Thursday, April 14, 2005

கல் கிராமங்கள்

கல் கிராமங்கள்
-ஜோஸஃப் ப்ராட்ஸ்கி

கற்களால் கட்டப்பட்ட இங்கிலாந்துக் கிராமங்கள்.
மதுச்சாலையொன்றின் ஜன்னலுக்குள் அடைபட்டவொரு கதீட்ரல்.
வயல்வெளிகளில் திரிந்துகிடக்கும் பசுக்கள்.
அரசர்களுக்கான நினைவுச்சின்னங்கள்.

பூச்சி அரித்த மேலங்கியணிந்த ஒரு மனிதன்
இங்கே அனைத்தையும்போலவே கடலைநோக்கிச் செல்லும் ரயிலுக்கு விடையளிக்கிறான்,
கிழக்குநோக்கிச் செல்லும் தன் மகளைநோக்கிப் புன்னகைத்து.
விசில் ஊதப்படுகிறது.

பெருகும் பறவையின் பாடல் நிரப்புகையில் நீலமாகிறது
ஓடுகளுக்கு மேலுள்ள முடிவற்ற வானம்.
பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை.

தமிழில்: மாண்ட்ரீஸர்

ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவம்

13 comments:

SnackDragon said...

//பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை.//

மதுக்கடையின் உள்ளிருந்து பார்க்கிறான் கவிஞன்.
அப்படியெனில் மூலக்கவிதையில் கடைசி வரி மட்டும் கொஞ்சம் முரணாய்ப் படுகிறது.


//தரைச்சதுரங்களுக்கு// இதுவும் கொஞ்சம் பொருந்தாத தோற்றத்தைத் தருகிறது. வேறு சொல்லும் யோசிக்கமுடியவில்லை.

சன்னாசி said...

கார்த்திக், குறிப்புக்களுக்கு நன்றி:
உங்களது முதல் குறிப்புக்கு - ஆங்கில வரிகளின் அதே சொற்சிக்கனத்துடன் செய்யமுயன்றதால், சற்றுத் தப்பியிருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தளவில் "உருவம் சிறிதாகச் சிறிதாகக் குரலின் தெளிவு அதிகரித்தது" என்பதற்குள் ஒளிந்திருக்கும் உணர்வை முடிந்தளவு கொண்டுவந்ததாகவே நினைத்தேன் - ஒருவேளை தவறியிருக்கலாம்...

இரண்டாவது குறிப்புக்கு - நீங்கள் சொன்னது சரி. Tilesக்கு வேறு வார்த்தையை என்னாலும் யோசிக்கமுடியவில்லை. டைல்ஸ் என்று தமிழில் போட்டால் மொழிபெயர்ப்பு காலி என்று நினைக்கிறேன்!!

-/பெயரிலி. said...

ஓடு பாம்பே ஓடு நிலவோடு ;-)

Thangamani said...

//பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை.//

நல்ல வரி. நல்ல மொழிபெயர்ப்பு. சிலவரிகள் கவிதையைத் தூண்டும். அப்படியான ஒன்று இது.

நன்றி!

Narain Rajagopalan said...

//மதுச்சாலையொன்றின் ஜன்னலுக்குள் அடைபட்டவொரு கதீட்ரல்//

//பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை//

நன்றாக இருக்கிறது. அப்படியே, அவரின் இந்த கவிதையையும் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. http://www-users.cs.umn.edu/~safonov/brodsky/to_urania.html

ஈழநாதன்(Eelanathan) said...

நல்ல மொழிபெயர்ப்பு மாண்ட்ரீசர் கார்த்திக் சொன்னதுபோன்று கடைசி வரிகள் செயற்கையாக இருப்பதுபோல் தோன்றுகிறது.தரைச்சதுரங்கள் நல்லதொரு பெயர்ப்பு.கடைசி வரிகளை இப்படிப் போட்டால் என்ன
பாடல் தெளிவாகிக் கொண்டுவர
சிறிதாகிப் போனது பறவை

SnackDragon said...

//பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை.//
பாடலை கேட்க கேட்க , பறவையைப்பற்றிய எண்ணம் மறைந்து விடுவதாகக் கொண்டால் , சரியாக்ப் பிடிபடுகிறது. நன்றி தங்கமணி. நேற்று இப்படி நான் யோசிக்கவில்லை.

"சதுரத்தரைக்கற்கள்" - ஒருவேளை உதவலாம்.

SnackDragon said...

"நிலவோடு" - அடக்கடவுளே இதுகூட தோணலியே எனக்கு :-? பாம்பை ஏன் நிலவோடு ஓடச்சொல்கிறீர்கள் என்று முதலில் குழம்பி, அடச்சேய்!! :-)

சன்னாசி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி... நாராயண், முயல்கிறேன்... வேலை....

// ஓடு பாம்பே ஓடு நிலவோடு ;-)//
பெயரிலி, நிலவை விழுங்கும் ராகு கேது போல் என்கிறீர்களா?

ஈழநாதன்: உங்களது
//பாடல் தெளிவாகிக் கொண்டுவர//
இதை மறுபடி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால்,
As the song becomes clear என்று வரும். அசல் வாக்கியத்தில்
And the clearer the song is heard,
உள்ள 'heard' என்பதும் இருக்கவேண்டும், 'clearer' என்பதற்கு ஒற்றை வார்த்தை இல்லாதபடியால் 'கேட்கப்படக் கேட்கப்பட' என்று சுலபத் தமிழில் பெயர்க்கவேண்டியதாகிப்போயிற்று. குறிப்புக்கு நன்றி.

தங்கமணி, கார்த்திக் - மறுபடி ஒரு நன்றி....

கறுப்பி said...

நன்றாக இருக்கிறது மாண்ட்ரீஸர். ரைல்ஸ் எல்லாம் இப்போது மாபிள் போலுள்ளது. "பளிங்குத்தரை" என்றால் என்ன?

SnackDragon said...

//The stone-built villages of England.
A cathedral bottled in a pub window.
Cows dispersed across fields.
Monuments to kings.//

//கற்புரியாங்கிலச்சிற்றூர்கள் - சன்னலடைபடு
நற்புரிகோமான்கோவில்,
புற்களிடைத்திரி கோக்கள்
சிற்பமுடை கோக்களின் தூண்கள்//

இது எப்படி?

//பெயரிலி, நிலவை விழுங்கும் ராகு கேது போல் என்கிறீர்களா?//
நில+வோடு = தரைச்சதுரங்கள்; தகடு தகடு போலே
ஒடு பாம்பே ஓடு, வீடு கூரை ஓடு, நில வோடு

சன்னாசி said...

//நில+வோடு = தரைச்சதுரங்கள்; தகடு தகடு போலே
ஒடு பாம்பே ஓடு, வீடு கூரை ஓடு, நில வோடு//

என் ட்யூப்லைட்டுக்கு விரைவில் ஸ்டார்ட்டர் மாற்றியாகவேண்டும் ;-) பதவுரைக்கு நன்றி கார்த்திக்!

ஈழநாதன்(Eelanathan) said...

மாண்ட்ரீசர்
மீள் ஆங்கிலப் பெயர்ப்போடு பார்த்தால் நீங்கள் சொன்னதுதான் சரி.கார்த்திக்கு இந்தப் போடு போடுறீரே 'கவி' என்பது சரிதான் போலும்