்போது உனது மில்லியன் ட்ராட்ஸ்கியர்களுக்கு உன்னை நீ தகுதியானதாக்கிக்கொள்வாய்?
அமெரிக்கா உன் நூலகங்கள் ஏன் கண்ணீரால் நிறைந்திருக்கின்றன?
அமெரிக்கா உனது முட்டைகளை எப்போது இந்தியாவுக்கு அனுப்புவாய்?
உனது பைத்தியக்காரத்தனமான நிபந்தனைகள் என்னை வெறுப்படையச்செய்கின்றன.
எப்போது நான் பல்பொருளங்காடிக்குப்போய் என் தோற்றத்தைக்கொண்டு விரும்பியதை வாங்கமுடியும்?
அமெரிக்கா சொல்லப்போனால் நீயும் நானும்தான் துல்லியமானவர்கள் வெளியுலகம் அல்ல.
உனது யந்திரங்களை என்னால் சமாளிக்கமுடியாது.
என்னை ஓர் துறவியாயிருக்க விரும்புமாறு செய்துவிட்டாய் நீ.
இந்த விவாதத்தை முடிக்க வேறொரு வழி இருக்கவேண்டும்.
பர்ரோஸ் டாஞ்சியர்ஸில் இருக்கிறான் அவன் திரும்ப வரப்போவதில்லையென நினைக்கிறேன் அதொரு விபரீதம்
நீ விபரீதமாயிருக்கிறாயா அல்லது இது வெறும் விளையாட்டா?
விஷயத்துக்கு வர முயல்கிறேன்.
என் பிரேமையை உதற மறுக்கிறேன்.
அமெரிக்கா தொந்தரவை நிறுத்து என்ன செய்கிறேனென்பது எனக்குத் தெரியும்.
அமெரிக்கா ப்ளம் பூக்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
செய்தித்தாள்களைப் பலமாதங்களாகப் படித்திருக்கவில்லை நான், கொலைக்குற்ற விசாரணைக்காகத் தினமொருவன் செல்கிறான்
அமெரிக்கா தொழிலாளர்களைக்குறித்து உணர்ச்சிவசப்படுகிறேன்.
அமெரிக்கா சிறுவனாயிருக்கும்போது கம்யூனிஸ்ட்டாயிருந்திருக்கிறேன் அதுகுறித்து நான் வருந்தவில்லை.
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மரியுவானா புகைக்கிறேன்.
நாட்கணக்கில் என் வீட்டிலமர்ந்து என் ஆடையறையிலுள்ள ரோஜாக்களை முறைக்கிறேன்.
சைனாடவுனுக்குப் போகும்போதெல்லாம் குடித்துவிட்டுப் படுத்தெழுகிறேன்.
ஏதோ பிரச்னை வருமென்றுமட்டும் மனம் தீர்மானித்துவிட்டது.
நான் மார்க்ஸைப் படிப்பதை நீ பார்த்திருக்கவேண்டும்.
என் உளப்பகுப்பாய்வாளர் நான் முற்றிலும் சரியானவனேயென நினைக்கிறார்.
கடவுள் பிரார்த்தனை கூறமாட்டேன் நான்.
நான் அனுபவிக்கிறேன் பிரபஞ்ச அதிர்வுகளை உத்பக்கக் காட்சிகளை.
அமெரிக்கா இன்னும் உன்னிடம் நான் சொன்னதில்லை ரஷ்யாவிலிருந்து வந்தபின்பு
மாக்ஸ் மாமாவை என்ன நீ செய்தாயென்று.
உன்னிடம்தான் சொல்கிறேன்.
எங்களது உணர்வுபூர்வ வாழ்க்கையை டைம் பத்திரிகை செலுத்த அனுமதிக்கப்போகிறாயா?
நான் டைம் பத்திரிகைக்கு அடிமை.
ஒவ்வொரு வாரமும் அதைப் படிக்கிறேன்.
மூலை மிட்டாய்க்கடையை ஒவ்வொருமுறை கடக்கும்போதும் அதன் அட்டை என்னை முறைக்கிறது.
பெர்க்லி பொதுநூலகத்தின் கீழ்த்தளத்தில் அதைப் படிக்கிறேன்.
பொறுப்பைப்பற்றியே எப்போதும் எனக்குக் கூறுகிறது அது. வியாபாரஸ்தர்கள் தீவிரமானவர்கள். திரைப்படத்
தயாரிப்பாளர்கள் தீவிரமானவர்கள். அனைவரும் தீவிரமானவர்கள் என்னைத் தவிர.
நான்தான் அமெரிக்கா என்று எனக்கு உறைக்கிறது.
மறுபடியும் என்னுடனே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கெதிராக ஆசியா எழுகிறது.
ஒரு சீனனின் வாய்ப்புக்கூட எனக்கில்லை.
பேசாமல் பரிசீலனை செய்கிறேன் என் தேசிய வளங்களை.
என் தேசிய வளம் இரண்டு மரியுவானா சிகரெட்டுகளும் மில்லியன் கணக்கிலான இனப்பெருக்க உறுப்புக்களும்
மணிக்கு 1400 மைல்கள் போகும் பதிப்பிக்கமுடியாத தனிப்பட்ட இலக்கியமும்
இருபத்தைந்தாயிரம் மனநோய்க் காப்பகங்களும்.
எனது சிறைகளைப்பற்றியோ என் பூத்தொட்டிகளில் ஐநூறு சூரியன்களின்கீழ்
வாழும் வாய்ப்பற்றவர்களையோ பற்றி நான் ஏதும் சொல்வதில்லை.
ஃபிரான்ஸின் வேசிக்குடிகளை அழித்தாயிற்று நான், மிஞ்சியிருப்பது டாஞ்சியர்ஸ் மட்டுமே.
கத்தோலிக்கனாக இருந்தாலும்கூட ஜனாதிபதியாகிவிடவேண்டுமென்பதே என் குறிக்கோள்.
அமெரிக்கா உனது அசட்டு மனோநிலையிலிருந்துகொண்டு எப்படி நான் ஒரு புனிதத் துதி இயற்றமுடியும்?
ஹென்றி ஃபோர்டு போலத் தொடர்கிறேன் எனது ஈரடித்தாளகதி அவரதளவு தனித்துவமானதே
வாகனங்கள் இன்னும் அதே அவைகளனைத்தும் வெவ்வேறு பால் வேறு
அமெரிக்கா $2500க்கு உனக்கு ஈரடித்தாளகதிகளை விற்கிறேன், பழையதைக் கொடுத்தால் $500 தள்ளுபடி
அமெரிக்கா டாம் மூனியை விடுதலைசெய்
அமெரிக்கா ஸ்பானிய அபிமானிகளை விடுதலைசெய்
அமெரிக்கா சாச்சோ வன்ஸெட்டி இறக்கக் கூடாது
அமெரிக்கா நான் ஸ்காட்ஸ்பரோ பதின்மர்கள்.
அமெரிக்கா என் அம்மா கம்யூனிஸ்டுக் கூட்டங்களுக்கென்னை அழைத்துச்சென்றபோது என் வயது ஏழு அவர்கள் ஒவ்வொரு சீட்டுக்கும் கைப்பிடியளவு கொண்டைக்கடலை விற்றார்கள்
ஒரு சீட்டின் விலை ஐந்து சென்ட்டுகள் அங்கே
பேச்சுக்கள் இலவசம் அனைவரும் தேவதைத்துவத்துடன் தொழிலாளர்களின்மீது
அக்கறையுடன் அதெல்லாம் மிக ஒழுங்காயிருந்தது 1935ல் கட்சி எவ்வளவு நன்றாயிருந்ததென உனக்குச் சுத்தமாக விளங்காது ஸ்காட் நியரிங் ஒரு மூதாதையாயிருந்தார் அசல் கௌரவத்துடன்
ப்ளூரால் அழுதேன் ஒருமுறை இஸ்ரேல் ஆம்ட்டரை நேரில் பார்த்தேன். அனைவருமே
உளவாளிகளாயிருந்திருக்கவேண்டும்.
அமெரிக்கா நீ போருக்குப் போவது உசிதமல்ல
அமெரிக்கா கெட்டவர்கள் ரஷ்யர்களல்ல.
அந்த ரஷ்யர்கள் அந்த ரஷ்யர்கள் பிறகந்த சீனர்கள். பிறகந்த ரஷ்யர்கள்.
அந்த ரஷ்யா நம்மை உயிருடன் விழுங்கமுயல்கிறது. அந்த ரஷ்யா ஆதிக்க வெறிபிடித்தது. நமது கார்களை கராஜிலிருந்து பெயர்க்கமுயல்கிறது.
அவள் சிகாகோவைச் சுருட்டமுயல்கிறது. அவளுக்கொரு சிவப்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் தேவை. அவள் நமது வாகன ஆலைகள் சைபீரியாவிலிருக்க விருப்பம். அவன் பெரும் அதிகாரவர்க்கம் நமது பெட்ரோல்நிலையங்களை நடத்தியவாறு.
அது சரியில்லை. சே. அவன் இந்தியன்களுக்கு எழுதப்படிக்கக் கற்பிக்கிறான். அவனுக்குத்தேவை பெருத்த கருத்த கறுப்பர்கள்.
ஹா. அவள் நம்மைத் தினமும் பதினாறுமணிநேரம் வேலைசெய்ய வைப்பது. உதவி.
அமெரிக்கா, இது உண்மையில் தீவிரமான விஷயம்.
அமெரிக்கா தொலைக்காட்சியில் பார்ப்பதில் இப்படித்தான் எனக்குப் படுகிறது.
அமெரிக்கா இது சரியா?
உடனே நான் பேசாமல் வேலையில் இறங்குகிறேன்.
ராணுவத்தில் சேரவோ நுணுக்கப்பாகத் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் லேத்துகளைத் திருப்பவோ எனக்கு விருப்பமில்லை என்பது நிஜமே,
எப்படியிருப்பினும் எனக்குக் கிட்டப்பார்வை மனநோய்.
அமெரிக்கா எனது மறைகழன்ற கைகளை ஸ்டியரிங் சக்கரத்தில் வைக்கிறேன்.
தமிழில்: மாண்ட்ரீஸர்
*ஈரடித்தாளகதி - strophe என்னும் வார்த்தைக்குச் சரிநிகர் தமிழ் வார்த்தை? இசைப் பரிச்சயம் உள்ளவர்கள் உதவலாம்.
*spanish loyalists என்பதன் அரசியல் சரிநிகர் வார்த்தை குறித்த நிச்சயமின்மையால் அபிமானிகள் என்று இட்டிருக்கிறேன். லாயலிஸ்ட்டு என்று கூட இருக்கலாமென்று நினைக்கிறேன்.
*queer shoulders - கைகள் என்று போட்டிருப்பது பொருந்துமென்றே நினைக்கிறேன்.
வெள்ளிக்கிழமை ஆசுவாச/அவசரத்தில் பெயர்த்த அரைவேக்காடு எனினும், கின்ஸ்பர்கின்(ஒருவகையில் கம்யூனிஸ்ட்டு அனுதாப) கவிதையை மொழிபெயர்த்ததற்கு ஏதும் சட்டம் பாயாது என்று நம்புகிறேன்!! ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கை தான் :-) போன கவிதையில் 'tiles' என்பதைச் சரிவர யோசியாமல், ஆகாயத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்துக்கொண்டு :-( அபத்தமாக மொழிபெயர்த்தது மாதிரி (திருத்தியாயிற்று, நன்றி பெயரிலி) ஏதாவது பெரும் தவறுகளிருப்பின் குறிப்பிடவும்!!
'அமெரிக்கா' ஆங்கில வடிவம். கின்ஸ்பெர்கின் Howlஐத் தமிழில் கொண்டுவரவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம், முடிவதில்லை!!
Friday, April 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நன்றி மாண்ட்ரீஸர்
அதே அனுபவம் வந்தது!
-I don't feel good don't bother me.
-I sit in my house for days on end and stare at the roses in the closet.
இந்த வரிகள் விடுபட்டிருந்தன
purpose ஆயா, தவறுதலா என்று தெரியவில்லை.
America how can I write a holy litany in your silly mood?
அமெரிக்கா அசட்டு மனோநிலையிலிருந்துகொண்டு எப்படி நான் ஒரு புனிதத் துதி இயற்றமுடியும்?
---
இந்த வரி "அமெரிக்கா -உனது-- அசட்டு மனோநிலையிலிருந்துகொண்டு"?
என்று வரவேண்டும்?
have a look.
அண்ணே நல்ல வேலை செய்கிறீர்கள். Howl இனை இந்த நெடுவாரத்திலே அமுக்கிவிடுங்களேன்
அமெரிக்கா என்ற தலைப்பைப் பார்த்தவுடன் அமெரிக்கா நூலின் தமிழாக்கம் என்று நினைத்துவிட்டேன்.
மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது மாண்டி அப்படியே என்னைப் போன்ற பாமரர்களுக்கு சிறுகுறிப்புகளையும் வரைந்துவிட்டால் கோடி புண்ணியம்.பொடிச்சியின் கூர்மை பொறாமையைக் கொடுக்கிறது
நன்றி ஈழநாதன் - குறிப்புக்கள் எழுதியிருக்கலாம், ஆங்கில வடிவத்தையும் இணைத்திருப்பதால் தேடிக்கொள்வது சுலபமாயிருக்குமென நினைத்தேன்.
பொடிச்சி, பெயரிலி: முன்பு நான் இட்ட பதிலில் தவறுதலாகக் குப்பைத்தொட்டியை மிதித்து காணாமல் போய்விட்டது. இதுவரை அதைப் படித்திருக்கவில்லையெனில், பொடிச்சி: நன்றி, 'உனது' என்பது சரியே, சேர்த்தாயிற்று; விடுபட்ட வரிகளைச் சேர்த்தாயிற்று - தவறுதலாக விடுபட்டதுதான். விடுபட்ட வரிகளும் உள்ள கவிதை இங்கே.
பெயரிலி; முயன்று பார்க்கிறேன், சற்று நாள் கழித்து. நன்றி...
//போன கவிதையில் 'டிலெச்' என்பதைச் சரிவர யோசியாமல்//
கேக்க மறந்தது போன கவிதையிலே 'கதீட்ரலை' அப்படியே சாப்பிட்டது ஏனோ?
இன்றிய கவிதை கொஞ்சம் லெவலா இருக்கு, மெதுவாய்த்தான் வாசிக்கனும். (என்ன செய்ய விஷய ஞானம் கம்மி!!)
ஈழநாதன், பொறாமைப்பட எல்லாம் ஒன்றுமில்லை :-(. ஈடுபாடான விடயத்தைப் பார்க்கிறபோது வழமையைவிட கொஞ்சம் கவனமாக இருப்பது.. அவ்வளவே! மொழிபெயர்ப்பில் நமக்கு நிறைய ஆர்வக்கோளாறு, அத்தகைய நாமே நீளமாக இருக்கிறதே என்று பஞ்சிப்பட்டுவிட்டால் மாண்ட்றீஸர் அடுத்த முயற்சி செய்யாமல் விட்டால் என்னாவது? என்றொரு சுயநலத்தில் இயங்குவதுதான். thank dog, கவனித்தீர்களா அன்றைக்கு வாரயிறுதி வேறு?!
மாண்ட்றீஸர், சீக்கரம் howl ஐ இங்க போடுவாராக!
//thank dog,//
ஹா ஹா! கவனக்குறைவென்றாலும் சிரிப்பு வரும்படியான கவனக்குறைவுதான் போல!!
கார்த்திக்: church-diocese-cathedral போன்றவற்றுக்கெல்லாம் தேவாலயம் என்பதுதவிர பிரத்யேகச் சொற்கள் தெரிந்திராததால் போடமுடியவில்லை...
//thank dog,//
ஹா ஹா! கவனக்குறைவென்றாலும் சிரிப்பு வரும்படியான கவனக்குறைவுதான் போல!!
அது கவனக்குறைவு இல்லையென்றால்...?!
f-word இற்கு புணர்ச்சி என பாவிப்பது தொடர்பாக:
அந்தச் சொல் ("அமெரிக்கா") பிரதியில் பொருத்தமாக இருக்கிறது; வாசிக்க நெருடவும் இல்லை. என்னோட சந்தேகம் -பொதுவானது- fword உண்மையில் அது ஆங்கிலத்தில் coarse language தானே.. வெகுசனபத்திரிகைகளில் முதல் எழுத்தைத் தவிர மீதி *** இற்குள் வரும். தமிழில்புணாச்சிக்கு அப்படி அல்ல.
அப்போ அச் சொல்லை உபயோகிப்பது நாகரீகப்படுத்த்பபட்ட -அல்லது உடன்பாடான- சொற்களில் மொ.பெயர்ப்பது என்றாகாதா?
இது பொதுவான கேள்வியே.
//அது கவனக்குறைவு இல்லையென்றால்...?!//
இல்லையென்றாலும் சிரிப்புத்தான்! குறைத்தேதும் கூறவில்லை....
//அப்போ அச் சொல்லை உபயோகிப்பது நாகரீகப்படுத்த்பபட்ட -அல்லது உடன்பாடான- சொற்களில் மொ.பெயர்ப்பது என்றாகாதா?//
நிஜம்தான். வேறு வார்த்தைகளைப் போட்டிருக்கலாம்; சிக்கல் என்னவென்றால், இந்தமாதிரி விஷயங்களில் 'புணர்வு' மாதிரியான benign சொற்களைப் போடுவது எனக்கும்கூட குறைபாடாகத்தான் படுகிறது - அந்த வார்த்தை, பெரும்பாலும் copulation என்பதற்கு வேண்டுமானால் சரியாயிருக்கும்; ஒத்த பிற பொருத்தமான, அதே தொனியுள்ள வார்த்தைகளைப் போட்டால், அதன் அர்த்தத்தைத் தாண்டி, வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகப் போட்ட வார்த்தை என்று புருவங்கள் சுளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சமரசம் தான் - மாற்றவேண்டும் எனில் மாற்றிவிடலாம், பிரச்னையில்லை.
மாண்ட்ரீஸர் இந்தப் பிரதியில் மாற்றவேணுமென்று தோன்றவில்லை. பொதுவாகக் கேட்க நினைத்தது; இது சிக்கலானாதுதான்.
Post a Comment